ரோஜா இதழ்கள்/பகுதி 15

15

வள் வீடு திரும்பும்போது ஞானம்மா வீட்டிலிருப்பாள் என்று மைத்ரேயி கருதியிருக்கவில்லை. ஐந்தரை மணிக்கு மேல் தான் ஞானம் அலுவலகத்திலிருந்து திரும்புவது வழக்கம். ஜானகியின் வீட்டில் சாவி கொடுத்திருப்பாள். மணி ஐந்தடிக்கிறது. கதவும் திறந்திருக்கிறது. முன்னதாக வந்துவிட்டாளா? அவளுக்கு உடல்நலக் குறைவென்று வந்து ப, சந்தர்ப்பங்கள் கூட மிக மிகக் குறைவு. ஒரு முறை ஃப்ளூகாய்ச்சல் வந்தது. அவளுக்கு தெரிந்து ஞானம் வந்தாற்போல் மூன்று நாட்கள் அப்போதுதான் படுத்திருந்தாள்.

மைத்ரேயி வீட்டுக்குள் நுழைந்தபோது ஞானம் உடல்நலமின்றிப் படுக்கையை விரித்துப் படுத்திருக்கவில்லை. மாறாக உள்ளே சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருக்கிறாள். ஏலக்காயும் நெய்யும் மணக்கின்றன.

சாப்பிடும் கூடத்து மேசைமீது புதிய ஜினியாப் பூங் கொத்து ஒன்று பறித்துச் செருகி வைத்திருக்கும் மலர்க் குடுவை.

“என்னக்கா?” என்று அவள் சமையலறையை எட்டிப் பார்க்கிறாள்.

ஸ்டவ்வில் அல்வா கிளறும் ஞானம் அருகில் வடைக்கு வேறு அரைத்து வைத்திருக்கிறாள்.

“என்னக்கா? யாருக்கு பார்ட்டி, இன்னிக்கு ? என்னிடம் முன்பே சொல்லி இருந்தால் இன்னும் ஒரு மணி முன்னதாக வந்திருப்பேனே.”

‘உன்னிடம் அப்போதே சொல்ல எனக்கே தெரியாதே?”

“விடுங்கள், நான் கிளறுகிறேன். நீங்கள் முகத்தைத் துடைத்துக் கொண்டு போங்கள். எத்தனை பேர் அக்கா?” “யாருமில்லே, எதிர்வீட்டு ராமசேஷனும் ஜானகியும் வருகிறார்கள்.”

“இன்னிக்கு அவங்களுக்கு வெட்டிங் டேயா? நீங்க பார்ட்டி குடுக்கிறீங்களா அக்கா?”

ஞானம் மைத்ரேயியைக் குறும்புச் சிரிப்புடன் திரும்பிப் பார்க்கிறாள்.

“அவளோட அவர் ஃபிரன்ட், ஒரு I.M.S. டாக்டர் பையன் வந்திருக்கிறான். இங்கே அழைத்து வரேன்னா. சரி, ஒரு ஸ்வீட் பண்ண்லான்னு நினைச்சேன். பிறகு ஒரு காரமும் இருந்தால்தான் சரியாக இருக்கும்னு தோணித்து...”

மைத்ரேயி ஒருகணம் சலனமற்று நிற்கிறாள். யாரையோ அழைத்து வருகிறேன் என்றால் அதற்கு ஸ்வீட் காரமா? அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு டாக்டர் பையனை எதற்கு அழைத்து வருகிறார்களாம் ? எதற்கு ஸ்வீட் காரம் பண்ணுவானேன்?

“இனிப்புப் போறுமா என்று பார்!"என்று அவளிடம் ஒரு தேக்கரண்டியில் கொஞ்சம் எடுத்துக் கொடுக்கிறாள்.

“வாசனையே சொல்கிறதே? போறும்.” மைத்ரேயியினால் ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு கால் ராஜா வருவதாகச் செய்தி அனுப்பி இருப்பாரோ? -

ஞானம் பொய் சொல்லமாட்டாள்.

ஐ.எம்.எஸ். என்றால், போருக்குப் போயிருப்பவனாக இருக்கும். அதற்காக உபசாரமா ?

