ரோஜா இதழ்கள்/பகுதி 16

16

அவன் முரளி என்று தெரிந்தபின் மைத்ரேயிக்கு நிம்மதியாக இருக்கிறது. அவனுக்குப் பெற்றோர் உற்றார் இருக்கின்றனர். அவர்கள் எட்டு பத்து வரதட்சினை ஐம்பதாயிரம் சீர் என்று கல்யாணம் எதிர்பார்க்கிறவர்கள்.

நினைக்கையில் அவளுக்குச் சிரிப்பு வருகிறது. “எதற்கு இப்ப சிரிக்கறே?” என்று கேட்கிறாள் ஞானம். “ஒன்றுமில்லை. உங்களுடைய எண்ணம், எனக்குச் சிரிப்பை மூட்டுகிறது. இவனுக்குப் பெண் கொடுப்பவர்கள் ஐம்பதாயிரம் செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும்.”

“அப்படி உன்னிடம் யார் சொன்னார்கள்? ஜானகி சொன்னாளா ?”

“யார் சொல்லவேணும்? எனக்கு இவனுடைய மனிதர்களை எல்லாம் தெரியும் அக்கா. இந்த உலகில் எனக்கும் ஒரு மதிப்பு என்று என்னை ஏற்றி வைத்தவர் நீங்கள். நேற்று ராஜா வந்தது என்னுடன் பேசியது, என்னைக் கட்சியில் சேரவேண்டும் என்று அழைத்தது அதையெல்லாம் நினைக்க நினைக்க, இரவு முழுவதும் உறக்கம் வராத நெகிழ்ச்சியிலும் பரவசத்திலும் சங்கடப்பட்டேன். எனக்கு இவ்வளவு பெருமையைக் கொடுத்த நீங்கள் இப்போது உலகத்து மூடத் தாய்யமாரைப்போல் நினைப்பது கொஞ்சம்கூடப் பொருத்த மில்லாதது. அதனால்தான் தோல்வியடைந்தீர்கள்.”

ஞானம் தோல்வியடைந்ததாகக் கருதவில்லை. அவளுடைய தீவிரமான சிந்தனையும் மாறவில்லை.

“உன் எதிர்காலத்தைக் குறித்து நீ ஒரு தீர்மானமும் இல்லாமலிருக்கிறாய் என்று எனக்குப் புரிகிறது. உன்னால் ஒருவிதமான முடிவுக்கும் வரமுடியாது என்று எனக்குத் தெரியும்.”

“அப்படி ஒன்றுமில்லை. என்னுடைய வாழ்க்கை எந்த வகையிலேனும் இந்த சமுதாயத்தின் கூனலை நிமிர்த்தவோ, வறுமையைத் தொலைக்கவோ பயன்படவேண்டும்,” என்று கூறும்போது அவளுக்கு மதுரத்தின் நினைவு பொங்கி வருகிறது. “இந்த நவீனயுகத்தில் பெண்கள் முன்னேற்றம், சமுதாய நலன் என்று பொது வாழ்வில் ஈடுபட்ட ஒருத்தி, ஒரு அபலைப் பெண், தன் கணவனை இழந்து நான்கு குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கையில் ஒரு வருஷம் வீட்டுக்குள் சமையல் வேலை செய்யக்கூட வரக்கூடாது, முடியை எடுத்துவிட்டு வா என்று சொல்லும் இடத்துக்குப் பிழைக்கப் போ...என்று சொன்னால் எப்படி இருக்கும்?. மதுரத்தை நான் பார்த்தேன் அக்கா. எனக்கு நெஞ்சு கொதிக்கிறது. இப்போதே படிப்பை விட்டுவிட்டு ஏதேனும் வேலை தேடிக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.”

“உன்னால் தனிப்பட்ட முறையில் ஒன்றுமே செய்ய முடியாது. மேல்நாட்டில் எல்லாம் பெண்கள் எப்படித் தனித்துச் சுதந்திரமாக எல்லாத் துறைகளிலும் வருகிறார்கள் என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். நேற்றுக்கூட ‘மார்க்ரட் போர்க் வொயிட்'டின் வாழ்க்கையைப் படித்துக் கொண்டிருந்தேன். அவள் இரண்டு முறைகள் கல்யாணம் செய்து கொண்டு விலக்குப் பெறுகிறாள் . ஆனால் என்ன? உலகப் போர்களை எல்லாம் பார்த்தவள். உலகத் தலைவர்களை எல்லாம் தன் புகைப்படத் தொழிலில் சந்தித்துப் பேசுகிறாள். சாகசமான வாழ்க்கை. அப்படி நம்மிடையே, மிகச்

சாதாரணப் பின்னணியிலிருந்து எழும்பும் பெண்மணி, பொது வாழ்வில் வெற்றிபெற முடிவதில்லை. இங்கே ஒரு பெண்ணின் திறமை, அறிவு, செயல்திறன் எல்லாவற்றையும் பாழாக்க ஒரு சிறு அவதூறு போதும். ஒன்றுமில்லை. உன் கடந்த காலக் கரும்புள்ளி, எந்த சமயத்திலும் விசுவரூபம் எடுத்து உன் பொது வாழ்வைப் பாழாக்க முடியும். அவதூறு, எதிர்ப்புக்களை எதிர்த்து எழும்ப முடியாத நொய்ம்மை உன்னை விட்டுப் போய்விட்டதாக நான் கருதவில்லை. அதுசரி, தனராஜை விட்டு நீ ஏன் வந்தாய் ?”

