ரோஜா இதழ்கள்/பகுதி 9

9

பாலும் தெளிதேனும் பாகும்பருப்பு மிவை நாலும்
கலந்துனக்கு நான் தருவேன்; கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா...

பங்கஜம் இனிய குரலில் பாடி முடிக்கையில் ராசம்மா சூடத்தைக் கொளுத்திவைத்து ஆரத்தி எடுக்கிறாள். எல்லாப் பெண்களும் பிள்ளையார்த் தெய்வத்தின் முன் கன்னத்திலடித்துக் கொண்டு கை குவித்துத் தோப்புக்கரணம் போடுகின்றனர்; விழுந்து பணிகின்றனர். ஒவ்வொருத்தியும், நீராடி திருநீறும் குங்குமமும் அணிந்திருக்கின்றனர். வள்ளி பிரார்த்தனைக்கூடம் முழுதுமாகக் கோலமிட்டிருக்கிறாள். பரிமளா மாலை தொடுத்திருக்கிறாள். ராசம்மா இளமையிலேயே கணவனை இழந்தவள். பூசை செய்யும் பொறுப்பு எப்போதும் அவளுக்குத்தான். வாயால் எந்நேரமும் பொல பொலத்துக் கொட்டும் சமையற்காரி முத்தம்மாகூட பூசை முடியும் வரையிலும் வாய் திறக்காமல் கரங்குவித்து நிற்கிறாள். பிள்ளையாரப்பனுக்கு முன் ஒரு தவலை நிறைய அரிசியும் பருப்பும் போட்டுப் பொங்கி வைத்திருக்கின்றனர். கடலைச் சுண்டல், வடை, உடைத்த தேங்காய், வாழைப் பழம், பேரிக் காய், நாவற்பழம்; பொரி, வெல்லம் எல்லாம் படைத்திருக்கின்றனர்.

பூசைக்கென்று கிடைக்கும் தொகையில் கச்சிதமாகத் திட்டமிட்டுப் பொருள் வாங்கிய ஏற்பாடுகளும் ராசம்மா தான் செய்திருக்கிறாள். அவள் கீழ்த்தரமாகப் பேசுவதில்லை; தன் பொறுப்பைத் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் தலையிடுவதில்லை. அன்றாடம் பொருள் எடுத்துக் கொடுத்து. மல்லிகாவிடம் கணக்குச் சொல்லி, இல்லத்தை நேரடியாக நிர்வாகம் செய்யும் ராசம்மாளிடம்தான் மைத்ரேயி பேசுகிறாள். வேறு எவரையும் அவள் பொருட்டாக்குவதில்லை

பூசை முடிந்ததும் அவர்கள் அந்தக் கூட்டத்திலேயே நெருக்கிக்கொண்டு உட்காருகின்றனர். ராசம்மாளும் முத்தம்மாளும் வாழையிலைத் துண்டுகளை அவர்களுக்கு முன் போட்டு பிரசாதத்தைப் பங்கிட்டு வைக்கின்றனர்.

பழத்துண்டுகள், தேங்காய்க் கீற்று, பொங்கல், வடை, என்று எல்லோருக்கும் பரிமாறும்போது, பங்கஜம் ஒளவையார் சினிமாப் பாட்டுக்களை ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு நல்ல இனிமையான குரல். கேட்டுக் கேட்டே எல்லா சினிமாப் பாடல்களையும் அப்படியே பாடுகிறாள். கண்ணுக்கு அழகில்லாத தோற்றமுடையவளாக இருந்தாலும் வாட்டசாட்டமான உடலமைப்புக் கொண்டவள். மதுரைக்குப் பக்கத்துக் கிராமத்திலிருந்து, பட்டணத்துச் சினிமாவில் பாட்டுப்பாட சான்ஸ் வாங்கித் தருவதாகச் சொன்ன நண்பனை நம்பி வந்து, நடுத்தெருவில் நின்றபின் பிழைக்க வழிதெரியாமல் அவலமானவள். ஒரு பொது விடுதியிலிருந்து ‘மீட்க’ப்பெற்று வந்தவள். முறையான பயிற்சி ஏதுமின்றிக் கேள்வி ஞானத்திலேயே அவள் கேட்க மிக இனிமையாகப் பாடுகிறாள். அந்தத் திறமைகொண்டு உலகில் பிழைக்க இயலாதவளாக, சேற்றுக் குட்டையில் விழுந்தபின் இந்த முகம் தெரியாத முச்சந்திக்கு வந்திருக்கிறாள்.

மைத்ரேயி தன் இலையின்முன் வைத்த பண்டங்களைகூடக் கவனிக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்கையில் ராசம்மா கத்துகிறாள்.

“ரோசலின் ! ரோஸி ஏ ரோஸி!”

“எங்கே போயிட்டுது அந்தப் புள்ளே போய்க் கூட்டிட்டுவா, வள்ளி...”

“இந்நேரத்தில் அங்கேதானே நின்னிட்டிருந்தா?” மீனாட்சி எழுந்து சென்று அவளைக் கையைப் பிடித்து அழைத்து வருகிறாள்.

“எனக்கு இதெல்லா வேணான்னா ஏன் கம்பெல் பண்ணுறிங்க? உங்க சாமிக்குப் படைச்சதை நான் சாப்பிட்டாப் பாவம்...” என்று மறுக்கிறாள் அவள்.

மைத்ரேயிக்கு இது மிகவும் புதுமையாக இருக்கிறது.

“சாமிதானே ரோசி? சாமி எல்லாருக்கும் பொது. உங்க சாமின்னா என்ன, எங்க சாமின்னா என்ன ? சாப்பிடு ரோசி.” என்று இதமாக வற்புறுத்துகிறாள் ராசம்மா.

“அதெப்படி எல்லா சாமியும் ஒண்ணாகும்? எங்க சாமி பாவமே பண்ணாதவர். உங்க சாமி எல்லாம் கல்யாணம் கட்டியும் பாவம் செய்தவங்க...”

“ஆண்டவனே, ஏம்மா இப்படி எல்லாம் பேசுறே? சாமி எங்கானாலும் பாவம் செய்யுமா? இப்படில்லாம் பேசாதே ரோசி. ஆண்டவன் எல்லாருக்கும் பொது. காந்தி சொல்லலியா. ஞானம்மா நேத்து ஞாயித்துக் கிழமைப் பேச்சில்கூட இதெல்லாம் சொல்லலியா? உங்க சாமியையும்தான் கும்பிடறோம். இலையில் வந்து உக்காந்து பிரசாதம் வாங்கிக்க ரோசி.”

