மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/14. சமய நிலை

14. சமயநிலை

சான்றுகள்

மொஹெஞ்சொ-தரோவிலும் ஹரப்பாவிலும் களிமண்ணாற் செய்து சுடப்பெற்ற சிறிய வடிவங்களும் முத்திரைகளும் உலோகத் தகடுகளும் தாயித்துகளும் நிரம்பக் கிடைத்தன. அவற்றின் மூலம் அக்காலத்தவர் தம் இறைவணக்கத்திறகுரிய பொருள்கள் இன்னின்னவை என்பதை ஒருவாறு அறிதல் கூடும்.பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் கடவுள் உருவம் வைக்கப் பெற்று வழிபடப் பெற்றது என்று அறிஞர் கருதுகின்றனர். கடவுள் உருவம் வீட்டுச் சுவரில் இருந்த மாடங்களிலேனும் சுவரில் மரப்பலகை அடித்து அதன் மீதேனும் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்று டாக்டர் மக்கே கருதுகிறார்.

தரைப் பெண் வணக்கம்

சிந்து வெளியிற் பெண் வடிவங்கள் மிகப் பலவாகக் கிடைத்துள்ளன. இவை போன்றவை பலுசிஸ்தானம் முதல் கிரீஸ் வரையில் உள்ள எல்லா இடங்களிலும் கிடைத்துள்ளன. எனவே, பண்டை மக்கள், தமக்கு வேண்டிய எல்லா உணவுப் பொருள்களையும் உதவி வந்த தரையைப் பெண் தெய்வமாக வழிபட்டு வந்தனர் என்பது வெளியாகிறது.[1] இத்தரைப் பெண் தெய்வம் பிற நாடுகளில் பிற கடவுளருடன் சேர்த்தே வணங்கப்பட்டது. அத்தெய்வத்திற்குக் கணவன், மகன் இரண்டு தெய்வங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன. ஆனால், சிந்து வெளியில் தரைப் பெண் தேவதை தனியாகவே வணங்கப்பட்டது என்னலாம். அத் தெய்வம், அமைதியான முகத் தோற்றங் கொண்டதாகவும், அச்சமூட்டும் தோற்றமுடையதாகவும், குழந்தையை வைத்திருப்பது போலவும் காணப்படுகிறது. இன்றளவும் சிவபெருமான் மனைவியாரான உமையம்மையார் பார்வதி, துர்க்கை, காளி எனப் பல உருவங்களில் வழிபடப்படுதலையும், பின் இரண்டு உருவங்களும் அச்சமூட்டுவனவாக இருத்தலையும் சிந்து வெளிப் பெண் தெய்வ உருவங்களோடு ஒப்பிட்டுக் காண, தரைப்பெண் வணக்கம் நாளடைவில் சக்தி வணக்கமாக மாறியதென்பதை நன்கு உணரலாம்.[2]

இன்று கிராமந்தோறும் காணப்படும் கிராம தேவதைகள் அனைத்தும் தரைப் பெண்ணின் பிரதிநிதிகளே என்னல் பொருந்தும். இத்தெய்வங்கள் அனைத்தும் கன்னித் தன்மை வாய்ந்தவை ஆகும். இவற்றுட் பல பிறகு எக்காரணம் கொண்டோ, ஆண் தெய்வங்களுடன் இணைக்கப்பட்டுவிட்டன. அப்பொழுது தான் ‘சக்தி வணக்கம்’ ஏற்பட்டது. தரைப் பெண் வணக்கம் இன்றளவும் கொண்டர்களிடம் இருத்தலும், அவர்கள் நிலமகளை (பூமி தேவியை)த் தரைப் பெண்[3] என்றே கூறுதலும் காண, இது வட இந்தியாவில் இருந்த பழந் தமிழர் வழிபாடு என்பதை நன்குணரலாம். தரைப் பெண் நல்ல விளைச்சலை நல்குந் தெய்வம் என்பது கொண்டர் கொள்கை. அக்கொள்கையே சிந்து வெளி மக்களிடத்தும் இருந்ததென்பது வெளியாம்.

கவின் பெறு கற்பனை

தரையைத் தாயாக உருவகப்படுத்தி, அது நமக்காக அளிக்கும் பொருள்களைக் கருவுயிர்ப்பதாகக் காட்டும் சித்திரம் ஒன்று சிந்துவெளியிற் கிடைத்த முத்திரை ஒன்றில் காணப் படுகிறது. ஒரு பெண் கருவுயிர்க்கும் நிலையில் தலைகீழாய் நிற்கிறாள்; அவளது கருவிலிருந்து செடி ஒன்று வெளிப்படுகிறது. குப்தர் காலத்திய இத்தகைய ஓவியங்கள் ஐக்கிய மண்டிலத்தில் உள்ள ‘பீதா’வில் கிடைத்துள்ளன.

நரபலி உண்டா?

ஒரு முத்திரையில் ஒருவன் வாளேந்தி நிற்பதுபோலவும் அவனுக்கு அடியில் ஒரு பெண் முழங்காற் படியிட்டு இருப்பது போலவும் காணப்படுதலை நோக்கி, ஆராய்ச்சியாளர், அக்காலத்தில் தரைப் பெண்ணுக்கு நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்ததோ என்று ஐயுறுகின்றனர். ஆனால், இவ்வாராய்ச்சிக்கு முன்னரே அறிஞர் பலர், பண்டை இந்தியாவில் நரபலி இருந்திருத்தல் வேண்டும் என்று தம் ஆராய்ச்சி நூல்களில் வரைந்துள்ளனர்.[4] இதே பழக்கம் ஆஸ்ட்ரேலிய இனத்தவரான கொண்டர்களிடமும் 80 ஆண்டுகட்கு முன் வரை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. வேறு ஒரு முத்திரையில், இறைவி முன் ஒருவன் வெள்ளாடு ஒன்றைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான்; பலர் வரிசையாக வழிபட நிற்கின்றனர். இதனால், அக்கால மக்கள் விலங்குகளைப் பலியிடும் பழக்கமுடையவ்ர் என்பது புலனாகும்.

