மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/15 இடுதலும் சுடுதலும்
சுடுதல்
சிந்துவெளி மக்கள் இறந்தாரை என் செய்தனர் என்பது மொஹெஞ்சொ-தரோ ஆராய்ச்சியை மட்டுங் கொண்டு திட்டமாகக் கூறுதற்கில்லை. ஹரப்பா ஆராய்ச்சியையும் உளங் கொண்டு நோக்கின், சில விவரங்களை அறியலாம். எனினும், இத் துறைக்குரிய ஆராய்ச்சிப் பொருள்கள் எகிப்திலும் சுமேரியாவிலும் கிடைத்தன போலப் பேரளவு சிந்துவெளியிற் கிடைத்தில. மொஹெஞ்சொ-தரோவில் சமாதியோ, இடுகாடோ கிடைத்தில, ஆயின், சந்துகளில், வீடுகட்கு அடியில் நீர் அருந்தும் குவளைகட்குள் இருந்த எரித்த சாம்பலும் எலும்புத் துண்டுகளும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. அவற்றை நோக்க, சிந்து வெளி மக்கள் இறந்தார் உடலை எரித்துச் சாம்பலையும் எலும்புகளையும் சேமித்துப் புதைத்து வந்தனர் என்பது தெளிவாகிறது. இப்பழக்கம் இன்றும் ஹிந்துக்களிடை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இடுதல்
ஹரப்பாவில் கிடைத்த சவக் குழிகளில் இரண்டு மூன்று அடுக்குகள் உண்டு. மிகவும் அடியில் இருந்த சவக்குழிகளில் பிணங்களை நேராகப் படுக்கவைத்துக் கைகளை மார்பின் மீது மடக்கிவைத்துப் புதைத்து வந்தனர் என்பது தெரிகிறது. நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட உடல்கள் மூன்று வகையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளன; (1) சில உடல்கள் தனித்தனியே இடம் விட்டுப் புதைக்கப்பட்டுள்ளன; (2) சில நெருக்கமாகப் புதைக்கப்பட்டுள்ளன; (3) சில ஒன்றின்கீழ் ஒன்றாகப் புதைக்கப் பட்டுள்ளன. இவ்வாறு பிணங்களைப் புதைக்கும் பழக்கம் பலுசிஸ்தானத்திலும் பெருவழக்குடையதாக இருந்தது. அவ்வுடல்களின் அருகில் நீருடைய மட்பாண்டங்கள், கோப்பைகள், தட்டுகள், இறந்தார் பயன்படுத்திய பிற பொருள்கள் முதலியன புதைக்கப்பட்டன. இப்பழக்கம் சுமேரியாவிலும் எகிப்திலும் சிறப்பாக இருந்து வந்தது. இதே பழக்கம், புதுக்கோட்டை, ஆதிச்சநல்லூர் முதலிய தமிழ்நாட்டுப் பகுதிகளிற் கிடைத்த தாழிகளைக் கொண்டு, தமிழ்நாட்டிலும் இருந்ததெனத் துணிந்து கூறலாம்.
ஈரானியர் பழக்கம்
மேல் அடுக்குகளிற் கிடைத்த சவக் குழியில் தனித்தனி உடற்பகுதிகளும் எலும்புகளும் புதைக்கப்பட்டன போலும்! இங்ஙனம் உடற்பகுதிகளைப் புதைத்துவந்தவர் முன் சொல்லப் பட்டவரினும் வேறானவராதல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இங்ஙனம் உடற்பகுதிகள் புதைக்கப்பட்ட மட்பாண்டங்கள் ஹரப்பாவில் நூற்றுக்கு மேலாகக் கிடைத்துள்ளன. ஆயின், இவற்றில் உள்ள மண்டை ஒடுகளையும் பிற எலும்புகளையும் காண்கையில், உடற் பகுதிகளைக் கழுகு, நரி முதலியவற்றிற்குப் போட்டுச் சதைப்பகுதிகள் தின்னப்பட்டபிறகு, எலும்புகளை மட்பாண்டங்களில் இட்டுப் புதைத்து வந்தனர் என்பது தெரிகிறது. இப்பழக்கம் பாரசீகரிடமே செல்வாக்குப் பெற்றதாதலின், ஈரானியர் ஹரப்பாவில் குடியேறி இருந்தனர்; அந்நகர மக்களுள் ஈரானியரும் ஒரு பகுதியினராக இருந்தனர் என்பதை அறியலாம்.
தாழிகள் மீது ஒவியங்கள்
இத்தாழிகள் எல்லாம் ஒவியங்கள் தீட்டப்பெற்றன. ஒவ்வொன்றிலும் விதவிதமான ஒவியங்கள் காணப்படுகின்றன. ஒரு தாழியின் கழுத்தருகில் கருடப் பறவைகள்[1] இரண்டு வரிசைகளில் பறப்பன போலத் தீட்டப்பட்டுள்ளன. அவ்வரிசைகட்கு இடையே இலைக்கொத்துடன் காணப்படும் தொட்டிகள் அணியணியாக வைக்கப்பட்டுள்ளன. பிற தாழிகள் மீது, செம்படவன் வலை போட்டு மீன் பிடிப்பது போலவும், மீன் ஆமை பறவைகள். இலைகள் முதலிய பல பொருள்களைப் போலவும் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.
