17 வது அதிகாரம்

அணங்கோ ? ஆய்மயிலோ ?

மூர்ச்சையடைந்து இரவு பன்னிரெண்டு மணிக்குக் கீழே வீழ்ந்த மேனகா மறுநாட் காலை எட்டு மணிக்கே தனது உணர்வை ஒரு சிறிது பெற்றாள். அவ்வளவு நீண்ட நேரம் வரையில், அவளது தேகம் உணர்வற்று, உயிர்ப்பற்று, அசைவற்று, ஒய்ந்து, ஜடத்தன்மை யடைந்து இவ்வுலகையும், தன்னையும் மறந்து சவம் போலக் கிடந்தது. அவளது ஜீவனோ மண்ணிலு மின்றி விண்ணிலுமின்றி அந்தத் தேகத்தை விட்டுப் பிரிந்ததோ பிரியவில்லையோ வென்னும் சந்தேக நிலைமை யில் எவ்விடத்திலோ மறைந்து கிடந்தது.

மெல்லிய மலர்கள் மூக்கிற்கருகில் வருதலால் வாடிக்குழைந்து போதலைப்போல உத்தம ஜாதிப் பெண்களின் மனதும் தேகமும் காமாதுாரரது சொல்லால் குழைந்து கருகிப்போகுமல்லவா! அவ்வாறே மேனகா வென்னும் மெல்லியலாள் எதிர்பாராத பெருத்த விபத்திற் பட்டு அன்றிரவில் நெடுநேரம்வரையில் நைனா முகம்மது மரக்காயனுடன் போராடவே, அவளது மனதும் மெய்யும் அளவுகடந்து அலட்டப்பட்டு நெகிழ்ந்து போயின. உயிரிலும் அரியதான தனது கற்பை, அந்தக் கள்வன் அபகரித்து விடுவானோவென்ற சகிக்கவொண்ணா அச்சமும் பேராவலும் பொங்கியெழுந்து அவளை வளைத்துக் கொண்டன. கணவனது சுகத்தைப் பெறாமல் நெடிய காலமாய் பெருந்துன்பம் அநுபவித்து அலமாந்து கிடந்த தன்னைத் தனது ஆருயிர்க் கணவன் கடைசியாக வரவழைத்து ஒப்பற்ற அன்பைக் காட்டி இன்பக்கடலிலாட்டிய காலத்தில், அதை ஒரு நொடியில் இழந்துவிட நேர்ந்ததைக் குறித்துப் பெரிதும் ஏங்கினாள். தனது பிராணநாதனை இனி காணல் கூடுமோ கூடாமற் போகுமோ வென்ற பெருந்துயரமும் பேரச்சமும் உரமாக எழுந்து வதைத்தன. நைனா முகம்மதுவின் காமாதுரமான தோற்றமும் மோகாவேசக் குறிகளும் வரம்பு கடந்த கன்னகடூரமான சொல்லம்புகளும் பசுமரத்தாணிபோல அவளது உள்ளத்தில் தைத்து ஊடுருவிப் பாய்ந்து அதை சல்லடைக் கண்ணாய்த் துளைத்துப் புண்படுத்திய தாதலின், தத்தளித்து மயங்கி தற்கொலை புரிந்து கொள்ள வெண்ணி, தனது மெல்லிய இயற்கைக்கு மாறாக மிகவும் வற்புறுத்தி வலுவையும் மனோ உறுதியையும் வருவித்துத் தனது தேகத்திற்கும் மனதிற்கும் ஊட்டி, விண்ணென்று சுருதி கூட்டப்பட்ட வீணையைப்போல இருந்த தருணத்தில் தந்தியருதலைப்போல, அவளது கரத்திலிருந்த கத்தியை யாரோ பிடுங்கிக்கொள்ளவே அவளது வீராவேசமும், மனதின் உரமும், உறுதியும் ஒரு நொடியில் உடைந்து போகும் நீர்க்குமிழியைப்போல, இருந்தவிடந்தெரியாமற் போகவே, அவளுடைய அங்கம் முற்றிலும் தளர்வடைந்து நிலை தடுமாறிப்போனது. தனது கத்தியைப் பிடுங்கினவன் அந்த மகம்மதியனே யென்னும் அச்சமும், இனி தனது கற்பு நிலையாதென்னும் அச்சமும் பெரும் பேய் அறைதலைப் போல, அவளுடைய மனத்தைத் தாக்கவே, அவளது மூளையும், அறிவும் சிதறிப்போயின. சிரம் கிருகிரென்று சுழன்றது. ஒரு விநாடிக்குள் அவள் வேரற்ற மரம்போலக் கீழே படேரென்று வீழ்ந்து மூர்ச்சித்தாள். முகம் வெளுத்துப் பிணக்களை பெற்றது. நித்திரைக்கு அப்பாலும் மரணத்திற்கு இப்பாலுமான இருண்ட நிலைமையில் நெடுநேரம் வரையில் அவளது உணர்வு ஆழ்ந்து கிடந்தது.

