முஸ்லீம்களும் தமிழகமும்/பரங்கியரது முஸ்லிம்கள்
15
பரங்கியரும், முஸ்லீம்களும்
நமது நாட்டுடன் வாணிபத்தில் தொடர்பு கொண்ட இசுலாமிய அரபிகள், மேற்கு, கிழக்கு கரைகளில் உள்ள கடற்துறைகளில் தங்கி தங்களது வாணிபத்தை வளர்த்ததுடன் இந்த மண்ணின் மலர்ச்சிக்கும் உதவியதை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். ஆனால் பதினாறாவது நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தப்புனித மண்ணில் பரங்கிகளது கால்கள் பட்டவுடன் இங்கிருந்த இசுலாமியர்களது சமய வாழ்க்கையிலும் சமுதாய அமைப்பிலும் விரும்பத்தகாத மாற்றங்களும் விளைவுகளும் நிகழ்ந்தன. அந்தப் பரங்கிகள் யார்? அவர்கள் இழைத்த இன்னல்கள் யாவை? பன்னிரண்டாம் நூற்றாண்டில் அரபுத் தாயகத்தில் நடைபெற்ற சிலுவைப்போரில் கலந்து கொண்ட ஐரோப்பியர் அனைவரையும் முஸ்லீம்கள் "பரங்கி" என அழைத்தனர். "பலாங்" என்ற சொல் "பரங்" ஆகி பின்னர் "பரங்கி" ஆயிற்று. பாரசீக மொழியில் "பெரங்கி" என்றாகியது. முகலாயப் பேரரசர் பாபர், முதன் முதலில் போர்ச்சுகீசிய மக்களை "பரங்கி" என அழைத்தார்.[1] ஏனெனில் முதன் முறையாக வணிகத்திற்கு நமது நாட்டிற்கு வந்த மேனாட்டார் போர்ச்சுகல் நாட்டவர். ஆதலால் அவர்கள் பரங்கி எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் அவர்களையடுத்து இங்கு வந்த பிரஞ்சு, ஆங்கில நாட்டவரும் அதே இடு குறிப்பெயரில் வழங்கப்பட்டனர். அரபுத் தாயகத்தின் தென்கோடியில் மலர்ந்த இசுலாம். வடக்கில் பாலத்தீனம், ஸிரியா, பைஜான்டைன், ஆகிய நாடுகளில் விரைவாகப் பரவியதுடன் மத்திய தரைக்கடலின் மேற்குப் பகுதியான ஸ்பெயினிலும் பரவியது. அப்பொழுது ஸ்பெயின் நாடு, "அல் அந்தலூஸ்", "அந்தலூஷியா" என அரபு மொழியில் வழங்கப்பட்டது. சிலுவைப்போர்கள், கிறித்தவ குருமார்களது இடைவிடாத பொய்ப்பிரச்சாரம், இசுலாமிய தலைமை பீடத்தில் நிலவிய ஊழல்கள், ஒழுக்கக்கேடுகள் ஆகியவை காரணமாக, அட்லாண்டிக் மாகடலையொட்டிய ஸ்பெயின் நாட்டின் சிறு பகுதி மீண்டும் கிறித்தவ சமயப்பிடிக்குள் சென்றது. இசுலாமியருக்கு எதிராக கலவரத்தை முன் நின்று நடத்திய ஜான் என்பவன் புதிய போர்ச்சுகல் நாட்டை அமைத்து அந்த நாட்டின் அதிபரானான். அவனுடைய மகன் ஹென்றி, புதிய நாட்டை வலுவும் சிறப்பு மிக்கதாக ஆக்க வேண்டும் என்ற ஆசையினால் அல்லும் பகலும் சிந்தித்து வந்தான். அவன் கண்ட முடிவு அன்றைய ஐரோப்பிய சமுதாயத்தில் புகழும் பொலிவும் பெற்றுத் திகழ்ந்த இசுலாமியரது வாணிபச் செல்வாக்கை அழிக்க பாடுபட வேண்டும் என்பது.
