ரோஜா இதழ்கள்/பகுதி 8

8

சாயங்காலம் என்று சொல்லிவிட்டு வெளியே சென்ற லோகா எப்போது திரும்பி வரப் போகிறாளோ என்ற துடிப்புடன் காத்திருக்கிறாள். மதுரமும், அநுசுயாவும் அந்த விடுதிக்கு அவள் செல்வதை ஆதரிக்கவில்லை. விடுதியில் அவளுக்குப் பாதுகாப்பாகத் தங்க இடமும், கஞ்சியோ, கூழோவானாலும் பசி தீர்க்க உணவும் கிடைக்கும்; கல்விக்கும் வழியுண்டு. கிடைத்த பிடியை விட்டுவிடாமல் மேலேறிச் செல்லும் உறுதி அவளுக்கு இருக்கிறது. வேலை செய்து கொண்டு கூலி பெறாமல் படிக்க வேண்டும் என்றாலும் அவளால் இயலும். இதே சமையல் வேலையானாலும் சரி; கழுவிப் பெருக்கி, துடைத்து, நீர் சுமந்து உடல் வருந்த வேலை செய்வதானாலும் சரி; அவளுக்குப் படிப்பு ஒன்று தான் குறி. நல்ல பரம்பரை அழிந்து விடுமென்று அவள் எதற்காகக் கவலைப்பட வேண்டும்? அந்த சாதியிற்பட்ட அவளுக்கு தொழிற் கல்லூரியில் படிக்க வேண்டுமென்றாலும் இடம் கிடைக்காது. விடுதிப்பெண்ணாக, அநாதையாக முத்திரை பெறுவதில் இலாபமே ஒழிய நஷ்டம் இல்லை.

உள்ளம், வெளிச்சமில்லாத வெண்மையில்லாத திரையிலே பொன்மயமான கற்பனைகளையே தீட்டி அழிக்கிறது.

அநுசுயா வழக்கம்போல் ஆறுமணிக்கே விடுதிக்குப்போய் விடுகிறாள். இரவு சமையலை முடித்து பாலாவுக்குச் சாப்பாடு போடுகிறாள்.

சேது படம் பார்க்கப் போயிருக்கிறான். ‘குடிசை’க்காரருக்கு அவள் தோசை வார்த்துக் கொண்டிருக்கையில் லோகா பரபரப்பாக வருகிறாள்.

மணி ஏழேமுக்கால்.

“என்ன பண்ணிண்டிருக்கே?...” என்று கேட்கிறாள்.

“பாலா அப்பா தோசை..” என்று மைத்ரேயி தடுமாறுகிறாள்.

“பாலாவையே கொண்டுபோகச் சொல்றேன். இல்லாட்ட இங்கே வந்து சாப்பிடுவார். நீ சாப்பிட்டுட்டு ரெடியாயிரு. உன்னைக் கூட்டிப் போகிறேன். காலையிலே இங்கே ஆள் வருவார்.”

மைத்ரேயிக்கு உணவு இறங்கவில்லை.

லோகா ஃபோனில் பேசும் குரல் கேட்கிறது. எங்கோ காரில் மறுபடியும் வெளியில் செல்கிறாள்.

பாலா தோசையைக் கொண்டு வைத்துவிட்டு வருகிறாள். சேது வந்து சாப்பிட்டுவிட்டு மாடிக்குச் செல்கிறான்.

இரவு பத்துமணி வரையிலும் தன் பையை வைத்துக் கொண்டு அந்தப் பெரிய வீட்டில், கீழ்த்தளத்தில் தனியாகக் காத்திருக்கிறாள்.

பத்துமணியடித்த பின்னரே காரின் குரலொலி கேட்கிறது.

“பாலா!..”

“இதோ வரேன்மா.”

பாலா இறங்கி வந்ததும், “வீட்டைப் பார்த்துக்கொள், இவளைக் கொண்டு விட்டுட்டு வரேன்...”

மைத்ரேயி பாலாவைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே தன் பையுடன் வண்டியின் பின்புறத்தில் அமர்ந்து கொள்கிறாள்.

வெள்ளைக் கட்டிடம்; வாயில்முட்கம்பி வேலி உயரமாக இருக்கிறது. பெரிய கதவு. முன் வாயிலில் நீலக்கரை போட்ட வெள்ளைச் சேலை உடுத்தி நாற்பத்தைந்து வயசு மதிக்கக் கூடிய பெண்ணொருத்தி லோகாவுக்குக் கை குவிக்கிறாள். “வணக்கம்மா....”

“ராசம்மாவா ?”

“ஆமாம்மா. சாயங்காலமே அது சொல்லிச்சி...”

“இவதான் மைத்ரேயி, புதிசு ரொம்ப கொஞ்சம் கவனிச்சிக்க. நல்ல படிச்ச பொண்ணு.”

“வாம்மா...” என்று ராசம்மா சிரிக்கிறாள்.

எள்ளும் அரிசியுமாக நரைத்த கூந்தலைக் கொண்டை போட்டுக் கொண்டிருக்கிறாள். அநுசுயாவைவிடக் குட்டை, பருமன். நல்லகறுப்பு. வெள்ளைச் சேலை பளிச்சென்றிருக்கிறது.

“இவளுக்கு ஹாலில் இடம் கொடுக்க வேண்டாம். படிப்பறையில் யாரிருக்கிறாங்க?”

“ரோஸ் லீனும் மீனாட்சியும் இருக்கு. இன்னைக்குப் பர்வதம்கூட அங்கேதான் படுத்திருக்கு...”

“இவள் அவங்ககூட இருக்கட்டும், நாளைக்கு மல்லிகா வந்ததும் நான் சொன்னேன்னு சொல்லு, நான் பின்ன வரேன்!”

“சரிம்மா..!”

“வரட்டுமா?...குட்நைட்!” என்று மைத்ரேயியிடம் திரும்பி விடைபெற்றுக்கொண்டு உள்ளே நுழையாமலே வண்டியிலேறிப் போகிறாள் லோகா.

