மெய்யறம் (1917)/இல்வாழ்வியல்
இல்வாழ்வியல்.
௩௧-ம் அதி.–இல்வாழ் வுயர்வு.
இல்வாழ் வென்பதோ ரில்லினில் வாழ்தல்.
௩0௧
எதிபாற் றுணையுடன் வதிதன் மிகநலம்.
௩0௨
இல்வாழ் வார்கட னில்லற மியற்றல்.
௩0௩
என்றும்வே ளாண்மை யியற்றலே யில்லறம்.
௩0௪
இல்வாழ் வில்லெனி லில்லையிவ் வுலகே.
௩0௫
இன்னிலை யெவற்றினு நன்னிலை யென்ப.
௩0௬
எந்நிலை யவர்க்கு மில்வாழ் வார்துணை.
௩0௭
அந்நிலைப் பெருக்கே யரசென வறிக.
௩0௮
அதற்கா நன்முத லன்பெனும் பொருளே.
௩0௯
அதிலாம் பயன்க ளறமுத னான்கே.
௩௧0
௩௨-ம் அதி.–இல் லமைத்தல்.
அகல நீள மரைக்கான் மைல்கொளல்.
௩௧௧
ஈரிரு புறமதி லெதிரெதிர் வழிசெயல்.
௩௧௨
மத்தியிற் புறமதின் மட்டமே லிற்செயல்.
௩௧௩
இல்லிற் கீரா யிரமடி சதுரமாம்.
௩௧௪
நிலமேன் மதிற்கு நேர்கால் கீழ்செயல்.
௩௧௫
வளியன னீர்மா வழியா வகைசெயல்.
௩௧௬
வளியொளி யளவினுள் வரச்செல வழிசெயல்.
௩௧௭
பொருட்குஞ் செயற்கும் பொருத்தமாப் பகுத்திடல்.
௩௧௮
நிலவறை தான்செய னிதிமிகின் மேற்செயல்.
௩௧௯
நற்றரு செடிகொடி யிற்புறத் தமைத்திடல்.
௩௨0
௩௩-ம் அதி.–உயிர்த்துணை கொள்ளல்.
உயிர்த்துணை தன்னுயிர்க் குதவெதிர் பாற்றுணை.
௩௨௧
அத்துணைக் கெங்கணு மொத்ததொன் றிலதே.
௩௨௨
ஆக்கமுங் கேடு மத்துணை யாலாம்.
௩௨௩
கொள்ளு மறிவெலாங் கொண்டுபின் றுணைகொளல்.
௩௨௪
கொளுமுன் கொண்டிடிற் குற்றம் பலவாம்.
௩௨௫
துணையிழந் தாரை மணப்பது புண்ணியம்.
௩௨௬
விரும்பா தவரை விரும்புதல் பாவம்.
௩௨௭
துணைநலங் குடிமையே தூய்மையே யொழுக்கமே;
௩௨௮
பருவமே யெழிலே பண்பே யின்சொலே;
௩௨௯
வரவினுள் வாழ்தலே மடிதுயி லிலாமையே.
௩௩0
௩௪-ம் அதி.–உயிர்த்துணை யாளுதல்.
இருவரு ளறிவிற் பெரியவ ராள்க.
௩௩௧
ஆண்பா லுயர்வெனல் வீண்பேச் சென்க.
௩௩௨
துணைநன் காள்பவர் தொல்லுல காள்வர்.
௩௩௩
தன்னுயி ருடல்பொரு டன்றுணைக் குரியன.
௩௩௪
தன்றுணை யுயிர்முத றனக்காங் குரியன.
௩௩௫
இருவராத் தோன்றினு மொருவரே யுள்ளின்.
௩௩௬
தானறிந் தவையெலாந் தன்றுணைக் குணர்த்துக.
௩௩௭
தனதுநன் னெறிதுணை சார்ந்திடச் செய்க.
௩௩௮
இயற்றுவ துணையுட னெண்ணி யியற்றுக.
௩௩௯
உண்பன துணையோ டுடனிருந் துண்ணுக.
௩௪0
௩௫-ம் அதி.–இன்பந் துய்த்தல்.
துணையோ டின்பந் துய்த்தலே சுவர்க்கம்.
