ரமண மகரிஷி/001-017
1. திருவண்ணாமலை!
பளிங்கு நதி போல மனம் தூய்மையாக இருப்பதற்குத் தெய் நிலை என்று பெயர். அந்த இறையுணர்வை உலகுக்கு உணர்த்தவே கயிலாய மலையில் சிவபெருமான் கைலாச நாதர் என்ற திருக்கோலத்தோடு காட்சி தருகிறார். அந்த மலையில் உள்ள பளிங்கு ஏரிக்கும் மானச சரோவர் என்றே பெயரிடப்பட்டுள்ளது.
சிவபெருமானை வழிபடும் சிவநேசச் செல்வர்கள், ஒரு காலத்தில் கண்ணாடி போன்ற மிகத் தூய்மையான மனத்துடன் அல்லும் பகலுமாக வழிபட்டு வாழ்ந்து வந்ததால், கடவுள் அவர்கள் நெஞ்சில் கோயிலாகி அருள் பாலித்தார் என்று அறுபத்துமூன்று நாயன்மார்களது இறைவழிபாட்டு வாழ்வைச் சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் மாக்கதை என்ற பெயரில் பெரிய புராணத்தில் எழுதியுள்ளார். அதைப் படிப்பவர்களுக்கு ஊன் உருகும்; உள்ளம் உருகும்.
எனவே, அத்தகைய அருளாளர்கள் மனத்துள், இறைவன் இருந்தமையால், அவர்கள் ஊர்தோறும் நடமாடும் கோயிலாக நகர்ந்து இறையருளை மக்களுக்குப் போதித்தார்கள். அத்தகைய சிவனடியார்கள் வாழ்ந்த பூமியாக, சித்தத்தை அடக்கிய சித்தர்கள் முக்திபெற்ற மண்ணாக, ஞானியர் நடமாடிய தலமாக, யோகியர் சமாதியான இடமாகத் திருவண்ணாமலை இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலை என்ற புண்ணிய பூமியில் அருணாச்சலேஸ்வரர் பெருமான் திருக்கோவிலுள்ளது.
இந்தப் புனிதத் தலம் தமிழ் நாட்டின் முக்தி தரும் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுவதற்குக் காரணம் இந்த அண்ணாமலை தவமலை என்றும், யோக மலை என்றும், சிவமலை என்றும், அக்னிமலை என்றும், ஜோதிமலை என்றும் பண்டையக் காலம் முதல் இன்று வரை ஆன்மீக ஞானிகளால் அழைக்கப்பட்டு வருவதால்தான்.
இந்த நகர், முன்னர் வடார்க்காடு மாவட்டத்தின் ஒரு சிறப்புமிக்க நகரமாக, முதல் விடுதலைப் போர் துவங்கப்பட்ட வேலூர் பெருநகரம் உள்ள மாவட்டத்திலே, ஒரு புராணப் பெருமை பெற்ற நகரமாக இருந்தது. தற்போது ஆன்மீகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் என்ற பெயரில் ஒரு தனி மாவட்டமாகவே உருவாகியுள்ளது.
சைவ ஞானியர்கள், சிவமே மலையாக உருவெடுத்தும், மலையே சிவமாக உருப்பெற்றும் உள்ள நகரம் திருவண்ணாமலை என்பர். இந்த புனித நகரமான திருவண்ணாமலை நகருக்கு மேலும் பெருமை சேர்த்தவர்களுள் ஒருவர்தான். திருப்புகழ் விருப்போடு படிப்பவர் சிந்தை வலுவாலே, ஒருத்தரை மதிப்பதில்லை முருகா நான் உந்தன் அருளாலே என்று திருப்புகழ் பாடி முருகனடியாராக டெருமையுடன் வாழ்ந்து முக்தி பெற்ற அருணகிரிநாதர் ஆவார்.