ஆழ்குளத்தில் கைவிட்டு அடியில் கிடக்கும் வேரை எடுத்துப் போடுகிறாள் ஞானம்.

“ஏன் வந்தேன்? ஏன் ? .... அம்மணியம்மாதான் குடும் பத்தில் போய்ச் சேர்ந்துகொள். இது வேண்டாம் என்றாள்.” எத்தனை ஆண்டுகளாகவோ வளர்த்த பந்தங்களை உதறிக் கொண்டு பத்து நாட்கள் ஆசைகாட்டியவனுடன் சென்றவள், ஒரே வார்த்தையில் எப்படி வந்தாள்?

ஏதோ பூனை துரத்திக் கொண்டு வந்தாற்போல் ஓடி வந்தாள். பிறகு எத்தனையோ துன்பங்கள் நேர்ந்தபோ தெல்லாம்கூட, அங்கிருந்து ஓடி வந்தது தவறு என்றோ, திரும்ப ஓடிவிடலாம் என்றோ தோன்றவில்லை. அம்மணி அப்படி என்ன பயங்கர உண்மையைச் சொல்லி வைத்தாள்? அவர்களெல்லாரும் கீழ்த்தரமான ஒழுக்கம் உடைய வர்கள் என்றாள். ஒழுங்கங்கெட்டு வாழவேண்டிவரும் என்ற ஊகத்தையே (உண்மை என்று நம்பி) கேட்டு அஞ்சி ஓடி வந்தாள்.

தன்னுடைய கற்பு என்ற ஒன்றுக்கு ஆபத்து நேராது என்ற பத்திரமான இடத்தை நாடி அவள் வந்திருக்கிறாள். “அப்போதைய நிலை வேறு அக்கா. இப்போது எனக்குத் தன்னம்பிக்கை இருக்கிறது.”

“என்ன தன்னம்பிக்கை? உன் கல்வி, தானாக நின்று சம்பாதிக்க முடியும் என்ற பிறரை எதிர்பாராத தன்மை இதெல்லாம் வேறு. எதையேனும் ஒன்றைப் பற்றிக் கொள்ளாமல் சில சந்தர்ப்பங்களை வெல்லமுடியாது. இந்த தசை உடலின் இயல்பு வேட்கை. அது எனக்குக் கிடையவே கிடையாது என்று சொல்லிவிட்டுத் திரை மறைவில் அதற்கு இனாயாகும் சந்தர்ப்பங்களை வெல்ல முடியாமல் தோற்றுப் போவது சரியல்ல. கானகத்திலிருந்த முனிவர்களே இதற்குத் தப்பிவிடவில்லை. எனவே, நீ உன் கடந்தகாலப் புள்ளியை அழித்துவிட்டதாகக் கருதும் பட்சத்தில் ஏன் மணவாழ்வில் ஈடுபடக்கூடாது? இந்த நாளில் நீ சங்கம் சேர்த்துக் கொண்டு சேரிக் குழந்தைகளை ஒருநாள் குளிப்பாட்டி, பால் வழங்கிச் செய்யும் சேவையைவிட, ஒரு குடும்பத்தில் ஒத்து வாழ்ந்து உன் அறிவையும் திறனையும் ஒரு நல்ல இல்லத்துக்குப் பயன்படுத்தி அதனால் சமுதாய நல மேம்பாடு காண்பது மேல் என்பது என் கருத்து. இந்த நிலையில் நீ கிராமத்துக்குச் சென்று மாமியார் மருமகள் சண்டையைத் தீர்க்கவோ, குடும்பக்கட்டுப்பாட்டு யோசனை சொல்லவோ போனால் ஒருத்தி மதிக்கமாட்டாள். கிராமசேவிகாக்களைப் பற்றிக் கத்தை கத்தையாக எழுதலாம். நீ இருந்த இல்லத்தில் வந்து அறவழியைப் பற்றிப் பேச எனக்குக் கூந்தல் நரைக்க வேண்டியிருந்தது. இவ, மிஸ்ஸா, மிஸஸ்ஸா ? என்றுதான் முதலில் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். மிஸ் என்றால் அவள்மீது எப்போது அவதூறை வீசி எறியலாம் என்று காத்திருக்கிறது நம் சமுதாயம். காரணம் என்னவெனில் ஒழுக்க அளவு கோலை அவ்வளவு கூர்மையாக, துல்லியமாக வைத்திருக்கிறது. மிஸ் என்பதே ஒரு கிளாமர். (கிளாமர் என்றால் யார் வேண்டுமானாலும் எந்த எண்ணத்தோடு வேண்டு மானாலும் உன்னை அணுகி என்ன வேண்டுமானாலும் பேசச் சுதந்திரம் நீ கொடுப்பதாகப் பொருள்) நீ அழகாக இருக்கிறாய். மேடையேறிப் பேசினால் நிறையக் கூட்டம் வரும் என்ற நோக்கு உனக்கு இசைவாகப்படுகிறதா?” என்று கேட்கிறாள் ஞானம்.

