முஸ்லீம்களும் தமிழகமும்/நாயக்கரது நேயம்
13
நாயக்கரது நேயம்
நாயக்கர்களது ஆட்சியில் தமிழக இஸ்லாமியர்களது பங்கு அரசியலில் மிகவும் குறைவு. வடக்கே இருந்த பாமினி சுல்தான்களுக்கும் நாயக்கர்களுக்கும் கடுமையான பகை உணர்வுகள் நிலவி வந்தபொழுதும் தமிழக அரசியலில் அதன் பிரதிபலிப்புகள் இல்லையென்றும் அளவிற்கு அமைதியான போக்கு காணப்பட்டது. நாயக்கர்களது படைப்பிரிவுகளில் தமிழக இஸ்லாமியர்கள், படை வீரர்களாகவும், பொறுப்புள்ள பணிகளிலும் சேவை செய்தனர். அதன் காரணமாக இராமராயர் போன்ற நாயக்க மன்னர்கள், இஸ்லாமியர்களது மத உணர்வுகளை மதித்துப் போற்றிய சம்பவங்கள் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளன. மன்னருக்கு ராஜ விசுவாசம் தெரிவித்தல் போன்ற நிகழ்ச்சிகளிலுங்கூட, இஸ்லாமியர்கள் அரசருக்கு முன்னே வந்து தலை தாழ்த்தி அடிபணித்து விசுவாசப் பிரமாணம் செய்வதற்குப் பதிலாக அவர்களது திருமறையான திருக்குர்ஆன் முன்னதாக விசுவாசப் பிரமானம் எடுத்துக் கொண்டால் போதும் என நாயக்க மன்னர் ஆணை பிறப்பித்து இருந்ததாகத் தெரிகிறது.[1] மதுரை, திருச்சி, தஞ்சை போன்ற புகழ் வாய்ந்த கோட்டைகளில் முழுப் பொறுப்பு (கிலேதார் பதவி) இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டிருந்தது. மேலும், முக்கியமான படைப்பிரிவுகளையும் இஸ்லாமியர் இயக்கி வந்தனர். கி.பி. 1639ல் திருமலை மன்னர் இராமநாதபுரம் சேதுபதி மன்னரை செயித்துவர தனது தளபதி இராம்ப்பையன் தலைமையில் பெரும் படையணியை அனுப்பி வைத்தார். அந்தப் படையெடுப்பில் வர்ணனையை படிக்கும்பொழுது இந்த உண்மையை உணர முடிகிறது. நாயக்க மன்னருக்கு உதவ அவரது எழுபத்து இரண்டு பாளையபட்டுகளில் இருந்து பெரும்படை புறப்பட்டது. என்றாலும் நாயக்க மன்னரது தனிப்படை பிரிவுகளை நடத்தியவர்கள் யார் தெரியுமா ?
„உச்சிமியாவும் உகர்ந்த பெருந்தளமும்
சவ்வாசு கானும் தன்மாவு அத்தனையும்
வாய்பூசு கான் தளமும் வாய்த்த புரவிகளும்
வாவுகான் தன்படையும் வாய்த்த பரிகளும்
சின்னராவுத்தர் சேர்ந்த புரவிகளும்
மூஸாகான் குதிரையுடன் முற்று முதலியாரும்
காதிரு சாயிபு கன்னம் புரவிகளும்
சூரன் தாவூது ராவுத்தன் தன் புரவி அத்தனையும்
மீரா சாகிபும் வேந்தன் பெரும்படையும்
ஆதிரு சாயிபும் அடர்ந்து வரும் சேனைகளும்
மகமது சாகிபு மன்னன் புரவிகளும்
படேகான் கிலிசும் வாய்த்த புரவிகளும்
மகமது கான் கிலிசும் வாய்த்த புரவிகளும்... ..”
என இராமப் பையன் அம்மானை, இனம் சுட்டிப் பாடுகிறது.
