மூவரை வென்றான்/தலைவெட்டிக்காடு

தலைவெட்டிக்காடு

நிம்முடைய தமிழ் நாட்டில் ராமநாதபுரம் ஜில்லாவுக்கு என்றே சில சிறப்பியல்புகள் உள்ளன.

வெயில் காலத்தில் வெயில் அதிகம். மழை காலத்தில் மழை குறைவு. ஒற்றையடிப் பாதைகளையும் வண்டிப் பாதைகளையும் தவிரக் கார் செல்ல் ஏற்ற சாலைகள் இல்லாத, கிராமங்கள். தப்பித்தவறி ஒரு ஊருக்கு ரயில்வே ஸ்டேஷன் இருந்தால், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஊர் நாலைந்து மைலுக்கு அப்பால் இருக்கும். சாலைதான் கிடையாது. ஒற்றையடிப் பாதைகளிலோ, வண்டிப் பாதைகளிலோ நிழல் மரங்களாவது இருக்குமோ என்றால், அந்த அம்சமும் பூஜ்யம் கிணறுகள் இருக்கும்; ஆனால், அவற்றில் தண்ணீர்தான் இருக்காது.

இவற்றையெல்லாம் சிறப்பியல்புகள் என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்வது?

எங்கள் ஊருக்கு ரயில்வே ஸ்டேஷன் இருந்தது. எங்கள் ஊரில் ர்யில்வே ஸ்டேஷன் ஏற்பட்ட விஷயம். ஒரு ரசமான கதை. ரயில் பாதைக்கு வடக்கே ராமலிங்கபுரம் என்று மூன்றரைமைவில் ஒரு ஊர் இருந்தது. தெற்கே கிருஷ்ணாபுரம் என்று ஜந்து மைலில் ஒரு ஊர் இருந்தது. கிருஷ்ணாபுரத்தி லிருந்து நாலு பர்லாங் நட்ந்தால், நேரே தென்திசையில் எங்கள் ஊர், நதிக்குடி என்று பெயர். முதல்முதலாக ஸ்டேஷன் ஏற்பட்டபோது ராமலிங்கபுரத்தார் தங்கள் ஊரின் பெயரையே ஸ்டேஷனுக்கு வைக்கவேண்டுமென்று ரயில்வேக்கு மகஜர் போட்டார்கள். தெற்கே கிருஷ்ணா புரத்தார் சும்மா இருப்பார்களா? அவர்கள் தங்கள் ஊரின் பெயரையே ஸ்டேஷனுக்கு வைக்கவேண்டுமென்று பஞ்சாயத்து போர்டில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்கள். ரயில்வேக்காரர்கள் இரண்டு ஊராருக்கும் நல்ல பிள்ளையாக ஒரு காரியம் செய்தார்கள். இரண்டு ஊரின் பேர்களிலும் சரி பாதியாக எடுத்து இணைத்து, ஸ்டேஷனுக்கு ராமகிருஷ்ணாபுரம் என்று பையர் வைத்துவிட்டார்கள். மதுரையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வழியில் - சிவகாசிக்கு அடுத்த ஸ்டேஷனாக அமைந்திருக்கிறது ராமகிருஷ்ணாபுரம். இந்த ஸ்டேஷனில் இறங்கித் தெற்கே, ஐந்தரை மைல் வண்டிப்பாதையிலும் ஒற்றையடிப் பாதை யிலுமாக நடந்தால், எங்கள் ஊர் நதிக்குடிக்குப் போய்ச் சேரலாம். கிருஷ்ணாபுரம் கொஞ்சம் மேற்கே ஒதுங்கிவிடுவ தால், எங்கள் ஊர் வழி தனியே பிரிந்துவிட்டது. ஐந்தரை, மைலும் ஒரே செம்மண் பார். காற்றடித்துவிட்டால் மிளகாய்ப் பொடியைத் தூவின மாதிரிச் செம்மண் புழுதி பறக்கும். ஒரே ஒரு பெரிய ஆஸ்ரமத்தைத் தவிர அந்த ஐந்தரை மைலில் வேறு மரமே கிடையாது. வெறும் பொட்டல். குடிக்கத் தண்ணீர் கிடையாது. அந்த ஆலமரத் தடியில் ஒரு ஊருணியும் இடிந்துபோன மடம் ஒன்றும் இருந்தன. அதற்கு அங்கணப் பரதேசி மடம் என்று பெயர்.

இந்த மடத்துக்கு அடுத்தபடி இருபது முப்பது அடி பள்ளத்தாக்கிலேயே இரண்டரை மைல் தொலைவு நாற். புறமும் வானமுகடுகளைத் தவிர வேறெதுவும் தெரியாது. அங்கங்கே இரண்டொரு பனை மரங்கள் நிற்கும். இந்த இரண்டரை மைல் பள்ளத்தாக்கிற்குத்தான் எங்கள் பக்கத்தில் தலைவெட்டிக்காடு-என்று ஒர் பயங்கரமான காரணப் பெயர் ஏற்பட்டிருந்தது. இந்தச் செம்மண் காட்டையும் இதில் முளைத்திருக்கும் பனைமரங்களையும் நினைக்கும்போது என் தாத்தாவின் நரை மயிர்ப் பொட்ட லான சிவப்பான வழுக்கைத் தலை என் நினைவிற்கு வரும், அதோடு மட்டும் நினைவு நின்றுவிட்ாது. இளம் பருவத்தில் இந்தத் தலைவெட்டிக்காடு என்ற பயங்கரப் பிரதேசத்தைப் பற்றி வழுக்கைத் தலை தாத்தாவிட்ம் கேட்ட கதைகளை நான் தாத்தாவானாலும் மறக்க முடியுமா? நல்ல வேளை யாக இப்போதெல்லாம் அந்தக் காலத்தில் நிகழ்ந்தவை போல எந்தவிதமான பயங்கர சம்பவங்களும் தலைவெட்டிக் காட்டுப் பாதையில் மருந்துக்குக்கூடக் கிடையாது. பேர ளவில்தான் தலைவெட்டிக்காடு என்ற பயங்கரம் நிலைத் திருக்கிறது. ஆனாலும் பழைமையை நினைத்துப் பார்த்து: அதை உங்களுக்குச் சொல்வதில் எனக்கு ஒரு திருப்தி. அந்தத் திருப்திக்காகத்தான் இதை இங்கே எழுதுகிறேன்.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் எங்கள் ஊரில் வாழ்ந்த ஒரு மனித தீரரைப் பற்றிய கதை. வீரம், தீரம் என்றெல்லாம் சாமானியமான சொற்களைக்கொண்டு அந்த மனிதரின் சாமர்த்தியத்தைக் கூறிவிடமுடியாது, அவர் ஒரு கம்பீரமான அவதார புருஷர் என்றுதான் சொல்ல வேண்டும்.

மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயர் என்றால் அந்தத் தலைமுறையில் இந்தப் பிரதேசம் முழுவதும் தெரியும். இப் போதும் பழைய காலத்துக் கிழவர்கள் சிலர் அந்தப் பெயரை அறிவார்கள்.

ஆறு அடிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். பிரா மணரானாலும் தேவமார், மறவர்கள் முதலியவர்களுக்கு அமைகிற மாதிரிக் கட்டு மஸ்தான தேகம் அவருக்கு வாய்த் திருந்தது, பாறை மாதிரி இறுகிப் பரந்த மார்பு. மிருதங் கத்தை குறுக்குப் பாட்டில் நிறுத்தி வைத்ததுபோல் பருத்த புஜங்கள். பயில்வான்கள் மாதிரி சதைப் பிடிப்புள்ள தொடைகள். சிறு வயதிலேயே சிலம்பம், குஸ்தி, மல்லுக் கட்டு, தண்டால், பஸ்கி எல்லாம் செய்து பழகியவர் அவர். பரந்த நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டுக்கு நடுவில் சிறிய குங்குமப் பொட்டு வைத்திருப்பார். இவை தவிர, அவருடைய பிரசித்திப் பெற்ற பேருக்குக் காரண மான பொருள்கள் காதுகளில் தொங்கின. அதுதான் மோதிரக் கடுக்கன்.