௩௪௧
துய்க்கு முறையெலாந் தொல்லகப் பொருள்சொலும்.
௩௪௨
முறையறி யாதுறல் குறையறி வுயிர்செயல்.
௩௪௩
தன்றுணைக் கின்பந் தரத்தரத் தனக்கதாம்.
௩௪௪
தானின் புறவெணிற் றனக்கதெய் தாதே.
௩௪௫
ஊட லுணர்தல் புணர்த லதன்வகை.
௩௪௬
ஊட னிமித்த முடனுட னாக்குக.
௩௪௭
இரந்தும் புணர்ந்து முணர்ந்திடச் செய்க.
௩௪௮
இருந்திரங் கத்துணை பிரிந்திடல் நீக்குக.
௩௪௯
துணையழத் துறந்துமெய் யிணைதலன் பிலாவறம்.
௩௫0
௩௬-ம் அதி.–காமம் விலக்கல்.
காம மகத்தெழு மாமத வெறியே.
௩௫௧
இன்ப மறிவோ டிருந்தநு பவிப்பதே.
௩௫௨
இராச்சில குறித்தறை யியைந்திட லின்பம்.
௩௫௩
எண்ணிய பொழுதிடத் தியைந்திடல் காமம்.
௩௫௪
காம மகப்புறக் கண்களைக் கெடுத்திடும்.
௩௫௫
காம மெழுங்காற் கடவுளை யுள்ளுக.
௩௫௬
அறிவெனுந் தோட்டியா னதனைக் காக்க.
௩௫௭
அதைவளர்ப் பவைதமை யகத்தைவிட் டோட்டுக.
௩௫௮
அதையடு மொன்றை யகத்தினுட் கொள்ளுக.
௩௫௯
அதைநன் குள்ளி மதவெறி களைக.
௩௬0
௩௭-ம் அதி.–பரத்தையை விலக்கல்.
பரத்தை யின்பினைப் பலர்க்கும் விற்பவள்.
௩௬௧
மதுசூ திரண்டினும் பொதுமகள் கொடியள்.
௩௬௨
அவணடை யுடைநோக் காதியா லழிப்பாள்;
௩௬௩
இன்பந் தருதல்போற் றுன்பெலாந் தருவள்;
௩௬௪
உடைமுதற் பொருளெலா முயிரொடு கவர்வள்.
௩௬௫
அவளினும் வஞ்சக ரவனியி லில்லை.
௩௬௬
அவளினுங் கள்வ ரருளின ரெனலாம்.
௩௬௭
அவளுள நினைந்தாற் றவசியுங் கெடுவான்.
௩௬௮
அவளா லந்தோ வழிந்தவ ரநேகர்.
௩௬௯
அவளிலா நாடே யழிவுறா நாடு.
௩௭0
௩௮-ம் அதி.–பரத்தனை விலக்கல்.
தன்றுணை யலாளைத் தழுவுவோன் பரத்தன்.
௩௭௧
பரத்தை யினுமிகக் கொடியவன் பரத்தன்.
௩௭௨
பொதுமக ளாதலம் முழுமக னாலே.
௩௭௩
நன்மகன் கெடுதலப் புன்மக னாலே.
௩௭௪
மறனெலா நிகழ்வதம் மாபாவி யாலே.
௩௭௫
அவனைக் காண்டலா லழியும் புகழே.
௩௭௬
அவனொடு பேசலா லழியு நிறையே.
௩௭௭
அவனொடு சேர்தலா லழியு மனைத்தும்.
௩௭௮
அவனிலா நாடே யாகுநன் னாடு;
௩௭௯
அறனு மளியு மமைவுறு நாடு.
௩௮0
௩௯-ம் அதி.–சிற்றினம் விலக்கல்.
சிற்றினங் குணத்திற் குற்றமிகு மாக்கள்;
௩௮௧
பெருமிதந் தன்னைப் பேணா மாக்கள்;
௩௮௨
அற்பத் தன்மை யளாவிய மாக்கள்;
௩௮௩
பொறியின் பங்களிற் செறிவுறு மாக்கள்;
௩௮௪
சுயநயங் கருதும் பயனிலா மாக்கள்.