அன்றைய நிலையில், இந்து மாக்கடல், பாரசீக வளைகுடா கடல், செங்கடல், மத்யதரைக்கடல் ஆகிய அனைத்து நீர்வழிகளும் இசுலாமியரது வாணிப வளர்ச்சிக்கு உதவும் ஏகபோக பகுதிகளாக இருந்தன.[2] கீழை நாட்டுப் பொருட்களுடன் அவர்களது பொருட்களையும், கப்பல், ஒட்டகம், மூலமாக வெனிஸ் நகரத்தில் நிறைத்தனர். அங்கிருந்து அவை ஐரோப்பிய கண்டம் முழுவதும் வினியோகிக்கப்பட்டன. இசுலாமியர் இதனால் பெருத்த ஆதாயம் அடைந்து வந்தனர். ஆதலால், அவர்களது வாணிபச் செல்வாக்கை அழிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய நீர்வழிக்கு மாற்று வழியொன்றைக் கண்டுபிடிக்க ஹென்றி முயற்சித்தான். காகரி என்ற இடத்தில் இதற்கான ஆய்வுக்கூடம் ஒன்றையும் அமைத்தான். அவனது உழைப்பு, ஊக்குவிப்பு காரணமாக போர்ச்சுகல் நாட்டு மாலுமிகள், அலைகடலுக்கு அப்பால் போர்டோ, காண்டோ தீவுகள் (கி.பி. 1419) மதீரியா (கி.பி. 1420) கானரி, அஜோர்தீவுகள் (கி.பி. 1431) பிரான்கோ முனை, ஸெனகல் ஆறு, கினியா (கி பி. 1445) வெர்டோ முனை (கி.பி. 1446) ஆகிய புதிய நீர், நிலப்பகுதிகளைக் கண்டுபிடித்தனர். இத்தகைய ஊக்குவிப்புகளின் தொடராக, வாஸ்கோடா காமா என்ற மாலுமி கி.பி. 1497ல் ஆப்பிரிக்க பெருங்கண்டத்தின் மேற்கு, தெற்குப்பகுதிகளைக் கடந்து இந்து மகா கடல் வழியாக கி.பி. 1498ல் நமது நாடடின் மேற்கு கரைப்பட்டினமான கோழிக்கோட்டை வந்தடைந்தார். போர்ச்சுகல் நாட்டு மன்னரது பரிந்துரை மடலுடன்.
கோழிக்கோடு மன்னர் ஸாமரின், போர்ச்சுகல் மாலுமி குழுவினருக்கு வரவேற்பு வழங்கி ஆதரவு அளித்தார். என்றாலும் அந்த மன்னரது நண்பர்களாக, அலுவலர்களாக, குடிகளா, ஏற்கனவே அங்கு இருந்து வந்த இசுலாமியரது செல்வாக்கும், செல்வ வளமும் பரங்கிகளது கண்களை உறுத்தின. வாஸ்கோடா காமாவைத் தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டில் இருந்து கொங்கணக்கரை கேரளக்கரைக்கு வந்த வாணிப கப்பல்களில் விற்பனைப் பொருட்களுடன் பீரங்கிகளும் இருந்தன. ஆங்காங்கு இசுலாமியரது வாணிபக்கப்பல்களை கொள்ளையடிப்பதற்கு அவை உதவின. அத்துடன் ஸாமரின் மன்னரை அடக்கி, அஞ்சுமாறு செய்யவும் அவை பயன் பட்டன.[3] நான்கு ஆண்டுகள் கழித்து அவர்கள் கிழக்கு கரையையும் எட்டிப்பார்த்தனர். கி.பி. 1502ல் அவர்கள் தூத்துக் குடிக்கு வந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை பிரமிக்க வைத்தது. தமிழகத்திலும் இசுலாமியர், தூத்துக்குடி துறைமுகத்தை மட்டுமின்றி மன்னார் வளைகுடா பகுதி முழுவதையும் அவர்களது கட்டுபாட்டில் வைத்து இருந்தனர். அப்பொழுது காயலில் இருந்த இசுலாமிய அரசர் முத்துக்களாலான மாலையை அணிந்து காணப்பட்டதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. மீன்பிடித்தல், முத்துக்குளித்தல் ஆகிய பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டு இருந்த பரவர்கள், இசுலாமியரது இறுக்கமான பிடியில் இருந்து வந்தனர். அன்றைய நிலையில் முத்துகுளித்தல் பெரிதும் ஆதாயம் அளிக்கும் தொழிலாக இருந்தது. ஆனால், பரவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் அந்த தொழிலில் ஈடுபட முடியாத நிலையை உணர்ந்த பரங்கிகள், பொறுமையாக சூழ்நிலைகளை கவனித்து வந்தனர். முத்துக்கள் வணிகத்தைப் பற்றிய அவர்களது பொறாமையும் பேராசையும் வளர்த்தன.
