ரோஜா இதழ்கள்/பகுதி 23

23

வெளியிலிறங்கி மைதானம் கடக்கும் வரையிலும் அன்று தேர்தல் நாளென்று அவளுக்கு நினைவில்லை. பெரிய சாலையில் கட்சிச் சின்னங்களைத் தாங்கிக்கொண்டு வண்டி ஒன்று போகிறது. சாலையில் செல்லும் மனிதர்களிடையே, ஊர்திகளிடையே அந்தக் காலை நேரத்தில் வழக்கத்தில் இல்லாததொரு பரபரப்பு. பஸ் வருகிறது. அவள் தேனாம்பேட்டை மூலையில் வந்து இறங்கும் போது, வெறுங்கையுடன் போகக்கூடாது என்று தோன்றுகிறது. ஆனால் கடைகள் ஒன்றும் திறந்திருக்கவில்லை. மக்கள் வாக்குகளைப் பதிவுசெய்யச் சாரிசாரியாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். பண்டிபஜார் மார்க்கெட் வரை வந்த அவள் திறந்திருந்த ஒருபழக்கடையில் கொள்ளை விலைகொடுத்து பத்து ஆரஞ்சுப் பழங்களை வாங்கிப் பையிலும் பெட்டியிலும் வைத்துக் கொள்கிறாள்.

இனி மதுரம் கூறிய முகவரிக்கு அவள் போகவேண்டும். அந்தப் பக்கம் செல்லக்கூடிய பஸ் இருக்கிறதா என்று தெரியவில்லை. இரண்டொரு ரிக்ஷாக்காரர்களை அணுகி, “பழைய மாம்பலத்தில் சுப்பராயன் தெரு எங்கிருக்கிறது தெரியுமா?” என்று கேட்கிறாள். அவர்கள் சவாரி அழைத்துச் செல்லவும் மறுக்கின்றனர். கையில் பெட்டியுடன் அவளே கேட்டுக் கேட்டு அலைந்தபின் சுமார் ஒன்பதரை மணிக்கு அந்தச் சந்தை அடைகிறாள். “ஒரு தாவாரத்திலே குடி இருக்கேன், எதிர்க்க தகரக் கடைக்காரன். மதுரம்மாமின்னு கேட்டா சொல்லுவா...”

அந்தத் தெருவில் கால் வைக்க முடியவில்லை. அந்தச் சந்து வீடுகளுக்கு தெருவைத் தவிர வேறு கழிவிடம் கிடையாது என்று புரிகிறது.

ஒரு டப்பாக் காரும் இரண்டு ரிக்ஷாக்களும் அங்கு மக்களைத் திரட்டிச் செல்ல வந்திருக்கின்றன. குஞ்சு குழந்தைகள் தங்களுக்கு வண்டி சவாரி இல்லையே என்று ஏக்கத்துடன் வேடிக்கை பார்க்கின்றனர். நாலைந்து தேர்தல் ஏஜென்டுகள் ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து அழைக்க வந்திருக்கின்றனர்.

அவளுக்குத் தகரக்கடை எது என்று புலப்படவில்லை. கையில் பெட்டியுடன் அங்கே நின்றால் யாரேனும் தன்னை அடையாளம் கண்டுகொள்வரோ என்றஞ்சி, வண்டிகள் ஏஜெண்டுகள் தன்னைக் கடந்துசெல்லும்வரையிலும் அவள் ஓர்புறம் ஒதுங்கி நிற்கிறாள். பிறகு, “உதயசூரியனுக்கு ஜே! நட்சத்திர சின்ன முத்திரையிட்டு உங்கள் வாக்குகளை அளியுங்கள்!” என்று தேர்தல் விளையாட்டு விளையாடத் தொடங்கிய சிறுவர்களிடம் சென்று, “மதுரம் மாமி வீடு எது” என்று கேட்கிறாள்.

ஒரு பையன் மூக்குச் சளியைப் புறங்கையால் துடைத் துக் கொண்டு, “எந்த மதுரம் மாமி மடத்துக்குப் போய் பஜனை பண்ணுவாளே அந்த மாமியா? அவா வீடு பிருந்நாவன் தெருவிலன்னா இருக்கு ?” என்று கூறுகிறான்.

“இல்லே, இந்த மாமி முறுக்கு சீடை எல்லாம் போட்டு விப்பா, ஒரு சின்ன பொண்ணு கூட ஸ்கூலுக்குப் போறது.”

“யாரு, ரேவதியோட அம்மாவா? அவா இங்கில்லியே ? எல்லையம்மன் சந்துக்குள்ள ஒரு வீட்டுக்குப் போய்ட்டா...” என்று விவரம் கூறுகிறான்.

“எனக்கு அந்தச் சந்தை வந்து காட்டுறியா?”

“இதோ, இங்கேதான் இப்படிப் போங்கோ, தெரு முனையிலே குழாய் இருக்கும். தண்ணி இருக்காது.”

மனிதர் இத்தகைய இடங்களிலும் வாழமுடியும் என்று சகிப்புத் தன்மையின் அளவுகோலாக விளங்கும் சந்தில், ஒரு பொந்துக்குள் அவள் ரேவதியின் தாயின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கிறாள்.

