ரோஜா இதழ்கள்/பகுதி 2

2

வள் கதவைச் சாத்துமுன் குறுகுறுத்த விழிகளுடன் லட்சுமி சிரித்துக்கொண்டு வருகிறாள். கையில் ஒரு பூவரசங் குச்சி. உருவோ வண்ணமோ தெரியாததொரு பாவாடை. வெற்று மேனி. எண்ணெய் காணாத முடியில் எப்போதோ போட்ட பின்னல். மூக்கிலே பொட்டுப்போல் ஒரு சிவப்பு மூக்குத்தி. பத்து வயசுக்கு மேலிருக்காது. பகல் நேரத்தில் அந்த இடத்தில் இரண்டாடுகளை மேய்த்துக் கொண்டு வரும் அச்சிறுமிதான் மைத்ரேயியின் தனிமையைப் போக்கும் சிநேகிதை. அவள் மைத்ரேயியை நட்புக் கொள்ள வந்தது இப்படித்தான். கொல்லை வாயிற்படியைப் பூவரசங் குச்சியினால் தட்டிக்கொண்டு நின்றாள்

“கொஞ்சம் தண்ணி வுடுறீம்களா? தாகமாயிருக்கு” தனிமையோடு புழுங்கிக்கொண்டிருந்த மைத்ரேயிக்கு அந்தக் குழந்தை முகத்தைக் கண்டதுமே மகிழ்ச்சியாக இருந்தது. கண்ணாடித் தம்ளரில் தண்ணீரை முகர்ந்துகொண்டு வந்தாள்.

“இந்தா...”

வாயருகில் கைகளை வைத்துக்கொண்டு குனிந்தாள் சிறுமி.

“எனக்கு விடத்தெரியாது. நீ வாங்கிக் குடியேன்”

“நான் தொடலாங்களா?”

“தொடலாம்...”

தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு அவள் தம்ளரைக் கல்லில் கவிழ்த்து வைத்தாள்.

“உன் பேரென்ன?”

“லட்சுமி...”

பிறகு அவள் கரண்டாபீசுக்குப் பின்னிருக்கும் சேரிக் குப்பத்திலிருந்து ஆடு மேய்க்க வருவதாகவும், அவளுடைய அண்ணன் தோல் கிடங்கில் வேலை செய்வதாகவும் குடும்ப விவாங்களைக் கூறினாள். லட்சுமி இரண்டாம் வகுப்புக்குப் போகுமுன்னே படிப்பை நிறுத்திவிட்டாள். அவளுக்கு இரண்டு அக்காள்மாரும் ஒரு தம்பியும் இருக்கின்றனர். ஒரு அக்கா மட்டும் எப்போதேனும் வயல் வேலைக்குப் போகிறாள். காலையில் நீராகாரம் குடித்துவிட்டு அவள் ஆடு மேய்க்க வருகிறாள். மாலையில் பெரியக்காள்தான் சோறாக்குவாள். கடலை உருண்டை வாங்கித் தின்ன அண்ணன் சம்பளம் வரும் நாளில் காசு கொடுப்பான். அம்மாவுக்குச் சீக்கு.

லட்சுமி இப்போது சிரித்துக்கொண்டு, “உங்க மாமனா அவுரு?” என்று கேட்கிறாள்.

“ஆமாம்... எப்படிக் கண்டுபிடிச்சே?”

“எனக்குத் தெரியும், தெரியும்...” என்று முகத்தில் குறும்பு மின்னத் தலையாட்டும் லட்சுமி, “உன்னைப் போலவே செழுப்பா இருக்கிறாரக்கா...” என்று கருத்துத் தெரிவிக்கிறாள்.

மைத்ரேயி சிரிக்கிறாள்.

“அக்கா, நீங்க ரொம்ப அதர்ஷ்டக்காரங்க, கன்னம் குழியிது.”

மைத்ரேயி பேசவில்லை.

“ஏனக்கா, நீங்க ஐயமாருங்கதானே?”

“இல்லியே?”

“போக்கா, நீ வெளயாடுறே, உன்னப் பாத்தாத்தான் தெரியிதே? ஐயமாருங்கன்னா செழுப்பா இருப்பாங்க, உன்னப்போல...”

“இல்லவே இல்லே. நீ பொய் சொல்லுறே. செவப்பும் கறுப்பும் எல்லாச் சாதியிலும் இருக்காங்க...”

“ஏங்க்கா? நீ முடிவச்சுருக்கிறார்னுதான் மாமனக் கட்டலியா?”

மைத்ரேயிக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வருகிறது.

“போடி வாயாடி, எங்கள்ள மாமனைக் கட்ட மாட்டாங்க!”