மேற்கூறப்பட்டபடி மறுநாட்காலை எட்டு மணிக்கே பூந்தோடுகள் போன்ற அவளது அழகிய இமைகள் சிறிது விலகின. வெளுத்திருந்த வதனத்தில் இரத்த ஓட்டம் காணப்பட, ரோஜா இதழின் நிறம் தலை காட்டியது. ஆனால், அவளது விழிகள் தமது தொழிலைச் செய்யாமல் வெறும் விழிகளாயிருந்தன. வெளியிலிருந்த எந்தப் பொருளையும் அவ்விழிகள் உட்புறத்திற்குக் காட்டவில்லை. ஆனால், அவைகள் உட்புறத்தின் தன்மையை மாத்திரம் நன்றாக வெளியில் தோற்றுவித்தன. மூளையின் குழப்பமும், உணர்வின்மையும் நிதரிசனமாக விளங்கின. அவ்வாறு பிளவுபட்ட இமைகள் இரண்டொரு நிமிஷ நேரத்தில் சோர்வடைந்து சேர்ந்துகொண்டன. அவள் திரும்பவும் சவம் போலானாள். மிக்க பயங்கரமாக இருண்ட இரவுகளில் எப்போது இரவு தொலையுமென்றும் எப்போது பொழுது புலருமென்றும் மனிதர் வருந்துகையில் நெடுநேரத்திற்கு முன்னரே கோழி கூவி பொழுது விடியுமென்னும் நம்பிக்கை உண்டாக்குதலைப்போல மேனகாவை நாகபாசமெனக் கட்டி அழுத்தியிருந்த இருள் விலகுமென்பதை அவளது இமைகள் முன்னால் அறிவித்தன. அதனால், அவளது உடம்பு மாத்திரம் இன்னமும் அசைவற்றே கிடந்தது; காணாமற்போன மனிதரைத் தேடியழைத்து வர வேவுகாரரை அனுப்புதலைப் போல, மறந்துபோன அவளது உணர்வைத் தேடிக்கொண்டு வரும் பொருட்டு அன்றிரவு முதல் காலை வரையில் உள்ளே செலுத்தப்பட்ட மருந்துகள் தமது அலுவலை மிகவும் திறமையோடு செய்து, எமனுலகம் வரையிற் சென்று முஷ்டி யுத்தம் செய்து, அதைத் திரும்பிக் கொணர்ந்து, அவளுடைய உடம்பை இறுக அழுத்திக் கொண்டிருந்த இரும்புக் கதவுபோன்ற உணர்வின்மையை உடைத்து அதில் ஒரு சிறிய துளை செய்து, உட்புறத்தில் உயிரைப் பெய்தன. அவளது உயிராகிய விளக்கு நன்றாய்ப் பிடித்துக்கொண்டு சுடர்விட்டு எரிய ஆயத்தமாய் புகைய ஆரம்பித்தது. அவளது மனதில் உடனே ஒரு சிறிது உணர்ச்சி உதயமானது. அவ்வுணர்ச்சியில் ஒரே குழப்பமும் உடம்பு முற்றிலும் ஒரே இரணகாயமா யிருப்பதும் தெரிந்தனவன்றி, தான் யாவரென்பதும், தானிருந்த இடம் எதுவென்பதும், தனக்கு நேர்ந்த துன்பங்கள் இன்னின்ன வென்பதும் மனதிற் புலனாகவில்லை. இன்னமும் தேகமும் மனதும் சலனப்பட்டு இயங்காமல் ஜடத்தன்மையான நிலைமையில் இருந்தன. மேலும், கால் நாழிகையில் புகையின் நடுவில் மெல்லிய சுடர் எழுதலைப்போல அவளது உயிரும் உணர்வும் சிறுகச்சிறுக வலுவடைந்து பெருகின. தான் மேனகா வென்பதை அப்போதே அவள் உணர்ந்தாள். தான் தனது இல்லத்தில் படுத்துத்துயில்வதாயும், அதில் பயங்கரமான கனவு கண்டு கொண்டிருப்பதாயும் ஒரு எண்ணம் அவளது மனதில் உதிக்க ஆரம்பித்தது. தனது நாத்திமார்களும், அவர்களது துர்ப்போதனையால் தனது கணவனும் தன்னைக் கொடுமையாய் நடத்தியதும், அவர்கள் சொன்ன சொற்களும், புரிந்த செய்கையாலும் , தான் பிறகு ஒரு வருஷகாலம் தஞ்சையில் தவித்துக் கிடந்ததும், அப்போதே நிகழ்வன போலக் காணப்பட்டன. தான் இன்னமும் தஞ்சையில் இருப்பதாகத் தோன்றியது. அவளது உணர்வு மேலும் அதிகரிக்க அதிகரிக்க, முற்றிலும் சிதறிக் குழம்பிக்கிடந்த மனது தெளிவடையத் தொடங்கியது. தான் தனது கணவனிடம் திரும்பி வந்ததும், அவனுடன் ஐந்து நாட்கள் புதிய வாழ்வாக வாழ்ந்து பேரின்பச் சுகமடைந்ததும் தோன்றின. கடைசியில் தனது கணவன் சேலத்திற்குப் போன அன்றிரவு சாமாவையர் தன்னையும் பெருந்தேவியம்மாளையும் நாடகம் பார்க்க அழைத்துச் சென்ற நினைவு மெல்ல மனதில் தலைகாட்டியது. அதன்பிறகு தான் மகம்மதியன் வீட்டில் தனிமையில் விடப் பட்டதும், அங்கு ஒரு யெளவன மகம்மதியன் தோன்றியதும், அதன்பிறகு நேர்ந்த விஷயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அவளது நினைவில் நாடகக் காட்சிகளைப்போலத் தோன்றின. முடிவில், தான் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை புரிய முயன்றதும், அப்போது திடீரென்று ஒருவர் தோன்றிக் கத்தியைப் பிடுங்கிக்கொண்டதும் தெளிவாக விளங்கின. கத்தி பிடுங்கப்பட்ட பிறகு நடந்த தென்ன வென்பது அவளுக்குத் தெரியவில்லை. அதன் பிறகு எட்டு மணிநேரம் இடைவேளை கழிந்ததென்பதை அவள் அறிந்தவளேயன்று. அது இன்னமும் இரவென்றும், முந்திய நிமிஷத்திலேதான் கத்தி பிடுங்கப்பட்டதென்றும் எண்ணினாள். அன்றிரவில் நிகழ்ந்த விஷயங்கள் யாவும், உண்மையில் சம்பவிக்கக்கூடாத அசாதாரணமானவைகள். ஆதலால், அவைகள் நிஜத்தில் நடந்தனவென்று அவள் மனது நம்பிக்கை கொள்ளவில்லை. தான் கனவு காண்பதாகவே அவள் உறுதியாக நினைத்தாள். ஆனால், அது எதுமுதல் எதுவரையில் கனவென்பதை நிச்சயிப்பதே கூடாமல் குழப்பத்தை உண்டாக்கியது. தான் நாடகம் பார்க்கப் போனதும் அதன் பின்னர் நடந்தவைகளும் கனவா, அன்றி, தான் தகப்பன் வீட்டிலிருந்து திரும்பிவந்ததும், இன்புற்று வாழ்ந்ததும், பிறவும் கனவா, அன்றி, தான் தஞ்சைக்குப் போனதும், அவ்விடத்தில் ஒரு வருஷமிருந்தது முதலியவும் கனவா, அன்றி, தன்னைத் தனது கணவன் முதலியோர் கொடுமையாய் நடத்தியது கனவா என்று அவளுடைய குழப்பம் பெருங்குழப்பமாய்விட்டது. “உலகமே பொய்; அதிலுள்ள பொருட்கள் பொய்; எல்லாம் மாயை, பொருட்களே கிடையாது” என்று மாயா தத்துவத்தைப்பற்றி வாதிப்போருக்கு, தமது தேகமும், தாம் பேசுவதும், தாம் நினைப்பதும், தாம் உணர்வதும் எல்லாமே பொய்யாகத் தோன்றுதலைப்போல, மேனகாவின் மனதிற்கு அப்போது எல்லாம் பொய்யாகவும், மெய்யாகவும் தோன்றியது. பாவம் மனிதருக்கு உணர்வு என்னும் அந்த ஒப்பற்ற ஒரு வஸ்து தனது நன்னிலைமையை இழந்துவிடுமானால், அப்புறம் அவர்கள் மனிதரல்லர். யெளவனம் கட்டழகு காந்தி முதலிய எத்தகைய உயர்வுகளும் அருமை பெருமைகளும் இருப்பினும் அவை சிறிதும் மதிப்பற்றவையாம். அங்ஙனமே ஆனது அவளது நிலைமை. தான் மேனகாதானா, தான் டிப்டி கலெக்டருடைய பெண்தானா என்னும் பெருத்த சந்தேகம் தோன்றியது. கண்களைத் திறந்து தனது உடம்பைப் பார்த்து அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள நினைத்தவளாய், நலிந்த தமது நேத்திரங்களைத் திறந்து தனது மேனியை உற்று நோக்கினாள்; என்ன ஆச்சரியம்! தனது உடம்பு மேனகாவின் உடம்பாகத் தோன்றவில்லை தும்பைப்பூவிலும் அதிகமான வெண்மை நிறத்தைக் கொண்ட மெல்லிய மஸ்லின் துணியொன்று தனது தேகத்தில் ஒரு சுற்றாக அணியப்பெற்றிருந்தது! தனது விலையுயர்ந்த மேகவர்ணப்பட்டாடை, பாப்பு, கொலுசு, காசுமாலை, அட்டிகை முதலியவை தனது தேகத்தில் காணப்படவில்லை. அவற்றை தனது தேகத்திலிருந்து எவரும் விலக்கியதாகவும் அவளுக்கு நினைவுண்டாகவில்லை. தன்னுடைய கரத்திலிருந்த கத்தியை மாத்திரம் யாரோ சற்று முன்னே பிடுங்கியது நினைவுண்டாயிற்று. தான் கண்ணை மூடித் திறப்பதற்குள் அத்தகைய மாறுதல் தனது தேகத்தில் வந்திருப்பதென்ன விந்தை அது இந்திரஜாலம் மகேந்திர ஜாலமோ சே! எல்லாம் தவறு! எல்லாம் பொய் தான் காண்பது கனவே! என்று நினைத்த அவளது பேதை மனம் முற்றிலும் குழம்பிச் சோர்வடைந்து போயிற்று. மனத்தி லெழுந்த எண்ணிறந்த சந்தேகங்களின் சுமையைத் தாங்க மாட்டாமல் மனம் தவித்து மழுங்கி ஓய்வை அடைந்து விட்டது ஆகையால், கண்ணிமைகள் மூடிக்கொண்டன! அவளது மனம், தன் குழப்பத்தால், தன்னையே ஏமாற்றிக்கொண்டது. வெள்ளை வஸ்திரத்தை விதவைகளே அணிபவர். தான், ஒருநாளும் மஸ்லின் துணியை அணிந்ததில்லையே. தானறியாவகையில் அது அப்போது தனது உடம்பில் எப்படி வந்தது? தான் மேனகாவன்று; வேறு யாரோ ஒருத்தி என்று நினைத்து எண்ணாததெல்லாம் எண்ணி மயக்கமும் குழப்பமும் அடைந்தாள்.