மோதிரக் கடுக்கன் என்றால் இந்தக் காலத்தில் பலருக் குப் புரியாது. அதை வேறொரு விதமாகப் புரிய வைத்து விடலாம். இப்போது சினிமாவிலும், நாடகத்திலும் ராஜ பார்ட்டுக்காரர்கள் சந்திரப் பிறை போன்ற ஒரு வளையத் தைக் காதுகளில் தொங்கவிட்டுக் கொள்ளுகிறார்கள் பாருங் கள். இதுபோல் மோதிரத்தை விடக் கொஞ்சம் பெரிதாகவும் தடிமனாகவும் தங்கத்தில் செய்து, அதில் விலையுயர்ந்த நீல நிற வைரக் கற்களைப் பதித்து உருவாக்கிய கடுக்கன்கள் இரண்டைத் தம் காதுகளில் அணிந்து கொண்டிருந்தார் முத்துசாமி ஐயர். பக்கத்துக்கு இரண்டு பவுன் வீதம் தங்கமும், விலையுயர்ந்த வைரக் கற்களும் சேர்ந்த அந்தக் கடுக்கன்கள் இரண்டும் இந்தக் கால விலை மதிப்புக் கிரயப் படி பார்த்தால், ஆயிர ரூபாய்க்குமேல் பெறும். அந்தக் காலத்தில் விலையை யார் பெரிதாக மதித்தார்கள்! கரு - கருவென்று சுருண்ட குடுமியைப் பின்புறமாகக்கொண்டு. தோன்றும் அந்த முகமும், காதுகளில் ஆடும் மோதிரக் கடுக்கண்களும் விளங்க அவர் எழுந்து நின்றால், வீமன் கதாயுத்மில்லாமல் எழுந்து நிற்பதுபோல இருக்கும்.

முத்துசாமி ஐயர் கலியாணமாகாதவர். ஆனால், சாமியாரில்லை. தகப்பனார் இறந்த பிறகு தம்பிக்குக் கலி. யாணம் செய்து வைத்துவிட்டு, நிலங்கரைகளைப் பாகம் பிரித்துக்கொள்ளாமல், அவன் விட்டோடு சாப்பிட்டுக் கொண்டு விவசாயத்தைக் கவனித்து வந்தார். தம்பிக்குக் குழந்தை குட்டிகளுக்குக் குறைவில்லை, அண்ணாவிடம் அபார் பக்தி. அவர் தன்னோடு தன் வீட்டில் இருப்பதையே பெருமையாகக் கருதினான் அவன். முத்துசாமி ஐயரைக் கலியாணம் செய்து கொள்ளேண்டா முத்துசாமி! இது. என்னடா தடிக்கட்டையா ஊரைச் சுத்திக்கொண்டு..? என்று வயதான கிழம்கட்டைகள் கூடக் கேட்பதில்லை.

நாற்பத்தெட்டு வயதுக்குமேல் கழித்து விட்ட அவர், இனிமேல் கலியாணம் செய்துகொள்ள முயல்வார் என்று ஊராருக்கோ, உற்றாருக்கோ, சிறிதும் நம்பிக்கை இல்லை. கலியாணம் செய்து கொள்ளாததனால், நடத்தையில் ஒழுக்கக் கேடோ, அங்கே, இங்கே, நின்று தெருப் பெண்களை உற்றுப் பார்த்தார் என்ற அவச்சொல்லோ, அவரைப் பொறுத்த மட்டில் கிடையவே கிடையாது. மனிதன் நடத்தையில் தங்கம் என்றால் தங்கம். அப்படிப் பட்டவருடைய வாழ்க்கை தலைவெட்டிக்காடு என்ற இடத்தில் ஒரு பெண் காரணமாக முடிய நேர்ந்தது. என்றால், அதுதான் இந்தக் கதையிலேயே மிகப் பெரிய ஆச்சரியம்.

அந்தக் காலத்தில் எங்கள் ஊருக்கு ரயில்வே ஸ்டேஷன் கிடையாது. கிழக்கே சிவகாசியையும், மேற்கே பூரீ வில்லிபுத்துரையும் விட்டால் வேறு ரயில்வே ஸ்டேஷன் நடுவில் இல்லை. கலியாணம், கார்த்திகை, விசேஷங்களுக்குச் சாமான்கள் வாங்க வேண்டுமானால், இந்த ஊர்களில் ஏதாவது ஒரு ஊரில் போய்த்தான் வாங்கிக்கொண்டு வரவேண்டும். பெரும்பாலும் தலைவெட்டிக்காடு வழியே குறுக்குப் பாதையில் சிவகாசிக்குப் போய்த்தான் சாமான் வாங்கி வருவார்கள். தலைவெட்டிக் காட்டைக் கடந்து வடகிழக்கே சென்றால், சிவகாசிக்குப்பத்து மைல். அந்தப் பத்து மைலுக்குள் இரண்டு கிராமங்கள் இடையில் இருந்தன. தாள்கொண்டான்புரம், மாறனேறி என்று இந்த இரண்டு ஊர்களில் தாள்கொண்டான்புரம் இப்போது பாழடைந்து விட்டது. ஊர்மட்டுமில்லை, அதன் பேரும் பாழடைந்து “தாட்னாபுரம் என்று சிதைந்து வழங்கி வருகிறது. இதற்கு நேர்மாறாக மாறனேரி இப்போது பெரிய ஊராகி விட்டது.

இந்த இரண்டு கிராமங்களிலுமாக அந்தக் காலத்தில் ஐம்பது, அறுபது அம்பலக்காரர் குடும்பங்கள் வசித்து வந்தன். இந்த அம்பலக்காரர்களுக்கும், எங்கள் ஊராருக்கும் பாசிக்குத்தகை உரிமைபற்றி ஒரு விரோதம் பரம்பரையாக இருந்தது. எங்கள் ஊருக்கு வடபுறம் சேவல் குளம் என்று ஒரு பெரிய பாசன ஏரி உண்டு. அதில் மீன் குத்தகை மட்டும் வருஷத்துக்கு ஆயிரம், இரண்டாயிரத்துக்குக் குறையாமல் போகும். இந்த ஏரி, மாறனேரிக்குப் பக்கத்தில் இருந்த தினால் மாறனேரி, தாள்கொண்டான் புரம் ஆகிய இரண்டு ஊர் அம்பலக்காரர்களும் ஒன்று கூடி, வருஷா வருஷம் எங்கள் ஊராரிடம் குத்தகை உரிமை பெறாமலே மீன் பிடிக்கத் தொடங்கினார்கள்.

‘ஏரியில் மீன் இருக்கிறது! அதைக் குத்தகைக்குவிட உங்களுக்கென்ன அதிகாரம்?’ - என்று அம்பலக்காரர்கள் விதண்டாவாதம் பேசினர். இதன் பின் இரு சாராருக்கு. மிடையில் இரவும், பகலும் அடிதடிகள் கலகங்கள் தொடர்ந்து சில வருடங்கள் நடந்தன. எங்கள் ஊரில் மோதிரக் கடுக்கண் முத்துசாமி ஐயர் மட்டும் இருந்திருக்க வில்லையானால், அம்பலக்காரர்கள் எப்போதோ ஊரைச் சூறையாடியிருப்பார்கள். அவருடைய ‘அத்து’ - எங்கள் ஊர்மேல் அம்பலக்காரருக்குக் கொஞ்சம் பயம் இருந்தது. பின்பு விஷயம் கோர்ட் வரை போயிற்று. தீர்ப்பு எங்கள் ஊராருக்குச் சாதகமாகவே ஆகிவிட்டது.

இந்தப் பாசிக் குத்தகை விவகாரம் முடிந்த பிறகு, அம்பலகாரர்களுக்கு எங்கள் ஊரார்மேல் அளவு கடந்த, ஆத்திரம் ஒண்டி சண்டியாக சிவகாசிக்குச் சாமான் வாங்கப் போகிற எங்கள் ஊர் ஆட்களை அந்தப் பிரசித்தி பெற்ற பள்ளத்தில் மன்றந்திருந்து அம்பலக்காரர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி செய்ய ஆரம்பித்தார்கள். ஒன்றிரண்டு மாதங்களுக்குள் எங்கள் ஊரைச் சேர்ந்த, ஏழெட்டுப் பேர் அந்தப் பள்ளத்தில் தண்லவெட்டப்பட்டார்கள். கொள்ளை, வழிப்பறிகளுக்கோ, எண்ணிக்கை சொல்ல முடியாது. இதனால் நாளடைவில் அந்தப் பள்ளத்திற்குத் ‘தலைவெட்டிக்காடு’ என்று பெயர் ஏற்பட்டுவிட்டது. சிவகாசிக்குப் போய் சாமான் வாங்கப் பயந்து, எல்லோரும் மேற்கே பூரீவில்லிபுத்துருக்கே போகத் தொடங்கிவிட்டார்கள். அம்பலகாரரின் தொல்லையால் எங்களுராரின் போக்குவரவு தலைவெட்டிக்காடு பிரதேசத்தில் சுத்தமாக நின்று போய்விட்டது.

