1. மாணவர் கடமை

தொகு
  • 1. மாண்பெற முயல்பவர் மாணவ ராவர்.
  • மாணவர் என்பவர் பல்வேறு சிறப்புக்ளைப் பெறமுயற்சி செய்பவர் ஆவார்.
  • 2. ஆணும் பெண்ணு மதுசெய வுரியர்.
  • ஆண்களும் பெண்களும் கல்வி கற்கும் உரிமையை உடையவர்கள் ஆவார்.
  • 3. இளமைப் பருவ மியைந்த ததற்கே.
  • கல்வி கற்பதற்கு இளமைப் பருவம் பொருத்தமானது ஆகும்.
  • 4. மற்றைய பருவமும் வரைநிலை யிலவே.
  • ஒருவன் எந்தப் பருவத்திலும் கல்வி கற்கலாம்.
  • 5. அவர்கடன் விதியிய லறிந்துநன் றாற்றல்.
  • அவருடைய கடமை நல்லொழுக்க விதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்வது ஆகும்.
  • 6. அன்னைதந் தையரை யாதியைத் தொழுதல்.
  • அவர் தாய், தந்தை, கடவுளைத் தொழுதல் வேண்டும்.
  • 7. தீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல்.
  • தீயவர்களின் நட்பைத் தவிர்த்து நல்லவர்களுடன் சேரவேண்டும்.
  • 8. தக்கவா சிரியராற் றன்னிய லறிதல்.
  • தகுந்த ஆசிரியரின் மூலம் தன்னுடைய இயல்பினை அறிதல் வேண்டும்.
  • 9. ஒழுக்கமுங் கல்வியு மொருங்குகைக் கொள்ளல்.
  • ஒரே சமயத்தில் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்துக் கல்வியும் கற்க வேண்டும்.
  • 10. இறைவ னிலையினை யெய்திட முயறல்.
  • (விருப்பு வெறுப்பு அற்ற உயர்ந்த நிலை) இறைவனின் நிலையினை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

2. விதியியல் அறிதல்

தொகு
  • 11. வினையின் விளைவே விதியென வந்துறும்.
  • நாம் செய்யும் செயல்களின் விளைவே நம்முடைய விதியாகி நம்மிடம் வந்து சேரும்.
  • 12. விதிசெய் கர்த்தா வினைசெய் யுயிரே.
  • ஆதலால் விதியைச் செய்யக்கூடிய மூலப்பொருள் செயல்களைச் செய்யக்கூடிய உயிரே ஆகும்.
  • 13. மெய்ப்பொருள் வினையை விளைத்துயிர்க் கீயும்.
  • இறைவன் வினைகளின் விளைவை உயிர்களுக்குக் கொடுக்கிறோம்.
  • 14. தீவினை விளைவிற் சேருவ துன்பம்.
  • தீவினைகளால் துன்பமே வந்து சேரும்.
  • 15. நல்வினை விளைவி னணுகுவ வின்பம்.
  • நல்ல செயல்களினால் இன்பமே வந்து சேரும்.
  • 16. தீவிதி வரவைச் செப்பு மடன்மடி.
  • நாம் அறிவின்மையும் சோம்பலும் உடையவர்களாக இருந்தால் தீயவிதியை அடைவோம்.
  • 17. நல்விதி வரவை நவிலுமறி வூக்கம்.
  • நாம் அறிவும் ஊக்கமும் உடையவர்களாக இருந்தால் நல்ல விதியை அடைவோம்.
  • 18. விதியை மாற்றிட வினையை மாற்றுக.
  • விதியை மாற்ற வேண்டும் எனில் செயல்களை மாற்றவேண்டும்.
  • 19. தீவிதி வேண்டிற் றீவினை புரிக.
  • தீயவிதி வேண்டும் எனில் தீய செயல்களைச் செய்ய வேண்டும்.
  • 20. நல்விதி வேண்டி னல்வினை புரிக.
  • நல்லவிதி வேண்டும் எனில் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.

3.தாய்தந்தையரைத் தொழுதல்

தொகு
  • 21. தாயுந் தந்தையுந் தம்முதற் றெய்வம்.
  • நம்முடைய முதல் தெய்வம் தாயும், தந்தையுமே ஆவர்.
  • 22. அவரிற் பெரியர் யாருமிங் கிலரே.
  • அவர்களைவிடப் பெரியவர் இவ்வுலகில் யாரும் இல்லை.
  • 23. அவரடி முப்பொழு தநுதினந் தொழுக.
  • நாள்தோறும் மூன்று பொழுதும் அவர்தம் அடிகளைத் தொழுதல் வேண்டும்.
  • 24. அவர்பணி யெல்லா மன்பொடு செய்க.
  • அன்புடன் அவர்களுக்குப் பணிவிடை செய்தல் வேண்டும்.
  • 25. அவருரை யெல்லா மறிந்துளங் கொள்க.
  • அவர்களின் அறிவுரைகளை அறிந்து கடைப்பிடித்தல் வேண்டும்.
  • 26. அவர்பொருள் செய்தற் காந்துணை புரிக.
  • அவர்கள் பொருள் ஈட்டுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்தல் வேண்டும்.
  • 27. அவர்நட் பெல்லா மவர்போற் கொள்ளுக.
  • பெற்றோர்களின் நண்பர்களை அவர்களைப் போன்றே மதிக்க வேண்டும்.
  • 28. அவர்பகை யெல்லா மவர்போற் றள்ளுக.
  • அவர்தம் பகைவர்களை அவரைப்போல் தவிர்க்க வேண்டும்.
  • 29. அவர்பெயர் விளங்கிட வறிவமைந் தொழுகுக.
  • அவர்கள் புகழ் விளங்குமாறு விவேகத்துடன் நடத்தல் வேண்டும்.
  • 30. இல்வாழ் வரசிற் கியைந்தவ ராகுக.
  • இல்வாழ்க்கைக்கு ஏற்ற தகுதிகளை உடையவராதல் வேண்டும்.

4.மெய்யைத் தொழுதல்

தொகு
  • 31. மெய்யுல கெல்லாஞ் செய்முதற் கடவுள்
  • உலகத்தை எல்லாம் உருவாக்கக் கூடிய முதன்மையான கடவுள் உண்மையே ஆகும்.
  • 32. உலகப் பொருட்கெலா முயிரென நிற்பது.
  • உலகத்தில் உள்ள பொருட்களுக்கு எல்லாம் உயிராக நிற்பது உண்மையே ஆகும்.
  • 33. அறிவா யெங்கணுஞ் செறிவா யமைந்தது.
  • உண்மை, உலகம் எல்லாம் ஞானமாக நிறைந்து விளங்குகிறது.
  • 34. பகுத்தறி யுயிர்வினைப் பயனதற் களிப்பது.
  • உண்மை, மனிதர்களின் செயல்களின் விளைவை அவர்களுக்கு அளிக்கிறது.
  • 35. உலகந் தனதரு ணலனுற வாள்வது.
  • உண்மை, தனது அருளினால் பல நலன்களை உலகத்திற்கு அளித்து ஆள்கிறது.
  • 36. தொழுமுறை யதனைமுப் பொழுது முள்ளல்.
  • எப்பொழுதும் மெய்ப்பொருளை நினைப்பதே அதனைத் தொழும் முறையாகும்.
  • 37. உள்ளியாங் குறங்கி யுள்ளியாங் கெழுதல்.
  • உண்மை, தான் நினைக்கும் வண்ணம் தன்னை மறைக்கும் மற்றும் தன்னை வெளிப்படுத்தும் இயல்புடையது.
  • 38. எம்மதக் கடவுளுந் தம்ம தெனக்கொளல்.
  • எல்லா மதக்கடவுளும் நம்முடைய கடவுள் என்று ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
  • 39. உலகி லதனடு வோர்ந்து நிற்றல்.
  • உலகத்தில் உண்மையின் நடுநிலைமையை அறிந்து கொள்ளவேண்டும்.
  • 40. அந்தண ராகி யதனிலை யடைதல். உண்மையின் நிலையை(விருப்பு வெறுப்பு அற்ற உயர்ந்த நிலை) அடைய வேண்டும்

