ரோஜா இதழ்கள்/பகுதி 14

14

ராஜா சென்றபின் மைத்ரேயி அன்றிரவெல்லாம் அவரிடம் தான் பேசியதை நினைத்து நினைத்துப் பின்னும் கிளர்ச்சியுறுகிறாள். “என்றோ திராவிடர்களை ஆரியர்கள் விரட்டியடித்தார்கள் என்பதற்காக இந்தத் தமிழ் நாட்டில் அந்த வகுப்பார் பிறந்திருப்பதன் உரிமையையே மறுக் கலாமா?” என்று நேருக்கு நேராக மக்களவையின் பிரதி நிதியான ஒருவரிடம் அவள் கேட்டிருக்கிறாள். தனராஜிடம் தன்னை இழக்காமல் அவள் சீராகப் படித்துத் தேர்ந்திருந்தால் அந்த வருஷம் அக்கா அவளை யாரேனும் ஒரு இடைநிலை வெள்ளைக் காலர் ஆசாமிக்குக் கட்டி வைத்திருப்பாள். இரண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பற்றாக்குறையோடு போராடும் ஒருத்தியாக, கன்னச் செழிப்பு வற்ற, முடிகுச்சியாக ஒடிந்து கூழையாக, கவரிங் நகையிலும் போலிப்பட்டிலும் தன் மதிப்பை உயர்த்திக் கொள்ளும் இலட்சோப லட்சம் இடைநிலை அந்தணர் குலமகளிரைப்போல் அவளும் குட்டைக்குள் அழுந்திப் போயிருப்பாள். இப்போது, தான் பிறந்து வளர்ந்த சமுதாயம் கேள்விக் குறியாக நிற்பது போலும், அந்தக் கூனலை நிமிர்த்த முயற்சி செய்வதற்கான வழியில் தான் நிற்பதுபோலும் அவள் கிளர்ச்சியுற்றிருக்கிறாள். ராஜா அவளைக் காங்கிரஸ் மேடைக்குத்தான் அழைக்கிறார். ஆனால் அவளோ பெரும் பான்மையான அவளுடைய வகுப்பார் அமைக்கும் மேடையில் நின்று பேசத்தான் கனவு காண்கிறாள். வெளிப்படையாக அந்தணகுலத்தோரை உயர் பதவிகளிலிருந்து இறக்கியதற்காகப் பாராட்டுப் பெறும்போது அதை மறுக்கத் துணிவில்லாமலே மக்கள் ஆதரவைப் பெற விழையும் கட்சி அமைக்கும் மேடையைவிட எங்களிடம் வகுப்புத் துவேஷம் கிடையாது’ என்று சொல்லிக் கொண்டு இணைந்து செல்வ தில் ஆர்வம் காட்டும் கட்சியுடன் இணைந்து அமைக்கும் மேடையை அவள் பயனுள்ளதாக நினைக்கிறாள்.

காலையில் எழுந்திருக்கும்போது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. அவள் காப்பி போட்டுக் கொண்டு வருமுன் ஞானம் நீராடித் துணி அலசிப் பிழிந்துவிடுவது வழக்கம். இன்று ஞானம் நாட்தாளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்.

“லிஸ்டர் உடம்பு சரியில்லையா உங்களுக்கு ?” ‘இல்லையே, நீதான் ராத்திரி அமைதியாகத் தூங்கியிருக்க மாட்டாய் என்று தோன்றுகிறது...” என்று நகைக்கிறாள் ஞானம்.

“நீங்கள் தேர்தலுக்கு நில்லுங்கள் அக்கா. உங்களுக்கு நான்பேசுகிறேன். ராஜா கூறினாற்போல் உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். முதல்தரமான அறிவாளிகள் முடங்கி விடுவதுதான் கோழைத்தனம்...”