ஆனால், எங்கள் ஊரில் ஒரே ஆளை மட்டும் இந்தக் கொலை, கொள்ளை, பயமுறுத்தல்களெல்லாம் கொஞ்சங், கூட அரட்ட முடியவில்லை. மோதிரக் கடுக்கன் ஐயர் மட்டும் பழையபடி சிவகாசிக்கே போய் வந்து கொண்டிருந் தார். அநேகமாகப் பகல் நேரங்களில்தான் அவரும் போக்குவரவு வைத்துக் கொண்டார். மாறனேறி, தாள் கொண்டான்புரம் அம்பலக்காரர்கள் பலர் ஐயரிடம் சிலம்பம், குஸ்தி முதலியவற்றைக் கற்றுக் கொண்ட சீடர்கள், அவர் பலமும், துணிவும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

‘அடே! அந்த மோதிரக் கடுக்கன் முத்துவையன் எம - காதகப் பயல்...அவன் கிட்ட மட்டும் போய் வாலை ஆட்டி வைக்காதிங்க...நமக்கெல்லாம் குஸ்தியும், சிலம்பமும் தெரி புதுன்னா அது அந்த ஐயன் இட்டபிச்சை’ என்று வயதான அம்பலக்காரர்கள் இளம் பிள்ளைகளிடம் அடிக்கடி எச்சரிப்ப துண்டு.

தலைவெட்டிக்காடு பள்ளித்தில் கொலை, கொள்ளை களைச் செய்து நதிக்குடியூராரைப் பழி தீர்த்துக்கொண்ட அம்பலகார இளைஞர்கள், மேற்படி எச்சரிக்கைக்காக மட்டு மின்றி, சொந்த பயத்தினாலும் ஐயரை நெருங்க அஞ்சிப் பேசாமல் இருந்தனர்.

அவர் வழக்கம்போல் தனி ஆளாகத் தலைவெட்டிக் காட்டைக் கடந்து மாறனேரிப் பாதையாகச் சிவக்ாசிக்குப் போய் வந்துகொண்டுதான் இருந்தார். கருங்காலி மரத்தில் வெட்டி எடுத்த சிலம்பக் கழி ஒன்று மட்டும் அவர் கையிலிருக்கும்.

முதலில், தான் மட்டும் போய் வந்து கொண்டிருந்த ஐயர், நள்ளடைவில் அந்தப் பாதையில் போகப் பயப்பட்ட வேறு சிலரையும் தம்முடைய மேற்பார்வையில் கூட்டிச் சென்று வந்தார். அம்பல்காரர்கள் யாரைத் துன்புறுத்தினாலும், துன்புறுத்தினவ்ர்களுக்காகத் தாமே வலுவில் பரிந்து கொண்டு அம்பலகாரர்களை எதிர்த்தார்.

‘ஏலே நீங்க சாதி மறவர்களா இருந்தா வாங்கடா பார்ப்போம்.இந்த ஒத்தச் சிலம்பக் கழிக்குப் பதில் சொல்ல முடியுமாடா உங்களாலே?...இந்தப் பள்ளத்து வழியா வருகிற நதிக்குடிக்காரன் எவன் மேலேயாவது கை வச்சிங்களோ... உங்க குலத்தையே நாசம் பண்ணிப்பிடுவேன்! ஜாக்கிறதை என்று அடிக்கடி அவர்கள் ஊர் நடுவில் நின்றுகொண்டே அவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அவர்களில் சிலரைச் சமயம் வாய்த்தபோது முதுகு தழும்பேற நொறுக்கித் தள்ளிக் கொண்டுமிருந்தார். எதற்கும் அஞ்சாத ராக்ஷஸ்த் தைரியம் ஐயருக்கு, ஐயரின் இந்த ராக்ஷஸத் தைரியம் வளர வளர் அம்பலகாரர்கள் அவர்மேல் வைத்திருந்த ‘கெத்து’ நலிந்து தேய்ந்து கொண்டிருந்தது. பழைய கெத்து இருந்த இடத்தில் குரோதம் தோன்றிவிட்டது.

ஒரு நாள் மாட்டுக்குப் பருத்தி விதை வாங்குவதற்காக மத்தியானம் ஒரு மணிக்குப் புறப்பட்டுச் சிவகாசிக்குப் போனார் மோதிரக் கடுக்கன் ஐயர். தம்பியின் வீட்டில் இரண்டு ஜதை காளை மாடுகள், நாலைந்து பசு மாடுகள் எல்லாம் இருந்தன. இவற்றுக்கு நாள் தவறாமல் காலையில் பருத்தி விதை அரைத்து வைப்பது வழக்கம். வாரத்துக்கு அரை மூட்டை பருத்தி விதை செலவாகும். மாதத்திற்கு, இரண்டு முறை சிவகாசிக்குப் போய் ஒரோர் மூட்டையாகப் பருத்தி விதை வாங்கி வந்துவிடுவார் ஐயர். அன்றைக்கு மத்தியானம்வரை பருத்தி விதை வாங்கப் போக வேண்டுமே. என்ற ஞாபுகமே இன்றிக் கழித்து விட்ட அவர், திடீரென்று. நினைத்துக் கொண்டு ஒரு மணிக்குப் புறப்பட்டிருந்தார்.

அவர் மாறனேரி ஊரைக் கடக்கும் போது பகல் இரண்டு மணிக்குமேல் இருக்கும். போகும்போது அவரிடம் ஏற்கெனவே குரோதம் கொண்டிருந்த அல்பலகாரர்கள் சிலர் அவரைக் கண்டு கொண்டனர்.

‘சரி! ஐயன் சிவகாசிக்குப் போகிறான். இன்றைக்கு ன்ன்னவோ வழக்கத்தை மீறி மதியத்துக்குமேலே புறப்பட்டிருக்கிறான். திரும்புவதற்குள் இருட்டிவிடும். திரும்பாமல் சிவகாசியில் தங்கவும் மாட்டான். நம்முடைய பழியை இன்றைக்குத் தலைவெட்டிப்பள்ளத்தில் வைத்துத் தீர்த்துக் கொண்டுவிட வேண்டியது. ஆளைத் தீர்க்க முடியாவிட்டாலும் இரண்டு காதுகளையாவது அறுக்கவேண்டும். மோதிரக் கடுக்கனைக் கொள்ளையடித்தால், ஐயன் பெருமை பாதிபோன மாதிரி"—

அல்பலக்காரர்கள் ஒன்றுகூடித் தீர்மானம் செய்து கொண்டனர். நேருக்கு நேர் நின்று முத்துசாமி ஐயரை மறிக்க முடியாவிட்டாலும் இருட்டில் பள்ளத்தில் மறைந்திருந்து ஆளை அமுக்கிவிடலாம் என்பது அவர்கள் திட்டம். 'போயும் போயும் ஒரு சிலம்பக் கழியைத் தவிர ஐயரிடம் வேறு ஆயுதம் இருக்காது'–என்பதால், அம்பலகாரர்களுக்கு அன்று தெம்பு பிறந்துவிட்டது. அவர் சிவகாசிக்குப் போவதைக் கண்டதிலிருந்தே இரவு அவரை மடக்குவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இரண்டு ஊர் அம்பலகாரர்களும் அந்த ஒரு மனிதரை மடக்குவதற்காக அதற்குமுன் என்றுமே ஒத்துழைத்திராத வகையில் ஒத்துழைத்தார்கள்.

தலையில் பருத்தி விதை மூட்டை, வலது கையில் சிலம்பக் கழி. 'டக் டக்'—கழியை ஊன்றும் ஒசை. விருட் விருட்டென்று பாய்ந்து வந்துகொண்டிருந்தார் ஐயர். பாதை அவருக்கு மனப்பாடம். இருட்டால் பாதை தவறவோ, மயங்கவோ அவசியமில்லை. கண்ணைக் கட்டி அனுப்பினாலும் ஊர் போய்ச் சேர்ந்துவிடுவார். அத்தனை தடவை அந்த வழியில் நடந்து பழக்கம் அவருக்கு.

அவர் மாறனேரி ஊரைக் கடக்கும்போது இருட்டி இரண்டு நாழிகைக்கு மேலாகியிருந்தது. போகும் போது ஊர்ச் சாவடியில் நிறைய ஆண்பிள்ளைகளைக் கண்டிருந்த் அவர், திரும்பும்போது சாவடி சூனியமாக இருப்பதைக் கண்டார். அவர் முட்டையோடு ஊருக்குள் நுழைந்த போது, இருட்டில் வீட்டு வாசல்களில் கூடியிருந்த பெண்கள். தங்களுக்குள் ஏதோ கசமுச்வென்று பேசிக் கொள்வதையும் கவனித்தார்.