௩௮௫
சிற்றினம் பொருளையுஞ் சீரையு மழிக்கும்;
௩௮௬
அற்றமுங் குற்றமு முற்றிடச் செய்யும்;
௩௮௭
முற்றவ நலத்தொடு கற்றவுஞ் சிதைக்கும்;
௩௮௮
நரகும் பழியு நண்ணிடச் செய்யும்.
௩௮௯
சிற்றினப் பற்றினைச் சிறிதும் வேண்டேல்.
௩௯0
௪0-ம் அதி.–பெரியாரைத் துணைக்கொளல்.
பெரியா ரரியன பெரியன செய்பவர்;
௩௯௧
பொறியா ளுளத்தை யறிவா லாள்பவர்;
௩௯௨
இகபர வியலெலா மெண்ணிநன் கறிந்தவர்;
௩௯௩
நல்லின வியலெலா நண்ணி நிற்பவர்;
௩௯௪
பின்னுறுந் தீங்கெலா முன்னறிந் தொழிப்பவர்.
௩௯௫
அவரது துணைகொள லரும்பெருங் காப்பு.
௩௯௬
அவரை யறிந்துகொண் டநுதின மோம்புக.
௩௯௭
அவர்க்குரி யனவெலா மன்பொடு வழங்குக.
௩௯௮
அவரோ டெண்ணியே யனைத்துஞ் செய்க.
௩௯௯
அவருரை பிழையா தியாங்கணு மொழுகுக.
௪00
௪௧-ம் அதி.–பேதைமை யொழித்தல்.
பேதைமை யேதங்கொண் டூதியம் விடுதல்;
௪0௧
கடிந்தவை தம்பால் காதன்மை செய்தல்;
௪0௨
நாணன் பருள்புகழ் பேணுத லின்மை;
௪0௩
அறிந்துணர்ந் துரைத்து மடங்கா தொழுகல்;
௪0௪
அறத்தை விடுத்து மறத்தைப் புரிதல்.
௪0௫
வினைசெயின் பொய்படும் புணைகொளும் பேதை.
௪0௬
தமர்பசித் துழலப் பிறர்க்கிடும் பேதை.
௪0௭
பேதையோர் காசுறிற் பித்தன் களித்தற்று.
௪0௮
அவைபுகிற் பேதை யதனலங் குன்றும்.
௪0௯
பெரியார் நூல்கொடு பேதைமை களைக.
௪௧0
௪௨-ம் அதி.–வெண்மை யொழித்தல்.
வெண்மை யறிவினை விடுத்த தன்மை;
௪௧௧
ஒண்மை யுடையமென் றுளத்தொடு செருக்கல்;
௪௧௨
ஈயவேண் டியவிடத் தீயா திவறல்;
௪௧௩
குற்றம் பலவுஞ் சுற்றமாக் கொள்ளல்;
௪௧௪
கற்றில கற்றவாக் காட்டி நடித்தல்;
௪௧௫
அருமறை விடுத்துப் பெருமிறை கொள்ளல்;
௪௧௬
செய்வன சொல்லியுஞ் செய்யா திழுக்கல்;
௪௧௭
உலகின ருளதென்ப திலதென மறுத்தல்.
௪௧௮
இன்மையு ளின்மை வெண்மை யொன்றே.
௪௧௯
ஒண்மைசா னூல்கொடு வெண்மையைக் களைக.
௪௨0
௪௩-ம் அதி.–நெடுநீ ரொழித்தல்.
நெடுநீர் கால நீள விடுதல்;
௪௨௧
ஒருகணச் செயலைமற் றொன்றற் கீதல்.
௪௨௨
நெடுநீர் குறைபல தருமியல் புடையது.
௪௨௩
நெடுநீர் சிறிதுறி னடுமதூஉம் பெருகி.
௪௨௪
நெடுநீ ரறவிடிற் படுபொரு ளாகும்.
௪௨௫
நெடுநீர் விடற்கந் நினைவையுட் கொள்ளுக;
௪௨௬
நெடுநீ ரால்வருங் கெடுதியை யுள்ளுக;
௪௨௭
எக்கணத் தெஃதுறு மக்கணத் ததைச்செயல்.