“கட்டமாட்டாங்க? மொறை மாமனிருந்தா வந்து கேட்டா கட்டியே ஆகணும். எங்காயா மொறை மாமனைக் கட்டல. அவரு வந்து இம்சை பண்ணாரு. அப்ப எங்கையா தோட்டத்திலே எளணி சீவிட்ருந்தாராம். அப்படியே அவரு தலையைச் சீவிட்டாராம். தம்பி பொறக்கலியாம் அப்ப. ஐயாவைப் போலீசு இட்டுகினு போயி செயில்ல போட்டுட்டு தாம். இன்னும் எட்டு வருஷம் இருக்கணுமாம்.”

“ஐயையோ?”

மைத்ரேயிக்கு எதிர்பாராமல் மிளகாயைக் கடித்து விட்டாற்போல் கண் பசைக்கிறது. மனிதனின் ஆசையும் மோகமும் குரூரங்களாக ஏறும்போது அவை நாசம் விளைவிக்கத் தயங்குவதில்லை என்ற உண்மையை நேரடியாகச் சந்தித்து விட்டாற் போலிருக்கிறது.

“எங்கையாவை அங்கே போய் அண்ணன்தான் பாத்திட்டு வரும்”.

“நீ போனதில்லையா?”

“போயிருக்கேன். முன்ன ஒருக்க அண்ணன் ரேக்ளா பந்தியத்துக்கு இட்டுப் போச்சி. நாங்கல்லாம் பஸ்ஸில் ஏறி ரயில் வண்டி எல்லாம் பார்த்தோம். அண்ணன் ரேக்ளா பந்தியத்தில் பஷ்டா வந்தது. அப்ப மாலை போட்டாங்க. மிட்டாயி, கடலை உருண்டை, ஐஸ்கிரீம்... இன்னும் என்னெல்லாமோ வாங்கித் துண்ணோம். அண்ணன் பத்து ரூபா செலவு பண்ணிச்சி.”

வாழ்க்கையின் இனிமைகள் வெட்டவெளியின் மொட்டைப் பனைகளினிடையே பசைத்துள்ள திட்டுக்களைப் போன்றவை. மைத்ரேயியும் அவள் பங்கில் இம்மாதிரி இனிய ஆசைகளைச் சிறுமிப் பருவத்தில் அனுபவித்தவள்தானே? திடீரென்று உள்ளே ஜிலேபியும் மிக்ஸ்சர் பொட்டலங்களும் நினைவுக்கு வருகின்றன.

“லட்சுமி, இரு, இத வர்றேன்.”

குறுஞ் சுவருக்கப்பால் தட்டில் சோறு நீத்து ஈக்கள் மொய்க்கின்றன. நாலைந்து சுண்டெலிகள் ஜாங்கிரியை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஓடுகின்றன.

காப்பித் தம்ளரின் மீது ஒரு காகிதத் துண்டை வைத்து முடியிருந்தாள்.

காகிதம் பறந்து ஆடை படர்ந்த திரவம் தெரிகிறது.

அதையும் எலி முகர்ந்திருக்குமோ?

சே! எத்தனை ஆசையுடன் ஜாங்கிரியை தின்ன வைத்திருந்தாள்?

இந்தப் பழைய பாழ்மனையில் அயர்ந்து மறந்தால் எலியும் ஈயும் கரையானும் ஆளையே தின்றுவிடும் போலிருக்கின்றன“

ஏமாற்றத்தில் கிளர்ந்த கோபத்தில் எலிகளையும் ஈக்களையும் திட்டிக் கொண்டு ஜாங்கிரியைத் தூக்கி வந்து கொள்ளையில் வீசுகிறாள்

“ஐயையோ? ஏனக்கா?”

கூரை இடிந்து உச்சிமீது விழுந்து விட்டாற்போன்ற அதிர்ச்சியில் பிதுங்கிய விழிகளுடன் லட்சுமி ஓடிச்சென்று அதைப் பொறுக்கி மண்ணைத் தட்டுகிறாள்.

“சீ, போட்டுடு, விஷம். எலி அஞ்சாறா முகர்ந்து பார்த்தது-”

சாணி வாரிவிட்டு கையைப் பாவாடையில் துடைத்துக் கொள்வதுபோல் ஜிலேபியைத் துடைக்கிறாள்.

“ஐயோ, அது வாணாம் லட்சுமி. விஷமாயிப் போனா.” அவள் கைப்பிடிக்கு எட்டாமல் ஓடிப்போய் அந்த இனிய பண்டத்தை வாயில் வைத்துச் சுவைக்கிறாள்.