'பாவம்...இந்த ஐயருக்கு அடுத்த தடவை இந்தப் பாதையிலே வரதுக்கு பாக்கியம்...'— இப்படி ஏதோ இரண்டொரு சொற்கள் அவர் காதில் விழுந்தன. இருளில் அவர் காது மோதிரக் கடுக்கன்களின் வைரங்கள் மின் மினிப் பூச்சிகளை வளையமாகக் கட்டித் தொங்கவிட்ட மாதிரி ஜவலித்தன. தலையிலிருந்த பருத்தி விதை மூட்டை அந்த ஒளியை மறைத்து நிழலிட்டு மறைத்தது. சாடை மாடையாக விழுந்த 'கசமுசல்' களை அவர் கவனித்துக் கொண்ட பின்பே மாறனேரியை விட்டு நகர்ந்தார்.

'கடுக்கனை. அறுத்துப் போடறதாக இல்லே பேசிக்கிட்டாக'—ஓரிடத்தில் 'கசமுசல்'களுக்கிடையே இப்படி ஓர் குரல் கொஞ்சம் இரைந்தே அவர் காதில் விழுந்தது.

ஐயருக்கு விஷயம் புரிந்துவிட்டது. 'சரி! பயல்கள் இன்றைக்கு மோதிரக் கடுக்கனில் கண்வைத்துவிட்டார்கள்... ஆளுக்கே கண்ணி வைக்கத் தவறியிருக்க் மாட்டார்கள் என்று உறுதியாக அனுமானித்துக்கொண்டார் அவர். அன்று அந்த இருள் செறிந்த இரவில் தலைவெட்டிப்பள்ளத்தில் தம்முடைய தலைக்கு ஆபத்து காத்திருக்கிறது என்பதை நொடியில் புரிந்துகொண்டார் அவர் நினைத்திருந்தால், அப்படியே இரண்டாவது பேருக்குத் தெரியாமல் சிவகாசிக்கு மூட்டையோடு திரும்பிப் போயிருக்க முடியும் அவரால். ஆனால், அவர் ஒரு சுத்த வீரர். அப்படிச் செய்ய மணம் இசையவில்லை. தைரியமாக மாறனேரி ஊரைத் தாண்டித் தலைவெட்டிப் பள்ளத்தை நோக்கி நடந்தார். இருளிலும் ஆபத்து இருக்கிறது என்று அறிந்துகொண்ட பின்னும் மிடுக்கும் கம்பீரமும் இருந்தன அவர் நடையில்.

'இன்று இந்த ஆபத்தைக் கடந்து மூட்டையோடு நான் மட்டும் ஊர் போய்ச் சேரவில்லையானால், இதுவரை இந்த மோதிரக் கடுக்கன்களைப் போட்டுக்கொண்டு நானும் ஒரு தீரன் என்று அலைந்ததற்கு அர்த்தமே இல்லை. பார்த்துவிடுகிறேன் ஒரு கை --' என்று சூளுரைத்துக்கொண்டு, மனோதிடத்தைப் பொங்கச் செய்தார். தலைவெட்டிப் பள்ளம் நெருங்கியது.

ஐயர் வஞ்சகமில்லாமல் பொடி போடுவார். மடியில் சிவகாசியில் வாங்கிய புதுமட்டையாக இரண்டு மூன்று பொடி மட்டைகள் நிறைந்த பொடியோடு கிடந்தன. பள்ளத்தில் இறங்குவதற்கு முன்னால், அங்கணப் பரதேசி மடத்து ஆலமரத்தின்கீழ் கொஞ்சம் நின்று சில திட்டங்களைத் தந்திரமாக வகுத்துக்கொண்டார். மடியிலிருந்த பொடி மட்டைகளில் இரண்டை அவிழ்த்து இடது உள்ளங்கையில் கொட்டிக் கையை இறுக்கி மூடிக்கொண்டார். வலது கைதான் சிலம்பக் கழியைப் பிடித்துக்கொண்டிருந் ததே!

வலது கையில் சிலம்பக் கழி! இடது கையில் பொடி! தலைமேல் பருத்தி விதை மூட்டை.. ஐயர் ஓரக் கண்களைப் பாதையின் இருமருங்கிலும் சுழற்றி இருளை ஊடுருவும் கூரிய நோக்குடன் தலைவெட்டிப் பள்ளத்திற்குள் இறங்கினார்.

பள்ளத்திற்குள் இறங்கி நாலைந்து கெஜ தூரம்தான் நடந்திருப்பார். அவருடைய வலது புறமும் இடது புறமும் இரண்டு மின்னல், துணுக்குகள் அவரது காதுகளை நெருங்கின. கொஞ்சம் உற்றுப் பார்த்தால், அவை மின்னல் துணுக்குகளல்ல, நன்றாகத் தீட்டப்பட்ட இரண்டு கூரிய கத்திகள் என்பதும், அவற்றால் இரண்டு அம்பலக்காரர்கள் அவருடைய காதுகளை மோதிரக் கடுக்கன்களோடு அறுக்க முயல்கிறார்கள் என்பதும் புரியும். ஐயருடைய இடது கை மெல்ல உயர்ந்து இறுக்கிய உள்ளங்கையை விரித்து இடது பக்கம் கத்தியோடு நெருங்குகிறவனுடைய கண்களைக் குறிவைத்துக் காரம், மணம், குணம் எல்லாம் நிறைந்த பொடியைத் தூவியது. 'அச்....ஆச்...அச் ஆச்' இடது புறத்து ஆசாமி, தும்மல்மேல் தும்மலாகத் தும்மிக்கொண்டே கண்ணைக் கசக்கினான். கத்தி தரையில் நழுவியது. ஐயர் அதைக் காலால் தார எற்றிவிட்டார். வலது புறம் நின்றவனுடைய இரண்டு முழங்கால்களுக்கும் இடையே அவனுக்கே தெரியாதபடி அவருடைய சிலம்பக் கழி நுழைந்தது. நுழைந்த கழி மின்னல் வேகத்தில் இரண்டு முழங்கால்களையும் சேர்த்து ஒரு நெம்பு நெம்பியது. "ஐயோ...அம்மா... – அலறிக்கொண்டே பல்டியடித்துக் குப்புற விழுந்து செம்மண்ணில் புரண்டான் அவன். அவ்வளவுதான்! பொத்தென்று தலையிலிருந்த பருத்தி விதை மூட்டையைக் கீழே தள்ளிவிட்டுப் பாய்ந்து, பாய்ந்து சிலம்பக் கழியைச் சுழற்றினார் ஐயர். ஒளிந்துகொண்டிருந்த மற்ற அம்பலகாரர்களும் திமுதிமுவென்று ஒடி வந்து கூட்டமாக அவரை வளைத்துக்கொண்டார்கள். வளைத்துக் கொண்டு சும்மா நிற்க முடிந்ததே ஒழிய, அவரை நெருங்க முடியவில்லை. மின்சார விசிறி-பெரிதாக இந்தக் காலத்தில் ஆகாய விமானங்களின் முன்புறம் சுழலுமே, அதுமாதிரி நாற்புறமும் சுழன்றது அவருடைய சிலம்பக் கழி. நான்கு பக்கமும் கத்தி, பிச்சுவா, ஈட்டி, பாலாக்கம்பு சகிதம் அவரை வளைத்துக்கொண்டு நின்றவர்கள் பதினைந்து இருபதடி தூரம் தள்ளி நிற்க முடிந்ததே தவிர, அவரைக் கிட்ட நெருங்க்வே முடியாமலிருந்தது.

பொழுது விடிகிற வரையிலும் அவர் அப்படிச் சிலம்ப மாடித் தடுத்தாலும்கூட அவரைத் தீர்த்துக் கட்டாமல் போவதில்லை என்று அம்பலகாரர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். கொஞ்சம் கைகள் ஒய்ந்தோ, அசந்தோ, அவர் சிலம்பக் கழியைக் கீழே போட்டால் போதும். அவ்ர் மேற்பாய்ந்து கொல்லச் சுற்றிலும் நாற்பது ஐம்பது பேர் கத்தி கபடாக்களோடு காத்திருந்தனர். ஒன்று, இரண்டு, மூன்று என்று நாழிகைகள் கழிந்துகொண்டே இருந்தன. இரவு நடு ஜாமத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. ஐயர் ஆட்டத்தை நிறுத்தவே இல்லை. ஆட்டத்தை நிறுத்தினால், கழுத்தை அல்லவா நெரித்துவிடுவார்கள்.

நல்லவேளை இதற்குள் நதிக்குடியில் அவர் தம்பி ராஜுவையர் 'கண்டிப்பாக இரவு வந்துவிடுவேன்' என்று சொல்லிவிட்டுப் போன அண்ணாவை நள்ளிரவு வரை காணாததால், சந்தேகமுற்றுக் கத்திக் கம்புகளுடன் ஊர் ஆட்கள் ஐம்பது, அறுபது பேரைத் திரட்டிக்கொண்டு தலைவெட்டிப் பள்ளத்துக்கு வந்துவிட்டார்.