5.தீயினம் விலக்கல்

தொகு
  • 41. தீதெலாந் தருவது தீயினத் தொடர்பே.
  • தீயவர்களின் நட்பு தீமையெல்லாம் தரும்.
  • 42. தீயவர் நல்லுயிர் சிதைக்குங் கொடியர்.
  • தீயவர் என்பவர் நல்லவர்களைக் கொடுமைப்படுத்தும் கொடியவர்கள்.
  • 43.பிறர்பொருள் வவ்வும் பேதை மாக்கள்.
  • பிறரின் பொருளைக் கவரும் இழிமக்கள்.
  • 44. துணைவரல் லாரை யணையுமா வினத்தர்.
  • தமது துணையன்றிப் பிறரோடும் உறவு கொள்ளும் விலங்கு கூட்டத்தினர்.
  • 45. அறிவினை மயக்குவ வருந்து மூடர்.
  • அறிவினை மயக்கக்கூடிய பொருட்களை உட்கொள்ளும் மூடர்கள். 46. புரைவளர் பொய்ம்மை புகலுந் தீயர்.
  • குற்றத்தை வளர்க்கும் இயல்புடையதாகிய பொய்யினைப் பேசும் தீயவர்கள்.
  • 47. அறனோ பொருளோ வழிக்குங் கயவர்.
  • அறத்தையும் பொருளையும் அழிக்கும் கீழ்மக்கள்.
  • 48. பசுவின் செயலைப் பதியின தென்பர்.
  • மனிதரின் செயல்களுக்கு இறைவனே காரணம் என்பவர்கள்.
  • 49. இத்திறத் தாரோ டிணங்கி நிற்போர்.
  • இதைப் போன்ற குணங்களை உடையவர்களுடன் நட்பு கொண்டிருப்பவர்கள் ஆகியோர் தீயவர்கள் ஆவர்.
  • 50. தீயின மெல்லா நோயென விலக்குக.தீயவர்களை நோயைப் போல் விலக்க வேண்டும்.

6. நல்லினஞ் சேர்தல்

தொகு
  • 51. நன்றெலாந் தருவது நல்லினத் தொடர்பே.
  • நல்லவர்களின் நட்பு நன்மைகளை எல்லாம் தரும்.
  • 52. நல்லவர் மெய்ந்நிலை நண்ணி நிற்போர்.
  • நல்லவர் என்பவர் உண்மையைச் சார்ந்து நிற்பவர்கள்.
  • 53. அகத்துற வுற்றுமெய் யறிந்து நிற்போர்.
  • உண்மையைப் புரிந்து பற்றற்ற உள்ளத்துடன் இருப்பவர்கள்.
  • 54. தவமு மொழுக்கமுந் தாங்கி நிற்போர்.
  • தவத்தையும் நல்லொழுக்கத்தையும் காத்து கள்.
  • 55. நன்னினைப் புரைசெயன் மன்னி நிற்போர்.
  • நல்ல நினைப்பு, சொல், செயல் மூன்றிலும் நிலைத்து நிற்பவரே நல்லினத்தார்.
  • 56. உலகிய லெல்லா முணர்ந்து நிற்போர்.
  • உலகத்தின் இயல்பை உணர்ந்து நிற்பவர்கள்.
  • 57.அறனோ பொருளோ வாக்கி நிற்போர்.
  • அறத்தையும் பொருளையும் படைப்பவர்கள்.
  • 58. பசுவினைப் பயன்பதி பயக்கு மென்போர்.
  • நமது செயல்களின் பயனை நமக்கு அளிப்பது இறைவன் என்று கூறுபவர்கள்.
  • 59. இத்திறத் தாரோ டிணங்கி நிற்போர்.
  • இதைப் போன்ற குணங்களை உடையவர்களுடன் நட்பு கொண்டிருப்பவர்கள் ஆகியோர் தீயவர்கள் ஆவர்.
  • 60. தினமு நல்லினந் தெரிந்துசேர்ந் திடுக.
  • நல்லவர்களைத் தேர்ந்து எடுத்து எப்பொழுதும் அவர்களுடன் இணைந்து இருக்க வேண்டும்.

7.ஆசிரியரை யடைதல்

தொகு
  • 61. அறிவினைத் தருபவ ராமா சிரியர்.
  • அறிவினைத் தருகின்றவர் ஆசிரியர் ஆவார்.
  • 62. இருபா லாருந் தருவதற் குரியவர்.
  • ஆண், பெண் இருவரும் ஆசிரியர் ஆவதற்குத் தகுதி உடையவர்கள் ஆவர்.
  • 63. அறிவு வகையா னாசிரி யர்பலர்.
  • பல வகையான அறிவினை வழங்குவதற்கு ஏற்ப ஆசிரியர்களும் பல வகையாக உள்ளனர்.
  • 64. எவர்க்கு மொழுக்க மின்றியமை யாதது.
  • ஆசிரியர்களுக்கு நல்லொழுக்கம் இன்றியமையாதது.
  • 65. அவர்கடன் மாணவ ரறிதிற னறிதல்.
  • மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறமையை அறிந்து கொள்வது ஆசிரியரின் கடமை ஆகும்.
  • 66. நல்வினை விரும்பு நல்லவர்க் கோடல்.
  • ஆசிரியர் என்பவர் நல்ல செயல்களைச் செய்பவராகவும் நல்ல நல்லவர்களின் நட்பை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
  • 67. மாணவர் தமைதம் மகாரெனப் பேணல்.
  • ஆசிரியர் தமது மாணவர்களை தனது மக்களைப் போல் காக்க வேண்டும்.
  • 68. அறிந்தவை யெல்லாஞ் செறிந்திடச் சொல்லல்.
  • தாம் அறிந்தவற்றை எல்லாம் மாணவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லுதல் வேண்டும்.
  • 69. சொல்லிய செய்யவும் வல்லுந ராக்குதல்.
  • ஆசிரியர் மாணவர்களை, அவர்கள் அறிந்தவற்றைச் செயல்படுத்தும் வல்லவர்களாகச் செய்தல் வேண்டும்.
  • 70. அறிந்தா சிரியரை யடைந்தெலா மறிக.
  • எல்லாவற்றையும் அறிந்த, சிறந்த ஆசிரியரை அடைந்து எல்லாவற்றையும் கற்றல் வேண்டும்.

8. தன்னை யறிதல்

தொகு
  • 71. தன்னை யறித றலைப்படுங் கல்வி.
  • தன்னை அறிந்து கொள்வதே முதன்மையான கல்வி ஆகும்.
  • 72. மனிதரி லுடம்பு மனமான் மாவுள.
  • மனிதரில் உடல், மனம், ஆன்மா ஆகியவை உள்ளன.
  • 73. தோன்முதற் பலவின் றொகுதிகா ணுடம்பு.
  • காணுகின்ற இந்த உடல் என்பது தோல் முதலிய பலவற்றின் தொகுதி ஆகும்.
  • 74. உடம்பெலா நிற்கு முயரறி வுரன்மனம்.
  • உடல் எல்லாம் பரவி நிற்கும் உயர்ந்த அறிவின் சக்தி மனம் ஆகும்.
  • 75. உடம்பு மனமுமா ளுயரறி வான்மா.
  • உடலையும் மனத்தையும் ஆளுகின்ற உயர் அறிவு ஆன்மா ஆகும்.
  • 76. ஆன்மா மனமுட றான்றன் வலிதனு.
  • நமது வலிமை என்பது நம் ஆன்மா, மனம், உடல் ஆகியவை ஆகும்.
  • 77. மெய்ம்முத லியமனன் வெளிச்செலும் வாயில்.
  • மனம் தன்னை மெய் முதலிய ஐம்பொறிகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறது.
  • 78. உடன்மனத் தின்பி னோடு மியலது.
  • உடல் மனத்தைப் பின்பற்றும் இயல்பு உடையது.
  • 79. மனமற வறநெறி மருவு மியலது.
  • மனம் நல்வழி, தீயவழி இரண்டையும் சார்ந்திருக்கும் இயல்பு உடையது.
  • 80. ஆன்மா மனத்தை யறநெறி யுய்ப்பது. ஆன்மா மனத்தை நல்வழியில் செலுத்துகிறது.