அப்போது, அருகில் தெரிந்த புதிய வெள்ளைக் கட்டடம் ஒன்றிலிருந்து அநுசுயா இறங்கி வருவது தெரிகிறது.

“வந்திட்டியா?...” என்று மைத்ரேயியைப் பார்த்துச் சிரிக்கிறாள்.

மைத்ரேயிக்கு குழப்பமாக இருந்தாலும் புன்னகை செய்கிறாள்! “சத்தமே இல்லாமல் அமைதியாக இருக்கிறது இங்கே...”

“அட, நீ கண்ணு வச்சிடாதே! பாலபவனம் இது. சில பிடாரிங்க அழ ஆரம்பிச்சா, ராத்திரி முழுசும் ஓயாது...” என்று மறுமொழி கொடுக்கிறாள் அநுசுயா...

“நீ அங்கேதானிருப்பாயா?”

“ஆமாம், காலையிலே பார்க்கலாம். நீ ராசம்மாளோட போ, இப்ப..” என்று கூறிவிட்டு அவள் போகிறாள்.

படியேறியதும் முன்னறை. அங்கே கண்ணாடி அலமாரிகளில் அந்த இல்லத்தில் தயாராகும் சில கைவினைப் பொருள்கள் காட்சிக்காக வைக்கப் பெற்றிருக்கின்றன. வலது கைப்புறம், ‘ஆஃபீஸ்’ என்ற அறிவிப்பைக் காண்கிறாள். முன் பகுதியைக் கடந்தால் வாயிலில் திரை தொங்கும் பெரிய கூடம். கூடத்தில் மங்கலாக ஒரு அரிக்கேன் விளக்கு ஒளிபரப்புகிறது. அந்த ஒளியில் தாறுமாறாகப் பாய்களில் பெண்கள் படுத்திருக்கின்றனர். அலங்கோலமாக வெறும் மார்புக் கச்சும் பாவாடையுமாக ஒருத்தி கண்மண் தெரியாமல் தூங்குகிறாள். இரண்டு பேர் படுக்கையில் உட்கார்ந்திருக்கின்றனர். அவள் உள்ளே நுழைந்ததும் சட்டென்று எழுந்து அவளையே பார்க்கின்றனர் சிலர். ராசம்மா அந்தக் கூடத்தைத்தாண்டி அந்த அகலத்தில் ஒரு நடைபாதைவிட்ட பின் மிகுந்த அகலத்தில் நீளம் சரிபாதியாகக் குறைந்ததோர் அறைக்கு அரிக்கேன் விளக்குடன் வருகிறாள். அந்த அறையில் ஒரு மூலையில் சுவரில் இரண்டு கள்ளிப் பெட்டி ஷெல்ஃப்கள் இருக்கின்றன. அவற்றில் புத்தகங்கள் நோட்டுக்கள் நிறைந்திருக்கின்றன. மூலையில் ஒரு தையல் இயந்திரம் இருக்கிறது. துருப்பிடித்த தகரப் பெட்டிகள் இரண்டு, ஒன்றின் மேலொன்றாக இடம் பெற்றிருக்கின்றன. கீழே பாயில் முழங்கால் கவுனும் சட்டையுமாக ஒரு பெண் தூங்குகிறாள். கர்ப்பிணியாகத் தோன்றும் ஒரு பெண் விளக்கொளியைக் கண்டதும் எழுந்து உட்காருகிறாள்.

மாநிறமாக, நெற்றியில் செஞ்சாந்துத் திலகத்துடன் விளங்கும் அவளுக்குப் பின்னல் கருநாகம்போல் பாயில் புரளுகிறது. பரிதாபத்தை விழிகளில் தேக்கிக் கொண்டு காட்சியளிக்கிறாள்.

“மீனாட்சி இங்கே படுக்கலியா இன்னைக்கு ?”

“இல்லே ஆயா, கூடத்திலேதான் படுத்திருக்கா...”

“அப்ப இந்தப் புதுப்பொண்ணு இங்கே படுக்கட்டும்..” என்று கூறிக் கொண்டு சென்ற ராசம்மா சற்றைக் கெல்லாம் ஒரு பாயும் போர்வையும் கொண்டு வருகிறாள்.

“இப்பத்தான் போர்வை வேணாமே, வேத்துப் புழுங்குதே, இத்தை மடிச்சித் தலையில் வச்சிட்டுப் படுத்துக்க. காலையிலே பார்த்துக்கலாம்...”

மைத்ரேயி ஒரு மூலையில் பையை வைக்கிறாள்.

பர்வதத்தின் அருகிலேயே பாயை விரிக்கிறாள். அவள் படுத்துக் கொள்வதைப் பார்த்துவிட்டு, ராசம்மா விளக்குடன் வெளியே செல்கிறாள்.

“இங்கே எலக்ட்ரிக் லைட் கிடையாதா?” என்று மைத்ரேயி கேட்கிறாள்.

“இருக்கு. பத்துமணிக்குமேலே மெயினை அணைச்சுடுவா...”

“யாரு?”

“யாரு, எல்லாம் இந்த ராசம்மாதான், உன்பேரென்ன?” என்று கேட்கிறாள் பர்வதம்.

“மைத்ரேயி...”

“பிராமினா ?”

“ஆமாம்...”

“பாவம்... நானும் பிராமின்தான், இந்தமாதிரி வந்து தொலைஞ்சிட்டது. மூதேவிகள். தலையெழுத்து. அநுபவிக்கிறோம். கடவுள் நமக்குத்தான் தண்டனை கொடுக்கிறார். குத்தம் பண்ணினவங்களும் நம்ம சாதிதான். ஆனா அவாள்ளாம் பெரியவாளாவே இருக்கா பாவிகள். இனிமே வயித்திலிருக்கிறது வெளியில் வந்தப்புறம் என்னென்ன ஆகுமோ... உனக்கு எத்தனை மாசம் இது?”