மேலும் அரை நாழிகை சென்றது. ஊற்றுக் கண்களிலிருந்து தெளிந்த நீர் ஊறுதலைப்போல, அவளுடைய உணர்வு பெருகி தெளிவைப் பெறப் பெற, விஷயங்கள் யாவும் உண்மையாகவே தோன்றின. தான் மேனகா தான் என்னும் நினைவு இயற்கையாகவும், உறுதியாகவும் அவளது மனதில் எழுந்து மாறுபடாமல் நிலைத்து நின்றது. தான் கனவு காணவில்லை யென்பதும் தெளிவாகத் தெரிந்தது. அப்படியானால், தானறியாமல், தன்னுடம்பில் வேறு வஸ்திரம் எப்படி வந்தது, தனது பட்டுத் துகிலை எவர் களைந்தவர் என்ற சந்தேகங்களே இப்போது உரமாக எழுந்து வதைத்து அவள் மனதில் வேறு பலவித பயங்கரமான யூகங்களுக்கு இடங் கொடுத்தன. பெருத்த வேதனை உண்டாயிற்று. தனது கையிலிருந்த கத்தியைப் பிடுங்கிக் கொண்ட மகம்மதியனே தனது ஆடையை மாற்றினவ னென்றும், அவன் தனது கற்பை பிடுங்கமுற்பட்டபோது தான் மயங்கிக் கீழே தரையில் விழுந்ததாக கனவைப் போல ஒரு ஞாபகம் உண்டாயிற்று. உண்மை அப்படி இருக்க, தான் இப்போது விலையுயர்ந்த உன்னதமான கட்டிலில், மிக்க இன்பகரமான வெல்வெட்டு மெத்தையின் மீது படுத்திருப்பதன் முகாந்தரமென்ன வென்பதை நினைத்தாள். தனது கற்பு ஒழிந்துபோன தென்பதை தனது சயனம் உறுதிப்படுத்தியது. என்ன செய்வாள்! அவளது தளர்வடைந்த மனது பதறியது. வேதனையும் வியாகுலமும் பெருத்த கோபமும் மகா உரத்தோடு எழுந்து மனதிற் குடிகொண்டன. அவளது தேகமோ அவளுக்குச்சகிக்க இயலாத அருவருப்பைத் தந்தது. தனது உடம்பைப் பார்ப்பதற்கே கண் கூசியது. மகம்மதியனைத் திரும்பவும் பாராமல் தற்கொலை புரிந்துகொள்ள முயன்ற தனது எண்ணத்தில் மண்விழுந்து போனதை நினைத்து பெருந்துயரமும் ஆத்திரமும் அடைந்தாள். களங்க மடைந்துபோன தனது இழிவான தேகத்தை உடனே சாம்பலாக எரித்து அழித்துவிட தனக்கு வல்லமை யில்லையே என்று நினைத்துப் பதைத்தாள். அவ்வளவு நாழிகை தனது வேசைச் சரீரத்தைச் சுமந்திருப்பதைப் பற்றி ஆறாத் துயரமடைந்தாள். கட்டிலின் மீது தனக்கருகில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தது அவள் மனதில் அப்போதே புலனாயிற்று. அது தன்னைக் கெடுத்த மகம்மதியனே என்று நினைத்தாள். அவள் மனதில் ரெளத்திராகாரமாய்க் கோபம் பொங்கி எழுந்தது.