நாயக்க மன்னர்களின் ஆட்சியின் பொழுது பல போர்கள் நடைபெற்றன. மக்கள் அமைதியான சூழ்நிலையில் வாழ வாய்ப்பு மிகக் குறைவு. மன்னார் வளைகுடாவில் இருந்து தெற்கே துரத்துக்குடி வரையான கடற்பிரதேசத்தில் போர்த்து கேசியர் கி.பி. 1502 முதல் செல்வாக்கு எய்தினர். அவர்களிடம் சிறந்த கப்பல்படை இருந்தது. இதற்கும் மேலாக எதிரிகளை ஈவு இரக்கம் இல்லாமல் அழித்து ஒழிக்கும் "நல்ல" மனமும் அவர்களுக்கு இருந்தது. ஏற்கனவே இந்தப்பகுதியில் இருந்த இஸ்லாமியரது இறுக்கமான பிடிப்பிலிருந்த பரவர்கள், எளிதில் போர்த்துக்கேலியரது கிறிஸ்துவ மதத்திற்கு மத மாற்றம் பெற்றதுடன் போர்ச்சுகல் நாட்டு மன்னரது பிரஜையாகவும் மாற்றம் பெற்றதுடன் போர்ச்சுகல் நாட்டு மன்னரது பிரஜையாகவும் மாற்றம் பெற்றனர். தூத்துக்குடி, புன்னைக்காயல், மணப்பாடு, வேம்பாறு, வைப்பாறு, வீரபாண்டியன் பட்டினம் ஆகிய ஊர்களும் அவர்களது செல்வாக்கில் இருந்தன. போர்ச்சுகல் நாட்டு அரசியல் முறையிலான ஆட்சிக் குழுக்கள் அங்கு நிர்வாகத்தை இயக்கி வந்தன.[2] பெயரளவில் அவை நாயக்கர்களது சீமை என்பதற்கு அடையாளமாக போர்த்துகேஸியர் மதுரை நாயக்கருச்கு ஆண்டுதோறும் ஒரு சிறிய தொகையை மட்டும் அன்பளிப்பாக அளித்து வந்தனர். அவர்களுடைய வளமையான வாணிபத்துடன் மன்னார் வளைகுடா முத்து சிலாபத்திலும் அவர்களுக்கு பெரும் தொகை லாபமாக கிடைக்கும் பொழுது ஒரு சிறு தொகையை கப்பமாகச் செலுத்துவதில் அவர்களுக்கு எவ்வித சிரமும் இல்லாதிருந்தது.[3]
என்றாலும், அந்நிய ஆதிக்கம் மிகுந்த இத்தகைய சூழ்நிலை தெற்கு கடற்கரையில் உருப்பெறுவதை உணர்ந்தார் திருமலை மன்னர் (கி.பி. 1623-59) கடல் வலிமையிலும் வாணிபத்திலும் போர்த்துக்கீஸியருக்குத் தக்க போட்டியாளராக விளங்கிய காயல் நகர இஸ்லாமியர்களை அணுகினார். காயலை மீண்டும் சிறந்த துறைமுகமாக நிலைபெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டதுடன் அதற்கு ஆவன அனைத்தையும் உதவினார். இதனால் மகிழ்ச்சியடைந்த இஸ்லாமியர், பெருத்த அளவில் அங்கு குடி புகுந்தனர். கடற்கரை முழுவதும் அவர்களது பல்வகையான கலங்கள் நிலை கொண்டன. பிள்ளை மரைக்காயர் என்ற தமிழக இஸ்லாமியக் குடிமகன் அரசாங்க பிரதிநிதியாக அந்தப் பகுதிக்கு திருமலை மன்னரால் நியமனம் பெற்றார். அவரது கௌரவ பணிக்கு திங்கள் தோறும், அறுமது சக்கரம் பணக்கொடை வழங்கவும் மன்னர் ஏற்பாடு செய்தார். யாழ்ப்பாணத்திலும், தூத்துக்குடியிலும், போர்த்துகீஸியரது குடியிருப்பிற்கு அண்மையில் தங்கி வாழவும் மன்னார் வளைகுடாவில் முத்து விளையும் பகுதிகளைக் கண்காணித்து வரவும் ஏற்பாடு செய்தார்,[4] நாயக்க மன்னரது அரசியல் சேவையில் இஸ்லாமியரது ஈடுபாட்டிற்கு இதைவிட வேறு சான்று என்ன வேண்டும்.
