மெய்யறம் (இல்வாழ்வியல்)

31. இல்வாழ் வுயர்வு தொகு

  • 301. இல்வாழ் வென்பதோ ரில்லினில் வாழ்தல்.
  • இல்வாழ்வு என்பது குடும்பத்துடன் வாழ்வது ஆகும்.
  • 302. எதிபாற் றுணையுடன் வதிதன் மிகநலம்.
  • எதிர்பால் துணையுடன் வாழ்வது மிகச் சிறந்தது ஆகும்.
  • 303. இல்வாழ் வார்கட னில்லற மியற்றல்.
  • இல்வாழ்க்கைக்கு உரிய விதிகளைப் பின்பற்றி நடத்தலே இல்வாழ்க்கை நடத்துபவரின் கடமை ஆகும்.
  • 304. என்றும்வே ளாண்மை யியற்றலே யில்லறம்.
  • எப்பொழுதும் விவசாயத்தில் ஈடுபடுவதே இல்லறம் ஆகும்.
  • 305. இல்வாழ் வில்லெனி லில்லையிவ் வுலகே.
  • இல்வாழ்க்கை நடத்துபவர் இல்லை எனில் இவ்வுலகம் இல்லை(ஏனெனில் இவரே எல்லோர்க்கும் உணவளிப்பவர்)
  • 306. இன்னிலை யெவற்றினு நன்னிலை யென்ப.
  • மக்கள் நான்கு நிலைகளில் வாழ்ந்தனர்.
  • பிரம்மச்சர்யம் -திருமணத்துக்கு முந்திய கல்வி கற்கும் பருவம்.
  • இல்வாழ்வான் -திருமணம் செய்து வாழும் பருவம்.
  • வானப்பிரஸ்தம் -திருமணம் செய்து இல்வாழ்க்கையில் தமது கடமைகளை முடித்து துறவறம் எய்தும் பருவம்.
  • சந்நியாசம் - துறவு வாழ்க்கை.
  • இல்வாழ்க்கை நிலை என்பது மற்ற மூன்று நிலைகளைவிட சிறந்த நிலை ஆகும்.
  • 307. எந்நிலை யவர்க்கு மில்வாழ் வார்துணை.
  • எல்லா நிலையில் வாழ்பவர்களும் இல்வாழ்வாரைச் சார்ந்தே வாழ்கின்றனர்.
  • 308. அந்நிலைப் பெருக்கே யரசென வறிக.
  • குடும்ப அமைப்பின் மிகப் பெரிய வடிவமே அரசாட்சி ஆகும்.
  • 309. அதற்கா நன்முத லன்பெனும் பொருளே.
  • குடும்ப அமைப்பின் மூலதனம் அன்பே ஆகும்.
  • 310. அதிலாம் பயன்க ளறமுத னான்கே.
  • இல்வாழ்வான் அறம், பொருள், இன்பம், வீடுபேறு இவற்றை அடைவான்.

32. இல்லமைத்தல் தொகு

  • 311. அகல நீள மரைக்கான் மைல்கொளல்.
  • வீடு கட்டுவதற்கான மனை 20 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் உடையதாக இருக்க வேண்டும்.
  • 312. ஈரிரு புறமதி லெதிரெதிர் வழிசெயல்.
  • வீட்டின் நான்கு புறமும் மதில் சுவர்கள் கட்டப்பட வேண்டும். எதிரெதிராக வாசல்கள் (முன் வாசல், பின்வாசல்) இருக்கவேண்டும்.
  • 313. மத்தியிற் புறமதின் மட்டமே லிற்செயல்.
  • மனையின் நடுவில் வீடு மதில் சுவர்களைவிட உயரமாகக் கட்டப்பட வேண்டும்.
  • 314. இல்லிற் கீரா யிரமடி சதுரமாம்.
  • வீடு இரண்டாயிரம் சதுரடி அளவில் இருத்தல் வேண்டும்.
  • 315. நிலமேன் மதிற்கு நேர்கால் கீழ்செயல்.
  • நிலத்தின் மேலே மதில் சுவர் நீளத்திற்கு பள்ளமாக வாய்க்கால் வெட்ட வேண்டும்
  • 316. வளியன னீர்மா வழியா வகைசெயல்.
  • காற்று, நெருப்பு, வெள்ளம், விலங்குகள் இவற்றால் பாதிக்கப்படாத வகையில் வீடு கட்டப்பட வேண்டும்.
  • 317. வளியொளி யளவினுள் வரச்செல வழிசெயல்.
  • வீட்டினுள் காற்றும் வெளிச்சமும் போதுமான அளவு வந்து செல்லும்படி வீடு கட்டப்பட வேண்டும்.
  • 318. பொருட்குஞ் செயற்கும் பொருத்தமாப் பகுத்திடல்.
  • நம்முடைய பொருளாதார நிலைமைக்கும் செயல் திறமைக்கும் ஏற்றவாறு வீடு கட்டப்பட வேண்டும்.
  • 319. நிலவறை தான்செய னிதிமிகின் மேற்செயல்.
  • இவை மிகுதியாக இருந்தால் நிலவறை, மேல் வீடு கட்டலாம்.
  • 320.நற்றரு செடிகொடி யிற்புறத் தமைத்திடல்.
  • நன்மை தரக்கூடிய மரங்கள், செடி கொடிகள் இவற்றை வீட்டிற்கு வெளியே நட்டு வளர்க்கலாம்.

33. உயிர்த்துணை கொள்ளல் தொகு

  • 321. உயிர்த்துணை தன்னுயிர்க் குதவெதிர் பாற்றுணை.
  • உயிர்த்துணை என்பவர் நம் வாழ்க்கைக்கு ஆதரவான எதிபாலைச் சார்ந்த துணை ஆகும்.
  • 322. அத்துணைக் கெங்கனு மொத்ததொன் றிலதே.
  • வாழ்க்கைத் துணைக்கு ஈடு, இணை யாரும் இல்லை.
  • 323. ஆக்கமுங் கேடு மத்துணை யாலாம்.
  • ஒருவருடைய செல்வமும் அழிவும் அவருடைய உயிர்த் துணையால் அவருக்கு அமைகிறது.
  • 324. கொள்ளு மறிவெலாங் கொண்டுபின் றுணைகொளல்.
  • ஒருவன் தன் அறிவைக் கொண்டு நன்கு ஆராய்ந்து பின்னர் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தல் வேண்டும்.
  • 325. கொளுமுன் கொண்டிடிற் குற்றம் பலவாம்.
  • ஆராயாமல் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது பலவகைப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
  • 326. துணையிழந் தாரை மணப்பது புண்ணியம்.
  • வாழ்க்கைத் துணையை இழந்தவரைத் திருமணம் செய்வது மிகச் சிறந்த செயலாகும்.
  • 327. விரும்பா தவரை விரும்புதல் பாவம்.
  • தம்மை விரும்பாதவரை விரும்புதல் கொடிய செயல் ஆகும்.
  • 328. துணைநலங் குடிமையே தூய்மையே யொழுக்கமே;
  • வாழ்க்கைத் துணையின் பண்புகள் நற்குடிப்பிறப்பு, (எண்ணத்திலும், சொல்லிலும், உடலிலும்)தூய்மை, ஒழுக்கம்;
  • 329. பருவமே யெழிலே பண்பே யின்சொலே;
  • மற்றும் இளமை, அழகு, நற்பண்புகள், இனிமையான சொல்;
  • 330. வரவினுள் வாழ்தலே மடிதுயி லிலாமையே.
  • மற்றும் வாழ்க்கைத் துணையின் வருமானத்திற்குள் வாழும் திறமை, சோம்பலின்மை, அதிகமாகத் தூங்காத தன்மை ஆகியவை ஆகும்.