“என்னை ஏன் கம்பெல் பண்ணுறீங்க? எனக்கு இதெல்லாம் வேண்டாம்.”

“அப்ப இன்னிக்குச் சாப்பிடாம இருக்கப் போறியா நீ?”

“வேணாமே !”

மைத்ரேயி வியந்து நிற்கிறாள். எல்லாத் தனித்தன்மைகளையும் இந்தச் சேலை, அழித்துவிட்ட பிறகு, மதம் என்ற ஒன்றைப் பற்றிக் கொள்கிறாளே, எதனால்? இவளை ரோஸ்லீன் கிறிஸ்தவ மதப் பெண் என்று இனம் கண்டு கொள்ளுமுன், மீட்பு இல்லத்துப் பெண் என்றல்லவா குறிப்பிடுவார்கள்!

அழிக்கக்கூடாதது அழிந்துபோன பிறகு, அழிக்க வேண்டியதை இன்னம் பற்றிக் கொண்டிருக்கிறாளே!

ராசம்மா தருமசங்கட நிலையில் தவிக்கும்போது, சமையற்காரி முத்தம்மாள் “இன்னா தகராறு இங்கே?” என்று கேட்டுக் கொண்டு வருகிறாள்.

அவளுக்கு அப்போதுதான் விவரம் புரிகிறது.,

“நெல்ல நாயண்டி இது. நாந்தான் அப்பவே இவ இப்படிப் பேசுவான்னு தனியே கொஞ்சம் பொங்கலும் சுண்டலும் எடுத்து வச்சிருக்கேனே? ஏண்டி பின்னியும் அத்தெப்புடிச்சி கலாட்டா பண்ணுறிங்க? அதது மதம் சாதி. இன்னாமோ வச்சிருக்கு. அதென்ன மீனு கேக்குதா, கோழிக்கறி கேக்குதா? உங்க சாமிக்குப் படச்சது வாணாங்குது. இன்னாத்துக்கு? அது முன்னொருக்க பூசை பண்ணினப்பவே சொல்லிச்சி. அத்தெ மனசில வச்சுக்கிட்டே எடுத்து வச்சேன், சாமிக்குப் படைக்காம.” உண்மையில் முத்தம்மாள் வைத்திருந்ததாக மறைவிடத்திலிருந்து கூறிக் கொண்டு வந்ததை மைத்ரேயி நம்பவில்லை. ரோஸி மண்டபத்திலிருந்து நழுவியதைப் பார்த்த பிறகே எடுத்து வைத்திருக்க வேண்டும். முத்தம்மா ஆத்திரத்துடன் அதில் எச்சிலைத் துப்பியிருந்தாலும் வியப்பில்லை.

“ஆ..இந்தா, எலையில்லாட்டி தட்டைக் கொண்டு வச்சிக்க. எலையும் சாமி முன்னால வச்சிருந்தாங்க. உனக்கென்னாத்துக்கு...” என்று முத்தம்மா அவளைத் தட்டுக் கொண்டுவரச் சொல்கிறாள்.

“இலையைச் சாப்பிடப் போறாளா? தூக்கி எறியத் தானே போறோம்? இலைபோட்டுக்கிட்டா என்ன ?” என்று கேட்கிறாள் பர்வதம்.

“ஆமாம். இலையே போடு,” என்று ராசம்மா கூறினாலும் முத்தம்மா விடுவதாக இல்லை.

“அது வேணான்னா நாம ஏன் வற்புறுத்தணும்? ஏம்மா? எலை போட்டுக்கறியா?”

அப்பாடி, ‘உம்’ என்று தலையை ஆட்டுகிறாள் ரோஸலின்.

நெஞ்சில், தோள்களில் நெற்றியில் கைவைத்து சிலுவைக் குறி செய்து கொள்கிறாள். பிறகு அவள் இலையில் வைத்ததை உண்ணத் தொடங்குகிறாள்.

மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் சங்கேதங்கள் செய்துகொண்டு சிரிப்பதுமாகத் தொடங்கி குரல்கள் விழ்ந்து விழந்து கொண்டு மோதிக் கொள்கின்றன, சொல்லாயுதங்களால்.

மைத்ரேயிக்கு எல்லாம் பழகிப் போகின்றன. ராஜாவின் நன்கொடையால் எழும்பிய பள்ளியில் மீனாட்சியும் ரோஸலீனும் பத்தாம் வகுப்பில் படிக்கின்றனர். அங்கே அவளும் பள்ளி இறுதி வகுப்பில் இடம் பெறுகிறாள். லோகாவே அவளை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று பள்ளியில் சேர்த்துவிட்டுப் பரிவுடன் புத்திமதிகள் கூறியபோது அவள் நெஞ்சு நெகிழ நன்றி கூறத் தெரியாமல் நின்றாள்.

படகு கவிழ அலைகடலில் தூக்கி எறியப்பட்டவளுக்கு ஒரு மரத்துண்டு கிடைத்தாற்போல் அவளுக்கு அந்த வசதி கிடைத்திருக்கிறது. அவள் அலைகடலில் நீந்திக் கரையேற வேண்டும்.

