மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/16. சிந்துவெளி எழுத்துகள்
எழுத்து ஆராய்ச்சியாளர்
சிந்துவெளியிற் கிடைத்த முத்திரைகளிற் பொறிக்கப் பட்டுள்ள சித்திரக் குறிகளே சிந்துமக்கள் மொழிக்கு உரிய எழுத்துகள் ஆகும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. அவ் வெழுத்துகளை வகைபடுத்தி, ‘சிந்து வெளியின் பண்டை எழுத்துக் குறிகளின் பட்டியல்’ என்றும்,[1] பண்டை இந்திய எழுத்துகளின் அமைப்பு முறை[2] என்றும், ‘சிந்து வெளி எழுத்துகள்’[3] என்றும் அறிஞர்கள், தாம் அறிந்தவரை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கட்குப் பிறகு டாக்டர் ஹன்ட்டர் என்னும் பேரறிஞர் சிந்துவெளி எழுத்துகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து, அழகிய நூல் ஒன்றை 1934 இல் வெளிப்படுத்தியுள்ளார்.[4]
படிக்க முடியாத எழுத்துகள்
இந்த எழுத்துகள் படிக்க முடியாத நிலையில் இருக்கின்றன. இவை படிக்கப்பட்ட பின்னரே சிந்துவெளி மக்களின் உண்மை வரலாற்றை உள்ளவாறு உணரக்கூடும். இத்தகைய எழுத்துகள் சுமேரியாவிலும் கிடைத்துள்ளன: பசிபிக் பெருங் கடலில் உள்ள ஈஸ்டர் தீவிலும் கிடைத்துள்ளன. எகிப்தியப் பண்டை எழுத்துகளும், ஸைப்ரஸ் தீவில் கிடைத்த பழைய எழுத்துகளும், லிபியாவில் கிடைத்த எழுத்துகளும் சிறிது வேறுபாட் டுடன் பெரிதும் ஒத்துள்ளன. ‘இவை அனைத்தும் ஒரு பொது எழுத்து முறையிலிருந்து நெடுங்காலத்திற்கு முன்னரே பிரிந்தனவாதல் வேண்டும்’ என்று டாக்டர் ஹன்ட்டர் கருதுகின்றார். இவை இதுகாறும் படிக்கக் கூடவில்லை.
எழுத்துகளைப் பெற்றுள்ள பொருள்கள்
ஸ்டெடைட் (Steatite) என்னும் ஒருவகைக் கல் மீது சுண்ணம் தடவிச் சுட்டு, அதன்மீது எழுத்துகளும் விலங்கு முதலிய உருவங்களும் பொறிக்கப்பெற்றுள்ளன. இக்கற்களாலாய பொருள்கள் சதுரமாகவும் நீளச் சதுரமாகவும் நீண்டு உருண்ட வடிவமாகவும் அமைந்துள்ளன. சில முச்சதுரமாக அமைந்துள்ளன. அவை சீட்டுகள் (இரசீதுகள்) என்று டாக்டர் ஹன்ட்டர் கருதுகிறார். ஏனையவற்றுட் சில கயிற்றிற் கோத்துக் கழுத்தில் கட்டிக் கொள்வனபோல அமைந்துள்ளன. செம்பாலாய நீள் சதுரத் தகடுகள் பல கிடைத்துள்ளன. அவை நாணயங்கள் என்று அறிஞர் கருதுகின்றனர். அவற்றில் விலங்கு உருவம் மேலும், எழுத்துகள் கீழுமாகப் டொறிக்கப்பட்டுள்ளன. அவை அரசர்தம் பெயர்களாக இருத்தல் கூடும். இரண்டொரு நீள் சதுரக் களிமண் தட்டுகள் மீது சில எழுத்துகள் காணப்படுகின்றன. சில எழுத்துக் குறிகளைக் கொண்ட பொருள்கள் ஒப்பந்தச் சீட்டுகளாக இருத்தல் கூடும் என்று டாக்டர் ஹன்ட்டர் கருதுகின்றனர்.