34. உயிர்த்துணை யாளுதல் தொகு

  • 331. இருவரு ளறிவிற் பெரியவ ராள்க.
  • கணவன், மனைவி இவர்களில் அறிவில் சிறந்தவர் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தல் வேண்டும்.
  • 332. ஆண்பா லுயர்வெனல் வீண்பேச் சென்க.
  • ஆண்கள்தான் சிறந்தவர் என்று கூறுவது பயனற்ற பேச்சு ஆகும்.
  • 333. துணைநன் காள்பவர் தொல்லுல காள்வர்.
  • வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமையாக வாழ்பவர் உலகம் முழுவதும் வெற்றி கொள்வர்.(எல்லா இன்பங்களும் அடைந்து வாழ்வர்)
  • 334. தன்னுயி ருடல்பொரு டன்றுணைக் குரியன.
  • ஒருவருடைய உயிர், உடல், பொருள் எல்லாம் அவரது உயிர்த்துணைக்குச் சொந்தம் ஆகும்.
  • 335. தன்றுணை யுயிர்முத றனக்காங் குரியன.
  • அதுபோல் அவரது வாழ்க்கைத்துணையின் உயிர் முதலியவை அவருக்குச் சொந்தம் ஆகும்.
  • 336. இருவராத் தோன்றினு மொருவரே யுள்ளின்.
  • கணவன், மனைவி இவர்கள் தோற்றத்தில் இருவராக இருந்தாலும் உண்மையில் ஒருவரே ஆவர்.
  • 337. தானறிந் தவையெலாந் தன்றுணைக் குணர்த்துக.
  • ஒருவர் தான் அறிந்தவற்றை எல்லாம் தன் வாழ்க்கைத்துணைக்குக் கற்றுத் தர வேண்டும்.
  • 338. தனதுநன் னெறிதுணை சார்ந்திடச் செய்க.
  • அவரது நேர்மையான வழியில் வாழ்க்கைத்துணையையும் செல்லுமாறு செய்தல் வேண்டும்.
  • 339. இயற்றுவ துணையுட னெண்ணி யியற்றுக.
  • எந்தச் செயலைச் செய்தாலும் வாழ்க்கைத்துணையுடன் ஆலோசித்துப் பின் செய்தல் வேண்டும்.
  • 340. உண்பன துணையோ டுடனிருந் துண்ணுக.
  • உண்ணுவதை வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்தே உண்ணுதல் வேண்டும்.

35. இன்பந் துய்த்தல் தொகு

  • 341. துணையோ டின்பந் துய்த்தலே சுவர்க்கம்.
  • வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து இன்பம் அனுபவிப்பதே உண்மையான நிரந்தரமான இன்பமாகும்.
  • 342. துய்க்கு முறையெலாந் தொல்லகப் பொருள்சொலும்.
  • இன்பம் அனுபவிக்கும் முறைகளை பழமையான அகப் பொருள் நூல்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
  • 343. முறையறி யாதுறல் குறையறி வுயிர்செயல்.
  • இன்பம் அனுபவிக்கும் முறைகளை அறியாது செயல்படுவது அறிவற்ற செயலாகும்.
  • 344. தன்றுணைக் கின்பந் தரத்தரத் தனக்கதாம்.
  • தனது துணைக்கு இன்பம் கொடுக்கக் கொடுக்கத்தான் தனக்கு இன்பம் கிடைக்கும்
  • 345. தானின் புறவெணிற் றனக்கதெய் தாதே.
  • தான் மட்டும் இன்புற நினைத்தால் தனக்கு இன்பம் கிடைக்காது.
  • 346. ஊட லுணர்தல் புணர்த லதன்வகை.
  • ஊடலும் அதனை உணர்ந்து நீக்குதலும் புணர்தலும் இன்பங்களாகும்.
  • 347. ஊட னிமித்த முடனுட னாக்குக.
  • ஊடலின் காரணத்தை அறிந்து அதனை உடனுக்குடன் நீக்குதல் வேண்டும்.
  • 348. இரந்தும் புணர்ந்து முணர்ந்திடச் செய்க.
  • வாழ்க்கைத்துணையை வேண்டியும் புணர்ந்தும் இன்பம் அனுபவிக்கச் செய்தல் வேண்டும்.
  • 349. இருந்திரங் கத்துணை பிரிந்திடல் நீக்குக.
  • வாழ்க்கைத்துணை மனம் வருந்துமாறு பிரிந்து செல்லுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • 350. துணையழத் துறந்துமெய் யிணைதலன் பிலாவறம்.
  • வாழ்க்கைத்துணை மனம் வருந்தத் துறவறம் மேற்கொள்வது அன்பிலாத செயலாகும்.

36. காமம் விலக்கல் தொகு

  • 351. காம மகத்தெழு மாமத வெறியே.
  • காமம் உள்ளத்தில் எழுகின்ற மிகப் பெரிய வெறி ஆகும்.
  • 352. இன்ப மறிவோ டிருந்ததுநு பவிப்பதே.
  • இன்பம் என்பது சுய நினைவோடு அநுபவிப்பது ஆகும்.
  • 353. இராச்சில குறித்தறை யியைந்திட லின்பம்.
  • சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அநுபவிப்பது இன்பம் ஆகும்.
  • 354.எண்ணிய பொழுதிடத் தியைந்திடல் காமம்.
  • நினைத்த பொழுது நினைத்த இடத்தில் அநுபவிப்பது காமம் ஆகும்.
  • 355. காம மகப்புறக் கண்களைக் கெடுத்திடும்.
  • காமம் அறிவையும் மனத்தையும் கெடுத்திடும்.
  • 356. காம மெழுங்காற் கடவுளை யுள்ளுக.
  • காம எண்ணம் தோன்றும் போது கடவுளை நினைக்க வேண்டும்.
  • 357. அறிவெனுந் தோட்டியா னதனைக் காக்க.
  • அறிவெனுங் காவலினால் காமத்திலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்.
  • 358. அதைவளர்ப் பவைதமை யகத்தைவிட் டோட்டுக.
  • காமத்தைத் தூண்டுபவற்றை நம் மனத்திலிருந்து அகற்ற வேண்டும்.
  • 359. அதையடு மொன்றை யகத்தினுட் கொள்ளுக.
  • காமத்தை வெல்லக் கூடிய ஒன்றை மனதில் நினைக்க வேண்டும்.
  • 360. அதைநன் குள்ளி மதவெறி களைக.
  • அதை நன்றாக மனதில் நினைத்து வெறியினை நீக்க வேண்டும்.

37. பரத்தையை விலக்கல் தொகு

  • 361. பரத்தை யின்பினைப் பலர்க்கும் விற்பவள்.
  • பரத்தை உடலின்பத்தைப் பலருக்கும் விற்பவள்.
  • 362. மதுசூ திரண்டினும் பொதுமகள் கொடியள்.
  • எல்லோருக்கும் சொந்தமாகக் கூடிய அவள் மது, சூது இவ்விரண்டை விடத் தீமை தரக் கூடியவள்.
  • 363.அவணடை யுடைநோக் காதியா லழிப்பாள்;
  • அவள் மீது நம் கவனம் சென்றால் நம்மை முற்றிலும் அழிப்பாள்.
  • 364. இன்பந் தருதல்போற் றுன்பெலாந் தருவள்;
  • இன்பம் தருவது போல் எல்லாத் துன்பங்களையும் தருவாள்.
  • 365. உடைமுதற் பொருளெலா முயிரொடு கவர்வள்.
  • அவள் நமது செல்வமனைத்தையும் கவர்வதோடு உயிரையும் கவர்ந்துவிடுவாள்.
  • 366. அவளினும் வஞ்சக ரவனியி லில்லை.
  • அவளை விடத் தீயவர் இந்த உலகத்தில் இல்லை.
  • 367. அவளினுங் கள்வ ரருளின ரெனலாம்.
  • அவளை விடத் திருடர் கருணை நிறைந்தவர்.
  • 368. அவளுள நினைந்தாற் றவசியுங் கெடுவான்.
  • அவளை நினைத்தால் தவம் செய்பவர்களும் அழிந்துவிடுவர்.
  • 369. அவளா லந்தோ வழிந்தவ ரநேகர்.
  • அவளால் முற்றிலுமாக அழிந்தவர் பலர்.
  • 370.அவளிலா நாடே யழிவுறா நாடு.
  • அவள் இல்லாத நாடே வளர்ச்சி அடையும்.

