பூங்காவனம்

பொன்னிக்கு இப்போது பதினெட்டு வயதாகிறது. நல்ல அழகுடையவள். விஷமத்தனம் நிறைந்த பார்வை. "பொல்லாத பொன்னி" என்று கிராமத்தார்கள் கூப்பிடுவார்கள். பூங்காவனமும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவனே. பொன்னியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவன் ஒரே ஏக்கமா யிருந்தான். சதா அவள் ஞாபகந்தான். அவளுடைய அழகிலும், துடி துடிப்பான பார்வையிலும், மணி மணியான பேச்சிலும் அவன் மயங்கிப் போய் விட்டான்.

பூங்காவனம் இருந்த கிராமத்திற்குப் பக்கத்தில் படவேடு என்றொரு பெரிய கிராமம் இருந்தது. அங்கே காளி கோவில் ஒன்று உண்டு. அந்தக் காளி கோவிலின் முன்பு வருஷா வருஷம் வெகு விமரிசையாகப் படவேட்டம்மன் திருவிழா நடக்கும். தேர் ஊரைச் சுற்றி நிலைக்கு வருகிற வரைக்கும் தாரை தப்பட்டைகளின் சத்தம் காதைப் பிய்த்துக்கொண்டு போகும். கிராமத்திலுள்ளவர்களுக்கு எல்லாம் படவேட்டம்மன் திருவிழா என்றால் ஒரே கொண்டாட்டம். அதிலும் பெண்களுடைய குதூகலத்திற்கு அளவே கிடையாது. அவ்வளவு கூட்டத்திற் கிடையில் வளையல் போட்டுக் கொள்வதிலும், மக்காச் சோளம் வாங்கிக் கடிப்பதிலும், தேரடியில் தேங்காயுடைத்துத் தின்பதிலும் அவர்கள் அடைந்த சந்தோஷத்திற்குக் கங்கு கரையே கிடையாது. சிறுவர்களோ, ரங்கராட்டினம் சுற்றி அகமகிழ்வார்கள்.

அந்தத் திருவிழாவுக்குப் பொன்னி ஒரு தடவை சென்றிருந்தாள். பூங்காவனமும் வந்திருந்தான். பொன்னிக்குப் பூங்காவனத்தை மிகவும் நன்றாகத் தெரியும். அவனுடன் பேசிச் சிரித்து விளையாடுவது எல்லாம் உண்டு. ஆகவே அந்தத் திருவிழாக் கூட்டத்தில் பூங்காவனத்தைச் சந்தித்து, வளையல் போட்டுக்கொள்ள வேண்டுமென்று ஒரு ரூபாய் கடனாக வாங்கிக் கொண்டாள் பொன்னி.

பூங்காவனமும் மிகுந்த சந்தோஷத்துடன் ஒரு ரூபாயைத் தன் சுருக்குப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தான். திருவிழா முடிந்து வெகுநாள் வரை அவன் அந்த ரூபாயைத் திருப்பிக் கேட்கவேயில்லை.

பூங்காவனம் ஒரு பெரிய தோட்டம் வைத்துப் பயிர் செய்து வந்தான். அதில் அந்த வருஷம் கத்தரி நாற்றுக்கள் நட்டிருந்தான். நாற்றுக்கள் ரொம்பவும் வளப்பமாக இருந்தன. பச்சைப் பசேலென்று இருந்த அந்தத் தோட்டத்தில் ஒரு நாள் ஏழெட்டு ஆடுகளும் குட்டிகளுமாய்ப் புகுந்து கத்தரிச் செடிகளை மேய்ந்து கொண்டிருந்தன. இதைக் கண்ட பூங்காவனத்திற்குக் கோபம் அளவுக்கு மீறி வந்து விட்டது. ஆடுகளை அப்படியே மடக்கி ஓட்டிக்கொண்டு போய்ப் பவுண்டுக்குள் அடைத்து விட்டான்.