மைத்ரேயிக்கு அவள் எண்ணங்கள் ஒத்துப் போகக் கூடியவையாக இல்லை. மாம்பிஞ்சின் துவர்ப்பைப்போல் அவள் கருத்துக்கு ஒவ்வாததாகப் படுகிறது. ஞானம் ஏன் இப்படி எண்ணுகிறாள்?

ஞானத்தின் அந்தரங்க வாழ்விலும் பலவீனம் ஏற்பட்டு மேடிட்டிருக்க வேண்டும். அதனாலேயே அவளுடைய கம்பீரம் உள்ளுரச் சிதைந்து போயிருக்கிறது; அதனாலேயே நேருக்கு நேர் என்ற எதிர்ப்புக் களத்தை நோக்கத் துணிவின்றி விலகிக் கொள்கிறாள்.

முரளியைப் போன்ற ஒருவனை மணந்துகொண்டு ஒரு வீட்டை நிர்வாகம் செய்வது குறித்து மைத்ரேயி கற்பனை செய்து பார்க்கிறாள்.

அந்தக் கணவனுடன் அந்தரங்கமாக இருக்கும் நேரங்களிலெல்லாம் அவளுக்கு அதுபோல் இன்னொருவனுடன் இருந்த நினைவு வரும் என்ற எண்ணமே அருவருப்பாக இருக்கிறது.

“நீயே யோசித்துப்பார் மைத்ரேயி, உன்னால் நர்மதா, ஆயிஷா போல் தொண்டு செய்யமுடியுமா என்று. அவர் களெல்லாம் அவர்களுடைய தனிவாழ்க்கையைப் பற்றிப் பிறர் என்ன நினைப்பார்கள் என்று கூசமாட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே சமுதாயத்தின் அதிர்ஷ்டமற்ற அங்கங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று பொதுத் தொண்டில் ஈடுபடவில்லை. பொதுத்தொண்டிலோ அரசியலிலோ ஈடுபடுபவர்கள் அப்பழுக்கில்லாத அந்தரங்க சுத்தம் உடையவர்களாய், இரட்டை வாழ்க்கை நடத்த இயலா தவர்களாய் இருக்கவேண்டும். அப்படி இல்லாததாலேயே இன்று பொது வாழ்வும் அரசியலும் கறை பிடித்துக் கிடக்கிறது...”

ஞானம் பேசுவது மைத்ரேயிக்கு விசித்திரமாகவே இருக்கிறது.

இரட்டை வாழ்க்கை நடத்த இயலாதவள் பொது வாழ்வுக்கே போகக் கூடாது என்று ஞானம் கருதுகிறாளா?

ஆனால் ஞானத்தை, பெரிதும் அவள் மதிக்கும் அந்தத் தாயை அவளால் கருத்துவேற்றுமை கொண்டு எதிராளியாக்கிக் கொள்ள முடியாது. “உங்கள் யோசனையை நான் மறுக்கவில்லை அக்கா. ஆனால் கல்யாணமென்று வேறு யாரையும் ஒப்புக் கொள்ளுவது எனக்கு ஒப்புக் கொள்ளக் கூடியதாக இப்போதைக்குப் படவில்லை..”

“உன் மனசுக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடிய தொன்றையும் நான் ஒரு நாளும் வற்புறுத்த மாட்டேன். நீ சுதந்திரமாகச் சிந்தனை செய்து முடிவுக்கு வர வேண்டும். உனக்கு யோசனைதான் நான் சொல்கிறேன்...”

மறுநாள் காலையில் ஞானம் அலுவலகத்துக்குச் சென்ற பின்னரே, மைத்ரேயி மெதுவாக வெளிக் கிளம்புகிறாள். ராமசேஷன் வீட்டில்தான் சாவி கொடுப்பது வழக்கம். வாயிலில் கால் வைக்கும் போதே தயக்கமாக இருக்கிறது. முன்னறைச் சாய்வு நாற்காலியில் இருந்த முரளி அவளைக் கண்டதும் எழுந்திருக்கிறான்.

“...ஒன்றுமில்லை, சாவி...”

அவள் வாயிலிலேயே நிற்கிறாள். அவன் வெளியே வந்து சாவியை வாங்கிக் கொள்ளு முன் மிக மெதுவான குரலில், “...உங்களோடு கொஞ்சம் பேச விரும்புகிறேன். எப்போது செளகரியப்படும்?” என்று கேட்கிறான்.

ஓர் கணம் வெளிக்குப் புலப்படாத பரபரப்பு அவளை ஆட்கொள்கிறது.