38. பரத்தனை விலக்கல் தொகு

  • 371. தன்றுணை யலாளைத் தழுவுவோன் பரத்தன்.
  • தன்னுடைய மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன் இன்பம் அநுபவிப்பவன் பரத்தன்.
  • 372. பரத்தை யினுமிகக் கொடியவன் பரத்தன்
  • அவன் பரத்தையை விடத் தீயவன்.
  • 373. பொதுமக ளாதலம் முழுமக னாலே.
  • அந்த அறிவிலியால் தான் ஒரு பெண் பரத்தை ஆகிறாள்.
  • 374.நன்மகன் கெடுதலப் புன்மக னாலே.
  • அந்தத் தீயவனால் நல்லவனும் கெடுவான்.
  • 375.மறனெலா நிகழ்வதம் மாபாவி யாலே.
  • அத்தீயவனால் தான் அறத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறுகின்றன.
  • 376. அவனைக் காண்டலா லழியும் புகழே.
  • அவனைப் பார்ப்பவர்களின் புகழ் அழியும்.
  • 377. அவனொடு பேசலா லழியு நிறையே.
  • அவனோடு பேசுபவர்களின் கற்பு அழியும்.
  • 378.அவனொடு சேர்தலா லழியு மனைத்தும்.
  • அவனோடு சேர்பவர்கள் அனைத்தையும் இழப்பர்.
  • 379. அவனிலா நாடே யாகுநன் னாடு.
  • அவன் இல்லாத நாடே வளர்ச்சி அடையும்.
  • 380. அறனு மளியு மமைவுறு நாடு;
  • அறமும் அன்பும் நிறைந்த நாடாக விளங்கும்.

39. சிற்றினம் விலக்கல் தொகு

  • 381. சிற்றினங் குணத்திற் குற்றமிகு மாக்கள்;
  • சிற்றினம் என்பவர் தனது குணநலன்களில் குறைகளை உடையவர்;
  • 382. பெருமிதந் தன்னைப் பேணா மாக்கள்;
  • தன்னுடைய மதிப்பைப் பேணிப் பாதுகாக்க இயலாதவர்கள்;
  • 383. அற்பத் தன்மை யளாவிய மாக்கள்;
  • சிறுமைக் குணங்களை விரும்புபவர்கள்;
  • 384. பொறியின் பங்களிற் செறிவுறு மாக்கள்;
  • ஐம்புலன்களினால் கிடைக்கும் இன்பங்களில் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள்;
  • 385. சுயநயங் கருதும் பயனிலா மாக்கள்.
  • தம் நலத்தையே எப்பொழுதும் எண்ணும் சுயநலம் உடையவர்கள் ஆகியோர் ஆவர்.
  • 386. சிற்றினம் பொருளையுஞ் சீரையு மழிக்கும்;
  • சிற்றினம் ஒருவன் அடைந்த செல்வத்தையும் பெருமையையும் அழிக்கும்;
  • 387. அற்றமுங் குற்றமு முற்றிடச் செய்யும்;
  • மேலும் அச்சத்தையும் குற்றத்தையும் ஏற்படுத்தும்;
  • 388. முற்றவ நலத்தொடு கற்றவுஞ் சிதைக்கும்;
  • மேலும் ஒருவர் தனது மேன்மையான நடத்தையினால் அடைந்த பெருமைகளையும் அவர் கற்றதனால் அடைந்த அறிவினையும் அழிக்கும்;
  • 389. நரகும் பழியு நண்ணிடச் செய்யும்.
  • மேலும் மற்றவர் நம்மை இகழுமாறு செய்து நரகத்தில் விழவைக்கும்.
  • 390. சிற்றினப் பற்றினைச் சிறிதும் வேண்டேல். ஆதலால் சிற்றினத்தின் மீதான விருப்பத்தை அறவே நீக்குதல் வேண்டும்.

40. பெரியாரைத் துணைக்கொளல் தொகு

  • 391. பெரியா ரரியன பெரியன செய்பவர்;
  • பெரியவர் என்பவர் செய்வதற்கு அரிய, மிக உயர்ந்த செயல்களைச் செய்பவர்;
  • 392. பொறியா ளுளத்தை யறிவா லாள்பவர்;
  • மேலும் ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் உள்ள மனத்தைத் தமது அறிவின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்;
  • 393. இகபர வியலெலா மெண்ணிநன் கறிந்தவர்;
  • மேலும் இவ்வுலகத்தின் இயல்பினைப் பற்றியும் இறைவனைப்பற்றியும் நன்கு அறிந்து இருப்பவர்;
  • 394.நல்லின வியலெலா நண்ணி நிற்பவர்;
  • மேலும் நல்லினப் பண்புகளை எல்லாம் பெற்றிருப்பவர்;
  • 395. பின்னுறுந் தீங்கெலா முன்னறிந் தொழிப்பவர்.
  • மேலும் பின்னால் வரப்போகும் தீமைகளை முன்னரே அறிந்து அதை நீக்குபவர் ஆவார்.
  • 396. அவரது துணைகொள லரும்பெருங் காப்பு.
  • பெரியவர்களின் துணையைப் பெறுவது மிக அரிய உயர்ந்த பாதுகாப்பு ஆகும்.
  • 397. அவரை யறிந்துகொண் டநுதின மோம்புக.
  • அவரது பெருமைகளை அறிந்து அவரை எப்பொழுதும் போற்றி வாழுதல் வேண்டும்.
  • 398. அவர்க்குரி யனவெலா மன்பொடு வழங்குக.
  • அவருக்குத் தேவையானவற்றை அன்போடு வழங்குதல் வேண்டும்.
  • 399. அவரோ டெண்ணியே யனைத்துஞ் செய்க.
  • அவருடன் ஆலோசனை செய்தே அனைத்துச் செயல்களையும் செய்தல் வேண்டும்.
  • 400. அவருரை பிழையா தியாங்கணு மொழுகுக.
  • அவருடைய அறிவுரைகளின் வழியே எப்பொழுதும் நடத்தல் வேண்டும்.

41. பேதைமை யொழித்தல் தொகு

  • 401. பேதைமை யேதங்கொண் டூதியம் விடுதல்;
  • பேதைமை என்பது ஒருவன் தனக்குக் கேடு தரும் பண்புகளைப் பின்பற்றி நன்மை தரும் பண்புகளை விட்டுவிடுதல்;
  • 402. கடிந்தவை தம்பால் காதன்மை செய்தல்;
  • மேலும் பெரியோரால் விலக்கப்பட்ட செயல்களை விரும்பி செய்தல்;
  • 403. நாணன் பருள்புகழ் பேணுத லின்மை;
  • மேலும் பழிச் சொல்லுக்கு வெட்கப்படாமை, அன்பு இல்லாமை, அருள் இல்லாமை, புகழ் தரக்கூடிய நல்ல செயல்களைச் செய்யாமை;
  • 404. அறிந்துணர்ந் துரைத்து மடங்கா தொழுகல்;
  • அரிய நூல்களைக் கற்று உணர்ந்து உரைத்தும் அடங்காது வாழ்தல்;
  • 405. அறத்தை விடுத்து மறத்தைப் புரிதல்.
  • மேலும் நல்ல செயல்களைச் செய்யாமல் தீய செயல்களைச் செய்தல் ஆகியவை ஆகும்.
  • 406. வினைசெயின் பொய்படும் புணைகொளும் பேதை.
  • பேதை ஒரு செயலைச் செய்ய முற்பட்டால் அச்செயல் முடிவுபெறாமல் போய்விடும்; அவனும் குற்றவாளியாகிக் கைவிலங்கு பூணுவான்.
  • 407. தமர்பசித் துழலப் பிறர்க்கிடும் பேதை.
  • பேதையின் உறவினர் பசியால் துன்புறும் போது பேதையால் மற்றவர் நன்மை அடைவர்.
  • 408. பேதையோர் காசுறிற் பித்தன் களித்தற்று.
  • பேதை செல்வம் அடைந்தால் பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்துத் தடுமாறுவதுபோல தன்னிலை மறந்து நடப்பான்.
  • 409. அவைபுகிற் பேதை யதனலங் குன்றும்.
  • சான்றோர்கள் நிறைந்த சபையில் பேதை நுழைவதால் சபையின் பெருமை குறையும்.
  • 410. பெரியார் நூல்கொடு பேதைமை களைக.
  • அறிவிற் சிறந்த பெரியவர்களின் நூல்களைக் கற்று பேதைமையை நீக்க வேண்டும்.