மன்னார் வளைகுடாவில் கிடைத்த முத்துக்களைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. பாண்டிய நாடு முழுவதையும் வெற்றி கொண்ட ராஜராஜ சோழனது (கி.பி. 985-1012) கல்வெட்டுக்களிலும் இந்த முத்துக்களைப்பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வட்டம், அனுவட்டம், ஒப்புமுத்து, குறுமுத்து, கோத்தமுத்து, நிம்பளம், பயிட்டம், அம்பு, முதுங்கறடு, இரட்டை, சப்பத்தி, சிவந்த நீர், குளிந்த நீர் என்பன அவை.[4] ஆனால் இவைகளைப் பற்றி முதல் முறையாக எமுதிய வெளிநாட்டார் அல்இத்ரிசி (கி.பி. 1154) என்ற அரபு நாட்டார். கி.பி. 1292ல் பாண்டிநாடு வந்த உலகப் பயணி மார்க்கோ போலோ, மன்னார் வளைகுடாவில் பத்தலாரில் - (கப்பலாறு - பெரியபட்டனம்) ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் முத்துச்சிலாபம் என்ற முத்துக்குளித்தலை நேரில் பார்வையிட்டு, அவரது குறிப்புகளில் விவரம் தந்துள்ளார்.[5] அவரைத் தொடர்ந்து தமிழகம் வந்த பிரையர் ஜோர்தனஸ் என்ற பிரஞ்சு நாட்டு பாதிரியாரும் வாங்-தா-யூவன் என்ற சீனப் பயணியும் முத்துச் சிலாபம் பற்றிய குறிப்புகளை வரைந்துள்ளனர்.[6]
முத்துக்குளித்தலில் மதுரை நாயக்க மன்னர் 96 1/2 கல்லும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் 59 கல்லும் போட்டு முத்துக் குளிக்கும் உரிமை பெற்று இருந்தனர். திருமலைமன்னர் அவருக்குரிய கல்லில் பத்துக்கல் போட்டு முத்துக் குளிக்கும் உரிமையை, அவரது பிரதிநிதியான காயல்பட்டினம் நாட்டாண்மை "முதலியார் பிள்ளை மரைக்காயருக்கு", அளித்து இருந்தார்.[7] திருமலை மன்னரிடம் காயல்பட்டினத்து மரைக்காயருக்கு. அந்த அளவிற்கு பெரும் செல்வாக்கு இருந்தது. இந்த உரிமையை போர்ச்சுக்கியரும் பின்னர் டச்சுக்காரரும் மதித்த்னர் என்றால் மரைக்காயரது அறிவாற்றலையும் ஆள்விளை உடமையையும், என்னவென்பது? மதுரை மன்னரைப் போன்று சேதுபதி மன்னர்களும் தங்களுக்குரிய முத்துக்குளித்தல் உரிமையில் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயிலுக்கும், திருப்புல்லணை ஜகநாதப் பெருமாள் கோயிலுக்கும் சலுகைகள் வழங்கி இருந்தனர்[8]. இந்த சலுகைகளின்படி அந்தக் கோயில்களுக்காக முறையே இராமேசுவரத்திலும் கீழக்கரையிலும் இருந்த மரைக்காயர் குடும்பங்கள், முத்துச்சலாபம் நடத்தினர், கி.பி. 1823ல் ஆங்கில கிழக்கிந்திய துரைத்தனம் இந்தச் சலுகைகளைப் பறிமுதல் செய்தது.
இராமேசுவரம் திருக்கோயிலுக்காக முத்துக்குளித்தவர்கள் இராமேசுவரம் சுல்தான் மரைக்காயர் குடும்பத்னர். அண்மைக் காலம் வரை, அந்தக்கோயிலின் தெப்பத்திருவிழாவிற்கு படகுகள் கொடுக்கும் "ஊழியம்" அவர்வழியினருக்கு இருந்தது. அந்தக் குடும்பத்தினரின் கண்ணியத்தையும் வாணிபச் செல்வாக்கையும் கருதிய திருக்கோயில் நிர்வாகத்தினர். கோயில் கருவறையின் திறவுகோல்களை அந்தக் குடும்பத்தினரது பொறுப்பில் கொடுத்து வைத்து இருந்தனர்.[9] இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் கோயிலுக்கு அரசினர் தர்மகர்த்தாக்கள் நியமனம் செய்த பிறகுதான் இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டது. முத்துச்ச லாபம் காரணமாக தோன்றிய இந்த மரபுகளை இங்கே குறிப்பிடுவது பொருத்தம் தானே !