“என்னோடா?”

“ஆமாம். உங்களுக்கு இன்று மாலையில் வசதி இருக்குமானால் சொல்லுங்கள்...”

எங்கேனும் மாலையில் சந்தித்து விட்டு, இருட்டிய பிறகு திரும்புவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

“நீங்கள், இப்போதே என்னுடன் வந்து பேசலாமே? நான் லைப்ரரிக்குத்தான் போகிறேன்...”

மூடி மறைத்த சல்லாத் துணிக்கப்பாலுள்ள வெளிச்சம் புலப்படுவது போல் அவளுக்கு அவன் எதைப் பற்றிப் பேசுவான் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

“ஒரு நிமிஷம். நீங்கள் மெள்ள நடந்துகொண்டிருங்கள். நான் பஸ் ஸ்டாப்புக்கு வந்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறான்.

மைத்ரேயியின் நடை மிக மெதுவாக நீண்டு செல்கிறது. பெரிய சாலையில் பஸ் நிறுத்தத்துக்குச் செல்லும் வழியில் மைதானத்தைக் கடந்து அவள் சாலையை எட்டுமுன் முரளி அவளை நெருங்கி வருகிறான்.

அவன் புன்னகை செய்கிறான். அவளும் சிரிக்கிறாள். அவன் சிரிப்பு மிக இயல்பாக இருக்கிறது. செயற்கையில்லை.

அவளுடன் கல்லூரியில் படித்த ருக்மணியின் தந்தை ஒரு இராணுவ டாக்டர். அவர்கள் எழும்பூரில் ஓர் அழகிய வீட்டில் இருந்தார்கள். ருக்மணி பார்வையை இழந்த பெண். பிரெய்ல் எழுத்துக்களின் உதவியாலேயே அவள் படித்தாள். அவள் கல்லூரிக்கு வராத நாட்களில் மைத்ரேயி தவறாமல் சென்று பாடங்களைக் கூறி விளக்குவாள்.

“நீ ஏனம்மா இன்னிக்குக் காலேஜுக்கு வரலே ?” என்றால், “எங்கள் வீட்டில் இன்னிக்குத் தகராறுடி. எனக்கு மனசு சரியில்ல...’ என்று கூறுவாள்.

அவள்தான் முதல் குழந்தை. ஒரு கண் மட்டுமே சுமாராகத்தெரிவதுபோலிருக்கும். அவளுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருந்தனர். அவளுடைய தாய் மிக அழகாக இருப்பாள். உதட்டுச்சாயம், கையில்லா ரவிக்கை நாகரிகங்களுடன் அவள் தான் காரில் ருக்மணியைக் கல்லூரியில் கொண்டு வந்து விடுவாள். ருக்மணிக்கு அரசு தரும் சலுகைகள் அவள் முயற்சி செய்தே கிடைத்திருந்தது. ஒரு நாள் அவள் ருக்மணியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவளுடைய தந்தையைப் பார்க்க நேர்ந்தது. அவள் திடுக்கிட்டாற்போல் நின்றாள். கோடுகள் போட்டதோர் இரவு உடையில் வழுக்கைத் தலையும் பிதுங்கிவிடும் போன்ற கண்களும் தொங்கும் மீசையுமாகக் காட்சியளித்த அவருடைய அந்தத் தோற்றத்தை அவளாலேயே இன்னமும் மறக்க இயலவில்லை. அப்போதும் அவர் கையில் மதுப்புட்டியை வைத்திருந்தார். அவரை ருக்மணியின் தந்தையாக, அந்த அழகிய தாயின் கணவனாக அவளால் ஒப்ப முடியவில்லை. அவர் ஒரு டாக்டராகச் சேவை செய்தவராகக் கற்பனை செயதுகூடப் பார்க்க இயலவில்லை. அந்த ஆண்டு இறுதியிலே அவர் இறந்துவிட்டார். மைத்ரேயி அப்போது அவர்களுடைய வீட்டுக்குச் சென்றாள்.

“மதுவின் கொடுமைக்கு எங்கள் வாழ்வே ஒரு மாதிரி மைத்ரேயி, கண் பார்வையற்ற நான் ஒருவனைக் கல்யாணம் செய்து கொள்வதைப்பற்றிநினைக்கவே இயலாது. நீ மணம் செய்து கொள்ளுமுன் குடிப்பழக்கம் இல்லாதவனா என்று பார்...” என்றாள் ருக்மணி கண்ணீர் வழிய. அப்போது மைத்ரேயிக்குக் கள்ளின் புளித்த நெடியோடு ஒருநாள் தன்னைத் தழுவ வந்த தனராஜின் நினைவு வந்தது. அவன் போதை நெடியோடு வந்ததைக் கண்டபோது, விவரம் புரியாத பேதையாகவே இருந்த மைத்ரேயிக்கு அருவருப்பாக அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த டாக்டர் உயர்குலத்தில் பிறந்து பிணியகற்றும் தொழிலுக்குப் பயின்று பணியாற்றச் சென்றவர். எத்தனை ஆழமான அடிநிலை! அப்படி யும் அந்த மாளிகை எப்படிச் சரிந்தது?

