மூவரை வென்றான்/வெள்ளைத்தேவன் பாறை

வெள்ளையத்தேவன் பாறை


மாலை ஆறுமணிக்கு மலையிலிருந்து இறங்கி இருட்டு வதற்குள், ஜீப்பில் ஊர் திரும்பிவிட வேண்டும் என்பது புறப்படும் போது நாங்கள் போட்டிருந்த திட்டம். ஆனால் மனிதயத்தனத்திற்கும் மேற்பட்ட சக்தி ஒன்று “உலகில் நான் இருக்கிறேன். என்னை மறந்துவிடாதீர்கள்” என்று அறிவுறுத்துவதுபோல, நம்முடைய திட்டம் சில சமயங்களில் மாறிவிடு கிறதே! அந்த மாதிரியேதான் அன்றைக்கும் நடந்துவிட்டது ஆம் மாலை ஐந்து மணிக்கே மழை பெரிதிாகப் பிடித்துக் கொண்டது.

“நான், வீராசாமித் தேவர், கோடைக்கானலிலிருந்து வந்திருந்த வேட்டை நிபுணர் ஜான்ஸன் மூவரும் மாலை ஆறரை மணிக்குக் கொங்கு மலையின் அடிவாரத்திலுள்ள கபிலக்குறிச்சி கிராமத்திலிருந்து மலைக்குப் புறப்பட்டிருந்தோம். காட்டிலாகா ரஸ்தா, மலைமேல் குறிப்பிட்ட சில இடங்கள் வரை ஜீப்பிலேயே செல்ல வசதியாக இருக்கு மென்று முன்பே தெரிந்துகொண்டிருந்தோம்.

நானும் வேட்டை நிபுணர் ஜான்ஸனும்தான் அந்த மலைக்குப் புதியவர்கள். வீராசாமித் தேவரோ இருபது வருஷங்களுக்கு மேலாகத் தம் சொந்த ஊராகிய கபிலக் குறிச்சி கிராமத்திலிருந்து, அங்கே வாரந் தவறாமல் வேட்டைக்குப் போய்ப் பழகியவர். ஜான்ஸன் ஆங்கிலோஇந்திய இளைஞர். மதுரை அமெரிக்கன் காலேஜில் படிக்கும் போது தமிழ்ப் பாட சம்பந்தமாக அடிக்கடி என்னிடம் தமிழ்ச் சங்கத்திற்கு வந்து சந்தேகங்களைத் தெளிவு செய்து கொண்டு போவார். இதனால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. ஆகவேதான் அவர் கோடைக்கானலிலிருந்து கொங்கு மலைக்கு வேட்டையாடப் போகும்போது மதுரையில் என்னைச் சந்தித்து, “சார் நீங்களும் வாருங்களேன். உங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வீவுதானே? கொங்குமலை இயற்கைவளம் மிக்க இடமாம், போய்விட்டு வரலாம்” என்றார். நானும் “சரி” என்று புறப்பட்டு விட்டேன். நாங்கள் இருவரும் சனிக்கிழமை இரவு கபிலக் குறிச்சியை அடைந்து அங்கே எங்களுக்கு வழி விவரங்களைத் தெரிவிப்ப தற்காகவும், துணைக்காகவும் தேடிக்கொண்ட ஆள்தான் இராச்ாமித் தேவர். ஜான்ஸனும் தேவரும் வேட்டைக் காரர்கள், அவர்களுக்கிடையே நான் போவது எனக்கென்னவோ போலிருந்தது. வேட்டையாட வந்திருப்பவர்களோடு நாம் இயற்கை வளத்தை ரசிக்கலாம் என்றெண்ணிக் கொண்டு வந்தது, நம்முடைய பிசகு’ - என்று மலைக்குப் போகும்போது நான் எண்ணினேன். ஏனென்றால், ஜிப்பில் போய்க்கொண்டிருக்கும்போதே எதேதோ வேட்டை சம்மந்தமான விஷயங்களைப் பற்றி நான் ஒருவன் நடுவில் அமர்ந்திருப்பதையே மறந்துவிட்டுத் தமக்குள் சம்பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள் வீராசாமித் தேவரும் ஜான்ஸனும்.

***

ஆறு மணிக்கு மலையிலிருந்து புறப்படுவோம் என்று. எதிர்பார்த்ததற்கு மாறாக, மழை சோனாமாரியாகப் பிடித்துக்கொண்டு விட்டது. மணி ஏழரை ஆகியும் வேகம், குறையவேள் நிற்கவோ இல்லை. “இந்த மழையில் ஜீப் நிச்சயமாகப் போகாது பாதை முழுவதும் ஒரே தன்னி, மயமாக இருக்கும்” - என்று வீராசாமித் தேவர் கூறி விடவே, மழை நின்று பாதையில் தண்ணீர் வடிந்தபிறகே போவது: என்று முடிவு செய்தோம். இருட்டு வேறு, பயங்கரமாகச் சூழ்ந்திருந்தது.

நாலைந்து பேர் தங்குவதற்கு வசதியாக இருந்த மலைக் குகை ஒன்றைக் கண்டுபிடித்தார் தேவர். அதிலே மழை நிற்கிறவரை நாங்கள் தங்கலாம் என்பது அவர் ஏற்பாடு.

“உள்ளே இருட்டாக இருக்கிறது தேவரே! எதுவும் துஷ்ட மிருகங்கள் பதுங்கியிருந்தாலும் தெரிந்து கொள்வ. தற்கில்லையே’’ என்று குகைக்குள் துழைவதற்குத் தயங்கினேன் நான்.

“சந்தேகம் எதற்கு? அதையும்தான் பார்த்துவிடுவோமே!” என்று கூறிக்கொண்டே, குகையை நோக்கித் துப்பாக்கியால் ஒரு முறை சுட்டார் ஜான்ஸ்ன். துப்பாக்கி ரவை பாறையில் மோதி எதிரொலித்ததே தவிர, வேறு எவ்விதச் சலனமும் குகைக்குள் இல்லை.

“இப்போது உங்களுக்குச் சந்தேகம் இல்லையே?” - தேவர் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கேட்டார். நான் சம்மதத்திற்கு அறிகுறியாகத் தலை அசைத்தேன். மூவரும், வேட்டையாடிய மிருகங்கள், உடன் கொணர்ந் திருந்த மற்றச் சாமான்கள் சிகிதம் குகைக்குள் நுழைந்தோம். சிகரெட் பொருத்திக் கொள்வதற்காக ஜான்ஸன் கொணர்ந் திருந்த தீப்பெட்டிைைய வாங்கிய தேவர், குகையில் அங்கங்கே கிடந்த சுள்ளிகளைத் துழாவி எடுத்து நெருப்பு மூட்டினார். குகைக்குள் வெளிச்சம் பரவியது.

தேவரும் ஜான்ஸனும் வேட்டையாடி வந்திருந்த மிருகங்களின் உடல்கள் அந்த வெளிச்சத்தில் பயங்கரமாகக் காட்சியளித்தன.

நான் அத்தக் குகைக்குள் உலாவிக் கொண்டே, அதைச் சுற்றி ஒரு கண்ணோட்டம் விட்டேன். தெற்கு வடக்காக அமைந்திருந்த அந்தக் குகைக்குத் தென்புறம் வாயில் இருந்தது. குகையின் வடகிழக்குப் பக்கத்துப் பாறை ஒன்றின் மேல் சென்ற என் பார்வை, அப்படியே அந்தப் பாறையில் நிலைத்தது. ஒருகணம் நான் அப்படியே திகைத்து நின்று விட்டேன். மெல்ல நின்று நிதானித்து, ஊன்றிப் பார்த்த போதுதான் அந்தப் பாறையின் மேல் நிற்பது சிலை என்று புரிந்துக் கொள்ள முடிந்தது. அருகிற் சென்று பார்த்தேன். ஒரு கையில் ஓங்கிய அரிவாள். மற்றோர் கையில் பாலாக்கம்பு. ஆறடி உயரம், வாட்டசாட்டமான உடல், மதயானை போன்ற தோற்றம், தொலைவிலிருந்து பார்க்கிற எவரும் அந்த உருவத்தைச் சிலை என்று சொன்னால் நம்பமாட்டார்கள். எண்ணெய் வழிந்து வழிந்து கருமை பளபளத்தது அந்தச் சிலையில். கம்பீரமும், பெருமிதமும் தோன்றும் மீசையோடு கூடிய அந்தச் சிலையின் முகத்தோற்றம் காண்பவர்களைச் சற்றே நடுங்கவைக்கா மலிருக்காது. கருப்பன்-என்ற பெயரில் கிராம தேவதை களில் ஒன்றாக விளங்கும் துஷ்டதேவதையின் சிலையைப் போலத்தான் ஏறக்குறைய இந்தச் சிலையும் இருந்தது. ஆனால், இதன் ஆகிருதி பெரிது! இந்தச் சிலையைப் பற்றி விராசாமித் தேவரிடம் விசாரிக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன் நான். இதற்குள் அங்கேயே ஸ்டவ் மூட்டித் தேநீர் தயாரித்து முடித்துவிட்ட வீராசாமித் தேவர், கொஞ்சம் ரொட்டியும் தேநீரும் எடுத்துக் கொண்டு என் னிடம் வந்தார். நான் அதுதான் சமயம் என்று அவரிடம் என் கேள்வியைக் கேட்டுவைத்தேன்: “வீராசாமித் தேவரே! இது என்ன ஐயா, இங்கே ஒரு பெரிய சிலை இருக்கிறதே? இந்தக் குகை ஏதாவது கோவிலோ?"-

தேவர் தேநீரையும் ரொட்டியையும் எனக்கருகிலுள்ள ஒரு பாறையில் வைத்துக்கொண்டே, என் கேள்விக்குப் பதில் சொன்னார்.

“இதுங்களா? இது வெள்ளையத் தேவன் சிலை. இந்த இடம் ஒரு கோவில் மாதிரித்தான்னு வச்சுக்குங்களேன். இதுக்கு ‘வெள்ளையத் தேவன் பாறை’ என்று இந்தப் பக்கம் பேர் சொல்றதுங்க... இந்த வெள்ளையத் தேவனைப் பற்றிய சம்பவங்களையும், விரப் பிரதாயங்களையும் சொன்னாலே, வருஷக்கணக்காகச் சொல்லலாமுங்களே!” என்று பூர்வ பீடிகை போட்டார் தேவர்.

இதற்குள் ஜான்ஸனும் அங்கே எழுந்து வந்து சிலையை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே நின்றார். நான் ரொட்டியையும், தேநீரையும் தீர்த்துக் கட்டி விட்டு, வீராசாமித் தேவரின் வாயைக் கிண்டினேன்.

வீராசாமித் தேவர் வெள்ளையத் தேவனின் வாழ்க்கையைப் பற்றிய சம்பவங்களைப் பின்ன பின்னமாகக் கூறினார். நான் மொத்தமாகவே ஒரு கதையாகத் தொகுத்திருக்கிறேன்.

***

கபிலக்குறிச்சி மறவர்களின் இருப்த்தெட்டாவது தலை முறையில் தலைக்கட்டு நாட்டாண்மையாக விளங்கிய வீரபாண்டியத் தேவரின் மூத்த பிள்ளைதான் இந்த வெள்ளையத்தேவன். நாட்டாண்மைத் தேவருக்கு ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் வெள்ளையனுக்கு இளையவள். மீனாட்சி என்று அவளுக்குப் பெயர். வெள்ளையனுக்கு இருபத்தைந்து வயது ஆனபோது மீனாட்சிக்கு வயது பதினேழு. இருவருக்கும் எட்டு வருஷ வித்தியாசம். இந்த இரு மக்களையும் நாட்டாண்மைத் தேவருக்குக் கால் கட்டாக விட்டுவிட்டு, அவர் மனைவி சில வருஷங்களுக்கு முன் கால மாகிவிட்டாள். உறவு முறைக்குள்ளே பலர் வற்புறுத்தியும் நாட்டாண்மைத் தேவர் அதற்குப்பின் இரண்டாந்தர விருப்பம் எனக்குக் கிஞ்சித்தும் இல்லை, என்று மறுத்து விட்டார்.

இப்படியிருக்கும் நிலையில்தான் பரம சாதுவாயிருந்த வெள்ளையத் தேவன், மனங்கொதித்துத் தன் வாழ்க்கையின் போக்கையே மாற்றிக்கொள்ளத் தக்க அந்தச் சம்பவம் நிகழ்ந்தது! வெள்ளையத் தேவனை மட்டுமில்லை; எங்கள் ஊரையே பாதித்தது அந்தச் சம்பவம்.