அந்த அசங்கியமான படுக்கையில், அன்னிய புருஷனுக்கருகில் தானிருப்பதாக நினைத்து, தான் ரெளரவாதி நரகத்தில் இருப்பதாக எண்ணிப் பதறினாள். அவ்விடத்தை விட்டெழுந்து அப்பாற் செல்ல நினைத்து மிகவும் வற்புறுத்தி முயன்று பார்த்தாள். அவளது மனது மாத்திரம் துடித்ததன்றி, தேகம் ஒரு சிறிதும் அசையும் வல்லமை அப்போது இல்லாதிருந்தது. தான் நினைத்த விதம் கண்களைத் திறந்து நோக்கவும் இயற்கையான திறனுண்டாகவில்லை. தேகம் ஜடப் பொருளாய்க் கிடந்தது. தேகவலுவற்றவருக்கு மற்றையோரிலும் கோபமும், ஆத்திரமும் அதிகமென்பது யாவரும் அறிந்த விஷயமாம். அதற்கிணங்க, செயலற்றுக்கிடந்த மேனகா தன் மனதில் பொங்கி எழுந்த சீற்றத்தைக் கடவுன் மீது திருப்பினாள். நிரபராதியான ஜெகதீசனை நினைத்த விதம் துஷிக்கலானாள். “ஆ பாழுந் தெய்வமே! உன் கோவில் இடியாதா? நீநாசமாய்ப் போக மாட்டாயா? என்னை இப்படிக் கெடுத்து சீர்குலைத்துக் கண்ணாரப் பார்க்க வேண்டுமென்று எத்தனை நாளாய் நினைத்திருந்தாய்! என் வயிறு பற்றி எரிகிறதே மனம் பதைக்கிறதே! உயிர்துடிக்கிறதே! தெய்வமே, நீ கருணாநிதி யென்று அழைக்கப்படக் கொஞ்சமும் யோக்கியதை உள்ளவனா நீ! முற்காலத்தில் நீயா திரெளபதியின் மானத்தைக் காத்தவன்! எவனோ புளுகன் எழுதி வைத்தான் மகா பாரதத்தை! சதிகார தேசத்திற்கு கொலைகாரன் அரசனாம் என்பதைப்போல உன்னுடைய மகிமை இருக்கிறது. உன்னுடைய படைப்பும், உன்னுடைய நியாயமும் நன்றா யிருந்தன! இந்தப் பாழும் உலகத்தில் கற்பாம்! நீதியாம்! சே! மூடத்தனம்!” என்று கடவுள் மீதும், உலகத்தின் மீதும், தனது தேகத்தின் மீதும் பெரிதும் ஆத்திரமும் வெறுப்பும் கொண்டு தூஷித்துத் திரும்பவும் அநாசாரம் பிடித்த அந்த மெத்தையை விடுத்து எழுந்து அப்பால் போய், நொடியேனும் தாமதியாமல் தனது உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தாள். அவளது மனம் பம்பரம்போலச்சுழன்றது. ஆனால், அவளதுதேகம், ஒரே பச்சை புண்ணாகவும், இரணக் குவியலாகவும், அசைவற்று கட்டிற்கடங்காது கிடந்தது. மனது மாத்திரம் புதிதாய்ப் பிடித்துக் கூண்டில் அடைக்கப்பட்ட கிள்ளைப் போல படபடத்து தவித்தது.

அந்த நிலைமையில் அவளுக்கு அருகில் மெத்தையில் உட்கார்ந்திருந்தவர் தமது கரத்தால் அவளது முகத்தைத் தடவிக் கொடுத்ததாக அவளுடைய உணர்வில் புலனாயிற்று. அந்தக் கை ஆண்பிள்ளையின் முரட்டு கையாகத் தோன்றவில்லை. அது பூவிதழைப்போல மிருதுவாயும், குளிர்ச்சியாயும் இருந்தது. பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, பனிக்கட்டி முதலியவை கலக்கப்பட்ட சந்தனம், ஜுர நோய் கொண்டவனது உடம்பில் பூசப்படுதலைப்போல, அது அளவு கடந்து இனிமையாய்த் தோன்றியது. உடனே “மேனகா! அம்மா மேனகா!” என்ற ஒரு குரல், அருகில் உண்டாயிற்று; அந்தக் குரல் குயிலையும், குழலையும், யாழையும், பாகையும், தேனையும் பழித்ததாய், சங்கீத கானம் போன்றதாய், அமுதத் துளிகளையும் குளிர்ச்சியையும் ஒருங்கே சொரிந்து செவிகளில் இனிமையைப் பெய்வதாய் கணிரென்று சுத்தமாய் ஒலித்தது. எதிர்பாராத அந்தக் குரலைக் கேட்டுத் திகைத்த மேனகா, அது தேவகானமோ சாமகானமோ வென்று சந்தேகித்து வியப்புற்றாள். அது ஒரு பெண்மணியின் குரலென்பது சந்தேகமற விளங்கியது. தன்னை அபகரித்து வந்த மகம்மதியனது குரலுக்கும் இந்தக் குரலுக்கும் பெருத்த வேறுபாடு காணப்பட்டது. ஒன்றைப் பறையோசைக்கு ஒப்பிட்டால் இன்னொன்றை வீணா கானத்திற்கே ஒப்பிடல் வேண்டும். ஆதலின், இப்போதுண்டானது அந்த மகம்மதியனது குரலன்று என்பதும், இது ஒரு பெண்பாவையின் இனிய குரலென்பதும், எளிதில் விளங்கி விட்டன. தனக்கு அருகில் இருப்பது மகம்மதியனல்லன் என்றும், அது அவனது பணிப் பெண்ணாகவேனும் அல்லது உறவினளாகவேனும் இருக்க வேண்டும் என்றும் யூகித்துக் கொண்டாள். தனது உணர்வு அறிய தான் அன்னிய புருஷனைத் தீண்டியதான இழிவும் பாவமும் இல்லாமற் போனதைக் குறித்துப் பெரிதும் மகிழ்வடைந்தாள். ஆனால், அந்த அற்பமான இன்பமும் ஒரு நிமிஷமே மனதில் நிலைத்து நின்றது. ஏனெனில், தனது கற்பை ஒழிந்தது நிச்சயமே என்ற அருவருப்பு நினைவில் திரும்பவே அவளது மனக்களிப்பு கைப்பாக மாறியது. தான் கண்களைத் திறந்து தனக்கருகிலிருந்த அந்த மாதை, வெட்க மில்லாமல் பார்த்து எப்படி அவள் முகத்தில் விழிப்பது என்று நினைத்து மேனகா மனமாழ்கினாள். அவளது தேகம் குன்றியது. அவள் கண்ணைத் திறவாமலே இரண்டொரு நிமிஷ நேரம் கிடந்தாள். முன்னரே அறியாத அயலார் வீட்டில், அதுவும், அவனது கட்டிலின் மேல்தான் எவ்வளவு நேரம் அவ்வாறு கண்ணை மூடிப் படுத்திருத்தல் கூடுமென்றும், அப்படி யிருப்பதால் இழிவே யன்றி தனக்கு யாது பயனென்றும், தான் அவ்வாறு கிடப்பது ஒழுங்கல்ல வென்றும் நினைத்தாள். மெல்ல தனது கண்ணைத் திறந்தாள். அவள் ஒரு புறமாகத் திரும்பிப் படுத்திருந்தவளாகையால், அருகில் இருந்தவளை முதலில் பார்க்கவில்லை. அவளது அகன்ற சுந்தரவிழிகள் ஒரு நொடியில் அந்த அறையை நன்றாக ஆராய்ந்தன. உடனே ஒரு விஷயம் எளிதில் விளங்கியது. அது, தான் மகம்மதியனோடு தனிமையிலிருந்த அறையல்ல வென்பது நிச்சயமாயிற்று. தான் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு வந்ததையும், தனது தேகத்திலிருந்த ஆடையாபரணங்கள் விலக்கப் பட்டதையும், தான் அறியாதுபோனது என்ன மாயமோ என்று திகைத்தாள். அப்போது தான் துயின்றாளோவென்று சந்தேகித்தாள். அல்லது மயக்கந்தரும் மருந்தை, அந்த மகம்மதியன் தனது வஞ்சகத்தால், தன் உடம்பில் செலுத்தி விட்டானோ வென்று எண்ணாத தெல்லாம் எண்ணினாள். அந்த இடமும் மிக்க அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு சயன அறையாய்க் காணப் பட்டது. எங்கும் அழகிய மலர்களையும், இலைகளையும் கொண்ட தொட்டிகளும் சம்பங்கிக் கொடிகளும், ரோஜா செடிகளும், நிலைக் கண்ணாடிகளும், படங்களும், பதுமை களும், நாற்காலிகளும் சோபாக்களும், பிறவும் நிறைந் திருந்தன. தானிருந்த கட்டிலும் அதன் மீதிருந்த மெத்தையும், திண்டு, தலையணைகளும், ஏராளமான மெல்லிய பட்டுப் போர்வைகளும், பட்டுத் துப்பட்டிகளும், சால்வைகளும், கொசு வலைகளும் விலை மதிப்பற்றவை யாவும், ஒரு சிறிய மாசுமற்றவையாயும் இருந்தன. மனிதரது பஞ்சேந்திரி யங்களுக்கும் சுகம் தரத்தக்க பொருட்கள் யாவும் அந்த அறையில் காணப்பட்டனவாயினும், மிகவும் மேம்பட்ட மகா ராஜனும், அங்கிருந்த இனிய போகத்தில் ஆழ்ந்து ஈடுபட ஆவல் கொள்ளத் தக்கனவாய் அவை காணப்படினும், மேனகா தான் தீத்தணல்கள், தேள்கள், பாம்புகள் முதலியவற்றின் மீது கிடப்பதாக எண்ணங்கொண்டு அருவருப்படைந்து வருந்தினாள். அவளது விழிகள் அந்த அறையை ஆராய்ந்த போது இன்னொரு புதுமை அவளது காட்சியில் பட்டது. கட்டிலிற்கு அருகிலிருந்த ஒரு நாற்காலியில் வெள்ளைக்கார துரைசானி உட்கார்ந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டாள். அவளது வயது சற்றேறக்குறைய முப்பத்தைந்திருக்கலாம். மெலிந்ததும் கம்பீரமாக நீண்டதுமான அழகிய தேகத்தைக் கொண்ட அந்த மாது, தனது இடக்கரத்தில் ஒரு சிறிய தோல் பையையும், வலக்கரத்தில் வைத்தியர் பிணியாளரின் மார்பில் வைத்து நாடி பார்க்கும் குழாயையும் வைத்திருந்தாள். அந்த துரைஸாணியை தான் அடிக்கடி பார்த்திருப்பதாக உடனே மேனகாவுக்கு நினைவுண்டாயிற்று. தான் அவளைக் கண்டது எவ்விடத்தில் என்று மேனகா யோசனை செய்தாள். தனது கணவன் வசித்த தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலுள்ள வீடுகளில் பெண்பாலருக்கு வைத்தியம் செய்ய அவள் அடிக்கடி வந்துபோனதைத் தான் கண்டதாக எண்ணினாள். அவள் தனது கண்ணைத் திறந்து புதுமையான அத்தனை விஷயங்களையும் கண்டதனால் மிகவும் சோர்வடைந்தாள். இமைகள் திரும்பவும் மூடிக்கொண்டன.