தலையில் விசிரிப் பாகை

தரைப் பெண் உருவங்கள் அனைத்தும் நகைகள் நிரம்பப் பூண்டவையாகவே காணப்படுகின்றன. அவற்றின் தலைமீது விசிறி போன்ற பாகைகள் காணப்படுகின்றன. அரையில் மிகச் சிறிய துணி சுற்றப்பட்டுள்ளது.

சிவ வணக்கம்

சிந்து வெளி மக்கள் லிங்க வணக்கத்தினர் என்பதை, அங்குக் கிடைத்த பல லிங்கங்களைக் கொண்டு அழுத்தமாகக் கூறலாம். இடக்காலைத் தூக்கி ஆடும் நடராசரது உருவம் கிடைத்துள்ளது. ஒரு முத்திரையில், மூன்றுமுகங்களைக் கொண்டமனித உருவம் ஒன்று, கால்களை மடக்கி இரு குதிகால்களும் ஒன்று சேர்ந்து காற் பெரு விரல்கள் கீழ்நோக்கி உள்ளவாறு ஆசனமிட்டு யோகத்தில் அமர்ந்திருப்பதுபோலக் காணப்படுகின்றது. மார்பில் முக்கோண வடிவப் பதக்கங்கள் காணப்படுகின்றன. கைகள் நிறையக் கடகங்கள் பூட்டப்பட்டுள்ளன. இடுப்பில் இரட்டைப் பட்டையாக ஒர் அரைக் கச்சை காணப்படுகிறது. இவ்வுருவத்தின் வலப்புறம் யானையும் புலியும், இடப்புறம் எருதும் காண்டாமிருகமும் நிற்கின்றன. இருக்கையின் அடியில் இரண்டு மான்கள் இருக்கின்றன.[5] யோகியின் தலைமீது வளைந்த எருமைக் கொம்புகள் உள. நடுவில் தடித்த மலர்க் கொத்தோ இலைக் கொத்தோ நிமிர்த்தி வைக்கப்பட்டுள்ளது. ‘இது சிவனைக் குறிப்பது’ என்று சர் ஜான் மார்ஷல் கருதுகிறார். தலைமீதுள்ள கொம்புகளும் பூங்கொத்தும், பிற்காலத்தில் திரிசூலமாக மாறியிருத்தல் வேண்டும் என்று அறிஞர் அறைகின்றனர். ஒரு சாரார் ‘இக் கொம்புகள் சாஞ்சி ஸ்தூபத்தின் வாயிலில் பொறிக்கப்பட்டுள்ள சூலத்தைப் போன்றுள்ளன. யோகியை அடுத்து விலங்குகள் இருப்பது சிவன்-பசுபதி என்பதைக் குறிக்கின்றதன்றோ? மூன்று தலைகள் நன்கு தெரிவதால், பின்புறம் இரண்டு தலைகள் இருத்தல் கூடும் என்று கூறுகின்றனர். வேறு ஒரு சாரார், ‘மூன்று தலைகளும் ஆக்கல், அளித்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைக் குறிப்பன’ என்பர். இதுபோன்ற முத்தலை உருவங்கள் ‘ஆபு’ மலைக்கருகில் அழிந்து கிடக்கும் கோயில்களிலும், வட ஆற்காடு ஜில்லாவில் காவேரிப் பாக்கத்தை அடுத்த மேலைச் சேரியிலும், பெல்காம் கோட்டத்தில் உள்ள கோகாக்’ நீர் வீழ்ச்சிக்கு அருகிலும், உதயபுரி சமஸ்தானத்தைச் சேர்ந்த ‘சித்தோர்கார்’ என்னும் இடத்திலும் காணப்பட்டன. ஆயின், இவை வரலாற்றுக் காலத்தில் வழக்காறு அற்றுப்போயின.

லிங்க வழிபாடு

பெரிய லிங்கங்களும் சிறிய லிங்கங்களும் மிகப் பலவாகக் கிடைத்துள்ளன. ஹரப்பாவில் மட்டும் 600க்கு மேற்பட்டவை கிடைத்துள்ளன. பண்டை மக்கள் சிறிய லிங்கங்களைத் தாயித்துகள் போலக் கழுத்திலோ கையிலோ கட்டியிருந்தனராதல் வேண்டும்:[6] இவையன்றி முத்திரைகளும், செம்பு வில்லைகள் போன்றனவும் அணியப்பட்டு வந்தன.

புத்தர் பெருமானா? கண்ணபிரானா?

முத்திரை ஒன்றில், ஒர் உருவம் உட்கார்ந்திருப்பது போலவும் இதன் இருபுறங்களிலும் வரிசையாக மக்கள் நின்று வணங்குவது போலவும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்தம் தலைமீது படம் - விரித்தாடும் பாம்பு போன்ற தலையணிகள் காணப்படுகின்றன. இம்முத்திரையில் உள்ள காட்சி, ‘சாஞ்சி, பர்ஹத்’ என்னும் இடங்களில் புத்தர் பெருமானை நாக வம்சத்து அரசர்கள் வணங்குதல் போலக் காணப்படும் ஒவியங்களை நினைப்பூட்டுகிறது.[7] கண்ணபிரான், கலியன் என்னும் நாக அரசனை வென்ற பின், அவனும் அவனைச் சேர்ந்தவரும் கண்ணனை வழிபடும் காட்சியை இம்முத்திரைகளில் உள்ள சித்திரம் குறிக்கிறது.[8]

கொம்புள்ள தெய்வங்கள்

பசுபதியின் தலையில் காணப்பட்ட கொம்புகள் போல வேறுபல உருவங்களின் தலைகளில் கொம்புகள் காணப் படுகின்றன. வேத காலத்திலும் தாச, வேதாளம், சுஷ்னே முதலிய தெய்வங்கள் கொம்புடையனவாகக் கூறப்பட்டுள. அரசர் புரோகிதர் முதலிய உயர்நிலை மக்கள் தம் மேம்பாடு தோன்றக் கொம்புகளையுடைய கவசங்களைத் தலையில் அணிதல் பண்டை மரபு. சுமேரியாவிலும் பாபிலோனியாவிலும் இத்தகைய கவசங்கள் பல கிடைத்தன. இத்தகைய கவசங்கள் சிந்து வெளியிலும் கிடைத்துள்ளன.[9]

நான்கு கைத் தெய்வங்கள்

சிந்து வெளியில் நாற்கை உருவ ஒவியங்கள் சில சிதைந்து காணப்படுகின்றன. ‘இத்தகைய நாற்கை மனித உருவங்களே, பிற்காலத்தில் ஆரியர் பிரம்மா, விஷ்ணு, ருத்திரர்களை நாற்கையினராகக் குறிக்கப் பயன்பட்டன ஆகலாம்’ என்று ஆர்.பி. சண்டா கூறுகிறார்.