இங்கே எங்கள் ஊருக்கு மேற்கே, மேலமலை அடிவாரத்தில் கரிசல் குளம் என்ற ஊர் இன்றும் இருக்கிறது. அங்கும் எங்கள் மறக்குடியைச் சேர்ந்தவர்கள்தாம் அதிகமாக வசிக்கிறார்கள். பெண் கொடுக்கல், வாங்கல், இனம், ஒன்றுக்குள், ஒன்று-என்றிவ்வாறாக நாங்கள் இரண்டுர்க்காரர்களும் நெருக்கமான தொடர்புடையவர்கள். வீரபாண்டியத். தேவர் மகள் மீனாட்சியைப் பரிசம்போட்டுத் தம் மகனுக்கு. மனம் முடிப்பதற்காகக் கரிசல்குளத்து நாட்டாண்மைக் காரர் முன்வந்தார். கல்யாணம், கார்த்திகை, எந்த விசேஷ’ மென்றாலும் ஊரிலுள்ள அத்தனை தலைக்கட்டுகளையும் கலந்து செய்யவேண்டும்-என்று இங்கே கபிலக் குறிச்சியில் ஒரு கட்டுப்பாடு இருந்தது. இதன்படி நாட்டாண்மைத் தேவரும் எங்களுர்த் தலைக்கட்டுகளை ஒன்றுகூட்டி, மீனாட்சியின் கல்யாண சமாசாரத்தைப் பிரஸ்தாபித்தார். தலைக் கட்டுகளும் சம்மதித்துக் கல்யாணத்திற்கு அனுமதி கொடுத்தனர்.

வீரப்பாண்டியத்தேவர் மகள் மீனாட்சி நல்ல அழகி. அரபிக் குதிரை மாதிரி வளர்ந்த தேகம் கருவண்டுகள் போல் சுழலும் கவர்ச்சிகரமான விழிகளோடுகூடிய அவள் முகத்தை. இன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எத்தனைக்கு எத்தனை அழகு இருந்ததோ, அத்தனை சாத்வீக மான சுபாவமுடைய பெண்.

‘இந்தப் பெண் தங்களுர் நாட்டாண்மைக்காரருக்கு மருமகளாக வரப்போகிறாள்’ என்ற செய்தி கரிசள்குளத் தாருக்கே தனி மகிழ்ச்சியைக் கொடுத்தது. கல்யாணத்தை அந்த வருஷம் சித்திரையில் விமர்சையாக நடத்திவிட்டார்கள். கல்யாணம் நடந்த மறுவாரமே. கரிசல்குளத்தார். - பெண்ணை அழைத்துச் சென்றுவிட்டார்கள். இது நடந்து மறுமாதத்திலேயே உள்ளுரிலிருந்த முறைப்பெண் ஒருத்தி வெள்ளையனை மாலையிட்டாள்.

ஆறு மாதம் கழிந்தது. இந்தக் கல்யாணத்தை நடத்துவதற்கென்றே காத்திருந்தவர்போல, வீரபாண்டியத்தேவர் ஒரு மாதம் குளிர் காய்ச்சலால் வருந்தி முடிவில் காலமானார். வெள்ளையத்தேவனையும், மீனாட்சியையும் மட்டுமில்லை; எங்கள் கபிலக்குறிச்சியையே மீளாத்துயரத்தில் ஆழ்த்தி விட்டது அவரது மரணம்.

நாட்டாண்மைத்தேவர் காலமாகி விட்டதனால் அடுத்தபடி யாரை நாட்டாண்மை ஆக்குவது என்று தலைக்கட்டுக்கள் கூடி யோசித்தார்கள். வாலிபப் பருவத்தினன் ஆனாலும் சாத்வீகமான குணமும், பொறுப்புணர்ச்சியும், தேவையான விஷய ஞானமும் இருந்ததனால் வெள்ளையத் தேவனையே அடுத்த நாட்டாண்மையாகத் தேர்ந்தெடுத்தார்கள். வெள்ளையத்தேவனும் தன்னுடைய வயதுக்கு மறிய அந்தப்பொறுப்பை ஏற்றுச் சாமர்த்தியமாக நிர்வகித்து வந்தான். வீரப்பாண்டியத்தேவர் இல்லாத குறையை அவனுடைய திறமையால் போக்கிவிட்டான். அவன் சாமர்த் தியத்துக்கு ஒரு சோதனையாக வந்தது அந்தச் சம்பவம்.

அது தை மாதம்! அன்று வெள்ளிக்கிழமை. உள்ளுர் மாரியம்மன் கோவிலின் வருஷாந்தரத் திருவிழாவிற்காக வெள்ளையத்தேவன் வீட்டில் தலைக்கட்டுக்கள் கூடியிருந்தார்கள். திருவிழாவுக்குத் தேதி குறிப்பிடுவது முதல், ‘எப்படி எப்படி நடத்தலாம்?’ என்பதுவரை அவர்கள் கூடி ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் திடீரென்று. சல்சல்-என்ற சதங்கை ஒலியோடு வீட்டு வாசலில் ஒரு வில் வண்டி வந்து நின்றறு. யாவரும் காரணம் புரியாமல் திகைத்தனர், வெள்ளையன் எழுந்து வீட்டு வாசலுக்கு வந்து பார்த்தான்.

வண்டிக்காரன் மூட்டை முடிச்சுக்களை இரண்டு கைகளிலும் எடுத்துக்கொண்டு முன்னால் வர, மீனாட்சி அழு தழுது சிவந்த கண்களுடன் துயரமே உருவாய், அவன் பின்னால் நடந்து வந்தாள்.

வெள்ளையத்தேவன் மனம் ஏதேதோ எண்ணிப் பதறியது வண்டிக்காரன் மூட்டை முடிச்சுகளைத் திண்ணையிலேயே போட்டுவிட்டுத் திரும்பிப் பாராமல், வண்டியில் போய் ஏறிக்கொண்டு போய்விட்டான். வெள்ளையனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை!

மீனாட்சி வாசற்படியில் வந்து நீரொழுகும் கண்களுடன் தலைகுனிந்து நின்றாள். இதற்குள் வீட்டிற்குள்ளே உட் கார்ந்திருந்த தலைக்கட்டுக்களும் ஒவ்வொருவராக எழுந்திருந்து, வாசற்புறம் வந்துவிட்டார்கள்.

“இது என்ன மீனாட்சி?” - வெள்ளையத்தேவன் பரபரப்போடு கேட்டான்.

கிறிது நேரம் மீனாட்சி பதிலே சொல்லவில்லை. வெறுங் கண்ணீர், விக்கலும், விம்மலும், சேர்ந்த அழுகையாகப் பீறிட்டுக்கொண்டு வந்தது இப்போது.

“இப்படி ஒன்றும் சொல்லாமல் அழுதால், எனக்கென்ன புரியும் மீனாட்சி?” - அவன் மீண்டும் கேட்டான்.

“அண்ணா.நான். நான். வந்து மலடியாம் அண்ணா!.. அவங்க என்னை ஒதுக்கிட்டு வேறே இடத்துலே...கட்டிக்கப் போறாங்களாம்!”...விம்மலுக்கும் மீறிப் பொங்கிவரும் அழுகையை அடக்கமுடியாது திணறிக் கொண்டே கூறினாள் மீனாட்சி. அடுத்த கணம் அவள் வீட்டிற்குள்ளே புடவைத் தலைப்பால் முகத்தை மறைத்துக்கொண்டே, அழுதவாறு ஓடிவிட்டாள். வெள்ளையனின் மனைவி அவளைக் கைத் தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றாள்.

“ஹாங்! அப்படியா? சொன்னான்? கரிசல்குளத்தா னுக்கு என்ன திமிர்?” - பசியோடு குகைக்குள் இருக்கும் சிங்கத்தின் முழக்கத்தைப்போலிருந்தது தேவனுடைய குரல். நாட்டாண்மையின் ஆத்திரத்தைவிடத் தலைக்கட்டுக்களின் ஆத்திரம் அதிகமாகவே இருந்தது. ஏனென்றால், அது வெள்ளையத்தேவனுடைய குடும்பத்துக்கு ஏற்பட்ட அவ மானம் மட்டுமில்லை; கபிலக்குறிச்சி ஊருக்கே ஏற்பட்ட அவமானம். அத்தனை பேரும் மனம் கொதித்துக் குமுறலானார்கள்.

ஐந்தே முககால், ஆறு அடி மதிக்கத் தக்க உயரமும், கட்டுமஸ்தான தேகமும், ராஜ கம்பீரமும், வாலிப அழகும். திகழும் தோற்றமும் கொண்ட வெள்ளையத்தேவன் தங்கைக்கு நேர்ந்த அவமானத்தால், எரிமலையாகவே மாறி விட்டிருந்தான்.

“இப்பொழுதே ஆயுதங்களை எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்! அந்தக் கரிசல்குளத்தானுக்குச் சரியானபடி புத்தி புகட்டுவோம்!” என்று இடியேறு போல முழங்கியது வெள்ளையனின் குரல்.

மறுவிநாடி அங்கே இருந்த அத்தனை பேருடைய கைகளிலும் பாலாக்கம்புகளும், வெட்டரிவாள்களும் மின்னின. கபிலக்குறிச்சியின் தன்மானத்தின் சக்தி எவ்வளவு பெரியது” என்பதைப் பிரத்தியட்சமாகக் காட்டினர் அங்குள்ளோர். அந்தி மயங்கி, இருள் சூழும் நேரத்தில் கரிசல்குளத்தையே சூறையாடிவிடுவது என்ற நோக்கத்தோடு புறப்பட்டனர் அவர்கள்.

அந்த நேரத்தில்தான் வெள்ளையனுக்கு முறைப்பெண் கொடுத்த மாமன், செய்தியைக் கேள்விப்பட்டு, அவசரமாக ஓடிவந்தார். புறப்பட்டவர்கள் அவரால் கையமர்த்தி நிறுத்தப்பட்டனர். வெள்ளையனும் தயங்கி நின்றான்.

அவ்ர் கூறினார்:- “வெள்ளை, ஆத்திரப்பட்டு எதையும் செய்யாதே! அவசியம் வரும்போது வெட்டரிவாளும், பாலாக் கம்பும் கிடைக்காமலா போய்விடப்போகின்றன? கொஞ்சம் பொறு! நான் உள்ளே போய் மீனாட்சியிடம் பதமாக விஷயத் தைக் கேட்டுக்கொண்டு வருகிறேன். அவன் இவளை ஒதுக்கி: விட்டு, மறுதாரம் கட்டிக்கொள்வதில் ஏதோ ஒரு சூழ்ச்சி அட்ங்கியிருக்கிறது. அதை அறிந்த பின், நாம் ஆவன செய்யலாம்!... தயவுசெய்து நான் விசாரித்துக்கொண்டு வருகிறவரை நீயும், தலைக்கட்டுக்களும் இங்கேயே இருக்க வேண்டும்” என்று இப்படி வேண்டுதல் செய்து கொண்டு உள்ளே சென்றார் வெள்ளையத் தேவனின் மாமன். தேவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அவருக்காகத் தாமதித்து நின்றார்கள்.

கால் நாழிகையில் அவர் உள்ளிருந்து திரும்பி வந்தார். அவர் முகத்தில் தெளிவு தென்பட்டது. வெள்ளையத் தேவனின் அருகே வந்து நின்றுகொண்டு அவர் கூறினார்:

“விஷயம் இப்போதுதான் விளங்குகின்றது! உன் தங்கை யிடம் சரியாக விசாரித்துக் கொள்ளாமலேயே நீ புறப்பட்டு விட்டாயே? நான் உள்ளே போய் அவளுக்கு ஆறுதல் கூறி, ஆசுவாசப்படுத்தி விசாரித்ததில் உண்மை வெளிவந்து விட்டது. கரிசல்குளம் பண்ணைத்தேவரை உனக்குத் தெரிந்: திருக்கும். பெரிய செல்வந்தர். அவருக்கு இருக்கும் ஒரே ஒரு பெண்தான் வாரிசு. சொத்தெல்லாம் நாளை அந்தப் பெண்ணுக்குத்தான் சேரவேண்டும். தம் பெண்ணுக்குக் கல்யாண வயது வந்துவிட்டதனால் பண்ணைத்தேவர் எப்படியும் இந்தச் சித்திரைக்குள் கல்யாணத்தை நடத்தி விடவேண்டும் என்றிருக்கிறாராம். ‘மலடி’ என்று சொல்வி ஒதுக்கிவிட்டு, பண்ணை தேவரின் சோத்துக்கு ஆசைப்பட்டு அவர் பெண் னுக்குப் பரிசம் போடப் போகிறானாம் உன் மருமகப்பிள்ளை. இதுதான் விஷயம்!”

“பார்த்துவிடலாமே அவன் பரிசம் போடுவதை! மாமா! இந்த வெள்ளையத்தேவன் உடலில் உயிர் இருக்கிறவரை அதை நடக்கவிடமாட்டேன்’ என்று வெள்ளை குமுறினாள்.