எழுதும் முறை
இச் சிந்துவெளி மக்கள், இங்குக் கிடைத்த முத்திரைகள், நாணயங்கள் முதலியவற்றின் மீது எழுதிய அளவோடு நின்று விட்டனர் எனக் கருதுதல் தவறு. அவர்கள், அழியும் இயல்பினவான பல்வேறு பொருள்கள் மீதும் எழுதிவந்தனர் எனக் கோடலே பொருத்தமாகும். அவர்கள் தோல், பாபிரஸ், பட்டு, இவற்றையோ, இவற்றில் ஒன்றையோ இரண்டையோ எழுதப் பயன்படுத்தி இருக்கலாம். எழுத்துகள் மேலிருந்து கீழ்நோக்கி எழுதப்பட்டுள்ளன; நேராக அமைந்துள்ளன. இந்த எழுத்துகள் அகரவரிசை உடையன அல்ல; சித்திர எழுத்துகள் பல; ஒலிக்குறிப்பு உடையன பல. இவ்வெழுத்துகள் வலம் இடமாக வாசிக்கப்பட வேண்டியவை; சில இடங்களில் இடம் வலமாக வாசிக்கத் தக்கபடி அமைந்துள்ளன. இவை பல்வேறு காலத்து வளர்ச்சி யுடையனவாகக் காணப்படுகின்றன.
எழுத்துகளால் அறியப்படுவன :
1. சிந்து வெளி எழுத்துகள் உச்சரிப்பைக் குறிப்பன.
2. அவை ஒவிக்குறிப்பையும் உணர்வுக் குறிப்பையும் அடிப்படையாகக் கொண்டவை.
3. அந்த அடிப்படை கி.மு.3000க்கு முற்பட்டது.
4. ‘ஜெம்டெட் நஸர்’ நகரில் காணப்பட்ட பழைய சுமேரியர் எழுத்துக் குறிகளை (கி.மு.3500) மிகவும் ஒத்துள்ளன; பழைய ஏலத்திய எழுத்துகளையும் சுமேரியர் எழுத்துகளையும் ஒத்துள்ளன. எனவே, இவை அனைத்தும் கி.மு.4000க்கு முன்னரே ஒரு பொது எழுத்து முறையிலிருந்து பிரிந்தனவாதல் வேண்டும்.
5. சிற்சில எழுத்துக் குறிகள் எகிப்தியக் குறிகளை ஒத்துள்ளன.
6. கிரீட் தீவில் காணப்பட்ட எழுத்துகளும் இவை போன்றவையே. எனவே, மிகப் பழைய காலத்தில் சித்திர எழுத்துகளை மூலமாகக் கெர்ண்ட ஒரு பொது மொழியி லிருந்தே இவை அனைத்தும் பிரிந்தனவாதல் வேண்டும்.
7. சபிய எழுத்துகள், சைப்ரஸ் எழுத்துகள், பொனிஷிய எழுத்துகள் ஆகிய மூன்றிலும் உள்ள ஒரு பகுதி எழுத்துகள் இந்தச் சிந்துவெளி எழுத்துக் குறிகளிலிருந்தே பிறந்தனவாதல் வேண்டும். அப்பண்டைக்காலத்தில் சிந்துவெளி மக்கள் அரபிக்கடல், செங்கடல், மத்ய தரைக்கடல் ஆகிய இம் மூன்றன் வழியாக மேற்குப் புறநாடுகளோடு வாணிபம் செய்து வந்தனராதலின், அவர்களிடமிருந்து மேற்சொன்ன மூன்றிடத்து மக்களும் எழுத்துக் குறிகள் சிலவற்றைக் கடன் பெற்றிருக்கலாம்.[5]
பிராமி எழுத்துகள்
அசோகன் சாசனங்களில் காணப்படும் பிராமி எழுத்துகள் கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவை இழந்துவிட்ட இந்தியா எழுத்துக் குறிகளிலிருந்து தோன்றினவாதல் வேண்டும் என்று ஸர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் நெடுநாட்களுக்கு முன் கருதினார். அவர் கருதியது சரி என்பதை இன்று பேராசிரியர் லாங்டன் உணர்ந்தார்; ‘சிந்துவெளி எழுத்துக் குறிகளிலிருந்தே பிராமி எழுத்துகள் தோன்றினவாதல் வேண்டும்’ என்று பல காரணங்களைக் காட்டி மெய்ப்பித்துள்ளார். ‘சிந்து வெளி நாகரிகம் கி.மு.2500க்கு முற்பட்டது. பிராமி எழுத்துகள் கி.