பள்ளிக்கும் இல்லத்துக்கும் இடையே நிறையத் தொலைவு இருக்கிறது. அந்தப் பள்ளியின் வண்டி, இல்லத்தின் பக்கம் வரும்போது அவர்கள் மூவரும் ஏறிக் கொள்கின்றனர். பகலுணவு அங்கு கொடுக்கும் அறக்கட்டளை மதியச்சோறுதான். அது பல நாட்களில் வாயில் வைக்க முடியாததாக இருக்கும். படிப்பு ஏறாதவர்களுக்கு, படிக்க விரும்பாதவர்களுக்கு, அங்கே தையல், பூவேலை செய்தல் ஆகிய கலைகளைக் கற்றுக் கொள்ள வசதி செய்திருக்கின்றனர். இரவு படுத்துக் கொள்ளும் கூடமே பகலில் தொழிற்கூடமாயிற்று. எனவே மாலையில் அவர்கள் பள்ளி முடிந்து திரும்பும்போது, அந்தக் கூடம் அலங்கோலமாக இருக்கும். கூளமாய்க் கிடக்கும். வெட்டுத்துண்டுகள்; நூல் சிக்கல்களுக்குப் பொருத்தமாக தங்கள் அடக்கமற்ற உணர்வுகளை ஒலிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டும் ஏசிக் கொண்டும் வெளியிட்டுக் கொண்டுமிருக்கிறார்கள். சில நாட்களில் நோயாளிக் குழந்தைகளின் அழுகுரலும் சேர்ந்து ஒலிக்கும். சில நாட்களில் மல்லிகா அலுவலக அறையில் உட்கார்ந்திருக்கிறாள் என்பது புலனாகும். அன்று செயற்குழு உறுப்பினர்களைப் பற்றியோ, மல்லிகாவின் ஆடை அலங்காரங்களைப் பற்றியோ ஒருவரும் பேசமாட்டார்கள். ராசம்மாவிடம் அவர்களுக்கு அச்சமே கிடையாது. அந்தப் பெண்களுக்கெல்லாம் முத்தம்மாவுக்கு உதவியாகச் சமையலறைவேலை வாரத்தில் இரண்டு நாட்களாக மாறி மாறி முறையாக வரும். படிக்கும் பெண்களுக்கு ஞாயிற்றுக் கிழமை மட்டுமே ஒருநாள் முறைவரும். அன்று மைத்ரேயியும் மீனாட்சியும் பரிமாறி, பெருக்கி, துடைத்து, பாத்திரங்கள் துலக்கி மற்றவர்களைப் போல் உதவி செய்கிறார்கள். ரோஸ்லீன் சமையலறை வேலைக்கு வராமல் குழந்தைகள் பகுதிக்கு நழுவிவிடுகிறாள். அவளை யாரும் ஒன்றும் சொல்வதில்லை. ரோஸ்லீனும் மீனாட்சியும் அவளுடன் பள்ளிக்கு வந்தாலும், அவளுடன் பேசிப் பழகுவதில்லை. மைத்ரேயியும் அவர்களுடைய அருகாமையை நாடுவதில்லை. பள்ளி வகுப்பிலும்கூட அவள் தனியாகவே இருக்கிறாள். படிப்பு, படிப்பு, அது ஒன்றே குறி.

அந்தப் பள்ளியும் கைம்பெண்களின் மறுவாழ்வுக்கான இயக்கத்தினரின் முயற்சியில் நடைபெறும் பள்ளியாதலால் அவளைக் காட்டிலும் வயது அதிகமான பெண்கள் அங்கே கல்வி பயில்கின்றனர். என்றாலும் மீட்பு விடுதியிலிருந்து அவள் வருவதால் பலரும் அவளை இயல்பாக நெருங்குவதில்லை. மேலும் அமைதி, ஒழுங்கு, பாடங்களைக் கற்பதிலும் எழுதுவதிலும் அவள் காட்டும் ஆர்வம் எல்லாம் ஆசிரியர்களைக் கவர்ந்ததனால், அவர்கள் அவளிடம் அதிகமான பற்றுவைப்பதாக மற்றவர்களுக்குத் தோன்றியது. அதனாலும் மற்ற மாணவிகளுக்கு அவளை நெருங்கித் தோழமை கொள்ளப் பிடிக்கவில்லை. அநுசுயாவை அவள் பல நாட்களில் பார்த்துச் சிரிப்பதோடு சரி, பேசுவதற்கு நிற்பதில்லை.

இந்த மீட்பு இல்ல வாழ்க்கையில் அவள் மிகவும் ஆவலுடன் வரவேற்கும் நாள் சனிக்கிழமைதான்.

சனிக்கிழமைகளில் பிற்பகல் நான்குமணிக்கு அவர்களுக்கு நல்லுணர்வைப் போதிக்கும் வகையில் பேசுவதற்கு ஒரு பெண்மணி வருகிறாள். அந்த வகுப்புக்குப் புத்தகம் நோட்டு ஒன்றும் கிடையாது. அதில் பரீட்சையும் இல்லை. அலங்கோலமாகி விட்ட புறவாழ்க்கையில் உழன்றபின், கட்டுப்பாடுகளுக்குட்பட்டு ஒழுங்கான வாழ்க்கைக்குத் திரும்பும் அவர்களுக்கு அக உணர்வுகளும் சீராகி நன்னெறி காண அவள் உதவுகிறாள். சென்ற ஒராண்டுக் காலமாகத் தான் ஞானம்மா அங்கு வருவதாகச் சொன்னார்கள்.

அவளைப் பார்க்கையில் தன் உணர்வுகளெல்லாம் குவிந்து ஒருமுகமாவதாக மைத்ரேயிக்குத் தோன்றுகிறது. பளிங்குக் கண்ணாடியை நினைப்பூட்டும் பொன்முகம். ஆழ்ந்த தடாகம் போன்ற கண்கள். அவளுடைய வயசின் முதிர்ச்சியை நரைத்துப் போன பசையற்ற கூந்தல்தான் வெளியிடுகிறது. சதைப்பற்று இல்லாத உயர்ந்த உடல்வாகு. எதேனும் படிக்கும்போது மட்டும் அவள் கைப்பையைத் திறந்து கண்ணாடி எடுத்து அணிவதனால் அவளுக்கு நாற்பது வயசிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. செவிகளில், கைகளில், கழுத்தில் கடிகாரம் தவிர ஒரு அணி கிடையாது. மெல்லிய கோடுகளிட்டோ, வெறுமையாகவோ, கடுகு மஞ்சள், அல்லது பாலேடு நிறங்களில் சேலை உடுக்கிறாள். வெள்ளைச் சேலையும் விலக்கில்லை. நெற்றியில் பளிச்சென்ற குங்குமம். அவள் கைம்பெண்ணல்ல என்று காட்டிக் கொடுத்து விட்டு மெள்ளச் சிரிக்கிறது

மைத்ரேயிக்குச் சனிக்கிழமைகளில் அநேகமாகப் பள்ளியில் தனி வகுப்பு இருக்கும். பள்ளி இறுதியாண்டானதால் சனிக்கிழமையை, ரோஸ்லீனையும் மீனாட்சியையும் போல் அவளால் விடுமுறையாக அனுபவிப்பதற்கில்லை. அன்று பள்ளி பஸ்ஸும் வராது. எனவே அவள் நகர பஸ்ஸைப் பிடித்து, ஓரிடத்தில் இறங்கியபின் சிறிது தொலைவு நடக்கவேண்டும். அதற்குச் சில்லறை ராசம்மாள் கொடுக்கிறாள். எது எப்படியானாலும் அவள் ஞானம்மாவின் வகுப்புக்கு வந்துவிடத் துடித்துக் கொண்டிருக்கிறால் பிரார்த்தனைக் கூடத்தை அவளே பெருக்கி, ஓரத்தில் சிறு மேசையும் நாற்காலியும் அவளே போடுகிறாள். குடுவையில் நல்ல மலர்களைப் பறித்து வைக்கிறாள்; நல்ல மேசை விரிப்பை விரித்து வைக்கிறாள்.