கால் நாழிகை வரையில் அயர்வடைந்து உணர் வற்று உறங்கினாள். மறுபடியும் தனது உணர்வைப் பெற்றாள். திரும்பவும் மனது வேலை செய்யத் தொடங்கியது. தனக்கருகில் துரைஸானி உட்கார்ந்திருப்பதி லிருந்து, தனக்கு ஏதோ தேக அசெளக்கியம் உண்டான தென்றும், அதன் பொருட்டு அவள் வந்திருப்பதாகவும் யூகித்துக்கொண்டாள். தனக்கு எவ்விதமான நோயுண்டானது என்பதைப்பற்றி நினைத்துப் பார்த்தாள். ஒரு கால்தான் தன்னைக் கத்தியாற் குத்திக் கொண்டதனால் இரணம் ஏற்பட்டதோ வென்று ஐயமுற்றாள். தனது தேகத்தில் எந்த இடத்தில் நோவுண்டாகிறது என்பதை அறிய தனது தேக நிலைமையை ஊன்றி அகக்கண்ணால் நோக்கினாள். பொதுவாக தேகம் முற்றிலும் மரத்துப் புண் பெற்று அசைவின்றித் தோன்றியதே யன்றி ஏதாயினும் குறித்த விடத்தில் எத்தகைய பிணி இருப்பதாகவும் புலப்படவில்லை. ஆதலால் அவள் அவ்விஷயத்தில் எத்தகைய முடிவிற்கும் வரக்கூடாமற் போனது. அப்போது பகல் நேரமா யிருந்ததை உணர்ந்தாள். தான் இரவு பன்னிரண்டு மணிக்கே தற்கொலை செய்து கொள்ள முயன்றது என்பதும், அப்போதே கத்தி பிடுங்கப்பட்டது என்பதும் நினைவிற்கு வந்தன. இடைவேளையான அவ்வளவு நீண்ட காலம் தான் உணர்வற்றோ துயின்றோ இருந்திருக்க வேண்டு மென்பதும், அப்போதே உடை மாற்றப்பட்ட தென்பதும் ஒருவாறு விளங்கின. தனது பெயரைச் சொல்லி அன்பே நிறைவாக அழைத்த பெண்மணி யாவள் என்பதை அறிய ஆவல் கொண்டவளாய், மிகவும் பாடுபட்டுத் தனது வதனத்தைச் சிறிது இப்புறம் திருப்பி தனக்கருகில் இருந்தவளை நோக்கினாள். அருகில் உட்கார்ந்திருந்த யெளவன மங்கை அந்தக் குறிப்பை யறிந்து, திரும்பவும் முன்போலவே அன்பாக அழைத்து, “அம்மா! உடம்பு இப்போது எப்படி இருக்கிறது தெரிவி; நாங்கள் யாரோ அன்னியர் என்று நினைக்காதே; நாங்கள் உன் விஷயத்தில் அந்தரங்கமான அபிமானம் உள்ளவர்கள்” என்று மிக்க உருக்கமாகக் கூறி, தனது கரத்தால் அவளது கன்னம் கரம் முதலிய விடங்களை அன்போடு மிருதுவாக வருடினாள். விடுபடும் வழியின்றி கொடிய நரகத்தினிடையில் கிடந்து தவிக்கும் ஒருவனது வாயில் ஒரு துளி தேன் சிந்தியதைப்போல, அத்தனை துன்பங்களின் இடையே அவ்வளவு மனமார்ந்த உண்மை அன்பை ஒருவர் தனக்குக் காட்டக் கிடைத்ததை நினைத்த மேனகா ஒரு நிமிஷம் தன்னை மறந்து ஆநந்தப் பரவசம் அடைந்தாள். அழகே வடிவாய் பூரண சந்திரோதய மென்ன ஜெகஜ்ஜோதியாய் கந்தருவ மாதைப்போல தனக்கருகில் உட்கார்ந்திருந்த பெண்மணியின் கபட மற்றதும், மென்மை, உத்தம குணம், பெருந்தகைமை முதலிய அரிய சிறப்புகளைக் கிரணங்களாய்ச் சொரிந்ததுமான அழகிய வதனத்தைக் காண மேனகாவின் மனதில் ஒரு வகையான நம்பிக்கையும், ஆறுதலும் இன்னமும் தோன்றின. காணக் கிடைக்காத அந்த அற்புதமான காட்சி உண்மையானதோ அன்றி பொய்த் தோற்றமோ வென்று உடனே ஐயமுற்றாள். மகா பயங்கரமான நிலையிலிருந்து தான், இரமணீயமான அந்த நிலைமையையடைந்த பாக்கியத்தை நினைத்து நினைத்து பெருமகிழ்வடைந்தாள். அந்த இன்பகரமான நிலையில் அவளது புலன்கள் தொய்ந்து எளிதில் தெவிட்டிப் போயின. மனதிலும், உணர்விலும் அந்த மனோகரமான அற்புதக் காட்சி எளிதில் பதிந்தது. அதற்கு முன், தன்னை ஒரு நாளும் கண்டறியாத அப் பெண்பாவை தனக் கருகில் உட்கார்ந்து, தனக்குரிய உபசரணைகளைச் செய்ததும், தன் மீது அவ்வளவு ஆழ்ந்த அபிமானம் காட்டியதும், தனது பெயரைச் சொல்லி யழைத்ததும் மேனகாவின் மனதில் பெருத்த வியப்பை உண்டாக்கின.