“இந்த அரசியலுக்கு அறிவு வேண்டியதில்லை என்ற பாடத்தை நான் எப்போதோ படிச்சாச்சு, மைத்ரேயி, இன்றைய அரசியலுக்கு வேண்டிய தகுதி ஒன்றுகூட எனக்குக் கிடையாது.” “நீங்கள் இப்படிச் சொல்லி விட்டால் நம் சாதிக்கு விமோசனமே இல்லை. போட்டிபோட்டு நாம் போராடித் தான் நம் உரிமைகளைக் கேட்கவேண்டும்...”

“அசடு, நீ உலகம் அறியாமல் பேசறியேன்னு சிரிப்பு வருகிறது. ராஜா இங்கே வந்தது என்னை அரசியல் களத்துக்கு இழுப்பதற்கு அல்ல. அத்தகைய மேம்பட்டோரை மெள்ள விலக்கி, பணத்தின் செல்வாக்கால், வன்முறையால் தங்கள் கட்சிக்கு பலம் சேர்க்கக் கூடியவர்களை இணைத்துக் கொண்டதனாலேயே இன்றைய கட்சி அரசியல் இந்த நிலையில் இருக்கிறது. என்னை அரசியலுக்கு இழுப்பதனால் அவர்களுக்கு ஒரு லாபமும் இல்லை என்பதை அவரே அறி வார். அவர் இங்கே வந்தது உன்னைத் துண்டில் போட்டு இழுக்க..”

மைத்ரேயி முகம் அருணோதயமாகிறது. மெளனமாகக் காபிக் கிண்ணத்தை மேசைமீது வைத்துவிட்டு தினத்தாளைப் பிரித்துப் பார்க்கிறாள்.

“அரசியலில் என்னைப்போல் நீ தோல்வியடைய மாட்டாய்” என்று கிண்டுகிறாள் ஞானம்.

“அப்படி எப்படிச் சொல்ல முடியும் ? என்னைவிட நீங்கள் முதிர்ந்தவர்கள். நிதானமாகப் பேசுவீர்கள். நான் மேடையேறிப் பேசுவதைத்தான் விரும்புகிறேனே ஒழிய, அரசியல் பதவிக்குப் போட்டிபோட எனக்குத் தகுதி கிடையாது. நீங்கள் அவர்களுடைய காங்கிரசில் இணைய மாட்டீர்கள். எனக்கும் நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்தால் தான் குமுறும் கருத்துக்களை கொட்ட முடியும்.”

“ஓ..ஐஸீ மைத்ரேயி! நான் எந்தக் கட்சியில் சேர வேணும் என்பதையும் நீ தீர்மானித்து விட்டாயா?” என்று ஞானம் விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அவள் விளையாட்டாகச் சிரிக்கிறாளா, தீவிரமாகவா என்பதை மைத்ரேயியினால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“ஏன் சிரிக்கிறீர்கள், ஸிஸ்டர் ? இதே காங்கிரஸில் இன்றைக்குப் பழைய பெருமைகள் எதுவுமில்லை. பதவி மோகம், பண மூட்டை, சாதிச் சச்சரவு, நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற இறுமாப்பு இதெல்லாம் தானிருக்கின்றன. துவேஷத்தில் கிளர்ந்து வசைமொழி யாலோ, இசை மொழியாலோ வளர்ந்தாலும் இன்று பாமர மக்களிடையே அசைக்க முடியாத செல்வாக்குப் பெற்றிருக்கிறது எதிர்க்கட்சி. மிகவும் கண்ணியமாகவும் மரியாதையுடனும் பேசும் இளைஞர்களெல்லாரும் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் உயர் சாதிக்காரரின் மீது கொண்டிருந்த வெறுப்பை மறந்து இணைய வருவதை நான் ஒரு நல்ல எதிர்காலத்தின் துவக்கமாக எண்ணுகிறேன். இந்த நல்ல முயற்சியைச் செய்த பெரியவரை, தலைவரை நான் போற்றுகிறேன். அவருடைய பிரபுத்துவத்தை ஆதரிக்கும் கொள்கை எனக்குப் பிடிக்கவில்லைதான். எனினும் தென்னாட்டில் அரசியல் மட்டத்தில் சாதிப் பிளவை முக்கியமான சக்திப் பிளவை இணைத்து வைப்பது நல்ல முயற்சி என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.”