இருட்டு, உள்ளிருந்து உயரமாக எலும்பும் தோலுமாக ஐயங்கார்ச் சேலைக்கட்டில் ஒரு கிழவி “யாரு?” என்று கேட்டு வருகிறாள்.

“அவாள்ளாம் ஓட்டுப் போடப் போயிட்டா. எனக்கு கார் வரும்னா. நீ யாரை தேடிண்டு வந்திருக்கேடியம்மா ?”

“மதுரம் மாமி, ரேவதின்னு ஒரு குழந்தை இருக்காளே அவம்மா.”

அந்த முதியவள் இதை நம்பாதவள்போல் மைத்ரேயியை ஏற இறங்கப் பார்க்கிறாள்.

“அவளுக்கு நீ உறவா என்ன ?”

“ஆமாம் ..."

“உம்பேரு? யாரோ எலக்ஷனுக்கு நிக்கறா லோகான்னு சொன்னாளே, அவளா?”

“இல்லே, எம்பேரு மைத்ரேயி, அந்த மாமி எனக்குச் சித்தி. இங்கேதானிருக்கிறாளா?”

மைத்ரேயியின் வரலாறு முழுவதையும் தெரிந்துகொண்டு தான் விடுவாள் போலிருக்கிறது.

“பின்னாடிப் போ. உடம்பு சரியில்லை போலிருக்கு. மூணு நாளாக் காணலே...’

மைத்ரேயி அந்தப் புகை படிந்த கரி இருட்டில் வழியைத் தடவிக் கொண்டு போகிறாள். ஒரு மூலையில் சாக்குப் படுதா தொங்குகிறது. அது அசைகிறது. கம்மிய குரல், “மைத்ரேயியா வா...” என்று அழைக்கிறது.

அவள் உள்ளே அடி வைக்கிறாள். மண் சுவர்களில் பூக்குவியல்களைப் போல் இருக்கும் ஓட்டுக்கூரை. வெளிச்சம் சந்து வழியே வருவதனால்தான் உள்ளே நன்றாகக் கண் தெரி கிறது. இரண்டு மண் அடுப்புகள்; சட்டிப் பானை, கரிபிடித்த தகரடப்பா, அலுமினியம் தூக்கு முதலிய சாமான்கள் அந்த எட்டுக்கு ஆறு காணாத பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. ஒரு புறம் மதுரம் மாமி, ஒரு கந்தற்பாயிலும் அழுக்குத் தலையணையிலும் படுத்துக் கிடக்கிறாள். அருகில் செல்ல இயலாத படி ஒரு நாற்றம்.

“என்ன மாமி, உங்க உடம்புக்கு? அடடா? இப்படிப் படுத்துட்டேளே ?”

மைத்ரேயி பெட்டியை கீழே வைத்துவிட்டு அவள் கையைப் பற்றிக் கொள்கிறாள். மதுரத்துக்குப் பேச முடியாமல் நெஞ்சைடைக்கிறது. கண்ணீர் மல்குகிறது. “நான் எப்படியோ தள்ளிண்டிருந்தேன். இப்ப ஒரு மாசமா என்னால முடியவேயில்லே. நெஞ்சு, தொண்டை எல்லாம் ரணமாயிருக்கு. சாப்பாடு தள்ளி மூணு நாலு மாசம்கூட ஆயிடுத்து...”

‘அட பாவமே? அன்னிக்கு என்னைப் பார்த்தேளே, சொல்லலியே ?” “அப்ப ஏதோ சாப்பாடு முழுங்க முடியலே பித்தம், வாந்தி வாதுன்னு இருந்தேண்டியம்மா...என்னைத் தேடிண்டு வந்திருக்கியே, ஓட்டுக்காக வந்தியோ என்னவோ,எனக்குக் கால கூட உட்கார முடியாதேம்மா...”

“நான் எலக்ஷனுக்கு வரல மாமி. இங்கேயே உங்களுடனேயே இருக்கத்தான் வந்துட்டேன்.”

குரல் நெகிழ்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயலுகிறாள் மைத்ரேயி.

“என்னுடனா இங்கியா...?”

“ஆமாம் மாமி. நான் உங்ககூட இருக்கக் கூடாதா?”

“ஐயோ, என்னால ஒரு சோறு பொங்கிக்கூடப் போட முடியாதேடிம்மா, நான் வீட்டிலியா இருக்கேன் ?”

“நீங்க சோறு பொங்கிப் போடணும்னு நான் இங்கே வாலே மாமி, நான் உங்க பெண் போல. குழந்தைகளெல்லாம் எங்கே...?”

“நானும் பதினஞ்சு நாளா படுத்துக் கிடக்கறேன்; அதுகள் என்ன பண்ணும்? சொர்ணத்துக்கிட்டப் போறேன்னு ரெண்டும் நேத்துத்தான் காஞ்சீபுரம் போச்சு. ஏண்டியம்மா, பொட்டியெல்லாம் தூக்கிண்டு வந்திருக்கியே இங்கே எங்கேயானும் வேலையா வந்திருக்கியா? எதோ வழில சொன்னதை மறக்காம வந்துபாக்கறியே, உனக்கு நான் என்ன பண்ணிட்டேன்?”

மைத்ரேயி கைப்பையிலிருந்து ஒரு ஆரஞ்சை எடுத்து உரிக்கிறாள். “சாப்பிடறேளா மாமி, இது வாந்தி எதுவும் எடுக்காது...”

