கலியுகக் கர்ணன்

தேவர்களும் அசுரர்களும், முனிவர்களும் பெண்ணாசைக்கு ஆளாகி யிருக்கும்போது, கேவலம் நமது கோபால் மட்டும் அந்த ஆசையிலிருந்து தப்ப முடியுமா? ஒரு நாள் அவர் ஸினிமாவுக்குப் போய் விட்டு வந்தார். படம் முடிந்து வெளியே வந்தபோது ஒரு பிச்சைக்காரன் அவரைப் பார்த்துக் கையை நீட்டினான். பாலகோபால் அவனை லட்சியம் செய்ய வில்லை. வெகு அலட்சியமாகத் தன்னுடைய கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்தார்.

அதே சமயத்தில் பெண்கள் வகுப்பிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சித்ரலேகை இதைப் பார்த்து விட்டு, பாலகோபாலனின் கருமித்தனத்தை நினைத்து யோசித்துக் கொண்டே சென்றாள்.

அவளைப் பார்த்துவிட்ட பாலகோபால் தம்முடைய செய்கையைக் குறித்துப் பெரிதும் வருந்தினார். "அடாடா! இந்தச் சமயத்தில் இவள் வருவாள் என்று தெரிந்திருந்தால் பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா யல்லவா போட்டிருப்பேன்?' என்று தம்மைத் தாமே நொந்து கொண்டார்.

ஸினிமாக் கொட்டையிலிருந்து வந்த அந்தப் பெண்ணினுடைய அழகில் அவர்தம்முடைய மனத்தை ஏற்கெனவே பறிகொடுத்து விட்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.

பாலகோபால் வசித்து வந்த தெருவின் கோடியில் வெகு நாளாக ஒரு வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. அதைச் சாதாரண வீடு என்று சொல்ல முடியாது. ஏறக்குறைய ஓர் அரண்மனையைப் போலவே இருந்தது. பாலகோபால் அந்த வீட்டை விலைக்கு வாங்குவதற்காக அதன் சொந்தக்காரர் யார் என்பதைப்பற்றிப் புலன் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்படி விசாரித்ததில் அது ஒரு ஸப் கலெக்டர் வீடு என்றும், அவர் வெளியூரில் உத்தியோகம் செய்து கொண்டி ருப்பதால் வீட்டைப் பூட்டிக் கொண்டு போய் யிருக்கிறார் என்றும், அவருடைய ஒரே பெண் சித்ரலேகை என்பவளைச் சீமைக்குப் படிக்க அனுப்பி யிருக்கிறார் என்றும் விவரம் தெரிந்து கொண்டார்.

ஒரு நாள் அந்தக் கலெக்டர் வீட்டு வாசலில் குதிரை வண்டி ஒன்று வந்து நின்றது. வண்டியிலிருந்து ஸப்கலெக்டர் பெண் சித்ரலேகையும் வயதான ஒரு மாதும் வந்து இறங்கினார்கள். அவள் சீமையில் படித்துக் கொண்டிருக்கும்போதே அவளுடைய தகப்பனாரும் தாயாரும் இறந்து போனார்கள். இந்தச் செய்தியைக் கேட்ட பிறகு சித்ரலேகைக்குச் சீமையில் இருப்புக் கொள்ளவில்லை. அடுத்த கப்பலிலேயே ஏறி ஊருக்குப் பிரயாணமானாள். நேராகத் தன் அத்தை வீட்டைத் தேடிச் சென்று கையோடு அவளையும் அழைத்துக்கொண்டு. தனக்கு அப்பா வைத்து விட்டுப்போன வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அன்றைக்குத்தான் பாலகோபாலனும் அவளை முதல் தடவையாகப் பார்த்தது. அப்போதே அவளுடைய அழகில் தம்முடைய மனத்தைப்பறிகொடுத்துவிட்ட பாலகோபால், சாப்பிடுகிற வேளையில் தூங்கிக்கொண்டும் தூங்கு சிற வேளையில் சாப்பிட்டுக் கொண்டு மிருந்தார். 'அவளை மறுபடியும் எப்படிப் பார்ப்பது? எங்கே சந்திப்பது? எவ்வாறு பேசுவது?' என்றெல்லாம் அது முதல் மூன்று மாத காலமாக ஏக்கம் பிடித்துக் கிடந்தார். அதற்குப் பிறகு இப்போது மறுபடியும் அவள் தன்னைப் பார்க்கும்போதுதானா இந்தச் சோம்பேறிப் பிச்சைக்காரன் கையை நீட்டித் தன்னுடைய கருமித்தனத்தை வெளிப்படுத்த வேண்டும்?