‘பக்குவம் வராத அரசியல் அறிவு இப்படித்தான் எண்ண முடியும். இந்த ஒட்டுதல் சந்தர்ப்ப லாபத்துக்காக. இதனால் பிராமண வகுப்பு நன்மையடையப் போவதாக நீ நினைத்தால் அதைப் போன்ற முட்டாள்தனம் வேறு கிடை யாது. என்னைக் கேட்டால் நீ போற்றும் பெரியவர் பிராமண வகுப்புக்குக் குழி தோண்டும் செயலைச் செய்கிறார் என்று சொல்வேன். வெறுப்பில் கிளர்ந்து வெறும் பகட்டு மொழியாலும் ஒழிக, அழிக கோஷங்களாலும் மக்கள் ஆதரவைத் தேடிக்கொண்டு வளர்ந்த கட்சி எந்த அளவுக்கு மக்களுக்கு நன்மை செய்யப் போகிறது என்பதைப் பற்றி எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் எனக்கு அந்த உயர் வகுப்பாரிடமும் அநுதாபம் கிடையாது. அந்தச் சமுதாயம் பெயரளவில் உயர்குலம் என்று சொல்லிக் கொண்டு அதற்குரிய செருக்குடன் மரியாதையை எதிர்பார்த்திருக்கிறதே ஒழிய, உண்மையில் அந்தச் சமுதாயத்துக்குத் தன்மானமும் சுய கெளரவமும் இல்லை. நீயே நினைத்துப்பார். எந்தப் பிராமணனேனும் தன் குல உயர்வை நிலைநாட்டிக் கொள்ளும் எந்தப் பிரச்னைக்கும் முடிவு கண்டிருக்கிறானா? ஒரு சராசரி பிராமணன் கோழை; துணிவில்லாதவன். அறிவு மட்டத்தில் அவன் உயர்ந்து என்ன பயன்? சாஸ்திரங்களையும் காவியங்களையும் கற்றறிந்து என்ன பயன்? நீ விரலைவிட்டுச் சொல். நாட்டில் புதிய மொழியும் புதிய அறிவும் வந்து கலந்த போதெல்லாம் பெரும்பான்மை பிராமண வகுப்பரே பற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எதற்காக? அதனால் அறிவைத் துலக்கிக் கொண்டு எந்தச் சமுதாயப் பிரச்னைக்கு அவன் விடை கண்டு குல மேன்மையை நிரூபித்திருக்கிறான்? மிகவும் தேர்ந்த படிப்புப் படித்து ஐ.ஸி. எஸ்.ஸ்-க்கு போனான்; வெள்ளைக்காரனைப் போல் வாழ்ந்தான்; ஒருத்தியைக் கல்யணாம் செய்து கொள்ளக் கிறிஸ்துவனாக மாறினான். பிராமணன் என்றால் அவன்பிரும்மத்தை உபாசிப்பவன். பிராமணத்துவம் என்பது மனிதன் ஆன்மீக நெறி நின்றடையக்கூடிய மிக உயர்ந்த நிலை. அவன் வாழ்வது மற்ற வருணத்தாரையும் அந்த அளவில் உயர் பண்புகளோடு மேம்பட்டு வாழச் செய்வதற்காகத்தான். அவனுக்கு வறுமை அணிகலன். ஆனால் இன்று நிலை என்ன? விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் ஒரு சிலர்கூட இந்நெறியைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை. அவன் அறிவு பயின்றதெல்லாம் பொருளாதார மேம்பாட்டுக்காக, புலன்களில் அழுந்தி இன்பம் துய்ப்பதற்காக. இந்தக் குறிக்கோளை வைத்துக் கொண்டு சாதி உயர்வைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான். படிப்பறிவும் அச்சுப் பொறியும் இல்லாத காலத்தில் மரத்தடிகளில், கோயில் முன் கூடும் மக்களுக்கு ஆன்மீக உணர்வை ஊட்ட, சாஸ்திரங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் நற்பண்புகள் பெருகக் கூடிய வகையில் கதைகளும் காவியங்களும் விளக்கமாகச் சொன்னார்கள். இன்று அது ஒரு பணப் புதையலாகக் கிடைக்கக்கூடிய தொழிலாக, என்டர்டெய்ன்மென்ட் வால்யூ உடையதாக மாறிவிட்டது. உடலை விற்று ஆடிப்பிழைக்கும் சினிமா நடிகைக்கும், இவர்களுக்கும் இன்று ஒரு வித்தி இல்லை. இம்மாதிரியான போலிப் பிராமணருக்கு போலித் தொழில் புதிய பாடசாலை என்று சொல்லப்படும் கல்விக்கூடங்களில் அறிவு மங்கிய குழந்தைகளோ, வயிற்றுக்கு வழியில்லாத கீழ்மட்டக் குழந்தைகளோ, பொருள் புரியாமல், மொழி புரியாமல் தப்பும் தவறுமாக வேதங்களை உச்சரிக்க, அத்யயனம் செய்ய வருகிறார்கள். இந்தத் தொழில் இன்று சமுதாயத்தில் எந்த அளவுக்கு இழிந்து போயிருக்கிறதென்பதை நினைத்தால் கண்ணீர் வருகிறது. இந்தச் சாதி பிழைத்துத் தளிர்த்துப் புது வாழ்வு காணவேண்டும்என்று நான் கொஞ்சமும் எண்ணவில்லை. இன்றைய யுகத்தில் ஒரு சிலராலும்கூட நேர்மையாகப் பிழைக்க இயலாத ஓர் வாழ்க்கை முறையை எதற்காக வளர்க்கவேண்டும்? இந்தச் சாதி முகமில்லாமல் அழிந்து வேறு வண்ணங்களில் கலக்க வேண்டும்...”