அவளது நடத்தை யெல்லாம் வஞ்சக நடத்தை யல்ல வென்பதும், அவள் மகா உத்தம ஜாதி ஸ்திரீ யென்பதும், அவளது முகத்திலேயே ஜ்வலித்தன. அவள் யாவள்? முதல்நாள் இரவு தன்னை வற்புறுத்திய மகம்மதியனுக்கு அவள் உறவினளா? பணிப்பெண்ணா? அல்லது அவனுக்கும் அவளுக்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லையா? அது முதல் நாளிரவில் தானிருந்த வீடுதானா? அல்லது வேறிடமா? கத்தி தனது கையினின்று பிடுங்கப்பட்ட பிறகு தனக்கு என்ன நேர்ந்தது? என்பன போன்ற எண்ணிறந்த சந்தேகங்களைக் கொண்டு அவற்றை வெளியிடவும் வல்லமை யற்று, பெரிதும் கலக்கமும், துன்பமும் அடைந்து திரும்பவும் சோர்ந்து காம்பொடிபட்ட ரோஜாவைப்போலக் கண்களை மூடிக்கொண்டு தலையணையில் சாய்ந்து விட்டாள். பிறகு நெடுநேரம் வரையில் அவள் இமைகளைத் திறக்கவுமில்லை. அவளது தேகம் அசையவுமில்லை. அவள் திரும்பவும் உணர்வற்ற நிலைமையில் வீழ்ந்து விட்டாள்.

மூர்ச்சையிலிருந்து மேனகா தெளிவடைந்ததையும், அவளது வதனம், தேகம் முதலியவற்றின் மாறுபாடுகளையும் மிகவும் ஆவலோடும் சிரத்தையோடும் கவனித்து உணர்ந்த துரைஸானியம்மாள், “நூர்ஜஹான்! நான் வைத்திய சாலைக்குப் போக நேரமாய்விட்டது. இனி இந்த அம்மாளைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை; மிகவும் விரைவில் நல்ல நிலைமையை யடைந்து விடுவாள். நான் போய்விட்டு மாலையில் திரும்பவும் வந்து பார்க்கிறேன். இவளே கண்விழித்துப் பேசினால் பதில்சொல்; அப்போதும் இவளது மனதை அலட்டாமல் பார்த்துக்கொள், பெருத்த பயத்தினால் உண்டான மன அதிர்ச்சி இவளது நரம்புகளை வரம்பு கடந்து தளர்த்திவிட்டது. நரம்புகள் மிகவும் தாமதமாகவே தமது சுய நிலைமையை யடைய வேண்டும்; நாம் இன்னம் சிறிது தாமதமாய் மருந்து கொடுத்திருப்போ மானால் இவள் இதுவரையில் பிழைத்திருப்பதே அரிதாய்ப்போயிருக்கும்; அதே மருந்தை மூன்று மணி நேரத்திற்கொருமுறை மார்பில் தடவிக்கொண்டே இரு; மூக்கினால் உள்புறம் செலுத்தும் மருந்தை இனி மூக்கினால் வார்க்க வேண்டாம். இவள் விழிக்கும்போது அதை வாயினாலேயே இரண்டொருமுறை செலுத்தினால் முற்றிலும் குணமுண்டாய்விடும்; நான் போய்விட்டு வருகிறேன்” என்று இங்கிலீஷ் பாஷையில் கூறினாள்.

நூர்ஜஹான் கவலையோடு; “இனி உயிருக்குப் பயமில்லையே?” என்றாள்.

துரைஸானி:- இல்லை, இல்லை. இனி அதைப்பற்றி கவலைப்படாதே; சந்தேகப்படக்கூடிய குறிகள் ஏதாவது இனி தோன்றினால் உடனே எனக்குச் செய்தியனுப்பு. பகல் பதினொன்றரை மணிநேரம் வரையில் நான் இராயப்பேட்டை வைத்தியசாலையில் இருப்பேன். அதன் பிறகு என்னுடைய பங்களாவிலேயே இருப்பேன். இவளுடைய புடவையையும், நகைகளையும், இப்போது அணிவிக்கவேண்டாம்; அவைகள் மாத்திரம் விலக்கப்படாமலிருக்குமாயின் தடைபட்ட இரத்த ஒட்டம் இவ்வளவு விரைவில் திரும்பியிராது. இந்த மஸ்லினே உடம்பில் இருக்கட்டும்; இதை நாளைக்கு மாற்றலாம்.

நூர்:- சரி; அப்படியே செய்வோம்; நடுராத்திரி முதல் நீங்கள் இங்கிருந்து பட்ட பாட்டிற்கு நான் எவ்விதம் நன்றி செலுத்தப்போகிறேன்! தவிர, இந்த விஷயம் இப்போது எவருக்கும் தெரிதல் கூடாது. இரகசியமாக இருக்க வேண்டும்; என்னுடைய கணவனது மானமோ அவமானமோ உங்களுடைய கையிலிருக்கிறது.