தமிழக இசுலாமியர், முத்துக்குளித்தலில் மட்டுமல்லாது அவைகளை முறையாக விற்பனை செய்யும் வணிகத்திலும் ஈடுபட்டு இருந்தனர். அவர்களது வணிக நிலையங்கள் பாண்டி நாட்டுத் தலைநகரான மதுரையிலும், இராமேசுவரத்திலும் முத்துச்சாவடி அல்லது "முத்துப்பேட்டை” என வழங்கப்பட்டன. இராமேசுவரத்தில் இருந்த முத்துச்சாவடியில் விற்பனை செய்யப்பட்ட அழகிய முத்துக்கள், கேரளக்கரையில் உள்ள கொல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கடல்வழி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக சீனப்பயணியின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[10] கீழக்கரையில் இருந்த இத்தகைய முத்துப்பேட்டை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட முத்துக்களின் விற்பனையில் நூற்றுக்கு அரைப்பணம் மகமையாக அந்த ஊர் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு வழங்க அங்கு நாலுப்பட்டனத்து பதினென் விஷயத்தார்" (வணிகக்குழு) உடன்பாடு கண்டதாக அங்குள்ள கி பி. 1531ம் ஆண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது.[11]
மற்றும் இசுலாமியப் பெண்டிர், முத்துக்களைக் கொண்ட பொன்னாலான வடங்கள், மாலைகள், தொங்கட்டான், நெற்றிச்சூடி, பாடகம், தோள்வளை, பீலி , மோதிரங்கள் ஆகிய அணிகளை அணிந்து வந்தனர். இசுலாமிய ஆடவர்களும் தங்களது இயற்பெயர்களுடன் “முத்தை"யும் இணைத்து வழங்கும் வழக்கமும் ஏற்பட்டது. முத்து இபுராகீம், முத்துமுகம்மது, முத்துநயினார், முத்து ஹூசேன், என்ற பெயர்கள் சில எடுத்துக்காட்டுகளாகும். இன்னும் நன்கு விளைந்த ஆனி முத்துக்களைப் போன்று, வயதிலும், வாழ்விலும் முதிர்ந்த பாட்டன்மார்களை" இசுலாமியர். "முத்து வாப்ப"' எனச் செல்லமாக அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. மேலும் தங்களது காணிகளுக்கு "முத்து வயல்" என்றும், குடியிருப்பு ஊர்களுக்கு முத்துப்பட்டனம் என்னும் இவ்வல்லங்களுக்கு "முத்துமகால்’’ என்றும் பெயர் சூட்டினர். இவைகளில் இருந்து தென்பாண்டிக்கடல் முத்துக்கள், தமிழக இசுலாமியரது வாழ்வில் பதினாறு, பதினேழு, பதினெட்டாவது நூற்றாண்டுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதைப் புரிந்து கொள்வதற்கு இந்த வரலாற்றுச் செய்திகள் உதவுகின்றன. இதற்கிடையில் போர்ச்சுகல் நாட்டு கடல் கொள்ளைக்காரனாக தல்மேதா மாலத்திவில் தங்கரமிடடு நின்ற இசுலாமியரது வணிக கப்பல்களை கொள்ளையிட லூர்சி என்பவனை அனுப்பி வைத்தான் திரும்பும் வழியில் அவனது கப்பல் திசைமாறி இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலியையும் பின்னர் கொழும்புனையும் அடைந்தது.[12] இசுலாமியர். அங்கும் அரசியல் செல்வாக்குடன் வளமார்த்த நிலையில் இருந்ததை அவன் கண்டான் அப்பொழுது அங்கு நிலவிய அரசியல் குழப்பங்களில் தலையிட்டு, அவைகளை அவனுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இசுலாமியரது வாணிபச் செல்வாக்கை வலுவிழக்குமாறு செய்தான். அவனைத் தொடர்ந்து பல போர்ச்சுகல் கப்பல்கள் போர் வீரர்களுடன் கொழும்பு வந்தன. இத்தகைய பின்னணியில், தளபதி ஜோ புரோலன் தலைமையில் (கி.