“அது அவ்வளவு எளிதாக எனக்குத் தோன்றவில்லை. மற்ற நாடுகளில் ஒருகால் இம்மாதிரியான சமுதாய மாற்றங் கள் எளிதாக இருக்கலாம். வயிற்றுக்கில்லாது வறுமையிலும் உயிரோடிருந்த காலமெல்லாம் வெறுத்த முதியோருக்குச் சிரார்த்தம் செய்யவேண்டும் என்பதை மறுக்காத சமுதாயம் இது. கல்வியறிவும் மறுமலர்ச்சியும் பெற்றும், ஜானகி போன்ற பெண்கள் கண்மூடித்தனமாகச் சம்பிரதாயங்களை மட்டும் காப்பாற்றுகிறார்கள். பொருள் நிலை குறைந்த மட்டத்தில் தான் மூடநம்பிக்கை என்பதில்லை. உயர்மட்டத்தில் சாஸ்திரிகளை மாசச் சம்பளத்துக்கு அமர்த்திக் கொண்டோ, அள்ளிக் கொடுத்தோ, ஒட்டிய பாவத்தைக் கரைத்து விடலாம் என்று பொருளற்று உளுத்துப் போன சம்பிரதாயங்களைப் பற்றிக் கொண்டிருக்கின்றனர். உள்ளுற வேரோடியிருக்கும் நம்பிக்கையைக் களைந்தெறிய முடியாததாலேயே அந்த வாழ்க்கை முறையிலிருந்து நழுவினாலும் சம்பிரதாயங்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? வெளிப்படையாகத் துாற்றினாலும் உள்ளுற அஞ்சி, முதல் நாளே ஐயரை வரவழைத்து, மஞ்சட் பிள்ளையாரைப் பிடித்து வைத்துப் பூசை செய்து தாலிகட்டி மெட்டி போட்டு முறையான திருமணத்தை முடித்து பின்னர் கட்சிப் பிரமுகர்களின் முன்னிலையில் வாழ்த்துத் திருமணத்தை பிரபலமாக நடத்துகின்றனர் அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள். போன வருஷம் என்னோடு படித்த கலையரசியின் திருமணத்தின்போது நானே இந்த வேடிக்கையைப் பார்த்தேன். பாசிக் குளத்தில் இறங்கித்தான் சுத்தம் செய்ய வேண்டுமே ஒழிய, பாசி பிடித்த நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு போகும் நம்பிக்கையைப் பழிப்பதால் பயனில்லை, எலிஸ்டர்!”