“இதெல்லாம் வேற வாங்கிண்டு வந்திருக்கியா? குடு.”

அவள் வாயைத் திறக்கும்போதே நாற்றம் அதிகமாக இருக்கிறது. உடம்பு மெலிந்து குச்சியாக வற்றி இருக்கிறது. துணி மூடாத கருத்தத் தலையும் பள்ளத்தில் விழுந்த கண்களும் அவளைப் பார்க்கவே சங்கடமாக இருக்கிறது. ஆரஞ்சுச்சுளையைக் கொட்டை நீக்கி முத்துக்களாகக் கொடுக்கிறாள். இரண்டு சுளைகள் கூட விழுங்க இயலாத படி தலையை உருட்டுகிறாள்.

“வேண்டாண்டியம்மா, இந்த நோவோடு...முடியலே...”

“சாறு பிழிந்து கொடுக்கிறேன். ஒன்றுமே சாப்பிடாமல் எப்படி மாமி?” இன்னொரு பழத்தை நறுக்கி சாறு பிழிய அங்கே சுற்றுமுற்றும் பார்த்து ஒரு அலுமினியத் தம்ளரை எடுக்கிறாள். அரிவாள்மனையும் இருக்கிறது. தம்ளரைக் கழுவ நீரில்லை. பிறகு கொஞ்சம் சீனி போட வேண்டாமா? அவள் வெளியே நீர் தேடி வரும்போது மதுரம் ஓங்கரிப்பது போல் ஓசை கேட்கிறது. பார்த்த மைத்ரேயிக்கு நாவும் நெஞ்சும் ஒட்டிக் கொள்கின்றன. இரத்தம்; மதுரம் கையில் ஏந்திக்கொண்டு, அருகில் உள்ள சுருணையில் துடைத்துக் கொள்கிறாள். அது குடலைப் புரட்டும் நாற்றம் வீசுகிறது. இந்த நிலையில் மதுரத்தை உடனே ஏதேனும் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டியதுதான் உசிதம். ஆண்டவன் தக்க தருணத்தில், தன்னை அங்கு கொண்டு வந்து சேர்த்ததற்காக மனமிரங்கி நன்றி செலுத்துகிறாள்.

“மாமி, நான் போய் ஒரு வண்டி கொண்டு வரேன். உங்களை யாரேனும் டாக்டரிடம் அழைத்துச் செல்கிறேன்.” என்று கூறி விட்டுக் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறாள்.

டாக்ஸி...பழைய மாம்பலம் சந்தில் டாக்ஸி வருமா?

இரத்தம் கக்கினால், இவ்வளவு வாடை வருமா? முற்றியக்ஷயமாக இருக்குமோ? நோய்களைப் பற்றி மைத்ரேயிக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது. தலைவலி, தொண்டைப்புண், காய்ச்சல் என்றுதான் அவள் பார்த்திருக்கிறாள். எனினும் மதுரத்தின் நிலை, முற்றிய நோயின் அறிகுறியாகவே காட்டுவதாக உறுதி கொண்டு அவள் ஒரு வண்டிக்காகத் தேடுகிறாள். ரயில்வண்டி நிலையத்தினருகில் நிச்சயமாக வண்டி கிடைக்குமென்றெண்ணி விரைந்து வருகிறாள், அங்கு ஒரு டாக்ஸி கூட அன்று நிற்கவில்லை. ஒரு ரிக்ஷாக்காரனை பார்க்கிறாள்.

"ஏம்பா, ஆஸ்பத்திரிக்கு ஒரு நோயாளியை அழைத்து போகனும் வரியா?”

“என்ந்தாசுபத்திரி ” என்று அவன் திரும்பிக் கேட்கையில்யில் மைத்ரேயிக்கு முட்டாள்தனம் உறைக்கிறது. மட்டி, ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு ரிக்ஷாவில் வைத்து அழைத்துச் செல்லமுடியுமா? எவரேனும் தனி மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் என்ன ? அவளிடம் பணம் இருக்கிறது. மதுரத்தைக் குணமாக்க அவள் எந்த வகையிலேனும் உழைத்துப் பணம் சம்பாதித்துச் செலவழிக்கக் கடமைப்பட்டிருக்கிறாள்.

தெருவில் வரும்போது எத்தனையோ டாக்டர் பலகைகள் கண்களுக்குத் தென்படுகின்றன. ஆனால் தேவை மிகுந்து தேடிப் போகும்போது ஒன்றும் புரிவதில்லை. பெயர்ப் பலகைகளைப் பார்த்துக்கொண்டு அவள் தன்னை மறந்தவளாகப் பித்தியைப் போல் நடக்கையில் ‘டாக்டர் நித்யானந்தம், எம்.பி.பி.எஸ்’ என்ற பலகை ஒன்று பழைய மாம்பலம் தெருவொன்றில் தொங்குகிறது. அடுத்த அடிவைக்காமல் அந்த உச்சிநேரத்தில் அவள் படியேறிக் கதவைத் தட்டுகிறாள்.