சித்ரலேகையை, நாளைக்கே சந்தித்து அவளுடன் ஒரு மணி நேரமாவது பேசித் தன்னுடைய எண்ணத்தைத் தெரிவித்துவிடுவது என்று தீர்மானித்தார் பாலகோபால்.

பாலகோபாலனுக்குப் பெண்களின் குணாதிசயங்கள் ஒன்றும் தெரியாது. அவருக்குப் பணம் சம்பாதிக்கத்தான் தெரியும். அவர் தம்முடைய பதினைந்தாவது வயதிலேயே பொருளீட்டத் தொடங்கி விட்டார். இப்போது வயது முப்பதுகூட ஆகவில்லை. இதற்குள் ஒரு பெரிய 'எஸ்டேட்'


டுக்கே அதிபதி ஆகிவிட்டார். நீலகிரிமலைப் பிரதேசத்தில் அவருக்கு பிரம்மாண்டமான தேயிலை 'எஸ்டேட்' ஒன்று இருந்தது. சர்க்கார் இப்போது அந்த இடத்தை அழித்து அணைக்கட்டு கட்டி விட்டார்கள். அதற்காகப் பாலகோபாலுக்குப் பல லட்சம் ரூபாய்களை விலையாகக் கொடுத்து விட்டனர். பாலகோபாலனும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது போதுமென்று மொத்தமாகத் தமக்குக் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். அவரைப்போல் அந்த வட்டாரத்தில் தேயிலைத் தோட்டம் வைத்துப் பணம் சம்பாதித்த பேர்வழிகள் வேறு யாருமே இல்லையாகையால் ஊரார் எல்லோரும் அவரைத் 'தேயிலை ராஜா' என்றே அழைக்கத் தொடங்கினார்கள். ஆனால் தேயிலை ராஜாவைத் தெரிந்த ஆசாமிகளுக்கெல்லாம் அவர் ஒரு கருமி என்றும் தெரிந்திருந்தது. பிச்சைக்காரர்களோ, நன்கொடை வசூலிப்பவர்களோ அவரிடம் போய் ஒரு மணி தானியமோ அல்லது ஒரு செல்லாக்காசோ வாங்கிவிடமுடியாது. இதனால் அவரைச் சில பேர் 'கருமி ராஜா' என்றும் சொல்லிக் கொண்டார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட கருமி ராஜா சித்ரலேகைக்காக எதையும் செய்யத் தயாராயிருந்தார்.

பாலகோபால் மறுதினமே சித்ரலேகையைப் பார்க்க அவள் வீட்டைத் தேடிச் சென்றார். அதிருஷ்டவசமாய்ச் சித்ரலேகை அப்போது தனியாக ஸோபாவில் சாய்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். அதுதான் சமயமென்று பாலகோபால் தன்னைப்பற்றியும் தன்னுடைய அந்தரங்கமான அபிப்பிராயத்தைப்பற்றியும் அவளிடம் ஒளிவு மறைவு இன்றித் தெரிவித்துக் கொண்டார்.