“வெள்ளை! இந்த மாதிரி நாசூக்கான விஷயங்களிளெல் லாம் கத்தியைவிட யுக்திதான் பயன்படும். உன்னிடம் ஆத்திரம்தான் இருக்கிறதே தவிர அனுபவம் இல்லை. முதலில் தலைக்கட்டுக்களை எல்லாம் வீட்டுக்கனுப்பு. மாரியம்மன் திருவிழாவைப்பற்றி இந்த விவகாரம் ஒய்ந்தபின், சாவ தானமாகப் பேசிக்கொள்ளலாம், மீனாட்சி விவகாரத்தில் இப்போதைக்கு இவர்களுடைய ஒத்துழைப்பு தேவையில்லை. விவகாரம் யுக்தியால் தீர்வதற்கு எனது யோசனையை நீ கேள்’ என்று மாமன் கூறினான்.

வெள்ளைத்தேவனும் அப்படியே செய்தான். தலைக் கட்டுக்கள், மாமன் வந்து தங்கள் ஆத்திரத்துக்கு அணை போட்டுவிட்டானே” என்று அவனை நொந்துகொண்டே வீடு திரும்பினர்.

பாலாக்கம்பையும், அரிவாளையும் மூலையில் வீசி எறிந்து விட்டு, அனுபவஸ்தரான மாமனுக்கு முன்பு அமர்ந்தான் வெள்ளையத்தேவன். அப்போது மாலைப்போது கழிந்து, இருள் சூழ்ந்துகொண்டிருந்தது.

கிழவர் ஆரம்பித்தார்: “வெள்ளை! இந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டுமானால், நாம் கொள்ளைக்காரர்களாக மாற வேண்டும். முள்ளை முள்ளால்தான் எடுக்கவேணும். வேறு வழியில்லை...”

“மாமா! நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே!... தெளிவாகச் சொல்லுங்கள்...”

“சொல்கிறேன் கேள் வெள்ளை! நம்முடைய கொங்கு மலையின்மேல் ஒரு பாறைக் குகை இருக்கிறதே, உனக்குத் தெரியுமோ?”

“ஏன்? நான் வேட்டைக்குப் போகும்போதெல்லாம் அந்தக் குகைப்பக்கம் போவேனே!”

“நாளை விடிவதற்குள் பண்ணைத்தேவனின் மகளை அந்தக் குகையில் கொண்டுபோய் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் சிறைப்படுத்தி வைத்துவிட வேண்டும். உன்னை யும் என்னையும் தவிர வேறு எவருக்கும் இந்த இரகசியத்தை வெளியிட்டுவிடக் கூடாது.”

“என்ன! பண்ணைத்தேவரின் மகளையா?”

“ஆமாம்! மீனாட்சியை உன் மருமகன் காலில் விழுந்து ஏற்றுக்கொள்ளுமாறு செய்வதற்கு வேறு வழியே இல்லை. வெள்ளை பண்ணைத்தேவர் மகள் பொன்னியைச் சில்காலம் நாம் மறைத்து வைக்க வேண்டும். அதனால்தான் கரிசல் குளத்தான் உன் தங்கையை நாடச் செய்யலாம்.”

“சரி மாமா! அப்படியே வைத்துக் கொண்டாலும் இப்போது அதைச் செய்வதற்கு முடியுமா?”

ஏன் முடியாது வெள்ளை நாளைக்கு விடிந்தால், உன் மருமகன் பண்ணைத்தேவரிடம் பரிசம் போட்டுவிடுவான். இன்றைக்கு இரவு பின் நிலா. நம் காரிய்த்தைச் செய்ய வசதியாக இருக்கும்! நேரே கரிசல்குளம் போக்வேண்டியது, நிலாக் கிளம்புவதற்குள் பொன்னியைக் கிளப்பிக்கொண்டு. கொங்குமலைக் குகைக்குக் கொண்டு போய்விடவேண்டியது. இன்னும் சிறிது நேரத்தில் நாம் கிளம்ப வேண்டும்.”

வெள்ளையத் தேவன் சம்மதித்தான். சிறிது நேரத்தில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, மாமனும் அவனும் புறப்பட்டார்கள்.

“அம்மா, மீனாட்சி! நானும் உன் அண்ணனும் மாரி’ யம்மன் கோவில் திருவிழா விஷயமாகக் கொஞ்சம் இப்படி வெளியே போய்விட்டு வருகிறோம். வர நேரமானாலும் ஆகலாம். நீயும் மதனியும் படுத்துக்கொள்ளுங்கள். வீணாக மனசை அலட்டிக்கொள்ள வேண்டாம். உன்னைப் புருஷன் வீட்டில் கொண்டு போய்ச் சேர்ப்பது என் பொறுப்பு.” போகும்போது கிழவர் மீனாட்சியிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார்.

இருளில் வேகமாக நடந்து, ஊர் எல்லையிலுள்ள ஓர் ஆலமரத்தடியில் வந்து நின்றனர், வெள்ளைத்தேவனும் அவன் மாமனும். அங்கே மரத்தின் விழுதுகளில் இரண்டு குதிரைகள் முன்னேற்பாடாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தன. ஆளுக்கு ஒரு குதிரையில் ஏறிக்கொண்டு கரிசல் குளத்தை. நோக்கிச் சென்றனர்.

கரிசல் குளம் ஊர் எல்லையை அடைந்ததும் கிழவர் குதிரையை நிறுத்தினார். வெள்ளைத்தேவன் கையில் ஒரு பச்சிலையைக் கொடுத்துவிட்டு, அவர் கூறினார்:

“வெள்ளை! இந்தப் பச்சிலையை மூக்கருகிலே காட்டினால், யாரும் பிரக்ஞை தவறிவிடுவார்கள் ஜாக்கிரதை! காரியத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இங்கே பொன்னியோடு வந்து சேர். அதற்குள் நிலா, உதயமாகிவிடும்! நேரே மலைக் குகைக்குப் போய்விடலாம்...”

வெள்ளையத் தேவன் தன் குதிரையையும் ஊர் எல்லை யிலேயே நிறுத்திவிட்டு மாமன் கொடுத்த பச்சிலையோடு கால்நடையாக ஊருக்குள் நுழைந்தான்.

கரிசல்குளத்தில் பண்ணைத்தேவரின் வீடு ஊரின் மேலப் பக்கத்தில் ஒரு பெரிய தோட்டத்துக்கு நடுவே இருந்தது. ஏறக்குறைய ஒரு குட்டி அரண்மனையைப் போல விளங்கியது. அந்த வீடு. தன் தகப்பனார் வீர பாண்டியத்தேவர் உயிரோ டிருந்தபோது அவரோடு இரண்டு மூன்று முறை அந்த வீட்டிற்கு வந்து போயிருக்கிறான் வெள்ளையத் தேவன். மாமன் கூறியதிலிருந்து, ‘வீட்டின் கூடத்தில்தான் பொன்னி படுத்து உறங்குவது வழக்கம்’ - என்று எண்ணினான் அவன்.

பின்நிலாக் காலமாகையினால் இருட்டு பயங்கரமாகக் கப்பிக் கிடந்தது. பண்ணைத்தேவர் அரண்மனைத் தோட்டத் தைச் சுற்றி ஒன்றைரை ஆள் உயரத்திற்கு மதில் இந்த மதிற் சுவரில் எடுத்திருந்தது. எந்த இடம் உள்ளே ஏறிக் குதிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று பார்த்துக் கொண்டே இருளில் மதிலைச் சுற்றிவந்தான் வெள்ளையத். தேவன்.

மதிலின் தென் மேற்கு மூலைக்கு வந்தபோது அவனுக்கு மிக அருகில் இருளின் நடுவே தெரிந்த ஒரு காட்சி அவனைத் திடுக்கிட்டு நிற்கும்படிச் செய்தது. சரியாக அவன் வந்தி ருக்கும் அதே நாளில், அதே இரவில் பண்ணைத் தேவரின் வீட்டிலே கொள்ளையடிப்பதற்காக ஒரு கொள்ளைக்கூட்டத். தினரும் அங்கே வந்திருந்தார்கள்! அந்தப் பிராயத்தில் ‘தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் என்ற ஒரு வகைத் திருட கள் அப்போது, நல்ல இருட் காலத்தில் இப்படிக் கூட்டமாக வந்து சூறையாடிச் செல்லும் நிகழ்ச்சி, அடிக்கடி நடந்து வந்தது. இதுவரை அவர்கள் துணிந்து கொள்ளைக்கு வராத இடங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று கபிலைக் குறிஞ்சி மற்றொன்று கரிசல்குளம். இரண்டு இடங்களிலும் மறவர்கள் அதிகமாய் வசித்து வந்ததுதான் அவர்கள் அச்சத்துக்குக் காரணம்.

இருளில் மறைந்து நின்ற வெள்ளையத் தேவன்னின் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. அவனது இடுப் பிலே சுரிகை எனப்படும் பழைய காலத்துச் சுழல் கத்தி ஒன்று மட்டும்தான் இருந்தது. மாமன் கொடுத்தனுப்பி யிருந்த பச்சிலை, மார்புச் சட்டையின் பைக்குள்ளே இருந்தது!

கொள்ளைக்காரர்கள் பத்துப் பன்னிரண்டு பேர்களாவது இருப்பார்கள். ஒவ்வொருவருவர் கையிலும் ஒரு சிறு தீவட்டி யும் இருந்தது. வெள்ளையத் தேவன் எந்தக் காரியத்தைச் செய்வதற்காகத் தயங்கித் தயங்கிச் சுற்றிவந்து கொண்டிருந் தானோ, அதே காரியத்தை அவர்கள் சுலபமாகச் செய்து கொண்டிருந்தனர். மதிற்கூவரையொட்டி ஒரு ஆள் சற்றே குனிந்தாற்போல நின்றுகொண்டான். கொள்ளைக்காரர்கள் ஒவ்வொருவராக அவன் முதுகில் பச்சைக் குதிரை விளையாடு வதைப்போல ஏறி, மதிற்கூவரைத் தாண்டி உள்ள்ே குதித் தனர். இருளில் நின்றுகொண்டிருந்த வெள்ளையத் தேவன் கூர்ந்து கவனித்தான். அவன் மூளை மிகவும் சுறுசுறுப்போடு வேலை செய்தது.

இன்னும் நாலைந்து கொள்ளைக்காரர்களே தாவி ஏற வேண்டியிருந்தது. அவர்கள் கைகளிலிருந்த தீவட்டிகளைத் “தாவிக் குதிப்பதற்கு இடையூறாக இருக்கும் என்று கருதி, முன்பே ஏறியவர்கள் உள்ளே வாங்கிக் கொண்டுபோயிருந் தார்கள். குனிந்து கொண்டிருந்தவன், முதுகில் ஏறித் தாவு வதற்குக் காத்திருந்தவர்கள்-ஆகியோர் அங்கே நிற்பது: கண் பார்வையைத் தீட்சண்யப்படுத்திக்கொண்டு பார்த்தா லொழியத் தெரியாது. அவ்வளவு இருட்டு.

சட்டென்று அடிமேல் அடி வைத்து, மெல்ல அவர்கள் தாவிக்கொண்டிருந்த இடத்தை அடைந்தான். வெள்ளையத் தேவன். ஆயிற்று! கடைசி ஆளும் தாவிக் குதித்துவிட்டான். கடைசி ஆளின் தலை சுவருக்கு அப்பால் மறைவதைப் பார்த்து விட்டு குனிந்திருப்பவன் நிமிர்வதற்குள் தானும் அவனைச் சாதனமாகக்கொண்டே, தாவிவிடக் கருதிய வெள்ளைத் தேவன் விருட்டென்று பாய்ந்து, குனிந்திருந்தவன் முதுகில் கைகளை ஊன்றினான். குனிந்திருந்தவனும் அவனை வேற்றாள் என்று கருதியதாகத் தெரியவில்லை. ஆனால், அவசரத்தினாலும், ஆத்திரத்தினாலும் தாவிய வேகத்தில் முதுகில் கை வைப்பதற்குப் பதிலாகக் குனிந்திருந்தவனின் கழுத்தில் கையை வைத்துவிட்டான், தேவன். இதனால் குனிந்திருந்தவனும், வெள்ளைத் தேவனும் ஒருங்கே ஒருவர் மேல் ஒருவராகக் கீழே விழுந்து புரண்டார்கள்.

கீழே விழுந்து புரண்ட கலவரத்திலே குனிந்திருந்த ஆள் தேவனைச் சந்தேகிக்கும் படியாகக் குழப்பம் ஒன்று நடந்து விட்டது. கையைக் கழுத்தில் வைத்துக் கீழே விழுந்தவுடன், பார்த்து ஏறக்கூடாதுங்களா?” என்று கம்பளத்து நாயக்க்மார் பேசும் ஒரு வகைத் தெலுங்கிலே குனிந்திருந்தவன். கொச்சையாகக் கேட்கவே, அதற்கு எப்படிப் பதில் சொல்வது என்று விளங்காமல் திகைத்தான் தேவன்.