“அப்பப்பா...பெரீ நியூஸென்ஸாப் போச்சு...” என்று யாரோ முணுமுணுத்துக்கொண்டு கதவு திறக்குமுன். “ஃபோன் அவுட் ஆஃப் ஆர்டர். யாரும்” என்று சொல்லிக் கொண்டே திறந்தவள் அடுத்த சொல் எழுப்பாமல் நிற்கிறாள். மைத்ரேயிதான் சுதாரித்துக்கொண்டு, ‘நான் டாக்டரை தேடிட்டு வந்தேன். டாக்டர். டாக்டர் இருக்காரா?” என்று கேட்கிறாள்.

“டாக்டரா? அவர் சாயங்காலம்தான் வருவார். விஸிட்டிங் அவர் நாலிலிருந்து ஆறுவரை, நீ...நீங்க. நீ. மைத்ரேயி இல்லேடி? நான் யாரோ ஃபோன் பண்ண வந்து சும்மா தொந்தரவு குடுக்கறதாக நினைச்சு ஃபோன் அவுட் ஆஃப் ஆர்டர்னு சொல்லிட்டே திறந்தேன், மைத்ரேயி தானே நீ?”

“ஆமாம், நீ...நளினி, இல்லே?”

“ஆமாம். உள்ளே வாடி, எவ்வளவு நாளாச்சு பார்த்து ? யாருக்கு உடம்பு சரியில்லே? உக்காருடி, நீ ஸ்கூலைவிட்டுப் போனப்புறம் என்னல்லாம் பேசிட்டாங்க...”

“நளினி, அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். எனக்கு ரொம்பவும் வேண்டிய அம்மா ரொம்ப நோவாப்படுத்திருக்கா, டாக்டரை அழைச்சிட்டுப் போகலான்னு வந்தேன். அவர் எப்ப வருவார்?...”

“எங்க மாமாதான் அவர். அவர் ஆஸ்பத்திரியிலிருந்து வர இரண்டு மணியாகும். அதுவும் இன்னிக்கு ஆபரேஷன் டே வேற....உக்காறேன், பறக்கிறியே ?...”

“உக்காரத்துக்கில்லே நளினி, அவங்க ரத்தமா வாந்தி யெடுத்திருக்கிறதால, இப்ப எப்படி இருக்காங்களோ, வேற. பக்கத்திலே நான் கூட்டிட்டுப் போகறாப்பல டாக்டர் இருக்காங்களா இங்கே...?”

“ஏன், நான் ஃபைனல் இயர் ஸ்டுடன்ட்தான். வந்து பார்க்கட்டுமா?” என்று நளினி சிரிக்கிறாள். அப்போதுதான் மைத்ரேயி அவள் வைத்துப் படித்துக்கொண்டிருந்த தடிப் புத்தகத்தைப் பார்க்கிறாள்.

‘ட்யூமர்ஸ்’ என்ற பக்கம் விரிந்திருக்கிறது.

“வரியா? பின்ன...எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ரொம்ப ஹெல்ப்லஸா நிக்கிறேன்...”

மைத்ரேயியிடம் வரலாறு கேட்கும் ஆசையினால் உந்தப்பட்டு, நளினி அவளுடன் வரச் சம்மதிக்கிறாள்.

“எங்க மாமா இங்கே கிளினிக்குக்கு மட்டுமே இந்த வீடு வச்சிட்டிருக்கிறார். நான் இங்கே வந்து படிக்கலான்னு வந்து தங்குகிறது வழக்கம். எங்க வீடு டவுனில் இருக்கு. மாமா முதல்ல இந்த வீட்டில்இருந்தப்ப இங்கே பிராக்டீஸ் புடிச்சது. இப்ப அடையாறில் வீடு கட்டிட்டுப் போயிட்டார். ஆனாலும் இங்கே வந்து போவார். யாருக்குடீ உடம்பு சரியில்லே? பாடலரசு தனராஜ்தானேடி உன்...”

“அப்பவே டைவர்ஸ் வாங்கிட்டேன். நளினி, கொஞ்சம் சீக்கிரம் வரியா?...” "சரி நீ போய் ரிக்‌ஷா கொண்டுவா, இல்லாட்டி டாக்ஸி பிடிச்சிட்டுவா, நான் இத கிளம்பிடறேன்.”

மருத்துவக் கல்லூரி மாணவியே வெயிலில் நடந்து நோயாளியைப் பார்க்க வரமாட்டாள் என்பதை மைத்ரேயி அப்போதுதான் புரிந்துகொள்கிறாள். மீண்டும் ரயிலடிக்குச் சென்று நிற்கிறாள். டாக்ஸி ஒன்று இருக்கிறது. ஆனால் அந்த வண்டிக்குப் பழைய மாம்பலம் வாசனையே பிடிக்காதாம். மதுரம் இந்நேரம் என்ன நிலையிலிருப்பாளோ? கால்மணி நின்று, ஒரு ரிக்ஷாவைப் பிடித்துக் கொண்டு வருகிறாள். நளினி ஒரு சிறு கைப்பையுடன், (டாக்டர்களுக்குரியதுதான்) ஏறிக்கொள்கிறாள். எல்லம்மன் சந்து போகும்வரையிலும் அவளுக்கு மைத்ரேயி தன் கடந்த வரலாற்றை விளக்க வேண்டியிருக்கிறது. இருண்ட பகுதிகளை நீக்கிவிட்டு ஒளி மிகுந்த பகுதியை மட்டும் சொல்லிவைக்கிறாள். அந்த சந்திலுள்ள பொந்து வீட்டைப் பார்த்த்தும் நளினி புருவங்களை உயர்த்துகிறாள். ‘ஒ, மை காட்! இங்கேயா இருக்கு உன் பேஷண்டு?”