அவர் இறந்த பிறகு ருக்மணியின் குடும்பம் மதுரைக்குப் பெயர்ந்துவிட்டது.

அருகே முரளி வந்ததை அவன் குரல் கேட்ட பின்னரே அவள் உணருகிறாள்.

“நீங்கள் தினம் இங்கிருந்து காலேஜுக்குப் போவது கஷ்டமாக இல்லை?”

“கஷ்டம் என்ன? எட்டேமுக்கால் பஸ்ஸைப் பிடித்தால் சரியான நேரத்துக்குப் போய்விடுவேன்!”

பஸ் வருகிறது. அவன் ஏறி முன்னே நடக்கிறான். அவள் கூடைக்காரப் பெண்களின் அருகே உட்காருகிறாள். பூக்கடைக்குச் சென்று பூ வாங்கித் தொடுத்து விற்றுத் தொழில் செய்பவர்கள் அந்தப் பெண்கள். உயர்ந்த சாதியில் பிறந்திராத அந்தப் பெண்கள், எந்தப் போலி கெளரவமும் பாராட்டிக்கொண்டு வீட்டினுள் பதுங்கியிருப்பதில்லை. சோறு தூக்குவதும் வீட்டு வேலை செய்வதும் முச்சந்தியில் ஆப்பம் போட்டு விற்பதும் அவர்களுக்குக் கெளரவக் குறை வல்ல. இம்மாதிரியான கூட்டத்தில் மதுரத்தைப் போன்ற பெண் ஒருத்திசுட இல்லை. மதுரம்மாமி வயிறு பிழைக்க, முடியை எடுக்கவேண்டி இருந்தது. வறுமையின் அடித் தளத்தில் உழன்றாலும் வாழ்வு முறையில் ஒரு போலியான கெளரவம் பாராட்டுவதைப் பெரிதாக நினைக்கின்றனர். ஆனால், அதே பொருள் தேவைக்குமேல் வரும்போது தேவைகளை மிகுதியாக்கிக் கொள்ள வாழ்வு முறையையே மாற்றிக் கொள்ள இந்த உயர்குடி மக்கள் தயங்கவில்லை.

பஸ் கண்டக்டர் அவளருகில் வந்து அந்தப் பூக்காரப் பெண்களிடம் சில்லறை வாங்குகிறான். ஆனால் அவள் சில்லறையுடன் காத்திருந்தும் அவன் சீட்டுக் கொடுக்க வில்லை. அவளாகவே ‘டிக்கெட்’என்று கேட்கும்போது, அவன் அலட்சியமாக மேலே செல்கிறான். அப்போதுதான் முரளி அவளுக்கும் சேர்த்து வாங்கியது புரிகிறது.

அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் எதற்காக அவளுக்குச் சீட்டு வாங்கவேண்டும்? ஒரு பெண்ணை விடத்தான் உயர்ந்தவன் என்ற உணர்வு எல்லா ஆண்களுக்கும் எப்போதும் இருக்கும் போலும்! இந்தக் கண்டக்டர் அவளை நன்றாக அறிந்தவன், ஒரு மாதிரிச் சிரித்துக்கொண்டு அவளுக்குப் பதில் சொல்லாமலே செல் கிறான். அதிகப் பிரசங்கித்தனம் என்று மைத்ரேயிக்குக் கோபம் வருகிறது. பஸ்ஸிலிருந்து அவள் இறங்குவதைப் பார்த்துவிட்டு அவனும் இறங்குகிறான். நடைபாதையில் நடக்கும்போது அவள் முன்னதாக விடுவிடென்று நடக்கிறாள். அவன் நிதானமாகவே பின் தொடர்கிறான். ‘ஆர்ட்காலரி’ வாயிலில் அவள் நுழையும்போது அவனும் வருகிறான். இதமான வெய் யிலும் அமைதியான சூழலும் பசுமை விரிக்கும் புற்றரையும் அவளுடைய அமைதியின்மைக்கு ஆறுதலளிக்கின்றன.

“இந்த இடம் உண்மையாக வெளியிலுள்ள பரபரப்புக்கு மாற்றாக இருக்கிறது. புற்றரையில் இப்படி உட்காரலாமா?...” என்று கேட்கிறான் அவன்.

அவள் நெற்றி வியர்வையைத் துடைத்து இறுக்கத்தைச் சமாளித்துக் கொண்டு மெள்ளச் சிரிக்கிறாள்.

இருவரும் அமருகின்றனர். பேச்சை எப்படித் தொடங்குவது என்று புரியாதுபோல் மெளனமாக இருக்கின்றனர்.

“...நேற்று நான் அங்கே வந்தது. நீங்கள் ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.”