இதற்குள் உள்ளே சென்றிருந்த கொள்ளைக்காரர்களுடைய சங்கேதமான ஒலி ஒன்று, “நாங்கள் அத்தனை பேரும் சென்றுவிட்டோம்” என்பதற்கு அறிகுறியாகச் ‘சீழ்க்கை’ ரூபத்தில் ஒலித்துவிட்டது. அந்த ஒலியைக் கேட்ட மாத்திரத்தில் மறுபடியும் எழுந்திருந்து குனிவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த அந்தப் பருத்த மனிதன் குனிவதை நிறுத்திவிட்டு, “யாரடா நீ?” என்று வெள்ளையத் தேவன் மேல் குபிரென்று பயந்தான்!

எப்போது, தான் தாவவேண்டிய குறி தவறிவிட்டதோ, அப்போதே இம்மாதிரி ஆபத்து எதுவும் நேரலாம் என்று தயாராக எதிர்பார்த்துக்கொண்டிருந்த வெள்ளையத்தேவன், தன்னை நோக்கிப் பயந்தவனின் வாயை ஒரு கையால் இறுகப் பொத்திக்கொண்டு, அவனை இந்தப்புறம், அந்தப் புறம் திமிர முடியாமற் கட்டி, மூக்கில் பச்சிலையை எடுத்துக் காட்டினான். முழுசாக இரண்டு விநாடி கழிவதற்குள் அந்த மனிதன் கீழேவிழுந்துவிட்டான். முற்றிலும் பிரக்ஞை தவறிப் போய்விட்டது, அவனுக்கு. அவனை மெல்ல இழுத்துச் சென்று, தோட்டச்சுவரின் தென்புறத்திலுள்ள பாழுங்கிணறு ஒன்றின் ஒரமாக இருந்த புதரில் தள்ளிவிட்டு வெள்ளையத் தேவன் திரும்பவும், மிக அருகில், இரண்டு குதிரைகள் நடை போட்டு வரும் குளம்பொலி கேட்கவும் சரியாக இருந்தது. முதலில் பயமும், சந்தேகமும் அடைந்தாலும் பின் சிந்தித் தான். வேறு யார் வரக்கூடும்? மாமன்தான் நேரமாயிற்றே, இந்த வெள்ளையை இன்னும் காணோம் என்று குதிரை மீது வரக்கூடும் என்று அனுமானித்தான் தேவன்.

இப்படி எண்ணிக்கொண்டு மனத் தைரியத்தோடு குளம்பு ஒலி வந்த திசையில் வேகமாக எதிர்நோக்கி நடந்தான் வெள்ளையத் தேவன். இவன் எண்ணியது வீண்போக வில்லை! மாமன்தான் வந்துகொண்டிருந்தார். குதிரையின் அருகில் வெள்ளை நெருங்கியதும், “யாருடா அவன்?” என்று இடுப்பிலிருந்த கத்தியை உருவினார் மாமன்.

“ஏது? மிரட்டல் பலமாக இருக்கிறதே மாமா?” - இலேசாகச் சிரித்துக்கொண்டே கேட்டான், வெள்ளையத் தேவன்.

நடந்த விஷயத்தை ஆதியோடந்தமாகக் கூறிய பின், “இப்போது நாம் என்ன செய்யலாம் மாமா?” என்று கேட்டான் அவன்.

“வெள்ளை! பகைவர்களைவிட அயோக்கியர்கள் மோச மானவர்கள். அயோக்கியர்களின் காரியம் தனக்கு நன்மை யைத் தருமானாலும் அதைத் தடுப்பதுதான் மற்வனின் அறம்: இப்போது இங்கே தீவட்டிக் கொள்ளையடிக்க வந்திருக்கும் அத்தனை திருடனும் வேற்றவராகிய கம்பளத்து நாயக்கமார் கள். பண்ணைத் தேவருடைய சொத்தை இவர்கள். கொள்ளையடித்துக்கொண்டு விடுவார்களானால், நமக் கென்ன லாபம்? பண்ணைத் தேவரை இந்தப் பயங்கரத்தி லிருந்து நாம் காப்பாற்றுவோமானால், நாளை அவரிடமே, ‘மீனாட்சியின் கணவன் சொத்துக்கு ஆசைப்பட்டு அவளைப் ஒதுக்கிவிட்டு, உங்க மகளுக்குப் பரிசம் போடுகிறேனென்று வருகிறான். நீங்கள் அவனுக்குப் புத்திமதி சொல்லி, நல்லபடி யாக மீனாட்சியை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்!’ என்று வேண்டிக்கொள்ளலாம்.” மாமா கூறினார்.

“நீங்கள் சொல்வதும் ஒருவகைக்கு நல்லதாகத்தான் படு கிறது மாமா!”

“யோசனைக்கு இது நேரமில்லை வெள்ளை உடனே புறப்படு. குதிரையில் ஏறிக்கொள்.”

இருவரும் குதிரையில் ஏறிக்கொண்டனர். கடிவாளத் தைச் சுண்டி வேகமாக மீண்டும் பண்ணைத் தேவர் மாளிகையை நோக்கிச் செலுத்தினான் வெள்ளையத்தேவன் ‘மாமனும் பின்தொடர்ந்தார். மதிலோரமாகவே கொள்ளைக் காரர்கள் ஏறிக்குதித்த இடத்தருகே வந்து குதிரையை நிறுத்தினார்கள்.

“மாமா! உள்ளே போயிருக்கின்ற திருடர்களோ, பன்னிரண்டு பேருக்குமேல் இருப்பார்கள். நாமோ, இரண்டு பேர்! எப்படி நாம் அவர்களிடமிருந்து தேவரின் சொத்தை மீட்பது? ஏதாவது தந்திரமாகச் செய்தால்தான் இந்த முயற்சியில் நமக்கு வெற்றி கிடைக்கும்” என்று குதிரையை இழுத்து நிறுத்திக் கொண்டே கூறினான் வெள்ளையத் தேவன்.

“தந்திரமான வழி ஒன்று இருக்கிறது வெள்ளை! நாமிருவரும் இங்கேயே நின்றுகொள்ள வேண்டியது. உள்ளே நாம் போகவே வேண்டாம். அவர்கள் நிச்சயமாக் எவரையும் உயிர்ச் சேதப்படுத்தப் போவதில்லை. வேண்டுமானால் கட்டிப் போட்டுவிட்டுக் கொள்ளையடித்கப் போகிறார்கள். இந்தக் கம்பளத்தார் திவட்டிக் கொள்ளை யடித்து விட்டு மீண்டும் மதில் வழியாக ஏறிக்குதிப்பதற்கு இந்த இடத்திற்குத்தான் வரப்போகிறார்கள். கொள்ளை வெற்றிகரமாக முடிந்து திரும்பும்போது தீவட்டியை அணைத்துவிடுவதும் இவர்களுடைய வழக்கங்களிலே ஒன்று. இதனால் இருட்டு நம் காரியத்துக்குப் பெரிதும் உதவி செய்யும்.

“என்ன தந்திரம் மாமா அது?”

“போகும்போது அவர்கள் ஒரு ஆளை முதுகில் காலை வைத்து ஏறுவதற்காகப் பயன்படுத்தினார்கள் அல்லவா? அந்த ஆளைத்தான் நீ மயக்கமுறச் செய்து, புதருக்குள்ளே கொண்டுபோய்த் தள்ளிவிட்டாயே! அந்த ஆளாக நான் நடிக்கிறேன். ஒவ்வொரு ஆளாக இறங்க இறங்க நீ பக்கத்தில் சுருள் கத்தியோடு மறைந்திருந்து வேலையைத் தீர்த்து’ப் பாழும்கிணற்றில் போட்டுவிடு!”

“மாமா ஆபத்து நிறைந்த காரியமாயிற்றே இது? இதனால் நமக்கென்ன லாபம்? அகப்பட்டுக் கொண்டோ மானால் நாமும் இறங்க நேரிடுமே?”

“மதிலேறி இறங்குகின்ற அவர்களில் முதல் ஆளின் கையிலேதான் கொள்ளையடித்தப் பொருள்களெல்லாம் இருக்கப்போகின்றன. முதுகில் காலை வைத்து இறங்குவ தற்கு முன் அவன் கொள்ளைப் பொருளை நிச்சயம் என்னிடம்தான் கொடுப்பான்! இருளில் நான் வேற்றவன்’ -என்ற வித்தியாசத்தை அவன் கண்டுபிடிக்க முடியாது. பண்ணைத்தேவரின் பொருளைக் கட்டாயம் மீட்டு, அவரிடம் கொடுத்துவிடலாம். அப்படிக் கொடுத்தால், அவருடைய நன்மதிப்பு நிச்சயம் கிடைக்கும். இவைகளெல்லாம் நமக்கு லாபம் இல்லையானால் சொல்! இப்போதே திரும்பிவிடுவோம்” என்று மாமன் சிறிது கோபம் தொனிக்கும் குரலிலேயே கூறினார்.

“நல்லது! அப்படியே செய்யலாம் மாமா” என்று. வெள்ளை சம்மதித்தான்.

இதற்குள் உட்புறம் மதிற் சுவரோரத்தில் ஆட்கள் தடதடவென்று ஓடிவரும் ஒசையும், ‘நாங்கள் வந்துவிட்டோம்! வெளியிலிருக்கும் நீ, இறங்குவதற்கு வசதியாகக் குனிந்துகொள்’ என்பதை எச்சரிக்கும் சீழ்க்கை ஒலியும் கேட்டது.

மாமன், நான் குனிந்து நிற்கிறேன்! தயார்’ என்பதற்கு அறிகுறியாக ஒரு சீழ்க்கை அடித்துவிட்டுக் குனிந்து நின்று கொண்டார். வெள்ளையத்தேவன் சுருள் கத்தியை உருவிக்கொண்டு சுவர். ஒரமாக இருளில் மறைந்து நின்றுகொண்டான்.

முதல் ஆள் கையில் ஒரு பெரிய மூட்டையோடு மாம னின் முதுகில் காலை வைத்து இறங்கினான். தேவன் திடீ ரென்று பாய்ந்து அவன் கூச்சல் இடாமல் , வாயை மூடி, அவனிடமிருந்த மூட்டையைப் பறித்துக்கொண்டு, அவனைச் சுருள் கத்திக்கு இரையாக்கிப் பாழுங்கிணற்றுக்கு அனுப் பினான். இப்படியே மற்றும் பதினோரு திருடர்களையும் பர லோகத்துக்கு அனுப்பிவிட்டனர் தேவனும் மாமனும்!

பதின்மூன்றாவது ஆள் அந்தத் தீவட்டிக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருக்கவேண்டும்! அவனுக்கு மட் டும் அவர்கள் தந்திரம் அம்பலமாகிவிட்டது. காரணம்: அவன் மட்டும் கையில் ஒரு சிறு தீவட்டி வைத்திருந்தான். சுவரில் தீவட்டியோடு நின்ற அவன், உடனே மாமனின் முதுகிலே காலை வைத்து இறங்க முற்படாமல், மேலே நின்றுகொண்டே, தீவட்டியை மாமனின் முகத்துக்கு நேரே கீழே வீசி எறிந்தான். தீவட்டி கீழே விழவும் சுற்றிலும் இருள் விலகி ஒளி தோன்றியது.

தன் ஆட்கள் எவரும் அங்கே இல்லாததையும் சுவரோரமாக இரத்தம் தோய்ந்த சுருள் கத்தியோடு இளங் காளை போன்ற ஒருவன் நின்றுகொண்டிருப்பதையும், அவன் காலடியில் கொள்ளைப் பொருளின் மூட்டை கிடப் பதையும், குனிந்து நிற்பவன் வேற்றாள் என்பதையும்’ அவன் தீவட்டி ஒளியில் அந்த ஒரு விநாடியில் நன்றாகப் புரிந்துகொண்டான். யுத்தியில் கைதேர்ந்த அந்தக் கொள் ளைக் கூட்டத் தலைவன், சிந்தனை தேங்கிய மனத்தோடு மீண்டும் விழிகளைச் சுற்றும் முற்றும் ஒட்டினான். பத்து இருபது அடி தூரம் மேற்கே தள்ளிச் சுவர் ஒரமாக இரண்டு குதிரைகள் சவாரிக்கு ஏற்ற நிலையில் தயாராக நிறுத்தப் பட்டிருப்பதையும் அவன் கண்கள் கண்டு கொண்டன.

சுவரின்மேல் நிற்பவன் தயங்குவதைக் கண்டதுமே தேவனும் மாமனும் ‘விழித்து’க் கொண்டனர். தங்களை அவன் சந்தேகித்துவிட்டான் என்பது அவர்களுக்கு ஐய மறத் தெரிந்துவிட்டது!

குனிந்துகொண்டிருந்த மாமன் சட்டென்று விலகி நின்று, கத்தியை உருவினார். தேவனும் அவரும் சுவரில் நிற்பவனுக்கு நேரே உருவிய கத்திகளோடு மறித்துக் கொண்டு நின்றனர். கொள்ளைப் பொருள்களின் மூட்டை அவர்கள் காலடியில் இருந்தது.