மைத்ரேயி முகம் கழுவிப் பொட்டு வைத்துக்கொண்டு உள்ளே மீண்டும் நுழைகிறாள். ஞானம் அல்வாவை இறக்கி வைத்துவிட்டு போண்டாவை உருட்டிக் காயும் எண்ணெயில் போடுகிறாள்.

“நீங்கள் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஹவுஸ் வைஃப் ஆக இருப்பீர்கள் அக்கா !”

ஞானம் திரும்பிப் பார்க்கவில்லை. “மிக்க நன்றி. நீ போய்த் தலை வாரிக் கொண்டு கொஞ்சம் ஃபிரஷ்ஷாக இரு !”

“எனக்கென்ன இப்ப; நான் எப்போதும் ஃபிரஷ்ஷாகத் தானிருக்கிறேன்.”

“நான் சொல்வதைக் கேளேன் ?”

மைத்ரேயி பூடகத்தை உடைக்கத் தயாராக, “நான் கேட்க மாட்டேன்” என்று சிரிக்கிறாள். "இப்போதெல்லாம் நன்றாகப் பேசத் தெரிந்து கொண்டு விட்டாய். கேட்காவிட்டால் போ.”

மைத்ரேயி சாப்பிடும் கூடத்து மலர்க் குடுவையைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். ஜப்பானிலிருந்து அக்காவுக்கு யாரோ நண்பர் வாங்கிக் கொடுத்த பீங்கான் குடுவை அதைப் படுக்கையறை அலமாரியில்தான் வைத்திருந்தாள். இன்று அதை எடுத்து ஜினியாப் பூங்கொத்தை வைத்திருக்கிறாள். பொருத்தமாக இல்லை . ஞானம்மாவுக்கு இந்த அலங்காரக் கலைகளில் ஆர்வம் உண்டு.

பால்காரன் வருகிறான் வாயிலில். அதிகமாகப் பால் பாகுவதற்காகப் பெரிய பாத்திரத்தை ஞானம்மா எடுத்து வருகிறாள்.

இதுவரையில் அவளுக்குத் தெரிந்து எத்தனையோ விருந்தினர் வந்திருக்கின்றனர். ஆனால் ஞானம், அவளை “முகம் திருத்திக் கொள்” என்று சொன்னதில்லை. என்ன விசேஷம்?

பளீரென்று மின்னல் பொறி போல் ஒரு நினைவு தோன்றுகிறது.

அந்தப் பக்கம் எங்கேனும் தனராஜ் பொதுக்கூட்டத்தில் பேச வருகிறானா?

அக்கா இவளை அவனுடன் சேர்த்துவைக்கப் போகிறாளா?

சுவரெட்டிகளை அவள் நன்றாகப் பார்த்தாளே?

இந்த எதிர்பாரா ஊகம் தோன்றியதும் மைத்ரேயிக்கு ஒரு பொருந்தாமை உண்டாகிறது.

தனராஜ் தன்னை வந்து சந்திக்க நேரும் என்ற எண்ணமே .அவளுக்குத் தோன்றியதில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பம் நேரும் என்று அவள் அதுகாறும் நினைத்திருக்கவில்லை. ஆனால் நிகழ்கால அரசியல் விநோதங்களை நினைக்கையில் எதுவும் நடக்கும் என்றே தோன்றுகிறது.

லோகாகா, அறிவு மறுமலர்ச்சி பெற்றவள். விரிந்த மனம் உடையவள் என்று அவள் கருதிய லோகா, மதுரத்தைக் கணவன் இறந்து ஒராண்டுக்குள் அவளுடைய வீட்டுக்குள் வரலாகாது என்று தடுத்து முடி நீக்கக் காரணமாக இருந்தாள் என்றால், வேறெந்த சம்பவம்தான் நிகழாது ? போலியாக வாழ்ந்த கணவனுக்காக அப்படி மாறிவிட்டாளா? ஆச்சாரியார் என்று இகழ்ந்து தூற்றியவரை இன்று துாற்றியவர்களே ‘மூதறிஞர்’ என்று போற்றுகிறார்கள். தனராஜ் மைத்ரேயியைக் கட்சிக் கூட்டாக அழைக்க வரலாம்.

அவன் வரும்போது அவள் என்ன செய்வாள்?

பெரும் கேள்வியாக அவள் மனக் கண்ணில் அது விஸ்வருபம் எடுக்கிறது.