மேலும் மதுரைக் கோட்டையின் பிரதான காவல் பெறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தது ஷெய்கு ஹஸீன் என்ற கிர..தார். அவரது இயற்பெயர் ஷெய்கு முகம்மதுஷா ஆகும். பணியில் இருந்து விலகி, ஞானமார்க்கத்தில் ஈடுபட்டு, கிழைக் கடற்கரையில் கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் பெற்றார். அந்த மகானைத்தான் இன்று மக்கள் மரியாதையுடன் “ராவுத்தர்சாகிப்” என அழைத்து வருகின்றனர்.
மன்னார்வளைகுடாவில் முத்துக்குளிக்கும் உரிமை நெடுங்காலமாக மதுரை நாயக்க மன்னருக்கும் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும் இருந்து வந்தது. ஆனால், காயல்பட்டினம் பிள்ளைமரக்காயருக்கு தமது உரிமையினின்றும் பத்து கல்விட்டுக் கொடுத்தார். திருமலை மன்னர்.[5] மரக்காயரிடம் கொண்டிருந்த தனியான மதிப்பிற்கு இந்த நிகழ்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இன்னும் ஒரு சிறப்பான செய்கை, தமிழக இசுலாமிய வீரர்களை தமது நம்பிக்கைக்குரிய அந்தரங்க மெய்க்காப்பாளராக அவர் அமர்த்தி வைத்து இருந்தது.[6] மதுரைக் கோட்டையில் வாயில் பாதுகாப்பிற்கு, அவரது ஆட்சியில் இருந்த எழுபத்து இரண்டு பாளையக்காரர்களை நியமித்து இருந்தார். அவர்கள் பெரும்பாலும் “மணவாடுகள்” — நாயக்கர்களும்கம் கம்பளத்தார்களும். ஆனால் அவரது மாளிகையில் காவலுக்கும் சொந்த உடமைகள், உயிருக்கும் பொறுப்பாக இருந்தவர்கள் இசுலாமியர்.[7] இசுலாமியரிடம் இமயமலைபோன்ற இணையற்ற நம்பிக்கை வைத்து இருந்தார் மதுரை மன்னர். அவரை அடுத்து நாயக்க மன்னராகப் பட்டமேறிய சொக்கநாத நாயக்கர், மதுரையிலிருந்து தமது தலைநகரை திருச்சிராப்பள்ளி கோட்டைக்கு மாற்றியவுடன், அந்தக் கோட்டையின் முழுப்பொறுப்பையும் ருஸ்தம்கான் என்ற இசுலாமியரிடம் தான் கொடுத்து இருந்தார்.[8]
மேலும் அறக்கொடைகளையும் இசுலாமிய நிறுவனங்களுக்கு நாயக்க மன்னர்கள் வழங்கியுள்ள விபரமும் தெரியவருகிறது. தளவாய் கம்பணன் என்ற நாயக்க ஆளுநர். கி.பி.1624ல் நெல்லை மாவட்ட பனங்குடியில் உள்ள புத்த மியான் பள்ளி வாசலுக்கு பனங்குடி கிராமம் முழுவதையும் முற்நுாட்டாக Invalid template invocation→ வழங்கினான். கி.பி. 1712 ல் விஜயரங்க சொக்கநாதர் திருநெல்வேலியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினுக்கு ஈழம்பூர், ரஹ்மத்பூர், லக்ஷிமிபூர், அணைக்கரை, அந்தராயம், நெல்லையம்பலம் ஆகிய ஆறு ஊர்களை பள்ளிவாசல் தருமமாகக் கொடுத்தார். அந்த மன்னர், கி.