அதைக்கண்ட மாறனேறி அம்பலகாரர்கள், இனி இங் கிருப்பது வீண்-என்று தீர்மானித்தவர்களாய், இருளில் ஊரை நோக்கி மெல்ல நழுவினர். அவர்கள் போனபிறகும் கால் நாழிகை, அரை நாழிகை கழித்துத்தான் ஐயர் சிலம்பக் கழியைக் கீழே வைத்தார். அவருடைய வஜ்ரம் பாய்ந்த சரீரம் வேர்வையில் முழுகியிருந்தது. கடுக்கனுடைய ஆட்டத் தால் காது நுனிகள் கன்றிச் சிவந்திருந்தன. கண்கள் நெருப்புத் துண்டங்களாக மாறியிருந்தன.

‘ஏண்டாப்பா ராஜு எனக்காக இந்த அர்த்தராத்திரி யிலே இப்படி ஊரைத் திரட்டிக் கொண்டா ஒடி வரணும்? இந்த உடம்பைவிட உயிர் கெட்டியானதுடா? ஒரு பயல் அசைச்சுக்க முடியாது...இன்னும் எட்டு நாளானாலும் இப் படியே கழியைச் சுற்றி உயிரைக் காப்பாத்திப்பேனே ஒழிய, இந்த அம்பலகாரங்க கிட்டக் கொடுத்திட்டுப் போயிட மாட்டேன், வா! போகலாம்...' - ஒன்றும் நடக்காததைப் போலப் பேசிக்கொண்டே, மூட்டையைத் துரக்கித் தலையில் வைத்துக்கொண்டு அவர்களோடு நடந்தார் ஐயர்.

'மோதிரக் கடுக்கன் மோதிரக் கடுக்கன்தான். இவருக்கு எதிரி இன்னும் பிறக்கலை ஐயா. இவர் அஜாத சத்துருஎன்று தொடர்ந்து ஒரு வாரம் ஊரெல்லாம் புகழாயிருந்தது. இந்தச்சம்பவம் நடந்த பிறகும் ஐயர் வழக்கம் போலத் தலை வெட்டிக் காடுவழியே தாள்கொண்டான்புரம் மாறனேரி ஊர்களின் வழியே சிவகாசிக்குப் போய்க்கொண்டும் வந்து கொண்டும்தான் இருந்தார். தம்பி ராஜூவும் ஊராரும் எவ்வளவு தடுத்தாலும் அவர் கேட்கவில்லை. பிடிவாதம் முரட்டுத் தைரியத்திற்குத் தோழனைப் போன்றது.

ஊராரும் தம்பியும் தடுத்தபோது ஐயர், 'சரிதாண்டா! சும்மா இருங்க! உங்க சோலியைப் பார்த்துக்கொண்டு. போங்க. என் வழியிலே நான் போகிறேன். திராணியிருந்தா ஒருபயல் என் மேலே கைவச்சுப் பார்க்கட்டும் சொல்கிறேன்? அடேய் ஒன்று நான் ஏமாறனும் இல்லாட்டா இயற்கையாச் சாகணும். எதிரின்னு எவன் கையால்ேயும் எனக்குச் சாவு கிடையாதுடா என்று இரைச்சல் போட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தார். இதற்குப் பின்னும் ஐந்தாறு முறை பலவிதங் களில் அவரைத் தீர்த்துக்கட்ட வேண்டும். முடியாத பட்சத் தில் அந்த மோதிரக் கடுக்கனையாவது காதோடு அறிந்துவிட வேண்டும்' - என்று அம்பலக்காரர்கள் முயன்றனர். எல்லா முயற்சிகளும் சதித் திட்டங்களைப்போல ரகசியமாக நடந்தன.

இந்தச் சம்பவம் நடந்து பத்துப் பதினைந்து நாட்களுக் குப் பின்பு ஏறக்குறைய இதேமாதிரி மற்றொரு சம்பவமும் நடந்தது. அன்றைக்குப்போலவே மோதிரக் கடுக்க்ன் ஐயர் சிவகாசிக்குப் புறப்பட்டார்.

'ஏ! ஐயரே! உன்னோட 'மல்லுக்கட்டுக் குஸ்தி' போட்டு ரொம்ப நாளாயிடிச்சு, இப்படி வாயேன். இந்த மணல்லே ஒரு 'கோதாப்' போட்டு ஆடுவோம். ஜெயிச்சிட்டா நீ வழியோட போயிடலாம் என்று கூறிச் சில அம்பலக்காரர்கள் அவரைத் தலைவெட்டிப் பள்ளத்திற்குள் வைத்து முன் போலவே வழி மறித்தனர். குஸ்தி நடந்து கொண்டிருக்கும் போதே குஸ்தி முறைக்கு மாறாக ஐயரின் கண்களில் மணலை அள்ளிப்போட்டுவிட்டுக் காதை அறுத்துக் கடுக்கன்களைக் கொள்ளையடித்துவிட வேண்டும் என்பது அவர்களுடைய அன்றையச் சதித் திட்டம். முன்பெல்லாம் ஐயரைத் தீர்த்துக் கட்டவேண்டும் என்று முனைந்து நின்ற அல்பலக்காரர்கள், இப்போது அது அசாத்திய்ம் என்று உணர்ந்து, அந்த எண்ணத்தை அறவே கைவிட்டு விட்டனர். அவருக்கு ஒரு தீராத அவமானச் சின்னமாக இருந்து, உயிரோடு வாழும் , போதே நினைவினால், அவர் மனம் ஏங்கும்படியாகக் காது களைக் கடுக்கனோடு அறுத்துவிட்டால் போதும் என்று முடிவு செய்திருந்தனர். இப்போது, காதறுத்து, கடுக்கன்களை இழந்துவிட்டால் பீமசேனன் மாதிரி இருக்கும். அந்த முகத்தின் காம்பீர்யம் பாழாகி, மூளித்தனமும் அமங்கலமும் குடிகொண்டுவிடும் கொல்வதைவிட உயிரோடு சித்திரவதை செய்வது போன்றது. இது என்பது அவர்கள் தீர்மானம்.

இப்படித் தீர்மானம் செய்த பின்புதான் அவரைத் தலை: வெட்டிப் பள்ளத்தில் வழி மறித்துக் குஸ்திக்கு அழைத்தார் கள், வம்புச்சண்டைக்குப் போனாலும் வெற்றி பெறுகிறவர் வலுவில் வந்த சண்டையை விட்டுவிடுவாரா என்ன? மல்லுக் கட்டுக் குஸ்திதானேடா? அதுக்கென்னடா? தாராளமாகப் போடுவோம்! எத்தனை பேர்டா எதிர் நிற்கிறீங்க... என்னோடே?”

“நாலு பேர் நிற்கிறோம் ஐயரே!”

“ஏண்டா? நாலு பேர் போதுமா? இங்கே இருக்கிற பத்துப்பேரும் எனக்கெதிராக நின்னாக்கூட எனக்குச் சம்மதந் தாண்டா? நாலு பேர் எனக்கு ஒரு பெரிய சம ஜோடியாடா? இத்தனை பேருமே நின்னு பாருங்களேண்டா!”

“இல்லை ஐயரே! நாலு பேர் போதும்...”

“சரி! வாங்கடா கோதாவுக்குள்ளே ... முதல்லே யார் பிடி’டா?”

“உங்க பிடியாவே இருக்கட்டும்!”

ஐயர் முஷ்டியை மடக்கிக்கொண்டு பாய்ந்தார். இடுப்பில் இந்தக் காலத்தில் போட்டுக்கொள்கிற ‘ஆஃப் டிராயர்’ மாதிரி ஒரு ‘லங்கோடு’ மட்டும் போட்டுக்கொண்டிருந்தார். வேஷ்டியை அவிழ்த்து வைத்துவிட்டார்.

மல்லுக்கட்டுக் குஸ்தி ஒரு நாழிகை நோம் நடந்தது: முடிவில்...? முடிவில் என்ன ஆயிற்று ஐயரை எதிர்த்த நாலு அம்ப்லக்காரர்களில் ஒருவனுக்குக் கணுக்கால் எலும்பு விட்டுப் போய் விழுந்து கிடந்தான். இன்னொருவனுக்கு இடுப்பில் பிடித்துக்கொண்டது! தரையைவிட்டு எழுந்திருக்கவே முடிய வில்லை. மூன்றாமவனுக்கு மர்ம ஸ்தானத்தில் சரியான அடி. அவன் மயங்கி விழுந்து கிடந்தான். நாலாவது பேர்வழி மூக்கிலும் முகத்திலும் குத்து வாங்கி இரத்தம் ஒழுகச் செயலற்று நின்றுகொண்டிருந்தான். ஐயர் வேஷ்டியை உதறிக் கட்டிக்கொண்டு, “வரேண்டா? ஊருக்கு நாழி யாச்சுடா இன்னும் சாப்பிடலே. சிவகாசி போய்த் திரும்ப ஆணும்” என்று யாரோ நெருங்கிய சிநேகிதர்களிடம் விடை பெற்றுக்கொள்கிற மாதிரிச் சொல்லிக் கொண்டு நடந்தார்.