42. வெண்மை யொழித்தல் தொகு

  • 411. வெண்மை யறிவினை விடுத்த தன்மை;
  • வெண்மை என்பது அறிவினை விடுத்த தன்மை;
  • 412. ஒண்மை யுடையமென் றுளத்தொடு செருக்கல்;
  • மேலும் ஒருவன் தான் அறிவுடையவன் என்று கர்வத்தோடு எண்ணுதல்;
  • 413. ஈயவேண் டியவிடத் தீயா திவறல்;
  • மேலும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுக்காமல் கருமியாக இருத்தல்;
  • 414. குற்றம் பலவுஞ் சுற்றமாக் கொள்ளல்;
  • மேலும் தவறு செய்பவர்களை நெருங்கிய உறவினராகக் கொள்ளுதல்;
  • 415. கற்றில கற்றவாக் காட்டி நடித்தல்;
  • மேலும் தாம் படிக்காத நூல்களைப் படித்தவர் போலக் காட்டுதல்;
  • 416. அருமறை விடுத்துப் பெருமிறை கொள்ளல்;
  • மேலும் மனத்தில் வைத்துக் காக்க வேண்டிய இரகசியத்தை வெளியிட்டுத் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொள்ளுதல்;
  • 417. செய்வன சொல்லியுஞ் செய்யா திழுக்கல்;
  • மேலும் ஒருவனுக்கு நன்மை தருவனவற்றைப் பிறர் எடுத்துக் கூறினாலும் செய்யத் தவறுதல்;
  • 418. உலகின ருளதென்ப திலதென மறுத்தல்.
  • மேலும் உலகில் 'அருள்' (இறைவன்) என்று ஒன்று இல்லை என்று மறுத்தல் ஆகியவை ஆகும்.
  • 419. இன்மையு ளின்மை வெண்மை யொன்றே.
  • இழிவானவற்றுள் இழிவானது அறிவில்லாமையே ஆகும்.
  • 420. ஒண்மைசா னூல்கொடு வெண்மையைக் களைக.
  • மேன்மை பொருந்திய நூல்களின் துணையுடன் அறிவின்மையை நீக்க வேண்டும்.

43. நெடுநீ ரொழித்தல் தொகு

  • 421.நெடுநீர் கால நீள விடுதல்;
  • நெடுநீர் என்பது ஒரு செயலைச் செய்வதைத் தாமதித்தல்;
  • 422. ஒருகணச் செயலைமற் றொன்றற் கீதல்.
  • மேலும் ஒரு செயலை செய்ய வேண்டிய காலத்துக்கும் அதிகமாகக் காலம் எடுத்துச் செய்தல் ஆகியவை ஆகும்.
  • 423. நெடுநீர் குறைபல தருமியல் புடையது.
  • கால தாமதம் நமது செயல்களில் பல குறைகளை ஏற்படுத்தும் இயல்பு உடையது.
  • 424. நெடுநீர் சிறிதுறி னடுமதூஉம் பெருகி.
  • கால தாமதம் நாளடைவில் ஒரு பழக்கமாக மாறிவிடும்.
  • 425. நெடுநீ ரறவிடிற் படுபொரு ளாகும்.
  • மிகுந்த கால தாமதம் அந்தச் செயலையே பயனற்றதாகச் செய்யும்.
  • 426. நெடுநீர் விடற்கந் நினைவையுட் கொள்ளுக;
  • கால தாமதம் என்ற குறையை விடுவதற்கு, விட வேண்டும் என்று ஆழமாக எண்ணுதல்;
  • 427. நெடுநீ ரால்வருங் கெடுதியை யுள்ளுக;
  • மேலும் கால தாமதத்தால் வரும் தீமைகளை எண்ணிப்பார்த்தல்;
  • 428. எக்கணத் தெஃதுறு மக்கணத் ததைச்செயல்.
  • மேலும் ஒரு செயலை எந்த சமயத்தில் செய்து முடிக்க வேண்டுமோ அந்த சமயத்தில் செய்து முடித்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
  • 429. உறுவ பெரிதென வுற்றதை வைத்திடேல்.
  • வரும் வேலை சிறந்தது என்று ஏற்கனவே வந்த வேலையைச் செய்யாமல் இருக்கக் கூடாது.
  • 430. உற்றதைச் செய்துபி னுறுவதை யெண்ணுக.
  • ஏற்கனவே வந்த வேலையைச் செய்து முடித்தபின் வரப்போகும் வேலை குறித்து எண்ணுதல் வேண்டும்.

44. மறவி யொழித்தல் தொகு

  • 431. மறவிதன் கடமையை மனத்திலுன் னாமை.
  • மறவி என்பது தன் கடமையைப் பற்றி மனத்தினில் எண்ணாது இருத்தல் ஆகும்.
  • 432. மறவியூக் கத்தின் மறுதலை யாகும்.
  • மறவி ஊக்கத்தின் எதிர் நிலை ஆகும். அதாவது உயர்வு பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமை ஆகும்.
  • 433. மறவி பலவகை யிறவையு நல்கும்.
  • மறவி பல குற்றங்களை தரும் இயல்பு உடையது ஆகும்.
  • 434. மறவியை யடுத்தவர் மாண்பெலா மிழப்பர்.
  • மறவி என்ற குறையை உடையவர்கள் அவர்களது சிறப்புகளை எல்லாம் இழந்துவிடுவார்கள்.
  • 435. மறவியை விடுத்தவர் மாநிலத் துயர்வர்.
  • மறவி என்ற குறையை நீக்கியவர்கள் மக்களிடையே உயர்ந்த நிலையை அடைவார்கள்.
  • 436. மறவியை விடற்கு மனத்தினன் குள்ளுக;
  • மறவி என்ற குறையை விடுவதற்கு, விட வேண்டும் என்று மனத்தினில் ஆழமாக எண்ணுதல்;
  • 437. காலையு மாலையுங் கடவுளைத் தொழுக;
  • மேலும் காலையும் மாலையும் கடவுளை வணங்குதல்;
  • 438. மாணுயர் நூல்சில மனனஞ் செய்க;
  • மேலும் மிகச் சிறந்த நூல்களை மனப்பாடம் செய்தல்;
  • 439. விடிந்தபின் செய்பவை விடியுமு னுள்ளுக;
  • மேலும் ஒரு நாளில் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து அன்று காலையிலேயே எண்ணுதல்;
  • 440. பகலிற் செய்தவை யிரவினன் காய்க.
  • மேலும் ஒரு நாளில் செய்த செயல்கள் குறித்து அன்று இரவில் நன்றக ஆராய்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

45. மடி யொழித்தல் தொகு

  • 441. மடிதஞ் செயல்களின் மந்த முறுதல்.
  • மடி என்பது செயல்களைச் செய்வதில் ஏற்படும் சோம்பல் ஆகும்.
  • 442. மடிமெய்ம் முயற்சியின் மறுதலை ஆகும்.
  • மடி என்பது உடல் முயற்சியின் எதிர் நிலை ஆகும். அதாவது உடல் உழைப்பில் சுறுசுறுப்பற்ற தன்மை ஆகும்.
  • 443. மடிதமை யொன்னார்க் கடிமைப் படுத்தும்.
  • மடி ஒருவனை அவனது பகைவர்களுக்கு அடிமையாக மற்றிவிடும் இயல்பு உடையது.
  • 444. மடியினை யுடையவர் குடியொடு கெடுவர்.
  • மடியுடையவன் தன் குடும்பத்தோடு அழியும் நிலை ஏற்படும்.
  • 445. மடியினை விடுத்தவர் படியெலாங் கொள்வர்.
  • மடியினை நீக்கியவர்கள் உலகை வெல்லுவர்.
  • 446. மடியினை விடற்கு மனத்தினன் குள்ளுக;
  • மடி என்ற குறையை விடுவதற்கு, விட வேண்டும் என்று மனத்தினில் ஆழமாக எண்ணுதல்;
  • 447. காலைமெய்ப் பயிற்சி சோலைநீர்க் குளிகொளல்;
  • மேலும் காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்தல், பின்னர் குளிர்ந்த நீரில் குளித்தல்;
  • 448. இளம்பக லுணவரை யிராவுண வரைகொளல்;
  • மேலும் காலை உணவும் இரவு உணவும் பாதி வயிறு நிரம்பும்படி உண்ணுதல்;
  • 449. இரவினல் யாமத் தென்று முறங்குக;
  • மேலும் நள்ளிரவில் நான்கு மணி நேரம் கண்டிப்பாக உறங்குதல்;
  • 450. பயனுள சிலசொற் பார்த்துப் பேசுக. மேலும் பயனுள்ள சொற்களைக் கவனத்துடன் பேசுதல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