“நல்லாயிருக்கு...!” இனிப்பைச் சுவைத்து மகிழ்ந்து தலையாட்டும்போது, ‘இத்தனை அருமையான பொருளை இந்த ஐயமாருங்கெல்லாம் வீசித்தான் எறிவாங்களா?’ என்றும் வியக்கிறாள்.

மைத்ரேயி கண்கொட்டவில்லை. எலி விஷம் லட்சுமியை ஒன்றும் செய்யாதா? ஆனால் அவர்களுடைய குடிசைகள் இந்த மனையைவிட மோசமாக இருக்குமாக இருக்கும். இனிமைகளைச் சுவைக்க ஆசைப்பட்டு ஆசைப்பட்டு, ஏமாந்த நினைவுகளெல்லாம் முட்டி மோதிக் கொண்டு வருகின்றன.

“மைத்ரேயி!” என்று அக்கா கொடுக்கும் குரலுக்கே நடுங்கிப் போகப் பழகியிருந்தாள். கரிக் கற்சட்டிகள் தேய்த்து அடுப்பு மெழுகி, சமையலுக்குக் கிணற்றுத் தண்ணீர் இழுத்து அக்காவுக்குப் புடவை பிழிந்து உலர்த்தி, சுமதியோ ரஞ்சிதமோ பிள்ளைப்பேற்றுக்கு வந்தால் முன் குழந்தையை சுமந்து, பழைய சோற்றையே இரண்டு நேரமும் சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் போனாலும் மைத்திரேயியின் வாழ்வில் வசந்தம் வந்ததும் எத்தனை எத்தனை ஆசைகள் இதயப் பூங்காவில் மலர்ந்தன?

“என்னடி, மூணு வேளையும் பவுடர்? போதும்!“ என்று அக்கா அதட்டினாலும் கண்ணாடியைக் கண்டால் அழகு பார்த்துக் கொள்ளத் தோன்றியது.

“இரட்டைப் பின்னல் கோரமெல்லாம் வேண்டாம்!” என்று இறுக வாரி அக்கா பின்னும்போது அவளுக்குப் பிடிக்கவேயில்லை. அவள் கண்காணாமல் பின்னலை அவிழ்த்துத் தளர்த்தியாகப் பின்னிக் கொள்வாள். கோணல் வகிடு வலப்புறம் இடப்புறம், இரட்டைப்பின்னல், அரைப் பின்னல் கொண்டை எல்லாம் போட்டுப் பார்த்துக் கொள்வாள். தன்னுடைய அடர்ந்த நீண்ட முடியைக் குறித்துத் தனியாகப் பெருமிதம் கொள்வாள். முழங்கைவரை ரவிக்கை, கண்களில் மை, நெற்றியில் பலவகைப் பொட்டுக்கள், செவிகளில் விதவிதமான அணிகள் என்று பள்ளிக்கு வரும் நளினியைக் கண்டு அவளைப் போன்ற பேறு தனக்கில்லையே என்று நெடுமூச்செறிந்திருக்கிறாள். ஒரு தடவை சுமதி தான் வாங்கிக் கொண்ட வாயில் சேலையை “மைத்தி, நீ உடுத்திக் கொள். நாளைக்கு நான் கட்டிக் கொள்கிறேன்” என்று சொல்லிக் கொடுத்தபோது பெரியக்காவுக்கு என்ன கோபம் வந்தது! பெரியக்காவைச் சொல்லப் போனால் அவளுடைய சகோதரி என்றுகூட சொல்ல மாட்டார்கள். குட்டை, நல்ல கறுப்பு. அவள் தாயைக் கொண்டு தனியாக இருந்தாள். மாமா சொன்னாற்போல் அவர்கள் நால்வரிலும் கடைக் குட்டியான அவளே பேரழகி. பெரியக்காவுக்குத் தன் அழகில் பொறாமை என்று உள்ளூரக் கொதித்துக் கொதித்து அடங்கிய அவள், பள்ளி இறுதிப் படியில் நிற்கும்போதுதான் படி இடறி...

சே--! அப்போது எப்படி இருந்தது?

வகுப்பில் அவன் முகமும் சிரிப்பும்தான் கண்முன் நிற்கும்.

அரையாண்டுத் தேர்வின் கணக்குத்தாளைப் பார்த்துக் சிந்தையில் அந்தச் சொற்களைச் சுழலவிட்டுக் கொண்டிருந்தாள். “அன்பே மகாபலிபுரம் சாலையில் வலப்புற சாமியார் குன்றுக்குப் பின் காத்திருக்கிறேன்: தனராஜ்!”