பி.1523) கப்பல் அணி காயல் துறையை அடைந்தது. அவர்களது ஆதிக்கத்தை கிழக்கு கடற்கரையில் நிறுவ பரங்கிகள் மேற்கொண்ட திட்ட வட்டமான முயற்சியை இந்தக் கப்பல் அணி வருகை உணர்த்தியது. காலம் காலமாக இசுலாமியர்களது கட்டுப்பாட்டில் இருந்த பரவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் போர்ச்சுக்கல் பரங்கிகள் ஈடுபட்டனர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இசுலாமியரது, எடுபிடியாக, அவர்களையே நம்பி வாழ்ந்தவர்களின் இதயங்களில் வெறுப்பைக் கொட்டிக்கிளறினர். அப்பொழுது அங்கு நடைபெற்ற முத்துச்சலாபத்தின் பொழுது ஒரு முஸ்லீமிற்கும் பரவ இனத்தொழிலாளிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு பெரிதுபடுத்தப்பட்டு பெரிய இனக்கலவரமாக உருவெடுக்க உதவினர். எவ்வித ஆயத்தமும் இல்லாத இசுலாமியர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.பலர் கொலை செய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சி தூத்துக்குடியில் கி.பி 1532ல் நடைபெற்றது. ஆத்திரமடைந்த இசுலாமியர், பரவர்களைப் பழி வாங்கினர். கடலிலும், நிலத்திலும் கொலைக்கு கொலை, கொள்ளை தொடர்ந்தது. அவர்களது குடிசைகள் கொடூரமான முறையில் திக்கிரையாயின. பரவர் படகுகளையும் உடமைகளையும் போட்டுவிட்டு உயிர்தப்பி ஓடினர்.[13]
மீண்டும் இசுலாமியர் அவர்களைத் தாக்கினால் .... ... ... இந்த பயத்திற்கு பரிகாரம் செய்வதாக போர்ச்சுக்கீசியர் அவர்களுக்கு சொல்லினர்: பாதுகாப்பு கொடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் ஒருநிபந்தனை, அவர்கள் அனைவரும் கிறித்துவமதத்தை தழுவுதல் வேண்டும். மருந்து கசப்பானதுதான். ஆனால் அப்பொழுது அவர்களுக்கு அந்த வைத்தியம் தேவைப்பட்டது. பகைமையும் பயமும் அலைக்கழித்தவர்களாக தலைகளை ஆட்டி ஒப்புதல் அளித்தனர். கொச்சியில் இருந்து போர்ச்சுக்கீசியரின் சிறிய படையணி ஒன்று அவர்களது கடற்கரை குடியிருப்பிற்கு காவலாக நின்றது. அந்த அணியின் செலவிற்காக ஆண்டுதோறும் 1500 குரஸோடா பணம் கொடுக்க பரவ ஜாதித்தலைவர் ஒப்புக் கொண்டார்.[14] அதன்பின்னர், நிபந்தனையின்படி பரவரது "பட்டங்கட்டிகள்" சிலர் கொச்சிக்கு சென்று போர்ச்சுகல் நாட்டு மத குருக்களை சந்தித்து ஆயுத உதவி பெற்றதுடன், ஒரே நாளில் 20,000 பரவர்கள் கத்தோலிக்க கிறித்துவ மதத்தை தழுவ ஏற்பாடு செய்தனர்.[15] சிறிய இடைவெளியில் மீண்டும் பரவர்கள் இசுலாமியரைத் தாக்கினர். பெரும் சேதத்தை விளைவித்தனர் சில நூறு முஸ்லீம் குடும்பங்கள் தூத்துக்குடி கடற்கரைப்பகுதியில் இருந்து இன்னும் வடக்கே, - இராமநாதபுரத்தில் - கிழக்கு கடற்கரையில் குடியேறினர். கீழக்கரையும், வேதாளையும் அவர்களது புதிய தாயகமாகின.
இந்த அவல நிகழ்ச்சிகளினால், பல நூற்றாண்டுகளாக தெற்கு கடற்கரையில் அமைதியுடனும், செல்வாக்குடனும் வாழ்ந்து வந்த இசுலாமியரது இயல்பான வாழ்க்கை, வாணிபம், சமுதாய சிறப்பு ஆகிய நிலைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இத்தகைய இழப்பை பிந்தைய ஆண்டுகளில் கூட ஈடு செய்ய இயலவில்லை என்பதை வரலாறு சுட்டுகிறது. இத்தகைய சமூக சீர்குலைவிற்கு அன்று தமிழக அரசு எனப் பெயரளவில் இருந்த வடுகரது ஆட்சிதான் காரணம் என்பதையும் வரலாறு துலக்குகிறது. பொய்மைப் பிரச்சாரத்தினால், தமிழக மக்களை ஏமாற்றி, மதுரை சுல்தான்களது ஆட்சியைக் கைப்பற்றிய வடுகர்கள், தமிழக மக்களை, குறிப்பாக கடற்கரையோர குடிகளை பரங்கிகளது குறுக்கீடுகளில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அரசின் இயலாத்தன்மை காரணமாக போர்ச்சுகல் நாட்டாரது நடமாட்டம் தெற்கு கடற்கரையில் அதிகமாகிறது. அவர்களது ஆயுதபலமும், கொடுரமான நடவடிக்கைகளும் மக்களுக்கு அச்சத்தை ஊட்டியது. ஆனால் கேரள கடற்கரை முஸ்லீம்கள், இந்த மனிதப் பிசாசுகளுக்கு பயப்படாமல், அவர்களுடன் பொருதி போராடி வந்தனர். அந்த மாவீரர்களது போராட்டக்களமாக கிழக்கு கடலின் மன்னார் வளைகுடாவும் விளங்கியது.