46. துயி லொழித்தல் தொகு

  • 451. உடம்புள வயர்வினை யொழிப்ப துறக்கம்.
  • உடலில் உள்ள களைப்பை நீக்குவது உறக்கம் ஆகும்.
  • 452. அவ்வயர் வளவிற் கதிகமா வதுதுயில்.
  • அளவிற்கு அதிகமான உறக்கம் களைப்பை ஏற்படுத்தும்.
  • 453. சுழுத்தியா முறக்கஞ் சுகத்தை வளர்க்கும்.
  • கனவுகள் அற்ற உறக்கம் ஆரோக்கியமான வாழ்வைத் தரும்.
  • 454. கனவுக ளாந்துயில் கவலையை வளர்க்கும்.
  • கனவுகள் உடைய உறக்கம் நோயை ஏற்படுத்தும்
  • 455.துயில்கொள வழிவாந் துயில்விட வாக்கமாம்.
  • அதிகமான உறக்கம் அழிவை ஏற்படுத்தும். அளவான உறக்கம் செல்வத்தைத் தரும்.
  • 456. அயர்விற் கமையு மைம்மூன்று நாழிகை.
  • களைப்பினை நீக்க ஆறுமணி நேரத்தூக்கம் போதுமானது ஆகும்.
  • 457. மற்றைய பொழுதெலா மாண்டொழில் புரிக.
  • விழித்திருக்கும் நேரத்தில் சிறப்பான தொழில் செய்திடல் வேண்டும்.
  • 458. தொழில்செயும் பொழுது துயில்வரி னுலாவுக;
  • தொழில் செய்யும் பொழுது துயில் வந்தால் உலாவுதல்;
  • 459. கைத்தொழின் முதலிய மெய்த்தொழில் செய்க;
  • மேலும் கைத்தொழில் போன்ற உடலைப் பயன்படுத்திச் செய்யும் தொழில்களைச் செய்தல்;
  • 460. அவசிய மெனினுண வரையினுஞ் சுருக்குக.
  • மேலும் அதிக உறக்கம் வந்தால் உணவின் அளவைக் குறைத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

47. செருக் கொழித்தல் தொகு

  • 461. செருக்கென் பதுதன் பெருக்கத் தகங்கொளல்.
  • செருக்கு என்பது தனது சிறப்புகளைத் தன் மனத்தில் பெருமையுடன் நினைப்பது ஆகும்.
  • 462. அஃதறி யாமையி னங்குர மென்ப.
  • அஃது அறியாமையின் அடிப்படை ஆகும்.
  • 463. ஆன்ம வுயர்வினை யழிப்பதச் செருக்கு.
  • ஆன்மா மேன்மை அடைந்து இறைநிலை அடைவதை செருக்கு தடுத்துவிடும்.
  • 464. அடங்கா வுளத்தை யளிப்பதச் செருக்கு.
  • செருக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் மீறச் செய்யும்.
  • 465. அழியு முடம்பை யளிப்பது மஃதே.
  • செருக்கினால் உடம்பின் அழிவும் ஏற்படும்.
  • 466. செருக்கினர் தம்மெய்த் திறத்தினைக் காணார்;
  • செருக்கு உடையவர்கள் தங்களது உண்மையான தகுதியை உணராமல் மிகுதியான தகுதி உடையவராக எண்ணுவர்;
  • 467. தம்பகைத் திறத்தைத் தாழ்த்தியே யெண்ணுவர்;
  • மேலும் பகைவர்களின் உண்மையான தகுதியை உணராமல் குறைவான தகுதி உடையவராக எண்ணுவர்;
  • 468. இன்பினு மடியினு மிறந்து படுவர்;
  • மேலும் மிகுந்த சோம்பல் உடையவர்களாகவும் மிகுதியாக இன்பம் அநுபவிப்பவர்களாகவும் இருப்பர்;
  • 469. துயிலு மறவியுந் தொடர்ந்து கொள்வர்;
  • மேலும் மிகுதியாக உறங்குபவர்களாகவும் தமது கடமைகளை மறந்தவர்களாகவும் இருப்பர்;
  • 470. புகழெலாம் போக்கி யிகழெலா மீட்டுவர்.
  • மேலும் புகழ் அழிந்து மற்றவர்களால் இகழப்படும் நிலை ஏற்படும்.

48. அச்ச மொழித்தல் தொகு

  • 471. அச்ச மனமுட லழிவுற நடுங்கல்.
  • அச்சம் என்பது உடலும் மனமும் பதறுதல் ஆகும்.
  • 472. அஃதறி யாமையி னந்தமென் றுணர்க.
  • அச்சம் அறியாமையின் உச்சம் ஆகும்.
  • 473. அறம்புகழ் செய்தலா லழியினும் வாழ்வாம்.
  • அறமும் புகழும் ஏற்படுத்தக்கூடிய நல்ல செயல்களைச் செய்வதால் துன்பம் ஏற்பட்டாலும் அது பின்னர் நல்வாழ்வைத் தரும்.
  • 474. மறம்பழி செய்தலால் வாழினு மழிவாம்.
  • பழி ஏற்படுத்தக்கூடிய தீய செயல்களைச் செய்வதால் நன்மை ஏற்பட்டாலும் அது பின்னர் அழிவைத் தரும்.
  • 475. அறம்புகழ் செய்வதற் கஞ்சுதன் மறனே.
  • அறமும் புகழும் ஏற்படுத்தக்கூடிய நல்ல செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதல் தீய செயல் ஆகும்.
  • 476. மறம்பழி செய்வதற் மாண்புடை யறனே.
  • பழி ஏற்படுத்தக்கூடிய தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதல் நல்ல செயல் ஆகும்.
  • 477. அறநெறி மறந்தரின் மறநெறி யாகும்.
  • ஒரு நல்ல செயலைச் செய்வதால் தீமை ஏற்படின் அது தீய செயல் ஆகும்.
  • 478. மறநெறி யறந்தரி னறநெறி யாகும்.
  • ஒரு தீய செயலைச் செய்வதால் நன்மை ஏற்படின் அது நல்ல செயல் ஆகும்.
  • 479. அச்ச முடையார்க் கெச்சமிங் கில்லை.
  • நல்ல செயல்களைச் செய்வதற்கு அஞ்சுபவர்களுக்கு ஒரு நாளும் இவ்வுலகில் புகழ் ஏற்படாது.
  • 480. அச்ச மிலார்க்கு நிச்சலு மெச்சமாம்.
  • நல்ல செயல்களை அச்சமில்லாமல் செய்பவர்களுக்கு எப்பொழுதும் புகழ் ஏற்படும்.

49. இடுக்க ணழியாமை தொகு

  • 481. இடுக்கண் டுயரினைக் கொடுக்குமிடை யூறு.
  • இடுக்கண் என்பது துன்பத்தைக் கொடுக்ககூடிய இடையூறு ஆகும்.
  • 482. இடுக்க ணுற்றுழி நகினது தான்கெடும்.
  • இடுக்கண் ஏற்படும்பொழுது கலங்காமல் அதைக்கண்டு சிரித்தால் இடுக்கண் தானே நீங்கிவிடும்.
  • 483. இடுக்க ணுக்குள நெகினது பெருகும்.
  • இடுக்கண் ஏற்பட்ட உடன் உள்ளம் தளர்ச்சி அடையுமானால் இடுக்கண் அதிகரிக்கும்.
  • 484. இடுக்கண் புறத்துள தென்பது பொய்ம்மை.
  • இடுக்கண் நமக்கு வெளியில் இருந்து வருகிறது என்பது உண்மை அற்றது ஆகும்.
  • 485. இடுக்க ணகத்துள தென்பது மெய்ம்மை.
  • இடுக்கண் நமது உள்ளத்தில் இருந்து வருகிறது என்பதே உண்மை ஆகும்.
  • 486. இடுக்க ணகத்ததென் றெண்ணவஃ தழியும்.
  • இடுக்கண் நமது உள்ளத்தில் உள்ளது என்பதை நாம் உணர்ந்த உடன் அது மறைந்துவிடும்.
  • 487. இடுக்கணி லழியா ரிடுக்க ணழியும்.
  • இடுக்கண் ஏற்பட்டாலும் அதனைக் கண்டு அஞ்சாதவர்களின் இடுக்கண் நீங்கிவிடும்.
  • 488. இடுக்கண் வலியினைக் கொடுக்குந் திறத்தது.
  • இடுக்கண் வலிமையைக் கொடுக்கும் இயல்பு உடையது.
  • 489. இடுக்க ணறிவினை யீயு மியலது.
  • இடுக்கண் அறிவினைக் கொடுக்கும் இயல்பு உடையது.
  • 490. இடுக்கணிற் றளரா ரெண்ணிய முடிப்பர்.
  • இடுக்கண் ஏற்பட்டால் அதனைக் கண்டு அஞ்சாதவர்கள் அவர்கள் எண்ணியதை நிறைவேற்றுவார்கள்.