அக்கா அவள் அந்தக் கட்சியில் இணைவதை ஆதரிக்க மாட்டான்.

ஆனால், தனராஜின் மனைவி என்று வரும்போது ? அவள் பழைய மைத்ரேயி இல்லை; ஆனால் அவனும் பழைய தனராஜாக இல்லாமல் இருக்கலாமே ?

“என்ன இப்படியே உட்கார்ந்திருக்கிறாய்? என்ன யோசனை ?”

“நீங்கள் உள்ளத்தை ஒளியாமல் கூறுங்கள்; தனராஜ் வருகிறானா?” ஞானம் விழிக்கிறாள். “யார் தனராஜ் ?”

மைத்ரேயி கோபத்துடன்,” தெரியாதது போல் பாசாங்கு செய்ய வேண்டாம். ஆலமரத்துக் கிளிப்பாட்டுப் போட்ட திரைப்படக் கவிஞர், கட்சியின் தூண் போன்ற உறுப்பினர். அரசியல் என்றால் வெட்கம் மானம் ஒன்றுமே இருக்காது போலிருக்கிறது” என்று வெடுவெடுத்துவிட்டுச் சிவக்குட் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

“அட ராமா” என்று ஞானம் கேட்டுவிட்டுச் சிரிக்கிறாள்.

“எனக்கு அவனைப் பற்றி நினைப்பேயில்லை. அப்படி யாரும் வரப்போறதில்லை.”

“பின் என் அலங்காரத்தில் உங்களுக்கென்ன ஆவல்? ஏதோ சொஜ்ஜி பஜ்ஜியைப் பண்ணி வைத்துக் கொண்டு பண்ணை ரெடியாக இரு என்று சொல்பவர்கள் போல் இருக்கிறதே உங்கள் நடப்பு ?”

ஞானம் அவளை நேராகக் கனிவுடன் நோக்குகிறாள். மைத்ரேயின் முகம் குழம்பியிருக்கிறது.

“கோபிச்சுக்காதே, மைத்தி. எண்ணம் அப்படியில்லைன்னு நான் சொல்லலே. நேற்றே இதைச் சொல்லத்தான் ஜானகி வந்தாளாம். காலையில் பத்து மணிக்கு ஆபீஸிலேயே ராமசேஷன் கேட்டார். ‘மிக நல்ல பையன். வயசு முப்பது ஆகிறது. ஜாதகம் வரதட்சிணை எல்லாம் கிடையாது. உங்கள் தங்கையைப் பற்றி நாங்கள் சொன்னோம். அவனே இன்று காலையில் அவள் காலேஜூக்குப் போவதைப் பார்த்துவிட்டு இவள்தானா’ என்று கேட்டான். அவனை சாயங்காலம் கூட்டி வரட்டுமா என்று கேட்டார். நான் என்ன பதில் சொல்ல ? வரச் சொன்னேன்!”

புளிக் குழம்பையும் பாயசத்தையும் மோரையும் ஊற்றிக் கலந்து ருசிப்பது போல் இருக்கிறது.

“நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு வரச்சொன்னீர்களக்கா ? நான் என்ன கன்னிப்பெண்ணா ?”

“மெதுவாகப் பேசு மைத்ரேயி, எனக்குத் தெரியும். ஆனாலும் உன் எதிர்காலத்தைக் குறித்து எனக்குக் கவலை இருக்கிறது...”

“நான்சென்ஸ்” என்று முணுமுணுக்கிறாள் மைத்ரேயி, “யாரு, நானா?” “இல்லே. மன்னியுங்கள் அக்கா. என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையே? நீங்கள் என்ன முடிவோடு, துணிவோடு அவர்களுடைய அந்த எண்ணத்துக்கு இடம் கொடுத்து வளர விடுகிறீர்கள் என்று நான் நினைக்கட்டும்?”

“பொறு, ஆத்திரப்படாதே மைத்ரேயி, நீ உன்னுடைய அந்தக் கல்யாணமோ, எதுவோ, அதை இன்னும் உயிருள்ள தாகத்தான் நினைத்திருக்கிறாயானால் சொல். நான் உன்னை வற்புறுத்தவில்லை.” “அந்தக் கல்யாணம் உயிரில்லாததுதான். சட்டப்படி செல்லாதுதான். ஆனால் நான் கன்னிமை காத்து வந்தவள் என்று பொய்யாக நம்பும்படி செய்து என்னை ஒருவருக்குக் கல்யாணம் செய்து கொடுக்க நீங்களா விரும்புகிறீர்கள் ? அக்கா, நான் இங்கிருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை நேராகச் சொல்லிவிடக்கூடாதா?”