அந்தக் கேள்வியில் ஒருகணம் அவள் கடுகிலும் கடுகாகிப் போகிறாள். அடுத்தகணம் அவளுடைய தன்மானம் கட்டுக்கடங்காத ரோசமாகப் பொங்குகிறது.

“சீ! வாயை அலம்பு! அந்த மாதிரிக் கும்பலில் ஒருத்தி இல்லே நான். நான் உங்களை எல்லாம்விட உயர்ந்தவள், தெரிஞ்சுக்க!” என்று சீறுகிறாள். ஆனால் அத்துடன் அந்தக் கிளர்ச்சி அடங்கவில்லை. குலுங்கக் குலுங்க அழுகை வெடித்து வருகிறது.

அம்மணி அம்மா அவள் கையில் பணத்தைக் கொடுத்து, அவளைக் குடும்பத்தோடு ஒன்றிக்கொள்ள அனுப்பி வைத்த போது, அவளுக்கு இவ்வளவு பெரிய இழப்பாகத் துயரம் பொங்கி வரவில்லை. வீடு திரும்பி வந்த அவளை அத்திம் பேர் நெஞ்சில் ஈரமின்றி வெருட்டியபோது கலங்கினாள்; தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுகூட நினைத்தாள். ஆனால், அதெல்லாம் இப்போது அவளுக்குச் சிறு பிள்ளைத் தனமாகத் தோன்றுகிறது. வீட்டைவிட்டுத் துரத்தப்பட்ட, அபலைப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்க, அநாதை இல்லங்கள் நகரங்களில் இருப்பதைப்பற்றி எத்தனையோ சினிமாக்கதை, பத்திரிக்கைக் கதைகளில் படித்திருக்கிறாள். ஆனால் அப்படி ஓர் இல்லத்தைப்பற்றி, அதில் நுழைந்ததும் தன்னை இன்ன விதமாகத்தான் பாவித்து நடத்துவார்கள் என்பதைப்பற்றி அவளால் கற்பனை சுடச் செய்திருக்க முடியவில்லை.

அவள்மீது தெறித்துவிட்ட துளியை, அவளுடைய பளிங்கான நடத்தையில் சுட்டுக் கறையாக்கிய சம்பவங்களை அவளால் எப்படி அழித்துவிட முடியும்? அந்தத் துளியைத் துடைத்தெறிய முடியாது; கிள்ளி எறிய இயலாது. மதுரம் மாமி எச்சரித்தாள். லோகாவிடம் எனக்கு இந்த விடுதி வேண்டாம் என்று அன்றே சொல்லியிருக்கலாகாதா? அநுசுயாவிடம் அவள் அந்த வீட்டுச் செய்திகளைக் கேட்டறிந்ததால்தான் லோகா உடனடியாக அவளை அங்கே கொண்டு வந்து விட்டுவிட்டாளோ?

துன்பம் என்ற சொல்லைக் கேட்டு, காட்சியையும் பார்த்து, படித்து உணர்ந்து அநுபவிப்பதெல்லாம் வெறும் நிழல்கள். துன்பத்தையே நுகர்வது தனியான துன்பம். அவள் கெட்டுப் போனவர்களின் கும்பலில் ஓர் துளி.

இரவு முழுவதும் பயங்கரக் கனவுகளிடையே திடுக்கிட்டுத் திடுக்கிட்டு விழிக்கும் அவள் அரைமணிகூட முழுதாக உறங்கியிருக்கவில்லை. அதற்குள் மணி ஐந்தடித்து விடுகிறது. அவளை ராசம்மாதான் வந்து எழுப்புகிறாள்.

“எந்திரு, மணி அஞ்சடிச்சாச்சு. கைகால் முகம் கழுவிட்டு, பிரேயருக்குப் போகோணும்.” ராசம்மாள் கோயமுத்துரைச் சேர்ந்தவள் என்பதை அந்தப் பேச்சு காட்டிக் கொடுக்கிறது.

“பிரேயரை மிஸ் பண்ணினா, பிரேக்ஃபாஸ்ட் மிஸ்ஸாகும்..” என்று அந்த அறை வழியே போகும் பெண்களில் ஒருத்தி அவளை விசித்திரமாக உற்றுப் பார்த்துக் கூறிக் கொண்டு போகிறாள்.

நான்கு குளியலறைகளும் மூடியிருக்கின்றன.

இருபத்திரண்டு பெண்கள் காச்சுமூச்சென்று கத்திக் கொண்டு அங்கே கூடியிருக்கின்றனர்.

“வாஷ்பேசினில் காறிக் காறித் துப்பிட்டு ஒரு மூதேவி அலம்புறதில்லே. இங்கே வேலைசெய்ய நம்மால முடியாது ராமசாமி!” என்று திட்டிக் கொண்டே ஒருத்தி எம்பி எம்பிப் பம்படிக்கிறாள். அவள் குட்டையாக பருமனாக இருக்கிறாள்.

“சாம்பலைத் தொட்டுப் பல்லு விளக்கறதுக்கு வாஷ் பேசின் என்னா கேடு? பின்னாடி சாக்கடையில் உமுஞ்சா என்ன ?”

“பெரிய மகாராணி ரூல் போடுறா” என்று நிதானமாகக் கூறிக்கொண்டு ஒருத்தி ‘வாஷ்பேஸினி’ல் வேண்டுமென்றே காறி உமிழ்கிறாள்.

“ஏ பொறம்போக்கு! உங்கப்பன் முப்பாட்டன் கட்டி வச்சதுன்னு நினைப்போ? அது சொல்லுதே காதிலே வுழலே?” என்று இன்னொருத்தி துப்பியவளின் காதைப் பிடிக்கிறாள்.

“ஐயோ ஐயோ” என்று அலறும் அவள் கோபம் கொண்டு, “எங்கப்பன் முப்பாட்டன் கட்டி வய்க்கில, உங்க முப்பாட்டன் வைப்பாட்டன் கட்டிவச்சான்...” என்று நாக்கூசும் சொற்களை அவிழ்த்து விடுகிறாள் அவள்.