துரைஸானி :- நூர்ஜஹான்! அதைப்பற்றிக் கவலை கொள்ளாதே. எப்படிப்பட்ட இரகசியமானாலும், நான் அதை வெளியிட மாட்டேன். வைத்தியர்கள் அதை வெளியிடுதல் கூடாது. எவ்வளவோ அந்தரங்கமான வியாதிகளுக்கெல்லாம் நாங்கள் சிகிச்சை செய்கிறோம். அவற்றை வெளியிடுவதனால் எங்களுடைய தொழிலே கெட்டுப்போகுமே; இரகசியத்தைக் காப்பாற்றுதலே இந்தத் தொழிலின் நாணயம்; இதைப்பற்றி நீ யோசனை செய்யாதே. நான் போய்விட்டு வருகிறேன் - என்றாள்.

நூர்:- சரி, நீங்கள்மாலையில் வருவதற்குள் இவள் நன்றாக விழித்துக்கொண்டால், இவளுக்கு எவ்விதமான ஆகாரம் கொடுக்கிறது? இவள் பிராமணப்பெண் என்பதை பார்வையிலே நீங்கள் அறிந்து கொண்டிருக்கலாம். அதற்குத் தகுந்த விதம் ஆகாரம் கொடுக்க வேண்டும். நாங்கள் தயாரித்த ஆகாரத்தைக் கொடுப்பதாய்ச் சொல்லி, ஒரு பிராமண பரிசாரகனை அழைத்து வரும்படி ஆளனுப்பியிருக்கிறேன். இந்தப் பங்களாவில் நாங்கள் வசிக்கும் இடத்திற்கும் இதற்கும் இடையில் நெடுந்துாரம் இருக்கிறதென்பது உங்களுக்குத் தெரியும். விஷயத்தை யெல்லாம் நான் என்னுடைய தகப்பனாரிடம் சொல்ல வேண்டாமென்று நினைத்தேன். என்னுடைய அக்காள் அப்படிச் செய்வது தவறென்று நினைத்து அவரிடம் சொல்லிவிட்டாள். அவரே பரிசாரகனை அழைத்து வரும்படி ஆளை அனுப்பினார். ஒரு மனிதர் அவசியம் வருவார். ஒருவரும் அகப்படாவிட்டால், நாம் என்ன ஆகாரத்தைக் கொடுக்கிறது? - என்று கேட்டாள்.

துரைஸானி:- இப்போது எவ்விதமான ஆகாரமும் கொடுக்க வேண்டாம். உட்புறம் செலுத்தப்படும் இந்த மருந்திலேயே தேக புஷ்டிக்குரிய மருந்தும் கலக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், இன்று மாலை வரையில் பசியே தோன்றாது; ஒருக்கால் இவளே பசியென்று சொன்னால் சர்க்கரை கலந்து பாலில் சிறிதளவு கொடுப்பது போதும். இன்றிரவு பார்லி (Barley) அரிசிக் கஞ்சி கொடுக்கலாம். அதற்குள் நான் திரும்பவும் வருகிறேன்- என்று கூறியவண்ணம் அறையை விட்டு வெளியிற் சென்று தனது மோட்டார் சைக்கிலில் ஏறிக்கொண்டு போய்விட்டாள்.

அவளை அனுப்பிவிட்டுத் திரும்பி வந்த நூர்ஜஹான் பக்கத்திலிருந்த மருந்தை எடுத்து மேனகாவின் மார்பில் தடவி விட்டு, முன்போலவே அருகில் உட்கார்ந்துகொண்டு பரிதாபகரமாகக் காணப்பட்ட அவளது களங்கமற்ற முகத்தைப் பார்த்தவண்ணம் இருந்தாள். தனது கணவரும், பிறரும் செய்த சதியினால், ஒரு சூதையுமறியாத அப் பெண்பேதை அடைந்த நிலைமையைப் பற்றி நினைத்து நினைத்து வருந்தினாள். அவளைத் திரும்பவும் அவளது கணவனிடம் சேர்த்து, அவன் அவளது கற்பின் விஷயத்தில் எவ்வித ஐயமும் கொள்ளாதபடி திருப்தியடைந்து அவளை ஏற்றுக்கொள்ளும்படி எப்படிச் செய்வதென்னும் யோசனையே ஓயாமல் அவளது மனத்தில் எழுந்து பெருஞ்சுமையாக அழுத்தியது. அதைக் குறித்து எவ்விதமான முடிவிற்கும் வரக்கூடாமையால் தாமரை இலைத் தண்ணிரைப் போலத் தத்தளித்தாள். அவளது முழு வரலாற்றையும், அவள் வாய் மூலமாக எப்பது அறிவதென்பதைக் குறித்து மிகவும் ஆவல் கொண்டவளா யிருந்தாள். அதுகாறும் தனது கணவன் பரமயோக்கியனென்று நினைத்து அவனே உயிரென மதித்துத் தனது பாக்கியத்தைக் குறித்துப் பெருமை யடைந்திருந்ததெல்லாம் ஒரு நொடியில் ஒழிந்து போனதையும், அவன் கேவலம் இழிகுணமுடைய வனாய், வேசைப்பிரியனாய், சமயத்திற்கேற்ற விதம் பொய்மொழி கூறி வஞ்சிக்கும் அயோக்கியனாயிருந்ததையும் ஓயாமல் சிந்தித்தாள். அதைப்பற்றி நினைக்கும்போது துக்கமும் வெட்கமும் அழுகையும் அவள் மனதில் பொங்கியெழுந்து நெஞ்சையடைத்தன. கண்களும் மனதும் கலங்கின. அப்போதைக் கப்போது கண்ணீர்த் துளிகள் தோன்றின. நெடுமூச்செறிந்தாள். மனிதர் வெளிப்பார்வைக்கு அழகாயும், உட்புறத்தில் அவ்வளவு மிருகத்தன்மையைக் கொண்டும் இருப்பாரோவென்று நினைத்து அவள்பெரிதும் வியப்புற்றாள்; தன் கணவன் எழுத்து வாசனை யறியாத முட்டாளன்று; அப்படி இருந்தும், கொஞ்சமும் நல்லொழுக்கமும் மன உறுதியு மற்றவனாயும், நிறையில் நில்லாத சபலபுத்தியுள்ளவனாயும் இருப்பதைக் குறித்து வருந்தினாள். அவனுக்கும் தனக்குமுள்ள உறவு இனி ஒழிந்த தென்றும், அவனது முகத்திலே இனி விழிப்பதில்லை யென்றும் அவன் இனி தனது வீட்டிற்கு வராமல் தடுத்துவிட வேண்டும் என்றும், தனது இல்லற வாழ்க்கை அந்த இரவோடு ஒழிந்துபோய்விட்டதென்றும் உறுதியாக நினைத்து மனமாழ்கினாள். தனது சொந்த விசனத்தைக் காட்டிலும் மேனாவின் நிலைமையும், அவள் களங்கமற்றவளென்பதை ருஜுப்படுத்தி அவளுடைய கணவனிடம் அவளை எப்படி சேர்ப்பது என்னும் கடினமான காரியமும், அவள் மனதில் அதிகமாக வேரூன்றி வதைத்தன. அதிலேயே அவள் தனது முழு மனதையும் செலுத்தி, தனிமையில் சிந்தனை செய்து கலக்க மடைந்து மனமுருகிக் கண்ணீர் பெருக்கி உட்கார்ந்திருந்தனள்.