“அசடு, ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறாய்? அந்தத் தனராஜை இன்னும் நீ மனசில் வைத்துக் கொண்டிருப்பாய் என்பதை நான் எண்ணிப் பார்த்திருக்கவில்லை. நான் ஒரு மாதிரி ஜானகியிடம் நீ வீட்டைத் துறந்து வந்திருப்பதைப் பற்றிக் கூறியிருக்கிறேன். நீ என் இரத்தக் கலப்புச் சோதரியல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். உனக்குத் தனி வாழ்வு இம் மாதிரியான நிலையில் பத்திரமல்ல என்று நான் கருதுகிறேன். அவர்கள் உடன்படுவதைக் கவனித்தால் பையன் பெருந்தன்மையுடையவனாக இருப்பான் என்று தோன்றுகிறது.”

“தனிவாழ்வு எனக்கு மட்டும் பத்திரமில்லை என்பதை எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்? நான் என்ன..”

படபடப்பாக வரும் சொற்களை உதட்டைக் கடித்து விழுங்கிக் கொள்கிறாள்.

கண்களில் நீர் தளும்புகிறது.

ஏன்? ஏன் அவளுக்கு மட்டும்? அவளை மட்டும் ஏன் பத்திரமில்லாதவள் என்று நினைக்கவேண்டும்? ஒரு ஆணின் கண்களில் அவள் பாலுணர்வைத் தூண்டிவிடும்படியான பிம்பமாகவா விழுகிறாள்?

சீ? !

ஞானம்மா மெள்ள அவளுடைய கையைப் பற்றுகிறாள்.

“நீ நினைப்பதெல்லாம் எனக்குப் புரிகிறது, மைத்ரேயி. பொது வாழ்வும் ஒரு பெண்ணின் இளமையும் எப்போதும் கத்திமுனையில் நடப்பது போன்ற அநுபவமாக இருக்கும் என்பதை நான் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறேன். இதற்குமேல் நான் சொல்லவேண்டாம் உனக்கு. குடும்ப அமைப்பில் இருந்து கொண்டு உன் அறிவையும் ஆற்றலையும் சமுதாய நலனுக்குப் பயன்படுத்தலாம் என்று நான் எண்ணினேன்...”

வியப்பும் கண்ணிரும் அலைமோத அவள் ஞானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

“வாருங்கள், வாருங்கள்...”
“நமஸ்காரம்...”
ராமசேஷன் “டாக்டர் முரளி...” என்று அறிமுகம் வசயது வைக்கும் குரல் மைத்ரேயிக்குக் கேட்கிறது.

“உட்காருங்கள், உட்கார் ஜானகி...சிவு எங்கே?...”
“சிவு. பார்ட்டிக்குப் போயிருக்கிறான்.” ஜானகி சிரிக்கிறாள்.

“பார்ட்டியா ?”
“ஆமாம். மிஸஸ்கோகலே வந்து அழைச்சிட்டு போனாள். ஸிமிக்கு இன்னிக்கு பர்த் டே.”

“ஓ! பெரியவங்க பேசும் இடத்தில் வேண்டாமென்று அனுப்பிவிட்டாயாக்கும் !”

சிரிக்கிறார்கள்.
“நீங்கள் இப்ப லீவில் வந்திருக்கிறீர்கள், இல்லையா?”
“ஆமாம்.”
“உங்களுக்கு டில்லியில்தான் படித்ததெல்லாமா ?” “நான் இங்கே மெட்றாஸ் மெடிகலில்தான் படிச்ச தெல்லாம். அப்பா அம்மா இப்ப இந்துாரில் இருக்கிறார்கள்.”
‘மெட்ராஸ் மெடிகலிலா? எந்த வருஷத்தில்?”
” அறுபதில் பாஸ் பண்ணினேன், அறுபத்திரண்டில் ஸர்விஸ்-க்குப் போனேன்.”