மு.300க்குச் சரியான காலத்தவை. இவை இரண்டிற்கும் இடைப்பட்ட எழுத்து. வளர்ச்சிக்குரிய குறியீடுகள் இல்லாத போது,[6] அவற்றிலிருந்து இவை வந்தன எனல் எங்ஙனம் பொருந்தும்? என்று சிலர் கேட்கலாம். சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகையோடு அழிந்து விட்டது என்று கூறக் கூடிய சான்று இதுகாறும் கிடைத்திலது. சிந்துவெளிச் சமயநிலை இன்றளவும் இந்தியாவில் இருந்து வருகையில், எழுத்துக் குறிகள் மட்டும் மறைந்துவிட்டன எனக் கூறுதல் பொருத்தமற்ற வாதமாகும். மேலும், மொஹெஞ்சொ-தரோ நகர மண் மேட்டின் மீது கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெளத்தர்கள் ஸ்துபம் கட்டி வாழ்ந்து வந்தனர் என்பது வெளிப்படை. சிந்து பஞ்சாப் மண்டிலங்களில் நன்றாகப் பரவி இருந்த பண்பு முன்னரே விளக்கப்பட்டுள்ளது. எனவே, பெளத்தர்கள் காலம் வரை சிந்து வெளி நாகரிகம் தொடர்ந்து வந்ததெனக்கோடல் தவறாகாது. மேலும், புதிதாக வந்த ஆரியர், நீண்ட நாளாக நாட்டில் நிலைபெற்றிருந்த பண்டைக் குடிகளின் நாகரிகத்தையோ பிறவற்றையோ பிரமாதமாக மாற்றிவிட்டனர் என்று கூறவும் இதுகாறும் சான்று கிடைத்திலது. ஆரியர் தெய்வங்களான இந்திரன், அக்நி முதலியனவும் அவர்தம் மதத்தின் உயிர் நாடியான வேள்வி இயற்றலும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இன்றளவும் இந்துமதத்தில் உச்ச நிலையில் இருப்பன சிந்துவெளித்தெய்வங்களே ஆகும்; கோடிக்கணக்கான இந்துக்களிடம் இருப்பவை சிந்துவெளி மக்கள் கையாண்ட தெய்வ வணக்கமே யாகும். ஆதலின், ஆரியர் வருகையால், சிந்து வெளி நாகரிகத்திற்கு மாறாகப் பெரிய புரட்சி ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. போதிய எழுத்துச் சாதனங்கள் இன்மையால், அசோகனுக்கு முற்பட்டவர்கள் கற்கம்பங்களில் எழுத்துகள் பொறிக்கவில்லை. பொறிக்க வேண்டிய தேவை ஏற்படவும் இல்லை. ஆகவே, அசோகனுக்கு முற்பட்ட எழுத்துகள் நமக்குக் கிடைத்தில. ஒருவேளை, அவை மண்ணுள் மறைப்புண்டு இருப்பினும், இருக்கலாம்; நாளடைவில் வெளிப்படலாம். அவை எங்ஙனமாயினும், ‘அசோகனுடைய பிராமி எழுத்துகள் சிந்துவெளி எழுத்துக் குறிகளிலிருந்து தோன்றின என்பதில் ஐயமே. இல்லை’ என்று பேராசிரியர் லாங்டன் கருதுகிறார். ‘அவரது கருத்துச் சரியே’ என்று டாக்டர் ஹன்ட்டரும் அறிவிக்கின்றார்.
எழுத்துகள்
சிந்துவெளி எழுத்துகளைச் சோதிக்கையில், தெளிவான வேறுபட்ட 234 எழுத்துக்குறிகள் காணப்படுகின்றன. பிராமியில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஓ, என்னும் எட்டு உயிர் எழுத்துகளும், 33 மெய் எழுத்துகளும் காணப்படுகின்றன. இவற்றால் உண்டான உயிர்மெய் எழுத்துகள் (33 X 8=) 264 ஆகும். இவற்றில் 50 எழுத்துகளுக்கு உரிய குறிகள் சிந்துவெளி எழுத்துகளில் தெளிவாகக் காணப்படுகின்றன. ஆசிய-ஆஸ்ட்ரேலிய (முண்டா) மொழிகளின் குறியீடுகள் சில சிந்துவெளி எழுத்துகளில் காணப்படுகின்றன. அவற்றின் குறியீடுகள் சில பிராஹுயி மொழி எழுத்துகளிலும் காணப்படுகின்றன. இந்தியாவில் முண்டா மொழிகளே திராவிடத்துக்கு முற்பட்டவை. ஆதலின் அவை திராவிடத்திலும் ஓரளவு கலந்திருக்கலாம்.