௪௨௮
உறுவ பெரிதென வுற்றதை வைத்திடேல்.
௪௨௯
உற்றதைச் செய்துபி னுறுவதை யெண்ணுக.
௪௩0
௪௪-ம் அதி.–மறவி யொழித்தல்.
மறவிதன் கடமையை மனத்திலுன் னாமை.
௪௩௧
மறவியூக் கத்தின் மறுதலை யாகும்.
௪௩௨
மறவி பலவகை யிறவையு நல்கும்.
௪௩௩
மறவியை யடுத்தவர் மாண்பெலா மிழப்பர்.
௪௩௪
மறவியை விடுத்தவர் மாநிலத் துயர்வர்.
௪௩௫
மறவியை விடற்கு மனத்தினன் குள்ளுக;
௪௩௬
காலையு மாலையுங் கடவுளைத் தொழுக;
௪௩௭
மாணுயர் நூல்சில மனனஞ் செய்க;
௪௩௮
விடிந்தபின் செய்பவை விடியுமு னுள்ளுக;
௪௩௯
பகலிற் செய்தவை யிரவினன் காய்க.
௪௪0
௪௫-ம் அதி.–மடி யொழித்தல்.
மடிதஞ் செயல்களின் மந்த முறுதல்.
௪௪௧
மடிமெய்ம் முயற்சியின் மறுதலை ஆகும்.
௪௪௨
மடிதமை யொன்னார்க் கடிமைப் படுத்தும்.
௪௪௩
மடியினை யுடையவர் குடியொடு கெடுவர்.
௪௪௪
மடியினை விடுத்தவர் படியெலாங் கொள்வர்.
௪௪௫
மடியினை விடற்கு மனத்தினன் குள்ளுக;
௪௪௬
காலைமெய்ப் பயிற்சி சோலைநீர்க் குளிகொளல்;
௪௪௭
இளம்பக லுணவரை யிராவுண வரைகொளல்;
௪௪௮
இரவினல் யாமத் தென்று முறங்குக;
௪௪௯
பயனுள சிலசொற் பார்த்துப் பேசுக.
௪௫0
௪௬-ம் அதி.–துயி லொழித்தல்.
உடம்புள வயர்வினை யொழிப்ப துறக்கம்.
௪௫௧
அவ்வயர் வளவிற் கதிகமா வதுதுயில்.
௪௫௨
சுழுத்தியா முறக்கஞ் சுகத்தை வளர்க்கும்.
௪௫௩
கனவுக ளாந்துயில் கவலையை வளர்க்கும்.
௪௫௪
துயில்கொள வழிவாந் துயில்விட வாக்கமாம்.
௪௫௫
அயர்விற் கமையு மைம்மூன்று நாழிகை.
௪௫௬
மற்றைய பொழுதெலா மாண்டொழில் புரிக.
௪௫௭
தொழில்செயும் பொழுது துயில்வரி னுலாவுக;
௪௫௮
கைத்தொழின் முதலிய மெய்த்தொழில் செய்க;
௪௫௯
அவசிய மெனினுண வரையினுஞ் சுருக்குக.
௪௬0
௪௭-ம் அதி.–செருக் கொழித்தல்.
செருக்கென் பதுதன் பெருக்கத் தகங்கொளல்.
௪௬௧
அஃதறி யாமையி னங்குர மென்ப.
௪௬௨
ஆன்ம வுயர்வினை யழிப்பதச் செருக்கு.
௪௬௩
அடங்கா வுளத்தை யளிப்பதச் செருக்கு.
௪௬௪
அழியு முடம்பை யளிப்பது மஃதே.
௪௬௫
செருக்கினர் தம்மெய்த் திறத்தினைக் காணார்;
௪௬௬
தம்பகைத் திறத்தைத் தாழ்த்தியே யெண்ணுவர்;
௪௬௭
இன்பினு மடியினு மிறந்து படுவர்;
௪௬௮
துயிலு மறவியுந் தொடர்ந்து கொள்வர்;
௪௬௯
புகழெலாம் போக்கி யிகழெலா மீட்டுவர்.
௪௭0
௪௮-ம் அதி.–அச்ச மொழித்தல்.