ஞானம்மா, இண்டர்வியூக்கு வந்த இளைஞனைக் கேள்வி கேட்பது போல் பேசுவதாக மைத்ரேயி நினைத்துக் கொள்கிறாள். டிராயிங் ரூம் பேச்சு என்ற நாகரிகமே ஞானத்துக்குப் பழக்கமில்லை. பெண் எத்தனைதான் படித்து முன்னேறி மறுமலர்ச்சி வேடம் பூண்டாலும் அடித்தளத்திலுள்ள பச்சையான இயல்புகள் சமயங்களில் மீறி வரு வதாக மைத்ரேயி நினைக்கிறாள். ஞானம்மா, அவள் பெரிதும் மதித்து வியந்து அன்பு கொண்டு ஆராதித்த ஞானம்மா, அவளுக்கு ஒரு சோதரியாக, ஆசிரியையாக, தோழியாக நின்றிருப்பவள் இப்போது மூடத்தாயாக உருக் கொண்டிருக்கிறாள். அவளால் இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.

அப்போது ஞானம் உள்ளே வருகிறாள்.

“காபிக்குப் பால் காய்ந்து விட்டதா? நீயும் வா...” என்று கூறிவிட்டு, தட்டுக்களில் இனிப்பையும் காரத்தையும் வைக்கையில் ஜானகியும் உள்ளே வருகிறாள்.

“மைத்ரேயி காலேஜிலிருந்து வரவில்லையாக்குமென்று நினைச்சேனே? ஓ ! இதெல்லாம் என்ன ஸிஸ்டர்? பெரிய அமர்க்களம் பண்ணி இருக்கிறீர்கள்?”

“ஒண்ணுமில்லே. உங்க வீட்டிலிருந்து மாசம் அஞ்சு நாள் பாயசமும் பட்சணமும் கொண்டு வந்து தருகிறாய். இதையும் ருசித்துப் பாருங்கள்.”

“ஆமாம். அக்காவே செய்தது.”
தட்டுக்களையும் தண்ணிர்க் கூஜாவையும் அவளும் மைத்ரேயியும் கொண்டு வருகிறார்கள்.

நல்ல உயரமும் பருமனுமாக கம்பீரமான தோற்றத்துடன் விளங்கும் முரளி பெண்களிடையே கூசினாற்போல் தோன்றுகிறான். பெண்களின் சங்கத்தில் இயல்பாகப் பழகக் கூடியவனல்ல என்று புரிகிறது.

“மைத்ரேயி...” என்று ஜானகி கூறுகிறாள்.
“டாக்டர் முரளி...”
புன்னகை, கைகுவிப்பு. அவனுடைய முகத்தில் வியப்பு.

“...நான்...நீங்கள் பாபுச் சித்திக்கு உறவு இல்லையா?” என்று நேராகக் கேட்கிறான். மைத்ரேயிக்குத் தன் உடல் குளிர்ந்து கரைவதுபோல் தோன்றுகிறது.

பாபுச் சித்தி....அத்திம்பேரின் பெரியப்பா பெண் பாபு... அவளுக்கு...

“சரிதானா? நான் உங்கள் வீட்டுக்கு ஒருநாளைக்கு வந்தேன் நினைவிருக்கா ?”

“நினைவிருக்கிறது” என்று தலையை ஆட்டுகிறாள் மைத்ரேயி. பாபுவின் கணவருக்கு டில்லியில்தான் வேலை. பாபுவின் பெரிய மகள் மைத்ரேயியைவிடப் பெரியவள். அந்த லோச்சுவும் மீனாவும் மாம்பாக்கம் வந்தால் அவளை வேலைக்காரிபோல் நினைப்பார்கள். அவர்களுக்கு அவள் தட்டலம்பி வைத்து, மருதோன்றி அரைத்துக்கொடுக்கும் போது மட்டும்தான் சிநேகம். ஊருக்குப் போகும்போது, அந்த பாபு, அவள் கையில் நாலணாவோ, எட்டனாவோ கொடுப்பாள். அதை அவள் முகத்திலேயே விட்டெறியத் தோன்றும். அக்காவுக்கு அஞ்சி அதை வாங்கிக் கொண்டி ருக்கிறாள். அவளுடைய மைத்துனர் பிள்ளையான இந்த முரளி மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். ஒரு முறை அவன் தீபாவளி சமயம் அங்கு வரப் போகிறான் என்று அக்காவே தடபுடலாக ஏற்பாடுகள் செய்து எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தீபாவளியன்று வர வில்லை. அடுத்த நாள் பிற்பகல் எல்லாரும் பகற்காட்சிக்குச் சென்றிருந்த நேரத்தில் வந்தான். அவள் தீபாவளி பட்சணத்தை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து விட்டு, வீட்டுக் கப்பால் வயலில் நின்றிருந்த அத்திம்பேரை அழைத்து வந் தாள். ஒலையை எரியவிட்டு அத்திம்பேருக்கும் அவனுக்கும் காபி தயாரித்துக் கொடுத்தாள்.