வீட்டு எல்லையைவிட்டுப் பள்ளிக்கூடத்தைத் தவிர எங்கும் சென்றறிந்திராத அவள் அந்தக் குன்றின் பின் அவனைத் தனியே ஏழெட்டு நாட்கள் சந்திக்கச் சென்றாள். அது ஒரு காய்ச்சல் வேகம் போல். எப்படி இருந்தது? காதல் என்று யாருக்குமே கிடைக்காத பேறு தனக்குக் கிடைத்து விட்ட இறுமாப்பில் குன்றேறி நின்றதாக எண்ணினாள். வேலியை மீறுவது ஒரு வீரமிக்க விளையாட்டு என்று அவன் சொல்லிக் கொடுத்த துணிவின் தெம்பில் மிதந்தாள். பள்ளிக்குச் செல்லாமல் மாலைப்பொழுதுகளை அவனுடன் கழித்து விட்டு வீடு திரும்பும்போது அச்சமும் திகிலும் அடி மனசில் ஒளிந்திருந்தாலும் புதிய இன்பம் கண்ட அனுபவத்தில் அந்த அச்சமும் திகிலும்கூட ஒரு இனிமையோடு கூடிய உணர்வுகளாகவே தோன்றின. அடுக்கடுக்காக அவன் காதல் வசனங்களைப் பொழிவான். செவியருகில் வந்து அவள் நெஞ்சம் கிளரும் பாடல்களைப் பாடுவான். அவள் அழகைப் புகழ்ந்து புகழ்ந்து போற்றுவான். ஒரு பேதைப் பெண் வசமாக வேறென்ன வேண்டும்?

“நாம இப்படியே ஓடிப்போய்க் கல்யாணம் செய்து கொள்வோம்...”

“நான் இப்பவே உன்னை...” அவளுக்குப் பேச இடைவெளி அற்றுப் போகும்.

பெரிய நகரமாக இருந்தால் ஒரு மூலையில் நடக்கும் செய்தி இன்னொரு மூலைக்குத் தெரியாது.

தோப்பு பங்களாப் பெண் நாலைந்து நாட்களாகப் பரிட்சையும் எழுதவில்லை. பிறகு பள்ளிக்கும் வரவில்லை என்ற செய்தி அக்காவுக்கும் அத்திம்பேருக்கும் எத்தனை நாட்கள் தெரியாமலிருக்க முடியும்?

அவள் காதலனோடு மகாபலிபுரம் பஸ்ஸில் ஏறிச் சென்றிருந்த அன்றுதான் உமா, அந்த ஒதுக்குப்புறத் தோப்பு வீட்டைத் தேடி வந்து குட்டை உடைத்திருக்கிறாள்.

“மாமி மைத்திரேயிக்கு உடம்பு சுகமில்லையா? அவள் ஸ்கூலுக்கே ஏன் வரலே?” என்று கேட்டாளாம்.

“வரலியா? வழக்கம்போல் தினம்தானே போயிட்டு வரா? இன்னிக்குக்கூடக் காலமேயே போயிட்டாளே?” என்று அக்கா கூறியிருக்கிறாள்.

“ஐயோ, அவ நிஜமா ஸ்கூலுக்கே வரதில்லே. வந்தாலும் மூணுமணிக்கே போயிடறா. சினிமாக் கொட்டாயில் மத்தியானம் ஒத்தன்கூட இருந்தாளாம்.”

அக்கா பொறுக்காமல், “சீ! வாயை மூடு! யாரைப் பார்த்துப் பேசறே நீ?” என்று கத்தினாளாம்.

“மாமி, நீங்க விசாரிச்சுப் பாருங்கோ, அவன் எப்பவும் நயினார்சந்து டீக்கடையில் உக்காந்திருப்பான். சுருட்டை சுருட்டையா கிராப்பு வாரிண்டு, சில்க் சட்டை, மைனர் செயின் போட்டுண்டு அங்கேயே நின்று அவ வரப்பல்லாம் சிரிச்சு நானே பார்த்திருக்கிறேன். ஆலமரத்துக்கிளின்னு வந்த சினிமாவில் அப்படியே ஒரு பாட்டு வரதே, அதை அவன் தான் எழுதினானாம். கவிஞன் தனராஜ். இங்கே வந்து ஏதோ படத்துக்குப் பாட்டெழுத டீக்கடைக்குப் பின்னால ரூம் வச்சிண்டிருக்கானாம்...”

இதெல்லாம் அவளுக்கு அன்று வரும்போதே தெரிந்து விட்டது. கடைவீதியில் மதுரம் மாமி பார்த்துவிட்டுச் சொன்னாள். “ஏண்டி பெண்ணே, அசட்டுத்தனமாக நடந்துக்கறே, உங்கக்கா கொன்னுடப் போறாளே?” என்று மனமிரங்கினாள்.