ஒரு குறிப்பிட்ட பொருள் எல்லைக்குள் ஞானம்மாளின் பேச்சுக்களை வரம்பு கட்டுவதற்கில்லை. மனித வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளில் உடலைச் சார்ந்தவைகளாக உணவு, உறையுள், குடிநீர், காற்று, உடை என்று கொண்டால், உள்ளத்தைச் சார்ந்து, செம்மையான வாழ்வுக்கு தேவையாக இருப்பது நல்லொழுக்கமே. இந்த நல்லொழுக்கப் பயிற்சிக்கு வேண்டிய நெறிகளைப் பற்றியே அவள் அழகாகப் பேசுகிறாள். அன்பு, அஹிம்சை, உண்மை, எளிமை, அஞ்சாமை, உடல் உழைப்பின் பெருமை, அழுக்காறாமை, கடமை உணர்ந்து சுயநல மறுத்தல் என்றெல்லாம் தொடர்ந்து கூறலாம். இந்த வகுப்புக்கு இல்லத்துப் பெண்கள் அனைவரும் கட்டாயமாக இருக்கவேண்டும் என்பது விதி. சிலசமயங்களில் அநுசுயாவும் சமையல்கார முத்தம்மாவும் கூட வருகிறார்கள். மைத்ரேயிக்குத் தெரிந்த ஒரு சனிக்கிழமை செயற்குழுவினர் கூடும் நாளாக இருந்தது. உறுப்பினர் கூடும் இடம் பிரார்த்தனைக் கூடமல்ல. மாடியில் அதற்கென்று தனியாக ஒரு கூடம் இருக்கிறது. விதவிதமான கொண்டைகளும் பட்டுச் சேலைகளும், பறவையொலிகளைப் போன்ற ஆங்கிலச் சொற்களுமாக உறுப்பினர்கள் வந்து மாடியேறிப் போவார்கள். அந்தச் சனிக்கிழமையன்று அவர்களில் சிலர் கூட்டம் முடிந்த பின் ஞானம்மாளின் வகுப்பில் வந்து அமர்ந்தார்கள். அவர்கள் அங்கே வந்தமர்ந்ததும், அத்தனைப் பெண்களின் கண்களும் அவர்கள் மீதே பதிந்தன. ஏனெனில் கொண்டை மாதிரிகள், சேலைகளின் கவர்ச்சி, ஒப்பனையழகுகள் எல்லாம் வெள்ளைப் புடவைகளையும் அன்றாடம் சிறிது தேங்காயெண்ணெயும் ஒரு மரச் சீப்பையும் தவிர வேறெதற்கும் ஆசைப்பட இயலாத அந்த ஏழைப் பெண்களின் மனங்களைச் சுண்டி இழுக்கக் கூடியவையாக இருந்தன. அத்துடன் அவர்கள் தங்களுக்குள் இடையே கசமுசவென்று பேசவும், சிணுங்கிச் சிரிக்கவும் தொடங்கியவுடன் ஞானம் சரேலென்று வகுப்பை முடித்து விட்டுப் போய்விட்டாள்.

அதற்குப் பிறகு அவள் இடையில் எவரும் வந்து போகக் கூடாது. வகுப்புக்கள் இல்லத்துப் பெண்களுக்கு மட்டுமே என்று ஓர் அறிவிப்பை வாயிலில் எழுதி வைத்தாள்.

இந்த அறிவிப்பு செயற்குழுவினருக்கு எட்டி, அவர்கள் அடுத்த கூட்டத்தில் ஞானம்மாளின்மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ததாகவும், ராஜாவும் லோகாவும் அதற்கு உடன்படவில்லை என்றும் இல்லத்துப் பெண்கள் பேசிக் கொண்டார்கள்.

லோகா ஞானம்மாளிடம் பெருமதிப்பு வைத்திருக்கிறாள்.

அவள் சில சனிக்கிழமைகளில் மாலை ஆறு மணியளவில் அலுவலகத்துக்கு வந்து போவதுண்டு.

மைத்ரேயியிடம், “ஞானம்மா இன்று என்ன பேசினார்?” என்று விசாரிக்கிறாள்.

அவளுக்குப் பாலோ, பழச்சாறோ கொண்டு வந்து கொடுக்கச் சொல்கிறாள்.

ஒரு நாள் மண்டபப் படியில் லோகா அவளைச் சந்திக்கிறாள். “இந்தப் பெண்களெல்லாரும் கொடுத்து வைத்தவர்கள் எங்களைக் காட்டிலும்” என்று புன்னகை செய்கிறாள். “நீங்கள் செயல்புரிபவர்; நான் வெறும் ப்ளூ பிரின்ட்!” என்று நகைக்கிறாள் ஞானம். “ஒவ்வொருத்தியின் மனமும் கல்லில் அறைபட்டுக் கிழிந்த துணியைப் போல் இருக்குமென்று எனக்குத் தெரியும். அதை முண்டும் முரடுமாகவேனும் ஓட்டுப்போட முடியுமோவென்று ஏதேதோ உளறி விட்டுப்போகிறேன். நீங்கள் விரும்பி ஆசைப்பட்டு இங்கே வந்து உட்காருவதை நான் மறுப்பேனா?”

“இல்லை, நீங்கள் கோடு கிழித்தது ரொம்ப சரி. ஞானம்மா, நாங்கள் எல்லாரும் வேறு உலகில் புரளுபவர்கள். பேச்சுத் திறனும், அறிவுத் திறனும் எதற்கெல்லாமோ பலியாகிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியாமல் உடன் செல்பவர்கள்; இந்த உங்கள் உலகம் தூய்மையாகவே இருக்கட்டும். எங்கள் பிரச்சனைகளையும் கல்மிஷங்களையும் சுமந்து கொண்டு இங்கே வந்து பொழுது போக்கும் நோக்கத்துடன் உட்காருவதை நீங்கள் அநுமதிக்காதது ரொம்ப சரி; ராஜா மிகவும் சந்தோஷப்பட்டார்.”

இந்த உள்ளங்கரைந்த வார்த்தைகளைக் கேட்டு மைத்ரேயி மெய்சிலிர்க்க நின்றாள்.