அப்பொழுது இலங்கையில் இருந்த மூன்று அரசுகளில் கோட்டை என வழங்கப்பட்டதும், கொழும்பை தலைநகராகக் கொண்டிருந்ததுமான அரசுக்கு இரண்டு சகோதரர்கள் போட்டியிட்டனர். அவர்களில் புவனேகபாகு என்ற மூத்தசகோதரருக்கு போர்ச்சுகீசியர் ஆதரவு கொடுத்து வந்தனர். இன்னொரு இளவரசரான மாயதுன்ன பண்டாராவிற்கு கோழிக்கோடு அரசர் ஸாமரின் ஆயுத உதவி வழங்கி வந்தார்.[16] கி.பி. 1534ல் இலங்கை சென்ற கப்பல் அணிக்கு தலைமை தாங்கிய ஸாமரின் மன்னரது தளபதி குஞ்சாலி மரக்காயர், பல இடங்களில் பரங்கிகளை எதிர்த்து அழித்தார். மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட பெரும் கப்பல் படையை குஞ்சாலி மரைக்காயர், அவரது தம்பி அலி இபுராகில் மரைக்காயர் அவரது மைத்துனர் அகமது மரைக்காயர் ஆகியவர்கள் நடத்திச் சென்றவர். அந்த அணி, ஐம்பத்து ஒரு கப்பல்களும் இரண்டாயிரம் வீரர்களும் ஐநூறு பீரங்கிகளும் அடங்கியதாக மதிப்பிடப்படுகிறது. கன்னியாகுமரிக்கருகில் பரங்கிகளை வெற்றி கொண்ட அவர்கள், கொழும்பிலிருந்து தகவலை எதிர்பார்த்து வேதாளைக்கருகில் காத்து இருந்தனர். இதனை அறிந்த மார்ட்டின் அல்போன்ஸா என்ற போர்ச்சுகல் தளபதி அறுநூறு கப்பல் படை வீரர்களுடன் விரைந்து சென்று அவர்களைத் தைரியமாகத் தாக்கினான். இராமேசுவரத்திற்கும் வேதாளைக்கும் இடையில் கடலில் 28-2-1538ல் நிகழ்ந்த இந்த உக்கிரமான போர் இந்திய கடற்போர் வரலாற்றில் ஒரு சிறந்த ஏடாக விளங்கியது.[17] கடற்போரில் வல்லவர்களான போர்ச்சுகன் பரங்கிகளிடம் கடல் வணிகரான இசுலாமியரது வீரம் எடுபடவில்லை.
பெரும்பாலான கப்பல்கள் போர்ச்சுகீசியரின் பிரங்கித் தாக்குதலினால் தீப்பற்றி அழிந்தன. உயிரிழப்பும் மிகுதியாக இருந்தது. வேதாளை கிராமத்து வடக்குப்பள்ளிவாசல் மைய வாடியில் உள்ள ஏராளமான மீஸான்கள், அந்தப் போரில் வீரமரணம் எய்திய இசுலாமியரது தியாகத்தை மட்டுமல்லாமல் தமிழக கடல் வாணிப வளத்தை நிரந்தரமாக இழந்துவிட்ட இசுலாமியரது சோக வரலாற்றையும் நினைவுபடுத்துவதாக உள்ளன. எட்டாம் நூற்றாண்டில் சீனக் கடலில் இருந்து செங்கடல் வரை பச்சைப் பிறைக் கொடிகளையும், பளபளக்கும் பதாகைகளையும் தாங்கி பவனி வந்த இசுலாமியரது வாணிபக் கப்பல்கள், வழிதவறிய ஒட்டகங்கள் போல, எங்கோ சென்று மறைந்தன. உலக நியதிக்கு ஒப்ப, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பரவும் கதிரவனது ஒளிக்கதிருக்கு மாறாக, மேற்கே இருந்து கிழக்கே பாய்ந்து பரவியதினால் இசுலாம் என்ற ஒளி வெள்ளத்தை தங்களது இதயங்களில் தேக்கியவாறு அந்தக்கப்பல்களில் சென்று, கீழை நாடுகளில் எங்கும் சமயப்பிரச்சாரம் செய்த வலிமார்கள், பக்கீர்கள், முஹாஜிரீன்கள்-ஆகிய தொண்டர் திருக்கூட்டத்தின் நடமாட்டமும் முடமாக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர், ஒரு நூற்றாண்டு வரை போர்ச்சுகல் பரங்கிகள் இலங்கை அரசியல் ஆதிக்கத்திற்கு போராடியதால் தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க அத்துமீறல்களில் அவர்கள் ஈடுபடவில்லை. மாறாக, மலேஷியாவிலும் இலங்கையிலும் கிடைக்கும் இலவங்கப்பட்டை, மிளகு, ஏலக்காய் ஆகிய வாசனைப் பொருட்களை மிகுதியாகவும் விரைவாகவும் ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்வதில் மிகுந்த அக்கரை காட்டினர். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் மன்னார் முத்துக்களைவிட, அந்த வியாபாரம் அவர்களுக்குப் பெருத்த ஆதாயம் அளிப்பதாக இருந்தது. என்றாலும், அவர்கள், தமிழக கடற்கரையில் சமயத்தைப் பரப்புவதிலும் "அஞ்ஞானிகளை" மதம் மாற்றுவதிலும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். லேவியர், ஹென்றிகஸ் ஆகிய கத்தோலிக்க கிறித்தவ பாதிரியார்களது வாழ்க்கை குறிப்புகள் இதனை விவரிக்கின்றன.[18] நாளடைவில் கிழக்காசிய வாணிபத்தில் டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியருக்கு போட்டியாக வந்ததுடன் இலங்கையில், அவர்களது அரசியல் ஆதிக்கம், ஏகபோக வாணிபம்-ஆகிய நிலைகளை அழித்தனர்.
டச்சுக்காரர்கள் மதுரை நாயக்க மன்னர்களுடனும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுடனும் நட்பு நிலையில் மன்னார்வளைகுடா முத்துக்குளித்தளிலும் உள்நாட்டில் தானிய வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்தனர். தூத்துக்குடி துறைமுகம் அவர்களது பிடியில் இருந்தாலும் போர்ட்டோ நோவா என்ற இடத்தில் தஞ்சாவூர் நாயக்க மன்னரிடம் கிரையத்திற்கு வாங்கிய இடத்தில் கோட்டையும் பண்டகசாலையும் அமைத்து, இலங்கை, சுமத்திரா (தற்பொழுதைய இந்தோனிஷியா) ஆகிய நாடுகளுடன் வியாபாரத் தொடர்புகள் வைத்து இருந்தனர். இவர்கள் உலாந்தாக்காரர் என அழைக்கப்பட்டனர். சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் கைத்தறித் துணிகளை வாங்கி மேனாட்டிற்கு ஏற்றி அனுப்பும் பணியில், ஆங்காங்கு இருந்த மரக்காயர்கள் அவர்களுக்கு உதவி வந்தனர் என்பது மட்டும் தெரிய வருகிறது. ஆனால் இந்த கால கட்டத்தில் தமிழக இசுலாமியரைப் பற்றி குறிப்பிடத்தக்க செய்திகள் வரலாற்றில் காணப்படவில்லை.
இந்த நிகழ்ச்சிக்கு பதினைத்து ஆண்டுகள் கழித்து போர்ச்சுகீஸீய கடல் நாய்களை அழிப்பதற்கு இன்னொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை கோழிக்கோட்டு ஸாமரின் மன்னருடன் விஜயநகரப் பேரரசரது உறவினரும் ஆளுநருமான வித்தலாவும் அந்த முயற்சியில் இணைந்து கொண்டார். முத்துக்குளித்தலில் போர்ச்சுகீஸியர் விஜயநகர பேரரசரது பங்கினை அளிக்கத் தவறியது. தெற்கு கடற்கரையில் உள்ள மணப்பாடு, புன்னைக்காயல், தூத்துக்குடி,வேம்பாறு ஆகிய ஊர்களில் அவர்களது நிலையினை பலப்படுத்திக்கொண்டது. கன்னியாகுமரியில் இருந்து இராமேசுவரம் வரையிலான கடற்பகுதியில் வாழும் பரவர்களும் அவர்களது நாட்டு அரசியல் சட்டதிட்டங்களை அமுல் நடத்தி வந்தது.[19] இராமேசுவரம் செல்லும் பயணிகளிடம் வேதாளையில் கட்டாயமாகத் தலைவரி வசூலித்தது ஆகிய அக்கிரமச் செயல்களுக்காக அவர்களை அழித்து ஒழிப்பது என்பது வித்தலராயரின் முடிவு. ஆதலால் ஸாமரின் மன்னரது கடல்படை, மன்னார் வளைகுடாவில் கடலில் மோதும்பொழுதும் வித்திலராயரது வடுகர்படை கடற்கரைப்பகுதிகளில் உள்ள போர்ச்சுகீஸியரையும் அவர்களது கோட்டையான காவலைத்தாக்கி அழிப்பது என்பது திட்டம்.