சமண சமயமும் பண்டையதோ?

சில முத்திரைகளில் அறுவர் நின்று யோகம் செய்தல் போலத் தீட்டப்பட்டுள்ள ஒவியங்களை நோக்கிச் சண்டா என்பவர், “இவை சமண யோகிகளைப்போல இருக்கின்றன; வடமதுரைப் பொருட்காட்சிச்சாலையில் உள்ள கி.பி.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தேவர் சிலைகளை ஒத்துக் காணப்படுகின்றன. நிற்கும் நிலையில் யோகம் புரிதல் சமணர்க்கே சிறப்பானது. எருது சமணரது அடையாளக்குறி ஆகும். சில முத்திரைகளில் யோகியின் முன்புறம் எருது இருத்தல் குறிப்பிடத் தக்கது. ஆகவே, இவ்வுருவம் ரிஷப தேவரைக் குறிப்பதாகலாம். அஃதாயின், சைவ சமயம் போலவே சமண சமயமும் மிகவும் பழைய சமயமாகலாம்” என்பர். வேறு சிலர், “யோகியின் உருவம் சிவனைக் குறிப்பது; எருது. நந்தியைக் குறிப்பது”, என்பர்.

நந்தி வழிபாடு

சிந்துவெளி விலங்கு வணக்கத்தில் முதலிடம் பெற்றது . எருதே ஆகும். யோகிக்கு முன் திமில் பருத்த எருது நிற்பது போலவும் படுத்திருப்பது போலவும் காணப்படுகிறது. ஒரு கோவிலுக்குள் உள்ள சிறு கோவில் முன் (மூலஸ்தானத்தின் முன்) நந்தி நிற்பது ஒரு முத்திரையிற் பொறிக்கப்பட்டுள்ளது. சிந்து வெளி மக்கள் வாணிபத்திற் பேருதவி புரிந்து வந்தது எருதே ஆகும். ஆதலின், நாளடைவில் அது வணக்கத்திற்கு உரிய விலங்காக மாறிவிட்டது என்று அறிஞர் அறைகின்றனர். நந்தி வணக்கம் முதலில் தனியே இருந்து, பின்னர்ச் சிவ வணக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.

ஒற்றைக் கொம்பு எருது

எருதுகளில் இருவகையின முத்திரைகளிற் காணப்படு கின்றன. ஒருவகையின திமில் பருத்த எருதுகள், மற்றொரு வகையின திமிலின்றித் தலையில் ஒற்றைக் கொம்புடையன. இவற்றின் முன்னர்ப் பின்னிய கிளைகளுடன் கூடிய மரம் ஒன்று இருக்கிறது. ஒற்றைக் கொம்புடைய எருதுகள் வணக்கத்தின் பொருட்டுக் கற்பிக்கப்பட்டவை என்றும், அவற்றின் வரலாறு சிறப்புடையதாக இருக்கலாம் என்றும் அறிஞர் கருதுகின்றனர்.

ஆறு தலை விலங்கு; கதிரவக் கடவுள்

ஒரு முத்திரையில், ஒரே உடலில் ஆறு வெவ்வேறு விலங்குத் தலைகள் தோன்றி இருப்பது போன்ற உருவம் ஒன்று காணப்படுகிறது. இந்த ஆறு தலைகளுள் மூன்று எருதின் தலைகள் ஆகும். ஒன்று புலித்தலை, மற்ற இரண்டு சிதைந்து காணப்படுகின்றன. அவை ஆறும் வட்டமாகக் கதிரவன் கதிர்களை ஒத்திருக்குமாறு ஒட்ட வைக்கப்பட்டு இருக்கின்றன. மற்றொரு தாயித்தில் ஒர் எருதுத்தலை ஆறு கதிர்களுடன் காணப்படுகிறது. இவ்வாறு காணப்படுவது கதிரவனைக் குறிப்பதாகும் என்று அறிஞர் கூறுகின்றனர்.

கலப்பு உருவங்கள்

சிந்து வெளி முத்திரைகளில் மனித விலங்குகள் பல காணப்படுகின்றன. ஓர் உருவம் மனிதத் தலையுடனும் யானை உடலுடனும் எருதின் கொம்புகளுடனும் புலியின் கால்களுடனும் வாலுடனும் காணப்படுகிறது. இவ்வுருவம், பல தெய்வங்களை - ஒரே விலங்கு உருவமாகச் சேர்த்துக் காட்டச் செய்யப்பட்டதாதல் வேண்டும். எருதுக் கொம்புகளுடன் கூடிய மனித உருவம் ஒன்று காணப்படுகிறது. இம்மனிதவுருவின் கால்கள் எருதின் கால்கள் போல் உள. பின்புறம் எருதின் வால் போன்று ஒன்று காணப்படுகின்றது. இம்மனித உருவம் ஒற்றைக் கொம்புடைய புலியோடு போர் புரிவதாகக் காட்டப்பட்டுள்ளது. இத்தகைய விநோத உருவங்கள் சுமேரியாவில் நிரம்பக் கிடைத்துள்ளன; இம்மனிதர் ‘தெய்வ சக்தி வாய்ந்தவர் என்பதையும், இவர் அடிக்கடி கடவுளராகக் கருதப்பட்டவருடன் போர் தொடுத்துக் கொண்டிருந்தனர் என்பதையும் இவை தெரிவிக்கின்றனபோலும்! மனிதத்தலை, அரை உருவம் ஆடு, பாதி உருவம் எருது, பாதி உருவம் யானை போன்ற மனித விலங்குகளின் உருவங்கள் பல முத்திரைகளிற் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதன் புலிகளோடு போர் புரிவது சில முத்திரைகளிற் காணப்படுகிறது. எகிப்திலும் சுமேரியாவிலும் சிங்கங்களோடு போர் புரிவது காட்டப்பட்டுள்ளது. ஒரு முத்திரையில் பெண்ணும் புலியும் சேர்ந்த உருவம் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இது. புலியை ஒருதேவதையாகக் குறிப்பது போலும்[10] பெண்ணுருவத்தின் முதுகில் தலையற்ற புலியுடல் பொருத்தப் பெற்றுள்ளது. இத்தகைய உருவம் தேவதையைக் குறிப்பது என்றே அறிஞர் கருதுகின்றனர்.