அவன் அவளை இனம் புரிந்துகொண்டது அவளுக்கு நன்மையாகவே இருக்கிறது. மனம் இறுக்கம் விடுபட்டு இலேசாகிறது.

“முன்பே தெரியுமா என்ன ?’"என்று வினவுகிறார் ராமசேஷன். “உலகம் மிகவும் சிறிது” என்று நகைக்கிறாள் ஜானகி. “அந்தத் தோட்ட வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போதுகூட அங்கே போக வேண்டும் என்று ஆசை.”

முரளி மிகவும் பண்புடையவனாக இருக்கிறான். ஞானம் எப்படி உறவு என்று கேட்கவில்லை. அவனுக்கு அவளைப் பற்றிய செய்தி நிச்சயமாக எட்டி இருக்கும் என்று மைத்ரேயி நினைக்கிறாள். ஏனெனில் இத்தகைய செய்திகள் காட்டுத்தீ போல் பரவுவது சகஜம்.

‘இது என்ன அல்வா?” என்று நல்லவேளையாக ராமசேஷன் பேச்சுப் போக்கை மாற்றுகிறார்.

“கண்டுபிடித்துச் சொல்லுங்கள்!” என்று ஜானகி சிரிக்கிறாள்.

“கோதுமையா?”
முரளி புன்னகையுடன் அல்வாவைத் தொடாமலே பரிசீலனை செய்கிறான். மைத்ரேயி கோதுமை அல்வா என்று தான் நினைக்கிறாள். என்றாலும் கூர்ந்து நோக்குகையில், ஜானகி, “மைதாமா, உருளைக்கிழங்கு ஏதானும் இருக்கலாம். ஏன் ஸிஸ்டர்?’ என்று கேட்கிறாள்.
“அந்த மூன்றும் இல்லை.”
“பரவாயில்லையே? இது ஏதோ, நம் பெண் எதைச் சமைத்துப் போட்டாலும் சாப்பிடுவானா ருசி தெரியாமல் என்று பார்க்கவரும் மாப்பிள்ளைக்கு மாமியார் பரீட்சை வைப்பது போலிருக்கே?” என்று ஜானகி கேலியாகச் சிரிக்கிறாள்.

“உங்கம்மா அப்படிப் பரீட்சை வைக்கிறாளென்று தெரியாமல் தான் நான் மாட்டிக் கொண்டேன்” என்று ராமசேஷனும் அவள் நகைப்பில் இணைந்து கொள்கிறார். ‘

“இதுபறங்கிக்காய். சரிதானா?” என்று கேட்கிறான் முரளி.

ஞானம் ‘சரி என்று ஒப்புக்கொள்கிறாள்.
“சாப்பிடாமலே எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?...” “வேலைக்காரி பறங்கிக்காய் வாங்கிப் போனது கண்ணில் பட்டதோ ?”

‘இது வீட்டுக் கொல்லைக் காயாக்கும்!”
"அதெல்லாமில்லை. எதிலெல்லாம் அல்வா பண்ணுவார்களென்று நினைத்தேன். எங்கள் மெஸ்ஸில் இந்தப் பறங்கிக் காயைத்தான் ஒரு சீஸனில் எல்லா உருவங்களிலும் வைப்பார்கள்” என்றான் முரளி, உடனே பேச்சு மெஸ்ஸிலிருந்து ஸர்வீஸுக்குத் திரும்புகிறது.

“நீங்கள் ஏன் ஸர்வீஸ் டாக்டராகப் போனிர்கள்?” என்று கேட்கிறாள் மைத்ரேயி. அவளுக்கு இப்போது கொஞ்சமும் அவனிடம் பேசுவதில் நெருடல் இல்லை.