சிந்து வெளி மக்கள் மொழி ஒரசையுடைய (monosyllabic) சொற்களையே பெரிதும் கொண்டதாகும். அம்மொழி சமஸ்கிருதமன்று; செமைட்டிய மொழியும் அன்று என்பது உண்மை.[7]
சிந்துவெளி எழுத்துகளாகக் கருதப்படுபவை மீன், கட்டங்கள், நாய், கோழி, வாத்து, வண்டு, மனித உருவம், வேறுபல வளைவுகள் முதலியனவாம். இவை சித்திர எழுத்துகள் ஆகும். சில கட்டங்களுள் 2 முதல் 21 கட்டங்கள் வரையில் இருக்கின்றன. இவை அனைத்தும் தனிப்பட்ட பகுதிகளாகவும் சொற்களாகவும் இணைப்புண்ட சொற்களாகவும் இருத்தல் கூடும் என்று அறிஞர் கருதுகின்றனர். இந்த உரு எழுத்துகள் ஒலி எழுத்துகளாக மாறுவதற்கு நீண்ட காலம் ஆகியிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. முத்திரைகளின் மேல் எழுதப்பட்டுள்ள கதைகள் இன்னவை என்பது தெரிந்த பின்னரே, சிந்துவெளி மக்களுடைய நாகரிகத்தைப்பற்றிய சுவை பயக்கும் செய்திகள் பலவற்றை அறிந்து இன்புறலாம்.[8]
“இந்த எழுத்துக் குறிகளைச் சோதித்தால், பல பொருள்களைக் குறிக்க ஒரே சித்திரம் பயன்படுத்தப்பட்டதை உணரலாம். உதாரணமாக, ‘வெளிச்சம் விளக்கு, சூரியன், ஒளி, சுடர் என்னும் பலவற்றைக் குறிக்க ஏறக்குறைய ஒரே ஒரே அடையாளம் காணப்படுகிறது. ஆரியர் கி.மு.1200க்கு முன் இந்தியாவிற் புகவில்லை. அவர்கட்கு முன் சிந்துவெளியில் இருந்தவர் திராவிடராகலாம். பலுசிஸ்தானத்தில் உள்ள ப்ராஹுயி மொழியிற் பேரளவு திராவிடக் கலப்பு இருத்தலும், ப்ராஹுயி மக்கள் மண்டை ஒடுகளை ஒத்தவை மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்திருத்தலும், சிந்துவெளி மொழி ப்ராஹயியைப் போல ஒரசைச் சொல் உடையதாக இருத்தலும் நோக்கத் திராவிடம் வட இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன் இருந்தது என்னலாம். திராவிடரே தங்கள் கலைகளையும் பிறவற்றையும் ஆரியரிடம் ஒப்படைத்தவராதல் வேண்டும்”[9]
“சிந்துவெளி எழுத்துக் குறிகள் பழைய திராவிட மூல எழுத்துக் குறிகளிலிருந்து பிறந்தனவாதல் வேண்டும். இத்தகைய எழுத்துகள் லிபியாவிலும் கிடைத்துள்ளன. பழைய லிபிய எழுத்துகளிலிருந்து ஐபீரியன், எட்ரஸ்கன், லிபியன், மினோவன், பழைய எகிப்திய எழுத்துகள் முதலியன தோற்ற மெடுத்தனவாகும்” சிந்துவெளி எழுத்துகளிலிருந்து பிறந்தவை:(1) சுமேரியர் எழுத்துக்குறிகள். இவற்றிலிருந்து பிறந்தனவே பாபிலோனிய எழுத்துகளும் பிற்கால அசிரிய எழுத்துகளுமாகும், (2) பழைய ஏலத்து எழுத்துகள். இவை இன்றளவும் வாசிக்கக் கூடவில்லை. (3) பழைய சீன எழுத்துகள், (4) தென் அரேபியாவில் உள்ள ‘சபியன்’ எழுத்துகள்.
“வட பிராமி எழுத்துகளும் தென் பிராமி எழுத்துகளும் சிந்துவெளி எழுத்துகளிலிருந்து வளர்ச்சி பெற்றவையே ஆகும். தென் பிராமி எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளிலிருந்து திராவிடரால் வளர்க்கப்பட்ட நேரான வளர்ச்சியுடை எழுத்துகள் ஆகும். அவற்றின் ஒருமைப்பாட்டைத் திருநெல்வேலியிற் கிடைத்த மட்பாண்டங்கள் மீதுள்ள எழுத்துக் குறிகளையும். நீலகிரியில் உள்ள கல்வெட்டுகளையும், ஹைதராபாத் சமாதிகளிற் கிடைத்த எழுத்துக் குறிகளையும் கொண்டு நன்குணரலாம். வடபிராமி எழுத்துகள் சிந்துவெளி எழுத்துக் குறிகளிலிருந்து நேரான வளர்ச்சி பெற்றவை அல்ல. அவை எழுதத் தெரியாமல் இந்தியாவை அடைந்த ஆரியரால் ஏற்று வளர்க்கப்பட்டவை; அவர் தம் வடமொழிக்கேற்ப நாளடைவில் மாற்றப்பெற்றவை. அசோகனுடைய பிராமி எழுத்துகள் ஆரியரால் வளர்க்கப் பெற்ற சிந்துவெளி எழுத்துகளின் பிற்காலத் தோற்றம் ஆகும். இக்காரணத்தாற்றான், வட பிராமி எழுத்துகள், தென் பிராமி எழுத்துகளினின்றும் வேறுபட்டுக் காணப்படுகின்றன; வடபிராமி எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளினின்றும் மாறுபட்டுக் காணப்படுகின்றன.