பிற விலங்குகள்

சிந்துவெளி மக்கள் நீண்ட கொம்புகளும் பருத்த திமில்களும் உடைய எருதை வணங்கியதோடு எருமை, காட்டு எருமை, யானை, வேங்கை, கரடி, மான், காண்டாமிருகம், முயல், வெள்ளிாடு முதலிய விலங்குகளையும் வேறு தெய்வங்கட்குப் பிரதிநிதிகளாகவோ அடையாளமாகவோ எண்ணி வழிபட்டு வந்தனர். ஹரப்பாவில் கிடைத்த முத்திரை ஒன்றில், ஒரு விலங்கு உட்கார்ந்திருக்கிறது; அதன் முன்னர் நின்று ஒர் ஆடவன் கூப்பிய கரங்களுடன் அதனை வழிபடுகிறான். நிற்க, சிந்துவெளி மக்கள் வெள்ளாட்டுக் கொம்பைச் சிறப்புடையதாகக் கருதினர் போலும்! ஆண் தெய்வத் தலை மீதும் புலித் தேவதைகள் தலைமீதும் வெள்ளாட்டுக் கொம்பு காணப்படுகிறது.

நாக வணக்கம்

சிந்துவெளி நாகரிக காலத்திலிருந்து இன்றளவும் நாக வணக்கம் இருந்து வருகிறது. களிமண் தாயித்து ஒன்றில், முக்காலி ஒன்றன்மீது பால் கிண்ணம் இருக்கிறது; அதன் எதிரில் நாகம் ஒன்று இருக்கிறது. இதுவன்றிச் சில முத்திரைகளில் கொம்பு முளைத்த பாம்புகள் பொறிக்கப்பட்டுள்ளன.

புறா வணக்கம்

மண்ணாற் செய்யப்பட்ட புறாக்கள் பல கிடைத்துள்ளன. அவை மெசபொட்டேமியாவில் கிடைத்தவற்றையே பெரிதும் ஒத்துள்ளன. தரைப்பெண் படிவத்தின் தலைமீது இரண்டு புறாக்கள் நிற்பதுபோலச் செய்யப்பட்டுள்ளன. இச்சிலைகள் எகிப்திலும் கிரீட்தீவிலும் கிடைத்துள்ளன. எனவே, பண்டை நாகரிக நாடுகளில் எல்லாம் தரைப்பெண்தேவதையுடன் புறாக்கள் இணைக்கப் பெற்று வழிபடப் பெற்றன என்பது தெரிகிறது.

கருட வணக்கம்

தாயித்து ஒன்றில் கருடப் பறவை பறப்பது போலப் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் கால்கள் மனிதர் கால்கள் போலக் காணப்படுகின்றன. இவ்வுருவத்தைக் கொண்ட தாயித்துகள் மொஹெஞ்சொ-தரோவிலும், ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன.[11]

மர வணக்கம்

சிந்துவெளி மக்கள் மரங்களையும் அவற்றில் உறையும் தெய்வங்களையும் வழிபட்டு வந்தனர் என்பது மொஹெஞ்சொ. தரோவிலும் ஹரப்பாவிலும் கிடைத்த சில முத்திரைகளிலிருந்தும் வில்லைகளிலிருந்தும் தெரிகிறது. இப்பழக்கம் தமிழகத்தில் இன்றும் பெருவழக்கு உடையதாகும். அரச மரமே சிறப்புடைய வணக்கத்திற்கு உரியது. ஆனால், அஃது எருதுடன் இணைக்கப் பட்டே முத்திரைகளில் காணப்படுகிறது. சில முத்திரைகளில் வேப்பமரம் காணப்படுகிறது. தமிழ் மக்கள் அரச, வேப்ப மரங்களைச் சுற்றுதலையும் இரண்டு மரங்களையும் சிறப்புடை யனவாகக் கருதுதலையும் இன்றளவும் காணலாம். மரத்தடியில் மேடையிட்டிருத்தலும் அக்கால முறை என்பது சில தாயித்துகளிலிருந்து அறியக் கிடக்கிறது. மரத்தடியில் எருமை ஒன்று நிற்கிறது. அதன் கொம்புகளால் தாக்குண்ட ஒருவன் உட்புறம் வீழ்ந்து கிடக்கிறான். இங்ஙனம் எருமைகளோடு விளையாடல் பண்டை வழக்கம் இவ்வழக்கம் கிரீட் தீவிலும் இருந்ததாம்.