அச்ச மனமுட லழிவுற நடுங்கல்.
௪௭௧
அஃதறி யாமையி னந்தமென் றுணர்க.
௪௭௨
அறம்புகழ் செய்தலா லழியினும் வாழ்வாம்.
௪௭௩
மறம்பழி செய்தலால் வாழினு மழிவாம்.
௪௭௪
அறம்புகழ் செய்வதற் கஞ்சுதன் மறனே.
௪௭௫
மறம்பழி செய்வதற் மாண்புடை யறனே.
௪௭௬
அறநெறி மறந்தரின் மறநெறி யாகும்.
௪௭௭
மறநெறி யறந்தரி னறநெறி யாகும்.
௪௭௮
அச்ச முடையார்க் கெச்சமிங் கில்லை.
௪௭௯
அச்ச மிலார்க்கு நிச்சலு மெச்சமாம்.
௪௮0
௪௯-ம் அதி.–இடுக்க ணழியாமை.
இடுக்கண் டுயரினைக் கொடுக்குமிடை யூறு.
௪௮௧
இடுக்க ணுற்றுழி நகினது தான்கெடும்.
௪௮௨
இடுக்க ணுக்குள நெகினது பெருகும்.
௪௮௩
இடுக்கண் புறத்துள தென்பது பொய்ம்மை.
௪௮௪
இடுக்க ணகத்துள தென்பது மெய்ம்மை.
௪௮௫
இடுக்க ணகத்ததென் றெண்ணவஃ தழியும்.
௪௮௬
இடுக்கணி லழியா ரிடுக்க ணழியும்.
௪௮௭
இடுக்கண் வலியினைக் கொடுக்குந் திறத்தது.
௪௮௮
இடுக்க ணறிவினை யீயு மியலது.
௪௮௯
இடுக்கணிற் றளரா ரெண்ணிய முடிப்பர்.
௪௯0
௫0-ம் அதி.–பற்றுளம் விடுதல்.
பற்றுளம் பொருளினிற் பற்றுள நெஞ்சம்;
௪௯௧
ஈயா துண்ணா தெண்ணிவைத் திவறல்.
௪௯௨
பற்றுள மரில்பல வற்றுளும் பெரிது.
௪௯௩
பற்றுளம் பல்வகைக் குற்றமு நல்கும்.
௪௯௪
பற்றுளத் தாலருஞ் சுற்றமு நீங்கும்.
௪௯௫
பற்றுளத் தார்பொருண் முற்று மிழப்பர்;
௪௯௬
அறம்புக ழின்பமெய் யறிவுவீ டிழப்பர்.
௪௯௭
பற்றுளம் விடுத்தவர் பாரெலாங் கொள்வர்;
௪௯௮
அறம்புக ழின்பமெய் யறிவுவீ டடைவர்.
௪௯௯
பற்றுளப் பேயினைச் செற்றுடன் றுரத்துக.
௫00
௫௧-ம் அதி.–தன்னைப் பேணல்.
தன்னைப் பேணுத றன்முதற் கடமை.
௫0௧
தன்னைப் பேணார் தாழ்வே யடைவர்.
௫0௨
தன்னைப் பேணுவோர் தலைமை யெய்துவர்.
௫0௩
பேணல் பெருமை யெலாமுற முயறல்;
௫0௪
உடல்பொருள் வினைபொழு திடனறிந் தின்புறல்;
௫0௫
பொருளு மொழுக்கமும் புகழும் பெருக்கல்;
௫0௬
உடம்போர் யானையி னுரமுற வளர்த்தல்;
௫0௭
மனமுயர்ந் தவையெலாந் தினமுனப் பயிற்றல்;
௫0௮
அறிவன் மலனொழித் தழுக்குறா தமைதல்;
௫0௯
தன்னுயிர்த் துணையைத் தனைப்போ லாக்கல்.
௫௧0
௫௨-ம் அதி.–உற்றாரைப் பேணல்.
உற்றார் பெற்றா ருறவினர் பலருமே.
௫௧௧
தன்னுற வினரெலாந் தன்றுணைக் கன்னர்.
௫௧௨
தன்றுணை யுறவினர் தனக்காங் கன்னர்.