அவரை ஒன்றும் செய்யத் தோன்றாமல் வாயைப் பிளந்து கொண்டு தலைவெட்டிப் பள்ளத்திற்குள் நின்று கொண்டி ருந்தார்கள் அவர்கள். அவர் மேட்டில் ஏறி மாறனேரி வழியாகச் சிவகாசிக்குப் போகும் பர்தையில், சிங்கம் நடக்கிற மாதிரி நேர் எதிரே பாதையைக் குறி வைத்து அம்புப் பாய்ச்சல் போல நடந்து போய்க்கொண்டிருந்தார்.

இந்த இரண்டு சம்பவங்களாலும் அம்பலக்காரர்கள் மனத்தில் மோதிரக் கடுக்கன் ஐயர்மேல் வைரம் தோன்றி முற்றிவிட்டது. இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது எனறு அடம் பிடிக்கும் நிலைக்குப் பகைமையை வளர்த்துக் கொண்டு விட்டார் ஐயர்.

‘அடேய் ரத்தத்துக்கு ரத்தம் வாங்கற சாதியிலே மீசை மொளைச்ச ஆம்பிள்ளைகளாப் பொறந்துட்டீங்களேடா? உங்களுக்கு வெட்கம் மானம் இல்லே சேலையைக் கட்டிக் கிட்டுச் சமையல் பொறைக்குள்ள போங்கடா’ என்று வயதான கிழவர்களும் கிழவிகளும் மாறனேரியிலும், தாள் கொண்டான்புரத்திலும் வாலிபர்களைக் குத்திக் காட்டத் தொடங்கிவிட்டார்கள். வாலிபர்கள் மனத்தில் சுருக்கென்று தைத்தது இந்த வார்த்தை. ‘என்ன மாயம் பண்ணினாலும் சரி! இன்னும் ஒரு மாசத்திலே ஐயன் காது ரத்தம் தலை வெட்டிப் பள்ளந்திலே ஒழுகனும். இதைச் செய்யாமவிடற். தில்லே என்று உள்ளூர்ப் பெரியவர்களுக்கு முன்னே கையடித்துச் சத்தியம் பண்ணிக் கொடுத்துவிட்டார்கள் அம்பலக்காரர்கள். ஐயருக்கும் இந்த விஷயம் தெரிந்து தானிருந்தது. ஆனால், போக்குவரவு விவகாரத்தை நிறுத்தாமல் அதே பாதையில் போய் வந்துகொண்டுதான் இருந்தார் அவர். நேருக்கு நேர் கம்பைக் காட்டிபோ, கத்தியைக் காட்டியோ, அவர் காதுக் கடுக்கனை நெருங்க முடியாது என்பது அம்பலக்காரர்களுக்குப் பழைய அனுபவங்களால் நன்கு தெரிந்திருந்தது.

முடிவில் எப்பேர்ப்பட்ட்வரும் மீற முடியாத்தும் எவரும் சுலபத்தில் அகப்பட்டுக்கொள்ளக் கூடியதுமான ஒரு ‘மெல்லிய’ வலையை விரித்தார்கள். சிவகாசிக்குக் கிழக்கே உள்ள ‘அனுப்பங்குளம்’ என்ற ஊரில் ‘ராஜாம்பாள்’ என்று ஒரு சதிர்க்காரி (நாட்டியமாடுபவள்) இருந்தாள். தேவதாஸி குலத்தைச்சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு இருபது இருபத்திரண்டு வயதுக்குமேல் இராது. கிளி என்றால் கிளி, ரதி என்றாள் ரதிதான் அவள். ராஜாம்பாள் சண்பகப்பூ நிறம். ஒரு சிரிப்புச் சிரித்துக் கிளுக்கென்று. கண்ணைக் சொடுக்கின்ாளானால், எப்பேர்ப்பட்ட பீஷ்மாச் சாரியும் கிறங்கிப் போவான். ரப்பரில் வார்த்தெடுத்து உருட்டித் திரட்டி வைத்தவைபோல வளைவும் நெளிவும் , கோடிட்டு விளங்குகிற வாளிப்பான சரீரம் அவளுக்கு: மயக்கும் விழிகளும் நயக்கும் சிரிப்புமாக மோகத்தின் ஸ்வரூப மென விளங்கினாள் அவள். மறனேரி, தாள் கொண்டான் புரம் அம்பலக்காரர்களின் கையிலிருந்து இருநூறு வராகன் பணம் (வராகன்-அந்தக் காலத்து நாணய மதிப்பீடு) ராஜாம்பாளிடம் போய்ச் சேர்ந்தது. அவள் எப்படி எப்படி நடித்து, என்னென்ன செய்யவேண்டும் என்ற விபரங்களும் கூறப்பட்டன. ராஜாம்பாள் தாளி, காசுக்கு ஆசைப்பட்டு இணங்கிவிட்டாள். அதோடு ஐநூறு வர்ாகனுக்குமேல் பெறும்ாணமுள்ள இரண்டு மோதிரக் கடுக்கண்கள் வேறு காரியம் சித்தியானால் அவளுக்கு அளிக்கப்படும் என்று ஆசை காட்டியிருந்தார்கள். ஐயர் காதுக்கு எந்த வகையிலும் எட்டாதபடி தேவ ரகசியமாக இந்த ஏற்பாடுகளைச் செய் திருந்தனர் அம்பலக்காரர்கள்.

அன்று பெளர்ணமி. மத்தியானத்துக்குமேல் ஊரிலிருந்து புறப்பட்டுச் சிவ்காசிக்கு வந்திருந்தார், மோதிரக்கடுக்கன் முத்துசாமி ஐயர். அங்கே வாங்கவேண்டிய சாமான்களை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பும்போது இரவு ஏழு நாழிகை யாகிவிட்டது. அமாவாசை இருட்டிற்கும் பயப்படாதவர் பெளர்ணமி நிலவின் குளுமையை அனுபவித்துக்கொண்டே நடந்தார். சிவகாசி நகரெல்லையைக் கடந்து ஆற்றங்கரைப் பாலத்தைக் கட்ந்துகொண்டிருந்தார். அப்போது பாலத்தின் கீழ்ப் பகுதியிலிருந்து ஒரு சின்ன வயசுக் குடியானவப் பெண், மேலே ஏறி வந்தாள்.

அந்த நேரத்தில் அந்த மாதிரித் தனியிடத்தில் ஒரு சிறு பெண் வருவதை வியந்துகொண்டாலும், யாரோ துணிச்சல் காரி ஆற்றுக்கு இந்த நேரத்தில் ஆண் துணையின்றி வந்திருக் கிறாள்’ என்றெண்ணி, மனதைத் தேற்றிக்கொண்டு மேலே நடந்தார்.

‘சாமீ! உங்களைத்தானே!’ என்று தேனில் குழைத்து எடுத்த மாதிரி ஒலித்தது . இனிய குரல். ஐயர் தலைமேல் இருந்த சுமையைப் பிடித்துக்கொண்டு திகைப்புடன் திரும்பிப் பார்த்தார். அந்த இளம் பெண் அவரை நோக்கி வந்துகொண் டிருந்தாள். அவள் தலையில் துணிப் புடவையில் கட்டிய சிறு மூட்டை ஒன்று இருந்ததை ஐயர் இப்போதுதான் பார்த்தார்.

‘என்னம்மா? உனக்கென்ன வேணும்?’ என்று ஐயர் சற்றுத் தயங்கி நின்று கேட்டார்.

‘ஒண்னும் வேணாம் சாமீ! ஆம்பிளைத் தொணை யில்லே... கிருஷ்ணாவரத்துக்குப் போகணும். அவசர காரியம்... நீங்ககூட அந்தப் பக்கம்தான் போங்களோ?’

‘ஏம்மா? என்னதான் அவசரமா இருந்தாலும் அதுக்காக இந்த நேரத்திலே உன் மாதிரிச் சின்னஞ்சிறுசுக இப்படிப் புறப்படலா?...அசட்டுத் துணிச்சல்... ஏதோ நான் நதிக் குடிக்குப்போறேன்... நீ என்னைப் பார்த்துக் கேட்டதினாலே நான் உன்னைக் கொண்டுபோயி விட்டிடறேன்னு வச்சுக்க! நான் வரலேன்னா என்ன செய்வே... இன்னிக்குச் சரி... இனிமே இப்பிடி வராதே! வா! போகலாம்’ என்று ஐயர் அவளுக்கு அறிவுரை கூறிவிட்டு, உடன் அழைத்துக் கொண்டு மேலே நடந்தார்.