9.மனத்தை யாளுதல்

தொகு
  • 81. மனமுத் தொழில்செயு மாபெருஞ் சத்தி.
  • ஆக்குதல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களையும் செய்யவல்ல மிகப்பெரிய சக்தி மனம் ஆகும்.
  • 82. நினைக்குந் தொழிலை நிதமுஞ் செய்வது.
  • மனம் எப்பொழுதும் எண்ண அலைகளில் மூழ்கி இருக்கும் இயல்பினை உடையது.
  • 83. அறனு மறனு மறிதிற னிலாதது.
  • மனம் புண்ணிய பாவங்களைப் பிரித்து அறியும் திறனற்றது.
  • 84. அதனெறி விடுப்பி னழிவுடன் கொணரும்.
  • மனத்தை அதன் வழியில் செல்லவிட்டால் உடனடியாக அழிவை ஏற்படுத்தும்.
  • 85. அதனெறி விடாஅ தாளுத றங்கடன்.
  • மனத்தை அதன் வழியில் செல்லவிடாமல் அதனை ஆளுதல் நம் கடமை ஆகும்.
  • 86. தானதிற் பிரிந்து சந்தத நிற்க.
  • ஒருவன் தன் மனத்திலிருந்து எப்பொழுதும் பிரிந்து நிற்றல் வேண்டும்.
  • 87. எதையது நினைத்ததோ வதையுடன் காண்க.
  • மனம் எதை நினைக்கிறது என்பதை உடனடியாகக் கண்டறிய வேண்டும்.
  • 88. மறமெனில் விலக்குக வறமெனிற் செலுத்துக.
  • மனம் நினைப்பது தீயது என்றால் மனத்தை உடனடியாக அதிலிருந்து விலக்க வேண்டும்.மனம் நினைப்பது நல்லது என்றால் அதில் மனத்தைத் தொடர்ந்து செலுத்த வேண்டும்.
  • 89. பயனில வெண்ணிற் பயனதிற் றிருப்புக.
  • மனம் நினைப்பது பயனற்றது என்றால் உடனடியாக பயனுள்ளவற்றில் மனத்தைத் திருப்ப வேண்டும்.
  • 90. ஒன்றெணும் பொழுதுமற் றொன்றெண விடற்க.
  • ஒன்றை நினைக்கும் பொழுது மனம் மற்றொன்றை நினைக்க விடுதல் கூடாது.

10. உடம்பை வளர்த்தல்

தொகு
  • 91. உடம்பெலாஞ் செய்யு மொப்பிலாக் கருவி.
  • உடல் என்பது எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒப்பற்ற கருவி ஆகும்.
  • 92. உடம்பை வளர்த்தலஃ துரமுறச் செய்தல்.
  • உடம்பை வளர்த்தல் என்பது உடலை வலிமை உடையதாக மாற்றுவது ஆகும்.
  • 93. உடம்புநல் லுரமுறி னுலகெலா மெய்தும்.
  • உடல் நல்ல வலிமை பெற்றால் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ளும்.
  • 94. உரனிலா வுடம்பு வரனிலா மங்கை.
  • வலிமையற்ற உடல் என்பது வாழ்க்கைத் துணையற்ற வாழ்வு போன்றது.
  • 95. உளந்தொழில் செயற்கு முடலுரம் வேண்டும்.
  • நாம் எண்ணும் செயலைச் செய்வதற்கு உடல் வலிமை வேண்டும்.
  • 96. வளியன னீரதி லளவி னுறச்செயல்.
  • காற்று, அனல், நீர் ஆகியவை உடலில் சரியான அளவுடன் இருக்குமாறு செய்தல் வேண்டும்.
  • 97. மாறுபா டிலாவூண் மறுத்துமுப் பொழுதுணல்.
  • உடலுக்குப் பொருந்துகின்ற உணவை அளவுடன் மூன்று முறையாக உண்ண வேண்டும்.
  • 98. சிலம்பமெய்ப் பயிற்சிக டினந்தொறுஞ் செய்க.
  • சிலம்பாட்டம் போன்ற உடற்பயிற்சிகளைத் தினமும் செய்தல் வேண்டும்.
  • 99. பிணியுறி னுடன்பல தீர்த்தான் மருந்துணல்.
  • நோயுற்றால் உடனடியாக (பல நோய்களைக் குணமாக்கிய) அநுபவமுள்ள மருத்துவரிடம் வைத்தியம் செய்தல் வேண்டும்.
  • 100. நினைந்த படியுடல் வளைந்திட வளர்க்க.
  • நாம் எண்ணியதைச் செய்யும்படி உடலை வளர்த்தல் வேண்டும்.

11. கொலை விலக்கல்

தொகு
  • 101. கொலையுயிர் தனையத னிலையினின் றொழித்தல்.
  • கொலை என்பது உயிரினை உடலில் இருந்து நீக்குதல் ஆகும்.
  • 102. வாழு முயிர்நிதம் வருந்த வதைத்தல்.
  • வாழுகின்ற உயிர் வருந்துமாறு கொடுமைப்படுத்துவதும் கொலை ஆகும்.
  • 103. அச்செய றூண்டுத லச்செயற் குதவுதல்.
  • கொலை செய்வதைத் தூண்டுவதும் கொலை செய்வதற்கு உதவுவதும் கொலை ஆகும்.
  • 104. இயலு மிடத்தச் செயலைத் தடாமை.
  • நம்மால் முடியும் போது ஒரு கொலையினைத் தடுக்காவிடில் அதுவும் கொலையே.
  • 105. படுமுயி ரறிவுபோற் படிப்படி கொடிததாம்.
  • கொலை செய்யப்படும் உயிரின் அறிவு நிலைக்கேற்ப அதன் கொடுமை வேறுபடும்.
  • 106. கொலைபா தகங்களுட்டலையாய தென்ப.
  • கொலை, பாவங்களில் மிகக் கொடியது ஆகும்.
  • 107. அதுபல பிறப்பினு மருந்துயர் விளைக்கும்.
  • அது பல பிறவிகளிலும் கொடிய துன்பத்தை விளைவிக்கும்.
  • 108. தொழுநோய் வறுமையோ டழுநோய் பெருக்கும்.
  • தொழுநோய், வறுமை இவற்றோடு கண்ணீரைப் பெருக்கக் கூடிய துன்பங்களையும் ஏற்படுத்தும்.
  • 109. கொலைபுரி வார்க்கிங் கிலைபதி யருளே.
  • கொலை செய்பவர்களுக்கு இறைவன் அருள் கிட்டாது.
  • 110. கொலையினை விலக்கினார்க் கூற்றமும் விலக்கும். கொலையை விலக்கியவர்களிடம் இருந்து எமனும் விலகி நிற்பான்.

12. புலால் விலக்கல்

தொகு
  • 111. புலால்புழு வரித்தபுண் ணலால்வே றியாதோ?
  • புலால் என்பது புழுவால் அரிக்கப்பட்ட புண் ஆகும்.
  • 112. புண்ணைத் தொடாதவர் புலாலையுட் கொள்வதென்?
  • புண்ணைத் தொட விரும்பாதவர் புலாலை எப்படி உண்கிறார்?
  • 113. அதுவலி தருமெனின் யானையஃ துண்டதோ?
  • அது வலிமையைத் தரும் எனில் வலிமை உடைய யானை அதை சாப்பிடுகிறதா? சாப்பிடுவதில்லை.
  • 114. அரிவலி பெரிதெனி னதுநமக் காமோ?
  • சிங்கம் வலிமை உடையது என்றால் அந்த வலிமையினால் நமக்கென்ன பயன்? ஒரு பயனும் இல்லை.
  • 115. அன்றியும் வலியோ வறிவோ சிறந்தது?
  • அது மட்டுமில்லாமல் வலிமை, அறிவு இவற்றில் எது சிறந்தது?அறிவுதான் சிறந்தது.
  • 116. வலியோ டறிவினை மக்களூன் ற்ராதுகொல்?
  • புலால் வலிமையும் தராது. அறிவையும் தராது.
  • 117. மக்களூ னுணாது மறிமுத லுண்பதென்?
  • மனித மாமிசம் உண்ணாது ஆடு முதலியவற்றை ஏன் உண்கிறார்கள்?
  • 118. பொறியறி விலார்க்கு மறிமுதற் றாழ்ந்தவோ?
  • ஐம்பொறிகளின் மூலம் பெறக்கூடிய அறிவு அற்றவர்களைவிட ஆடு முதலியவை தாழ்ந்தவை அல்ல.
  • 119. அவைகொன் றுண்பார்க் கருளுண் டாமோ?
  • அவற்றக் கொன்று உண்பவர்களுக்கு இறையருள் கிட்டாது.
  • 120. அருளிலா ரருண்மயப் பொருணிலை யடைவரோ?
  • பிற உயிர்களிடத்து அன்பு செலுத்தாதவர், அன்பு மயமான இறைநிலையை அடைய மாட்டார்.