மயில்கள் தெய்விகத்தன்மை பெற்றவையா?
அக்கால மக்கள் மயில்களைத் தெய்விகச் சிறப்புடைய பறவைகளாக மதித்தனர் என்பது தெரிகிறது. இம்மயில்களின் துணையைக் கொண்டு மனிதர் ஆவிகள் மேல் உலகம் போவன என்பதை அக்காலத்தவர் எண்ணி வந்தனர் போலும்! அன்றிச் சூக்கும் உடலே மயிலாக உருவகப்படுத்தப்பட்டதோ அறியோம். ஒரு தாழி மீதுள்ள சித்திரங்களில் மூன்று மயில்கள் பறப்பது போலத் திட்டப்பட்டுள்ளன. அம்மயில்கட்கு இடையிடையே விண்மீன்கள் வரையப்பட்டுள்ளன. ஆதலின், ‘மயில்கள் சூக்கும உடல்களைக் குறிப்பன: அவை மேல் உலகத்தை அடைவதாகப் பண்டையோர் எண்ணினர்’ என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர்.[2] சில தாழிகள் மீது சிறிய மயில்கள் அணியணியாக இருப்பனபோல ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வேறு சிலவற்றின் மீது ஐந்து மயில்கள் பறப்பன போலக் காணப் படுகின்றன. சில தாழிகள் மீது காணப்படும் மயில்களின் தோகை திரிசூலம் போலக் காணப்படுகிறது. சில மயில்களின் தலைமீது இரண்டு கொம்புகளும் அவற்றுக்கு இடையில் நிமிர்ந்த மலர்க்கொத்தும் காணப்படுகின்றன.
பறவை முக மனித உருவங்கள்
சில தாழிகள் மீது பறவை முக்குப் போன்ற நீண்ட மூக்குகளையுடைய மனித உருவங்கள் காணப்படுகின்றன. இவை, மயில்கள் வரையப்பட்ட கருத்துக் கொண்டே வரையப்பட்டனவாகலாம்: அஃதாவது சூக்கும உடம்பைச்சுமந்து செல்லும் வன்மை வாய்ந்தவையாகலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். ஒரு தாழிமீது பறவை முக்குடைய மனித உருவம் தீட்டப்பட்டுள்ளது. அவ்வுருவம் இடக்கையில் அம்பும் வில்லும் வைத்துள்ளது. அதன் இருபுறமும் இரண்டு எருதுகள் நிற்கின்றன. அவ்வெருதுகளைக் கயிறு கொண்டு கட்டி, அவற்றின் கயிற்றை மனித வுருவம் தன் வலக்கையில் பிடித்துள்ளது. இடப்புறமுள்ள எருதை நாயொன்று துரத்திவந்து வாலைப் பிடித்துக் கடித்து இழுக்கிறது,நாய்க்குப் பின், தலைமீது கொம்பு முளைத்த மயில்கள் இரண்டு பறக்கின்றன. அவற்றிற்கு அருகில் பெரிய வெள்ளாடு ஒன்று நிற்கின்றது. அதன் கொம்புகள் எட்டுத் திரிசூலங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வெள்ளாட்டிற்கும் பிற உருவங்கட்கும் இடையில் இலைகளும் விண்மீன்களும் வரையப்பட்டுள்ளன. இங்ஙனம் பல உருவங்கள் தீட்டப்பெற்ற சித்திரம், ‘காலன், உயிரைக் கவர்ந்து செல்வதைக் குறிப்பதாகலாம்’ என்று அறிஞர் கருதுகின்றனர். பறவை முகத்தைக் கொண்ட மனித உருவங்களைத் தீட்டும் பழக்கம் பண்டைக் கிரேக்கரிடமும் மெசொபொட்டேமியரிடமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.[3]
தாழிகளுட் பல பொருள்கள்
இறந்தவர் அணிந்திருந்த அணிகளும் பயன்படுத்திய பாண்டங்களும் பிற பொருள்களும் உணவுப் பொருள்களும் தாழிகளில் இருந்து எடுக்கப்பட்டன. இவற்றை எல்லாம் இறந்தவர் சாம்பலுடன் தாழிகளில் இட்டுப் புதைத்துவிடல் அப்பண்டை மக்கள் மரபு என்பது வெளியாகிறது. தாழிகளில் சூளையிடப் பெற்ற மண் அப்பங்கள் கிடைத்ததைக் குறிப்பதாகக் கூறலாம். பல தாழிகளில் தங்கநகைகள் அகப்பட்டன: நவரத்தினங்கள் கிடைத்தன. இங்ஙனம் தாழிகளில் இறந்தார் அணிகளைப் புதைத்தல் பண்டை மேற்குப்புற நாடுகளிலும் இருந்துவந்த பழக்கமே ஆகும்.