அவளுக்கு அப்போது ஒன்றுமே புரியவில்லை. அவள் பெரிய வாயிலைக் கடந்து தோப்புக்குள் நடந்து வரும்போதே அக்கா கிணற்றடியில் அவளைக் கண்டு விட்டாள்.

“ஏண்டி, மானங்கெட்டவளே! எங்கேடி போயிட்டு வரே?” என்று கையிலிருந்த விறகுக் குச்சியினால் அடிக்க வந்தாள்.

மைத்ரேயி ஓடிச் சென்று மாமரத்தின் கீழ் நின்றாள்.

“என்னை எதுக்கு அடிக்கவறே? நான் ஒண்ணும் இந்த விட்டில் இருக்கப் போறதில்லே” என்றாள் அசையாமல்.

“ஐயையோ! குடிமுழுகிப் போயிடுத்தே? இங்கே சித்த வந்து இந்தச் சிறுக்கி சொல்றதைக் கேளுங்கோ...!” என்று கூக்குரலிட்டாள் அக்கா. பிறகு கணவனும் மனைவியுமாக அவளுக்கு வசை மாரி பொழிந்தார்கள்; காரித் துப்பினார்கள் காலடியில் மூட்டையை விட்டெறிந்து வெளியே துரத்து முன், “காதுத் திருகாணியைக் கழட்டி வச்சுட்டுப் போடி, கடன்காரி, உனக்கு ஒரு ஸ்நானம் பண்ணிடறேன் இப்பவே!” என்று கத்தினாள். ஆத்திரத்தோடு அவள் கால்சவரன் பெறாத அந்த மகிழம்பூத் திருகைக் கழற்றி மண்ணில் வீசி, காதலின் புனிதத்தை நிலைநாட்டுவதாகப் பெருமிதம் கொண்டாள்.

அவள் படித்த கதைகளில், காதலையும் தியாகத்தையும் வீரத்தையும் விளக்கும் சினிமாக்களில் வரும் கதாநாயகியாகத் தன்னை நினைத்துக் கொண்டாள். அந்த வாயிலை விட்டு வெளியேறி அவள் வந்தபோது, அவன் டீக்கடை வாயிலில்தான் நின்றான். அவளை உடனே தன் அறைக்குள் அழைத்துச் சென்று நெஞ்சு கூழாக அணைத்துக் கொண்டான். பதினாறு வருஷம் பழகிய வீட்டை ஒரு நொடியில் உதறுவதும், கையில் ஒரு காசு இன்றி வெளியிறங்குவதும் அந்த அரிய நேரத்துக்காகச் செய்த அற்பங்கள் என்று தோன்றியது.

“எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டு விரட்டியடிச் சிட்டாங்க... ?”

“போனாப் போறாங்க, உன்னை விட்டாங்களே. அன்பே, இந்த உலகு நமக்குச் சொந்தம்; நீயே விலை மதிப்பில்லாத சொத்து எனக்கு...” என்று அவளை இன்ப உலகுக்கு இட்டுச் சென்றான்.

நீக்குப் போக்கற்ற பெருவெளியில் இருவரும் அலைமேல் அலையாய் ஒன்றி அந்த விடுதலை நேரத்தைக் கொண்டாடினார்கள். பிறகு தெற்கிருந்து வந்த பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு தேன்நிலவுக்கு வரும் தம்பதியைப்போல் ஏறி வந்தார்கள். இரவு இந்திரா கபே வாயிலில் இறங்குகையில் மணி எட்டேமுக்கால்.

நல்ல குளிர்காலம். அவர்கள் அறையிலேயே ரவா லட்டும் வெங்காய பகோடாவும், மலைப்பழமும் பாலும் உண்டார்கள். இப்போது நினைக்க அதெல்லாம் கற்கண்டு கட்டியைச் சுவைத்தாற் போலில்லை. கொடங்குப் பள்ளத்தின் மேல் பரப்பி வைத்த வாழையும் கரும்புமாக இருக்கின்றன.

ஒரு வாரம் அவன் கைவிரல் மோதிரத்தை விற்று இன்பம் கொண்டாடியபின், இந்த மூலை வீட்டை யார் வகையிலோ தேடிப் பிடித்தான்.

“கஞ்சியும் கூழும்கூட நீங்க இருக்கிற இடத்தில எனக்கு சொர்க்கம்” என்றாள், அவள் அவன் தலையை மடியில் வைத்துக்கொண்டு. அவனும் பிளேயர்ஸ் ஸிகரெட்டிலிருந்து பீடிக்கும் டீக்கடைப் புரைக்கும் சரிந்தான். பிறகு நாள் தோறும் சென்னைப் படவுலகை நாடிப் போவதாகச் சொல்லிப் பஸ் ஏறிச் சென்றான்.