சுவரில் நின்றவன் ஒரு விநாடி திகைத்தான். அடுத்த விநாடி விருட்டென்று தன் இடையிலிருந்த சிறு பிச்சுவாக் கத்தி ஒன்றை உருவினான். உருவிய வேகத்தில் வெள்ளையத் தேவனின் வலது தோள்பட்டையை குறி வைத்து வீசினான்.

இதைச் சிறிதும் எதிர்பாராத வெள்ளைத்தேவன், சட் டென்று கத்தி வீச்சிலிருந்து தப்புவதற்காகக் குனிந்து கொடுத்தான். ஆனால் ..அந்தோ!...,விதியின் கொடுமையை என்னவென்று சொல்வது? தோள்பட்டையில் பாயவேண் டிய கொள்ளைக்காரனின் பிச்சுவா, வெள்ளைத்தேவனின் வலது செவியின் மேற்பாகத்தை ஆழமாகத் தர்க்கிவிட்டுக் கீழே விழுந்தது. தேவன் வலி பொறுக்க முடியாமல் அலறி னான். மாமன் திடுக்கிட்டு அவனருகிற் சென்றார். கத்தி பாய்ந்த வேகத்தில் காதில் சுட்டு விரலளவு துளைத்திருந்தது: சுவரின்மேலிருந்த கொள்ளைக்காரன் கைகளைப் பலமாக ஓங்கிக்கொண்டே, தெலுங்கில் ஏதோ இரைந்து கத்திவிட்டு, அப்படியே சுவரின் மேல்தளத்திலேயே நடந்து சென்று ஒரு குதிரையின் முதுகில் பாய்ந்துவிட்டான். தேவனும் ம்ாமனும் இதைக் கவனித்து ஓடி வருவதற்குள் குதிரை இருளில் ஒரு பர்லாங் தூரம் சென்றுவிட்டது!

“இவ்வளவு முயன்றும் இவன் தப்பி விட்டானே?” என்று மாமன் கூறினார்.

காதில் கத்தி துளைத்த இடத்தில் இசிவெடுத்து வலி துடிதுடிக்கச் செய்தது வெள்ளையத்தேவனை. அவன் அப்படியே அசந்துபோய்விட்டான். மாமன் தன் தலைப் பாகைத் துணியைக் கிழித்து மண்டையோடு சேர்த்து வெள்ளையனின் காதில் ஒரு கட்டுப் போட்டு இரத்தம் வரு வதைத் தடுத்தார்.

“மாமா!...வலி பிராணன் போகிறதே!” என்று வெள்ளை அலறினான்.

“வெள்ளை, பொறு. உள்ளே விட்டிற்குள் போய்விட்டால், காதுக்கு ஏதாவது மருந்து போடலாம். இந்தக் கொள்ளைப் பொருள்களின் மூட்டையோடும் குதிரை யோடும் இங்கேயே மதிலோரத்தில் நின்று கொண்டிருப்போ மானால், நாமே இந்தக் கொள்ளையை நடத்தினோம், என்று மற்றவர்கள் வந்து தீர்மானிக்கும்படி ஏற்பட்டாலும் ஏற்பட்டுவிடும்!” - மாமன் பதறினார். மீதமிருந்த மற்றொரு குதிரையை இழுத்துக்கொண்டு போய்க் கொள்ளைப் பொருள் களின் மூட்டை கிடந்த இடத்தில் சுவரருகே ஏறிக் குதிப் பதற்கு வசதியாக நிறுத்தினார். அப்போது தீவட்டி வெளிச் சத்தில் கீழேகிடந்த அந்தப் பிச்சுவாக் கத்தி அவர் கண்களில் பட்டது. வெள்ளையத் தேவனின் காதைத் துளைத்து விட்டுக் கீழே வீழ்ந்திருந்த அந்தக் கத்தியின் நுனியில் குருதிக் கறை படிந்திருந்தது. மாமன் அதைக் கீழே குனிந்து எடுத்தார்.

அருகில் தரையில் புழுதியோடு புழுதியாக விழுந்து, மங்கலான ஒளியைக் கொடுத்துக்கொண்டிருந்த தீவட்டியைக் குனிந்து எடுத்துக் கத்தியின் பிடிக்கு நேரே காண்பித்தான் வெள்ளையத்தேவன்.

மறுகணம், “பாப்பைய நாயக்கன்” என்று அந்தக் கத்தி யின் பிடியில் செதுக்கியிருந்த எழுத்துக்களை அதில் கண்டு. இரைந்து படித்தார் மாமன். அவை தெலுங்கு எழுத்துக்கள். மாமன் கத்தியை இடுப்பிலே செருகி, மறைவாகப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டார்.

“வெள்ளை! உனக்குத் தெலுங்கு தெரியாது அல்லவா? உன்மேல் இந்தக் கத்தியை வீசிவிட்டு ஓடிய போது, அவன் உன்னை நோக்கித் தெலுங்கில் கத்தினானே, அதற்கு என்ன அர்த்தம் என்பதைத் தெரிந்துக்கொண்டாயா!”

“இல்லையே மாமா!”

“இன்று இந்தக் கொள்ளையில் நான் அடைந்திருக்க வேண்டிய பரிபூரணமான வெற்றியை நீ கெடுத்துவிட்டாய்! இனிமேல், என்றும், எந்த விநாடியிலும், நீ யாராக இருந்தாலும், உன் உயரை நான் கொள்ளையிட முயன்று கொண்டிருப்பேன் என்பதை மறந்துவிடாதே! ஜாக்கிரதை இந்தா! பெற்றுக்கொள், “நீ யார்?” என்பதை என்றும் நான் கண்டுகொள்ள ஓர் அடையாளச் சின்னம்’—இவ்வாறு கூறிவிட்டுச் சென்றான் அவன்.”

இதன் பின் அவர்கள் இருவரும் குதிரையை நிறுத்தி, அதன் மூலமாகக் கொள்ளைப் பொருள் அடங்கிய மூட்டையையும் எடுத்துக்கொண்டு, மதிற்கூவரைக் கடந்து தோட்டத்திற்குள் குதித்தனர். வெளியே தரையில் கிடந்த தீவட்டி அணைந்துவிட்டதால், குதிரை இருளோடு இருளாகச் சுவரருகில் நின்று கொண்டிருந்தது. அப்போதுதான் பின் நிலா மேலே கிளம்புகின்ற நேரம் ஆகியிருந்தது.

மாளிகை வாசலில் இரண்டு பெரிய நாய்கள் ரத்தம் கக்கிச் செத்துக் கிடந்தன. அவைகளின் கழுத்துக்கள் திருகி முறுக்கப்பட்டிருந்தன. அது திருடர்களின் கைவரிசை என்று தேவனும் மாமனும் அறிந்துகொண்டிருந்தனர். மாளிகைக்குள் எந்தப் பொருளும் அதிகமாகச் சூறையாடி இறைக்கப்படவில்லை. வீடு ‘ஒழுங்காகவே’ இருந்தது. கீழ் அறையிலிருந்த ஒரு பெரிய இரும்புப்பெட்டி மட்டிலும் உடைக்கப்பட்டுக் காலியாகக் கிடந்தது! தீவட்டிகளிலிருந்து வடிந்திருந்த, அங்கங்கே கீழே சிந்தித் தரையை அசங்கியப் படுத்தியிருந்தது. தூணில் இரண்டு காவற்காரர்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு அப்போது தம் நினைவிருந்ததாகத் தெரியவில்லை. மாடிக்குச் செல்லும் கதவு வெளிப்பக்கம் தாழ்போடப் பட்டிருந்தது. உட்புறமிருந்து யாரோ பலங்கொண்ட மட்டும் கதவைத் தட்டிக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தார்கள்.

கையில் கொண்டுவந்திருந்த கொள்ளைப் பொருள்கள் அடங்கிய மூட்டையை உடைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டிக்கருகில் போட்டுவிட்டு, ஒடிப்போய் மாடிக்குச் செல்லும் கதவின் வெளிப்புறத்துத் தாழ்ப்பாளை நீக்கித்திறந்தார் மாமன். வெள்ளையத் தேவன் தூணில் கட்டப் பட்டிருந்த காவலர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

மாடிக் கதவை மாமன் திறந்ததும், பண்ணைத் தேவர், அவர் மனைவி, மகள் பொன்னி மூவரும் உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப்போய்க் கீழே இறங்கினார்கள்.

அவர்களை ஆசுவாசப்படுத்தி அமர்த்தி, நடந்த கதையை எல்லாம் மாமனும் வெள்ளையத் தேவனும் கூறினார்கள். இதற்குள் பொன்னியும் அவள் தாயுமாகச் சேர்ந்து வெள்ளையனால் தூணிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த காவற்காரர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கத்தைப் போக் கினர்.

அப்போது மாமன் வெள்ளையத் தேவனுக்குக் காதில் ஏற்பட்ட காயத்தைப் பண்ணைத் தேவரிடம் கூறி ‘கொஞ்சம் தேங்காய் எண்ணெயும் கரித் தூளும் வேண்டும்'—என்று கேட்டார்.

பொன்னியின் கலங்கமற்ற முகத்தையும், தெய்வீக அழகையும் பார்த்துக்கொண்டிருந்த வெள்ளையத் தேவன், “ஆகா! ஒரு பாவமுமறியாத இந்தப் பேதைப் பெண்ணைக் கடத்திக்கொண்டு போகவேண்டுமென்று நினைத்தோமே? எவ்வளவு பெரிய பாவத்திலிருந்து கொள்ளைக்காரர்கள் மூலம் கடவுள் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார்!"—என்று தனக்குள் எண்ணிக்கொண்டான். காவற்காரர்கள் மூட்டையைப் பரிசோதித்துத் திருடு போனவை எல்லாம் மீண்டுவிட்ட தாகக் கூறினர். "ஆமாம்! பண்ணைத் தேவரே! நீங்கள் மாடியில் எப்படி அகப்பட்டுக்கொண்டீர்கள்?-” என்றார் மாமன், மருந்தைக் குழைத்துக்கொண்டே,

“கொள்ளைக்காரர்கள் உள்ளே நுழைந்ததும், இந்தக் காவற்காரர்களைக் கட்டிவைத்துவிட்டு, மாடிக் கதவை வெளிப்புறத்தில் தாழ்ப்போட்டுவிட்டார்கள். அவர்கள் இரும்புப் பெட்டியை உடைக்கிற சப்தம் கேட்டு, நாங்கள் விழித்துக்கொண்டு, பதறிப்போய் கீழே இறங்கினால், கதவு திறக்கவில்லை. வேறு வழியின்றி நீங்கள் இருவரும் வருகிறவரை தட்டிக்கொண்டே கூச்சலிட்டுக்கொண்டிருந்தோம்!... ஆமாம்! அது சரி; நீங்கள் இருவரும் இந்த அர்த்த ராத்திரியில் கரிசல் குளத்தில் இருந்து இங்கே என் வீட்டை நாடி வரவேண்டிய காரணம் என்னவோ?"—பண்ணைத் தேவர் கேட்டார்.

வெள்ளையத் தேவனுடைய காதில் மருந்தைக் குழைத்து: தடவி, அதைக் கட்டிக்கொண்டே, பண்ணைத் தேவரின் இந்தக் கேள்விக்கு விடை கூறினார் மாமன்.

“ஓ! அதைக் கேட்கிறீர்களா? சொல்கிறேன். பண்ணைத். தேவரே! ஓர் அவசர காரியமாக உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் வன்று வந்தோம். என் சம்பந்தி வீரபாண்டியத் தேவரின் மகள் மீனாட்சியின்—அதாவது இவன் தங்கையின் கணவன் உங்கள் கரிசல்குளம் நாட்டாண்மைக்காரரின் மூத்த மகன். அவன் இப்போது கொஞ்சம் சொத்துக்கு, ஆசைப்பட்டு, மீனாட்சியை மலடி என்று அபாண்டப் பழி சுமத்தி ஒதுக்கிவிட்டு, வேறோர் இடத்தில் மறுதாரத்திற்குப் பரிசம்போட முயன்று கொண்டிருக்கிறான். நீங்கள் இதில், தலையிட்டு நியாயம்தேடித் தருவீர்கள் என்று உங்களைக் கலந்துகொண்டு போக்த்தான் இவ்வளவு அவசரமாக வந்தோம்...அதோடு இன்னோர் விஷயம்! நீங்கள் வித்தியாசமாக நினைத்துக் கொள்ளாமலிருந்தால் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன்...” என்று மாமன் மெல்லக் கேட்டார். "தாராளமாகச் சொல்லுங்கள்! என்னுடைய சொத்தை யெல்லாம் மீட்டுக் கொடுத்து இன்றிரவு. நீங்கள் எனக்குச் செய்திருக்கும் மகத்தான உதவிக்கு நான் பெரிதும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.”

“வேறொன்றுமில்லை! நாளைக் காலையில் மீனாட்சியை ஒதுக்கி வைத்த அதே பயல்தான் உங்கள் பெண் பொன்னிக்குப் பரிசம் போட வரப்போவதாக நாங்கள் கேள்விப்பட்டோம்...அதுதான்..”...மாமன் மெதுவாகப் பணிந்த குரலில் இழுத்துப் பேசினார்.