“சிந்ருவளி எழுத்துகளைக் கொண்ட மொழி பழைய திராவிடமாகும். அத்திராவிடத்தின் பெரும்பாலான சொற்கள் தமிழிலேயே காணப்படுகின்றன. ஆயினும், சில சொற்கள் கன்னடம், துளுவம் முதலிய பிற திராவிட மொழிகளில் காணப்படுகின்றன. ப்ராஹுயி மொழியில் உள்ள திராவிடச் சொற்களும் சிந்து, பலுசி, பாரசீக மொழிகளால் தம் உண்மையான உச்சரிப்பை இழந்துள்ளன. எனவே, சிந்து வெளித் திராவிட மொழி இன்று பேசப்படுகின்ற திராவிட மொழிகளைப் போன்றதன்று; இவற்றின் தாய்மொழி எனல் பொருந்தும். அது பழைய கன்னடத்தையும் சங்கத் தமிழையும் ஒருவாறு ஒத்ததாகும்”. “சிந்துவெளியிற் கிடைத்த சில எழுத்துக் குறிகள் தளதள, முகில் (நீர் அற்ற மேகம்), கார்முகில் (நீர் உற்ற மேகம்), மழை மூன்(று) கண், மூன்(று) மீன் கண், பேராள் (பேரான்) எண்ணாள் (எண்ணான்), நாய்வேல், நண்டுர், வேலூர், குரங்கர், மீனவர் முதலிய சொற்களைக் குறிக்கின்றன”. ஒரு முத்திரையில் முனுதயது என்னும் சொற்றொடர் காணப்படுகிறது. அதன் பொருள் ‘மூன்று கம்பளி போர்த்துக் கொள்ளத்தக்க குளிரையுடைய காலம்’ என்பதாம். இவ்வழக்கு இன்றும் கன்னட நாட்டுக் கெளடரிடம் இருந்து வருகின்றது கவனிக்கத்தக்கது. பேராள்,[10] எண்ணாள்,[11] முக்கண்,[12] என்பன சிவனைக் குறிப்பன.
“இதுகாறும் கூறியவற்றால், ‘சிந்து வெளி மக்கள்’ லிபியாவிலிருந்து வந்தவர்கள், அவர்கள் நெடுங்காலத்திற்கு முன்பே இந்தியாவை அடைந்து, ஆஸ்ட்ரேலிய மக்களுடன் கலப்புண்டனர்; நம் வெண்மை நிறத்தையும் உருவ அமைப்பையும் இழந்தனர்; ஆஸ்ட்ரேலிய மொழியில் ஓரளவு கொண்டனர்; தங்கள் சித்திர எழுத்துகளை மேன்மையுற வளர்த்து வந்தனர். அவர்களே பிற்காலத்தவரால் ‘திராவிடர்’ எனப் பட்டனர். அவர்தம் எழுத்துகள் உலகப் புகழ்பெற்ற பல எழுத்துகள் பிறப்பதற்கு மூலமாயின. அந்த எழுத்துக் குறிகளைக் கொண்டே வடபிராமி வளர்ந்தது” என்பனவும் பிறவும் நன்கறியலாம்.[13]
சிந்துவெளியிற் காணப்பெற்ற எழுத்துக் குறி ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறிப்பதாகும். அது நாளடைவில் அந்தப் பொருளின் பெயரையே குறிக்க மாறி இருத்தல் வேண்டும். அதுவே ஒலி எழுத்தாகும்... எழுத்துகள் தோன்றும் விந்தையை ஒரளவு அறிதல் இங்கு அவசியமாகும்:” மனிதன் பேசமுடியாத நிலையில் இருந்த காலம் ஒன்றுண்டு. அவன் பிறகு (1) தான் விரும்பிய பொருளின் உருவத்தைச் சித்திரித்துக் காட்டினான்: (2) பின்னர் அதன் குண விசேடத்தைத் தன் செய்கையால் உணர்த்திப் பெற்று வந்தான்; (3) பிறகு அப்பொருளை உணர்த்த ஒர் எழுத்தைப் பயன்படுத்தினான், (4) இறுதியில் பேச்சு வகையால் சொற்றொடர்களைக் குறிக்க அடையாளக் குறிகளை இட்டுவந்தான். மனிதனது மொழி இங்ஙனமே படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தது” என மொழி நூல் எழுதப் புகுந்த ஆட்டோ ஜெஸ்பெர்ஸன் என்பார் அறைந்துள்ளார். இந்நான்கும் தமிழில் முறையே (1) உரு எழுத்து, (2) தன்மை