ஞானம் வந்து போகும் வரையிலும் மைத்ரேயியை ஓர் பரபரப்பு ஆட்கொள்கிறது. சென்ற பிறகோ, அன்றைய வகுப்பில் அவள் பேசிய கருத்துக்களே சிந்தையைக் கிளர்த்துகின்றன. அநேகமாக அவள் பேசி முடித்த பின்னரோ, இடையிலோ, மைத்ரேயி ஏதேனும் ஐயப்பாட்டுக்கு விளக்கம் கேட்கும் வகையில் எழுந்து நிற்கிறாள். அது உண்மையான சந்தேகமே இல்லை. அவளுடன் பேச வேண்டும், தனிப்பட்ட முறையில் அவளை அணுக வேண்டும், அவளைப்பற்றி அறியு முன்தன் வரலாற்றையும் குறைகளையும் அவளிடம் கொட்டி விட வேண்டும் என்ற உந்துதலில் விளையும் செயலே அது.

ஒரு சனிக்கிழமை அவளுக்குப் பகல் பதினோரு மணிக்குத் தான் கணக்கு ஆசிரியை பள்ளியில் வகுப்பு வைத்திருக்கிறாள். வகுப்பு முடிய மூன்று மணியாகி விடுகிறது. அதற்குப் பிறகு வெகுநேரம் பஸ் கிடைக்காமல் காத்திருந்த மைத்ரேயி, ஞானம்மாளின் ஒரு மணி நேரத்தைத் தவறவிடக் கூடாதென்ற பரபரப்புடன் நடந்தே வருகிறாள். மணி மூன்றேமுக்கால்.

பகலுணவு கொள்ளவில்லை என்ற நினைவில்லை. நேராக அவள் புத்தகங்களுடன் பிரார்த்தனை மண்டபத்துக்கு வருகிறாள்.

ஞானம் பேச்சைத் தொடங்கியிருக்கவில்லை. மற்ற பெண்களுடன் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருக்கிறாள். எல்லோரும் ஒருமித்துச் சிரிக்கும் ஒலி படியேறும்போதே புலனாகிறது. விரைந்து படியேறி அவள் கடைசி வரிசையில் அமரும்போது எல்லோருடைய கவனமும் அவள்மீது படிகிறது.

“இங்கே வாம்மா, மைத்ரேயி!”

“மன்னிக்கணும் மேடம், நேரமாயிட்டது...” என்று தலைகுனிந்து நிற்கிறாள் மைத்ரேயி.

ஞானம் புன்னகை செய்கிறாள்.

“நேரமானதுக்கு நான் எப்படி மன்னிப்பது ? சாப்பிட்டாயா?” மைத்ரேயிக்கு சட்டென்று மறுமொழி கூறத் தெரியவில்லை. உண்மையில் பசி எங்கோ சாம்பற் குவியலுள் நெருப்பாக இருக்கிறது. காலையில் எட்டரை மணிக்குக் குடித்த கஞ்சிக்குப் பிறகு குடலில் ஒன்றும் விழவில்லை. அந்த சாம்பற் குவியலை ஞானம் ஊதிவிடுகிறாள்.

“போ, சாப்பிட்டு விட்டுவா. இன்னும் கொஞ்ச நேரம் வள்ளியையும் முத்தம்மாளையும் பாடச் சொல்கிறேன்...” என்று ஞானம் கூறுகிறாள்.

முத்தம்மாளும் வள்ளியும் பாடுகிறார்களா? அவர்கள் பொல பொலவென்று வசை பாடுவதில்தான் வல்லவர்கள் என்றல்லவா மைத்ரேயி நினைத்திருக்கிறாள்?

மைத்ரேயி சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் சமையற் கட்டுக்கு ஓடுகிறாள்.

அவளுடைய சாப்பாடு. புழுங்கலரிசிச் சோற்றில் ஊற்றிப் பிசைய ஒரு காரக்குழம்பு, காய்க் கூட்டென்று ஒரு உருப்புரியா மொத்தை, மோரென்று பேர் படைத்த ஒரு திரவம்.

சமையற்கட்டு துப்புரவாக இருக்கிறது. படிப்பறையில் தட்டோடு வைத்திருக்கிறாளோ சமையற்காரி முத்தம்மா?

ஓடிவந்து படிப்பறையில் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். இல்லை. சாப்பிடும் கூடத்துக்கே மீண்டும் வருகிறாள். மரத்தட்டு வரிசையில் அவளுடைய இருபத்து மூன்றாம் எண் தடுப்பில் அவளுடைய தட்டும் குவளையும் அவளைப் பரிதாபமாக நோக்குகின்றன.

இன்று அவள் பகல் பட்டினி. இது மைத்ரேயிக்கு முதல் தடவையல்ல. மூன்றாந் தடவை. யாரேனும் அவள் உணவை உண்டுவிடுவார்கள். சமையற்கார முத்தம்மாவே பெருந்தீனிக்காரி. அருகிலே அவளுக்குப் பெண்பிள்ளை என்று குடும்பம் இருக்கிறது. நஞ்சானும் குஞ்சானுமாகச் சமையற்கட்டில் அவ்வப்போது வந்து உறவாடுவதை அவள் பார்த்திருக்கிறாள். இன்று ராசம்மா உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சலாகப் படுத்திருக்கிறாள். இனி ஐந்து மணிக்குத் தேநீர் கொடுப்பார்கள் என்ற நினைவு வருகிறது. சில விடுமுறை நாட்களில் புரை பிஸ்கோத்தும் கொடுப்பார்கள்.

பானையிலிருந்து வெறும் நீரை எடுத்துக் குடித்துவிட்டு அவள் மண்டபத்துக்கு விரைந்து வருகிறாள்.

முத்தம்மா அழகாகப் பிரலாபித்து அழுது கொண்டிருக்கிறாள். “உன்ற பூவான மொகத்திலே பொட்டிட்டு பார்க்கலியே, பொட்டிட்டு பார்க்கலியே, மையிட்டுப் பார்க்கலியே, மையிட்டுப் பார்க்கு முன்னே, மருக்கொழுந்து சூடுமுன்னே, மருக்கொழுந்து சூடுமுன்னே மன்னவனார் பார்க்கு முன்னே, மாபாவியாக்கிவிட்டு மண்ணுக்குப் போனாளே.”

‘ஏ ஏ ஏ’ என்ற ஒலக்குரல் அந்தப் பிரார்த்தனை மண்டபம் முழுவதும் சென்று முட்டுவது போலிருக்கிறது. ஒருவரும் சிரிக்கவில்லை. முத்தம்மா வெறும் பொழுது போக்குக்காக நாட்டுப்பாடல் என்ற பெயரில் பிரலாபித்து அழவில்லை. உண்மையில் மாண்டுபோன தன் செல்வச் சிறுமகளின் சடலத்தை மடியில் போட்டுக்கொண்டு தாயொருத்தி கரையும் துயரப் புலம்பலே அது. ஞானம்மாளின் கண் களும் கசிகின்றன. சூழலே கனக்கிறது.