௫௧௩
தாயுந் தந்தையுந் தான்றொழுந் தகையர்.
௫௧௪
அவரைப் பேணுத லரும்பெருங் கடனே.
௫௧௫
சோதர ருற்றுழி யாதர வாவர்.
௫௧௬
அவரைப் பேணுத லாக்கம் பேணலே.
௫௧௭
மற்றுளா ருந்தமைச் சுற்றுறப் பேணுக.
௫௧௮
உற்றவர் பேணிற் பற்றல ரொழிவர்.
௫௧௯
உற்றார் பெருகி னுரமிகப் பெருகும்.
௫௨0
௫௩-ம் அதி.–விருந்தினரைப் பேணல்.
விருந்தினர் முன்னர் தெரிந்திலாப் புதியர்.
௫௨௧
விருந்தினர்ப் பேணுவார் பெரிந்தகை யோரே.
௫௨௨
விருந்தின ருண்ணலம் பொருந்தினர்க் கொள்க.
௫௨௩
விருந்தினர்க் குணவுநன் மருந்தென வழங்குக.
௫௨௪
உடையிடம் படுக்கை குடைகாப் புதவுக.
௫௨௫
உளமறிந் தேனைய வளவறிந் தீக.
௫௨௬
இன்ப மவருற வின்சொல் வழங்குக.
௫௨௭
அவரறிந் தவையெலா மறிந்துளங் கொள்க.
௫௨௮
அவருய ரொழுக்கெலா மறிந்துகைக் கொள்க.
௫௨௯
செல்வுழி யுடன்சென் றுள்ளிடப் பிரிக.
௫௩0
௫௪-ம் அதி.–முன்னோரைப் பேணல்.
முன்னோர் துஞ்சிய தன்னுற வினரே.
௫௩௧
அவரைப் பேணலா லாம்பல நலமே.
௫௩௨
அவரைப் பேணுமா றடிக்கடி யுள்ளல்;
௫௩௩
அவர்தொடங் கியவறந் தவறுறா தாற்றல்;
௫௩௪
அவர்செய வெண்ணிய வறங்களு மியற்றல்;
௫௩௫
அவர்நற் குணனெலா மறிந்துகைக் கொளல்;
௫௩௬
அவர்நற் செயலெலா மழியாது நிறுத்தல்;
௫௩௭
அவர்நற் பெயர்தம தருமகார்க் களித்தல்;
௫௩௮
அவர்பெயர் விளங்கிட வறம்பல புரிதல்;
௫௩௯
அவர்க்குறும் பிறவு மன்பொடு செய்தல்.
௫௪0
௫௫-ம் அதி.–புதல்வரைப் பேணல்.
புதல்வரே தம்மரும் பொருளென மொழிப.
௫௪௧
நன்றுசெய் புதல்வரா னரகறு மென்ப.
௫௪௨
பொருளுங் குடியும் புகழுமா மவரால்.
௫௪௩
துணைதரும் புதல்வர்க் கிணைபிற ராகார்.
௫௪௪
பிறரைப் புதல்வராப் பெறுதலும் வழக்கே.
௫௪௫
மிகமிக வருந்தியும் புதல்வரை வளர்க்க.
௫௪௬
இளமையி னவர்நல் லினமுறச் செய்க;
௫௪௭
தக்கவா சிரியரைச் சார்ந்திடச் செய்க;
௫௪௮
கல்வியு மொழுக்கமுங் கைக்கொளச் செய்க;
௫௪௯
இல்வாழ் வரசுற வல்லுந ராக்குக.
௫௫0
௫௬-ம் அதி.–அன்பு வளர்த்தல்.
அன்பெனப் படுவ தகத்தி னுருக்கம்.
௫௫௧
ஆர்வல ருறுறி னதுகண் ணீராம்;
௫௫௨
அவரூ றொழிக்குந் தவலிலா முயற்சியாம்.
௫௫௩
ஆருயிர் பெற்றதிங் கன்புசெய் தற்கே.