சித்ரலேகை ஏற்கெனவே பாலகோபாலைப்பற்றியும் அவருடைய கருமித்தனத்தைப்பற்றியும் அறிந்து வைத்திருந்தாள். எனவே அவள், 'நான் சீமைக்குப் போய் வந்தவள். என்னால் சிக்கனமா யிருக்கமுடியாது. டாம்பிகச் செலவுகள் எனக்கு அதிகம். உங்களுடைய பணம் அநியாயமாய்க் கரைந்துபோகும். நீங்களோ பாவம், ரொம்பவும் செட்டாயிருக்கிறீர்கள்...' என்று ஆரம்பித்தாள்.

"சித்ரலேகா! உனக்காக நான் என்னுடைய உடல், பொருள், ஆவி மூன்றையுமே கொடுக்கத் தயாராயிருக்கும் போது, பணந்தானா ஒரு பிரமாதம்? என்னைப்பற்றிப் பல பேர் பலவிதமாய்ச் சொல்லியிருப்பார்கள். அதையெல்லாம் நீ நிஜமென்று நம்பிவிடாதே. நீ எப்படி வேண்டுமானாலும் செலவழித்துக்கொள். அதற்கெல்லாம் நான் தயார்" என்று சொல்லிவிட்டுப் பாலகோபால் அவளிடம் விடை பெற்றுக் கொண்டார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு. பாலகோபால் பணத்தை ஒரு பொருட்டாக நினைக்காமல் தான தர்மங்கள் செய்யத் தொடங்கினார். யார் வந்து எதைக் கேட்டாலும் சரிதான்; இல்லையென்று சொல்லாத வள்ளலாக ஆனார். "கோயில் கட்ட வேண்டுமா? இந்தாருங்கள் பணம்! ஏழைகளுக்கு அன்னதானமா? இதோ இருக்கிறது அரிசி மூட்டை, அநாதை ஆசிரமம் கட்ட வேண்டுமா? ரொம்ப நல்ல காரியம்! பிடியுங்கள் 'நோட்' டை!” என்று கேட்டதற்கெல்லாம் பணத்தை எடுத்து வீச ஆரம்பித்தார். திடீரென்று இப்படி பாலகோபாலனுக்குத் தர்ம சிந்தனை ஏற்பட்டுவிட்டதைக் குறித்து ஊரில் பேச்சு வளர ஆரம்பித்தது. எந்தக் காரியத்துக்கும் குற்றம். கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் சில பேர்வழிகள், பாலகோபாலனுடைய தர்மத்துக்கும் ஏதோ மறைமுகமான காரணம் இருக்க வேண்டுமென்று பேசிக் கொண்டார்கள். பாலகோபால் அதையெல்லாம் சிறிதும் பொருட் படுத்தவில்லை. மேலும் மேலும் அவருடைய தர்மத்தைப்பற்றிப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகிக்கொண்டே இருந்தன.

ஒரு நாள் பாலகோபால் சித்ரலேகைக்காக வைர அட்டிகை ஒன்று வாங்கி வந்தார். கண்ணைப் பறிக்கும் அந்த வைர நகைக்கு எத்தனை விலை கொடுத்தாரோ தெரியாது. பாலகோபால் அந்த வைர அட்டிகையை எடுத்துக்கொண்டு சித்ரவேகையிடம் சென்றார்.

சித்ரலேகை புன்னகை பூத்த முகத்துடன் பாலகோபாலை வரவேற்று உபசரித்தாள். அப்போது யாரோ தனக்கு அறிமுகமில்லாத ஒருவன் அங்கே உட்கார்ந்திருந்ததைப் பார்த்த பாலகோபாலனுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. இதற்குள் சித்ரலேகை, "இவர் என்னுடைய பள்ளிக்கூடத் தோழர்; சீமையில் நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படித்துக்கொண்டிருந்தோம். இவர் பெயர் கங்காதரன் என்று அறிமுகப்படுத்தினாள். பாலகோபாலனும் கங்காதரனும் விளக்கெண்ணெய் சாப்பிட்ட மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

சித்ரலேகையிடம் பேசமுடியாமல் தவித்தார் பாலகோபால். அதைக் கண்ட அந்த வாலிபன் தானாகவே அந்த இடத்தை விட்டு நழுவி வெளியே சென்றுவிட்டான். பாலகோபால் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அப்புறம்தான் அவருக்கு வாயிலிருந்து பேச்சு வந்தது.