கோபத்தில் அந்த ஆடுகள் யாருடையவை என்றுகூடக் கவனிக்கவில்லை. அவை பொன்னியினுடைய ஆடுகள் என்று மட்டும் தெரிந்திருந்தால் அவ்வளவு நிர்த்தாட்சண்யமாகப் பவுண்டில் அடைத்திருக்க மாட்டான்.

பூங்காவனத்தின் தாட்சண்யமற்ற இந்தக் காரியத்தினால் பொன்னி மணியக்காரர் காலில் விழுந்ததோடில்லாமல், பூங்காவனத்திற்குத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று வைத்திருந்த ஒரு ரூபாயையும் 'தண்டம்' அழுது ஆடுகளை மீட்டுக்கொண்டு வந்தாள். "பூங்காவனமா இப்படிச் செய்தது? பாவம்! என்னுடைய ஆடுகள் என்று தெரிந்திருந்தால் பவுண்டில் அடைத்திருக்க மாட்டார்" என்று நினைத்தாள். எப்படியோ ஒரு ரூபாய் 'தண்டம்' அழுதாயிற்று. அவை பொன்னியிடைய ஆடுகள் என்று தெரிந்ததும் பூங்காவனம் தன்னுடைய கோபத்தை நினைத்துப் பெரிதும்


வருந்தினான். "ஐயோ, பொன்னிக்கு அநியாயமாய் ஒரு ரூபாய் தண்டம் வைத்தோமே!" என்று மனம் துடித்தான்.

சில தினங்களுக்குப் பிறகு பூங்காவனம் பொன்னியைக் கண்டு முன்பு திருவிழாவின்போது கொடுத்த ரூபாயைக் கேட்டான்.

"ரூபாயா? நல்லா வாங்கிக்குவீங்க! கத்தரிச் செடியிலே ஆடு வாயை வச்சிடுச்சின்னு பவுண்டிலே அடைச்சுட்டீங்களே! அந்த ஆடுகளை மீட்டு வர ஒரு ரூபாய் தண்டம் அழுதேனே! அதை யார் கொடுப்பது? உங்களுக்கு நான் கொடுக்க வேண்டுமென்று வெச்சிருந்த ரூபாய் சரியாப் போயிடுச்சு. வாங்கின கடனைக் கொடுத்திட்டேன். இனி என்னை ரூபாய் கேக்காதீங்க" என்று கண்டிப்பாகவும் சிரித்து மழுப்பியும் கூறிவிட்டாள்.

பூங்காவனம் அந்த ரூபாய் திரும்பி வரவில்லையே என்று வருத்தப்படவே யில்லை. அதற்குப்பதிலாகப் பொன்னியின் சாமர்த்தியத்தையும் சாதுர்யமான பேச்சையும் கண்டு அதிசயப்பட்டான்.

அவன் ஏற்கெனவே பொன்னியின் மீது வைத்திருந்த அன்பு இப்போது பன்மடங்காயிற்று. பொன்னியை எப்படியும் மணந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான். அப்படித் தீர்மானிக்கும்போது பொன்னி மட்டும் தனக்குக் கிடைக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டான்.

சீக்கிரமே அவன் பிரார்த்தனை பலித்தது; திருமணமும் நடந்தது.

அன்று ஆடி கிருத்திகை. பூங்காவனம் வீட்டு உத்தரத்தில் வெகு நாட்களாக ஒரு புதுச்சட்டி தொங்கிக்கொண்டிருந்தது. அது கைக்கு எட்டாத உயரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்ததால் அதற்குள் என்ன இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளப் பொன்னி இத்தனை நாட்களாக அவ்வளவாகச் சிரத்தை கொள்ளாமலிருந்தாள். திடீரென்று அன்றைக் கென்னமோ பூங்காவனத்தினிடம், அந்தச் சட்டியிலே என்ன இருக்கு?” என்று கேட்டாள். "அதிலே ஒரு பெரிய ரகசியம் இருக்கு" என்று சொல்லிப் பூங்காவனம் அந்தச் சட்டியைப் புன்னகையோடு பார்த்தான். அவன் அப்படிச் சிரித்துக்கொண்டே அதைப் பார்க்கவும் பொன்னிக்கு அந்தப் பரம ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் மேலும் அதிகமாயிற்று.