“ராமசேஷன் சொன்னாராம். நல்ல பையன், நல்ல பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு அழைத்து வருகிறேன் என்றாராம். அந்த நல்ல பையனுக்குப் பெற்றவர் இருக்கையில்இவர் எதற்கு முந்திரிக்கொட்டையாக வருகிறார் என்று நினைத்தேன்.” அவன் சிரிக்கவில்லை. “பெற்றவர்கள் இனிமேல் அவன் வாழ்க்கையில் தலையிடமாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். ஏனென்றால், அவன் அவர்கள் பார்த்து, சீர், வரதட்சிணை வகையறாவெல்லாம் வாங்கிக் கொண்டு கலியாணம் செய்துவைத்த பணக்காரப் பெண், அவனுடன் நான்கு நாள் கூட வாழவில்லை. அவனை நிராகரித்து, மணவிலக்கே வாங்கிக்கொண்டு அமெரிக்காவுக்குப் படிக்கப் போய்விட்டாள் என்று தெரியும்...”

“ஓ..? அதானே பார்த்தேன்...?” என்று மைத்ரேயி கலகல வென்று சிரிக்கிறாள். சிரிப்பு பெரிதாக வலுக்கிறது.

“அதனால்தானா? அதே மட்டத்தில் இருப்பவள் தேவலை என்று நினைத்திருப்பீர்கள்...”

கேலியும் கிண்டலும் சிரிப்புமாக அவள் மொழிந்தது அவனுடைய மனசை நோகச் செய்கிறது என்பதை மைத்ரேயி அவன் முகத்தைப் பார்த்து உடனே புரிந்துகொள்கிறாள்.

“அதில் என்ன தவறு, மைத்ரேயி? ஒரு பிரும்மசாரி வாழ்வைத் துய்மையாக வாழ்வேன் என்று சொல்லமுடியாத உண்மையை ஒப்புக்கொள்வது தவறா? எனக்கிசைந்த பெண்ணை மணக்க விரும்பக் கூடாதா? உங்களை நான் கட்டுப்படுத்தவில்லை; வற்புறுத்தவில்லை. உங்கள் முன் ஒரு ஆலோசனையை வைக்கிறேன். நீங்கள் அதைப் பரிசீலனை செய்யுங்கள். ஒப்பினால் மேற்கொண்டு தீர்மானம் செய்யலாம் இல்லையேல் விட்டுவிடலாம்.”

மைத்ரேயி சிறிதுநேரம் பேசவில்லை.

ஒரு பிரம்மசாரி வாழ்வைத் துய்மையாக வாழ்வேன் என்று சொல்லமுடியாத உண்மையை அவன் ஒப்புக் கொள்கிறான். அப்படி, ஒரு தூய வாழ்வை வாழமுடியாத நான் என்று அவளும் ஒப்புக்கொள்வாளா?

நினைக்கவே கூச்சமாக இருக்கிறது.

ஞானம்மா ஒப்புக்கொள்ள வேண்டும் என்று விரும்பு கிறாள். அவளுக்கு சீரான பாதையில் ஏதோ இடையூறு நேர்ந்தாற்போல் கோபம் வருகிறது. ஒருமுறை தன்னை இழந்து தன் வாழ்வைக் கறையாக்கிக் கொண்ட அவள் மீண்டும் ஒரு ஆணை நெருங்கித் தன்னை இழப்பதா?

பல சமயங்களில் அவளுக்குத் தன் தனிமையில் அச்சம் தோன்றியதுண்டு. அன்று ராஜா முன் பகுதியில் வண்டி யோட்டியின் முன் அமராமல் பக்கத்தில் அமர்ந்தபோது அவளுக்கு அச்சம் தோன்றியது. சரேலென்று தன்கை மீது அவன் கை பட்டுவிடுமோ என்ற கற்பனை தோன்றித் தோன்றி அவளை அச்சுறுத்தியது.

“யோசனை செய்ய நீங்கள் நிறைய அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். என் உள் மனசுக்கு, உங்களை என்னால் மகிழ்விக்க முடியும், நீங்கள் எனக்கு இன்றியமையாதவராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது. இன்னொன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு ராணுவக் கட்டுப்பாட்டு வாழ்க்கையில், மற்றவர் வாழ்க்கையில் நேரமுடியாத பல நிகழ்ச்சிகள் நேர வாய்ப்பு உண்டு. மிதமிஞ்சும் குடிப்பழக்கத்தினின்று என்னைக் காப்பாற்ற, கடமையிலிருந்து வழுவாத, நாணயமுள்ள ஒரு நல்ல சேவையாளனாக என்னை நிலைநிறுத்த உறுதுணையாக எனக்கு ஒரு மனைவி வேண்டும். அந்தப் பொறுப்பை உங்களால் ஏற்க முடியும் என்று நான் நம்புகிறேன்.”