13. களவு விலக்கல்

தொகு
(களவு- திருட்டு) 
  • 121. களவுடை யவர்தரா துளமொடொன் றெடுத்தல்.
  • களவு என்பது பொருளுக்கு உரிமையானவர் கொடுக்காமல் நம் மனம் அறிய ஒன்றை எடுத்தல் ஆகும்.
  • 122. வஞ்சித்துக் கொளல் வாங்கிக் கொடாமை.
  • ஏமாற்றிப் பொருளை எடுத்தல், வாங்கியதைக் கொடுக்காமல் இருத்தல் ஆகியவையும் களவு ஆகும்.
  • 123. களவினை யேவுதல் களவிற் குதவுதல்.
  • களவினைத் தூண்டுதல், களவு செய்ய உதவுதல் ஆகியவையும் களவு ஆகும்.
  • 124. தடுக்கக் கூடிய விடத்ததைத் தடாமை.
  • தடுக்க முடிந்த போதும் களவினைத் தடுக்காவிடில் அதுவும் களவு ஆகும்.
  • 125. உடையவர் நலத்தையொத் துருக்கொளு மிம்மறம்.
  • இந்த செயலுக்கான தண்டனை பொருளை இழந்தவர்களின் நிலைமையைப் பொறுத்து மாறுபடும்.
  • 126. களவினைக் கள்ளரு மெள்ளுவர் பிறர்முன்.
  • களவு செய்பவர்களும் மற்றவர்களிடம் களவுத் தொழில் இழிவானது என்றே கூறுவர்.
  • 127. கள்ளுநர் தடுப்பவர்க் கொல்லவும் படுவர்.
  • களவு செய்பவர்கள், தங்களுடைய களவினைத் தடுப்பவர்களைக் கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள்.
  • 128. கள்ளுந ருடையராற் கொல்லவும் படுவர்.
  • பொருளுக்கு உரிமையாளர்களால் களவு செய்பவர்கள் கொலை செய்யப்படும் நிலையும் ஏற்படலாம்.
  • 129. களவினாற் பலபிறப் பளவிலா வறுமையாம்.
  • களவு பல பிறப்புகளுக்கு மிகுந்த வறுமையைக் கொடுக்கும்.
  • 130. களவினை விலக்கினார்க் களவிலாச் செல்வமாம். களவு செய்யாமல் இருந்தால் அளவற்ற செல்வம் கிட்டும்.

14. சூது விலக்கல்

தொகு
  • 131. சூதுவஞ் சனையதற் கேதுவாங் கருவி.
  • சூதாட்டம் ஏமாற்றுவதற்கு ஏற்ற ஒரு கருவி ஆகும்.
  • 132. பந்தயங் குறிக்கும் பலவிளை யாடல்.
  • சூதாட்டம் என்பது பந்தயம் வைத்து விளையாடும் பலவகை விளையாட்டுகள் ஆகும்.
  • 133. அதுபொரு டருதல்போ லனைத்தையும் போக்கும்.
  • சூதாட்டத்தில் ஈடுபடும்போது முதலில் பொருள் வருவது போலத் தோன்றினாலும் அது பின்னர் எல்லாவற்றையும் இழக்கச் செய்யும்.
  • 134. உற்றவூ ணுடைமுதல் விற்றிடச் செய்யும்.
  • சூதாட்டம், ஒருவன் தனது உணவு, உடை முதலியவற்றைக் கூட விற்கும்படியான நிலைமையை ஏற்படுத்தும்.
  • 135. பொறையு மறிவும் புகழுங் கெடுக்கும்.
  • சூதாட்டம் ஒருவனின் பொறுமை, அறிவு, புகழ் இவற்றை அழிக்கும் தன்மை உடையது.
  • 136. சூதர்தஞ் சேர்க்கையாற் சூதுகைப் புக்கிடும்.
  • சூதாடுபவர்களின் நட்பு சூதாடும் பழக்கத்தை ஏற்படுத்தும்.
  • 137. சூதரா தியரைத் தூர நிறுத்துக.
  • அதனால் சூதாடுபவர்களிடம் இருந்து நாம் விலகியே இருக்க வேண்டும்.
  • 138. காலங் கழித்திடக் கவறுகை யெடுப்பர்.
  • பொழுதுபோக்கு என்று எண்ணி சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவர்.
  • 139. அதனினு மாலமுண் டழிதனன் றென்க.
  • சூதாட்டத்தில் ஈடுபடுவதைவிட கொடிய விஷத்தை உண்டு அழிதல் நல்லது ஆகும்.
  • 140. கவறுருள் களத்தைக் கனவினுங் கருதேல்.
  • சூதாடும் இடத்தைக் கனவினில் கூட நினைத்தல் கூடாது.

15. இரவு விலக்கல்

தொகு
(இரவு-யாசித்தல்)
  • 141. இரவென் பதுபிறர் தரவொன் றேற்றல்.
  • இரவு என்பது பிறர் நமக்குத் தருவதை ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.
  • 142. இரவினிற் றாழ்ததொன் றிலையென மொழிப.
  • இரத்தலை விட தாழ்ந்தது வேறொன்றில்லை என்று கூறலாம்.
  • 143. இரவினிற் களவு மேற்றமா மென்ப.
  • இரத்தலை விட களவு செய்தல் சிறந்தது என்று கூறலாம்.
  • 144. இரந்திடப் படைத்தவன் பரந்தழி கென்ப.
  • உயிர்களை இரந்து வாழுமாறு படைத்தவன் (இறைவன்) பல இடங்களுக்கும் சென்று இரந்து அழிவானாகுக.
  • 145. இரந்துயிர் வாழ்தலி னிறத்தனன் றென்ப.
  • இரந்து உயிர்வாழ்வதை விட இறத்தல் சிறந்தது ஆகும்.
  • 146. அவருரை யெல்லா மழியா வுண்மை.
  • இவை எல்லாம் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய(அழியாத) உண்மை ஆகும்.
  • 147. இரந்துயிர் வாழ்தலிங் கிழிவினு ளிழிவே.
  • இரந்து உயிர் வாழ்வது இழிவான செயல்களுக்குள் இழிவானது ஆகும்.
  • 148. தமக்குவாழ் வாரதிற் சாதலு நன்றாம்.
  • தமக்காக இரந்து வாழ்வதை விட இறத்தல் சிறந்தது ஆகும்.
  • 149. பிறர்க்குவாழ் வாரதாற் பிழைத்தலு நன்றாம்.
  • பிறருக்காக இரந்து வாழ்பவர்கள் உயிர் வாழ்வது சிறந்தது ஆகும்.
  • 150. அவரு மதைவிடி னரும்பெருஞ் சிறப்பாம்.
  • பிறருக்காக இரப்பவர்களும் இரத்தல் தொழிலை விட்டுவிட்டால் அது மிகவும் மதிப்பிற்குரிய சிறந்த செயலாகும்.