அந்தப் பெண் அவர்மேல் இடிக்காத குறையாக அவரை நெருங்கி ஒட்டிக்கொண்ட மாதிரி அவரோடு நடந்தாள். மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயர் திடுக்கிட்டார். அவள் மேலிருந்து சந்தனம், புனுகு, அத்தர் வாசனை கமகமத்தது. புடவை கட்டியிருக்கிற விதத்தையும் கூந்தலை முடிந்திருக்கிற பாணியையும் கொண்டுதான் அவளை ஒரு குடியானவப் பெண்ணாக மதிக்க முடிந்ததே ஒழிய, அவள் உடம்பின் பொன்நிறம், அவள் பேசிய குரல், அவள் சிரித்த சிரிப்பு: எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய அந்த மோகனமான விழிகள், யாவும் சேர்ந்து இவள் குடியானவப் பெண் இல்லை, ஏதோ வானத்திலிருந்து வழி தவறி வந்த மோகினி அல்லது அப்ஸரஸ் என்று சத்தியம் செய்து நிரூபிப்பவைபோலத் தோன்றின.

“இந்தாம்மா! கொஞ்சம் ஒதுங்கியே வா...இதென்ன இப்படி இடிச்சுக்கிட்டா, வர்ரது?’ - ஐயர் கொஞ்சம் கறாரான குரலில் அந்தப் பெண்ணைக் கண்டித்தார்.

‘என்னங்க சாமி! நீங்க என்னைப் பெத்த அப்பன் மாதிரி எனக்கு...வி.கல்பமா நினைப்பேனுங்களா?...ஏதோ கொஞ்சம் பயம்.அதான் இப்படி நெருங்கி...நடக்கேன்-அவள் தலையை ஒய்யாரமாகச் சாய்த்து அவரைப் பார்த்து கிளுக் கென்று ஒரு முல்லைச் சிரிப்பைச் சிந்தினாள். அவள் தலையை ஆட்டியபோது, மார்புத் தாவணி தானே விலகியது. பச்சை நிற ரவிக்கைத் துணிமேல் அவ்விடத்து அழகு குத்திட்டுப் பொங்கி நின்றது, பூரித்த பாற் குடமும், பொலிந்த செவ்விள நீரும்போல! ஐயர் வேண்டுமென்றே கண்களின் போக்கை அடக்கி வேறுபுறம் திரும்பினார். கண் களும் மனமும் கொஞ்சம் அவரை மீறிச் சண்டித்தனம் பண்ணின. அவள் கால்களில் வெள்ளி மெட்டியும் சலங்கை யிட்ட வெள்ளிக் கொலுசுகளும் போட்டுக்கொண்டிருந்தாள். நடக்கும்போது அவரருகில் அவள் ஒவ்வோரடியும் பெயர்த்து. வைப்பது ஏதோ அழகான சதிராட்டம் மாதிரி. இருந்தது. பாதம் பெயர்க்கும்போது உண்டாகிற மெட்டி கொலுசுகளின் ஒசை ஐயருடைய செவியில் ஜலக் ஜலக் என்று வெண்கலக் கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றித் தட்டியதுபோலக் கேட்டது. அவருக்கு ‘மகளாக’ உறவு படுத்திக்கொண்டு பேசிய அந்தப் பெண்ணை அவர் கண்கள் பாதாதிகேச பரியந்தம் கட்டிய புடவையையும் ஊடுருவி ஊனுடலைக் காணத் துருதுருத்தன. அவள் போட்டிருந்த புனுகு வாடை” ஏதோ ஒரு தினுசான போதையை அவர் மனத்தில் குபு குபு வென்று பாய்ச்சியது. அரை நூற்றாண்டாக அடங்கிக் கிடந்த புலனுணர்வு படம் விரித்தது.

ஐயருடைய கால்கள் நடந்துகொண்டுதான் இருந்தன. தலையில் சுமையும் இருந்தது. மனத்தில் மட்டுமென்ன? அவருடைய வாழ்வில் பெண் விஷயமாகச் சுமந்தறியாத அனுராகச் சுமை ஒன்று புதிதாக ஏறிவிட்டிருந்தது.

“ஏஞ்சாமீ! உங்களை ஒண்ணு கேக்கலாமா?” - வார்த்தை களுக்கு நடுவே கிணுகினுத்தாள் அந்தக் குட்டி. ஐயர் திரும்பிப் பார்த்தார். தோளிலிருந்து துப்பரவாக நழுவியிருந்த புடவையை, நிதானமாக எடுத்துப் போட்டுக்கொண்டாள் அவள்.

“ஐயோ! பாவம்! கள்ளங்கபடு தெரியாதது” என்று தனக்குள் நினைத்துக்கொண்டு, “என்னம்மா கேக்கனும்? கேளேன்!” என்றார்.

“காதுலே போட்டிருக்கிங்களே இந்தக் கடுக்கன்?... எம்மாம், பெரிய கடுக்கனுங்க...” இது எந்தக் காலத்துலே செஞ்சது சாமீ?”

“இதுவா? எனக்குப் பன்னிரண்டு வயசாயிருக்கிறப்போ பூனூல் போட்டாங்க...அப்பச் செஞ்சு போட்ட கடுக்கங்க இன்னைக்கிவரை கழட்டலே.”

“கர்ணனுக்கு மகரகுண்டலம் மாதிரின்னு சொல்லு வாங்க!...” அவள் மீண்டும் பழைய ஒய்யாரத் தலையசைப் புடன் கலகலப்பாகச் சிரித்தாள்.

“ஏதேது? மகாபாரதமெல்லாம்கூடப் படிச்சிருப்பே போல இருக்கே.”

“என்னமோ, கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கேனுங்க...” சொல்லிக்கொண்டே வந்தவள் சட்டென்று வலது காலைத் தூக்கி நொண்டினாள். “என்னம்மா? ஏன் நொண்டுறே?”

“கால்லே முள்ளுத் தச்சுடிச்சுங்க. ஐயோ...உஸ்ஸ்...”

“இரும்மா! அப்படியே இரு...முள்ளு முறிஞ்சு கால்லே தங்கிடப் போறது...நான் முறியாமே எடுத்திடறேன்!”

ஐயர் மூட்டையைக் கீழே வைத்துவிட்டுக் குனிந்தார். அவளுடைய வலது பாதத்தைப் பிடித்து அடிப்புறமாகத். தடவினார். அங்கே முள்ளே இல்லை! முள் தைத்திருந்த அறிகுறியுமில்லை.

“முள்ளு ஒண்ணுங் காணலியே அம்மா”

“உளுந்திடுச்சுப் போலிருக்குங்க...”

அவர் அந்தப் பெண்ணின் பாதத்தை விட்டார். அவள் தடுமாறுகிறவளைப் போல் தடுமாறி அவர்மேல் சாய்ந்தாள். ஐயருக்கு உடல் முழுவதும் கிளு கிளு’வென்று புல்லரித்தது, முறுக்கேறுகிற கயிற்றைப்போல. மனத்தை அடக்கிச் சமாளித்துக்கொண்டு விலகி நின்றார். அவள் ஏதோ பெரிய விளையாட்டைக் கண்டவளைப்போலத் தொடர்ந்து. சிரித்துக் கொண்டிருந்தாள். அவர் மூட்டையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு நடந்தார். அவளும் அவரு டைய வலது விலாவில் இடித்துக் கொண்டும் இடித்துக் கொள்ளாமலும் நடந்தாள்.

“சாமீ, நாம் தலைவெட்டிப் பள்ளத்தைக் கடந்து தானே போவனும்?”

“ஆமாம்! அதுக்கென்ன?”

“இல்லே அங்ஙனே ஒரே கொலையும் கொள்ளையுமாகக் கிடக்குங்காகளே...?”

“நீ பேசாமே வாம்மா! உன்னை ஒரு பயமுமில்லாமே கிருஷ்ணாவரத்துலே கொண்டுபோய் விட்டிட்டு அப்புறம்: நான் நதிக்குடிக்குப் போறேன்."

“நீங்க தங்கமான மணிசரு சாமீ! தெய்வத்துக்குச் சமானமா எங்கேருந்தோ தொணைக்கு வந்து வாய்ச்சிங்க...”

“என்னம்மா அப்படிப் பெரிசாச் செஞ்சிட்டேன்? எல்லாரும் செய்யிறதைச் செஞ்சேன்! என் தலையிலேயா நீ: நடந்துவரே? ஏதோ துணை வேணும்னே? சரின்னு கூடக் கூட்டிட்டு வந்தேன்.”