ஞானம் மறுமொழி கூறாமல் புன்னகை செய்கிறாள். மைத்ரேயியின் முகத்தில் வெற்றி கொண்டாற்போன்ற பெருமிதம் பொலிகிறது. ராஜாவின் புகழ்ச் சொற்கள் செவியருகே வந்து வந்து அவளுடைய தன்னம்பிக்கைக்கு மெருகு கொடுக்கின்றன. வழி நெடுக, வெளியில் இறங்கியதும் அவள் கண்களில் படும் அரசியல் சூழலில் அவள் தன்னையறியாமல் பங்கு கொண்டிருப்பதாக நினைக்கிறாள். பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குச் சென்றவள் அன்று கல்லூரியிலிருந்து மூன்றரை மணிக்கே வீடு திரும்ப பஸ் நிற்குமி டத்துக்கு வந்து நின்று கொண்டிருக்கிறாள்.

மைத்ரேயி, சுதந்தரப் போராட்ட நாட்களைப் பார்த்ததில்லை. படித்திருக்கிறாள்; கேள்விப்பட்டிருக்கிறாள். கல்வி கற்கும் இளைஞர்களை எல்லாம் போராட்டக்காரர்களாக மாற்றிய அந்த நாட்கள், இந்த நாட்களைப்போல்தான் இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு நிற்கிறாள். எதிரே தேநீர்க்கடையில் எழுத்துக்கள் கறுப்பு-சிவப்பு வண்ணங்களில் பளிச்சிடுகின்றன. தேநீர்க் கடையைச் சுற்றிக் கறுப்பு சிவப்புத் தோரணம். தேநீர்க்கடைப் பையனுடைய மார்பில் கறுப்பு சிவப்பு வண்ணங்களில் உதய சூரியன் இடம் பெற்றி ருக்கிறான். தேநீர்க்கடைகள், சோடாக் கடைகள், முடிதிருத்தும் கூடங்கள், தையற்கடைகள் என்று நகரின் வாலாய் நீண்டு செல்லும் புறநகர்ப் பகுதிகள் நெடுகிலும் கறுப்புசிவப்பின் ஆதிக்கம் கண்களை மட்டும் கவர்ந்து நின்று விடவில்லை. சினிமாக் கொட்டகைகள், அண்ணா அறிவகங்கள், படிப்பகங்கள் எங்கும் புதிய தலைவர்களின் புகழே மணக்கிறது. சினிமா நடிகர்களின் முகங்களே காட்சி தந்து கொண்டிருந்த சுவரொட்டிகளில் அண்ணாவும் மூதறிஞரும் போட்டி போட்டுக் கொண்டு முகமலர்ச்சியைக் காட்டுகின்றனர். தேர்தல் நெருங்கி வருகிறது; இந்தத் தேர்தல் முந்தைய தேர்தல்களைப் போன்றதன்று என்ற பரபரப்பு, காணும் இடங்களிலெல்லாம் உள்ளோட்டமாய்த் துடிப்பது போல் மைத்ரேயிக்குத் தோன்றுகிறது.

பொதுக்கூட்டத்தின் அடுக்குமொழிப் பேச்சுக்களில், ஒலி பெருக்கி ஒலி பரப்பும் சினிமாப் பாட்டுக்களில், மக்கள் முக மலர்ந்து பேசும் பேச்சுக்களில், ஆழத்தில் வேரோடி, நீண்டு நிமிர்ந்த கிளைகளும் விழுதுகளுமாக அசைக்க முடியாதென்ற உறுதியுடன் நிற்கும் ஆலமரம் போன்ற ஆளும் கட்சியின் சாதனைப் புகழ்களெல்லாம் பகல் நேரத்துச் சந்திரனாய் ஒளியிழந்து போகும் விந்தையை அவள் காண்கிறாள்.