“ஆமாம் நளினி, மனிதர்கள் இப்படியும் இங்கெல்லாம் வாழ்கிறார்கள்...’ என்று வண்டியைவிட்டு இறங்குகிறாள் மைத்ரேயி.

ஐயங்கார்க் கிழவி மட்டும் இப்போதில்லை. ஓட்டுப் போட்டு விட்டுத் திரும்பிய நபர்கள் வீடு முழுவதும் கறையான் புற்றை நினைப்பூட்ட மொய்த்திருக்கின்றனர். “யார் நீங்க? யாரு யாரு?” என்று ஒருவருக்குமேல் ஒருவர் எம்பிக் கொண்டு விசாரிக்கின்றனர்.

உள்ளே வருவதற்கு நளினி மறுக்கிறாள் முதலில். “நீ கூப்பிட்டியேன்னு வந்துட்டேன். நான் ஸெர்வீஸ் பண்றதுக்காகப் படிக்கலே சைக்யாட்ரி மாதிரி எதானும் ஃபாரின்ல போய் ஸ்பெஷலைஸ் பண்ணிட்டு, நல்ல ஸிடியில் பாஷா ஒரு அபார்ட்மெண்டல போர்டு போட்டுட்டு உக்காந்திடுவேன் ஐ நோ, ஐ கேன் மின்ட் மணி (I know I can mint money) எனக்கு இந்தக் கேஸைப் பார்த்து என்ன பிரயோசனம் சொல்லு?”

மைத்ரேயிக்குக் கண்ணில் இரத்தம் வருகிறது.

“நளினி, உனக்குப் பணம் கொடுக்காமல் நான் ஏமாற்றி விடமாட்டேன். இதுவரையில் வந்துவிட்டாய். உள்ளே வந்து பார்த்து ஏதேனும் யோசனை சொல்லிவிட்டுப்போ...”

நளினி நாசுக்காகச் சேலையைத் தூக்கிக்கொண்டு வருகிறாள். சாக்குப்படுதாவை விலக்குகிறாள் மைத்ரேயி.

மதுரத்தின் முனகல் கேட்கிறது.

உள்ளே அடிவைத்துப் பார்க்கும் நளினி அடங்கிய குரலில் கடவுளைக் கூப்பிடுகிறாள்.

இப்போது மதுரம் மெள்ளக் கண் விழிக்கிறாள். அருகில் நிற்கும் மைத்ரேயியைப் பார்க்கிறாள். கண்கள் கரைகின்றன.

“மாமி, டாக்டர் வந்திருக்கா அழாதீங்கோ, உங்களுக்கு நன்றாயிடும்...ஷ்...அழக்கூடாது...

“பார் நளினி, நெஞ்செல்லாம் புண் என்கிறாள். நாலு மாசமாகச் சாப்பாடு விழுங்க முடியவில்லையாம். நாற்றம் பார்த்தாயா?...

நளினி மருந்துப் பெட்டியைத் திறக்கவில்லை. குழாய் மாலையைப் போட்டுக் கொண்டு முகப்பினால் நெஞ்சைத் தொட்டுப் பார்க்கவில்லை.

முகத்தைச் சுளித்துக்கொண்டு வெளியே வருகிறாள். அவளுக்கு ஒன்றுமே தெரியாதோ என்று மைத்ரேயி நினைக்கையில் நளினி, “இவங்க யார் உனக்கு?” என்று மெல்லிய குரலில் கேட்கிறாள்.

“எனக்கு ரொம்ப நெருங்கியவர். இதற்குமேல் கேட்காதே. எப்படி இருக்கு நளினி ? எத்தனை ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. சீரியஸ் ஒண்ணும் இல்லையே?”

நளினி உறுத்துப் பார்க்கிறாள். “அட அசடு...!” என்ற இகழ்ச்சி தொனிக்கிறது.

“இவங்களை இங்கெல்லாம் வச்சு ட்ரீட் பண்ண முடியாது. நாளைக் காலையில் ஜீ எச்சில் கொண்டு அட்மிட் பண்ணிடு. புவர்ஸோல்...”

"ஜி எச்சிலா ? இன்னிக்கே சேர்க்க முடியாதா? இதென்ன டி. பி.யா. நளினி?”

கான்ஸர்னு தோணுது. இன்னிக்கெல்லாம் இனிமே முடியாது. நாளைக் காலமே நீ கொண்டா. அவுட் பேஷன்டிலே வந்து மிச்சத்தெல்லாம் பார்த்துக்கறேன்..சே..என்ன மைத்ரேயி நீ! இந்த மாதிரி கேசைக் கொண்டு வந்து காட்டிருக்கே.. என் மனசே கெட்டுப் போச்சு...”

நளினி வாசல் ரிக்ஷாவில் ஏறிக்கொள்ளு முன் மைத்ரேயி கைப்பையைத் திறந்து பத்து ரூபாய் நோட்டொன்றை எடுத்துக் கொடுக்கிறாள்.

