மௌனப் பிள்ளையார்/013-015
கடிதமும் கவலையும்
போஸ்ட்மாஸ்டர் சம்பந்தம் பிள்ளையின் பக்கத்து வீட்டில் குடியிருந்தார் ரத்தின முதலியார். "என்னோடு சண்டை போடுவதற்காகவே இந்த முதலியார் இங்கே குடியிருக்கிறான். போன ஜன்மத்தில் இவன் எனக்குச் சத்துருவாயிருக்க வேண்டும். இப்பவும் சத்துரு. அடுத்த ஜன்மத்திலும் அப்படித்தான் போலும்” என்று சொல்லிக்கொண் டிருந்தார் முதலியார்வாள். அண்டை வீட்டுச் சண்டை மகோற்சவம் இப்படி நடந்து வந்தது.
பெரிய ராம - ராவண யுத்தம், பாரத யுத்தம், டிராய் யுத்தம் இவைகளுக்கெல்லாம் ஒரு ஜானகி, ஒரு திரௌபதி, ஒரு ஹெலன் இவர்கள் காரணமானது போலவே முதலியார் - பிள்ளைவாள் யுத்தத்துக்கும் அவரவர்கள் மனைவிமார்களே காரணஸ்தரானார்கள்.
✽
ஒரு சமயம் பிள்ளையின் மனைவி தண்ணியெடுக்கத் தோட்டத்துப் பக்கம் போனாள். அங்கே கிணற்றண்டை விழுந்து கிடந்த ஒரு எச்சில் இலையைக் கண்டு பிரமித்துப் போனாள். அவள் கையிலிருந்த குடம் தானாக நழுவிக் கீழே விழுந்தது. அவ்வளவுதான்! புடைவையை வரிந்து கட்டிக் கொண்டாள்.
பக்கத்து வீட்டு முதலியார் மனைவியைக் கையைத்தட்டிக் கூப்பிட்டு, "உங்கள் வீட்டு எச்சில் இலையைப் போடுவதற்கு எங்க தோட்டம்தானா இடம்?" என்று கோபாவேசத்தோடு கேட்டாள்.
முதலியார் மனைவி எச்சில் இலையைத் தன் வீட்டுத் தோட்டத்தில் தான் போட்டதாகவும், அந்த இலையைப் பிள்ளைவாள் வீட்டு நாய் வந்து எடுத்துக்கொண்டு போய் அங்கே போட்டுவிட்டதாகவும் சொன்னாள். "எங்கள் வீட்டு நாய் பிறத்தியார் வீட்டு எச்சிலைச் சாப்பிடாது" என்று ஒரேயடியாய்ப் பதில் கூறினாள் பிள்ளைவாள் மனைவி.
அதற்குமேல், 'நாய், பேய்' என்று பேச்சு வளர்ந்து சண்டை பலத்தது. சண்டையை ஊரார் வந்து விலக்கும்படி யாயிற்று.
இதற்குப் பிறகு பிள்ளைவாளுக்கும் முதலியார்வாளுக்கும் இடையே ஒரு பெரிய அக்னி ஜ்வாலை வீசிக்கொண்டிருந்தது ஒருவரையொருவர் அவமானப்படுத்துவதற்கான சமயத்தை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். ஒருவர்மீது ஒருவர் வதந்திகளையும் வம்புகளையும் சிருஷ்டித்துக் கொண்டேயிருந்தனர்.
✽
சண்டை நடந்த கொஞ்ச நாட்களுக்கெல்லாம் முதலியார்வாள் அவருடைய பெண்டு பிள்ளைகளையெல்லாம் ஊரிலேயே விட்டுவிட்டுச் சிங்கப்பூருக்குப் போகும்படி ஆயிற்று.
முதலியார் வீட்டுக்குப் பின்புறத்தில் விசாலமானதோர் தோட்டம் இருந்தது.
அவர் ஊரிலிருந்தவரை அந்தத் தோட்டத்தில் கத்தரி, வெண்டை முதலிய செடிகள் போட்டுக் காய்களைச் சாகுபடி செய்து வந்தார். ஆனால், அந்தத் தோட்ட நிலம் சம்பந்த மாக ஏதோ ஒரு வியாஜ்யமும் இருந்து வந்தது.
முதலியார் ஊரை விட்டுப் போனதும், தோட்டத்தைக் கவனிக்கத் தக்க ஆளில்லாமற் போயிற்று. யார் குழி வெட்டுவது? யார் பாத்தி கட்டுவது? யார் செடி வைப்பது? யார் தண்ணீர் இறைப்பது?
முதலியாரின் மனைவி அவர் ஊருக்குக் கிளம்பும்போது. "தோட்டம் பாழாய்விடுமே, இதற்கு என்ன செய்வது?" என்று கேட்டாள். அதற்கு முதலியார் அவள் காதோடு காதாய் அரை மணி நேரம் ஏதோ ரகசியமாகச் சொல்லிவிட்டுப் போனார்.