முத்தம்மா சொற்களை மறந்து உண்மையில் தேம்பித் தேம்பி அழுகிறாள். அந்தத் துயர அலைகள் அங்கு அமர்ந்திருந்தவர் உள்ளங்களிலெல்லாம் சோக இழைகளை மீட்டி விட்டாற் போல் எல்லோரும் அந்தக் கனத்த சூழலைக் கலைக்க மனமில்லாதவர்களாய் ஒன்றியிருக்கின்றனர். அப்போது ஞானம் எழுந்து முத்தம்மாவிடம் வருகிறாள்.

“அழாதே முத்தம்மா. அழாதே..” என்று மெதுவாக முதுகைத் தொடுகிறாள்.

“நினைப்பு வந்திட்டது. சே...!” என்று கண்களைத் துடைத்துக் கொள்கிறாள் அவள்.

“உன் குழந்தையா முத்தம்மா... அழாதே... என்ன வயசு?”

“ரெண்டு வயசு அம்மா. ஆப்பூ வாங்கித் தரியான்னு கேட்டுக்கிட்டே கண்ணை மூடிச்சி.”

“சீக்கு வந்ததா?”

“பாவி பாலு வாங்கக் காசில்லாம பரதேசியாயிருந்தேன். வயித்துக் கடுப்பு வந்து செத்துப் போச்சி. பித்துப்பிடிச்ச மாதிரிப் போயி மறுக்கவிட்ட எடத்துக்கே போயிக் குழில விழுந்தேன்.”

ஒரு குழந்தை, பெண்மையின் உடல் வேட்கையைத் தூய அன்பாக மாற்றிச் சமுதாயத்தில் அவளை நோக்கும் இன்னல் களை எதிர்த்து வாழத் துணிவு கொடுக்கிறதென்ற உண்மையை அவள் விண்டுவைத்தாற் போலிருக்கிறது.

“குழந்தை...மனித குலத்துக்கு இறைவன் தந்திருக்கும் பாலுணர்வின் புனித நோக்கமே அதுதான். கணநேர நுகர்ச்சியின் விளைவைப் பெண் கட்டாயமாக ஏற்றுத்தான் சுமக்கிறாள். அந்தச் சுமையே ஒரு வகையில் அலைகடலின் கரையோரமாக அவள் அசையாது நிற்கும் நங்கூரமாக அமைகிறது. குழந்தை என்ற அந்தச் சுமை வேண்டாத பொறுப்பாக வந்து ஒட்டிக் கொண்டாலும், தாய்மை என்ற இயல்பான இனிய பாச உணர்வுகளை அது எந்த நிலையிலும் கிளர்த்தக் கூடியதாகவும் இருக்கிறது. அந்த ஈரத்தில் அவள் புனிதம் கெடாமலும் வாழ முடிகிறது. அதை இழந்ததும் அலைகடலின் கரையோரம் நிற்க நங்கூரத்தை அவள் இழந்துவிடுகிறாள்.”

ஞானம் தனக்குத் தோன்றியதைத்தான் கூறுகிறாள். பெண்கள் எல்லோரும் ‘ஆமாம், ஆமாம்’ என்று கூறுவது போல் அவளையே நோக்கியிருக்கின்றனர்.

மைத்ரேயியின் உள்ளத்திற்கு அவளுடைய கருத்து முரணாகப்படுகிறது. அப்படியானால் சந்தர்ப்ப வசத்தால் தன்னை இழந்தவள், கட்டாயமாகவேனும் வேண்டாத சுமையினால் தான் இழிவான நிலைக்குத் தன்னை ஆளாக்கிக் கொள்ளாமல் மீள்கிறாளா? இல்லாவிட்டால் தன்னைத் தானே அவள் காப்பாற்றிக் கொள்ள மாட்டாளா?

“எனக்கு நீங்கள் சொல்வது சரியாகப் படவில்லை, மேடம்!” என்று எழுந்து நிற்கிறாள் மைத்ரேயி,

“ஓ...நீ வந்துவிட்டாயா? சாப்பிட்டாச்சா, அதற்குள்?”

“உம்...”

“என்ன சாப்பிட்டாய், சொல்!”


மைத்ரேயி சிறிது நேரம் விழிக்கிறாள். காலையில் அன்றையச் சமையல் என்னவென்ற திட்டத்தை அவள் கேட்கவில்லை.

எனினும், “பாகற்காய் சாம்பார்; கருணைக்கிழங்குக் கூட்டு” என்று ஏதோ நினைவில் கூறி வைக்கிறாள்.

யாரோ ஒருத்திகளுக்கென்று சிரிக்கிறாள். மீனாட்சி, “இன்னிக்கு பீர்க்கங்காய்கூட்டு, வெண்டைக் காய் சாம்பார்!” என்று அறிவிக்கிறாள்.

“ஒரே வழவழ... அதான் நெஞ்சில் நிக்காமல் முழுங்கியிருக்கிறாய். ஆனா, பாகற்காய்க்கும் வெண்டைக்காய்க்கும் வித்தியாசம் தெரியலே , உனக்கு ?”

மைத்ரேயி மறுமொழியின்றி நிற்கிறாள்.

“பசிக்கு பாகற்காயும் கசப்பல்ல; வெண்டைக்காயும் வழவழப்பல்ல” என்று தொடங்கி ஞானம் காந்தியடிகளின் உணவுக் கொள்கையைப் பற்றி விவரிக்கிறாள். “அவர் ஒரு முறை பாகற்காயையும் வெண்டைக்காயையும் கீரையையும் வேகவைத்து அதை ஆட்டுப்பாலில் கலந்து புசித்தாராம். அருகில் இருந்த நண்பரையும் அந்த உணவை ருசிக்கச் செய்தாராம். உணவு உடலுக்கு ஊட்டம் அளிக்கிறது; ஆனால் அந்த ஊட்டம் ஆன்மாவைத் துலங்கச் செய்யும் நோக்குடையதாக இருக்க வேண்டும். உடலின் தேவைகளை மிகுதியாக்கக் கூடிய சுவைகளை வளர்ப்பது மனிதனின் நல்வாழ்வுக்கு இடையூறு செய்வதாகும். நாவுசுவைக்க, மக்களுக்கு மசாலைப்பொருள் சேர்த்தும் எண்ணெயில் பொரித்தும் வறுத்தும் உணவு சமைக்கும் தாய், தன்மக்களின் நல்வாழ்வுக்கு உண்மையில் நலம் செய்யாதவள். ஆனால், அதே தாய், குழந்தைக்குப் பாலூட்டும் போது, தனக்குப் பிடித்த உணவுகளை எல்லாம் ஒதுக்கி, குழந்தையின் உடல் நலனுக்குகந்த எளிய உணவுகளை உண்ணும்போது, இயல் பான தியாகம் செய்கிறாள்...”