எழுத்து, (3) உணர்வெழுத்து, (4) ஒலி எழுத்து எனப்படும். இவை விளக்கமாக நன்னூல் மயிலைநாதர் உரையில் (எழுத்தியல் ஈற்றுச் சூத்திர வுரையிற்) காணப்படு கின்றன. யாப்பருங்கல விருத்தியின் கடைசிச் சூத்திர வுரையிலும் இவ்வகை எழுத்துகளைப் பற்றிய இலக்கணம் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றுடன் அவ்வுரையில், “மகடூஉ ஆ பிடி, குமரி, கன்னி, பினவு, முடுவல் என்றின்ன சில எழுத்தும் தேர், பதம் முதலிய நால்வகை எழுத்தும், சாதி முதலிய தன்மை எழுத்தும், உச்சாடனம் முதலிய உக்கிர எழுத்தும், சித்திரகாரூடம் முதலிய முத்திற எழுத்தும், பாகியல் முதலிய நால்வகை எழுத்தும், புத்தேள் முதலிய நாற்கதி எழுத்தும், தாது முதலிய யோனி எழுத்தும், மாதமதியம் முதலிய சங்கேத எழுத்தும், கவி முதலிய சங்கேத எழுத்தும், பார்ப்பான் வழக்காகிய பதின்மூன்றெழுத்தும் என்று இத்தொடக்கத்தனவும்.... கட்டுரை எழுத்தும், வச்சிரம் முதலிய வடிவெழுத்தும்.... மற்றும் பலவகையாற் காட்டப்பட்ட எல்லா எழுத்தும் வல்லார்வாய்க் கேட்டுணர்க” என்று கூறியிருத்தல் நோக்கத்தக்கது. மேலும், சிலப்பதிகார்த்தில், காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் இறக்குமதியான மூட்டைகட்கும் பண்டம் ஏற்றிய வண்டிகட்கும் க்ண் எழுத்துகள் இடப்பட்டிருந்தனவாம்.
“வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி”,
“இருபதினாயிரம் கண்ணெழுத்துப் படுத்தன.
கைபுனை சகடமும்”[14]
“இவற்றால் கடைச் சங்க காலத்தில் (கி.மு.300 கி.பி.200) தமிழ் நாட்டின் கண் எழுத்துகள் வழங்கின.” என்பதை அறியலாம், கண்ணெழுத்து - சித்திர எழுத்து; கண்ணுள் வினைஞர்-சித்திரகாரிகள்; நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர்’ என்னும் நச்சினார்க்கினியர் உரை” சுவைத்தற்குரியது. எனவே, ‘கண் எழுத்து’ என்பது, பார்ப்பவர் கண்ணுள் தொழிற்றிறமை காட்டி நிற்கும் எழுத்து’ எனப் பொருள்படும். கரந்தெழுத்து என்னும் ஒருவகை எழுத்தும் வழக்கில் இருந்த உண்மை சிந்தாமணியால் அறியத்தகும் (செ1767). இங்ஙனம் பல திறப்பட்ட எழுத்துகள் இருந்தன என்பதைத் தமிழ் இலக்கண நூல்கள் கூறிச் செல்வதால், இவை தமிழகத்தில் பெருவழக்கு உடையனவாக ஒரு காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாம். மேலும், யாப்பருங்கல விருத்தி யுரையிற் காணப்பெறும் தன்மை முதலிய எழுத்து வகைகளைப் பற்றிய சூத்திரங்கள் யாப்பருங்கல விருத்தியாளர் காலத்திற்கு முற்பட்டனவாதல் வேண்டும்; இன்று தமிழகத்துள் கிடைத்துள்ள தமிழ்ச் சாஸனங்களில் அத்தகைய எழுத்துகள் காணப் பெறாமையாலும், அச் சாஸனங்களின் பழைய காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டாகலானும், கி.பி.7ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்திற்றான் அவ்வகை எழுத்துகள் தமிழகத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்று கோடல் பொருத்தமானது.