‘அறுபத்திரண்டில் சீனாக்காரன் படை எடுத்தான். நான் ஏதோ ஒரு ப்ரைமரி ஹெல்த் சென்டரில் ஈ ஒட்டும் நிலையில் தானிருந்தேன். அங்கே மருந்தும் கிடையாது; நோயாளிகளும் வரவில்லை. பேசாமல் காக்கி உடுப்பை மாட்டிக் கொண்டேன். எனக்கு இப்போது இதுஒத்துப் போய்விட்டது. அதுவும் போர்முனையில் புதிய புதிய அநுபவங்கள். மரணப் போராட்டத்தில், மரணத்தின் சந்நிதியில் நாம் உதவுகிறோம் என்ற உணர்வு பிறவி எடுத்ததன் பயனையே முழுசாக உணர்வதுபோல் ஒரு நிறைவு தருகிறது.”

“வாழ்க்கையில் அத்தகைய உணர்வைப் பெற ஸ்ர்வீஸ் டாக்டராகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. எந்தக் கர்மத்தைச் செய்தாலும் தன்னலத்தைக் களைந்து, பொது நலம் என்ற குறியிலே இயங்கும்போது அத்தகைய நிறைவு வரும். அப்படி அவரவர் தம் கருத்தைச் செய்வதையே கர்ம வேள்வி என்கிறது கீதை...” என்று மொழிகிறாள் ஞானம்.

“அது சரிதான் அக்கா. அப்படித் தன்னலமற்றதோர் சேவையைச் செய்ய மனம் விரும்பினாலும் கிடைத்திருக்கும் சந்தர்ப்பமும் சூழலும் ஒருவரைச் சுதந்திரமாக இயங்க அநுமதிக்க வேண்டும். இவரே முதலில் பிரைமரி ஹெல்த் சென்டரில் ஏன் கிராமசேவை செய்ய முடியவில்லை? ஈ ஓட்டுவானேன்? அங்கு மருந்து இல்லை; இவர் தொழிலுக்கு வேண்டிய உபகரணங்கள் இல்லை. ஏற்கெனவே இரண்டாந் தர, மூன்றாந்தர ஆட்கள் மருந்து வியாபாரம் செய்து கிராம மக்களை இவர் பக்கம் செல்லவிடாமல் தடுத்தார்கள். இவரால் எதிர்த்துப் போர் புரிய முடியவில்லை. சரிதானே?” என்று மைத்ரேயி முரளியின் பக்கம் பார்க்கிறாள்.

அவன் தலையசைத்துப் புன்னகை தெரிவிக்கிறான்.

“ஒத்துக் கொள்கிறேன். மிஸ்டர் ராமசேஷன் தப்பாக நினைக்கமாட்டார். நாமும் அப்படித்தான் எதையோ நினைத்து இங்கு எதையோ செய்து கொண்டிருக்கிறோம்.” என்று மொழிகிறாள் ஞானம்.

“இப்ப நீங்க பேசுவதைப் பார்த்தால் யுத்தம் என்று வந்து எமர்ஜன்ஸி என்று ஒன்று எப்போதும் இவர்களெல்லாம் ஆக்டிவாக இருக்கும்படியாக நீடிக்கணும்னு சொல்கிறீர்கள் போல இருக்கு...” என்று சாடுகிறாள் ஜானகி.
“டாக்டர்களுக்கு சமாதான நாட்கள் என்று அவ்வளவு அர்த்தமில்லாத கெடுபிடிகளைச் செய்து கொள்ள வேண்டிய தில்லை” என்று கூறுகிறான் முரளி.

“நாட்டிலுள்ள வறுமையைத் தொலைக்காமல், வயிற்றுச் சோற்றுக்கு வழி செய்யாமல், நோயைத் தடுக்க வழியையும் ஏட்டுக் கல்வியையும் கற்பிக்க முயல்வது தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போன்றது. இந்தக் கோடிக் கணக்குச் செலவில் இத்தனை டாக்டர்களை வரவழைத்து உருப்படியில்லாமல் ஒரு திட்டத்தை உயிருடன் வைத்திருப்பதைவிட, இத்தனை கிராமங்களில் குழந்தைகளுக்கு, பெண்களுக்கு ஊட்டமான சத்துணவும் ஆடம்பரமின்றி வாழத் தேவை யான வசதிகளும் செய்து கொடுக்கலாம். சினிமாக் கொட்கைகள், தேவையற்ற ஆடம்பரப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் பெருகக் கூடாது. இந்தச் சுற்றுப்புறக் கிராமத்தின் வளர்ச்சியை நான் இங்கு வந்து இத்தனை நாட்களில் கணக்கிடும்போது, ஆறு மடங்கு வட்டிக் கடைகள் அதிகரித்திருப்பதையே குறிப்பாகக் கவனிக்கிறேன். என்ன பயன் ?” “சினிமாக் கொட்டகைகளா? நீங்கள் என்ன அடிமடியில் கைவைக்கிறீர்கள்!” என்று சிரிக்கிறாள் ஜானகி.