16. மயக்குவ விலக்கல்

தொகு
(மயக்குவ-போதைப்பொருட்கள்) 
  • 151. மயக்குவ வறிவினை மயக்கும் பொருள்கள்.
  • மயக்குவ என்பவை அறிவினை மயக்கும் பொருட்கள் ஆகும்.
  • 152. அவைகள் கஞ்சா வபின்முத லாயின.
  • அவை கஞ்சா, அபின் போன்றவை.
  • 153. அறிவுதம் முயிரே யாதியே யுலகே.
  • நம்முடைய உயிர், கடவுள், உலகம் எல்லாமாக அறிவுதான் உள்ளது.
  • 154. அறிவினை மயக்குத லவற்றை யழித்தலே.
  • அறிவினை மயக்குவது என்பது இம்மூன்றையும் அழிப்பது ஆகும்.
  • 155. அறிவினை மயக்குவா ரருமறம் புரிவர்.
  • அறிவினை மயக்கும் பொருட்களை உட்கொண்டவர் தீய செயல்களைச் செய்வார்.
  • 156. மயக்குவ சிலபிணி மாய்க்குமென் றுண்பர்.
  • இவ்வகைப் பொருட்கள் சில நோய்களைக் குணமாக்கும் என்று அதனை உண்பார்கள்.
  • 157. மயக்காத வுண்டவை மாய்த்தலே யுத்தமம்.
  • இவற்றை உண்ணாமல் அந்த நோய்களைக் குணமாக்குவதே மிகச் சிறந்தது ஆகும்.
  • 158. மயக்குவ வலியினை வழங்குமென் றுண்பர்.
  • இவை வலிமையைக் கொடுக்கும் என்று சிலர் உண்ணுவர்.
  • 159. வலியினை வழங்கல்போல் வலியெலாந் தொலைக்கும்.
  • இவை வலிமையைக் கொடுப்பது போல் வலிமையை எல்லாம் அழிக்கும்.
  • 160. ஆதலான் மயக்குவ வற்பமுங் கொண்டிடேல்.
  • ஆதலால் அறிவினை மயக்கும் பொருட்களை சிறிதளவு கூட உண்ணுதல் கூடாது.

17. பொய்ம்மை விலக்கல்

தொகு
  • 161. நிகழா ததனை நிகழ்த்துதல் பொய்ம்மை.
  • நடக்காததைச் சொல்வது பொய் ஆகும்.
  • 162. நிகழ்வதை யங்ஙன நிகழ்த்துதல் வாய்மை.
  • நடந்ததை அவ்வாறே சொல்வது உண்மை ஆகும்.
  • 163. தீமையைத் தருமெனின் வாய்மையும் பொய்ம்மையாம்.
  • தீய விளைவைத் தரும் எனில் உண்மை என்பது பொய்க்குச் சமம் ஆகும்.
  • 164. புரைதீர் நலந்தரின் பொய்ம்மையும் வாய்மையாம்.
  • குற்றமில்லாத நன்மையைத் தரும் எனில் பொய்யும் உண்மைக்குச் சமம் ஆகும்.
  • 165. வாய்மையைத் தருவதே வாயென வறிக.
  • வாய்மை(உண்மை)யைப் பேசுவதால் மட்டுமே "வாய்" என்ற உறுப்பு "வாய்" என்று அறியப்படும்.
  • 166. மற்றவை யெலாம்வெறும் வாயிலென் றறிக.
  • வாய்மை(உண்மை)யைப் பேசாதபோது "வாய்", உணவு உண்ணுவதற்கான ஒரு வழி மட்டுமே ஆகும்.
  • 167. வாய்மை யகத்தது தூய்மையை வளர்க்கும்.
  • உண்மை மனத் தூய்மையை வளர்க்கும்.
  • 168. பொய்ம்மை யகத்தது புரையினை வளர்க்கும்.
  • பொய்ம்மை, மனத்தில் குற்றத்தினை வளர்க்கும்.
  • 169. பொய்ம்மையை யாள்பவர் புன்னர காழ்வர்.
  • பொய் பேசுபவர்கள் நரகத்தில் விழுந்து துன்பம் அடைவார்கள்.
  • 170.பொய்ம்மை யொரீஇயவர் புகழ்வீ டடைவர்.
  • பொய்யினை நீக்கியவர்கள் புகழுக்கு உரிய இடமான சொர்க்கத்தை அடைந்து இன்பம் அடைவார்கள்.

18. புறஞ்சொல்லல் விலக்கல்

தொகு
  • 171. புறஞ்சொலல் பிறரைப் புறத்திழித் துரைத்தல்.
  • புறஞ்சொல்லல் என்பது ஒருவரை அவர் இல்லாதபோது இழிவாகப் பேசுதல் ஆகும்.
  • 172. அறங்கொலு மறத்திற் புறஞ்சொலல் கொடிது.
  • புறஞ்சொல்லல் அறத்தைக் கொல்லும் தீய செயல்களில் மிகக் கொடியது ஆகும்.
  • 173. புறஞ்சொலல் பொய்முதற் புரையெலாம் வளர்க்கும்.
  • புறஞ்சொல்லல் பொய் முதலான குற்றங்களை வளர்க்கும் தன்மை உடையது.
  • 174. புறஞ்சொலல் புறனெலாம் பொருபகை யாக்கும்.
  • புறஞ்சொல்லல் ஒருவனுக்கு விரோதிகள் ஏற்படக் காரணமாக அமையும்.
  • 175. புன்மகார் செயல்களுட் புறஞ்சொல லொன்று.
  • புறஞ்சொல்லல் கீழ்மக்களின் குணங்களுல் ஒன்று ஆகும்.
  • 176. புறஞ்சொலு நாவின ரறஞ்சொலல் வஞ்சம்.
  • புறஞ்சொல்லுபவர்கள் அறத்தினைப் பேசுவது ஏமாற்று வேலை ஆகும்.
  • 177. புறஞ்சொலு நாவினர்க் கறஞ்சொலன் மடமை.
  • புறஞ்சொல்லும் இயல்பு உடையவர்களுக்கு அறத்தினைப்பற்றி எடுத்துக்கூறுவது அறிவற்ற செயல் ஆகும்.
  • 178. புறஞ்சொலல் கேட்டலும் புன்மையென் றறிக.
  • புறஞ்சொல்லலைக் காதால் கேட்பதும் இழிவான செயல் ஆகும்.
  • 179. புறஞ்சொலி வாழ்தலிற் பொன்றனன் றென்ப.
  • புறம் பேசி உயிர் வாழ்வதைவிட இறத்தல் சிறந்தது ஆகும்.
  • 180. ஆதலாற் புறஞ்சொல லடியொடு விடுக.
  • புறஞ்சொல்லலை முற்றிலுமாக விட்டுவிடுதல் வேண்டும்.

19. பயனில் சொல் விலக்கல்

தொகு
  • 181. பயனில்சொல் யார்க்கும் பயன்றராச் சொல்லே.
  • பயனில் சொல் என்பது யாருக்கும் பயன் தராத பேச்சு ஆகும்.
  • 182. அறியா மையினின் றச்சொல் பிறக்கும்.
  • பயனற்ற பேச்சு அறியாமையினாலேயே ஏற்படுகிறது.
  • 183. அறியா மையினை யச்சொல் வளர்க்கும்.
  • பயனற்ற பேச்சு அறியாமையை வளர்க்கும் இயல்பு உடையது.
  • 184. அறிவினர் நட்பெலா மச்சொல் குறைக்கும்.
  • அறிவுடையவர்களின் நட்பை பயனற்ற பேச்சு குறைக்கும் இயல்பு உடையது.
  • 185. அறிவிலார் நட்பினை யச்சொல் பெருக்கும்.
  • பயனற்ற பேச்சு அறிவற்றவர்களின் நட்பை அதிகரிக்கும் இயல்பு உடையது.
  • 186. பயனுள சொல்லினைச் சொலவிடா தச்சொல்.
  • பயனற்ற பேச்சு பயனுள்ள பேச்சினை தடுக்கும் இயல்பு உடையது.
  • 187. பயனுள செயலினைச் செயவிடா தச்சொல்.
  • பயனற்ற பேச்சினால் பயனுள்ள செயல்களைச் செய்ய இயலாத நிலை ஏற்படும்.
  • 188. பயனில சொல்லுவர் நயனுறா ரென்றும்.
  • பயனற்ற சொற்களைப் பேசுபவர்கள் ஒரு நாளும் இன்பம் அநுபவிக்க மாட்டார்கள்.
  • 189. பயனில சொல்பவர் பதடியென் றறைப.
  • பயனற்ற சொற்களைப் பேசுபவர்கள், மனிதர்களில் பதர் போன்றவர்கள்.(அவர்களால் ஒரு பயனும் ஏற்படாது)(பதர்-நெல்லில் உமி மட்டும் இருக்கும். உள்ளே அரிசி இருக்காது)
  • 190. பயனில விலக்கிப் பயனுள சொல்லுக.
  • அதனால் பயனற்றவற்றை நீக்கிப் ப்பயனுள்ளவற்றை மட்டும் பேச வேண்டும்.