அவள் காத்துக் காத்து கண் பூத்தபின், சோர்ந்த முகத்தோடு வந்தான். மூன்று மாச கால வாழ்வில் ஒரு வாரம் தேனிலவு. பிறகு அடித்தளத்திலும் அடித்தளம். யார் யாரோ சிநேகிதர்கள் கடன் கொடுத்ததாகச் சொல்லித்தான் நாட்கள் கழிகின்றன. வறுமையும் பசியும் வயிற்றைக் கிண்ட மனித உறவின் ஈரங்களெல்லாம் வற்றிக் குழி பறிக்கையில் தனிமையில் அழுகையும் வருவதில்லை.

ஒருநாள் அவன், “எனக்குண்ணு சோறு வச்சிருக்கியா? வாணாங்கண்ணு, நீ துண்ணுக்க, ஒசந்தகொலத்துப் பொண்ணு, பட்னி கிடக்கிறியே?” என்று கொஞ்சிக் கொண்டு அருகில் வந்தபோது அவளுக்குப் பகீரென்றது.

ஏன் கண்கள் சிவந்திருக்கின்றன? குழற்கற்றை நெற்றியில் ஆட அவன் அருகே பேச வருகையில் நாக்கு ஏன் குழறுகிறது? வேர்த்துக் கொட்டுகிறது?

உண்ட சோறு செரிக்காமல் குடலை விட்டு வெளி வருகையில் நாம் ருசித்துத் தின்ற பொருள்களா இவை? என்ற அருவருப்பு உண்டானாற் போலிருக்கிறது.

“ஐயோ ஏங்க, குடிச்சுட்டா வந்திருக்கீங்க...!” என்று அடி வயிற்று நா எக்கிக்கொண்டு மேலண்ணத்தில் ஒட்ட, கதறவும் முடியாமல் கண்ணீர் விட்டாள்.

“ஆமாம் கண்ணு, நல்ல சரக்கா நம்ம தோஸ்த் வாங்கிக் குடுத்தாரு...”

“ஐயோ, மோசம் போனேனே நான்...” என்று விம்மினாள் மைத்ரேயி,

“அழுவாதே கண்ணு, அழுவாதே. உனக்கு சேலை ஜாக்கெட்டு, ரிப்பன் எல்லாம் வாங்கித் தருவேன். நீ ஒசந்த குலத்துப் பொண்ணாச்சே, எனக்குத் தெரியாதா?”

“போதும் வாயை மூடிக்கிங்க!”

“என் ராசாத்திக்குக் கோபம் வருது. கோச்சுக்காதேடி கண்ணாட்டி- பிதற்றிக் கொண்டே தூங்கிப் போனான்.

பொழுது விடியாமலிருந்து விடிந்தது. அவள் தேநீரை வைக்க எழுந்திருக்கவில்லை. சர்க்கரையில்லை; காசில்லை பாலுமில்லை.

கூரை முகட்டைப் பார்த்துக் கொண்டு கிடந்தாள். பசி. பசி வந்தால் பத்தும் பறந்து போகுமாம். காதல் மட்டும் இருக்குமா? சே! இந்த உடம்புச் சுகம் இவ்வளவு பெரிய வழுக்குப் பாறையா?

இவனைப் பார்க்கவும் இப்போது பிடிக்கவில்லையே? ஆனால் அவள் இங்கிருந்து தப்பி எங்கே, எப்படிப் போவாள்? தோற்றுப் போய் மீண்டும் அக்காவின் புகலிடத் துக்குப் போவதா?

சே! சுருக்கிட்டுச் கொண்டு மடியலாம். உத்தரத்தில் புடவையைக் கட்டி...

அவன் விழித்துக் கொண்டு அவள் முகத்தைத் திருப்புகிறான். அவள் தள்ளினாள்.

“கோச்சிட்டியா மைத்தி...?”

சட்டென்று நினைவு வந்தாற்போல் சட்டையின் உட் பையில் கைவிட்டான். இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்கள் வந்தன.

“இந்தா...”

“நீங்க இவ்வளவு மோசமாயிருப்பீங்கன்னு நான் நினைக்கலே” என்றாள் கண்ணீர் நிரம்பித் தளும்ப.

“என்னை மன்னிச்சிடு மைத்தி. என் உயிரே, என் ஒளியே என் வழிகாட்டியே, என்னை மன்னிச்சுடு. அந்தப் பனாதைப் பயல்கள் காசு தென்பட்டிச்சின்னா இப்படித் தான். சில சமயம் இந்தச் சினிமா உலகமே வேணாம். எங்கேனாலும் போயிடாலான்னுத் தோணும்...” உலகில் ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கேற்ற பிணிப்புக்கள் இருக்குமோ என்று மலைத்தாள்.