இந்தத் திறந்த மொழிகள் அவளைப் பிணிக்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் புற அளவில் ஒருவரையொருவர் நிர்வாணமாகத் தெரிந்துகொள்ளு முன்பு, அக அளவில் வேடங்களைக் களைந்துவிடும்போது அந்தப் பிணைப்பு பரிசுத்தமாகத்தான் இருக்க முடியும் என்பதை மைத்ரேயி புதிய அனுபவமாக உணருகிறாள். முரளியிடமிருந்து இத்தகைய வெட்ட வெளிச்சமான பேச்சை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘முன்பே எனக்கு உன் வடிவம் உள்ளத்தில் பதிந்துவிட்டது, காதல், ஊதல்’ என்று ஏதேனும் பிதற்றுவான் என்றே அவள் எதிர்பார்த்திருந்தாள்.

இப்போது தன்னைப்பற்றி, ஞானம்மாளிடம் ஒருநாள் கூறியதுபோல், தன் வாழ்க்கை அத்தியாயங்களை ஒளியாமலே அவனிடம் கூறவேண்டியது அவசியமாகத் தோன்றுகிறது.

தான் தன் பிறந்த வீட்டில் வயசு வருவதற்கு முன்னே வயது வந்த பெண்ணாக ஒரு ஆணின் கண்களில் பட்டாலே குடிமுழுகிப் போகும் என்ற அச்சத்தில் வளர்ந்து துணிந்து காதல் கொண்டு தனராஜின் ஆசை வலையில் வீழ்ந்து நாலு மாசம் வாழ்க்கை நடத்தியதையும், கட்சிப் பாசறையில் தங்கிய போது அம்மணி அம்மாள், அவர்களுடைய ஒழுக்க சீலையைக் கிழித்து உள் நடப்பைக் காட்டியதும் அஞ்சி ஓடி வந்து விடுதியில் அடைக்கலம் புகுந்து, பின்னர் ஞானம்மாவின் சோதரியாக மறுமலர்ச்சி பெற்ற விவரங்கள் அனைத்தையும் தெரிவிக்கிறாள். பதினொன்றரை மணியளவில் சந்திக்க வந்த அவர்களுக்குப் பிற்பகல் மணி இரண்டடித்ததுகூடத் தெரியவில்லை.

“காதல் ஊதல் என்பதிலெல்லாம் எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை கிடையாது. உடலளவில் உள்ள ஓர் வேட்கைக்குப் பூப்போட்ட போர்வை போடும் சொல் அது என்பது என் கருத்து. ஆனாலும் இன்னொருவரை மணந்து கொண்டு வாழ்க்கை நடத்துவதைப்பற்றி என்னால் எண்ணிப் பார்க்கக் கூட இயலவில்லை. ஏற்கனவே கறைபட்டுவிட்ட என் வாழ்வில் திருமணம் என்று ஒரு சந்தர்ப்பம் வரும் என்பதை நான் கனவில் கூட நினைத்ததில்லை. அதனாலேயே ‘சமுதாய சீர்திருத்தம், அடிநிலை மக்களின் பிரச்சனைகள் என்று என் வாழ்க்கையை ஒரு துறையில் ஒதுக்கிப் பயனுள்ளதாக்கிக் கொள்வதைப் பற்றியே சிந்தித்திருக்கிறேன். இது நான் சற்றும் எதிர்பார்த்திராத திருப்புமுனை...”

மைத்ரேயி முதலில் அவனை மற்ற ஆடவரை நோக்கிப் பேசுவது போலவே பேசினாள். ஆனால் கண்ணுக்குப் புலப்படாத போர்வைகளைக் களைந்தபின், அவனை நிமிர்ந்து நோக்கக் கூடக் கூச்சமாக இருக்கிறது.

“அப்படியானால் உங்கள் பிராமணத்துவம் உங்களைத் தடுக்கிறது...”

மைத்ரேயி துணுக்குற்று நிமிர்ந்து நோக்குகிறாள். “அந்தச் சொல்லையே நான் வெறுக்கிறேன். என்னிடம் பொய்யாக ஆசாரம் பார்ப்பதும் கோயிலுக்குப் போவதும் போன்ற வழக்கங்கள் ஒன்றுகூடக் கிடையாது. யாரேனும் என்னை ‘ஆர் யூ எ பிராமின் என்று கேட்டாலே கூசிப் போகிறேன்...”

“ஓ..நான்...ஐ டோன்ட் மீன் தட். பிராமணத்துவம் என்பது என்ன? மனிதத்துவத்தின் ஒர் உயர்ந்ததன்மை. உயர் ஒழுக்கத்தினால்தான் அதைப் பெற இயலும் என்று நான் நினைக்கிறேன். பிறப்பினால் மட்டுமல்ல; அந்தப் பொருளில் நான் சொன்னேன். நீங்கள் ஒருமுறை கன்னிமையை இழந்ததை அதனால்தான் ஒரு பெரிய தவறாகக் கருதுகிறீர்கள்.”

அது உண்மைதான் என்று அவளுடைய உள்ளம் ஆமோதிக்கிறது. தான் ஒரு கன்னியாக இருந்திருந்தால் இந்த முரளியின் எண்ணத்துக்கு அவள் தலை தாழ்த்தியிருப்பாளாக இருக்கும். ஆனால் அவனும் ஒரு பெண்ணை மணந்து கசப்பான அநுபவங்களுக்குட் படாமலிருந்திருந்தால் இத்தகைய சந்தர்ப்பத்தை இவனே விரும்பியிருப்பானா..?