20. அழுக்கா றொழித்தல்

தொகு
(அழுக்காறு- பொறாமை)
  • 191. அழுக்கா றயலா ராக்கத்திற் புழுங்கல்.
  • அழுக்காறு என்பது அடுத்தவர் பெற்றுள்ள செல்வத்தை நினைத்து உள்ளூர வருந்துதல் ஆகும்.
  • 192. அழுக்கா றுறலினோ ரிழுக்கா றிலதே.
  • அழுக்காறு கொள்வதைவிடப் பெரிய குற்றம் இல்லை.
  • 193. அழுக்கா றதுபோ லழிப்பதொன் றின்றே.
  • பொறாமையைப் போல் அழிவை ஏற்படுத்தக் கூடியது வேறு ஏதும் இல்லை.
  • 194. அழுக்கா றுளவரை யொழுக்கா றிலையே.
  • பொறாமை உள்ளவனிடத்தில் நல்லொழுக்கம் இருக்க இயலாது.
  • 195. அழுக்கா றுடையார்க் காக்கமின் றாகும்.
  • அழுக்காறு கொண்டவனுக்கு செல்வம் இல்லாத நிலைமை ஏற்படும்.(வறுமை ஏற்படும்)
  • 196. வறுமையும் பசியுஞ் சிறுமையு முளவாம்.
  • அழுக்காறு கொண்டவனுக்கு ஏழ்மை, பசி, துன்பம் ஆகியவை ஏற்படும்.
  • 197. அழுக்கா றுடைமைகீழ் வழுக்கா றென்ப.
  • அழுக்காறு கொள்வதைப் போல் இழிவான செயல் ஏதும் இல்லை.
  • 198. விலங்குகளு மழுக்கா றிலங்குத லில்லை.
  • விலங்குகளுக்கு இடையே பொறாமை நிலவுவதில்லை.
  • 199. அறிவுடை மக்க ளதுகொளல் புதுமை.
  • அப்படி இருக்க, சிந்திக்கத் தெரிந்த மனிதர் பொறாமை கொள்ளுதல் வியப்புக்கு உரியது ஆகும்.
  • 200. அழுக்கா றுளத்துறா தநுதின மோம்புக.
  • ஆதலால் அழுக்காறு உள்ளத்தினுள் ஏற்படாதவாறு அநுதினமும் மனத்தினைக் காத்தல் வேண்டும்.

21. எண்ணெழுத் தறிதல்

தொகு
  • 201.எண்ணெனப் படுவ தெண்ணுநற் கணிதம்.
  • எண் என்பது கணிதம் ஆகும்.
  • 202.எழுத்தெனப் படுவ திலக்கிய மிலக்கணம்.
  • எழுத்து என்பது இலக்கியமும் இலக்கணமும் ஆகும்.
  • 203.எண்ணு மெழுத்துங் கண்ணென மொழுப.
  • எண்ணும் எழுத்தும் நம் இரு கண்கள் போன்று மிக இன்றியமையாதது என்று கூறலாம்.
  • 204.எண்ணறி யார்பொரு ளெய்துத லரிது.
  • எண் அறியாதவர்கள் பொருள் ஈட்டுவது அரிதான செயல் ஆகும்.
  • 205.எழுத்தறி யார்பிற வெய்துத லரிது.
  • எழுத்து அறியாதவர்கள் மற்றவற்றை அடைதல் அரிதான செயல் ஆகும்.(மற்றவை- அறம், இன்பம், வீடுபேறு)
  • 206.எண்ணெழுத் தறிந்தா ரெய்துவர் நான்கும்.
  • எண்ணும் எழுத்தும் அறிந்தவர்கள் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கையும் அடைவார்கள்.
  • 207.எண்ணு மெழுத்து மிடைவிடா தாள்க.
  • எண்ணையும் எழுத்தையும் இடைவிடாது பயில வேண்டும்.
  • 208.அவைதாய் மொழிகொளி னதைமுன் பறிக.
  • தாய்மொழியில் உள்ளவற்றை முதலில் கற்க வேண்டும்.
  • 209.பின்பவை மிக்குள பிறமொழி யறிக.
  • பின்பு இவை அதிகம் உள்ள பிறமொழியினைக் கற்றல் வேண்டும்.
  • 210.அறிவதைக் கசடற வறிந்துகொண் டொழுகுக.
  • கற்றுக் கொள்வதை முழுமையாகக் கற்றுக்கொண்டு அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

22. தொழில் அறிதல்

தொகு
  • 211. மெய்யுறுப் புக்கொடு செய்வது தொழிலே.
  • தொழில் என்பது உடலால் உழைப்பது ஆகும்.
  • 212. தொழிலா லுலகந் தோன்றிநிற் கின்றது.
  • உழைப்பினால் உலகம் அழியாமல் இருக்கின்றது.
  • 213. தொழிலிலை யெனிலுல கழிவது திண்ணம்.
  • தொழில் இல்லை எனில் உலகம் அழிந்து போவது உறுதி ஆகும்.
  • 214. தொழிலிலார் வறுமையுற் றிழிவெலா மடைவர்.
  • தொழில் செய்யாதவர்கள் வறுமை நிலை அடைந்து அவமானப்படுவர்.
  • 215. அரியநற் றொழில்சில வறிதல்யார்க் குங்கடன்.
  • உயர்ந்த, சிறந்த தொழில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளுதல் அனைவரின் கடமை ஆகும்.
  • 216. படைக்கல மனைத்தும் பண்பொடு பயில்க.
  • படைக்கலன்களை இயக்குவதைக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
  • 217. படைவகுத் தமர்செயு நடையெலா மறிக.
  • போர் செய்யும் முறைகளை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
  • 218. புவிகடல் விண்மிசை போவவூர்ந் தறிக.
  • பூமி, கடல், வானம் இவற்றில் பயணம் செய்யக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
  • 219. எவ்வகை யுருவு மெடுத்திடப் பழகுக.
  • தம் உருவத்தை மறைத்து வேறு உருவத்தில் தோன்றிடப் பழகுதல் வேண்டும்.
  • 220. உழவுவா ணிகங்கைத் தொழில்சில வறிக.
  • உழவுத்தொழில், வாணிகம், கைத்தொழில் முதலியவற்றைக் கற்றல் வேண்டும்.

23. திருந்தச் செய்தல்

தொகு
  • 221.திருந்தச் செயலியல் பொருந்தச் செய்தல்.
  • திருந்தச் செய்தல் என்பது சிறப்பான முறையில் ஒரு செயலைச் செய்வது ஆகும்.
  • 222. அழகு நிறைவு மமைவுறச் செய்தல்.
  • திருந்தச் செய்தல் என்பது பொருத்தமான முறையில் முழுமையாகச் செய்வது ஆகும்.
  • 223.திருந்தச் செய்தலே செய்தற் கிலக்கணம்.
  • ஒரு செயலைச் செய்யும் முறையானது திருந்தமாகச் செய்வதே ஆகும்.
  • 224.திருந்தச் செயல்பல சீர்களைக் கொணரும்.
  • திருந்தமாகச் செய்வது பல பெருமைகளை ஏற்படுத்தும்.
  • 225. திருத்தமில் செயலாற் சீர்பல நீங்கும்.
  • திருத்தமில்லாத செயல்களால் சிறுமைகள் ஏற்படும்.
  • 226. சிறுதொழி லெனினுந் திருந்தவே செய்க.
  • சிறிய தொழிலாக இருந்தாலும் திருந்தமாகச் செய்தல் வேண்டும்.
  • 227. சிறுதொழிற் றொகுதியே பெருந்தொழி லாவது.
  • சிறு தொழில்களின் தொகுப்பே பெருந்தொழில் ஆகும்.
  • 228. செய்யும் தொழிலிலே சிந்தயைச் செலுத்துக.
  • நாம் செய்யும் தொழிலில் நம் சிந்தனையை முழுமையாகச் செலுத்துதல் வேண்டும்.
  • 229. தொழிலினைக் கியமாய்த் துரிதமாகச் செய்க.
  • தொழிலை முறையாக விரைவாகச் செய்தல் வேண்டும்.
  • 230.பிறர்செய் தொழிற்குப் பின்னிடா வகைசெயல்.
  • செய்யும் தொழிலை மற்றவர்களைவிடச் சிறப்பாகச் செய்தல் வேண்டும்.