“எனக்கு வழியே இல்லீங்க வேறு...”

அவன், அவள் வாயைப் பொத்தினான்.

“அப்படிச் சொல்லக் கூடாது, நமக்கு நல்லகாலம் நிச்சயம் வரப்போகுது. இன்னிக்குப் பாரு, நான் வெளியே போகப் போறதில்லே. இந்திரா கபேயில் எடுப்புச் சாப்பாடு, ஸ்வீட், காரம், கூல்ட்ரிங், கதம்பம், ரோஜா, சினிமா...”

இவைதாம் வாழ்வு என்று அவன் சொன்னாற் போலிருந்தது.

இவையே வாழ்வென்று ஏறி ஒரு விநாடியில் வழுக்குப் பாறையில் சறுக்கி விழுவதும், திரும்பி அண்ணாந்து பார்த்து பசித்த வயிற்றை அமுக்கிக்கொள்வதுமான ஒரு...

“ஏங்க்கா, யோசனை பண்ணிட்டிருக்கீங்க?”

“ஹ்ம்... இல்லே லட்சுமி. இந்தா, காரப் பொட்டலம், நீ சாப்பிடு.”

“நீங்க ஒண்ணுமே சாப்பிடாம எனக்குக் குடுக்கிறீங்களே அக்கா?”

“எனக்குப் பசியே இல்லே லட்சுமி!”

“ஏங்க்கா?”

பசியே இல்லை என்றால் என்ன பொருள் என்று அவளுக்கு விளங்கவில்லை.

“நீ கொஞ்சம்னாலும் எடுத்திட்டு குடக்கா...”

இரத்த உறவின் பிணைப்புக்களை எல்லாம் விட்டுத் திசை புரியாத சந்தியில் நிற்கும் அவளுக்கு லட்சுமியை அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. சுமதியின் பெரிய பெண் சுதாவுக்கு உடல் முழுவதும் சிரங்காக இருக்கும். அவற்றுக்கு மருந்து போட்டுக் குளிப்பாட்டி, அலுக்காமல் பவுடர் போட்டு தூக்கிச் சுமப்பாள். எந்தக் குழந்தையும் அவளிடம் ஒட்டிக் கொள்ளும். முன்பு ஆறாவது படித்துக் கொண்டிருக்கையில் பெரிய விடுமுறைக்கு அவள் மாமாவின் ஊருக்குச் சென்றிருக்கிறாள். அங்கும் அந்த நட்டுவை அவள் எப்படித் தூக்கிச் சுமந்தாள்? “நீ ஊருக்குப் போயிட்டால் இந்தப் பிள்ளை ஏங்கிப் போயிடும் போலிருக்கே?” என்று மாமிகூடச் சொல்லி இருக்கிறாள்...

குழந்தைகளைப் பற்றிய சிந்தனை படர்கையில் இன்னொரு இனம் புரியும் திகில் அவளைக் கவ்விக் கொள்கிறது. அவள் தன்னுடைய கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருக்கும் சுதந்திர இறக்கைகளைப் பறிகொடுத்து விடுவாளோ?

அவன் எப்போதேனும் பத்து இருபது பணம் கொடுக்கும்போது எடுத்துக்கொண்டு இந்த பந்தத்திலிருந்து விடுபட்டு ஓடிவிடலாம்.

ஆனால். ஒரு எஸ்.எஸ்.எல்.ஸி பரிட்சைகூடத் தேர்ந்திராத அவளுக்கு யார் வேலை கொடுப்பார்கள்?

ஏதேனும் ஹோமில்...

மாமா சொன்ன லோகநாயகியின் நினைவு வருகிறது. அப்படி ‘சோஷியல் வொர்க்’ செய்யும் அம்மாளிடம் சென்று தன் கதையைச் சொல்லலாம். ஒரு டாக்டரிடம் எடுபிடியாக, ஒரு பணக்காரப் பெண்ணுக்குத் தோழியாக...

லோகநாயகியின் வீடு அவளுக்குத் தெரியாது. பட்டணத்துக்கு எப்போதோ கிறிஸ்துமஸ் சமயத்தில் அக்காவும் அத்திம்பேரும் அவளை வேடிக்கை பார்க்க அழைத்துச் சென்றதுதான்.

“அப்ப... நான் வாரேன் அக்கா! பொழுது சாஞ்சி போச்சி!”

“போறியா?”