“நீங்கள் அந்தப் பழைய கணவர் உங்களுக்கு முறையாக விலக்குக் கொடுக்காததனால் இப்படிச் செயவது முறையல்ல என்றோ, பாவம் என்றோ கருதுகிறீர்களானால் சொல்லுங்கள். என்றேனும் நீங்கள் இணைந்து வாழக்கூடும் என்ற சந்தர்ப்பத்துக்குக் காத்திருப்பதானால் நான் என் எண்ணத்தைக் கூறியதையே தவறாக நினைக்கிறேன்...”

“அந்த நிலை இங்கு இல்லை. அவருடன் நான் மறுபடி இணைந்து வாழ்வேன் என்பதை எப்படி என்னால் கற்பனை செய்துபார்க்க இயலவில்லையோ, அப்படி நான் மறுமணம் செய்துகொண்டு வாழ்வதைப் பற்றியும் கற்பனை செய்யக் கூட மனம் துணியவில்லை. ஒருபுறம் பாசி மூடிக் கிடந்த குட்டையை நீங்கள் கிளறிவிட்டிருக்கிறீர்கள். குழப்பமாக இருக்கிறது.”

‘நீங்கள் யோசனை செய்யுங்கள். பெண்மையைத் தாழ்வாகக் கருதுவதை நான் வெறுப்பவன். ஒருத்தி என்னை அவமதித்துவிட்டுப் போன பிறகுகுட பெண்மையை நான் மதித்துப் போற்றவே விரும்புகிறேன். ஒழுங்கற்ற ஓர் வாழ்வு எனக்குக் கட்டாயமாக வருமானாலும் கூட, பெண்மை காலடியில் மிதிபடுவதை நான் ஒப்பமாட்டேன். உங்கள் இசைவுக்கு அல்லது மறுப்புக்கு நான் காத்திருப்பேன்.”

அவள் முகம் சிவந்து போகிறது.

வெகுநேரம் அவர்கள் பேசவில்லை.

சரேலென்று சேலையைத் தட்டிக்கொண்டு அவள் எழுந்திருக்கிறாள்.

“ரொம்ப நேரமாகிவிட்டது.”

கைக் கடியாரத்தில் கண்கள் பதிகின்றன.

இருவரும் மெளனமாக நடந்து வருகின்றனர்.

“நல்லது, பிறகு பார்க்கலாம்..” என்று புன்னகையுடன் கூறிவிட்டு அவள் விரைந்து திரும்பி நடக்கிறாள்.

மைத்ரேயிக்கு நூலகத்துள் நுழையும்போது மனத் தெளிவு இல்லை. புத்தகங்களைப் பிரித்துப் பார்க்கக்கூடப் பொருந்தவில்லை. கையில் அகப்பட்ட புத்தகங்களை எடுத்துக் கொண்டு அவள் வீடு திரும்பப் பஸ்ஸைப் பிடிக்கிறாள். மனசுக்கு உவப்பான நிகழ்ச்சிகளை நினைத்தாலும் மனம் மகிழ்ச்சியிலும் திளைக்க முடியாததொரு பளுவைச் சுமந்து கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

கல்யாணமா? அவளுக்கா? சீ!

ஏன்? உயர்ந்த லட்சியம் என்று சொல்லிக்கொண்டு சந்தர்ப்பங்களுக்கு இரையாகாமல் நிற்பதைத்தானே நீ மதிக்கிறாய்? உண்மையில் தனராஜை மணந்தபின் அவன் உயர்ந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்காதவன் என்ற காரணமே உன்னை வெறுக்கச் செய்தது. இப்போது உயர்ந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவே உன்னை மணக்க விரும்புகிறேன் என்று முரளி கூறுகிறான். இவனை உன் உள்ளம் மதிக்கிறது. ஆனால் ஏன் சீ! கல்யாணமா என்று ஏன் மறுக்கிறாய்,

‘ஏற்கெனவே ஒருவனுடன் ஒடிப்போய் அவனுடனும் ஒத்துவாழத் துணிவில்லாதவளாக ஓடிவந்தாள். இப்போது இன்னொருவனைப் பிடித்துக் கொண்டாள் என்று மேல் நோக்காகப் பார்க்கும் உலகம் பழிக்கும்? தனராஜே அறிந்தால் என்ன நினைப்பான் ?

வீட்டுக்கு அவள் திரும்பும் நேரத்தில் ஞானம் வீட்டிலிருக்க மாட்டாள் என்று எண்ணியிருப்பது பொய்யாகிறது.

வாயிலில் ஒரு கறுப்புக்கார் நிற்கிறது.

யாரோ வந்திருக்கிறார்கள். ஞானம் பேசும் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அவள் நேர்வாயிலில் நுழையாமல் தோட்டத்து வழியே சென்று பின்புறமாக நுழைகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_16&oldid=1115390" இலிருந்து மீள்விக்கப்பட்டது