பஸ் ஏன் இன்னும் வரவில்லை? “தமிழ் வாழ்க!” என்ற கோஷத்தை கவசமாய் தன் மேனியில் சுமந்துகொண்டு வரும் அரசினர் பேருந்து ஊர்தி, ஏன் இன்னமும் வரவில்லை ?

மூட்டை முடிச்சு, பைகள் அந்த ஆலமரத்தடியில் குவிகின்றன; மக்களும் கூடுகின்றனர். அப்போது அவளருகில் முடி நீக்கிய தலையை இறுகக்காது மறையத் தலைப்பால் முக்காடிட்டுக் கொண்டு கச்சலாக ஒரு பார்ப்பனக் கைம்பெண் இடுப்பில் ஒரு துருப்பிடித்த டப்பாவுடனும் கையில் ஒரு பையுடனும் வந்து நிற்கிறாள்.

“இங்கே அம்பத்திரண்டு பஸ் நிற்குமில்லையா?” “சர்க்கார் பஸ் இங்கே நிற்காது. பிரைவேட் பஸ் நிற்கும். நீங்கள் எங்கே போகனும்?”

“ஆலந்துார் கிட்டப் ஃபாக்டரி குவார்ட்டர்ஸ் இருக்கே, அங்கே...”

“சர்ஜிகல் இன்ஸ்ருமென்ட்ஸ் ஃபாக்டரி குவார்ட் டர்ஸா...?” என்று கேட்கும் மைத்ரேயி சட்டென்று அந்த முகத்தைக் கூர்ந்து நோக்குகிறாள். ‘நீங்க...நீங்க’ சொற்கள் தொண்டையில் முள்ளாய்ச் சிக்கிக் கொண்டாற்போல் கண்களில் கசிவு உண்டாகிறது.

“ஆமாம், மதுரந்தான். நீ மைத்ரேயி இல்லே? நீ ஹோமை விட்டுப் போய் மேலே காலேஜில் படிக்கிறேன்னு லோகா சொன்னாள் ஒரு நாள். எனக்கு உன்னைப் பார்த்த உடனே தெரிஞ்சுடுத்து...” என்று தலையை அசைத்துப் புடவையை நீக்கிச் செவியை விடுதலை செய்து கொள்கிறாள்.

“இது என்ன மாமி கோலம்: இப்படி...” மதுரம் வெளிறிய புன்னகையைச் சிந்துகிறாள். கண்களும் நிறைகின்றன.

“அவர் போய் ஒண்ணரை வருஷமாச்சே! மயக்க மருந்தைத் தின்னுட்டு, லாரியில் அறைபட்டு. கண் கொண்டவா பார்க்க மாட்டா..”

மதுரம் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள். “இந்தக் காலத்தில், நீங்கள் எதுக்கு மாமி இந்தக் கோலம் பண்ணிக்கணும்? எனக்கு சகிக்கலியே ?”

“என்னம்மா பண்றது? அஞ்சு குழந்தைகளை வச்சிண்டு அல்லாடிப் போனேன். பெரியவன் அப்பவே சொல்லாம கொள்ளாம எங்கோ ஒடிப் போயிட்டான். பம்பாயோ கல்கத்தாவோ, எல்லாம் சிறிசுகள். ஒரு வருஷம் ஆகாம யார் வீட்டில் என்னைச் சேத்துப்பா ?”