பி. 1692ல் திருநெல்வேலியில் உள்ள இன்னொரு பள்ளிக்கும் கி.பி. 1633ல் கீழப்புலியூர் சையது பக்கீர்தின் தர்காவிற்கும் நிலக்கொடைகள் வழங்கியுள்ளார்.[9] மதுரை மன்னர் சொக்கநாதரது மனைவி ராணி மங்கம்மாள் திருச்சியில் மோனத்துயில் கொள்ளும் நத்தர் (வலி) அவர்களிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவரது தர்காவின் பராமரிப்பிற்காக சில நிலங்களை கி.பி. 1701ல் தானமாக வழங்கினார். இந்த அரசியார், பெனு கொண்டாவில் உள்ள பாபா தர்காவிற்கும் நிலக்கொடைகள் வழங்கி உள்ளார். இவரைப் போன்று ராணி மீனாட்சியும் பள்ளிவாசல்களுக்கு நிலக் கொடைகள் அளித்துள்ளார்.[10] மதுரை நாயக்க மன்னர்களைப் போன்று தஞ்சாவூர் நாயக்கர்களும் தமிழக இசுலாமியரை அன்புடனும் ஆதரவுடனும் நடத்தி வந்தனர் எனத் தெரிய வருகிறது.
இத்தகைய அரசியல் ஊக்குவிப்புகளினாலும் சலுகைகளினாலும் பயனடைந்த இசுலாமிய சமூகத்தினருக்கும் இசுலாமியரைப் போன்று வெளியே இருந்து வந்து தமிழ் மண்ணில் நிலைத்துவிட்ட நாயக்கர் சமூக மக்களுக்கும் இடையில் நல்லெண்ணமும் நட்புறவும் வளர்ந்தது. இரு சமூக மக்களும், ஒரே குடும்பத்தினரைப்போன்று அன்புடன் நடந்து கொண்டனர். குறிப்பாக,தென் மாவட்டங்களில்,இன்று ஒரு முஸ்லிமும் நாயக்கரும் சந்தித்துக் கொண்டால் அவர்கள் ஒருவரையொருவர் அன்னியோன்னியமாக அழைத்துக் கொள்வது "மாமா” என்ற அன்புச் சொல்லினால்தான். முன்னுாறு ஆண்டு கால வரலாற்றில் எவ்வளவோ அரசியல் மாறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும், தமிழகத்தின் சிறுபான்மையினரும் பிற்பட்ட நிலையில் உள்ளவர்களுமான இந்த இரு சமூக மக்களது நேயமனப் பான்மையிலும் நட்பு நிலையிலும் எவ்வித வேறுபாடும் ஏற்படவில்லை.
- ↑ Sthianathair - History of Madurai Nayaks-Chap. 2 p. 353
- ↑ Sathianathair - History of Madura Nayaks (1924) P.329-330.
- ↑ Ibid - P. 1 38.
- ↑ Arunachalam S. - History of Pearl Fishery in Tamil coa (1952) P. 1
- ↑ Arunachalam S. – History of Pearl Fishery in Tamil coast (1952) p. 115
- ↑ Vincent kronin — Pearl to India (1959) (New York) p. 122
- ↑ அப்துற்றகீம் – எம்.ஆர்.எம்—தொண்டிமாநகர் (1959) பக்.12
- ↑ Old Historical Manuscripts - vol II p. 35
- ↑ Board's Miscellnious Register (Tamilnadu Archieves) vol. Il
- ↑ Sathianathair - History of Mydura Nayalcs (1924) (p.p.362 - 69).