“இரு, இரு, ஸிஸ்டர் வரட்டும், சொல்லிஇந்தக் கழுதைக்கு மூணு பகல் சோறில்லாம அடிக்கிறேன்...” என்று அவள் கறுவுகிறாள்.

மைத்ரேயி இந்தக் கூட்டத்தில் ஒருத்தியாக வாயடைத்துப் போய் நிற்கிறாள். முதல் நாளிரவு அவள் வரும்போது உறங்கிக் கொண்டிருந்தவளில் ஒருத்தி பல்லைத் துலக்கிக் கொண்டே அவளிடம் வருகிறாள். அவளை ஏற இறங்கப் பார்க்கிறாள், அதிசயத்துடன். பிறகு “ஒ...!” என்று குரலை ஏற்றியும் இறக்கியும் வளைத்தும் நெளித்தும் கண்களைச் சிமிட்டுகிறாள். அருகில் வந்து இடது கையை அவளுடைய வயிற்றில் வைத்து ஏதோ கேலி பேச முற்படுகிறாள்.

“...தொடாதே, என்னை! சீ!” என்று வெருட்டுகிறாள் மைத்ரேயி,

“ஐயே, செழுப்பா இருந்தா இத்தினிகெருவமா அதுக்கு? வயித்திலே இருக்கிறது கறுப்பா இருக்கப்போவுது!” என்று சிரிக்கிறாள் அவள்.

அந்தச் சொற்கள் முன்பே குருதிவடியும் புண்ணைக் குத்திக் கிழிக்கின்றன. ஒரு பெண்ணின் தாய்மை, இவ்வளவு கேலிக்குரியதாக, இவ்வளவு எளிதாக இங்கே குதறி எறியப்படுமா?

மைத்ரேயி இப்போது அழவில்லை. அழுவதற்குப் பதிலாக அவர்களைப் பற்றிச் சிந்திக்கிறாள்.

அவர்கள் எல்லோருமே ஏமாற்றப்பட்டவர்களாகவோ, குதறி எறியப்பட்டவர்களாகவோ இருக்கலாம். உடைந்து போன கண்ணாடியில் முழு பிம்பம் எப்படி விழும், இவர்களுக்கு வாழ்க்கையின் அழகு, அவர்களுக்குத் தெரிந்த அளவில் கூடத் தெரிந்திராமலிருக்கும். வாழ்க்கையின் குரூரங்களிலேயே கண்விழித்து, அதிலேயே பழகி, ஊறிப் போனவர்கள். மீன் வாடையில், சேற்றுக் குட்டைக் கொசுக்கடியில் வளரும் குழந்தை பூங்காவனத்தை ரசிக்கமாட்டானாம். அங்கும் ஒரு குட்டையிருந்தால் அதனருகில்தான் உட்காருபவனாக இருக்கும்.

அப்போது ஒரு குளியலறைக் கதவு திறக்க, பர்வதம் வருகிறாள்.

“குட்மார்னிங் மிஸ் பர்வதம் சோம சேகர்!” என்று குறும்பு காட்டுகிறாள் ஒருத்தி.

“உன் சோற்றில் மண்விழும். பெரிய இடத்து சம்பந்தக்காரங்களை நீ கேலியா பண்றே? கசுமாலம்!” என்று இன்னொருத்தி குத்துகிறாள்.

“சே, சே, பர்வதம் பிரசவத்துக்கு ஆஸ்பர்ன் நர்ஸிங் ஹோமுக்குப் போகப் போகுதாம். ஒருநாள் ரூம் நாற்பதஞ்சு ரூபாய், குளுகுளு ரூம்..... இல்லையா பர்வதம்” என்று கிண்டுகிறாள் முழங்கால் கவுன்காரி ரோஸி.

“யாருக்குக் கட்டியிருக்கிறாரோ, அந்தப் பெரிய மனுசன் இவ ஒருத்திக்குத்தான் இப்ப மாசமா?”... என்று கிளுக்குகிறாள் மற்றொருத்தி.

“சீ, ஏண்டி கையாலாகாத பேச்சுப் பேசறீங்க ? பர்வதம், நான் உனக்கு ஒரு யோசனை சொல்றேன். அந்தப்படி நீ செஞ்சா, பொம்பிள.”

“பொம்பிளைங்கறதை வெளக்கத்தான் சுமந்துகிட்டுக் காட்டுறாளே! நீ வேறே நிரூபிக்கச் சொல்லணுமாக்கும்! சீ! இது பொம்பிளத்தனமா? ஆம்பிளத்தனம். இந்த ஆம்பிளை எல்லாம் தயிரியம்னு உனக்கு நினைப்போ ?”

“பர்வதம், நான் ரொம்ப நாளைக்கு முன்ன பாத்தேன் சினிமாவில. அப்ப எனக்குப் பன்னண்டு வயசிருக்காது. ஒரு ராஜகுமாரன் ஒரு பொண்ணுட்ட அடாவடியாப் பேசுகிறான். அவ மொறச்சுக்கிறா. அவளை இட்டாந்து கலியாணம் கட்டிக்கிட்டு உள்ளாறபோட்டு, உனக்குப் பிள்ளை வேணுமான்னு ஒருமரப்பாச்சிப் பொம்மையக் குடுத்துட்டு வெளியேவந்து...” என்று முடிக்குமுன் ராசம்மா, குறுக்கிட்டு, “மங்கம்மா சபதம்... நல்லாருக்கும் முத்தம்மா, அந்தச் சினிமா. நானு எட்டுவாட்டி பார்த்தேன், எங்கூட்டுக்காரரோடு, அத்தெ” என்று பெருமையாகக் கூறுகிறாள்.

தொடர்ந்து, “இதுபோல இப்ப எங்க சினிமா வருது ஆயா, அதுல வசுந்தரா வந்து இன்னனா ஆடுவா, பாடுவா, என்னெஸ் கிருஷ்ணன் மதுரம்...” என்று பிரலாபிக்கிறாள்.

