மெய்யறம் (1917)/அந்தணரியல்

அந்தணரியல்.

௧௧௧-ம் அதி.–அந்தண ரியல்பு.

அந்தண ரறத்தோடு செந்தண்மை பூண்டவர். ௧௧0௧
மாணவர் தம்மையே வளர்க்கு மியல்பினர். ௧௧0௨
அடுத்தவர் தம்மையு மளிப்பவரில் வாழ்பவர். ௧௧0௩
அரசர்நல் லுயிரெலா மளிக்குந் திறத்தினர். ௧௧0௪
அனைத்துயிர் தம்மையு மளிப்பவ ரந்தணர். ௧௧0௫
முதன்முந் நிலையினர் முகைமலர் காயனர். ௧௧0௬
அந்தணர் மெய்ந்நிலை யடைந்தவர் கனிவிதை. ௧௧0௭
விதையே மரமிலை மென்முகை யாதியாம். ௧௧0௮
மெய்யே யுலகுயி ரைந்நிலை யினராம். ௧௧0௯
முறைமுகை விதையா முதனிலை யுயிர்மெயாம். ௧௧௧0

௧௧௨-ம் அதி.–அந்தண ரொழுக்கம்.

ஓதலி னந்தணர்க் கொழுக்கநன் றென்ப. ௧௧௧௧
அந்தணர்க் கொழுக்க மனற்குச் சூடுபோன்ம். ௧௧௧௨
ஒழுக்கமு மறிவு முடனிகழ் தகைமைய. ௧௧௧௩
ஒன்றின் றெனின்மற் றதுவு மிலதாம். ௧௧௧௪
ஞானச் சொல்லெலாங் கானற் சலமாம். ௧௧௧௫
ஒழுக்க மறிதற் குரைகலின் றென்ப. ௧௧௧௬
பகுத்தறி வறநூ லுகுத்தவ ரேயவர். ௧௧௧௭
ஒழுக்கமெவ் வுயிர்க்கு மூறுசெய் யாமை. ௧௧௧௮
இயலு நன்றெலா மிடைவிடா தியற்றல். ௧௧௧௯
இழுக்கமிவ் விரண்டிலொன் றியற்றத் தவறல். ௧௧௨0


௧௧௩-ம் அதி.–கூடா வொழுக்கம்.

சாமிக ளுட்பலர் காமிக ளாயினர். ௧௧௨௧
தேசிக ருட்பல ராசின ராயினர். ௧௧௨௨
மகந்துக ளுட்பல ரிகந்தன ரொழுக்கம். ௧௧௨௩
தம்பிரான் மறமெலா மெம்பிரா னறிவர். ௧௧௨௪
போலியந் தணர்பலர் புரியா மறமிலை. ௧௧௨௫
அரசரு ளுளர்மறங் கரவினி லாள்பவர். ௧௧௨௬
இல்வாழ் வினருளும் புல்வாழ் வினருளர். ௧௧௨௭
மாணவ ருளுமுளர் கோணல் கொண்டவர். ௧௧௨௮
உலக மென்றுநல் லொழுக்கங் கொள்ளும்? ௧௧௨௯
உள்ளும் புறமு மோரியல் பூணும்? ௧௧௩0

௧௧௪-ம் அதி.–மானங் காத்தல்.

மானமென் பதுதம் மதிப்பை விடாமை; ௧௧௩௧
தத்தந் நிலைக்குத் தாழ்ந்தசெய் யாமை; ௧௧௩௨
தத்த மியற்குத் தக்கவா றொழுகல். ௧௧௩௩
மானொரு மயிரற மாயுமவ் விடத்தே. ௧௧௩௪
மனிதர்தம் மதிப்பற வாழ்ந்திடல் வியப்பே. ௧௧௩௫
மாணவ ரிழுக்கலின் மடித னன்றே. ௧௧௩௬
இல்லின ரிவறலி னிறத்த னன்றே. ௧௧௩௭
அரசறஞ் செயாமையி னழித னன்றே; ௧௧௩௮
தாழ்ந்தார்த் தெறுதலிற் சாத னன்றே. ௧௧௩௯
அந்தணர் வெகுளலி னழற்புக னன்றே. ௧௧௪0


௧௧௫-ம் அதி.–வெஃகாமை.

வெஃகுதல் பிறர்பொருள் விரும்புங் குற்றம். ௧௧௪௧
வெஃகலை மறத்தின் வித்தென மொழிப. ௧௧௪௨
அதுதீ யவாவி னங்குர மாகும்; ௧௧௪௩
காமமுங் களவுங் கலிதழை யிலைவிடும்; ௧௧௪௪
கொலையும் பொய்யுமாங் கொம்பொடு கிளைவிடும்; ௧௧௪௫
அழிதகு மறங்களா மரும்பொடு மலர்விடும்; ௧௧௪௬
பழியுங் கேடுமா மழியாக் காய்தரும்; ௧௧௪௭
அழிபல நிரயக் கழிபெருங் கனிதரும்; ௧௧௪௮
பொறிவழித் துன்பமாஞ் செறிபல சுவையாம். ௧௧௪௯
ஆதலால் வெஃகலை யறவே விடுக. ௧௧௫0

௧௧௬-ம் அதி.–வெகுளாமை.