லட்சுமி தலையை ஆட்டிவிட்டுக் கைப் பொட்டலத்துடன் போகிறாள். வீட்டுக்குச் சென்று அந்தக்கா குடுத்திச்சி என்று சொல்லித் தின்பாள்.

இரவு பரவும்போது விளக்கேற்றத் தோன்றவில்லை.

வாய் கசந்து வழிவது போலவும், அடிவயிற்றில் குமட்டு வது போலவும் பிரமை தோன்றுகிறது.

முடிவில்லாத இருள் குகைபோல் திகில்.

பாயை விரித்துக் கொண்டு படுக்கிறாள். கொசுக்கள் பாடுகின்றன. அண்மையில் கார் வரும் ஒலி கேட்கிறது.

சாலையிலிருந்து உள்ளே தள்ளியுள்ள அந்த வீட்டுப் பக்கம் காரா வருகிறது? கனவா? கதவைப் படாலென்று சாத்தும் ஓசை. கூசும் விளக்கொளி சுவரில் படிவதுபோல் பிரமை.

கதவைத் தட்டுகிறார்கள்.

யார்? ஒருவேளை அத்திம்பேர் காரில் வக்கீல் யாரயேனும் கூட்டிக்கொண்டு வந்திருப்பாரோ? அல்லது மாமாவோ ?

“மைத்தி ! மைத்தி!...”

அவன் குரல்தான். ஆவல்கள் பாம்பு வாணங்கள்போல் எழும்புகின்றன. சற்றுமுன் இருட்குகையில் செய்து கொண்ட தீர்மானங்களெல்லாம் அந்தக் குரலில் கரைந்து போகக் கதவைத் திறக்கிறாள்.

“விளக்கேத்தலே?”

“இதோ!”

அரிக்கேன் விளக்கு. அவன் இரவல் வாங்கி வந்தது தான். ஏற்றி வைக்கிறாள். அது மஞ்சளாக அழுது வடிஞ்சாலும், பருமனாக, குட்டையாக, பட்டைக் கடியாரச் சங்கிலி மோதிரங்கள், சில்க் சட்டை சென்ட் நெடியுடன் ஒருவர் நடையில் நிற்பதைக் காட்டிக் கொடுக்கிறது.

“கிளம்பு மைத்தி, இப்ப நீ வீட்டைக் காலி செய்யனும், நாம் இங்கேருந்து போறோம்” என்று அவன் பரபரக்கிறான்.

“எங்கேங்க? உங்களுக்கு சான்ஸ் கிடைச்சிருக்கா?” என்று காதோடு அவள் கேட்கிறாள்.

“பின்னே? ‘ஊட்டிக்குப் போகிறோம்’ படத்தில் நாலு பாட்டு. ஆயிரத்துக்கு, நானூறு அட்வான்ஸ் கையிலே” என்று உரக்கச் சொல்லிவிட்டு, “அண்ணாச்சி, இப்படி வாங்க” என்று அவரை உள்ளே அழைக்கிறான்.

“இவருதான் கண்ணபிரான்னு சொல்லுவேனே, அவர். என் குரு, அண்ணன், மாமன், எல்லாம் இவருதான். இதாங்க மைத்தி...” என்று சொல்லிவிட்டு “விழுந்து கும்பிடு” என்று ஜாடை செய்கிறான். முற்றத்தில் வந்து நிற்கும் அவர், “என்னப்பா இதெல்லாம், அது ஒசந்த குலத்துப் பொண்ணு... இங்கிதம் புரியாமல் விழுந்து கும்பிடுங்கிறியே?” என்று சிரிக்கிறார்.

சுருக்கென்று ஊசி தைத்தாலும் விழுந்து பணிகிறாள். பரபரவென்று துணிகளை மடித்து, ஒன்றிரண்டு தட்டு முட்டுக்களைக் கோணியில் போட்டுக் கட்டும்போது, அள்ளிச் சாப்பிட்டு மூச்சுத் திணறுவது போலிருக்கிறது.

சிந்தனைக்கு நேரமில்லை. பாய்களைக் கட்டி வண்டியில் போடுகிறான். பெட்டியைப் பூட்டி டிக்கியில் வைக்கிறான். அந்தக் கோணிச் சாமான்களை இந்திரா கபேக்காரரிடம் இறக்கிவிட வேண்டும்.

கண்ணபிரான் வண்டியோட்டிக்கு அருகில் அமர்ந்து கொள்கிறார். அவர்கள் இருவரும் பின்னே அமருகின்றனர். வண்டி ஒலியைப் பாய்ச்சிக் கொண்டு நகருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_2&oldid=1115335" இலிருந்து மீள்விக்கப்பட்டது