“இப்ப ஆடல் பாடல்லாம் வேணாம் ராசம்மா, நீ ஒண்ணு...” என்று முத்தம்மா நெற்றியைச் சுளிக்கிறாள். “ஆனா, அந்தப் பொம்பிள மாதிரி அவ பையன் கையிலியே ஒரு சவுக்கைக் கொடுத்து அந்தப் பங்களா அப்பனைச் சபையில் வச்சுவளாசச் சொல்லணும். யாருனாச்சும் இத்தைச் செய்வாங்களா?” என்று சவால் விடுவதுபோல் கேட்கிறாள்.

“எங்கே? பொறக்கிறது பொண்ணா இருந்து தொலைஞ்சிச்சின்னா?” முத்தம்மாள் இப்போது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறாள்.

“அது பொம்பிளையாத்தான் இருக்கணும். அவ கையில தான் சாட்டையைக் குடுக்கணும். பருவதம், நீ ஒரு அழகான பொண்ணப் பெத்து எங்கிட்டுக் கொடு. நாவளக்கிறேன். நீங்கல்லாம் சொம்மா, அரிசியும், கீரையும் தின்னுட்டு ஆம்பிளையக் கண்டா கரைஞ்சு போவீங்க. பளார் பளார்னு ஆளுக்குப் பத்து சவுக்கடி வாங்கினால் தான் என்னாண்ட வரலாம்னு சொல்லி அந்தப் பொண்ணைவுட்டே வஞ்சம் தீத்துக்கச் சொல்லிக் கொடுப்பேன். அதான் வழி!” என்று முழக்குகிறாள். ‘ஹோ’ என்ற சிரிப்பொலி தொடர்கிறது.

மைத்ரேயி ஊமையாய் நிற்கிறாள். குருதி வழிந்த நெஞ்சம் கெட்டியாகிக் கனக்கிறது.

முதல் நாளிரவிலிருந்து இவர்களை எல்லாம் வெறுத்தாளே? இங்கே அடைந்து கிடக்கும் இந்தப் பெண்கள் வெவ்வேறு விதங்களான கதைகளுக்கு நாயகிகளாக இருப்பார்கள். ஆனால் இந்தக் கதைகளின் மூலக் கருத்து ஒன்றே. காலம் காலமாகப் பெண் ஆணின் கொடுமைகளுக்கும் நயவஞ்சகப் போர்வைக்கும் தலை குனிந்தே வருகிறாள். அவள் எதிர்த்து நின்று சுயமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளத் திறமின்றியே மழுங்கிக் கிடக்கிறாள். முத்தம்மா அந்தப் பையனைக் கொண்டு சாட்டையடி கொடுக்கச் சொல்வேன் என்று முழக்கிய சொல் நன்றாகத் தானிருந்தது. ஆனால் அதுவே பெண்ணாகப் பிறந்தால் அவளையும் உடலைக் கொண்டே ஆணினத்தைக் கவரச் செய்து விலையாகச் சாட்டை அடிகளைப் பெற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று கூறியது, மைத்ரேயிக்கு அழுகிய கனியை நுகருவதுபோல் இருந்தது. ஒரு பெண்ணின் பிறப்பின் நோக்கமே, உடலும் போகமும்தானா? இறுக்கி இறுக்கிக் கால்போட்டுப் பின்னிய பின்னல் எவ்வளவு நீட்டி விட்டாலும் குறுகியே நிற்கும். மனசே வளைந்து குறுகிப் போயிருக்கிறது. அவள் பிரமை பிடித்தாற்போல் குளியலறை மூலையில் நிற்கையில் கூட்டம் பரபரவென்று கரைகிறது. அநுசுயா வந்து அவளைத் தொடுகிறாள்.

“ஏன், பிரேயருக்கு வரதில்லே, இங்கே நிற்கறே?”

“வரேன் ஒண்ணுமில்லே...”

முகத்தைக் கழுவிப் பொட்டு வைத்துக் கொண்டு அவள் அநுசுயாவுடன் பிரார்த்தனைக் கூடத்துக்கு வருகிறாள். பிரார்த்தனைக் கூடம் புதிய கட்டிடம்.

உள் முற்றம், கூடம் தாழ்வறையைக் கடந்து சமையலறையைப் பார்த்துக்கொண்டே மைத்ரேயி பக்கத்தில் உள்ள வாயிலில் இறங்குகிறாள். அந்த வாயிலுக்கு நேராக பிரார்த்தனைக்கூடம் தெரிகிறது. மேலே ஒளிரும் கொத்து விளக்கில் கண்கூசும் ஒளி இல்லை. எல்லோரும் இரு வரிசைகளாக எதிர் எதிரே அமர்ந்திருக்கின்றனர். முத்தம்மா ஆர்மோனியம் வைத்துக் கொண்டிருக்கிறாள். இரு பக்கங்களிலும் உள்ள குத்து விளக்குகளை ஒருத்தி ஏற்றுகிறாள். சுவரில் பெரிய இராமபட்டாபிஷேகப் படம் விளங்குகிறது. அதைவிடச் சிறிய அளவில் தஞ்சாவூர்பாணிப் படத்தில் கண்ணன் இரு தேவியருடன் காட்சி தருகிறான். கண்ணாடியின் நடுவே சரிகைச் சேலையில் முத்துச் சொருக்குடன் கோலம் கொண்டிருக்கும் மரகத வண்ண மதுரை மீனாட்சி; முருகப் பெருமான்; கணநாயகர்; இராமகிருஷ்ணர்; சாரதாமணி; விவேகானந்தர் ஒரு வரிசை. காந்தியடிகளும் கஸ்தூரிபாவும்...

தாமரைப்பூக்கோலம் என்றோ போட்ட மாக்கோல மாகத் தோன்றாமல் சிவப்புத் தரையில் புத்தம் புதியது போல் பளிச்சிடுகிறது.

கையில் நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு வள்ளி பாடுகிறாள்.