மர தேவதைகள்

சில முத்திரைகளில் உள்ள சித்திரங்கள் விநோதமாகக் காணப்படுகின்றன. ஒரு மரத்தின் இரண்டு கிளைகட்கு இடையில் ஆடையின்றிப் பெண் உருவம் ஒன்று நிற்கின்றது. அதன் கூந்தல் அவிழ்ந்து தொங்குகிறது. மரத்தடியில் ஆடையற்ற மற்றொரு பெண்ணுருவம் மண்டியிட்டுவண்ங்குகிறது. மரத்தின்மீது நிற்கும் பெண்ணுருவத்தின் தலையில் இரண்டு கொம்புகளும் அவற்றுக்கு இடையில் மலர்க்கொத்தும் இருக்கின்றன. இரண்டு உருவங்களின் கைகள் நிரம்ப வளையல்கள் காணப்படுகின்றன. இவ்வுருவங்கட்கு எதிரில் சிறிய குட்டைப் பாவாடைகள் கட்டிய பெண்ணுருவங்கள் ஏழு வரிசையாக நிற்கின்றன. மண்டியிட்டு வணங்கும் பெண்ணுருவிற்குப் பின்புறம் மனிதத்தலையுடன் அரையுருவம் ஆடாகவும் மறுபாதி எருதாகவும் உள்ள விலங்குருவம் ஒன்று காணப்படுகிறது. இது, மர தேவதையின் ஊர்தியாக இருக்கலாம்

ஒரு மரத்திற்கு முன்னர் எருதின் கொம்புகளையுடைய புலி ஒன்றை, வால் - எருதின் கால்கள் - எருதின் தலை - மனித உடல் இவை கொண்ட விநோத விலங்கொன்று எதிர்ப்பதாக உள்ள தோற்றம் ஒரு முத்திரையில் காணப்படுகிறது. வேறொரு முத்திரையில் இரண்டு மரங்கள் மீது இருவர் உட்கார்ந்திருப்பது போலக் காணப்படுகின்றனர். அவர்தம் தலைகளில் மர முடி காணப்படுகிறது. இங்ஙனம் குறிக்கப்படும் பலவகை உருவங்கள் மர தேவதைகள் என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். ‘மரங்களில் மனித ஆவிகள் தங்குதல் உண்டு’ என்னும் கொள்கை அக்காலமக்கட்கு உண்டு போலும்! மரதேவதைகளுடன் புலிகளே தொடர்பு படுத்தப்பட்டிருத்தலின், மர தேவதைகட்கும் புலிகட்கும் ஏதோ தொடர்பு இருத்தல் வேண்டும். இதனால், மர வணக்கம் அக்காலத்தில் சிறப்புடையதாக இருந்தது என்பது நன்கு வெளியாகின்றதன்றோ?

கொண்டர் இரவில் மரமசைக்க அஞ்சுவர்; மரதேவதைகள் மரங்களில் உறங்கும், இராக் காலத்தில் மரம் அசைத்தலோ பழங்களைப் பறித்தலோ அவற்றிற்கு ஆகாது என்பது அவர் கொள்கைமரத்தை வெட்டுபவர். முதலில்மரத்திற்குப் பூசை இட்ட பின்னரே வெட்டத் தொடங்குதல் இன்றளவும் உள்ள பழக்கமாகும்.சிலசெடிகட்கு மந்திரம் கூறிக் காப்புக்கட்டிய பின்னரே இலை களையோ, பழங்களையோ பறிப்பது வழக்கம். சிலர் மரத்திற்கு முதலில் தாலி கட்டிய பிறகே பெண்ணுக்குத் தாலி கட்டுதல் வழக்கம்.

ஒரு முத்திரையில் இரு உருவங்கள் இரண்டு மரங்களை நடுவதற்கு ஏந்தி நிற்கின்றன. அவைகட்கு இடையில் மரதேவதை உருவம் ஒன்று நிற்கின்றது. இங்ஙனம் மரங்களை நடுதல் தூய செயல் என்று நம்மவர் நினைத்தல் நெடுங்காலப் பழக்கமாகும்.

ஆற்று வணக்கம்

வாயில் சிறு மீன்களை வைத்துள்ள முதலை, ஆமை போன்ற உருவங்களை ஆறுகளுடன் சேர்த்துப் பொறிக்கப் பட்டுள்ள முத்திரைகள் கிடைத்துள்ளன. இவற்றால் அக்கால மக்கள் ஆற்று வணக்கம்[12] செய்து வந்தனர் என்பதை நன்கு அறியலாம்.

பலி இடும் பழக்கம்

சிந்துவெளி மக்கள் மர தேவதைகட்கும் பிற கடவுளர்க்கும் வெள்ளாடு, எருமை முதலியவற்றைப் பலி யிட்டனர். சிந்து வெளியிற் பெரும்பாலும் வெள்ளாடே பலியிடப் பட்டதாம்.[13]

தாயித்து அணிதல்

மண் தாயித்துக்களே மக்களால் பெரிதும் பயன்படுத்தப் பட்டன. அவை தேய்ந்து காணப்படுகின்றன. தாயித்துக்களில் காணப்படும் உருவங்கள் சமய சம்பந்தமான பல நிகழ்ச்சிகளைக் கூறுவனவாகலாம். அணில், செம்மறியாடு, முயல், மான், நாய் ஆகிய விலங்குகளின் உருவங்கள் - கல், பீங்கான், வெண்கலம், சுட்ட களிமண் ஆகியவற்றின் வில்லைகளில் பொறிக்கப்பட்டு மேலே துளையிடப்பட்டுள்ளன. அவை கயிறு கொண்டு கட்டிக் கொள்ளப் பயன்பட்டன. புறாவடிவிலான தாயித்துக்களும் அணியப்பட்டன. தலைப்பில் முடியிடப்பெற்ற சிப்பியாலான தாயித்து ஒன்று மந்திர சக்தி உடையதாகக் கருதப்படுகிறது. இங்ஙனம் முடியிடுதல் மந்திர வன்மை உடையதென்று மேற்குப் புற நாடுகளிலும் அப்பழங்காலத்தில் கருதப்பட்டதாம். அத்தாயித்தின் நடுவில் இரண்டு சிறிய துளைகள் இருக்கின்றன. எனவே, அது பொத்தானாகவோ தாயித்தாகவோ பயன்பட்டிருக்கலாம். சில தாயித்துக்களில் அடி-முடி அற்ற வரிவடிவங்கள் சுமேரியர் முத்திரைகளை ஒத்துக் காணப்படுகின்றன. மணிகளைத் தாயித்துக் களாகப் பயன்படுத்தும் வழக்கமும் சிந்து வெளி மக்களிடை இருந்தது. இப்பழக்கம் மேற்குப் புற நாடுகளிலும் இருந்ததாகும்.