50. பற்றுளம் விடுதல் தொகு

  • 491. பற்றுளம் பொருளினிற் பற்றுள நெஞ்சம்;
  • பற்றுளம் என்பது பொருட்களின் மீது ப்ற்றுக் கொண்ட உள்ளம் ஆகும்;
  • 492. ஈயா துண்ணா தெண்ணிவைத் திவறல்.
  • மேலும் அது தேவைப்படுபவர்களுக்கு எதையும் கொடுக்காமல் தானும் அநுபவிக்காமல் கருமித்தனம் செய்யும்.
  • 493. பற்றுள மரில்பல வற்றுளும் பெரிது.
  • பற்றுளம் குற்றங்களில் மிகப்பெரிய குற்றமாகும்.
  • 494. பற்றுளம் பல்வகைக் குற்றமு நல்கும்.
  • பற்றுளம் பல பாவங்கள் ஏற்படக் காரணமாக அமையும்.
  • 495. பற்றுளத் தாலருஞ் சுற்றமு நீங்கும்.
  • பற்றுளத்தால் சிறந்த உறவினர்களும் அவனை விட்டு விலகுவர்.
  • 496. பற்றுளத் தார்பொருண் முற்று மிழப்பர்;
  • பற்றுளத்தால் அவர்களிடம் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் இழப்பர்;
  • 497. அறம்புக ழின்பமெய் யறிவுவீ டிழப்பர்.
  • மேலும் அறம், புகழ், இன்பம், வீடுபேறு இவற்றையும் இழப்பர்.
  • 498. பற்றுளம் விடுத்தவர் பாரெலாங் கொள்வர்;
  • பொருட்கள் மீதான பற்றினை நீக்கியவர் உலகம் முழுவதையும் வெற்றி கொள்வர்;
  • 499. அறம்புக ழின்பமெய் யறிவுவீ டடைவர்.
  • மேலும் அறம், புகழ், இன்பம், வீடுபேறு இவற்றையும் அடைவர்.
  • 500. பற்றுளப் பேயினைச் செற்றுடன் றுரத்துக.
  • பலவிதத்திலும் தீமை தரக்கூடிய பற்றுளத்தைக் கோபித்துத் துரத்துதல் வேண்டும்.

51. தன்னைப் பேணல் தொகு

  • 501. தன்னைப் பேணுத றன்முதற் கடமை.
  • நம்மைப் பாதுகாப்பதே நமது முதல் கடமை ஆகும்.
  • 502. தன்னைப் பேணார் தாழ்வே யடைவர்.
  • ஒருவன் தன்னைப் பேணி பாதுகாக்காவிடில் அவன் துன்பம் அடைவான்.
  • 503. தன்னைப் பேணுவோர் தலைமை யெய்துவர்.
  • தன்னைப் பாதுகாக்கும் இயல்பு உடையவர் உயர்ந்த நிலையை அடைவர்.
  • 504. பேணல் பெருமை யெலாமுற முயறல்;
  • தன்னைப் பேணுதல் என்பது எல்லாப் பெருமைகளையும் அடைய முயலுதல்;
  • 505. உடல்பொருள் வினைபொழு திடனறிந் தின்புறல்;
  • மேலும் தமது உடலின் மூலமும் பொருளின் மூலமும் செயல்களின் மூலமும் காலமும் இடமும் ஏற்றதாக இருக்கும்பொழுது இன்பம் அநுபவித்தல்;
  • 506. பொருளு மொழுக்கமும் புகழும் பெருக்கல்;
  • மேலும் பொருள், நல்லொழுக்கம், புகழ் இவற்றை ஈட்டி அதிகரித்தல்;
  • 507. உடம்போர் யானையி னுரமுற வளர்த்தல்;
  • மேலும் நமது உடலை மிகுந்த வலிமை உடையதாக வளர்த்தல்;
  • 508. மனமுயர்ந் தவையெலாந் தினமுனப் பயிற்றல்;
  • மேலும் மனம் உயர்ந்த எண்ணங்களைத் தினமும் எண்ணுமாறு பயிற்றுவித்தல்;
  • 509. அறிவன் மலனொழித் தழுக்குறா தமைதல்;
  • மேலும் மனத்தில் இருந்து பொறாமையை நீக்கி மனத்தைத் தூய்மையாக அமைத்தல்;
  • 510. தன்னுயிர்த் துணையைத் தனைப்போ லாக்கல்.
  • மேலும் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தன்னைப் போல் பேணுதல் ஆகியவை ஆகும்.

52. உற்றாரைப் பேணல் தொகு

  • 511. உற்றார் பெற்றா ருறவினர் பலருமே.
  • உற்றார் என்பவர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பலரும் ஆவர்.
  • 512. தன்னுற வினரெலாந் தன்றுணைக் கன்னர்.
  • தன்னுடைய உறவினர் எல்லாம் தன்னுடைய வாழ்க்கைத் துணையின் நெருங்கிய உறவினர் ஆவர்.
  • 513. தன்றுணை யுறவினர் தனக்காங் கன்னர்.
  • வாழ்க்கைத் துணையின் உறவினர் எல்லாம் தன்னுடைய நெருங்கிய உறவினர் ஆவர்.
  • 514. தாயுந் தந்தையுந் தான்றொழுந் தகையர்.
  • நமது தாயும் தந்தையும் நாம் வணங்குவதற்கு உரிய உறவினர் ஆவர்.
  • 515. அவரைப் பேணுத லரும்பெருங் கடனே.
  • அவரைப் பாதுகாப்பது மிகச் சிறந்த உயர்ந்த கடமை ஆகும்.
  • 516. சோதர ருற்றுழி யாதர வாவர்.
  • சகோதரர் துன்பம் உற்ற நேரத்தில் ஆதரித்து உதவி செய்பவர் ஆவர்.
  • 517. அவரைப் பேணுத லாக்கம் பேணலே.
  • சகோதரரைப் பாதுகாப்பது நமது செல்வத்தைப் பாதுகாப்பது போன்று சிறந்தது ஆகும்.
  • 518. மற்றுளா ருந்தமைச் சுற்றுறப் பேணுக.
  • மற்றும் உள்ள உறவினர்களையும் பெற்றோர், சகோதரர் போல பேணிக் காக்க வேண்டும்.
  • 519. உற்றவர் பேணிற் பற்றல ரொழிவர்.
  • உறவினர்களைப் பேணிப்பாதுகாத்தால் எதிரிகளே இல்லாத நிலை ஏற்படும்.
  • 520. உற்றார் பெருகி னுரமிகப் பெருகும்.
  • உறவினர்கள் அதிகரித்தால் வலிமையும் அதிகரிக்கும்.