குரல் மிக இனிமையாக இருக்கிறது.

முதலில் கஜவதனா என்ற பாடலைப் பாடுகிறாள். தொடர்ந்து நாமாவளி சொல்கிறாள். எல்லோரும் சேர்ந்து இசைக்கின்றனர்.

கட்டைக்குரல், கீச்சுக்குரல், மென்குரல் எல்லாமாக இணைந்து ஒலிக்கையில் மனசுக்கு இதமாக இருக்கிறது. அடுத்து புத்தகத்தைப் பார்த்து, கீதையின் சாங்கிய யோகத் தமிழாக்கத்தைப் பங்கஜம் முறை வைக்கிறாள். மற்றவர்களுக்கு அது நன்றாகப் பாடமாயிருக்கிறது, மைத்ரேயிக்குத் தெரியாததால் எல்லோருடைய வாயசைவுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். முழங்கால் பாவாடைக்காரியும் இந்த பஜனையில் கலந்து கொள்ளாமல் தனியே அமர்ந்திருப்பதை அப்போது தான் மைத்ரேயி கவனிக்கிறாள். ஒருகால் அவளும் புதுசோ? கீதை முடிந்ததும் முழங்கால் பாவாடைரோஸி, நெஞ்சைத் தொட்டு, தோள்களைத் தொட்டு, நெற்றியைத் தொட்டு சிலுவைக் குறி செய்து கொள்கிறாள்; “lead kindly light” என்ற ஆங்கிலப் பாடலை அவள் ஒருத்தி மட்டும் பாடுகிறாள். கட்டுப்பாடுகள் உடனே தகர்ந்து போகின்றன. எல்லோரும் எழுந்திருப்பதைப் பார்த்த அநுசுயா, “ஏன் மெடிடேஷன் இல்லையா இன்னிக்கு?” என்று கேட்கிறாள்.

அதற்கு முத்தம்மா அவளை முறைத்துப் பார்த்து, “ஏன் காதலர்களை எல்லாம் தனிச்சு நினைக்கனுமோ? போடி பாசாங்கு” என்று ஏசுகிறாள்.

யாருமே தியானம் என்று அமரவில்லை. நினைவாக விளக்கை அணைத்துவிட்டு கூடத்து வாயில் இழுக்கும் கதவை சாத்தி விட்டு விரைகின்றனர்.

“ஆமா, காப்பிக்கு கொள்ளைபோகும் அவசரம்! அந்தக் கழுநீருக்கு!” என்று இகழ்கிறாள் பர்வதம்.

முற்றத்துச் சார்புக் கூடத்தில் ஒரு வயசிலிருந்து நான்கு வயசு வரை மதிக்கக்கூடிய ஏழெட்டுக் குழந்தைகள் பிரளயமாய் அழுது கொண்டிருக்கின்றன. ராசம்மா கொதிக்கும் பாலை வட்டையில் கரண்டியால் கிளறி ஆற்றிக் கொண்டிருக்கிறாள்.

“சனியனுக, எந்தக் கருமாதிகளோ பெத்துப்போட்டுட்டு இப்படிக் காதைப் பிடுங்குதுங்க. பால் பொங்க வேணாம்? டீ அநுசுயா? எங்கே போய்த் தொலைஞ்சா?” என்று கத்திக் கொண்டு சப்பை மூக்கும் பெரிய வாயுமாக அழுக்குச் சேலை அணிந்த ஒரு நடுத்தர வயசுக்காரி சமையல் கட்டிலிருந்து வெளிப்பட்டு வருகிறாள்.

“புது அட்மிஷன். பிரேயர் ஹாலைக் காட்டிட்டுவரப் போனேன். இத ஆச்சு. இத பாலு வந்திட்டதே, என் செல்லக் கண்ணுக...” என்று அவசரமாகப் பாலை ஆற்றி இரு உறிஞ்சு புட்டிகளில் இட்டு, ரப்பர் அடைப்பானைப் போட்டு, அதிகமாக அழும் இரண்டு குழந்தைகளுக்கு இரண்டு கைகளினாலும் கொடுக்கிறாள் அநுசுயா.

“ஏ, நாப்கின் குடுடி. என் டார்லிங் இவன்” என்று ரோஸி செம்பட்டை முடியும் பூனைக் கண்களுமாக விளங்கும் ஒரு மூன்று வயசுச் சிறுவனுக்கு கிண்ணத்தில் பாலை ஊற்றிக் கொடுக்கிறாள்.

“இந்த அநுசுயாவினால் ராத்திரியும் பகலும் இதுங்களோட அல்லாடி எனக்குத் தலைநோவு விட்டபாடில்ல. நான் அப்பாடான்னு வீட்ல போயி காலை நீட்டணும்!” என்று அலுத்துக்கொள்கிறாள் இன்னொரு ஆயாவான ரஞ்சிதம்.

சமையல்காரி அப்போதுதான் மைத்ரேயியை உற்றுப் பார்க்கிறாள்.

“பாப்பாரப் பொண்ணு போலிருக்கே, அடிப்பாவி!” என்று கன்னத்தில் கைவைத்துக் கொள்கிறாள்.

“அநுசுயாவுக்கு ரெட்டைப்பிள்ளை. ஒண்ணு கருப்பு; ஒண்ணு சேப்பு, ஒண்ணு நெட்டை, ஒண்ணு குட்டை, ஒண்னு பொண்ணு-ஒண்ணு ஆணு, வேற வேற அப்பா...” என்று மீனாட்சி களுக்கென்று சிரித்துக் கொள்கிறாள்.

“இந்தக் கழுதைகளுக்குப் போது விடிஞ்சா போது போனா இதான் பேச்சு!” என்று அதட்டுகிறாள் முத்தம்மா.

ராசம்மா மைத்ரேயியிடம், “நீ ஆபீஸ் ரூமிலே போயிரு; காப்பி குடிச்சிட்டு. சூபரன்ட் அம்மா வரும்...” என்று கூறுகிறாள்.