மே 1553ல் கோழிக்கோடில் இருந்து இராப் அலி தலைமையில் வந்த நாற்பது கப்பல்கள் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள முசல்தீவைத்தாக்கி அங்கிருந்த ஏராளமான பரவர்களையும் இருபது மீன்பிடி வள்ளங்களையும் கைப்பற்றினர். பின்னர், இராப் அலி அணியில் உள்ள ஐநூறு இசுலாமிய வீரர்கள் புன்னைக்காயல் கோட்டையை தாக்கிப்பிடித்தனர். தப்பி ஓடிய போர்ச்சுக்கீசிய தளபதியையும் வீரர்களையும் எதிர்ப்புறத்தில் தாக்கிய வடுகர் படை கைப்பற்றியது. இந்த சோகச் செய்தியை கேள்வியுற்ற போர்ச்சுகீசியத் தலைமை கொச்சியில் இருந்த கப்பல்படை ஒன்றை அனுப்பி வைத்தது. புன்னைக்காயலுக்கு வந்து சேர்ந்த அந்த அணி அப்பொழுது வடக்கே, கீழக்கரை அருகில் நிலை கொண்டு இருந்த இராப் அலி அணியுடன் கடுமையான கடல்போரில் மோதியது. போர்சசுக்கீசியர், இராப் அலியின் உக்கிரமான தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் சற்று தொலைவில் உள்ள தீவுகளுக்குள ஒடி ஒழிந்தனர். அந்நிய ஆக்கிரமிப்பாளருக்கு தோல்வி. ஆனால் வெற்றியைக் கண்ட மாவீரன் இராப் அலி, போரில் தழுவிய பயங்கர காயங்களினால் உயிர் துறந்தார்.[20] தியாகி குஞ்சாலி மரக்காயரது நீண்டகால ஆசையை நிறைவேற்றிய மன நிறைவுடன் போர்ச்சுக்கீசிய பரங்கிகளது அக்கிரம ஆதிக்கம் அழியத்துவங்கியதின் அறிகுறிதான் அந்தப்போர். ஒரு நூற்றாண்டுகாலம், மன்னார் வளைகுடா பகுதியைத் தங்களது சொந்த சொத்தாக பாவித்து வந்த போர்த்து கேஸியர் கி.பி. 1658ல் புயல் காற்றில் எழுந்த புழுதியைப் போல அந்தப் பகுதியில் இருந்து மறைந்தனர்.
- ↑ P. E. Peris and R.B.Naish — Ceylora and Portughese. (1986) P.26
- ↑ Fr. Pereira - History of Ceylon - page. II
- ↑ Arunachalam - History of Pearl fisheries of Tamil Coast. (1952) p.p. 17.18
- ↑ நாகசாமி Dr. ஆர் - தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள் (1969) பக். 13, 44.
- ↑ Arunachalam-History of Pearl fisheries 1952 p. 63.
- ↑ I bid p.p. 78:80
- ↑ I bid
- ↑ சேதுபதி மன்னர் செப்பேடுகள்.
- ↑ சொக்கு சுப்பிரமணியம் - சிந்துபாடும் சேது நாடு - திருச்சிராப்பள்ளி. (வானொலி வடிவம்) 1985
- ↑ Appadorai Dr. Economic Conditions of S. India(1OOOAD-15OOAD)
- ↑ A.R. 396/1907.
- ↑ Fr. Pereira. History of Ceylon p. p. 10-11
- ↑ Krishnasamy - Dr. A. - Tamil Country under Vijaya Nagas(1964) P-P. 235 - 236
- ↑ Arunachalam - History cf Pearl fishery of Tamil Coast(1952) p. 19.
- ↑ Arunachalam - History of pearl Fishery of Tamil coas(1952)
- ↑ Fr. Pereira History of Ceylon – p.p. 23.24
- ↑ Whitevvay - Rise of Portughece Povver in India (1899)
- ↑ Dorsey - Portughese Discoveries, Missions in Asia and Africa р.147
- ↑ Sathianathaiar—History of Madura Nayaks (1924)(appendix)
- ↑ Krishnasamy Dr. A.—Tamil Country under Vijayanagar Rule i. (1964) p. p. 240 : 241