சில தாயித்துக்களில் ஸ்வஸ்திகா கிரேக்கச் சிலுவை போன்ற குறிகள் காணப்படுகின்றன. இவை இரண்டும் ஏலம், சுமேரியா முதலிய நாடுகளில் இருந்த பண்டைக் குறியீடுகளே ஆகும். ஸ்வஸ்திகா’ குறி யோகக் குறியாக இந்நாட்டில் இன்றளவும் கருதப்படுகிறது. இக்குறிகள் சிந்து வெளி இல்லச் சுவர்கள் மீதும் இருந்தன.

சமயப் பதக்கம்

சமய சம்பந்தமான பதக்கங்களும் பண்டைக்காலச் சிந்துவெளி மக்களால் அணியப்பட்டு வந்தன. வட்டப்பிளவு போன்ற ஒரு பதக்கத்தில், ஒற்றைக் கொம்புடைய. விலங்கொன்று நிற்கிறது. அதன் எதிரில் பலிபீடம் ஒன்று இருக்கிறது. பிறையின் முனைகள் முடியும் இடத்தில் நீள் சதுரவடிவம் ஒன்று காணப்படுகிறது. இதுவும் விலங்கு வடிவமும் நடுவில் குடையப்பட்டுள்ளன. அவற்றின் துளைகளில் சிவப்புச் சாந்து பூசப்பட்டிருத்தல் வேண்டும். அப் பதக்கம் உலோக வளையத்தில் பொருத்தப் பெற்றுக் கோவில் அதிகாரிகளால் மக்கட்கு அளிக்கப்படும் சிறப்புடைப் பொருளாக இருந்திருத்தல் கூடும் என்று அறிஞர் கருதுகின்றனர். உண்மை உணர்ந்தவர் யாவர்?

கடவுள் உருவங்களின் ஊர்வலம்

சமயக் குறிகள் எனக் கருதப்படும் எருது முதலிய விலங்கு களை மக்கள் தூக்கிச் செல்வது இரண்டு முத்திரைகளில் காணப் படுகிறது. ஒருவன் ஒரு கம்பத்தில் எருது உருவத்தை வைத்துத் துக்கிச் செல்கிறான். அவன் பின்னர், வேறு ஒருவன் பலிபீடம் அல்லது தொட்டி போன்ற ஒன்றைத் தூக்கிச்செல்கிறான்.மூன்றாம் மனிதன் வேறு ஒர் உருவத்தைச் சுமந்து செல்கிறான். இவ்வூர்வலக் காட்சி, இன்றைக் கோவில் விழாக் காலங்களில் தூக்கி வரப்படும் நந்தி வாஹனம் முதலியவற்றை நினைப்பூட்டுகின்றது அன்றோ?


நேர்த்திக் கடன்

கருப்பவதிகளைக் குறிக்கும் பதுமைகள், கைக் குழந்தை ஏந்தி நிற்கும் தாயைக் குறிக்கும் பதுமைகள், தவழ்ந்து செல்லும் குழந்தைகளைக் குறிக்கும் பதுமைகள் முதலியனவும் விலங்குப் பதுமைகளும் நேர்த்திக் கடன் பொருட்டுக் கோவில்களில் வைக்கப்பெற்றனவாக இருத்தல் வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர். இப் பழக்கம் இன்றளவும் இருந்து வருகின்றது கவனிக்கத் தக்கது. இங்ஙனம் செலுத்தப்பட்ட நேர்த்திக்கடன் பொருள்கள் எல்லாக் கோவில்களிலும் இருத்தலைக் காணலாம்.

இசையும் நடனமும்

சமயத் தொடர்புடைய களிமண் தாயித்து ஒன்றில் சில உருவங்கள் காணப்படுகின்றன. ஒருவன் மத்தளம் அடிக்கிறான்; சிலர் அவ்வோசைக் கேற்ப நடிக்கின்றனர். தாயித்துச் சமயத் தொடர்புடையதாக இருத்தலின், அதில் குறிக்கப்பட்ட நடனமும் சமயத் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும் என்பது பொருத்தமே அன்றோ? ஹரப்பாவில் கிடைத்த தாயித்து ஒன்றில், புலி முன் ஒருவன் மத்தளம் அடிப்பது போலப் பொறிக்கப்பட்டுள்ளது. வேறொரு முத்திரையில் எருதின் முன்பு மங்கை ஒருத்தி கூத்தாடுதல் குறிக்கப்பட்டுள்ளது. நாட்டிய மகளைக் குறிக்கும் வெண்கலப் படிவம் ஒன்று ஹரப்பாவில் கிடைத்தது. அதன் வேலைப் பாட்டைக் கண்டு வியவாத ஆராய்ச்சியாளர் இல்லை. அச்சிலை கோயில் நடனமாதின் சிலையாக இருக்கலாம் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர்.[14]

படைத்தல் பழக்கம்

கடவுளர் உருவங்களின் முன் உணவுப்பொருள்களையும் பிறவற்றையும் படைத்தல் அக்கால மக்களின் பழக்கமாக இருந்தது என்பது சில தாயித்துக்கள் கொண்டும் முத்திரைகள் கொண்டும் கூறலாம்; தண்டின்மீது பொருத்தப்பெற்ற தட்டுகள் (Offering Stands) பல கிடைத்தமை கொண்டும் கூறலாம்; ஒரு முத்திரையில் பெண்கள் பலர் படைக்குத் தட்டுகளை ஏந்தி நிற்பதாகச் சித்திரம் தீட்டப்பட்டுள்ளது.[15] ‘ஹரப்பாவில் கோவில் அணிகள் சில கிடைத்தன; அவை சங்கு, களிமண், கல், உயர்தரக் கல் முதலியவற்றால் செய்யப்பெற்றவை. அவை கோவில்களுக்கு உரியனவாகலாம் என்று எம்.எஸ்.வாட்ஸ் என்னும் அறிஞர் அறைகின்றார்.[16]