“கி.மு.3ஆம் நூற்றாண்டின என்று கருதத் தகும் தென் பிராமி சாஸனங்களில் உள்ள மொழி பிராகிருதமொழி கலந்த தமிழின் சிதைவாகத் தெரிகின்றது. அச்சாஸனங்கள், தமிழ் மக்கள் தனியே வழங்கிய லிபிகளும் பிராமி லிபிகளும் கலந்த எழுத்தமைதியும், பாகதமும் தமிழும் கலந்த பாஷை அமைதியும் உடையனவாகவே தோற்றுகின்றன. எனவே, ஆதித் தமிழர் தமக்கென்று அமைந்த எழுத்தமைதி உடையவர் என்பது தெளிவாம் ஆகவே, கடைச்சங்கத்தார் காலத்தினும் (கி.மு.400-கி.பி.200) அதற்கு வெகு காலத்திற்கு முன்னும் வழங்கிய எழுத்துகள் எல்லாம் சித்திர சங்கேத லிபிகள் (Hieroglyph) போன்றனவாதல் வேண்டும்... யாப்பருங்கால உரையால், சீனர் எகிப்தியர் வழங்கியவை போன்ற எழுத்துகள் தமிழகத்தில் அறவற்றிருந்தன என்றும், அவற்றுட் சில யாப்பருங்கல விருத்தியுடையார் காலத்தும் (கி.பி.11 ஆம் நூற்றாண்டினும் வழக்கில் இருந்தன என்றும் நாம் கொள்ளலாம்.... ‘தமிழாசிரியன் ஒருவன், நாட்டில் வழங்கும் இத்தகைய எழுத்து வகைகளை எல்லாம் உணர்ந்தவனாதல் வேண்டும் என முன்னோர் நியமித்திருத்தலால், பழைய ‘வடிவு’ முதலிய சங்கேத எழுத்துகள் தமிழ்நாட்டில் பெருவழக்குப் பெற்றிருந்தன என்றும், அவை யாவும் முன்னோரால் முறையாகக் கற்கவும் கற்பிக்கவும் பெற்றுவந்தன என்றும் நாம் நன்கறியக் கூடும். இக் குறி எழுத்துக்களைப் பயன்படுத்திய உலகத்துப் பண்டை மக்களில் தமிழரும் விலக்கப்பட்டவர் அல்லர்”.[15]
“இங்ஙனம் எழுத்துகள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்திய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள் தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களிற் காணப்படவில்லை.[16] இவற்றால், சித்திரங்களாலும் வேறு குறிகளாலும் மனிதர்கள் ஒரு காலத்தில் எழுதி வந்த பழக்கத்தைத் தமிழ் மக்களும் அறிந்திருந்தார்கள் என்பதை எண்ணலாம். ‘எழுத்து’ என்னும் சொல் தமிழில் பயிலப்படுவதை நோக்கினாலும் இது வெளிப்படும். ‘எழுத்து’ என்னும் தமிழ்ச் சொல்லுக்கு அக்ஷரம், லிகிதம், கல்வி, ஒவியம், பதுமை எனப்பல பொருள்கள் உள. பழைய தமிழ்நூல்களில், எழுத்து, எழுதுதல் என்னும் சொற்கள் பல இடங்களில்,
“இன்னபலபல எழுத்து நிலை மண்டபம்” (பரிபாடல், 19)
“தெய்வக் குடவரை எழுதிய.. பாவை” (குறுந் 39) என்பனபோலச் சித்திரம், பாவை முதலியவற்றை நிருமித்தல் ஆகியவற்றைக் குறிப்பதற்குப் பயிலப்பட்டுள்ளன. இதனால் பழந்தமிழ் மக்கள் சித்திரத்தையும் எழுத்தின் வகையாகவே கொண்டனர் என்று கொள்ளுதல் கூடும்.[17]
“...நாம், பிராமியைப் பற்றிய இந்த ஆறு விஷயங்களையும் கவனித்தால், பிராமிய லிபி முதலில் வடமொழிக்காக ஏற்படவில்லை என்றும், உயிர் எழுத்துகளுள் அ, இ, உ ஆகிய மூன்றுக்கும் அதிகச் சிறப்பை அளிப்பதும் மெய்யெழுத்துகளுள் வர்க்க எழுத்துகளைக் கொள்ளாததுமான ஒரு பாஷைக்கென அமைக்கப்பட்டுப் பின்னால் வடமொழிக்கு உபயோகப்படும்படி புதிய குறிகள் உண்டாக்கப்பட்டன என்றும் எண்ணவேண்டி இருக்கிறது. இந்தியாவில் உள்ள மொழிகளுள் இவ்விதம் உள்ளது ‘தமிழ்’ ஒன்றுதான். அங்ஙனமாயின், பிராமி முதலில் தமிழுக்கென அமைந்த லிபியாக இருத்தல் கூடுமா? இஃது ஆராய்தற்குரியது. ஹரப்பா, மொஹெஞ்சொ-தரோ இவற்றிற் கிடைத்த குறிகட்கும் பிராமிக்கும் மத்திய நிலையில் உள்ளன என்று கூறப்படும் குறிகளால் எழுதப்பட்டுள்ள சாஸனம் ஒன்று மத்திய இந்தியாவில் விக்ரமகோல் என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. (இந்ஆன்ட். 