“அப்புறம் சொன்னா, சுவாமிகள் மடத்திலே பிராமணப் பையன்கள்னா எதானும் ஒத்தாசை பண்ணுவா, போய்க் கேளுன்னா. அதுக்குத் தலைவச்சுக்கக் கூடாது. சரின்னு திருவையாத்துக்குப்போயி இப்படிப் பண்ணிண்டு வந்தேன். ரெண்டும் பாடசாலையில் இருக்கு. ஒரு வருஷம்போல நானும் அங்கதான் மடத்திலேயே இருந்தேன். சொர்ணத்தைக் கோவில் மடப்பள்ளியில் வேலை செய்யற பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிக்குடுத்தேன். கீழ்க்களை ரெண்டையும் லோகா ஒரு வருஷத்துக்கு பாலாலயத்துக்குச் சிபாரிசு பண்ணி வச்சுக்கச் சொல்லியிருந்தா. இப்பக் கூட்டிண்டு வந்துட்டேன். படிக்கிறது ஸ்கூலில், தெவசம் திங்கள்னு சமைக்கப்போக முடியறது. கையில் காசு கிடைக்கறப்ப, எதோ முறுக்கு சீடைன்னு போட்டு விக்கறேன்...”

“உங்களைப் பார்க்கவே சகிக்கலியே மாமி ? உங்க முடி என்ன பாவம் பண்ணித்து ?”

“பெரியவாளைப் பாத்தா பாவம். மூணு நாள் பிட்சை எடுக்கமாட்டா. நம்ம மதம், தருமம்னு இருக்கேம்மா? நீ எங்கே இருக்கே? இன்னும் படிக்கறியா? வேலை பார்க்கறியா ?”

மைத்ரேயிக்குக் குற்ற உணர்வு குத்துகிறது. தனக்கு அவள் மோர் ஊற்றிச் சோறிட்ட காட்சி எப்போது நினைத் தாலும் நெஞ்சு நெகிழ முன் தோன்றுமே ?

“எப்படி மாமி நீங்க இதுக்கு ஒப்பினேன்? லோகாவெல்லாம் ஒரு ஒத்தாசையும் செய்யலியா உங்களுக்கு ?”

“இதுக்கு ஏம்மா நீ இப்படிப் பரிதவிக்கிறே? லோகாதான் எனக்கே இந்த யோசனையைச் சொன்னாள். கீழ்க்கடைக்கும் ஒரு வழி பண்ணினாள். தலைமுடி இருந்து என்ன கண்டேன் ? எண்ணெய் கிடையாது, பிண்ணாக்குக் கிடையாது. அது குச்சி குச்சியா நரைக்க ஆரம்பிச்சுடுத்து. இப்ப முற முறக்க இருக்கு. உன் மனசில வச்சுக்கோ. லோகாவே ஒரு வருஷத்துக்குள்ள அவாத்துக்கு நான் போறதுக்கு இஷ்டப் படல. வாஸ்தவந்தானேம்மா ? இப்பத்தான் அவளும் அவாத்துக்காரரும் சண்டை சச்சரவு இல்லாம ஒண்ணா யிருக்கா, ராஜா வரதில்ல. காங்கிரசை விட்டுப் பிரிஞ்சுட்டா. உனக்குத் தெரியாம இருக்குமா? நான் சொல்லப் போறேனே..”

மைத்ரேயிக்கு நினைக்க நினைக்க ஆறவில்லை. அந்தப் பையன்கள் இருவரும் கண்முன் பார்க்கும்போதே பைக்குள்ளிருந்து பணத்தை எடுத்த குழந்தைகள். வயிற்றுக்கில்லாமல் திருடக் கற்றாற்போல் வயிற்றுக்கில்லாமல் வேதம் ஓதப் போயிருக்கின்றனர். வயிற்றுப்பசி தீர்க்கப் படிப்பு. பொருள் தெரியாமல் மொழி தெரியாமல் மந்திரங்களைக் கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டு வந்து வயிறு வளர்க்கத் தொழில் செய்வார்கள். இந்த ‘பிராமணத்துவம்’ சாக வேண்டும் என்று ஞானம்மா சொன்னதில் என்ன தப்பு ?

கருஞ் சந்தைக்காரனும் சூதாடியும் உடலை விற்றுப் பிழைப்போரும் இன்னும் இழி செயல் செய்பவரும் மலிந்த இவ்வுலகில், அவர்களெல்லாரும் கடைத்தேறப் பாதபூஜைகள் செய்யும்போது, மதுரத்தைப் போன்ற பெண்கள் முடி வைத்துக் கொள்வதனால் தானா இந்து மதம் சீரழிந்து குலைந்து நசித்துப் போய்விடப் போகிறது?