கோவில் வழிபாடு

மொஹெஞ்சொ-தரோவில் பெளத்த ஸ்தூபியுள்ள இடத்தின் அடியில் - இன்றளவும் தோண்டிப் பாராத இடத்தில் சிந்து வெளி மக்களின் கோவில் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ‘பல கோவில்கள் அழியும் பொருள்களைக் கொண்டு கட்டப்பெற்றமையால், அழிந்து விட்டிருத்தல் இயல்பு. அவை இன்று இன்மைகொண்டே கோவில்கள் இருந்தில எனக் கூறல் இயலாது’ என்று டாக்டர் மக்கே போன்ற அறிஞர் கருதுகின்றனர். உயரமான கோவில் களைக் கட்டி வாழ்ந்த சுமேரியரோடு வாணிபத் தொடர்பும் பிற பல துறைகளில் தொடர்பும் கொண்டிருந்த சிந்து வெளி மக்கள் கோவில்கள் இன்றி வாழ்ந்தனர் என்பது பொருந்தாக் கூற்றாகும். எனவே, கோவில்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை என்பது அறிஞர் கருத்தாகும்.

சிந்து வெளிச் சமயம் யாது?

சிந்து வெளி மக்கள், (1) தரைப்பெண் வணக்கம் (2) லிங்க-யோனி வணக்கம் (3) சிவ வணக்கம் (4) நந்தி வணக்கம் (5) சூரிய வணக்கம் (6) விலங்கு வணக்கம் (7) பறவை வணக்கம் (8) நாக வணக்கம் (9) மர வணக்கம் (10) ஆற்று வணக்கம் (11) சிறு தெய்வ வணக்கம் (12) விநோத-தெய்வ வணக்கம் (13) கண்ணன் வணக்கம் இவற்றை உடையவர் என்று ஒருவாறு கூறலாம்; மேலும் அவர்கள், (1) சமயத் தொடர்பான தாயித்துக்களையும் முத்திரைகளையும் பதக்கங்களையும் அணிந்து வந்தார்கள், (2) பலியிட்டு வந்தார்கள், (3) பலவகைப் பொருள்களைப் படைத்து வழிபட்டார்கள், (4) கடவுளுக்கு விழாக்களை நடத்தி வந்தார்கள், (5) நேர்த்திக் கடன் செலுத்தி வந்தார்கள், (6) சமயத் தொடர்பாக இசையும் நடனமும் வளர்த்தார்கள், (7) மந்திர மாயங்களில் பழகி இருந்தார்கள், (8) யோகப் பயிற்சியை நன்கு அறிந்திருந்தார்கள் என்பவற்றை ஒருவாறு உணரலாம்.

சுருங்கக் கூறின், இன்று ஹிந்து மதத்தில் உள்ள பெரும்பாலான வழிபாடுகளும் பழக்க வழக்கங்களும் சிந்து வெளி மக்களுடைய சமயத்தனவே எனக் கூறி முடித்தல் தவறாகாது.

சைவத்தின் பழைமை

இப்பல வகை வழிபாடுகள் இன்றும் இருக்கின்றன. எனினும், இவை அனைத்தையும். இக்கால ஹிந்துக்கள் அனைவரும் பின்பற்றுதல் இல்லை அன்றோ? உயர்ந்தவர் சிவலிங்கம், கண்ணன் முதலிய பெருந் தெய்வங்களையே வழிபடுகின்றனர். கிராமத்தவரும் பாமர மக்களுமே மரவணக்கம் முதலியவற்றைக் கைக்கொண்டுள்ளனர். இங்ஙனமே, அப்பண்டைக் காலச் சிந்து வெளி மக்களுள் கல்வி கேள்விகளால் உயர்ந்த பெருமக்கள் பெருங் கடவுளரை வழிபட்டு வந்தனர்? தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள் பலவகைத் தெய்வங்களை வழிபட்டு வந்தனராதல் வேண்டும். இஃது எங்ஙனமாயினும், இவ்வாராய்ச்சியால் அறியப்படும் உண்மை ஒன்றுண்டு. அஃதாவது, சைவ சமயம் சிந்துவெளி நாகரிகத்துக்கும் (கி.மு.4000க்கு) முற்பட்ட பழைமையுடையது என்பதே ஆகும். அஃது இன்னும் எவ்வளவு பழைமையுடைய தென்பதை வரையறுக்கக்கூடவில்லை. அச்சமயம் உலகத்திலேயே மிக்க பழைமை வாய்ந்து, இன்றளவும் இருந்துவரும் சமயம் என்பதை மறத்தல் ஆகாது.[17]