"சித்ரலேகா! நான் ஒரு வாரமாய் ஊரில் இல்லை. இதோ பார்; இந்த அட்டிகையை வாங்குவதற்காக எங்கெல்லாம் அலைந்து திரிந்தேன் தெரியுமா?" என்று சொல்லிச் கொண்டே அட்டிகை வைத்திருந்த 'வெல்வெட்' பெட்டியை அவளிடம் நீட்டினார்.

பெட்டியைத் திறந்து பார்த்த சித்ரலேகையின் கண்கள் வைரம்போல் பிரகாசமடைந்தன. ரொம்ப நன்றாயிருக்கிறது. எனக்காகவா வாங்கி வந்தீர்கள்?” என்று கேட்டாள்.

"ஆமாம்; உனக்காகவேதான். உன்னுடைய அழகுக்கு இதெல்லாம் ஒரு பிரமாதமா?" என்றார் பாலகோபால்.

"நீங்கள் என்னை அளவுக்கு மீறிப் புகழ்கிறீர்கள். நான் அவ்வளவுக்கெல்லாம் அருகதையில்லை. இந்த அட்டிகையை நான் எப்படி ஏற்றுக்கொள்வது? கலியாண விஷயமாக நான் எந்தவிதமான வாக்குறுதியும் கொடுக்கவில்லையே?"

"சித்ரலேகா! நீ என்னைக் கலியாணம் செய்துகொள்ள மறுத்தாலும் பரவாயில்லை.இதை உனக்குப் பரிசாகக் கொடுத்தே தீருவேன்" என்றார் பாலகோபால். "அப்படியானால் சரி" என்று அட்டிகையை வாங்கிக் கொண்டாள் சித்ரலேகை.

பாலகோபால் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார்.

திருமண விஷயமாக சித்ரலேகை எவ்வித உறுதியும் கூற முடியாது என்று சொல்லியும்கூடப் பாலகோபாலின் நம்பிக்கை சிதைந்து போகவில்லை. எப்படியும் அவளிடம், தான் தயாள குணம் படைத்தவன் என்று பெயரெடுத்துவிட வேண்டும் என்ற திடமான லட்சியத்துடன் இருந்தார். ஆனால் கங்காதரனைப்பற்றி மட்டும் அவருக்கு அடிக்கடி நினைவு வந்தது. அவனிடம் பணம் காசு ஒன்றும் கிடையாதென்று மட்டும் அவனைப் பார்த்தபோதே தெரிந்துவிட்டது. பணமில்லாதவனைச் சித்ரலேகை மதிக்கமாட்டாள் என்பது மட்டும் நிச்சயம். அவளேதான் சொல்லியிருக்கிறாளே, தான் டாம்பீகச் செலவு செய்பவள் என்று. அப்படிப்பட்டவள் கங்காதரனை மணந்து கொண்டு எப்படிக் காலம்' தள்ள முடியும் என்று பாலகோபால் யோசித்தார்.

சித்ரலேகையும் அவ்விதமே யோசனை செய்தாள்.

"பாலகோபால் எனக்காகப் பதினாயிரம் ரூபாய் கொடுத்தல்லவா வைர அட்டிகை வாங்கி வந்திருக்கிறார்? அவர் எவ்வளவு பெரிய பணக்காரராயிருக்க வேண்டும்? அவர் வாங்கிக்கொடுத்த அட்டிகையை விற்றதினால் அல்லவா இத்தனை நாள் கஷ்டமின்றி ஜீவிக்க முடிந்தது? எனக்கென்று அப்பா இந்த வீட்டைத் தவிர வேறு ஒரு சொத்தும் வைத்துவிட்டுப் போகவில்லையே? கங்காதரனை மணந்து கொண்டு கஷ்டப்பட என்னால் முடியாது. பாலகோபாலனை மணந்துகொள்ள வேண்டியதுதான்" என்று முடிவு செய்தாள் சித்ரலேகை.