53. விருந்தினரைப் பேணல் தொகு

  • 521. விருந்தினர் முன்னர் தெரிந்திலாப் புதியர்.
  • விருந்தினர் என்பவர் முன்பு அறிமுகம் இல்லாத புதியவர் ஆவர்.
  • 522. விருந்தினர்ப் பேணுவார் பெரிந்தகை யோரே.
  • விருந்தினரைப் பாதுகாப்பவர்கள் பெருமை மிக்க குணங்களை உடையவர் ஆவர்.
  • 523. விருந்தின ருண்ணலம் பொருந்தினர்க் கொள்க.
  • விருந்தினரின் நலத்தை மிக கவனமாகப் பாதுகாத்தல் வேண்டும்.
  • 524. விருந்தினர்க் குணவுநன் மருந்தென வழங்குக.
  • அமிழ்து போன்ற உணவினை விருந்தினருக்கு வழங்குதல் வேண்டும்.
  • 525. உடையிடம் படுக்கை குடைகாப் புதவுக.
  • விருந்தினர்களுக்குத் தேவையான உடைகள், தங்குவதற்கு இடம், படுக்கை, குடை மற்றும் காலணிகள் இவற்றை அளித்தல் வேண்டும்.
  • 526. உளமறிந் தேனைய வளவறிந் தீக.
  • விருந்தினரின் உள்ளத்தை உணர்ந்து அவர்களுக்குத் தேவையானவற்றை தேவையான அளவு அளித்தல் வேண்டும்.
  • 527. இன்ப மவருற வின்சொல் வழங்குக.
  • விருந்தினரின் மனம் மகிழுமாறு இனிய சொற்களைப் பேசுதல் வேண்டும்.
  • 528. அவரறிந் தவையெலா மறிந்துளங் கொள்க.
  • அவர் கற்று அறிந்தவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
  • 529. அவருய ரொழுக்கெலா மறிந்துகைக் கொள்க.
  • அவருடைய உயர்ந்த குணங்களை எல்லாம் அறிந்து பின்பற்றுதல் வேண்டும்.
  • 530. செல்வுழி யுடன்சென் றுள்ளிடப் பிரிக.
  • அவர் செல்ல வேண்டிய பாதையில் அவருடன் சென்று எப்பொழுதும் அவர் நினைவுகள் இருக்குமாறு அவரை வழியனுப்புதல் வேண்டும்.

54. முன்னோரைப் பேணல் தொகு

  • 531. முன்னோர் துஞ்சிய தன்னுற வினரே.
  • முன்னோர் என்பவர் இறந்த நம் உறவினர் ஆவர்.
  • 532. அவரைப் பேணலா லாம்பல நலமே.
  • முன்னோர்களைப் பேணுவதால் நாம் பல நலன்களைப் பெறலாம்.
  • 533. அவரைப் பேணுமா றடிக்கடி யுள்ளல்;
  • முன்னோர்களைப் பேணுதல் என்பது அவர்களை அடிக்கடி நினைத்தல்;
  • 534. அவர்தொடங் கியவறந் தவறுறா தாற்றல்;
  • மேலும் அவர்கள் தொடங்கிய நற்செயல்களைச் சிறந்த முறையில் செயல்படுத்துதல்;
  • 535. அவர்செய வெண்ணிய வறங்களு மியற்றல்;
  • மேலும் அவர்கள் தாம் செய்ய நினைத்த நற்செயல்களையும் செய்தல்;
  • 536. அவர்நற் குணனெலா மறிந்துகைக் கொளல்;
  • மேலும் அவர்கள் நல்ல குணங்களை எல்லாம் அறிந்து பின்பற்றுதல்;
  • 537. அவர்நற் செயலெலா மழியாது நிறுத்தல்;
  • மேலும் அவர்கள் தொடங்கிய நற்செயல்கள் அழிந்து போகாதவாறு பாதுகாத்தல்;
  • 538. அவர்நற் பெயர்தம தருமகார்க் களித்தல்;
  • மேலும் அவர்கள் பெயர்களைத் தமது மக்களுக்கு இடுதல்;
  • 539. அவர்பெயர் விளங்கிட வறம்பல புரிதல்;
  • மேலும் அவர்களுக்குப் பெருமை ஏற்படும்படி நற்செயல்கள் பல செய்தல்;
  • 540. அவர்க்குறும் பிறவு மன்பொடு செய்தல்.
  • மேலும் அவர்கள் தொடர்புடைய மற்ற செயல்களையும் அன்போடு செய்தல் ஆகியவை ஆகும்.

55. புதல்வரைப் பேணல் தொகு

  • 541. புதல்வரே தம்மரும் பொருளென மொழிப.
  • ஒருவர் பெற்ற குழந்தைகளே அவரின் விலைமதிப்பற்ற செல்வம் ஆகும்.
  • 542. நன்றுசெய் புதல்வரா னரகறு மென்ப.
  • நல்ல அறங்களைச் செய்யும் குழந்தைகளால் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.
  • 543. பொருளுங் குடியும் புகழுமா மவரால்.
  • செல்வம், குடிப்பெருமை, புகழ் இவை நல்ல குழந்தைகளால் ஒருவனுக்குக் கிடைக்கிறது.
  • 544. துணைதரும் புதல்வர்க் கிணைபிற ராகார்.
  • தமக்கு நல் ஆதரவைத் தரும் புதல்வர்களுக்கு ஈடானவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை.
  • 545. பிறரைப் புதல்வராப் பெறுதலும் வழக்கே.
  • குழந்தையைத் தத்து எடுப்பதும் ஏற்றுக் கொள்ளத் தக்கது ஆகும்.
  • 546. மிகமிக வருந்தியும் புதல்வரை வளர்க்க.
  • மிகமிகக் கவனமாகக் குழந்தைகளை வளர்த்தல் வேண்டும்.
  • 547. இளமையி னவர்நல் லினமுறச் செய்க;
  • புதல்வர்கள் இளமைக் காலத்தில் நற்பண்புகள் உடையவர்களுடன் சேர்ந்து பழகுமாறு செய்தல் வேண்டும்;
  • 548. தக்கவா சிரியரைச் சார்ந்திடச் செய்க;
  • மேலும் பல சிறப்புகள் உடைய ஆசிரியர்களிடம் கல்வி கற்குமாறு செய்தல் வேண்டும்;
  • 549. கல்வியு மொழுக்கமுங் கைக்கொளச் செய்க;
  • மேலும் சிறந்த கல்வியும் ஒழுக்கமும் உடையவராகச் செய்தல் வேண்டும்;
  • 550. இல்வாழ் வரசுற வல்லுந ராக்குக.
  • மேலும் இல்வாழ்க்கை நடத்திடத் தேவையான எல்லாத் தகுதிகளையும் உடையவராகச் செய்தல் வேண்டும்.

56. அன்பு வளர்த்தல் தொகு

  • 551. அன்பெனப் படுவ தகத்தி னுருக்கம்.
  • அன்பு எனப்படுவது மனத்தினுள் ஏற்படும் நெகிழ்ச்சியாகும்.
  • 552. ஆர்வல ரூறுறி னதுகண் ணீராம்;
  • அன்புக்குரியவர் துன்பம் அடைந்தால் அன்பு கண்ணீராக வெளிப்படும்.
  • 553. அவரூ றொழிக்குந் தவலிலா முயற்சியாம்.
  • அன்பு அவரது துன்பத்தைக் கெடுதல் இல்லாத வகையில் நீக்க முயற்சி செய்யும்.
  • 554. ஆருயிர் பெற்றதிங் கன்புசெய் தற்கே.
  • நாம் அருமையான உயிரைப் பெற்றது அன்பு செய்வதற்கே.
  • 555. அன்புபா ராட்டற் காமிடந் தானே;
  • நாம் நம்மை நேசிக்க வேண்டும்.
  • 556. தன்னுயிர்த் துணையே தன்னரும் புதல்வரே;
  • தன்னுடைய உயிர் போன்ற வாழ்க்கைத் துணையையும் அருமையான குழந்தைகளையும் நேசிக்க வேண்டும்.
  • 557. தன்பெற் றோரே தன் சகோ தரரே;
  • தன்னுடைய பெற்றோர்களிடமும் சகோதரர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.
  • 558. தன்னா சிரியரே தன்னுற வினரே;
  • தன்னுடைய ஆசிரியரிடமும் உறவினர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.
  • 559. தன்னூ ராரே தன்னாட் டினரே;
  • தன்னுடைய ஊரைச் சேர்ந்தவர்களையும் நாட்டைச் சேர்ந்தவர்களையும் நேசிக்க வேண்டும்.
  • 560. மனித சமூகமே மன்னுயி ரனைத்துமே.
  • மனித குலம் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும்.