தியாகத்தைப் பற்றி ஞானம் மீண்டும் பேச வருவதை மைத்ரேயி ஆதரிக்கவில்லை.

“மன்னிக்கணும் மேடம். பெண்தான் தியாகம் செய் கறாள், செய்ய வேண்டும் என்று நீங்களும் கூட ஒத்துக் கொள்கிறீர்களா? காலம் காலமாகப் பெண் குலத்தைத் தியாகம் தியாகம் என்று சொல்லி அடிமை நிலையிலேயே வைத்திருக்கிறார்கள்...”

மைத்ரேயிக்கு தன் மனதிலுள்ள உணர்வுகளை அழகிய சொற்களாக்கும் பொறுமைகூடயில்லை. குமுறும் உணர்வுகள் இனம் புரியாமல் மோதிக் கொண்டு வருகின்றன. அவளு டைய தாய், அக்கா, மதுரம், அம்மணியம்மாள்.... எல்லோருமே சுயமாக நிமிர்ந்து நிற்க எந்தச் சந்தர்ப்பமுமே கிட்டாமல், தங்கள் சுதந்திரங்களை எந்தவகையான நன்மையுமின்றித் துன்பங்களுக்காகவே பிணித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஞானம் புன்னகை செய்கிறாள்; “உண்மைதான். நான் ஒப்புகிறேன் மைத்ரேயி, ஆனால் பெண்களின் இயல்பான பலவீனங்களே அவர்களுடைய சுதந்திரங்களைப் பிணிக் கின்றன. நகை, நல்லதுணி, வாசனைப் பொருள் என்றால் எத்தகைய அறிவாளியான பெண்ணும் மனமழிந்து போகிறாள். பெண்களை மெல்லியலார் என்று குறிப்பதே இத்தகைய பலவீனங்களை முன்னிட்டுத்தான் என்றுநான் நினைக்கிறேன். இந்த ஆசைகளே அவர்களைக் கண்களை மூடிக் கொண்டு இழிந்து செல்ல வழிகாட்டுகின்றன. இந்த மோகங்களை வெல்லாத வரையில் பெண்ணுக்கு விடுதலை உண்மை யாக இல்லை.”

“அதெப்படி மேடம் ? ஒரு பெண் கண்ணுக்கு அழகாக இல்லைன்னா கல்யாணமாகிறதில்லே, பணம் காசு இருப் பவர்கள் கட்டிக் கொடுத்து வாழ்வை விலைக்கு வாங்க முடியுது. நல்ல நகை, சேலை இல்லாம எப்படி..?” என்று கேட்கிறாள் பங்கஜம்.

“பணத்துக்காகவும் நகைக்காகவும் மணம் செய்து கொள்பவர்களின் வாழ்வு உண்மையில் எப்படி அமைதியும் ஆனந்தமும் கூடியதாக இருக்க முடியும்? முதலில் பெண் இம்மாதிரி ஆசைகளை விட்டொழித்தால் வரதட்சிணை போன்ற கொடிய வழக்கங்கள் கூடக் குறையும். அற்ப ஆசைகளினால் எத்தனை சிதைவுகள் ஏற்படுகன்றன? சிறு வயசில், கவடு புரியாத பருவத்தில் பூவும் பொலிவும் மகிழ்ச்சி யைக் கொடுக்கின்றன. அதை அனுமதிக்கலாம். அதுவே வயசாகும் போது பேராசையும் சுயநலமும் பெறாமையுமாக உருவெடுக்க விடக்கூடாது. எனக்குத் தெரிந்த ஓரிடத்தில் ஒரு குடும்பத் தலைவன் பெண்சாதியின் நகை, சேலை, ஆடம்பர ஆசையினாற் இலஞ்சம் வாங்கிப்பழகி, உண்மை வெளிவரும் நேரத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். பெண்ணே, உன்னுடைய வாசனைகளும், வண்ணங்களும் மனசிலிருக்கும் நேர்மையான அன்பிலிருந்து பிறக்கவேண்டும். ஒரு ஆட வனைக் கவருவதற்காக நீ உன்னை அலங்கரித்துக் கொள்ளாதே” என்று காந்தியடிகள் கூறுகிறார்.

“அது எப்படீம்மா? ஒருநாள் வெளியே போனாக்கூட வெளியே கடைவாசலில் தென்படும் துணியிலெல்லாம் ஆசை வரத்தான் வருது. அது எப்படி வராமலிருக்கும் ?” என்று கேட்கிறாள் புவனா.

“அப்ப பூ வைக்கக்கூடாது; பொட்டு வைக்கக்கூடாது. நல்ல சேலை உடுத்தக் கூடாதா?” என்று கேட்கிறாள் பங்கஜம்.

“கூடாதென்று சொல்லவில்லையம்மா. எளிமையான இயல்பு ஒரு அழகு; இனிமையான பேச்சும், கவடற்ற மனசும், அன்பும் தியாகமும் பிறக்கும் உள்ளம் கொடுக்கக்கூடிய அழகை, செயற்கையாக ஆடம்பரப் பொருள்களைக் கொண்டு செய்துகொள்ளும் ஒப்பனையினால் கொடுக்க முடியாது. அது வேறு.”

ஒரு மெல்லிய குரல்: “மிஸஸ் சிவநேசன் நர்மதாதேவி... இவங்களைப்போல...” என்று விள்ளுகிறது.

உடனே வாயை மூடிக்கொண்டு பலர் சிரிக்கின்றனர்.

“ராத்திரி எல்லாம் முடியில் கிளிப்புப் போட்டு சுருட்டிக்கு வாளாண்டி, சிவநேசன்” என்று ஒருத்தி கிசுகிசுக்கிறாள்.

“நம்ம விநோத் பையன் முடி எப்படி அழகாய்ச் சுருட்டியிருக்கு...? அது இயற்கை... என்று” குழந்தைப் பிரிவிலுள்ள நான்கு வயசுச் சிறுவன் ஒருவனைக் குறிப்பிடுகிறாள் அதுசுயா.