“சே, நான் விளையாட்டுக்குச் சொன்னேன். இந்த மாதிரி கேஸ்களைப் பார்க்கையில் இதுக்குத்தான் நான் படிக்கிறேன்னு மனசு கரைஞ்சு போகிறது. வீட்டுக்கு வந்தால், ஸிடியில் பாஷா.கன்ஸல்டிங் ஸ்பெஷலிஸ்ட்டுனு போர்டு போட்டுக்கிட்டுப் பணம் பண்ணனும்னு தோணும்..” என்று நளினி சிரிக்கிறாள்.

“சீயூ....நாளைக்குக் காலமே கொண்டுவந்துடு..? கையை ஆட்டி கூறிவிட்டு அவள் போகிறாள்.

அந்த மிகுதிப் பகலும் இரவும் ஒவ்வொரு கணமும் துன்பத்தின் யுகமாக ஊர்ந்தாலும் மைத்ரேயிக்குத் தன்னைப் பற்றிய உணர்வு மடிந்து போனதால் துன்பம் தெரியவில்லை. கடைக்குச் சென்று இரண்டு துண்டுகள் வெள்ளை மல்லில் இரண்டு உடுக்கைகள், சோப்பு, டம்ளர், கிண்ணங்கள், ஒரு ஸ்டவ் என்று அத்தனை சாமான்களுமே வாங்க வேண்டியிருக்கிறது. வெந்நீர் வைத்து அவள் உடலை நன்றாகத் துடைத்து, பவுடர்போட்டு, இருட்டுக் கூடத்தில் (ஒரு பகுதியை அன்றிரவுக்கு ஐயங்கார்க் கிழவியைக் கேட்டு வாங்குகிறாள்) புதிய படுக்கையில் தலையணையை வைத்துப் படுக்க வைக்கிறாள். பால் வாங்கிக் காய்ச்சி வைத்துக் கொண்டு நெஞ்சுக்கு இதமாக ஒத்தடம் தந்தபின் தேக்கரண்டியில் எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கிறாள். நாற்றம் மடிந்து டெட்டால் மணம் கமழுகிறது. அங்கு சுற்றி அறைகளில் குடியிருக்கும் குடும்பங்கள், எங்கிருந்தோ தேவதை போல் வந்து பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்து, அசுத்தங்களை எடுத்துப் பணிசெய்யும் அவளை வாயடைத்துப் போய் பார்க்கின்றன.

அவளுக்கு உதவியாகத் தண்ணீர் எடுத்துத்தரவோ, நடையைப் பெருக்கவோ, போட்டி போட்டுக்கொண்டு அந்த எளியவர்கள் முன் வருகின்றனர். விடியற் காலையில் ஐயங்கார்ப் பையன் சாரங்கன் டாக்ஸி பிடித்துக் கொண்டு வருகிறான். “நான் வேணா கூட வரட்டுமா? எனக்கு ராத்திரி ஷிஃப்டுதான் ட்யூட்டி” என்று கேட்கிறான். அவனுடைய இளம் மனைவி, “ஆமாம். போயிட்டு வாங்கோ, ஜென்லாசு பத்திரி சமுத்ரம். பாவம், அவர் திண்டாடப் போறார், ஒண்டியா’ என்று வற்புறுத்துகிறாள். “ஏண்டி ஜனகம்! தோசைமாவிருந்தா ஆளுல ரெண்டு ஊத்திக்குடேன்? பாவம், அதும் பட்னியாத்தான் கெடக்கும்?” என்று கூறுகிறாள் கிழவி.

பரிவும் அன்பும்கூடத் தொற்றுநோய்போல்தானோ? வறுமையிலும் வாசனை உண்டு. முதலில் அந்த வாசனையைத் தூவ வேண்டும். சாரங்கன் அவளுடன் ஆஸ்பத்திரிக்கு வருகிறான். நளினி ‘அவுட்பேஷன்டுக்கு’ வந்து நோயாளியைப் படுக்கையில் சேர்க்க உதவி செய்கிறாள். மைத்ரேயிக்கு நாட்கள் செல்வதே தெரியவில்லை. அம்மா காயலாவாக இருப்பதாக எண்ணிக் கொண்டு சொர்ணத்திடம் சென்ற குழந்தைகள் தாங்களாகவே நான்கு நாட்கள் சென்றபின் பஞ்சப் பரதேசிகள்போல் திரும்பிவருகின்றனர். மைத்ரேயி சாமான் வாங்கிச் சமைத்துப் போடுகிறாள். அவர்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறாள். ஆஸ்பத்திரிக்கு வருகிறாள். மதுரத்தின் பிணி இன்னதென்று திட்டமாக அங்கு பரிசீலனை செய்து தெரியுமுன், அவளுக்கு மூச்சே ஒடுங்கி விடும் போலிருக்கிறது. மைத்ரேயி நளினிக்காகக் காத்துக் காத்து நிற்கிறாள். டாக்டர்கள் எப்போதோ வந்து போகின்றனர். ஒரு விவரமும் புரியவில்லை . ஒரு வாரம் சென்றபிறகு ஒருநாள் அவள் நோயாளிக்குப் பால்கஞ்சியும் ஆரஞ்சுப் பழங்களும் வாங்கிக்கொண்டு வருகையில் மதுரத்தைப் படுக்கையில் காணவில்லை. அருகிலுள்ளவர்களிடம் கேட்கிறாள். நர்ஸிடம் விசாரிக்கிறாள்.