“சரி...” என்று தலையாட்டிவிட்டு அவள் நிற்கிறாள்.

“இன்னிக்கு பிரக்ஃபாஸ்ட் என்ன? கேப்பை கஞ்சியா புழுத்தமாக் கூழா?” இது ஒருத்தியின் விசாரணை.

“கூழுதான், இந்தப் புழுத்தமாவு ஸ்டோரில் இன்னமும் மூணு பீப்பாய் இருக்குதாம்...” என்று விவரம் தெரிவிக்கிறாள் முத்தம்மா.

“உவே,” என்று குமட்டலை வெளியிடுகிறாள் பர்வதம்.

அநுசுயாவும் ரஞ்சிதமும் புவனாவும் காபி குடித்த பிறகு குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவர்கள் பகுதிக்குச் செல்கின்றனர்.

ரோஸியும் மீனாட்சியும் மைத்ரேயி முதல் நாள் படுத்துக் கொண்டிருந்த அறையில் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க உட்காருகின்றனர்.

அப்போது வாளி நீரும் துடைப்பமுமாக இருவர் வருகின்றனர்.

“எந்திரிங்கடீ! பெரிய படிப்பு படிக்கிறீங்க. தண்ணியடிச்சிட்டு வந்து குடுங்க...” என்று ஒருத்தி மற்றவளின் புத்தகத்தைப் பிடுங்குகிறாள்.

உடனே மோதல் உண்டாகிறது.

சமையற்கட்டில் பர்வதம் அமர்ந்து ஒரு கூடை காய்ந்த கொத்தவரைக்காயை ஆய்ந்து நறுக்குகிறாள். அடுப்படியில் அமெரிக்க தருமமான மாவைக் கரைத்து, இரண்டு வட்டைகளில் கூழ்காய்ச்சிக் கொண்டிருக்கின்றனர் தெய்வநாயகியும் பங்கஜமும். பச்சை மிளகாயும் உப்பும் புளியும் வைத்து அந்த கூழுக்கு கொறடாவாக வள்ளி உரலில் சட்னி அரைக்கிறாள். எல்லோரும் அழுக்குப்படிந்த நீலக்கரை வெள்ளைச் சேலையைத்தான் உடுத்தியிருக்கின்றனர்.

அவளும் சற்றுப் போனால் அந்தச் சேலையைத்தான் உடுத்த வேண்டியிருக்கும்.

சிமிட்டித் தரையில் குழந்தைகள் பாலைச் சிந்தியுள்ள இடங்களிலெல்லாம் ஈக்கள் மொய்க்கின்றன. அங்கும் தண்ணீரைக் கொண்டு கொட்டுகிறாள் ஒருத்தி. இன்னொருத்தி துடைப்பத்தால் தேய்க்கிறாள்.

இந்த அழுக்குகளைக் கழுவ முடிகிறது. இப்படியே வாழ்க்கையில் படிந்துவிடும் அழுக்குகளைக் கழுவ இயலுமோ?

“நீ ஏன் இங்கே நிக்கிறே? ஆபீஸ் ரூம்ல உன்னைக் கூப்பிடுறாங்க!” என்று முத்தம்மா அவளுக்கு நினைவூட்டுகிறாள்.

முதல் நாளிரவு அவள் பார்த்த அறை திறந்திருக்கிறது. ராசம்மா உள்ளே நாற்காலி மேசையைத் துடைக்கிறாள். ஏதோ காகிதங்களை மேசைமீது ஒழுங்காக வைக்கிறாள். அந்த மேசை மீதிருக்கும் தொலைபேசி அப்போது ஒலிக்கிறது. ராசம்மா எடுத்துக் கேட்கும்போதே கொடிபோன்ற உடலுக்குடைய இளநங்கை ஒருத்தி அந்த அறைக்குள் நுழைகிறாள். பெரிய பெரிய மாங்காய் அச்சிட்ட காச்மீரப் பட்டுச்சேலை அணிந்திருக்கிறாள். சிற்பத்தில் கடைந்தெடுத்தாற் போன்ற கைகள். இளநீலவண்ணத்தில் சேலைக் கேற்ற குட்டைக் கைச் சோளி. ஒரு கையில் மெல்லிய கண்ணாடி வளையல்கள், பொருந்தும் வண்ணத்தில் அழகு செய்கின்றன; இன்னொரு கையில் தங்கக் காப்பில் பொருந்திய சிறுகடிகாரம் அணிந்திருக்கிறாள். விரலில் பெரிய நீலக்கல் பதித்த மோதிரம். மார்புப் பள்ளத்தில் வட்டவடிவமான தங்க முகப்பு விழும்படியான மெல்லிய சங்கிலி அவளுடைய தந்தக் கழுத்தை அலங்கரிக்கிறது. இயற்கையாகவே சிவந்த மேனி, இதழ்களில் மெல்லிய பூச்சுப் பூசியிருக்கிறாள். முன்புறம் அலை அலையாகத் தெரியும் கூந்தல், பின்புறம் கருநாகம் சுருண்டு கிடப்பது போன்று ஒரு மெல்லிய வலைக்குள் சுருண்டிருக்கிறது. அவளுடைய அழகைவிட அலங்காரமே அவளை வைத்த கண் இமையாமல் பார்க்கத் தூண்டுகிறது. ஆனால் அவளுடைய முகத்தில் இயல்பான மலர்ச்சி தோன்றவில்லை. தொலைபேசியை ராசம்மாளிடம் வாங்கிக்கொண்டு செய்தியைக் கேட்கிறாள்.

ஆங்கிலத்தில்தான் பேசுகிறாள். மைத்ரேயிக்காக லோகாதான் பேசுகிறாள் என்று புரிகிறது.