57. பொறுமை கொள்ளல் தொகு

  • 561. பொறுமை பிறர்மிகை பொறுக்கு நற்குணம்.
  • பொறுமை என்பது பிறரது குற்றங்களை பொறுத்துக் கொள்ளும் நல்ல குணம் ஆகும்.
  • 562. தன்னலங் கெடுங்காற் சகிப்பது பொறுமை.
  • நம்முடைய நலம் கெடும் பொழுதும் சகிப்பது பொறுமை ஆகும்.
  • 563. பொதுநலங் கெடுங்காற் பொறுப்பது பிழையே.
  • ஆனால் பொதுநலம் கெடும் பொழுது சகிப்பது பிழை ஆகும்.
  • 564. வறுமைப் பிணிக்குப் பொறுமைநன் மருந்தாம்.
  • வறுமை என்னும் நோய்க்குப் பொறுமை நல்ல மருந்தாக விளங்கும்.
  • 565. சிறுமையை வளர்ப்பது பொறுமையில் லாமை.
  • பொறுமையின்மை துன்பத்தைத் தரும்.
  • 566. பொறுமையைக் கொண்டவர் புவியெலாங் கொள்வர்.
  • பொறுமையைக் கொண்டவர் எல்லாவற்றையும் அடைவார்.
  • 567. பொறுமையை யிழந்தவர் புசிப்பவு மிழப்பர்.
  • பொறுமை இல்லாதவர் உண்ண உணவு கூட இல்லாமல் சிரமப்படுவார்.
  • 568. ஒறுத்தார்க் கொருகணத் தொருசிறி தின்பமாம்.
  • தனக்குத் தீமை செய்தவரைத் தண்டித்தவர்க்கு சிறிது நேரம் மட்டும் இன்பம் கிடைக்கும்.
  • 569. பொறுத்தார்க் கென்றும் பொன்றா வின்பமாம்.
  • பொறுத்தவர்க்கு என்றும் அழியாத இன்பம் கிடைக்கும்.
  • 570. ஒறுத்தார் சிறியர் பொறுத்தார் பெரியர்.
  • தனக்குத் தீமை செய்தவரைத் தண்டித்தவர்கள் சிறியவர்கள். அதனைப் பொறுத்துக் கொண்டவர்கள் பெரியவர்கள்.

58. ஒப்புர வொழுகல் தொகு

  • 571. ஒப்புர வூரா ரொப்பு நன்னடை.
  • உலகம் ஒப்புக் கொள்ளும் நன்னடத்தையே ஒப்புரவு ஆகும்.
  • 572. ஒப்புர வுயர்தர வொழுக்கத் தின்முதல்.
  • ஒப்புரவு உயர்தர ஒழுக்கத்தின் வேர் ஆகும்.
  • 573. ஒப்புர வொழுகுவார்க் குறவினர் பெருகுவர்.
  • பிறருக்கு உதவுபவர்களுக்கு உறவினர்கள் அதிகம் இருப்பார்கள்.
  • 574. ஒப்புர விலாரை வொருவருந் தழுவார்.
  • பிறருக்கு உதவி செய்யாதவர்களை யாரும் நாட மாட்டார்கள்.
  • 575. அறிஞரி னொப்புர வறவோர்க் குதவல்;
  • அறிவுடையவர்களின் ஒப்புரவு என்பது அறவழியில் நடப்பவர்களுக்கு உதவுவது ஆகும்.
  • 576. துறந்தா ரிறந்தார் துவ்வார்க் குதவல்;
  • பற்றைத் துறந்தவர்கள், இறந்தவர்கள், வறியவர்கள் ஆகியோர்க்கு உதவுவது ஆகும்.
  • 577. ஊர்ப்பொது நன்மைக் குழைத்தெலாஞ் செய்தல்;
  • பொதுநலத்திற்காக உழைப்பதும் ஒப்புரவு ஆகும்.
  • 578. ஊரார் நன்மை தீமைக் குதவுதல்;
  • மக்களின் சுபகாரியங்கள் மற்றும் அசுபகாரியங்களில் உதவுவதும் ஒப்புரவு ஆகும்.
  • 579. ஊரார் வேண்டுவ வுவந்துட னளித்தல்;
  • மக்களுக்குத் தேவையானவற்றை முழு மனதுடன் அளிக்க வேண்டும்.
  • 580. ஊரா ராணைக் குட்பட் டொழுகல்.
  • சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதும் ஒப்புரவு ஆகும்.

59. ஈகை புரிதல் தொகு

  • 581. இல்லார்க் கீவதே யீகை யென்ப.
  • வறியவர்களுக்குக் கொடுப்பதே ஈகை ஆகும்.
  • 582. மற்றையோர்க் கீதன் மாற்றிலா மடமை.
  • மற்றவர்களுக்குக் கொடுப்பது அறிவற்ற செயலாகும்.
  • 583. இல்லா ருள்ளு நல்லார்க் கீக.
  • வறியவர்களிலும் நற்பண்புடையவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
  • 584. பிறருக் கீதல் பிழையென வறிக.
  • நற்பண்பற்றவர்களுக்குக் கொடுப்பது குற்றம் ஆகும்.
  • 585. மடையரே மடியரே பிணியரே யில்லார்.
  • அறிவற்றவர்கள், சோம்பலுடையவர்கள், நோயுற்றவர்கள் ஆகியோரே உதவ வேண்டியவர்கள்.
  • 586. மடையர்க் கீக மதியெனு மொன்றே.
  • அறிவற்றவர்களுக்கு அறிவினை வழங்க வேண்டும்.
  • 587. மடியர்க் கீக தொழிலெனு மொன்றே.
  • சோம்பலுடையவர்களைத் தொழிலில் ஈடுபடுத்த வேண்டும்.
  • 588. மற்றையோர்க் கீக மருந்தூ ணிடனே.
  • நோயுற்றவர்களுக்கு மருந்து மற்றும் உணவு அளிக்க வேண்டும்.
  • 589. உடையவ ரீதற் குரிய ராவர்.
  • செல்வம் உடையவர்கள் அதை கொடுப்பதற்குத் தகுதி உடையவர்கள் ஆவர்.
  • 590. ஈகை புகழ்சிறப் பெல்லா நல்கும்.
  • ஈகை புகழ் மற்றும் எல்லாச் சிறப்புகளையும் கொடுக்கும்.

60. புகழ் செய்தல் தொகு

  • 591. புகழுய ருலகம் புகலு நன்மொழி.
  • புகழ் என்பது உயர்ந்த இவ்வுலகம் அளிக்கக் கூடிய பாராட்டுகள் ஆகும்.
  • 592. புகழ்செய் தவரே பொன்றாது நிற்பவர்;
  • புகழினை அடைந்தவர்களே நிலைத்து வாழ்பவர்கள் ஆவர்.
  • 593. அறமுத னாங்கு மாற்றிமெய் யடைந்தவர்.
  • அறம் முதலிய நான்கு செயல்களையும் செய்து இறைவனை அடைவார்கள்.
  • 594. புகழ்செய் யாரே பொன்றி யொழிந்தவர்;
  • புகழினை அடையாதவர்கள் அழிந்தவர்கள் ஆவர்.
  • 595. நான்கி லொன்றை நண்ணா திழிந்தவர்.
  • அவர்கள் அறம் முதலிய நான்கு செயல்களையும் செய்யத் தவறிய தாழ்ந்தவர்கள் ஆவர்.
  • 596.மெய்ப்புகழ் தருவன மெய்யிய லடைதல்;
  • இறை நிலையடைவது உண்மையான புகழைத் தரக் கூடியது ஆகும்.
  • 597. உலக முழுவது மொருங்கர சாளுதல்;
  • உலகம் முழுவதையும் ஆளுவது புகழைத் தரக் கூடியது ஆகும்.
  • 598.அறமுத னாங்கு மறிந்துசெய் துரைத்தல்;
  • அறம் முதலிய நான்கு செயல்களையும் செய்வதும் மற்றவர்களுக்கு அது பற்றிக் கூறுவதும் புகழைத் தரக் கூடியது ஆகும்.
  • 599.உற்றவர்க் கெல்லா முடனுவந் துதவல்;
  • சுற்றத்தார்க்கும் நண்பர்க்கும் முழுமனதுடன் தேவைப்பட்ட உடனே உதவுவது புகழைத் தரக் கூடியது ஆகும்.
  • 600.இல்லார்க் கெல்லா மீந்து வாழ்தல்.
  • வறியவர்களுக்குக் கொடுத்து வாழ்வது புகழைத் தரக் கூடியது ஆகும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=மெய்யறம்_(இல்வாழ்வியல்)&oldid=19815" இலிருந்து மீள்விக்கப்பட்டது