24. நன்றி யறிதல்

தொகு
  • 231. நன்றியென் பதுபிறர் நல்கிடு முதவி.
  • மற்றவர்கள் நமக்குச் செய்த யை நினைவு கூர்தலே நன்றி ஆகும்.
  • 232. உறவினர் முதலியோ ருதவுதல் கடனே.
  • உறவினர் முதலியவர்களுக்கு உதவுதல் நம் கடமை ஆகும்.
  • 233. பிறர்செயு முதவியிற் பெரிதொன் றின்றே.
  • பிறர் நமக்குச் செய்யும் உதவியைவிட பெரியது ஒன்றுமில்லை.
  • 234. உதவியிற் சிறந்த துற்றுழி யுதவல்.
  • துன்பம் ஏற்பட்ட சமயத்தில் செய்யப்படும் உதவியே சிறந்த உதவி ஆகும்.
  • 235. உயர்ந்தது கைம்மா றுகவா துதவல்.
  • உதவியில் உயர்ந்தது பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் உதவி ஆகும்.
  • 236. அறிதலெஞ் ஞான்று மதைநினைந் தொழுகல்.
  • நன்றி அறிதல் என்பது செய்த உதவியை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்வது ஆகும்.
  • 237. உதவியோர் குடியெலா முயர்வுற வுள்ளல்.
  • நமக்கு உதவி செய்தவர் குடும்பத்துடன் உயர்வு பெற எண்ணுதல் நன்றி அறிதல் ஆகும்.
  • 238. உதவியோ ரறவுரை யுடனிறை வேற்றல்.
  • உதவி செய்தவர்களின் அறிவுரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
  • 239. உதவியோர் மிகைசெயி னுடனதை மறத்தல்.
  • உதவி செய்தவர்கள் ஏதேனும் குற்றங்களைச் செய்தால் உடனடியாக அதை மறந்துவிடுதல் வேண்டும்.
  • 240.அறிதற் களவுண் டுதவி சொலக்கெடும்.
  • உதவி பெற்றவர் உதவியைப் பற்றிப் பாராட்டிப் பேசலாம். ஆனால் உதவி செய்தவர் உதவியைப்பற்றிப் பேசுதல் கூடாது.

25. நடுவு நிலைமை

தொகு
  • 241. நடுவு நிலைமைதன் னடுவு ணிற்றல்.
  • நடுவு நிலைமை என்பது பாரபட்சம் பார்க்காத தன்மை ஆகும்.
  • 242. பிறவுயிர் நடுவள விறனடு வின்மை.
  • பிற உயிர்கள் நடுங்குமாறு செய்வது நடுவின்மை ஆகும்.
  • 243. நடுவறப் பொருளி னடுனிற் கும்பொருள்.
  • அறமாகிய பொருளின் மையமாக விளங்குவது நடுவு நிலைமை ஆகும்.
  • 244. அறனெலா நிற்பதற் கஃதா தாரம்.
  • எல்லா அறங்களுக்கும் அடிப்படை நடுவு நிலைமையி நிற்றலே ஆகும்.
  • 245. அதுசிறி தசையி னறனெலா மழியும்.
  • நடுவு நிலைமையில் இருந்து சிறிதளவேனும் மாறுவது அறத்தை எல்லாம் அழித்துவிடும்.
  • 246. நடுவினு ணிற்பவர் நலனெலாம் பெறுவர்.
  • நடுவு நிலைமையில் நிற்பவர் எல்லா நலங்களையும் பெறுவார்கள்.
  • 247. நடுவினை விடாரை நானிலம் விடாது.
  • நடுவு நிலைமையில் நிற்பவரை இந்த உலகம் ஒரு நாளும் கைவிடாது.
  • 248. நடுவிகந் தாருடன் கெடுவது திண்ணம்.
  • நடுவு நிலைமை நீங்கியவர் அழிந்து போவது உறுதி.
  • 249. நடுவிகந் தாரை நரகமும் விடாது.
  • நடுவு நிலைமை நீங்கியவர் நரகத்தில் வீழ்வார்கள்.
  • 250. ஆதலா னடுவி லசையாது நிற்க.
  • ஆதலால் நடுவு நிலைமையில் உறுதியாக நிற்றல் வேண்டும்.

26. அடக்க முடைமை

தொகு
  • 251. அடக்க மனம்புலத் தணுகா தடக்கல்.
  • அடக்கம் என்பது மனத்தை ஐம்புலன்களில் இருந்தும் காத்தல் ஆகும்.
  • 252.அறிவினர்க் கென்று மடங்கி யொழுகல்.
  • அடக்கம் என்பது அறிஞர்களுக்கு எப்பொழுதும் அடங்கி நடத்தல் ஆகும்.
  • 253. அடக்கநன் னெறியி னடக்கச் செய்யும்.
  • அடக்கம் நல்லொழுக்க நெறியில் நடக்கச் செய்யும்.
  • 254. அடக்கமில் லாமை யதைக்கடக் கச்செய்யும்.
  • அடங்காமை நல்லொழுக்க நெறியை மீறச் செய்யும்.
  • 255. அடக்கம் பல்வகை யாக்கமுந் தருமே.
  • அடக்கம் பல வகையான செல்வங்களையும் தரும்.
  • 256. அடக்க மிலாமை யழிவெலாந் தருமே.
  • அடங்காமை எல்லாவற்றையும் அழித்துவிடும்.
  • 257. அடக்கமெய் வீட்டிற் கடிப்படி யாகும்.
  • அடக்கம் மெய்யாகிய வீட்டின் முதற்படியாகும்.
  • 258.அப்படி யேறினா ரடைவரவ் வீடு.
  • அடக்கம் உடையவர் வீடுபேற்றை அடைவார்.
  • 259. அப்படி யேறா ராழ்வர்வெந் நரகு.
  • அடக்கம் இல்லாதவர் நரகத்தில் வீழ்வார்.
  • 260. ஆதலா லடக்க மநுதின மோம்புக.
  • ஆதலால் எப்பொழுதும் அடக்கத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்.

27 ஒழுக்க முடைமை

தொகு
  • 261. ஒழுக்க மென்ப துயர்ந்தோர் நடையே.
  • ஒழுக்கம் என்பது உயர்ந்த மனிதர்களின் குணநலன் ஆகும்.
  • 262. அருளறி வமைந்தவை யாள்பவ ருயர்ந்தோர்.
  • அன்பும் அறிவும் அமைந்து அவற்றைச் செயலிலும் காட்டுபவர்கள் உயர்ந்த மனிதர்கள் ஆவர்.
  • 263. அவர்நடை பெரியோர்க் கடங்கி யொழுகல்.
  • பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவர்களது நல்லியல்பு ஆகும்.
  • 264. இருக்கை யெழுத லெதிர்பின் செல்லல்.
  • பெரியவர்களைக் கண்டதும் இருக்கை விட்டெழுதலும் அவர்கள்பின் சென்று வழியனுப்புதலும் நல்லொழுக்கம் ஆகும்.
  • 265. நினைவுஞ் சொல்லும் வினையுமொன் றாக்கல்.
  • அவர்களது எண்ணம், சொல், செயல் இம்மூன்றும் ஒன்றாக விளங்கும்.
  • 266. மறநெறி விலக்கி யறநெறி செல்லல்.
  • அவர்கள் தீயொழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தைக் கடைபிடிப்பார்கள்.
  • 267. தானுற வேண்டுவ வேனோர்க் களித்தல்.
  • அவர்கள் தான் பெறவேண்டும் என்று எண்ணுவதை மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள்.
  • 268. தன்னுயிர் போல மன்னுயிர்ப் பேணல்.
  • அவர்கள் தன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசிப்பார்கள்.
  • 269.பகைசெய் தவரொடு நகைசெய் தளாவல்.
  • அவர்கள் பகைவர்களோடும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் கலந்து பழகுவார்கள்.
  • 270. உயிரெலா மெய்யென வோர்ந்தவை யோம்பல்.
  • எல்லா உயிர்களும் இறைவனே என்று உணர்ந்து எல்லா உயிர்களுக்கும் மதிப்பு அளிப்பார்கள்.