இருவரும் மாறனேரியைக் கடந்தாய்விட்டது. தலை வெட்டிப் பள்ளம் இன்னும் இரண்டு பர்லாங் தூரம். இருந்தது. திடீரென்று அந்தப் பெண் கேட்டாள்: -

“சாமீ நீங்க பொடி போடுவீங்களா சாமீ?”

“ஏம்மா...? போடுவேன் வச்சிருக்கியா?... இருந்தாக் கொடேன்!”

“நிறைய இருக்கு சாமீ! தர்ரேன். போடுங்க.” - அந்தப் பெண் தன்னிடமிருந்த் துணி மூட்டையை அவிழ்த்து ஒரு முழுப் பொடி மட்டையைப் புதிதாக அவரிடம். நீட்டினாள்.

ஐயர் மட்டையை அவிழ்த்துப் பொடியை எடுத்தார்.

“என்னம்மா.இது? முக்குப் பொடி மணமே இல்லியே? வேறே ஏதோ வாடையில்லே அடிக்குது?”

“மூட்டையிலே சந்தனம் வச்சிருக்கேன் சாமி! அதுனோட வாடை பட்டிருக்கும்...”

“என்னமோ? நீ சொன்னாச் சரி எங்கிட்டவும் வேறே மட்டை இல்லே!.. இதைத் தான் போட்டுக்கணும்” - ஐயர் இரண்டு மூன்று சிட்டிகை பொடியை இழுத்தார். அங்கணப் பரதேசி மடத்துக்குப் போவதற்குள் மட்டையையே காலி செய்துவிட்டார்.

அந்தப் பெண் சிரித்துக் கிளுகிளுத்துக் கொண்டே வாய். ஆரட்டைக்குக் குறைவின்றி அவரோடு நடந்து வந்து கொண்டிருந்தாள். இன்னும் இருபது இருபத்தைந்து கெஜம் நடந்தால், தலைவெட்டிப் பள்ளத்திற்குள் இறங்கிவிடலாம்.

இருவரும் நடந்து கொண்டிருந்தனர். ஐயருக்குத் தொண்டையை கமறிக்கொண்டு வந்தது. தலை கிறங்கிச் சுழல்வது போலிருந்தது.

“என்னம்மா இது என்னபொடி? மாயப் பொடியா? மூக்குப் பொடியா?...தொண்டை கமறுது தலை சுத்துது!” ஐயர் சிரித்துக் கொண்டே கேட்டார்.

“ஐயோ! சாமி! நல்ல முக்குப் பொடிதானுங்களே... கேட்டு வாங்கிட்டு வந்தேனே?-அவள் கூறினாள். இல்லை; நடுங்கி வெடவெடக்கும் இதயத்தை மறைத்துக்கொண்டு, அவள் வாய் இப்படிக் கூறியது.

இருவரும் பள்ளத்தில் இறங்கி விட்டார்கள். ஐயருக்குத் தலை அதிகமாகக் கிறங்கியது. மூட்டையைக் கீழே போட்டு விட்டு, அப்படியே துவண்டுபோய்க் கீழே உட்கார்ந்தார். சில விநாடிகளில் சுருண்டு படுத்துவிட்டார். அவருக்கு நினைவு மங்கி ஒடுங்கும்போது யாரோ தடதடவென்று ஒடி வரும் ஓசையும், “என்ன ராஜாம்பா? காயா பழமா’ என்ற சொற்களும், அந்தப் பெண் பழைய ஒய்யாரச் சிரிப்புடனே ஏதோ பதில் கூறுவதும் அவர் காதுகளில் விழுந்து மயங்கி மாய்ந்தன. நல்ல மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் போது காதுகளில் ஏதோ சுரீர் என்று வலித்தது. தூக்கத்தில் அலறுவதுபோல “ஐயய்யோ..? என்று. ஹீனஸ்வர்த்தில் அலறினார் அவர். அதன்பின் அவருக்குப் பிரக்ஞையே இல்லை.

விடிவெள்ளி முளைத்துப் பெளர்ணமி நிலாவின் ஒளி சோகை பிடித்தமாதிரி மங்கி வெளுத்தது. தலைவெட்டிப் பள்ளத்தில் விழுந்த கிடந்த ஐயர் மெல்லக் கண் விழித்தார். காதுகளில் இசிவெடுத்து விண் விண் என்று வலி தெறித் தது. கையால் காதுகளைத் தடவினவர் ‘ஐயோ!’ என்று மகா கோரமாக அலறினார். இரண்டு காதுகளிலும் கடுக்கன்கள் இல்லை. மூளியாகி அறுபட்டிருந்த் அறைகுறைக் காதுகளில் ரத்தம் வடிந்து போய் உறைந்திருந்தது. பக்கத்தில் அவருடைய சாமான் முட்டையும் கிடந்தது.

கால் நாழிகை அங்கேயே உட்கார்ந்து விக்கி விக்க அழுதார். பறிகொடுக்க முடியாததைப் பறி கொடுத்து விட்ட மாதிரி மனத்தில் ஒரு சோகக் குமுறல். பின்பு மேல் துண்டால் காதுமறையும்படி முண்டாசு கட்டிக்கொண்டு, மூட்டையுடன் ஊரை நோக்கிப் புறப்பட்டார். அவர் ஊருக்குள் வரும்போது பலபலவென்று விடிந்துவிட்டது, வீட்டுக்குள் நுழைந்ததும், மூட்டையை வைத்துவிட்டு: ரேழியில் தெற்கே தலை வைத்துப் படுத்துக் கொண்டார். ராஜுவைக் கூப்பிட்டார்.

“கொஞ்சம் என் தலைமாட்டிலே உட்கார்ந்து திரு வாசகம் வாசிடா ராஜு!”

“எதுக்கு அண்ணா? ஒரு நாளும் இப்படி இத்தரவாய்க்கு, அலுத்துப் படுக்க மாட்டியளே?”

“நீ திருவாசகம் வாசிடா சொல்றேன்.”

“காதை மறைச்சு முண்டாசு கட்டிண்டிருக்கியளே வாசிச்சர்ல் காதுலே கேக்குமா? அதை அவுத்துடட்டுமா?”

“அதை அவுக்கப்படாது! எனக்குக். கேட்குமா...நீ வாசி.”

ராஜூ திருவாசகம் வாசித்தார். அவரை நாழிகையாக வாசித்துக்கொண்டே இருந்தார்.

“அண்ணா! வாசிச்சது போருமா?” - பதில் இல்லை!. ‘அண்ணா! அண்ணா துரங்கியட்டியளா?’ தோளைத்தொட்டு உசுப்பினார். தலை தொங்கிவிட்டது! முண்டாசை அவிழ்த்தார்! காதுகள் அறுத்து மூளியாகத் தொங்கின. ராஜு. விசித்து விசித்து அழுதார். மோதிரக் கடுக்கண் முத்துசாமி ஐயர் காலமாகிவிட்டார். அவர் முன்பொருநாள் அறை கூவியபடியே பிறரால் ஏமாற்றப்பட்டு இறந்தாரே ஒழியத் தன் நினைவோடு பிறரால் எதிர்த்துக் கொல்லப்பட வில்லை!

எங்கள் தாத்தாவிடம் அந்தக் காலத்தில் தலைவெட்டிக் காட்டையும் மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயரையும் பற்றிக் கேள்விப்பட்ட இந்தக் கதை நினைவுக்கு வரும் போதெல்லாம் ஒரு திருக்குறளும் என் நினைவில் மலரும்.

கவரிமான் என்று ஒருவகை மான் தன் வாலிலுள்ள நீண்ட மயிர்க் கற்றைகளை யாராவது அறுத்துவிட்டால், உடனே ஏங்கி ஏங்கிச் செத்துப் போகுமாம். மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயரின் வாழ்வும் கவரிமானின் வாழ்வும் அதிகம் வித்தியாசப்பட்வில்லை என்று எண்ணிக் கொள்வேன்.

 ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமாவன்னார்
உயிர் நீப்பர் மானம் வாரின்’

கிரேக்க மகாகவி ஹோமரின் ‘இலியாது’ என்ற காவியத்தில் ‘அச்சிலிஸ்’ என்ற வீர புருஷனுக்கு முழங்கால் மூட்டில் உயிர்நிலை இருந்தது என்றும், பைபிளில் வருகின்ற ‘ஸாம்ஸன்’ என்ற வீர புருஷனின் கதையில் அவனுக்குத் தலைமயிரில் உயிர்நிலை இருந்ததென்றும் படிக்கிறோமே! எங்களுர் மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயருக்கு உயிர்நிலை காதுகளிலும் அவற்றில் தொங்கிய கடுக்கன் களிலும் இருந்தனவோ என்னவோ? அச்சிலீலையும் ஸாம்ஸனையும் போல அவர் காவிய புருஷனில்லை. ஆனால் அதற்குத் தகுதி இல்லாதவரா?