“சினிமா என்றால் அக்காவுக்குக் கோபம் வரும். அதுவும் தமிழ்ப்படம் என்றால் அதிகமாக வரும்” என்று மைத்ரேயி விளக்குகிறாள்.

“அதெல்லாமில்லை. நான் இரண்டு வருஷம் சென்ஸார் போர்டில் இருந்தேன். ஆட்சேபிக்கும் பகுதிகளை அப்போது ஒப்புக்கொண்டு வெட்டியெறிவதாகச் சொல்லிவிட்டு, திரையிடும்போது சேர்த்துக் கொள்வதாக அறிந்தேன். நான் ஒருத்தி மட்டும் தூய்மை என்றால் போதுமா? தூய்மையினால் அழுக்கை வெல்ல முடியாது; அழுக்கு வேண்டு மானால் துய்மையை அழிக்கும் என்று விலகிவிட்டேன்.”

‘அதனால் தூய்மை காப்பாற்றப்பட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று முரளி கேட்கிறான்.

மெல்ல வாழைப்பழத்தில் ஊசி செருகுவதுபோன்று அவன் ஞானம்மாவைக் கோழை என்று சொல்வதாக மைத்ரேயி நினைக்கிறாள்.

“நீங்கள் தவறாக நினைக்காதீர்கள். நம் ‘இண்டெலக்சுவல் ‘ வகுப்பிற்குட்பட்டவர்களெல்லாரும் இப்படித்தான் சந்தர்ப்பம் வரும்போது கோழையாகச் செயலாற்றாதவர்களாக ஒதுங்கி விடுகிறார்கள். எது எப்படி வேண்டுமானாலும் போகட்டும். நம்மிடம் அழுக்குப் படக்கூடாது. மற்றவர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்டிருப்பார்கள். ‘நானும் வாங்கியதாக அவர்கள் நினைத்து விடக் கூடாது’ என்று உங்கள் அழுக்குப்படாத தன்மையை விளக்கிக் காட்டுவதில்தான் உங்களுக்கு அதிகமான கவலை இருக்கிறது. இதனால் என்ன பயன்? நீங்கள் ஒதுங்குகிறீர்கள்; சினிமா பழையபடியே தீமைகளை வளர்க்கிறது...” என்று முரளி தொடர்ந்து பேசுவதற்கு மைத்ரேயி உள்ளூரப் பாராட்டு கிறாள். ஞானத்தைப் பற்றிய அவள் கருத்தும் அதுவே.

“நீங்கள் கோழை என்று சொல்லலாம். இப்போது இங்கே நடப்பது அறிவு நாயகமோ, நீதி நாயகமோ, உண்மை நாயகமோ அல்ல. இது ஜனநாயகமும்கூட அல்ல. பண நாயகம். இதை இப்படி எல்லாம் வெல்ல முடியாது. நான் ஒருத்தி கத்துவேன். எதிர்ப்பேன். வழி அதனால் பிறந்து விடாது. என்னிடம் தனிமையில் கருத்தை ஒப்புக்கொள்பவர் கூட, சமயம் வரும்போது என்னைத் தனியே நிறுத்திவிட்டுப் பெரும்பான்மையோடு சேர்ந்து விடுவார்!” என்று ஞானம் விளக்குகையில் மைத்ரேயி காபி கொண்டு வரச் செல்கிறாள். அவர்கள் சிறிது நேரம் தமிழ்நாட்டு அரசியலைப் பற்றிப் பேசுகின்றனர். பிறகு விடைபெற்றுச் செல்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_15&oldid=1115386" இலிருந்து மீள்விக்கப்பட்டது