அறுவைச் சிகிச்சைசெய்ய தியேட்டருக்குக் கொண்டு போயிருக்கின்றனராம்.

“அந்தம்மாக்குப் பிள்ளையிருக்குதா? உனுக்கு யாரு ?” என்று ஒரு படுக்கைக்காரி மைத்ரேயியை விசாரிக்கிறாள்.

“இருக்கிறாங்க...ராத்திரி துரங்கினாங்களா, அவங்க ?”

“ராத்திரியெல்லாம் ஒரே அழ. தூக்க மருந்து ஊசிபோட்டுது நர்சம்மா ‘எம்புள்ளிங்களை எல்லாம் விட்டுட்டு எப்டீ வருவேன்? அவுங்களைப் பாக்கலியே நான் இன்னும்'ன்னு சத்தம் போட்டு அழுதிச்சி, பாவம். நல்ல நெனப்பில்ல...”

குழந்தைகளை ஒரே ஒரு நாள்தான் அவள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தாள். அத்யயணம் பண்ணும் பையன்கள் இருவரையும் அழைத்து வந்துவிடவேண்டும் நினைப்பு இப்போது வலுவடைகிறது. தியேட்டர் வாயிலில் அவள் நிற்கும்போதெல்லாம் மதுரம் இறந்து விடுவாளோ என்ற அச்சம் தோன்றுகிறது. அவள் வராமலே இருந்து, மதுரம் இறந்து போயிருந்தால் ஒரு மாதிரி. அவள் வந்து, ஆஸ்பத்திரியில் சேர்த்து, முயற்சிகள் செய்தும் இறந்து போனால், ஆஸ்பத்திரியில் விட்டதால்தான் அம்மா செத்துப் போனாள் என்று எண்ணுவார்களோ?

நோ...இல்லை. மதுரம் மாமி சாகமாட்டாள். அவள் பிழைத்து ஓராண்டுக் காலமேனும் இருக்க வேண்டும்.

சே, என்ன அசட்டுத்தனம் ? தொண்டைக்குழாயில் புற்று வைத்தபின் பிழைப்பதாவது ?

எல்லையற்ற கருணையும் சகிப்புத்தன்மையும் தனக்கென்ற ஆசையைக் கொன்றுவிட்ட மேன்மையும் எப்போதும் சிரிக்கும் இயல்பும் துன்பங்களைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்ளும் அருமையும் ஒன்றாய் உருவெடுத்த மதுரம் மாமி ..! உங்களுடைய அருமைகளுக்கெல்லாம் வாழ்வுதந்த பரிசா, இந்த நோய்? பெரிய பெரிய மகான்களையும் நோய் விட்டதில்லை மகரிஷி ரமணரையும் ராமகிருஷ்ண பரமஹம்ஸரையும்கூட நோய் விட வில்லை.

கதவு திறக்கிறது. மாமி அலங்கோல நிலையில் படுக்கைக்கு வருகிறாள். கடந்த காலம், எதிர் காலம் எல்லாம் அழிந்துபோன நிலையில் மைத்ரேயி வாழ்கிறாள். சாரங்கனைக் காஞ்சிபுரத்துக்கு அனுப்பி அந்தக் குழந்தைகளை அழைத்து வரச் சொல்கிறாள். அன்று மாலை மதுரத்தின் படுக்கையைச் சுற்றி உறவுக்காரக்கும்பல் நெருக்கமாகக் கூடியிருக்கிறது. சொர்ணம், குழந்தைகள், மைத்ரேயி மட்டுமல்ல. அந்த பொந்து வீட்டில் வசிப்பவர்கள் எல்லோருமே வந்து பார்க்கின்றனர்.

இரவு அவர்கள் யாருக்குமே தங்குவதற்கு அனுமதியில்லை. வெளியே புதிய உலகில் நுழைந்தாற்போல் ஆரவாரமாக இருக்கிறது. வெற்றி! வெற்றி! வெற்றி! என்ற முழக்கங்கள். கறுப்பு சிவப்புக் கொடித் தோரணங்கள் புதிய நடை முறையைப் பற்ற முழக்கி எங்கும் பறக்கின்றன. சைக்கிளிலும் லாரியிலும் “வெற்றி! வெற்றி!” என்று முழங்கிச் செல்கின்றனர். பஸ் நிற்குமிடத்தில் சிரிப்பு; பஸ்ஸின் உள்ளே புதிய ஆட்சியைப் பற்றிய நம்பிக்கை மகிழ்ச்சியொலிகள். “கொன்னுட்டாங்க. கொன்னுட்டாங்க ஸார்!” என்றெல்லாம் புகழ் மாரிகள். கடைத் தெருவில் இனிப்பு வழங்குகிறார்கள். “அண்ணா வாழ்க! மூதறிஞர் வாழ்க!” என்று வாழ்த்து கிறார்கள்!

“ரூபாய்க்கு மூணு படி அரிசி போடுவாங்களா ஸார்...?”