“என்ன? எல்லாம் பெரிய சூழ்ச்சியாக அல்லவா இருக்கும் போலிருக்கிறது: கரிசல்குளத்து நாட்டாண்மையின் மாமன் என்னிடம் வந்து, தன் வகையில் யாரோ ஒரு பையனை அல்லவா பரிசம்போட நாளைக் காலை அழைத்து வருவதாகக் கூறினான்? ஓஹோ! நீங்கள் இப்போது கூறினபின்னல்லவா இதில் அடங்கியுள்ள சூது புலனாகிறது? தானே நேரில் வந்தால் மீனாட்சியை ஒதுக்கி வைத்த விவகாரம் எல்லாம் தெரிந்துவிடும் என்று பயந்து, தன் மகனுக்கு என் மகளை முடித்து, எனது சொத்துக்களை அபகரிக்கத் தனது மாமனை அல்லவா தூதனுப்பியிருக்கிறான்? அப்படியா விஷயம்?” — பண்ணைத் தேவர் ஆத்திரத்தோடு பேசினார். நாட்டாண்மையிடம் அவருக்கிருந்த சினத்தை இந்தக் கோபமே காட்டியது.

திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டே வெள்ளையன், “மாமா! நான் பச்சிலையைக் காட்டி மூர்ச்சியுறச் செய்து ஒரு ஆளைப் புதரில் தள்ளினேன் அல்லவா? அவனுக்கு இந்நேரம் பிரக்ஞை வந்தாலும் வந்திருக்கும், பயல் வெளியே நிறுத்தியிருக்கும் மற்றோர் குதிரையைத் ‘தன் பங்குக்கு ஆயிற்று'—என்று ஏறிக்கொண்டு போய்விடப் போகிறான்! நான் போய். அவன் அகப்பட்டால், அந்தப் பயலை இங்கே இழுத்துக் கொண்டு வருகிறேன்"–என்று கூறிக்கொண்டே எழுந்தான்.

அதற்குள் பண்ணைத் தேவரே, “கொஞ்சம் பொறு தம்பி! பின் நிலர உச்சிக்கு வந்துவிட்டது. நாம் எல்லோ ருமே போய் மதிற்பக்கம் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம்! அதோடு நீயும் உன் மாமனும் தீர்த்துக்கட்டிய ஆட்களை பாழுங்கிணற்றிலிருந்து எடுத்துக் கமுக்கமாக அடக்கம் செய்ய வேண்டியது முக்கியம். இந்தக் காவற்காரர்களையும் நம்மோடு அழைத்துப்போய் அந்தக் காரியத்தையெல்லாம் நிறைவேற்றிவிட்லாம்..” என்று இவ்வாறு கூறிவிட்டுச் சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், மீண்டும் தொடர்ந்து மாமனை நோக்கிக் கூறலானார்.

“பெரியவரே! என்னால் உங்கள் மருமகனுக்கு ஏற்பட்ட சிரமம் மிகத் துன்புறுத்துகின்றது என் மனத்தை! ஆனால், ஒன்று மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கெல்லாம் சரியானபடி கைம்மாறும் நன்றியும் செய்யாமல் விட்டுவிட மாட்டேன். உங்கள் மருமகன் என் பழைய நண்பர் வீர பாண்டியத் தேவரின் புதல்வன் என்ற நினைவே என்னை இன்று பெருமகிழ்ச்சி அடையச் செய்கிறது.” பண்ணைத் தேவர் கூறிவிட்டுத் தன் காவற்காரர்களையும் கூப்பிட்டுக் கொண்டு, வெளியே செல்வதற்குத் தயாராக எழுந்து நின்றார்.

மாமனும் வெள்ளையத் தேவனும்கூட அவருடன் புறப்படுவதற்குத் தயாரானார்கள். உள்ளே அறையின் கதவோரத்தில் பொன்னியின் மருண்ட விழிகள், த்ன்னை நோக்கு வதை வெள்ளையத்தேவன் கண்டான். இதயத்தின் ஆழத்தைத் துழாவும் அந்த அழகான பார்வை காதில் கத்தி துளைத் திருந்த வலியையும் மறக்கச் செய்து, அவனைக் கவர்ந்தது.

பண்ணைத் தேவரின் வேலையாட்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி முன் செல்ல, மூவரும் மதிற் கதவைத் திறந்துகொண்டு சுவரோரமாகப் பாழுங்கிணறும் அடர்ந்த புதருமாக இருந்த இடத்தை அடைந்தனர்.

கிணற்றருகிலே புதருக்குள் தீப்பந்தத்தை இருள் அகலும் படியாகக் காட்டினார்கள் வேலையாட்கள். வெள்ளையத் தேவன் பச்சிலையை மூக்கிலடைத்துத் தள்ளியஆள் அங்கேயே அவன் தள்ளியபடி விறைத்துக் கிடந்தான். தீவட்டியைத் தன் கையில் வாங்கிக்கொண்டு வேலைக்காரர்கள் அந்த ஆளைப் புதரிலிருந்து இழுத்துப் போடுமாறு கட்டளையிட்டான் வெள்ளையத்தேவன். வேலைக்காரர்கள் புதரிலிருந்து அந்தப் பருத்த சரீரத்தை வெளியே தூக்கிக்கொண்டு வந்து போட்டார்கள்.

தீவட்டி வெளிச்சத்தில் அந்த ஆளின் முகத்தைப் பார்த்த பண்ணைத்தேவர், ஏக காலத்தில் வியப்பும் ஆத்திரமும் தொனிக்கும் குரலில், “அட நன்றிகெட்ட பயலே? நீதானா நல்லவனைப்போல நடித்து என் வீட்டில் ஒரு மாதம் வேலைக்கு இருந்து ஓடிப்போன இரகசியம் இப்போதல்லவா புரிகிறது? ‘வெங்கி நாயக்'கனின் சுயரூபம் இதுதானா? நீ கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த உளவாளியா?” என்று இரைந்தார்.

மாமனும் வெள்ளையத்தேவனும் ஒருவாறு விஷயத்தைப் புரிந்துகொண்டனர். கொள்ளைக்காரர்கள் தங்கள் ஆளையே தேவர் வீட்டில் வேலை செய்யவிட்டு உளவறிந்திருக்கிறார்கள் என்பதை நினைக்க நினைக்க, அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

கீழே கிடந்த சரீரத்தில் நீலம் பாரித்து, நரம்புகள் புடைத்துத் தெரிந்தன. மார்பிலே கையை வைத்துப் பரிசோதித்த மாமன், உதட்டைப் பிதுக்கினார், உடல் ஜில் லிட்டுப் போயிருந்தது.

“புதருக்குள் இவன் பிரக்ஞையற்றுக் கிடந்தபோது, ஏதோ விஷ ஜந்து இவனைத் தீண்டியிருக்கவேண்டும். ஆள் நாக்கைப் பிளந்துவிட்டான்” என்று கையை விரித்துக் காட்டியபடி தலை நிமிர்ந்தார்.

இதன்பின், “பாழுங்கிணற்றிற்குள்ளே கிடக்கும் உடல்களோடு வெங்கி நாயக்கனின் உடலையும் சேர்த்து யாவற் றையும் பொழுது விடிவதற்குள் அப்புறப்படுத்தி அடக்கம் செய்துவிடவேண்டும்” என்று வேலைக்காரர்களுக்குக் கூறி விட்டு, அவர்கள் மூவரும் மாளிகைக்குள் சென்றனர். போகும்போது வெளியே நின்ற குதிரையையும் இழுத்துக் கொண்டுபோய்ப் பண்ணைத் தேவரின் குதிரை லாயத்திலுள்ள குதிரைகளோடு கட்டிப் புல்லை அள்ளிப்போட்டான் வெள்ளையத்தேவன்.

“நாளை நண்பகலுக்குள் மீனாட்சியின் கணவன் தானே வலுவில் கபிலக் குறிச்சிக்குப் போய் அவளைப் பணிந்து அழைத்துக்கொண்டு வரச்செய்யவில்லையானால், என்பெயர் பண்ணைத் தேவனில்லை! நீங்கள் இருவரும் கவலையின்றிக் குறை இரவையும் இங்கேயே ஒய்வெடுத்துக் கொண்டு அமைதியாகக் கழியுங்கள்” என்றார் பண்ணைத்தேவர். அவர் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், மாமனும் வெள்ளையனும் அங்கேயே மாளிகையில் தங்கினர்.

ஆனால், இரவின் எஞ்சிய பகுதியில் அந்த மாளிகையில் அன்று எவருமே உறங்கவில்லை. உறங்க முயன்றார்கள், ஆனால், உறக்கம் வந்தால்தானே!

முதல் நாளிரவில் பண்ணைத் தேவர் கூறிய வாக்குப்படி மீனாட்சியை அவள் கணவனே நண்பகலுக்குள் கபிலக்.குறிச்சி சென்று அழைத்து வருமாறு செய்துவிட்டார். சுரிசல்குளம் ஊரில் அவருக்கிருந்த செல்வாக்கு இந்தக் காரியத்தைத் துரிதமாக நிறைவேற்றியது.

மீனாட்சிக்கு நல்வாழ்வு திரும்பிவிட்டதில் பெரிதும் மகிழ்ந்த மாமனும் வெள்ளையத் தேவனும், அதற்கு மூல காரணமாக இருந்த பண்ணைத் தேவருக்கு நன்றி கூறிவிட்டு ஊருக்குக் கிளம்பச் சித்தமானார்கள்.

ஆனால், பெரியவரே! நீங்களும் தம்பியும், இப்போது போகவேண்டாம். உங்களிடம் நான் தனியே பேசவேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது” என்று கூறி, மாமனையும் தேவனையும் பண்ணைத் தேவர் தடுத்துவிட்டார்.

மாமனைமட்டும் தனியே அழைத்துச் சென்று, அவரிடம் ஒரு வியக்கத்தக்க செய்தியைப் பிரஸ்தாபித்தார் பண்ணைத் தேவர். "பெரியவரே! நான் இப்பொழுது உங்களை வேண்டிக் கொள்ளப் போகிற வேண்டுகோள் உங்களுக்குக் கோபத்தை, உண்டாக்குவதாகவே இருக்கலாம். ஆனால், எப்படியும் என்னை வித்தியாசமாக நினைத்துக்கொள்ளாமல், நீங்கள் இதற்குச் சம்மதித்துத்தான் ஆகவேண்டும்” என்று பண்ணைத் தேவர் பீடிகை போடும்போதே,

“நீங்கள் சொல்லி, நான் எதை மறுக்கப் போகிறேன்’ பண்ணைத் தேவரே? தாராளமாகச் சொல்லுங்கள்...” என்று குழைந்து கொடுத்தார் மாமன்.

“அப்படியில்லை பெரியவரே! வாஸ்தவத்திலேயே எவருக்கும் கோபத்தை உண்டாக்கக் கூடிய விஷயம் நான் பிரஸ்தாபிக்கப் போவது?”

“சும்மா சொல்லுங்கள்.”

“வெள்ளையத் தேவன் ஏற்கெனவே உங்கள் மருமகன்! உங்கள் அருமை மகள் அவன் மனைவியாயிருக்கிறாள். இப்போது என் மகள் பொன்னிக்கும் அவனிடம் அதேஸ்தானத் தைப் பெறுவதற்கு, நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் இதுதான் என்.வேண்டுகோள்"—

மாமன் முகத்தில் அடுக்கடுக்காகச் சுருக்கங்கள் விழுந்தன. அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். பண்ணைத் தேவர் மாமனின் முகத்தையே இமையாமல் பார்த்துக்கொண் டிருந்தார்.

“உங்கள் விருப்பத்தை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், தற்போது வெள்ளையத் தேவனின் மனைவியாக விளங்கும் என் மகள், இதற்குச் சம்மதிக்கின்றாளோ, என்னவோ? அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.” சிந்தனை செய்த பிறகு மாமன் கூறினார்.

“உங்கள் மகளையும் வெள்ளையனையும் முழு மனத்தோடு இதற்குச் சம்மதிக்கச் செய்வது என் பொறுப்பு வயது முதிர்ந்த அனுபவஸ்தராகிய உங்கள் சம்மதந்தான். இப்போது எனக்குத் தேவை." “என் சம்மதம் இந்தக் கணமே கிடைத்ததாக வைத்துக் கொள்ளலாம்.”

அவர்கள் பேச்சு இவ்வளவிலே முடிந்தது. பொன்னியை அழைத்துக்கொண்டு, கபிலக்குறிஞ்சிக்குப் புறப்பட்டார் பண்ணைத்தேவர். இடையில், மீனாட்சிக்குப் பெருத்திங்கு இழைக்க எண்ணிய கரிசல்குளத்தான், தன் பிழைக்காக எல்லோரையும் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

பண்ணைத் தேவர், மாலை மயங்கும் நேரத்திற்குக் கபிலக்குறிச்சியின் தலைக்கட்டுகளோடும், வெள்ளையனின் மூதல் மனைவியோடும், மீண்டும் பண்ணை மாளிகைக்குத் திரும்பி வந்தார்.