முதலியார் ஊரைவிட்டுப் போனது போஸ்ட்மாஸ்டர் சம்பந்தம் பிள்ளைக்குக் கையில் இரண்டு தேங்காய் உடைத்துக் கொடுத்த மாதிரி இருந்தது. முதலியார் வீட்டுக் குடும்ப வம்புகளையெல்லாம் அறிந்துகொள்ளச் சந்தர்ப்பம் வாய்த்த தல்லவா?" சிங்கப்பூரிலிருந்து முதலியார் தன் மனைவிக்கு எழுதும் கடிதங்களை எல்லாம் பிரித்துப் பார்த்தால் முதலியார் குடும்ப ரகசியங்களெல்லாம் இனி வெளிப்பட்டுப் போகுமல்லவா?" என்று நினைத்து ஆனந்தமடைந்தார்.
சம்பந்தம்பிள்ளை எண்ணியபடி ஒருநாள் சிங்கப்பூரிலிருந்து முதலியார் வீட்டுக்கு ஒரு கவர் வந்தது. போஸ்ட் மாஸ்டர் உடனே அதை எடுத்துக் கொண்டுபோய் ஒரு தனி அறையில் வைத்துக் கொண்டார். அவருடைய மார்பு பட படவென்று அடித்துக் கொண்டது.
பிரித்துப் பார்த்ததும் அது ரத்தின முதலியாருடைய கையெழுத்தா யிருப்பதைக்கண்டு சம்பந்தம் பிள்ளை புளகாங்கிதம் அடைந்தார்.
சிங்கப்பூர்
17-2-38
"நான் சிங்கப்பூருக்குச் சௌக்யமாய் வந்து சேர்ந்தேன். ஒரு விஷயத்தை உன்னிடம் வெகு நாளாகச் சொல்ல வேண்டுமென்று இருந்தேன்.
நமது தோட்டத்தில் ரொம்ப ஆழத்தில் ஒரு பானையில் 2,000 ரூபாய் வெள்ளி நாணயங்களைப் போட்டுப் பத்திரமாய் மூடி வைத்திருக்கிறேன். அதைச்சீக்கிரத்தில் யாருக்கும் தெரியாமல் தோண்டி எடுத்துக் கொள். அதைச் செய்வதற்கு முன்னால் போளூருக்குப் போய் முனியாண்டிக்குப் பூசை போட்டு விட்டுத் திரும்பி வா. இது பக்கத்து வீட்டாருக்குத் தெரிந்தால் சொத்து போய்விடும். ஜாக்கிரதை! பணத்தை எடுத்துப் பத்திரப்படுத்தி விடு.
இப்படிக்கு,
ரத்ன முதலியார்.
77 கடிதமும் கவலையும்
இதைப் படித்ததும் பிள்ளை ஓடோடிச் சென்று இந்த விஷயத்தைத் தன் மனைவிக்குத் தெரிவித்தார். ஒருவரை ஒருவர் பார்த்துச் சந்தோஷப்பட்டனர். 'ரூபாய் இரண்டாயிரம்' அதுவும் அந்த முதலியாருடையது. ஆஹா! சரியானபடி அகப்பட்டுக் கொண்டான். அதை நாம் போய்த் தோண்டி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்” என்று தீர்மானித்தனர்.
அன்று இரவே அடுத்த வீட்டு முதலியார் சம்சாரம் போளூருக்கு வண்டி கட்டிக்கொண்டு போனதையும் பார்த்தனர்.
மறுநாள் இரவு நடுநிசிக்குமேல் முதலியார் வீட்டுத் தோட்டத்தில் பிள்ளைவாளும் வேலையாட்களும் மண்வெட்டி சகிதம் வேலை செய்து கொண்டிருந்தனர்.
சுமார் ஐம்பது இடங்களில் குழிபறித்துப் பார்த்தார்கள். முதலியார் கடிதத்தில் கண்டிருந்தபடி புதையல் அகப்படவில்லை. தோட்டம் முழுதும் நெடுகப் பள்ளம் வெட்டியதே கண்ட பலன்.
பிள்ளையவர்கள் பெரிய ஏமாற்றத்துடன் பொழுது விடிய ஐந்து மணிக்குச் சோர்ந்து போய்ப் படுக்கலானார்.
இரண்டு நாள் கழித்து முதலியாரின் மனைவி ஊரினின்றும் வந்து சேர்ந்தாள். தோட்டப் பக்கம் வந்து பார்க்க, தோட்டத்தில் ஆழமாய்ப் பல குழிகள் தோண்டப்பட்டிருந்தன. அப்பொழுதே அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது.
தன் புருஷன் ரகசியமாகத் தன்னிடம் சொல்லிவிட்டுப் போனபடி அவள் அந்தக் குழிகளில் வாழைக் கன்றுகளைப் பதியன் போட்டு வளர்த்தாள்.
வாழைக்கன்றுகள் குலு குலுவென்று தழைத்தோங்கின.