மைத்ரேயிக்கு எங்கோ சாம்பற் குவியலுள் ஓர் பொறி மினுக்மினுக்கென்று ஆவலைத் தோற்றுவிக்கிறது. அவள் பேசிக் கொடுத்த கட்சியினர் எத்தனை இடங்களைப் பிடித்திருக்கின்றனர்? மந்திரி சபை கூட்டாக அமையுமா? அவளுடைய இனத்தாரின் நிலை எப்படி இருக்கும்? பொருளுக்காகவே தம் குல மேன்மைகளை எல்லாம் இழக்கத்துணியும் இந்தச் சமுதாயத்தினர் தம் குல மேன்மையை நிரூபிப்பதற்காகவேனும் மதுரத்தைப்போன்ற ஆயிாமாயிரம் எளிய மக்கள் அடிப்படைத் தேவைகளைப் பற்றி வாழ வகை செய்ய முன் வருவார்களா?

எங்களுக்கு அரசின் ஆதரவு தேவையில்லை. திறமை வாயந்த மாணவன் படிக்கட்டும்; எளியோர் இங்கு வந்து நல்ல முறையில் நோவுக்குச் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று ஒருகாலத்தில் மகோன்னத நிலையில் நின்றிருந்த அந்தப் பிரிவினரில் ஒரு சிலரேனும் பிறர் வாழத் தாம் வாழும் மனப்பாங்கைப் பெறுவார்களா ?

மைத்ரேயி வீட்டுக்கு வரும்போது சாரங்கன் மாலைப் பதிப்பைப் பார்த்து அலசிக்கொண்டிருக்கிறான்.

சுதந்திராக் கட்சி போட்டியிட்ட இடங்களில் பெரும் பாண்மையும் மாற்றுக் கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. கூட்டுக் கட்சி போட்டியிட்ட இடங்களில் மாற்றுக் கட்சி தோல்வி யடைந்திருக்கிறது.

கட்டமும் கோலாகலமும் முடிந்தபின்னர், மணம் குலைய நிறம் குலையச் சிதறிக் கிடக்கும் ரோஜா இதழ்கள் நினைவை நிறைக்கின்றன.

சீனிவாசன் தோல்வி; லோகா ஈட்டுத் தொகை இழக்கிறாள்.

ராஜாவும் வெற்றி பெறவில்லை.

ஆட்சிபீடத்தில் இருப்பவர்களை, செல்வாக்கு மிகுந்தவர்களைத் தம் சுய நலன்களுக்காக அண்டி நிற்கும் தாழ்வுக்குத் தம்மைத் தாழ்த்திக்கொண்டவர் தாழ்ந்தே போகின்றனர். அவர்களுக்கு எழுச்சி இல்லை.

பகலில் இருண்டு கிடக்கும் அந்தக்கூடத்தில் புகை படிந்த மஞ்சளாக இருபத்தைந்து வத்தி ஒளி வெளிச்சம் பரவுகிறது. சொர்ணம் கைக்குழந்தையைக் கீழே கிடத்தி விட்டு உள்ளே அடுப்பை மூட்டிச் சமையல் செய்யப் போகிறாள். பெண் குழந்தைகள் இருவரும் பாடம் படிக்க அமர்ந்திருக்கின்றனர்.

முப்புரி நூல் மார்பின் குறுக்கே புரள, கிராப்பில்லாத குடுமித்தலை அவர்களை இன்னாரென்று விளக்க இரு பையன்களும் எங்கிருந்தோ டப்பாவிலும் மண் பானையிலும் நீர் கொண்டு வருகிறார்கள். மதுரத்தின் முடியைப் பறித்த அதே தர்மம், இந்தப் பையன்களை அவர்கள் விரும்பாத, சமுதாயம் மதிக்காத கோலம் கொள்ளச் செய்கிறது.

அவள் பொறுப்புக்களின் தலைவாயிலில் வந்து நிற்கிறாள். மூச்சுவிட முடியாத சுமையாக இருக்கலாம். ஆனால், இதில் அவள் தன்னை மறக்கமுடியும் என்று புரிந்து கொண்டிருக்கிறாள். வறுமையுடன் போராடி, வாழ்க்கைத் தேவைகளைப் பெற்றுப் பிறருக்கு உதவும் வாழ்வில் நிறைவும் அமைதியும் இருக்கின்றன.

ஆண்டவனே, வறுமையை அணிகலனாகப் பூண்டு வாழ்க்கைத் தேவைகளுக்கு உழைக்கும் பாங்கையும் பிறருக்காக வாழும் உன்னத சிந்தையையும் தா! பலவீனங்களுக்கு இடம் கொடுத்தபின் “மனிதன் அற்பமானவன், என்னை மன்னித்து விடுங்கள் எந்தையே!” என்று இறைஞ்ச வேண்டாத உறுதியை எனக்குத் தா!

கூடத்தில் குழந்தை துணியை நனைத்துவிட்டுக் கால்களை உதைத்துக்கொண்டு அழுகிறது.

மைத்ரேயி அருகில் சென்று குனியும்போது அழுகை நிற்கிறது. கையிலேந்தியதும் கண்ணிரிடையே அந்த ரோஜா இதழ்களில் சிரிப்பு மலருகிறது.

• முற்றும் •
"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_23&oldid=1115414" இலிருந்து மீள்விக்கப்பட்டது