திருவண்ணாமலையை தவமலை என்று பெருமையோடு மக்களுக்கு நிரூபித்தவர்களுள் மகான் சேஷாத்திரி மௌன குரு யோகி ராம் சுரத்குமார் போன்றவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக நின்று, யோக மலையின் புகழை இந்தியா முழுவதுக்கும் மட்டுமன்று, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற உலக நாடுகளுக்கெல்லாம் தனது தவ பலத்தால் நிலை நாட்டிய மகான் ரமணரிஷி ஆவார்.
திருவருள் திருஞானம் அலை மோதும் இந்தத் திருவண்ணாமலை திருக்கோவில் மண்ணிலிருந்தும், மலைக் குகையிலிருந்தும் தான், அந்த மகான் ரமணரிஷி, ‘நான் யார்?’ ‘நான் யார்?’ என்று தன்னையே ஆன்ம விசாரணை செய்து வெற்றி பெற்றார்.
‘நான் யார்?’ என்று தன்னையே தான் கேட்டுக் கொள்வதற்கு ஆழமான மனோபலம் பெற்றார். முதன் முதலில் அவர் தவநிலையை மேற்கொண்ட போது, அதற்குரிய மனோபலம் இல்லை என்பதை உணர்ந்து. மூச்சுக் காற்றைக் கண்காணித்தார். போகப் போக அந்தச் சுவாசக் காற்றே அவர் மனத்தைக் கட்டுப் படுத்தியதைக் கண்டார்.
ஆனால், மனோவிசார மார்க்கத்தில் ‘நான்’ எனும் ஆணவ மனம் எங்கே இருந்து தோன்றுகிறது என்பதை அவர் கண்டு பிடிக்க முயற்சி மேற்கொண்டார். இந்த வழி, மூச்சைக் கண்காணித்தலைத் தன்னகத்தே கொண்டது என்பதையும் பகவான் ரமணர் உணர்ந்தார்.
எங்கே இருந்து எண்ணங்கள் புறப்படுகின்றன என்ற மூலத்தைக் கண்காணிக்கும் போது, நாம் மூச்சுக் காற்றின் மூலத்தையும், நோக்குகிறோம். ஏனென்றால், ‘நான்’ என்ற எண்ணம், மூச்சு என்ற இரண்டுமே ஒரே மூலத்திலிருந்துதான் புறப்படுகின்றன என்பதை அவர் கண்டார்.
அதை அவர் கண்டு பிடிக்க முயற்சித்தபோது, அதற்கென்ற ஒரு தனி இருப்பு ஏதும் கிடையாது என்பதையும், ஆனால், உண்மையான ‘நான்’, என்பதோடு அது இரண்டறக் கலந்து விடுகிறது என்றும் அவர் கண்டார்.
மகான் ரமண மகரிஷி ‘நான் யார்?’ என்பதைக் கண்டு பிடிக்க, ஆழமான மனோ பலம் மனிதனுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.
“அந்த மனோ பலமற்றவர்கள் மூச்சுக் காற்றையே கண்காணியுங்கள். போகப் போக அந்தக் காற்றே மனத்தைக் கட்டுப் படுத்தி விடும்” என்ற ஆன்ம தத்துவத்தைத் திருவண்ணாமலை குகையிலே இருந்து கொண்டுதான் உலக மக்களுக்குப் போதித்தார்.
அத்தகையதோர் ஆன்ம மனோ பல ஞானி, எவ்வாறெல்லாம் தவநிலையில், யோக நிலையில், சிந்தனை நிலையில், உடலை உருக்கிய பசியெனும் அக்னி நிலையில், அருள் ஞான ஜோதி நிலையில் பல துயரங்களைப் பட்டுப் பட்டு, படிப்படியாக வெற்றி கண்டு, நமக்கும், நமது ஆன்மீகத் துறைக்கும் அரும்புகழ் சேர்த்த அருளாளரானார் என்பதை, அடுத்து வரும் அத்தியாயங்களிலே படிப்போம்!