62 ஆவது வால்யூம்). மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த குறிகளைப் போன்றவற்றைக் கொண்ட மட்பாண்டங்கள் ஹைதராபாத் சமஸ்தானத்திலும், நாணயங்கள் திருநெல்வேலி ஜில்லாவிலும் கிடைத்துள்ளன. இவ்விதமான குறிகள் இந்தியாவின் பிற பாகங்களிற் கிடைக்கவில்லை”[18]
முடிவுரை
இதுகாறும் கூறியவற்றால், சிந்துவெளி எழுத்துகள், (1) ஒரசையைச் சிறப்பாகக் கொண்ட மொழியைச் சேர்ந்தவை: (2) அவற்றிலிருந்தே பிராமி எழுத்துகள் தோன்றி வளர்ச்சி பெற்றன; (3) பிராமி எழுத்துகள் தமிழ் மொழிக்கென்றே அமைக்கப் பட்டுப்பின்னர் வடமொழிக்கும் பயன்படும்படி புதிய குறிகள் உண்டாக்கப்பட்டன; 4) சிந்து வெளி எழுத்துக் குறிகள் திருநெல்வேலி நாணயங்களிலும் கிடைத்துள்ளன; (3) இந்திய மொழிகளில் தமிழ் ஒன்றிலேதான், எழுத்துகள் நெடுங்கணக்கு நிலையை அடைவதற்கு முன்னைய காலங்களிற் பெற்றிருந்த உருவங்களின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது... என்னும் சுவை பயக்கும் செய்திகளை அறியலாம். எனவே, சிந்துவெளி எழுத்துக் குறிகள், ஹீராஸ் பாதிரியார் கூறுவதுபோல பண்டைத்திராவிட மக்கள் தோற்றுவித்தனவே அவை திராவிட மொழிக்கு அமைந்த பண்டை எழுத்துக் குறிகளே என்று முடிபு கூறல் ஒருவாறு பொருந்தும்.
- ↑ C.J.Gadd’s ‘Sign-List of Early Indus Script’ in ‘MohenjoDaro and the Indus Civilization’. Vol. II. chapt. XXII.
- ↑ Sidney Smith’s Mechanical Nature of the Early Indian writing.
- ↑ Prof. Langdon’s The Indus Script’ in Mohenjo-Daro and the Indus Civilization, Vol. II, chapt. XXII.
- ↑ Dr.G.R.Hunter’s ‘The Script of Harappa and Mohenjo-Daro.
- ↑ Ibid.pp. 21, 22.
- ↑ சிந்துவெளி எழுத்துகட்கும் பிராமி எழுத்துகட்கும் இடைப்பட்ட வளர்ச்சி உடையன என்று கருதத் தக்க குறிகளைக் கொண்ட சாஸனம் ஒன்று நடு இந்தியாவில் விக்ரமகோல் என்னும் இடத்திற் கிடைத்துள்ளது. - Indian Antiquary, Vol.62.
- ↑ Ibid. pp.128.
- ↑ K.N.Dikshit’s Pre-historic Civilization of the IV’ pp.46-49.
- ↑ Dr. Hunter’s Article on ‘The Riddle of Mohenjo-Daro’ in the ‘New Review’ (April, 1936).
- ↑ பேராள், பேரான்- ‘பேரானை பெரும்பற்றப் புலியூரானை’ தேவாரம்.
- ↑ ‘எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ - திருக்குறள்
- ↑ முக்கண், முக்கண்ணன்- சிவவெருமானைக் குறிப்பன.
- ↑ Father, Herass Article on ‘Light on the Mohenjo-Daro Riddle’, in the ‘New Review’ (July, 1936).
- ↑ Silappathikaram, K. 5, fi, 11 K.25.li 136
- ↑ M.Raghava İyengar’s article on “llakkiya Sasana valakkarugal” in ‘Kalaimagal’. Madras.
- ↑ P.N.Subramania Iyer’s ‘Ancient Tamil Letter’s, p.103.
- ↑ ‘Ancient Tamil Letter’s p.94.
- ↑ Idid-pp. 101.103.