வெள்ளையனின் முதல் மனைவியும், தலைக்கட்டுக்களும் அவன் பொன்னியையும் மணந்துகொள்வதற்குத் தங்கள் சம்மதத்தை முழுமனத்தோடு தெரிவித்தனர். வெள்ளையத் தேவனுக்கு ஏற்கனவே பொன்னியிடமிருந்த மறைமுகமான சபலம், அவன் இதை மறுக்கத் தூண்டவில்லை.

“நல்லவற்றை உடனே செய்ய வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாளையே ஒரு நல்ல முகூர்த்தம் இருக்கிறது. பரிசம் போடாமலே நாளைக் காலை கோவிலில் திருப்பூட்டை நடத்திவிட வேண்டும்” என்றார் பண்ணைத்தேவர்.

எல்லோருமே அதற்கு உடன்பட்டனர். வெள்ளையத் தேவனைலிட அவன் முதல் மனைவிக்குத்தான் பொன்னியின் களங்கமற்ற சுபாவத்தில் பெரிதும் காதல் ஏற்பட்டிருந்தது! முதலில் தயங்கினாலும், பின்பு இந்தப் புதிய சம்பந்தம் தன் மகளுக்குக் கெடுதலைத் தராதென்றெண்ணி, மனம் அமைதியடைந்தார் மாமன். இந்த நிக்ழ்ச்சிகளெல்லாம் நடந்து ஆறு வருடங்களுக்குப் பிறகுதான் வெள்ளையத்தேவனுடைய வாழ்க்கையில் அந்தப் பயங்கரமான நிகழ்ச்சி குறுக்கிட்டது. இந்த ஆறு வருடங்களுக்குள் வெள்ளையத் தேவனின் வாழ்க்கையில்தான் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்துவிட்டன! உயிருக்குயிராக வலதுகைபோல விளங்கிய மாமனும் பண்ணைத்தேவரும் இப்போது இந்த உலகில் இல்லை. அவர்கள் காலஞ்சென்று வருடங்கள் இரண்டு ஓடிவிட்டன. பண்ணைத் தேவருடைய சொத்துக்கும் அதிபதியாகி, இந்த வட்டாரத்திலேயே ஒரு சிற்றரசனைப் போல விளங்கி, வந்தான் வெள்ளையத் தேவன். முதல் மனைவியிடம் ஒரு பெண்ணும் பொன்னியிடம் இரண்டு ஆண் குழந்தைகளுமாக மக்கட் செல்வங்களைப் பெற்றிருந்தான் அவன்.

கரிசல்குளத்தில் மீனாட்சி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிக் கணவனோடு அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தாள். பண்ணைத் தேவர் காலமான மறுவருடத்திலிருந்து, கபிலக்குறிச்சிக்குமட்டுமின்றிக் கரிசல்குளத்திற்கும் வெள்ளையத் தேவனே நாட்டாண்மையாகியிருந்தான். செல்வத்தாலும், செல்வாக்கினாலும், ஆள் புலத்தினாலும், இரண்டு ஊர்களின் ஆட்சியையும் திறமையாக, நடத்திவந்தான் அவன். இந்த வட்டாரத்து மக்கள் அவனைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றி மதித்து வந்தார்கள். ஆறாண்டுகளாக ஊர் நன்மை குறித்து அவன் செய்த வீர தீரச் செயல்கள் அனந்தம், ஊர் மக்களுக்கும், பொதுக்காரியங்களுக்கும், கோவில் குளங்களுக்கும் செய்த தானதர்மங்கள் அளவிட முடியாதவை.

மாசி, மாதத்தின் நடுப் பகுதியில் ஓர் புதன்கிழமை, என்றுமில்லாதபடி அன்று என்னவோ காலையில் எழுந்ததிலிருந்தே கொங்கு மலைக்கு வேட்டையாடப் போகவேண்டு. மென்ற அபூர்வ ஆசை வெள்ளையுத் தேவனுக்கு ஏற்பட்டது. நான்கு தலைக்கட்டுக்களும் அவனுடன் துணையாக வேட்டைக்குப் புறப்படத் தயாராக இருந்தனர்.

காலையில் சுமார் பத்துப் பதினொரு நாழிகைக்கு வெள்ளையத் தேவனும் அவன் சகாக்களும் கொங்குமலையை அடைந்து வேட்டையைத் தொடங்கினார்கள். உச்சிப் பொழுதுவரை, வேட்டை சுவாரஸ்யமாக நடந்தது. சகாக்கள் மூலைக்கொருவராக அடர்ந்த மலைப் பகுதியில் தனித்தனியே பிரிந்து சென்றுவிட்டனர்.

வெள்ளையத் தேவனுக்கு அந்த மலையில் சுற்றிக் கொண்டிருந்த பளிஞன் ஒருவன் மிகவும் உதவியாக இருந்தான்.

ஒருமுறை பராக்குப் பார்த்துக்கொண்டே, தொலைவில் மேய்ந்துகொண்டிருந்த மான் ஒன்றின்மேல் வில்லை நாணேற்றிய அவன், கீழே இருந்த பாறை தடுக்கி விழுந்து விட்டான். அப்படி அவன் விழுந்தபோதுதான், அந்தப் பளிஞன் ஒரு புதரிலிருந்து அவனைத் தூக்கிவிடுவதற்காக வந்தான். தூக்கிவிட வந்தபோது, அவன் வெள்ளையனின் வலது காதில் எதையோ தடவினான், “அடேடே! காதில் எறும்பு நுழைந்துவிட்டதே!” என்று கூறியவாறே, கையால் எதையோ எடுத்தெறிவதுபோல எடுத்தும் எறிந்தான். இதன்பின் வெள்ளையத் தேவன் அவனை, “நீ என்னோடு வர வேண்டிய அவசியம் இல்லை! உன் உதவிக்கு நன்றி. எனக்கு வேட்டையாடத் தெரியும்” என்று கூறித் தடுத்தும் கேட்காமல் பின்தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தான் அந்தப் பளிஞன். “சரி! வந்தால் வந்துவிட்டுப் போகிறான். நமக்கென்ன!” என்று பேசாமல் இருந்துவிட்டான் வெள்ளையத் தேவன்.

கதிரவன் தலைக்கு நேரே வந்து நண்பகல் ஆனபோது வேட்டையை நிறுத்திவிட்டுச் சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொள்ளக் கருதிய வெள்ளையத் தேவன், சகாக்களைத் தேடி நடந்தான். அப்போது அந்தப் பளிஞனும் அவனையே பின்பற்றி வந்தான்.

“ஏய்! நீ பேசாமல் இங்கிருந்து போகிறாயா! உன் முதுகுக்கு ஏதாவது கேட்கிறதா? எதற்காக என் பினனாலேயே வருகிறாய்?” என்று கூறிக்கொண்டே வில்தண்டை அந்தப் பளிஞனை நோக்கி ஓங்கினான் வெள்ளையன். அவன் உடனே பதறி, “ஐயோ சாமி! இந்த ஏழையை தப்பாக நினைக்கிறீர்களா! தங்குவதற்கு இடம் தெரியாமல் சுற்றி அலைகிறீர்களே, இங்கே ஒரு சுனைக் கரையில் நான் வசிக்கும் குகை இருக்கிறது. அங்கேயே உங்களைத் தங்கச் செய்யலாம் என்பதற்காக அல்லவா, நான் உங்களோடு வருகிறேன்” என்றி கூறினான்.

“நான் தங்குவதற்கு இடம் தேடவில்லை பளிளுரே! என்னோடு வந்த சகாக்களைத் தேடுகிறேன்.”

“நல்லதாகப் போயிற்று சாமி! நீங்கள் என் குகையிலே தங்கி இருங்கள். ஒரு நொடியில் நான் உங்கள் சகாக்களைத் தேடிக் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறேன். மலையிலுள்ள வழிகள் எனக்குத் கரதலப் பாடம். இந்த ஏழையின் வேண்டுகோளை நீங்கள் நிராகரிக்கக்கூடாது"—அந்தப் பளிஞன் வெள்ளையனின் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடினான். வெள்ளைக்கு மனம் இரங்கியது.

“சரி! நீ என்னை உன் குகையில் கொண்டுபோய் விட்டு விட்டு அவர்களைத் தேடிவா.” அவன் இணங்கினான்.

இருவரும் நடந்தனர். மரங்களடர்ந்த பகுதியில் ஒர் படிக நிற நீர்ச் சுனையின் கரையிலிருந்த குகையினருகில் வந்ததும் அவன், “சாமி! இதுதான் என் குகை! நீங்கள் இதற்குள்ளே சென்று இருங்கள்!...நான் போய் அவர்களைத் தேடி வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு நடந்தான்... வெள்ளை குகைக்குள் நுழைந்தான். அதற்குள் பளிஞனின் குரல்,

“சாமி! ஒரு சிறு உதவி! என் வில்லும் ஆயுதங்களும் குகைக்குள்ளே இருக்கின்றன. இப்போது உள்ளே போய் எடுத்துக்கொண்டு வர நேரம் ஆகும். நான் தேடிப் போகிற வழியில் துஷ்ட மிருகங்கள் எதிர்ப்பட்டாலும் படலாம்... தயவு செய்து உங்கள் வில்லையும் கத்தியையும் தருகிறீர்களா?” என்று கேட்டது. வெள்ளை திரும்பிப் பார்த்தான். பளிஞன் சுனைக் கரையில் நின்று தயங்கித் தயங்கிக் கேட்டான். "குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, தனக்கு ஆயுதங்கள் எதற்கு? என்றெண்ணிய வெள்ளையன், “இந்தா எடுத்துக்கொண்டு போ!’ என்று தன் ஆயுதங்களை யெல்லாம் களைந்து பளிஞனுக்காகக் கீழே வைத்துவிட்டுக் குகையை நோக்கி நடந்தான். பளிஞன் ஓடிவந்து, வில்லையும் ஆம்பறாத் தூணியையும் கையில் எடுத்தான்.

மறு விநாடி குகைக்குள் நுழைந்து கொண்டிருந்த வெள்ளையன், ‘ஆ!’ என்று அலறிக்கொண்டே, சுருண்டு விழுந்து பாறைகளில் உருண்டான். யாரோ தடதடவென்று ஓடிவரும் சப்தம் அவனுடைய செவிகளில் விழுந்தது. ஒரு கூரிய அம்பு அவன் முதுகிலே பாய்ந்து மார்பு வழியாக ஊடுருவியிருந்தது. அதிலிருந்து குருதி பீறிட்டுப் பாறைகளில் வடிந்து, சுனை நீரில் சங்கமமாகி, அதன் படிக நிறத்தைச் இவப்பாக்கிக் கொண்டிருந்தது. மறுபடி வெள்ளையத் தேவனுக்குப் பிரக்ஞை வந்தபோது, தான் குகைக்குள்ளே படுக்க வைக்கப்பட்டிருப்பதையும், தன் மார்பை ஊடுருவியிருந்த அம்பு எடுக்கப்பட்டு, அதில் பச்சிலை மருந்து இட்டுக் கட்டப்பட்டிருப்பதையும் தன்னோடு வந்த அந்தப் பளிளுனைக் குகையில் ஒரு பாறைமேல் கொடிகளால் இறுக்கிக் கட்டியிருப்பதையும் கண்டான். அவனைச் சுற்றி அவன் சகாக்களான தலைக்கட்டுக்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் முகத்தில் துயரம் நிறைந்திருந்தது.

அவனுக்குப் பிரக்ஞை வந்து கண் விழித்ததைக் கண்டதும், தலைக்கட்டுக்கள் துயரம் தாங்க முடியாமல் ‘ஹோ’ வென்று வாய்விட்டு அலறிவிட்டார்கள். வெள்ளையத் தேவன் அழவில்லை. அம்பு ஊடுருவியிருந்த வலியை அவன் பொருட்படுத்தவில்லை. அவன் முகத்தில் மனித நயனங்கள் காணக்கிடைக்காத தெய்வீக தேஜஸ் படிந்திருந்தது. பாரிஜாத புஷ்பத்தைச் சரப்படுத்தி வைத்தாற்போன்ற ஓர். அற்புதமான சிரிப்பு அவன் இதழ்களை அணி செய்தது. ‘வெள்ளையத் தேவன்', தன் எதிரே பாறையில் கட்டிவைத் கப்படடிருந்த அந்தப் பளிஞனைச் சிறிது நேரம் அதே புன்னகையோடு உற்றுப் பார்த்தான். பின்பு தலைக்கட்டுக் களைப் பார்த்துக் கூறினான்.

“நண்பர்களே! முதலில் இவனைப் பாறையிலிருந்து அவிழ்த்து விடுங்கள்.”