மிகவும் சிங்காரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அறையில் சிறிய மாசும், தூசியும் தோன்றாத புதிய மெல்லிய பட்டுப் போர்வைகள், துப்பட்டிகள், திண்டு, தலையணைகள், முதலியவற்றி னிடையில் மேனகா அழகே வடிவாய்க் கிடந்ததும், அவளுக்கருகில் இரதிதேவியோவென்ன தனக்குத் தானே நிகராய் தேஜோ மயமாக நூர்ஜஹான் உட்கார்ந் திருந்ததும் தெய்வங்களும் காணக் கிடைக்காத கண்கொள்ளா அற்புதக் காட்சியாக விருந்தன. அவ் விருவரில் எவள் அழகிற் சிறந்தவள் என்பதைக் கண்டு பிடிப்பது எவருக்கும் பலியாக் காரியமாயிருந்தது. மேனகாவைப் பார்க்கையில், அவளது அழகே சிறந்ததாயும், இருவரையும் ஒன்றாகப் பார்க்கையில் இருவரும் இரண்டு அற்புத ஜோதிகளாகவும், ஒருத்திக்கு இன்னொருத்தியே இணையாகவும் தோன்றினர். ஒருத்தியை ஜாதி மல்லிகை மலருக்கு உவமை கூறினால் மற்றவளை ரோஜா மலருக்கு உவமை கூறுதல் பொருந்தும். ஒருத்தி வெண்தாமரை மலரைப்போன்றவளென்றால், மற்றவள் செந்தாமரை மலரை யொத்தவளென்றே கொள்ளவேண்டும். ஒருத்தியை இலட்சுமிதேவி என்றால், இன்னொருத்தியைச் சரசுவதி தேவியென்றே மதிக்க வேண்டும். இருவரது அமைப்பும் அழகும் ஒப்புயர்வற்ற தனிப்பேறா விளங்கினவன்றி அவர்களைக் காணும் ஆடவர் மனதில் காமவிகாரத்தை யுண்டாக்காமல், அவர்களிடம் ஒரு வகையான அச்சமும், அன்பும், பக்தியும் உண்டாக்கத்தக்க தெய்வாம்சம் பொருந்திய மேம்பட்ட அமைப்பாகவும் அழகாகவும் இருந்தன. சிருஷ்டியின் செல்வக் குழந்தைகளாயும், கடவுளின் ஆசைக் குழந்தைகளாயும் காணப்பட்ட அவ்விரு மடமயிலார் வசிப்பதான பாக்கியம் பெற்ற இல்லத்தில், மனிதர் காலையிலெழுந்தவுடன் அவர்களது தரிசனம் பெறுவாராயின் அவர்களது மனக்கவலைகளும் துன்பங்களும் அகன்றுபோம். அந்த உத்தமிகளைப் பார்த்தாலே பசி தீரும்.

அவ்வாறு நூர்ஜஹான் துயரமே வடிவாக இரண்டொரு நாழிகை உட்கார்ந்திருந்தாள். அதற்குள் மேனகாவின் மார்பில் இரண்டுமுறை மருந்தைத் தடவினாள். அப்போது நூர்ஜஹானின் அக்காள் திடீரென்று உள்ளே நுழைந்து, “அம்மா பரிசாரகன் வந்துவிட்டார். ஏதாவது ஆகாரம் தயாராக வேண்டுமா? இப்போது உடம்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்டாள்.

நூர்:- சற்று முன் கண்ணைத் திறந்து நன்றாகப் பார்த்தாள். இனி பயமில்லை யென்று துரைஸானியம்மாள் சொல்லி விட்டாள். இப்போதும் ஆகாரம் கேட்க மாட்டாளாம். எல்லாவற்றிற்கும் பாலை மாத்திரம் காய்ச்சி வைக்கட்டும் - என்றாள்.

அலிமா:- சரி; அப்படியே செய்வோம்; உனக்குக் காப்பியும் சிற்றுண்டியும் இவ்விடத்திற்கே கொண்டு வருகிறேன். நீ அவற்றைச் சாப்பிடு; வேண்டா மென்று சொல்லாதே. - என்றாள்.

நூர்:- இல்லை அக்கா எனக்கு இப்போது ஒன்றும் வேண்டாம். பெருத்த விசனத்தினால் எனக்கு ஒன்றுந் தோன்றவில்லை. பசி உண்டானால் பார்த்துக்கொள்வோம். தயவு செய்து என்னை வற்புறுத்த வேண்டாம். - என்று நயந்து வேண்டினாள்.

அதைக் கேட்ட அலிமா புண்பட்ட மனதோடிருக்கும் தனது சகோதரியை மேலும் வருத்த மனமற்றவளாய், “அப்படி யானால் இன்னம் கொஞ்சநேரம் ஆகட்டும்; அப்புறம் வருகிறேன்” என்று அன்போடு கூறிவிட்டு அவ்வறையை விடுத்துச் சென்றாள்.

மேலும் ஒரு நாழிகை நேரம் கழிந்தது. நூர்ஜஹானால் பிரயோகிக்கப்பட்ட மருந்து நன்றாக வேலை செய்து மேனகாவின் உணர்வைத் திருப்பியது. தனக்கருகில் ஒர் அழகிய பெண்பாவை யிருந்ததைத் தான் கடைசியாகக் கண்ட நினைவும் அவ்வுணர்ச்சியோடு திரும்பியது. அந்த நினைவினால் அவளது அப்போதைய மனநிலை ஒரு சிறிது இன்பகரமாயும், நம்பிக்கை தரத்தக்கதாயு மிருந்தது. அந்தப் பெண் யாவளென்பதையும், மற்றும் எல்லா விவரங்களையும் அந்தப் பெண்மணியிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டு மென்னும் விருப்பமும் ஆவலும் உண்டாயின. அந்த மகமதியப் பெண், அன்றிரவு தன்னை வற்புறுத்திய மகம்மதியனுக்கு ஒருகால் அனுகூலமானவளாய் இருப்பாளோ என்னும் ஒருவகையான அச்சம் தோன்றி ஒரு புறம் அவள் மனதைக் கவர வாரம்பித்தது; இவ்வாறு நம்பிக்கையாலும், அவநம்பிக்கை யாலும் ஒரே காலத்தில் வதைக்கப்பட்டவளாய், நூர்ஜஹானது முகத்தை நோக்கினாள். அதுகாறும் அவளுடைய வாய், பூட்டப்பட்ட கதவைப்போலத் தோன்றியது. அப்போது, தான் பேசக்கூடுமென்னும் தைரியம் அவளது உணர்வில் தோன்றியது.


- முதற்பாகம் முற்றிற்று -

"https://ta.wikisource.org/w/index.php?title=மேனகா_1/021-022&oldid=1252769" இலிருந்து மீள்விக்கப்பட்டது