மைத்ரேயி எழுந்து நின்று, “அப்படி நகை, சேலை மோகத்தை விட்டொழித்துவிட்டால்மட்டும் பெண் உடனே சுதந்தரமாகிவிடுகிறாளா ? இல்லையே? என்னிடம் நகையில்லை; உயர்ந்த ஆடம்பரங்களில்லை; எனினும் என்னால் நகரின் பகுதிகளில் எந்த நேரத்திலும் தனியாகப் போய்வர முடியுமா?” என்று கேட்கிறாள்.

“முடியாதுதான். துரதிர்ஷ்டவசமாக அப்படித்தான் கூற வேண்டியிருக்கிறது மைத்ரேயி. அதற்குப் பெண்கள் அஞ்சாமை என்னும் ஆபரணத்தைப் பூண்டிருக்க வேண்டும். நேருக்குநேர் சந்தர்ப்பங்களை நோக்கும் துணிவுடையவர்களாக மாறவேண்டும்; அதற்கு முதற்படியாகத்தான் பலவீனங்களாகிய கனத்தை மடியில் சுமக்கக்கூடாது என்றேன். ஒரு ஆடவன் தவறான எண்ணத்துடன் ஒரு பெண்ணை அணுகுகிறான் என்றால், ஒரு வகையில் அந்தப் பெண்ணும் அதற்குக் காரணமாகிறாள். அப்படி அணுக இயலாதவளாய் ஒரு பெண் மாறமுடியும். அந்த நிலையைப் பெண்கள் மனசு வைத்தாலே கொண்டுவரலாம்.” மைத்ரேயி முன்னைக் காட்டிலும் அதிகமான வேகத்துடன், “இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. பெண்ணுக்குத் தெய்வம் தண்டனை கொடுக்கிறது; சமுதாயமும் சட்டமும்கூட அவளையே குற்றவாளியாக்குகின்றன. இதெல்லாம் எந்த வகையில் நியாயமாகும்? மீண்டும் மீண்டும் நீங்களும் பெண்ணின் மீது பழி சுமத்துகிறீர்கள்! பெண், பெண்ணாய்ப் பிறந்து தொலைந்தது என்று கல்வி மலர்ச்சியும் சமுதாய அறிவும் இல்லாத கிணற்றுத் தவளைகள் பிரலாபிக்கட்டும். நீங்களுமா பெண்ணைக் குறை சொல்கிறீர்கள்? பெண் மட்டும் அவள் விரும்பிய உணவை உண்ண, விரும்பிய பொருள்களை அநுபவிக்க, அன்புகொண்டு வாழ, இயல்பாகத் தோன்றும் ஆசைகளை அடக்கிக்கொள்ள வேண்டுமா? ஏன்? கண்விழிக்காத குஞ்சும், இயற்கையின் நியதிக்கொப்ப அதன் இனத்துக்கேற்ற ஆசையினால் உந்தப்படுகிறது. அந்த ஆசையே தவறு என்று பெண்ணின் விஷயத்தில் மட்டும் ஏன் கொட்டுகிறீர்கள்? காந்தியடிகள் சொன்னார் என்று சொல்லாதீர்கள்! அவரும் ஒரு ஆண். அவரும் தம் மனைவியை அடிமைபோல் நடத்தியிருக்கிறார், ஆமாம்!” என்று சாடுகிறாள். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை அவள் அண்மையில்தான் படித்திருக்கிறாள்.

முகம் சிவக்க அவள் ஆத்திரத்துடன் கூறிய சொற்கள் சில பெண்களைக் கைகொட்டி உற்சாகமளிக்கத் தூண்டுகின்றன. ரோஸலினுக்கும் மீனாட்சிக்கும் இந்த இல்லத்திலே தாங்களே படிப்பறிவு பெறுபவர்கள் என்றிருந்த மதிப்பை அவள் கரைத்துவிட்டதால் அவளுடைய அதிகப்பிரசிங்கித் தனமான கேள்விகள் ரசிக்கக்கூடியதாக இல்லை. என்றாலும் ஞானம் மைத்ரேயியின்மீது எரிந்து விழவில்லை; சிடுசிடுக்கவில்லை. மாறாகப் புன்னகைதான் செய்கிறாள்.

“உள்ளத்தில் வைத்துக்கொள்ளாமல் துணிவுடன் நீ பேசுவதற்கு உன்னைப் பாராட்டுகிறேன், மைத்ரேயி, உன் கேள்வியிலேயே அதற்கு விடையும் இருக்கிறது. பெண்ணிடம் இயற்கை கூடுதலான பொறுப்பைச் சுமத்தி இருப்பதால் அந்தப் பொறுப்பை மீறும்போது துன்பமும் கூடுகிறது. இயல்பான ஆசைகள் நியாயமாக இருந்தாலும் சமுதாயப் பொறுப்பு பெண்ணுக்குத்தான் அதிகம். தீமைகளும் அநீதியும் இல்லை என்று நான் சொல்லவில்லை. எனினும் தீமைகளை எதிர்த்துப் போராட முதலில் நாம் தயாராக வேண்டாமா? இன்று கல்வி கற்றுப் பலதுறைகளிலும் பணியாற்றும் பல பெண்களுடன் நான் பழகுகிறேன். நூற்றுக்கு அறுபதுபேரும், தங்கள் சொந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளப் பொருள் வேண்டியே பணி செய்கிறார்கள் என்பதை அறிய மனம் குன்றுகிறது. படித்த பல பெண்டிரிடையே படிக்காத எளிய கிராமத்துப் பெண்களிடம் உள்ள பண்பாடுகூட இருப்பதில்லை என்பது வருந்தத்தக்கது. காந்தியடிகள் தாமே தம் மனைவியை அடிமைபோல் நடத்தியதை எண்ணி வருந்தி இருக்கிறார். பெண் விடுதலையை உண்மையிலேயே அநுபவப்பூர்வமாக உணர்ந்து அவளுக்குப் பெருமதிப்புக் கொடுக்க முன்வந்தவர் அடிகள். நீயே இதைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்...”

முத்தம்மாளும் பங்கஜமும் புவனாவும் படபடவென்று கைதட்டத் தொடங்கித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவர்கள் இதற்குமுன் கைதட்டி ஆரவாரம் செய்ததில்லை; கேள்விகளும் கேட்டதில்லை. மைத்ரேயி வந்த பிறகு இந்த வகுப்புக்களே ஆர்வம் மிகுந்ததாக மாறியிருக்கின்றன. ஆனால் ரோஸியும் மீனாட்சியும் மட்டும், “அவ ஒரு ‘பிராமின்', அந்தம்மாவும் பிராமின் அதனால்தான் தூக்கிவைக்கிறாள்...” என்று பொருமுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_9&oldid=1115345" இலிருந்து மீள்விக்கப்பட்டது