உடன் இறக்கும் வழக்கம்
ஒரு பிணைக் குழியிற் கிடைத்த முத்திரை ஒன்றில், கட்டில்மீது மங்கை ஒருத்தி சாய்ந்துகொண்டு இருப்பது போல, உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதனால் இறந்த ஆடவனுடக்குரிய மனைவி கணவனுடன் இறக்கும் வழக்கம் அக் காலத்தில் இருந்திருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்; ‘இறந்தவர் அடுத்த வாழ்க்கையில் இப்பிறவியில் இருந்தவாறே இருக்க விழைந்தனர்; அவ்விழைவாற்றான் மனைவியும் உடன் இறந்தவளாதல் வேண்டும்[4] என்று எண்ணுகின்றனர்.
முடிவு
மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா முதலியன சிறந்த நாகரிகமும் செல்வப் பெருக்கமும் உடைய நகரங்கள்; வாணிபப் புகழ்பெற்ற நகரங்கள். ஆதலின், அவற்றில் பல நாட்டு மக்கள் குடிபுகுந்திருந்தனர். அவரவர் தத்தம் நாட்டுப் பழக்கத்திற்கேற்ப இறந்தார் உடலைப் புதைத்தும், எரித்தும், நாய் நரிகட்கு இட்டும் வந்தனர் என்பதை ஹரப்பாவிற் கிடைத்த புதைகுழி விவரங்களால் நன்கு அறியலாம். அப்பலவகை அடக்க முறைகள் இன்றும் சென்னை, கல்கத்தா, பம்பாப் போன்ற வாணிபப் பெருக்கமுடைய நகரங்களில் பலநாட்டு மக்கள் உறைகின்ற நகரங்களில் காணலாம்.[5] எனினும், சிந்துவெளி மக்கட் கென்றே சிறப்பாக இருந்த பழக்கம் இடுதலும் சுடுதலுமே என்பதை ஹரப்பாவில் கிடைத்த முழுவுடல் புதை முறையாலும் (அவையே ஆழத்தில் புதைக்கப்பட்டவை). மொஹெஞ்சொ-தரோவில் வீடுகட்கடியில் கிடைத்த சாம்பல் கொண்ட மட்கலங்களாலும் நன்கறியலாம். மேலும், சிந்து வெளி மக்கள் மறுபிறவி உணர்ச்சி உடையனராக இருந்தனர் என்பதும் அறியத்தக்கது.[6]
- ↑ இன்றும் கருடனை வழிபடல் கவனிக்கத்தக்கது. இது பண்டைக் காலத்திருந்து இன்றளவும் தொடர்ந்து வரும் வழிபாடாகும்.
- ↑ மயிலேறி விளையாடு குகனே என வரும் அடியும், மயில் முருகனைத் தாங்க முடியாத பறவையாக இருந்தும், கருடனைப் போல ஊர்தியாகக் கூறப்பட்டதன் உட்கருத்துப் பண்டையோர் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதே போலும்! நடுவீட்டில் ஆண்மயிலைப்போல ஒவியம் எழுதி அதனை மட்டும் வழி படும் வழக்கம் இன்றுந் தமிழ்நாட்டில் உண்டு. அதனை மயிலேறு விழா என்பர்.
- ↑ M.P.Nelson’s The Minoan Mycenaen Religion’, pp.320.321.
- ↑
'சாதல் அஞ்சேன்: அஞ்சுவல் சாவில்
பிறப்புப்பிறி தாகுவ தாயின்
மறக்குவென் கொல்என் காதலன் எனவேஎன வரும் நற்றிணை அடிகளும்,
‘இம்மை மாறி மறுமை ஆகினும்
நீயா கியரெங் கணைவனை:
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே”என வரும் குறுந்தொகை அடிகளும்,
‘காதலர் இறப்பின்...’ என வரும் மணிமேகலை அடிகளும் இங்குச் சிந்திக்கற்பாலன.
- ↑ காவிரிப்பூம்பட்டினம் வாணிகச்சிறப்புடையது. பல பாடை மக்களைக் கொண்டது. ஆதலின், அங்கு இடுதல், சுடுதல் தாழியிற் கவித்தல், குழியிற் போட்டுக் கல்லை மூடிவிடல், நாய் நரிகட்கு இரையாக விடுதல் முதலிய பலவகை முறைகள் கைக் கொள்ளப்பட்டன என்பதை மணிமேகலையால் அறிக.
- ↑ ‘No trace of the doctrine of Transmigration is found in the Rig Veda, and yet no other doctrine is so peculiarly Indian. It may have had its origin Non-Aryan animism, but became established among the Aryans quite early’, ... DR.S.K. Chatterji’s Origin and Development of the Bengali Language, Vol. I p.42 என்பது ஈண்டுச் சுவைத்திற்குரியது.