  1. De Margon’s ‘Pre-historic Man’, p.250.
  2. Monier William’s ‘The Original Inhabitants of India, p. 574.
  3. Thurston’s ‘Castes and Tribes of Southern India’, Vol. 3. p.372.
  4. Barth’s ‘The Religion of India’, p.204.
  5. ‘சிவபிரான் யானைத் தோலைப் போர்த்துள்ளார். புலித் தோலை அரையிற் கட்டியுள்ளார். எருதை ஊர்தியாகக் கொண்டார் மானை ஏந்தி யுள்ளார்’ என்பன ஈண்டுக் கவனிக்கத் தக்கன.
  6. இராவணன்.தான் சென்ற இடமெல்லாம் சிவலிங்கத்தைத் தூக்கிச் சென்றான் என்பது ஈண்டுக் கருதத்தக்கது.
  7. K.N.Dikshit’s ‘Pre-historic Civilization of the H. V.’ p. 35.
  8. P.Mitra’s ‘Pre-historic India p 275. “மாயோன் மேய காடுறை யுலகமும் என்பது தொல்காப்பியம். முல்லை நில மக்கள் கண்ணனைத் தெய்வமாக வழிபட்டனர். இவ்வழிபாடு புதிய கற்கால காலத்திலிருந்தே பண்டை மக்களால் கொள்ளப்பட்டதாகும். பாரத காலத்துக் கிருஷ்ணனுக்கு முன்னரே வேத காலத்தில் யமுனைக் கரையில் ஆரியரை எதிர்த்த கிருஷ்ணன் (கறுப்பன்) ஒருவன் இருந்தான். அவனைச் சேர்ந்த வீரர் பல்லாயிரவர் ஆவர். கிருஷ்ணனுக்கு ஜன்ம விரோதி ஆரியர் கடவுளான இந்திரன். இவ்விருவர் பகைமையே பிற்கால புராணங்களில் பல கதைகளின் வடிவில் காணப்படுகிறது. கிருஷ்ணன் ஆரியக் கடவுள் அல்லன், அவன் வேதமொழிகளிடம் வெறுப்புக் கொண்டவன். வேதத்தின் மலர்ந்த வார்த்தைகட்கு இடங் கொடாதே’ என்று அர்ச்சுனனை எச்சரித்தல் பகவத் கிதையிற் காண்க” - PT.Srinivasa Iyengar’s ‘Stone Age in India’, p. 49-51.
  9. கொண்டரும் கோயிகளும் (கோதாவரி, மத்திய மாகாணம் ஒரிஸ்ஸா முதலிய இடங்களில் உள்ள மலைவாணர்) இன்றும் தம் நடனத்தின்போது தலைப்பாகைகளில் எருமைக் கொம்புகளைச் செருகி வைத்துக் கொண்டு ஆடுதல் மரபு - Thurston’s ‘Castes and Tribes ofS. India’, Vo!. IV, p.61
  10. வியாக்ரபாதமுனிவர் உருவம் இங்குச் சிந்திக்கற் பாலது. ஆஸ்ட்ரேலிய இனத்தவரான கொண்டர், இறந்தவனைப்பற்றிச் செய்யும் இரண்டாம் நாட் சடங்கில், அவனை எரித்த இடத்தில் படையல் இட்டு அவனது ஆவியை விளித்து. ‘நீ பிசாசாகவோ புலியாகவோ வந்து எங்களைத் துன்புறுத்தலாகாது’ என்று வேண்டுவது இன்றும் வழக்கம் என்பதை அறிக. மேலும் அக்கொண்டர்கள். தாம் தம் பகைவரை அழிக்கும் பொருட்டுப் புலியாகவோ பாம்பாவோ உருமாறும் ஆற்றல் பெற்றவர் என்பதை நம்புகின்றனர்; இராக்காலங்களில் தூங்கும்பொழுது ஆவி வெளிச் சென்று சுற்றுவதாக நம்புகின்றனர்; அது புலியுருவில் அலைவதாக நம்புகின்றனர்; சிறுத்தைப்புவி தெய்வத்தன்மை யுடையதென்பதை நம்புகின்றனர்; புலித்தோல் மீது கை அடித்துச் சத்தியம் செய்கின்றனர். ‘நான் இக்குற்றம் செய்தவனாயின். புலியால் கொல்லப் படுவேன் ஆகுக’ எனச் சூள் உரைக்கின்றனர். கோதாவரி ஜில்லாவில் உள்ள கோயிகள் என்னும் மலைவாணர் தம் தேவராட்டி இரவில் புலிமீது ஏறிக்கொண்டு ஏழு கிராமங்களைச் சுற்றுவதாக நம்பப்படுகிறாள். மேலும், “அவள் இரவில் புலி வேடங் கொள்வாள்; ஒரு கால் மனிதர் காலாக இருக்கும். அந்நிலையில் அவள் ‘மருட்புலி’ எனப்படுவாள்; இரவில் தனியே வரும் ஆள்மீது பாய்ந்து அச்சுறுத்திக்கொல்வான்” என்று அவளைப்பற்றிக் கோயிகள் கூறுகின்றனர். -'Thurston’s ‘Castes and Tribes of S.India’, Vol.III pp.395, 405, 406, 407; and Vol. IV, pp. 69, 70. இவ்விவரங்களை நோக்கச் சிந்துவெளிமக்கள் புலியை வணங்கி வந்தமைக்குரிய கருத்தைத் தெற்றெனத் தெளியலாம் அன்றோ?
  11. இக்கருடவணக்கம் பிற்காலத்தில் திருமால் வணக்கத்தோடு இணைப்புண்டு விட்டது.எனினும், ஹிந்துக்கள் கருடனைக் காணும்பொழு தெல்லாம் வணங்குதலை இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
  12. ஆற்றில் புதுவெள்ளம் வரும்பொழுது ஆண்டுக்கொரு முறை ஆற்றை வணங்குதல் பண்டைத் தமிழர் மரபு என்பதைப் பரிபாடலால் அறிக.
  13. முருகப்பெருமானுக்கு ஆட்டைப்பலியிடல் பண்டைத் தமிழர் மரபு. இதனைத் திருமுருகாற்றுப்படையிற் காண்க, காளி தேவிக்கு எருமைப் பலி இடுதல் இன்றும் காணலாம்.
  14. தமிழகத்தில் கோவில் நடனமாதர் இருந்தனர். இருக்கின்றனர்: அவர்கட்கு ‘மானியம்’ உண்டு. விழாக் காலங்களில் கோவில் நிகழ்ச்சிகளிற் கலந்துகொண்டு இசை பாடலும் நடித்தலும் அவர்தம் தொழில். அவர்கள் கூத்தாடியா எனப்படுவர். அவர் பரம்பரையினர் இன்றும் கபிஸ்தலம் முதலிய இடங்களில் இருக்கின்றனர்.
  15. M.S.Vats’s ‘Excavations at Harappa’, Vol. I, p.299
  16. Ibid p.443.
  17. “Among the many revelations that Mohenjo-Daro and Harappa have had in store for us, none perhaps is more remarkable than this discovery that, Saivism has a history going back to the Chalcolithic Age or perhaps even further still, and it thus takes its place as the most ancient living faith in the world”, - Sir John Marshall in his preface to Mohenjo-Daro and the Indus Civilization, ‘Vol, I. P. vii.