௫௫௪
அன்புபா ராட்டற் காமிடந் தானே;
௫௫௫
தன்னுயிர்த் துணையே தன்னரும் புதல்வரே;
௫௫௬
தன்பெற் றோரே தன் சகோ தரரே;
௫௫௭
தன்னா சிரியரே தன்னுற வினரே;
௫௫௮
தன்னூ ராரே தன்னாட் டினரே;
௫௫௯
மனித சமூகமே மன்னுயி ரனைத்துமே.
௫௬0
௫௭-ம் அதி.–பொறுமை கொள்ளல்.
பொறுமை பிறர்மிகை பொறுக்கு நற்குணம்.
௫௬௧
தன்னலங் கெடுங்காற் சகிப்பது பொறுமை.
௫௬௨
பொதுநலங் கெடுங்காற் பொறுப்பது பிழையே.
௫௬௩
வறுமைப் பிணிக்குப் பொறுமைநன் மருந்தாம்.
௫௬௪
சிறுமையை வளர்ப்பது பொறுமையில் லாமை.
௫௬௫
பொறுமையைக் கொண்டவர் புவியெலாங் கொள்வர்.
௫௬௬
பொறுமையை யிழந்தவர் புசிப்பவு மிழப்பர்.
௫௬௭
ஒறுத்தார்க் கொருகணத் தொருசிறி தின்பமாம்.
௫௬௮
பொறுத்தார்க் கென்றும் பொன்றா வின்பமாம்.
௫௬௯
ஒறுத்தார் சிறியர் பொறுத்தார் பெரியர்.
௫௭0
௫௮-ம் அதி.–ஒப்புர வொழுகல்.
ஒப்புர வூரா ரொப்பு நன்னடை.
௫௭௧
ஒப்புர வுயர்தர வொழுக்கத் தின்முதல்.
௫௭௨
ஒப்புர வொழுகுவார்க் குறவினர் பெருகுவர்.
௫௭௩
ஒப்புர விலாரை வொருவருந் தழுவார்.
௫௭௪
அறிஞரி னொப்புர வறவோர்க் குதவல்;
௫௭௫
துறந்தா ரிறந்தார் துவ்வார்க் குதவல்;
௫௭௬
ஊர்ப்பொது நன்மைக் குழைத்தெலாஞ் செய்தல்;
௫௭௭
ஊரார் நன்மை தீமைக் குதவுதல்;
௫௭௮
ஊரார் வேண்டுவ வுவந்துட னளித்தல்;
௫௭௯
ஊரா ராணைக் குட்பட் டொழுகல்.
௫௮0
௫௯-ம் அதி.–ஈகை புரிதல்.
இல்லார்க் கீவதே யீகை யென்ப.
௫௮௧
மற்றையோர்க் கீதன் மாற்றிலா மடமை.
௫௮௨
இல்லா ருள்ளு நல்லார்க் கீக.
௫௮௩
பிறருக் கீதல் பிழையென வறிக.
௫௮௪
மடையரே மடியரே பிணியரே யில்லார்.
௫௮௫
மடையர்க் கீக மதியெனு மொன்றே.
௫௮௬
மடியர்க் கீக தொழிலெனு மொன்றே.
௫௮௭
மற்றையோர்க் கீக மருந்தூ ணிடனே.
௫௮௮
உடையவ ரீதற் குரிய ராவர்.
௫௮௯
ஈகை புகழ்சிறப் பெல்லா நல்கும்.
௫௯0
௬0-ம் அதி.–புகழ் செய்தல்.
புகழுய ருலகம் புகலு நன்மொழி.
௫௯௧
புகழ்செய் தவரே பொன்றாது நிற்பவர்;
௫௯௨
அறமுத னான்கு மாற்றிமெய் யடைந்தவர்.
௫௯௩
புகழ்செய் யாரே பொன்றி யொழிந்தவர்;
௫௯௪
நான்கி லொன்றை நண்ணா திழிந்தவர்.
௫௯௫
மெய்ப்புகழ் தருவன மெய்யிய லடைதல்;
௫௯௬
உலக முழுவது மொருங்கர சாளுதல்;
௫௯௭
அறமுத னாங்கு மறிந்துசெய் துரைத்தல்;
௫௯௮
உற்றவர்க் கெல்லா முடனுவந் துதவல்;
௫௯௯
இல்லார்க் கெல்லா மீந்து வாழ்தல்.
௬00