“பிரபு! இந்த அயோக்கியன்தான் தங்கள் முதுகில் அம்பு செலுத்தியவ்ன்! இவனை விடுவதாவது? சித்திரவதை செய்யவேண்டும்."—தலைக்கட்டுக்கள் கொதிக்கும் குரலில் கூறினார்கள்.

“உங்கள் எல்லோரையும்விட, இவனைப் பற்றியும், இவன் செயல்களைப்பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். நண்பர்களே! இவன் மலைப்பளிஞன் இல்லை! தீவட்டிக் கொள்ளைக்காரர்களின் தலைவன். என்னைப் பழி வாங்குவதற்குக் காத்திருந்த பாப்பைய நாயக்கன்! சில நாழிகைகளுக்கு முன் இவன் என் காதிலிருந்த கத்தி வடுவை எறும்பு புகுந்துவிட்டதாகப் பொய் சொல்லித் தடவிப் பார்த்ததும், பிறகு என்னை இடைவிடாமல் பின்தொடர்ந்ததும், இவனுடைய நடிப்பையும் மீறி உண்மையை எனக்குக் கூறிவிட்டன. ஆனால், நல்ல கம்பளத்து நாயக்கர் குலத்தில் பிறந்த இந்த ஆண் மகன், என்னோடு நேருக்குநேர் போரிடாமல், என் முதுகிலே அம்பு போட்டு என்னைக் கொன்று தனக்கு இழுக்கைத் தேடிக்கொண்டு விட்டானே?"—என்றுதான். இந்த மரணாவஸ்தை நிலையில் நான் ஏங்குகிறேன். என் வாழ்வில் என்றாவது ஒரு நாள் இவன் எனக்கு எமனாக வருவான் என்பதை இன்றல்ல, ஆறு வருஷத்திற்கு முன்பே தான் அறிவேன்...அது இருக்கட்டும், நான் வேண்டிக் கொள்கிறேன் நண்பர்களே... முதல் வேலையாக இவனை அவிழ்த்துவிடுங்கள் நீங்கள் அவிழ்த்துவிட மறுத்தால், நான்தான் உயிர் வேதனையோடு எழுந்திருந்தாவது அவிழ்த்துவிட வேண்டும்.”...இப்படிக் கூறியவாறே, வெள்ளையன் கையூன்றி எழுந்திருக்க யத்தனித்தான். "வேண்டாம் பிரபு, வேண்டாம், நாங்களே செய்கிறோம்"–என்று கூறிக்கொண்டே, உடனிருந்தவர்கள் பாறையிலிருந்து அந்தப் பளிஞனை அவிழ்த்துவிட்டனர். கொடிகளால் இறுக்கப்பட்டுக் கிடந்ததனால் அவன் உடலில் பாளம் பாளமாகத் தடிப்பு விழுந்து கன்றிப் போயிருந்தது.

“பாப்பையா! கொஞ்சம் இப்படி என் அருகே வா"–அன்பு இழையும் கருணைக் குரலில் வெள்ளையத் தேவன் அழைத்தான்.

“என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் மனிதரில்லை; தெய்வம்".. தழுதழுக்கும் குரலில் இவ்வாறு கூறிக் கொண்டே, வெள்ளையத் தேவனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான் பாப்பைய நாயக்கன்.

“என்னை வணங்காதே பாப்பையா. தெய்வம் மனித சரீரத்தில் இல்லை. அந்தச் சரீரத்தின் அதியுன்னதமான குணங்களில் இருக்கிறது. அந்தக் குணங்களை உன் சரீரத்தில் குடியேற்றுகிற முயற்சியில் ஈடுபட்டால், நாளை முதல் உனக்கும் மற்றவர்களுக்கும் நீயேதான் தெய்வம்.”

“இல்லை, இல்லை, நான் பாவி. கொலைப் பாதகன். திருடன். தீவட்டிக் கொள்ளைக்கர்ரன். நான் தெய்வமாக முடியாது"–பாப்பையன் கதறினான்.

“ஏன் முடியாது? நன்றாக முடியும்! தெய்வத்தை இந்தத் தலைமுறையில் வணங்கும் அடியார்கள், அடுத்த தலைமுறைக்குத் தாங்களே தெய்வமாகிவிடுகிறார்களல்லவா? உன் ஒழுங்கான வாழ்வுக்கு வழி சொல்லுகிறேன் பாப்பையா! அதை நீ கேட்டாயா?”

“கேட்கிறேன் சுவாமி!”

“வெறுமனே சொன்னால் போதாது! இதோ! கீழே வடிந்திருக்கும் என் ரத்தத்தைத் தொட்டு, “நான் நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன்’ என்று சத்தியம் செய்ய வேண்டும்." பாப்பையன் அப்படியே வெள்ளையத் தேவனின் ரத்தத்தைத் தொட்டு வணங்கிச் சத்தியம் செய்தான்.

“நான் சொல்வதை, இவனுக்குச் செய்து கொடுக்க நீங்கள் பொறுப்பு! எனவே, நீங்களும் இப்படியே ஒரு சத்தியம் செய்யுங்கள்"—என்று தன் சகாக்களையும் வேண்டிக்கொண்டான் வெள்ளையத் தேவன்.

அவர்களும் அப்படியே ரத்தத்தைத் தொட்டு சத்தியம் செய்தார்கள், இப்படி இரு சாரரும் சத்தியம் செய்து முடிந்தபின், “நண்பர்களே! எல்லோரும் இப்போது கவனமாக நான் கூறுவதைக் கேளுங்கள்” என்று தொடங்கி வெள்ளையத்தேவன் கூறலானான்:—

“தலைக்கட்டுக்களே! கவனித்துக் கேளுங்கள். இது என் வேண்டுகோளின் முக்கியமான அம்சம். பாப்பையா! நீயும் கேள். பண்ணைத்தேவருடைய செல்வ வளமே பாப்பையனுக்கும் எனக்கும் நேரடியாகப் பகையை உண்டாக்கிவிட்டது. இப்போதோ பொன்னியை மணம் செய்து கொண்டதன் மூலமாக அந்தச் செல்வத்துக்கு நான் உரிமையாளன் ஆகிவிட்டேன். ஆனால், இதோ இன்னும் சிறிது நேரத்தில் என்னுடைய உலக வாழ்க்கையே முடியப்போகிறது. நீங்கள் போட்டிருக்கும் பச்சிலை மருந்தெல்லாம் இதற்குப் பயன்படாது. ஏனென்றால், பாப்பைய நாயக்கன் விட்ட அம்பு என் இதயத்தின் முக்கியமான இரத்தக்குழாயைத் துளைத்துவிட்டது. இனி நான் பிழைப்பது நடக்க முடியாத காரியம். எனவே உங்களிடம் இதை வேண்டுகின்றேன்.

பொன்னி மூலம் என்னைச் சேர்ந்திருக்கும் பண்ணைத் தேவரின் சொத்துக்களையும், அவருடைய கரிசல்குளத்துத் தோட்ட மாளிகையையும் நாளையிலிருந்து பாப்பையனுக்கு உரிமையாக்க வேண்டும். அதைச் செய்வதாகத் தலைக்கட்டுக்களாகிய நீங்களும், ஏற்றுக்கொள்ளப்போவதாகப் பாப்பையனாகிய இவனும் என் ரத்தத்தைத் தொட்டுச் சத்தியம் செய்துவிட்டீர்கள். இனி நீங்கள் மறுக்க முடியாது!" "ஐயோ! சுவாமீ! என்னை மீண்டும் ‘செல்வம், ஆசை” என்ற படுகுழிகளில் தள்ளாதீர்கள். நான் இப்படியே. உங்களோடு சாகப் போகிறேன்” என்று பாப்பையன் அலறினான்.

“கூடாது! பாப்பையா, அன்றிரவு எந்த மாளிகையில் நீ சுவரேறிக்குதித்துத் திருடனாக நுழைந்தாயோ, அதே மாளிகைக்குச் சொந்தக்காரனாகப் போகிறாய். ஒரு காலத்தில் உன்னை ஏங்க வைத்த செல்வம், உனக்குக் கிடைக்கப் போகிறது. தானதர்மங்களை மனங்குளிரச் செய்து, கர்மயோகியாக வாழ்நாளைக் கழி. உன்னை அழ வைத்த செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்துக் கொடுத்துப் பழிவாங்கு! உன்னைத் திருடனாக்கிய செல்வம், வருங்காலத்தில் பிறரையும் திருடராக்காமல் அதன் கொட்டத்தை ஒடுக்கு!” என்று ஆவேசம் வந்தவன்போல மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே போனான் வெள்ளையத்தேவன்.

“பிரபு! தங்கள் மனைவி மக்களுக்கு நாங்கள் என்ன பதில் கூறுவது?” என்று தலைக்கட்டுக்கள் அழுகைக்கு இடையே விம்மிக்கொண்டே கேட்டனர்.

“வெள்ளையத்தேவர் வானுலகில் இருந்து, எப்போதும். உங்கள் நலனைக் கண்காணித்து வருவார் என்று கூறுங்கள். நீங்கள் செய்த சத்தியத்தின் மேல் ஆணையாகப் பாப்பைய நாயக்கன்தான் பழைய தீவட்டிக்கொள்ளைக்காரனென்றோ அவனால் நான் கொலை செய்யப்பட்டேன் என்றோ, என் மனைவி மக்களிடம் கூறக்கூடாது! முடிந்தவரை பிறரிடமும் கூறவேண்டாம்” என்று வெள்ளையத்தேவன் கூறினான், உள்ளத்தின் கருணையொளி அவன் சொற்களிலே பிரகாசித்தது. அடுத்த கணம்...அவன் ஜீவன் ஒளியோடு ஒளியாக ஐக்கியமாயிற்று. ஜீவனற்ற வெள்ளையத்தேவனின் சரீரத்தை தங்கள் கண்ணீரால் நீராட்டி, குகைக்குள்ளேயே அடக்கம் செய்தனர் தலைக்கட்டுகள்.

இதற்கப்பால், பாப்பைய நாயக்கன் பண்ணைத்தேவர் மாளிகையை அன்ன சத்திரமாக மாற்றி, ஏழை எளியவர் களுக்குச் சோறிடும் தர்மத்தில் ஈடுபட்டான். தன்னை மனிதனாக்கிய வெள்ளையத்தேவனுக்குச் சிலை செய்து, அவன் இறந்த கொங்குமலைக் குகையிலேயே அதைத் தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தான். கரிச்ல்குளத்திற்கும் கபிலக்குறிச்சிக்கும் குலதெய்வமானான் வெள்ளையத்தேவன். எந்தக் கரங்களால் வெள்ளையத்தேவனின் முதுகில் அம்பைத் தொடுத்தானோ, அதே கரங்களால் அவனுடைய சிலையின் திருவடிகளில் மலரைச் சொரிந்து, மனம் நெகிழப் பூசை செய்தான் பாப்பையன். வெள்ளையன் மனைவி மக்களும் ஊராரைப் போலவே அந்தச் சிலையைத் தெய்வமாக வழிபடலானார்கள். மாசி மாதம் அவன் இறந்த நாள் பெருவிழாவாக இரண்டு ஊராராலும் கொண்டாடப்பட்டது. வெள்ளையத்தேவன் தெய்வமானான். அவனது இரத்தம் சிந்திய பாறை, அவன் சிலை நிற்கும் கோயிலாயிற்று.

***

வீராசாமித்தேவர் எனக்கும் ஜான்ஸனுக்கும் இந்தக் கதையைக் கூறி முடித்தபோது, இரவு மணி பதினொன்றரைக்குமேல் ஆகியிருந்தது. மழையும் நின்று வெகு நேரமாகியிருந்ததினால், வானத்தில் மேகங்கள் வெளி வாங்கியிருந்தன. நட்சத்திரங்களும், நிலாவும் ஒளியைப் பரப்பியதால், பாவில் முழுகிய தெய்வபிம்பம்பேர்ல மலையில் நில இவாளி அங்கங்கே தவழ்ந்தது. நான் குகைக்குள்ளிருந்த வெள்ளையத்தேவனின் அந்தக் கம்பீரமான சிலையின் அருகில் சென்று பார்த்தேன். “மூன்று தலைமுறைக்கு முந்திச்செய்த சிலைங்க இது!” என்றார் வீராசாமித்தேவ்ர். பெருமிதம், விளங்கும் அந்தச் சிலை வாய் திறந்து,

“தெய்வம் மனித சரீரத்திலே இல்லை. அந்தச் சரீரத்தின் அதியுன்னதமான குண்ங்களில் இருக்கிறது” என்று என்னிடம் கூறுவதுபோல ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது.

நாங்கள் ஜீப்பில் ஊர் திரும்பும்போது, “இவர் சொன்ன் கதையைப்போலவே, இந்த ஊரைப்பற்றி மதுரை ஜில்லாவின் பழைய கெஜட்டில் ஒரு வரலாறு படித்ததாக ஞாபகம் வருகிறது” என்றார் ஜான்ஸன்.

“இருக்கலாம்” என்றேன் நான்.