பிறகு அவள் நாற்காலியில் அமர்ந்து கொத்துச் சாவியை எடுத்து இழுப்பறையைத் திறக்கிறாள். ஏதோ காகிதங்களைப் பார்த்து மூடுகிறாள். பிறகு அலமாரியைத் திறந்து ஒரு தடிப்புத்தகத்தை எடுத்துப் புரட்டுகிறாள். முகத்தில் சிரிப்பே இல்லாத கண்டிப்பு நிலவுகிறது. ராசம்மா மைத்ரேயியைக் காட்டி “நேத்து லோகாம்மா ராத்திரி கொண்டாந்து விட்டாங்க...” என்று அறிவிக்கும்போதே, “தெரியும் சொன்னாங்க, நான் விசாரிக்கிறேன்” என்று அவள் நிமிர்ந்து பார்க்காமலே அலட்சியமாக நோட்டைப் பார்த்துக் கொண்டு கூறுகிறாள்.

“அப்ப... நான் வரட்டுமா, ஸிஸ்டர்?”

“இரு... போகலாம்...” என்று அவளை நிறுத்திவிட்டு அரசினர் மருத்துவமனை டாக்டர் கேட்பது போன்ற தோரணையில் அவள், ‘பேரென்ன?” என்று கேட்கிறாள்.

தன்னைத்தான் அவள் வினவுகிறாள் என்று புரிந்து கொண்டு பதிலளிக்கச் சில விநாடிகளாகின்றன மைத்ரேயிக்கு.

“மைத்ரேயி...”

“கல்யாணமாயிருக்குதா ?”

‘உம்...?”

“புருஷன் செத்துவிட்டானா?”

மைத்ரேயியை அந்தக் கேள்வியிலுள்ள வறட்சி தூக்கிவாரிப் போடச் செய்கிறது.

அவளையுமறியாமல் இல்லை என்று தலையாட்டு கிறாள். g

“பின்னே ? அடிச்சி நடுத்தெருவில் துரத்திட்டானா?”

“அதுவுமில்லே...”

“பின்னே...?”

அவள் கதையை அறிவதில் அவளுக்கொன்றும் சுவாரசியமோ இளக்கமோ இல்லை. பொறுமையைச் சோதிக்கக் கூடாது.

“நான் ஏமாந்து போய்விட்டேன்.”

மைத்ரேயிக்கு மடைதிறந்தாற்போல் கண்ணிர் பெருகு கிறது.

“நான்சென்ஸ். இப்ப ஏன் அழறே பின்ன கல்யாணமாச்சுன்னே ?”

“கல்யாணம்னுதான் பண்ணிட்டோம்.”

“பின்ன ஏன் இங்கே வந்து கழுத்தறுக்கிறே? கல்யாணம் பண்ணிட்டான்னா ஏன் ஏமாத்திட்டான்னு பழி போடு கிறே?” என்று அதட்டிவிட்டு, கல்யாணமானவள் என்று எழுதியதை பட்டென்று அடிக்கிறாள். வேறு எப்படியோ எழுதுகிறாள். மைத்ரேயிக்கு அவள் தன் உச்சந்தலையில் எழுதியதையே அடித்துவிட்டு அலட்சியமாகக் கிறுக்குவது போல் தோன்றுகிறது.

“சரி, போ! உனக்குப் புடவை, பாய், தலையணை, சாப்பாட்டுத் தட்டு, குவளை எல்லாம் கொடுக்கச் சொல்றேன்.

இந்தச் சேலை எல்லாம் உடுத்தக்கூடாது...” என்று கரும்பல கையில் ஆணிக்கோடு கிழிப்பது போல் விதிக்கிறாள்.

“எஸ் ஸிஸ்டர்...” என்று அவள் காட்டும் இடத்தில் கையெழுத்துச் செய்கிறாள்.

ராசம்மாதான் இவளுக்கு இரண்டு சேலைகள், குவளை, தட்டு, பாய், எல்லாம் எடுத்துக் கொடுக்கிறாள்.

அவற்றைப் பார்க்கையில் மதுரத்தின் சொற்கள் செவி களில் ஒலிக்கின்றன. அந்தப் புடைவையை உடுத்தும்போது, தன் பாரம்பரியத் தொடர்பு, குடிப்பிறப்பின் மேன்மை அவற்றில் படிந்த கறைகள் எல்லாவற்றையுமே களைந்து விட்டு அழுக்கிலும் சகதியிலும் புரண்டவர்கள் பூண்ட உடுப்புக்களை எடுத்துத் தான் அணிந்து கொள்வதாகத் தோன்றுகிறது. இதுவரையிலும் அவளுக்கோர் தனித்தன்மை இருந்தது. அது அழிக்கப் பெறுகிறது. தாமரைக்குளத்து மீனின் ருசியறிந்து சப்புக் கொட்டுபவள், பெரிய மனிதர் வீட்டில் வேலை செய்கையில் தவறிப்போய் தாயாகும் நிலைக்கு வந்தவள், கன்னிமார் மடத்திலிருந்து ஓடிவந்து தொழில் நடத்துபவனின் வலையில் விழுந்த பின் மீட்கப்பெற்றவள், போலீஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பெற்று சிறை வாசம் அனுபவித்து வந்து சேர்ந்தவள், எல்லாருடைய வரிசையிலும், அவள் ஒருத்தி. அன்றாடம் காலையில் அவள் வரிசையில் நின்று, ஆபீஸ்காரி மல்லிகா பி.ஏ. (சோஷியல் சயன்ஸ்) முன்பு பெயர் கூறும் போது அவள் தன் தனித்தன்மையைத் தானே புதைத்து விட்டதற்காக உள்ளுற அழுகிறாள். அந்தக் கட்டுக்களை அறுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என்றுகூட மனசு கொந்தளிக்கிறது. ஆனால் கட்டுக்களை அறுத்துக் கொண்டு வெளியே நடுவீதியில் நின்றவர்களுடைய கதைகளல்லவோ இந்தச் சுவர்களுக்குள் மூடிய இரணங்களாக இங்கே தஞ்சமடைந்திருக்கின்றன! இந்த புரையோடும் புண்கள் காய்ந்து ஆறுவதெப்போ?

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_8&oldid=1115344" இலிருந்து மீள்விக்கப்பட்டது