வெகுளி யகத்தெழும் வெங்கனற் சுடரே. ௧௧௫௧
இச்சுடர் தம்மையு மினத்தையு மழிக்கும்; ௧௧௫௨
நகையை யுவகையைத் தகையைக் கொல்லும்; ௧௧௫௩
பகையைச் சொல்லரும் வகையில் வளர்க்கும்; ௧௧௫௪
மிகையுந் துயரு மிகுந்திடச் செய்யும்; ௧௧௫௫
வெகுளியை விடற்கவ் விருப்பமுட் கொள்ளுக; ௧௧௫௬
வெகுளியுள் ளெழுங்கா னகுதலேபுரிக; ௧௧௫௭
வெகுளியின் கேடெலாம் விரைந்துட னெண்ணுக; ௧௧௫௮
ஆடிகொண் டுடன்முக வழகினை நோக்குக. ௧௧௫௯
வெகுளியை யடுதலே தகுதியென் றடுக. ௧௧௬0


௧௧௭-ம் அதி.–இன்னா செய்யாமை.

மன்னுயி ருளமுடல் வருத்துவ வின்னா. ௧௧௬௧
அவைதீச் செயலே யச்சொலே நினைப்பே. ௧௧௬௨
கொடியது செயலுட் கொலையென மொழிப. ௧௧௬௩
கொலையினு மிந்தியங் களைவது கொடியது. ௧௧௬௪
அவைகெட வதைசெய லதனினுங் கொடியது. ௧௧௬௫
கொடியவை சொல்லுட் குறளைபொய் நிந்தை. ௧௧௬௬
கொடியவை நினைப்புட் கொலைமுத னினைப்பு. ௧௧௬௭
இன்னா செய்தார்க் கின்னா வந்துறும். ௧௧௬௮
ஒன்றொரு கோடியாய் பின்றைநாள் வந்துறும். ௧௧௬௯
உற்றவுயி ரறிவள வுறுத்தும் நிற்கும். ௧௧௭0

௧௧௮-ம் அதி.–தவஞ் செய்தல்.

தவமென் பதுதனைச் சார்ந்தநோய் பொறுத்தல்; ௧௧௭௧
உணர்வுடை யுயிர்கட் கூறுசெய் யாமை; ௧௧௭௨
கைந்நிலை விடாது மெய்ந்நிலை யுள்ளல்; ௧௧௭௩
மனத்தை யடக்கி வசஞ்செய முயறல்; ௧௧௭௪
அதற்கின்றி யமையா வப்பியா சங்கள். ௧௧௭௫
தவஞ்செய லொன்றே தஞ்செய லென்ப. ௧௧௭௬
தவத்தி னளவே தனமுறு மென்ப. ௧௧௭௭
தவமுடித் தாரே சமனைக் கடப்பர். ௧௧௭௮
தவமே யிகபரந் தருநன் முயற்சி. ௧௧௭௯
தவமே யியற்றுக தகவுற வேண்டுவர். ௧௧௮0


௧௧௯-ம் அதி.–துற வடைதல்.

துறவியா னெனதெனு முறவினை யொழித்தல்; ௧௧௮௧
மன்னுயி ரெல்லாந் தன்னுயி ரென்றல்; ௧௧௮௨
தன்பொருண் மன்னுயிர் தமதென வாழல். ௧௧௮௩
துறவென விவ்வகத் துறவையே மொழிப. ௧௧௮௪
புறத்துற வெல்லாம் பொய்த்துற வாமே. ௧௧௮௫
துறவந் தணருக் குறவொழுக் கன்றோ? ௧௧௮௬
தாய்தந் தையரைத் தள்ளலுந் தண்மையோ? ௧௧௮௭
தன்னுயிர்த் துணையைத் தவிர்தலுந் தண்மையோ? ௧௧௮௮
தீயவா மிவையெலாம் பேயா டுறவே. ௧௧௮௯
தமரையே யளியார் பிறவுயி ரளிப்பரோ? ௧௧௯0

௧௨0-ம் அதி.–அருள் புரிதல்.

அருள்பல வுயிர்க்கு மன்புபா ராட்டல். ௧௧௯௧
உயிரெலா மெய்யது பயிரெனக் காண்க. ௧௧௯௨
எவ்வகை யுயிர்க்கு மின்னா செயற்க. ௧௧௯௩
அவற்றிற் காவன வனைத்து முதவுக. ௧௧௯௪
தமையவை வருத்தினு மவைதமை யோம்புக. ௧௧௯௫
அருளுடை யார்மெய்ப் பொருளடை வதுதிடம். ௧௧௯௬
அருள்பே ணாருள மருண்மிகு முண்மை. ௧௧௯௭
சுயநயச் செயலரு ளினையற வோட்டும். ௧௧௯௮
பரநயச் செயலருள் பரவிடச் செய்யும். ௧௧௯௯
அருள்விடா தவரைமெய்ப் பொருள்விடா துண்மை. ௧௨00

அந்தண ரியல் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=மெய்யறம்_(1917)/அந்தணரியல்&oldid=1403727" இலிருந்து மீள்விக்கப்பட்டது