அவள் எம்.ஏ. படித்து வரலாற்று ஆராய்ச்சி பண்ணி யாருக்கு என்ன செய்யப்போகிறாள்? சருகுகளாய் உலர்ந்து விழும் கூளத்துக்கு நீர்வார்த்து அழுகச் செய்வதைவிட ஒதுக்கித் தள்ளிவிட்டுப் புதிய வித்துக்களை ஊன்றுவதுதான் உகந்தசெயல். வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் மதத்துக்கு இழுக்கிறார்கள் என்று வேறு மதப் பிரசாரகர்களைக் குறை சொல்வதுண்டு. மானபங்கம் செய்வது போன்று ஒரு பெண்ணின் முடியைப் பறித்து சமுதாயத்தின் கண்களுக்கு அவளை ஒரு குற்றவாளியைப்போல் நிறுத்து வதற்கும் வறுமையே காரணமாக இருக்கிறது. இந்த வறுமையை நிபந்தனையில்லாமல் ஒழிக்க வேண்டும். புத்தகங் களை உதறி எறிந்துவிட்டு எங்கேனும் சமையல் வேலை யேனும் செய்து மதுரத்தின் குடும்பத்தைக் காப்பாற்றுவது தன் கடமை என்று அவளுக்கு அப்போதே தோன்றுகிறது. தப்பும் தவறுமாய் உளம் ஒன்றாமல் வேதம் ஓதியது போதும் என்று அந்தப் பிள்ளைகளை அழைத்து வந்து ஏதேனும் தொழிற் கல்வி கற்பித்து வாழும் வகை செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறாள். சேரிகளுக்குள் அழுத்தக் கூடிய வறுமைக்கும் உயர் சாதியினர் நடத்தும் வாழ்வு முறைக்கும் இடையே போராட முடியாமல் போலியாகவும் சருகாகவும் உலர்ந்து மாறும் மக்களை எல்லாம் கூனலில் இருந்து மீட்டு உண்மையான வாழ்வு வாழ வகை செய்வதை அவளுடைய இலட்சியமாகக் கொள்ளவேண்டும்....

"மாமி உங்க விலாசம் சொல்லுங்கோ, நான் வரேன்?”

“வாம்மா, விலாசமென்ன, பெரிய விலாசம்? எனக்குக் கடிதாசு போடறவா தட்டுக்கெட்டுப் போறதா? பழைய மாம்பலம் குளம் இருக்கோல்லியோ? அதோட வடக்கால நேராப் போனா சுப்பராயன் சந்துன்னு ஒண்னு வரும். அங்கே ஒரு தாவரத்தில குடியிருக்கேன். அதுக்கே பதினைஞ்சு ரூபாய் வாடகை எதிர்க்க ஒரு தகரக்காரன் கடை. மதுரம் மாமின்னு கேட்டாச் சொல்லுவா. பஸ் வராப்பல இருக்கே...”

“...ஆமாம் மாமி, இது ஃபாக்டரி குவார்ட்டர்ஸ் போகும் ஏறிக்குங்கோ...”

கைப்பையை வாங்கி கொண்டு அவளைப் பஸ்ஸில் ஏறச் சொல்லிவிட்டு மைத்ரேயி பிறகு பையை அவள் கையில் கொடுக்கிறாள்.

இனி அந்த ஞானம்மாவின் சொகுசான நிழலும் ஊட்டமான உணவும் வெய்யில் படாத வாழ்க்கையையும் அவள் அநுபவிப்பது பெருந்துரோகமாகும் என்று மைத்ரேயி கருதுகிறாள்.

எப்படியேனும் ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும். இந்தச் சாதியின் சீரழிவை அடித்தளத்திலே தடுக்க வேண்டும்...

அன்று அவள் வீடு திரும்பும்போது, எம்.ஏ. பரீட்சை எழுதும் உறுதிகூட ஆடிப்போகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_14&oldid=1115381" இலிருந்து மீள்விக்கப்பட்டது