28. அறிவுடைமை

தொகு
  • 271. அறிவு மறமொரீஇ யறத்தின்பா லுய்ப்பது.
  • அறிவுடைமை தீயொழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தை நோக்கி நம்மைச் செலுத்தும் இயல்பு உடையது.
  • 272. அறிவெஞ் ஞான்று மற்றங் காப்பது.
  • அறிவுடைமை எப்பொழுதும் அழிவில் இருந்து பாதுகாக்கும் இயல்பு உடையது.
  • 273. அறிவு பகைவரா லழிக்கப் படாதது.
  • அறிவு பகைவர்களால் அழிக்க முடியாதது.
  • 274. அறிவினை யுடையா ரனைத்து முடையர்.
  • அறிவினை உடையவர்கள் அனைத்தையும் உடையவர்கள் ஆவர்.
  • 275. அறிவில் லாதார் யாதுமில் லாதார்.
  • அறிவில்லாதவர்கள் எதுவுமே இல்லாதவர்கள் ஆவர்.
  • 276. அறிவிற் கறிகுறி யாவன செய்தல்.
  • அறிவுடைமை என்பது நன்மை பயக்கும் செயல்களைச் செய்தல் ஆகும்.
  • 277. எளியவாச் செலவுரைத் தரியவை யுணர்தல்.
  • அறிவு என்பது கேட்போர் உள்ளத்தில் பதியும்படி எளிமையாகச் சொல்லுவதும் மற்றவர்கள் கூறும் எளிதில் அறியமுடியாத பொருளைப் புரிந்து கொள்ளுதலும் ஆகும்.
  • 278. பாவம் பழிக்குப் பயந்திவ ணொழுகல்.
  • பாவம், பழி இவற்றிற்கு அஞ்சி நடத்தல் அறிவுடைமை ஆகும்.
  • 279. உலகினோ டென்று மொத்து நடத்தல்.
  • அறிவுடைமை என்பது உலகில் உயர்ந்தவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதுபோல அவர்களைப் பின்பற்றி வாழ்வது ஆகும்.
  • 280. எதிரதாக் காத்தெவ் வின்பமு மடைதல்.
  • பின் வரப்போவதை முன்பே அறிந்து தன்னைக் காத்து எல்லா விதமான இன்பமும் அநுபவித்தல் அறிவுடைமை ஆகும்.

29. ஊக்க முடைமை

தொகு
  • 281. ஊக்க முயர்வுற வுனுமன வெழுச்சி.
  • உயர்ந்ததை அடைய வேண்டும் என்ற (எண்ணமே) மன உறுதியே ஊக்க முடைமை ஆகும்.
  • 282. ஊக்க முடைமை யுலகெலாங் கொணரும்.
  • ஊக்கமுடைமை உலகம் முழுவதையும் ஒருவனிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் இயல்பு உடையது.
  • 283. ஊக்க மிலாமை யுடையவும் போக்கும்.
  • ஊக்கமிலாமை ஒருவனிடத்தில் உள்ளதையும் அவனைவிட்டு போகச்செய்யும் இயல்பு உடையது.
  • 284. ஊக்க முடையா ருயர்ந்தோ ராவர்.
  • ஊக்கம் உடையவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர்.
  • 285. ஊக்க மிலாதா ருயிர்க்கும் பிணங்கள்.
  • ஊக்கமற்றவர்கள் சுவாசிக்கின்ற உயிரற்ற உடல்கள் ஆவர். அதாவது எதற்கும் பயனற்றவர்கள் ஆவர்.
  • 286.உயர்ந்தவை யெவையோ வவையெலா முள்ளுக.
  • உயர்ந்தவை அனைத்தையும் அடைய எண்ண வேண்டும்.
  • 287. அவற்றினு ளொன்றை யடைந்திட விரும்புக.
  • அவற்றினுள் ஒன்றை அடைய விரும்புதல் வேண்டும்.
  • 288. அதனை யடையு மாறெலா மெண்ணுக.
  • அதனை அடையும் வழிகளை எல்லாம் ஆராய வேண்டும்.
  • 289. ஒவ்வொன் றினுமுறு மூறெலா மெண்ணுக.
  • ஒவ்வொரு வழியிலும் உள்ள இடையூறுகளை ஆராய்ந்து அறிய வேண்டும்.
  • 290. ஊறொழித் ததையுறு முபாயமுங் கருதுக. அத்தகைய இடையூறுகளை நீக்கி நம் குறிக்கோளை அடைய உதவும் வழிகளைக் கண்டறிய வேண்டும்.

30. முயற்சி யுடைமை

தொகு
  • 291. உயர்வுற வுழைக்கு முடற்றொழில் முயற்சி.
  • உயர்ந்ததை அடைவதற்காக உழைக்கும் உடல் உழைப்பே முயற்சி ஆகும்.
  • 292. முயற்சி பலவகை யுயற்சி நல்கும்.
  • முயற்சி பலவகைப் பெருமைகளைக் கொடுக்கும் இயல்பு உடையது.
  • 293. முயற்சி யூழையு முதுகிடச் செய்யும்.
  • முயற்சி, வெற்றிக்குத் தடையாக இருக்கும் விதியையும் தோல்வியடையச் செய்யும்.
  • 294. முயற்சி யுடையார் மூவுல காள்வார்.
  • விடாமுயற்சி உடையவர்கள் மூவுலகத்தையும் வென்றுவிடுவார்கள்.
  • 295. முயற்சி யிலாதா ரிகழ்ச்சி யடைவர்.
  • முயற்சியின்றி சோம்பலுடன் இருப்பவர்கள் பிறர் பழிக்கும் நிலைக்கு ஆளாவார்கள்.
  • 296. ஊக்கிய வொன்றனை யுடன்கொளத் துணிக.
  • நம் மனத்தில் ஆர்வத்தைத் தூண்டிய ஒரு குறிகோளை உடனே அடைய தீர்மானித்தல் வேண்டும்.
  • 297.அதிகவூ றுறாநல் லாற்றின் முயல்க.
  • அதை அடைய அதிக இடையூறில்லாத (சிரமமில்லாத) நல்ல வழியில் முயற்சி செய்தல் வேண்டும்.
  • 298. உறுமூ றொழித்தறி வுரங்கொடு தொடர்க.
  • அந்த முயற்சியில் ஏற்படும் இடையூறுகளை நீக்கி அறிவு மற்றும் ஆற்றலுடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
  • 299. தவறினுந் தாழ்ப்பினுந் தளர்ச்சியெய் தற்க.
  • முயற்சியில் தோல்வியுற்றாலும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டாலும் நம் மன உறுதியை இழத்தல் கூடாது.
  • 300. முயற்சியின் விரிமுத னூலினு ளறிக.
  • முயற்சியினைப்பற்றி விரிவாக முதல் நூலில் இருந்து அறிந்துகொள்ளுதல் வேண்டும்.(முதல் நூல்- திருக்குறள்)[1]
  1. https://dheivegam.com/thirukkural-aalvinai-udaimai-adhikaram/
"https://ta.wikisource.org/w/index.php?title=மெய்யறம்&oldid=1443630" இலிருந்து மீள்விக்கப்பட்டது