உடனே பாலகோபாலனைப் போய்ப் பார்ப்பதற்குக் கிளம்பினாள்.

வேதனையுடன் உட்கார்ந்து பலவாறு யோசித்துக் கொண்டிருந்த பாலகோபாலனுக்குச் சித்திரலேகையைக் கண்டதும் ஆச்சரியமாகப் போய்விட்டது.

சித்ரலேகையின் முகம் வாடியிருந்ததைக் கண்ட பாலகோபால் அதற்குக் காரணம் என்னவென்று விசாரித்தார். "நீங்கள் எனக்குக் கொடுத்த வைர அட்டிகைதான்" என்றாள் சித்ரலேகை.

"என்ன, வைர அட்டிகையா?" என்று கேட்டு விட்டுப் பாலகோபால் கடகடவென்று வாய் விட்டுச் சிரித்தார். அவர் அப்படிச் சிரித்ததின் காரணம் தெரியாமல் சித்ரலேகை விழித்தபோது, "அது தொலைந்துபோய் விட்டதா? போனால் போகட்டும்; இந்த அற்ப விஷயத்துக்காக நீ வருந்தவே வேண்டாம்" என்றார் பாலகோபால்.

"ரூபாய் பத்தாயிரம் கொடுத்தல்லவா அதை வாங்கினீர்கள்!"

"சித்ரலேகா! உன் அழகுக்கும் குணத்துக்கும் அதைப் போல் ஆயிரம் அட்டிகை வேண்டுமானாலும் வாங்கித்தருவேன். நீ மட்டும்.."

சித்ரலேகை ஒரு கணம் யோசித்தாள். பிறகு, "என் மனம் மாறிவிட்டது. தங்களுடைய தாராள மனத்தையும் தர்ம சிந்தனையையும் கண்டு தங்களையே மணப்பதென்று முடிவு செய்து விட்டேன்" என்றாள்.

பாலகோபால் பரம ஆச்சரியத்துடன் அவளை உற்றுப் பார்த்தார். சித்ரலேகை சொன்ன வார்த்தையை அவரால் நம்ப முடியவே இல்லை.

"நிஜமாகவா, சித்ரலேகை!"

"ஆமாம்; நிஜமாகத்தான் சொல்கிறேன். அந்தத் தரித்திரம் பிடித்த கங்காதரனை நான் மணக்கப் போவதில்லை. என்னுடைய செலவுக்கும் அவருடைய கருமித்தனத்துக்கும் கட்டி வராது" என்றாள் சித்ரவேகை.

பாலகோபாலனுக்குச் சித்ரலேகை சொன்ன வார்த்தைகள் சரியாய்க் காதில் விழவில்லை. அதற்குள் அவருடைய மனம் குழம்பிப் போய்விட்டது. "ஐயோ! சித்ரலேகையின் மனத்தை மாற்றுவதற்காக கையிலிருந்த பணத்தையெல்லாம் தான தருமங்கள் செய்வதிலும் டாம்பீகச் செலவிலும் தீர்த்து விட்டேனே! இதை இப்போது சித்ரலேகையிடம் சொன்னால் என்ன சொல்வாளோ? என்ன நினைப்பாளோ?" என்று பாலகோபால் தலித்துப் போனார்.

ஆனால் சித்ரலேகைக்கும் தனக்கும் திருமணம் ஆகிற வரையில் அவர் இந்த ரகசியத்தை அவளிடம் வெளியிடவே யில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=மௌனப்_பிள்ளையார்/012-015&oldid=1681422" இலிருந்து மீள்விக்கப்பட்டது