"அப்படிப்பட்ட ரகசியம் என்ன?” என்று ஆத்திரத் தோடும் ஆவலோடும் கேட்டாள்.

"உனக்கும் எனக்கும் கலியாணம் நடந்தால் திருத்தணி முருகக் கடவுளுக்கு ஆடி கிருத்திகை யன்று ஒரு ரூபாய் காணிக்கை செலுத்துவதென்று வேண்டிக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு ஆடி கிருத்திகை யில்லே?" என்று சொல்லிக்கொண்டே பூங்காவனம் மேலே ஏறி உத்தரத்திலிருந்த சட்டியை அவிழ்த்துக்கொண்டு வந்தான். சட்டியை மூடிக் கட்டியிருந்த துணியை அகற்றி அதிலிருந்து ஒரு மஞ்சள் துணி முடிச்சை எடுத்துக் காண்பித்தான். மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் முடிச்சுப் போடப்பட்டிருந்தது.

"ஆமாம்; என்னைத்தான் பொல்லாதவள் என்கிறீங்களே? எதுக்காக அப்படி இந்தப் பொல்லாத பெண்ணைக் கண்ணாலம் செய்து கொள்ளப் பிரார்த்தனை செய்து கொள்ள வேணும்?" என்று பொன்னி கேட்டாள்.

"அதென்னவோ பொன்னி! நீ பொல்லாதவளா யிருப்பதற்காகவேதான் நான் உன்னைக் கலியாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். அத்துடன் நீ ரொம்பச் சாமர்த் தியசாலியாயும் இருக்கிறாய். நீ கெட்டிக்காரியா யிருப்பதனால்தானே என் கடனைத் திருப்பிக் கொடுக்காத வகையில் பக்குவமாகப் பேசி என்னை மயக்கிவிட்டாய்? முருகன் கிருபையால் கலியாணமும் நடந்தது. பிரார்த்தனையைச் செலுத்த வேண்டிய நாளும் வந்திடுச்சு" என்றான் பூங்காவனம்.

“ரொம்ப சரி; பிரார்த்தனைக்கு ஒரு ரூவா கட்டி வெச்சிருக்கீங்களே. அது என்ன கணக்கு?" என்று கேட்டாள்.

பொன்னி இம்மாதிரி கேட்டதும் பூங்காவனத்திற்குப் பழைய ஞாபகங்களெல்லாம் வந்து நின்றன.

அந்தக் கதை யெல்லாம் பொன்னிக்கு ஒன்றுவிடாமல் நினைவுபடுத்தி, "பொன்னி! என்னால்தானே மணியக்காரருக்கு நீ ஒரு ரூபாய் அபராதம் செலுத்தினாய்? அதற்கு நான் தானே காரணம்? அந்தக் குற்றத்துக்கு ஈடாகவே திருத்தணி முருகக் கடவுளுக்கு ஒரு ரூபாய் உண்டி செலுத்துவதாக வேண்டிக் கொண்டேன். அப்படி வேண்டிக் கொள்ளும் போது நீயே எனக்கு மனைவியாகக் கிடைக்கவேண்டுமென்றும் பிரார்த்தித்துக் கொண்டேன். வா, இப்போதே போவோம்" என்று சொல்லி, பூங்காவனம் பொன்னியுடன் திருத்தணி முருகக் கடவுளைத் தரிசிக்கப் பிராயணமானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மௌனப்_பிள்ளையார்/011-015&oldid=1681420" இலிருந்து மீள்விக்கப்பட்டது