லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/டால்ஸ்டாய் மதத்துரோகியா?


டால்ஸ்டாய் மதத்துரோகியா?

டால்ஸ்டாய் ஓர் உண்மையான கிறித்துவர். ஆனால், அவரை ஒரு கிறித்துவர் என்று எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், கிறித்துவ மதத்தில் கலந்துவிட்ட குருட்டு நம்பிக்கைகளையும், தீமைகளையும் ஆஷாட பூதித் தன்மைகளையும் அவர் அடிக்கடி கண்டனம் செய்து கொண்டிருந்ததாலே அவரை ஓர் உண்மையான கிறித்துவராக எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லாரும் அவரை வெறுத்து மதத் துரோகி என்றார்கள்.

கிறித்துவர்கள் எனப்படுவோர் எல்லோரும் மத அளவில், பெயரளவில் கிறித்துவர்களாக இருந்தார்களே தவிர, உண்மையில் இயேசுநாதரின் போதனைகளைப் பின்பற்றுபவர்களாக இல்லை என்பதை அவ்வப் பொழுது டால்ஸ்டாய் சுட்டிக் காட்டியபடியே இருந்தார். ஓயாமல் குறை கூறி கொண்டிருந்த அவரது போக்கை அக்காலக் கிறித்துவர்கள் எதிர்த்துக் கொண்டே இருந்தார்கள்.

இதனால் ஆத்திரமும், கோபமும், வெறுப்பும் கொண்ட கிறித்துவ மதத் தலைவர்கள் அவரது மதத் துரோகச் செயல்களைக் கட்டுப் படுத்த ஜார் மன்னனுடைய ஆதரவை நாடினார்கள். ருஷ்ய மன்னன் அந்த எதிர்ப்பாளர்களது செயலுக்கும் சொல்லுக்கும் மதிப்புக் கொடுக்காமலே இருந்தார்.

மன்னனது இந்த அலட்சியப் போக்கை உணர்ந்த கிறித்துவ மத குருமார்கள், டால்ஸ்டாயிக்கு சமூகத் தண்டனை விதிப்பதென்று எண்ணி, அவரைக் கிறித்துவ மதத்துரோகி என்று புகார் கூறி, அவரை மதத்தை விட்டு விலக்கி வைத்தார்கள்.

மதத்தலைவர்கள் அவரை விலக்கி வைத்ததால் மக்கள் இடையே குழப்பமும் கிளர்ச்சிகளும் உருவானது. இந்த மதவிலக்குத் துஷ் பிரச்சாரம் மாஸ்கோ நகருக்கும் பரவியது. இதனால் மாணவர்களும், தொழிலாளர்களும் கலகம் செய்தார்கள். வீதிகள் தோறும் மக்கள் திரண்டு டால்ஸ்டாய் மதத்துரோகியா! என்று கொந்தளித்து ஊர்வலம் வந்தார்கள்.

லியோ டால்ஸ்டாய் வழக்கம்போல உலாவிட்டு வீடு திரும்பும் போது மக்கள் அவரைச் சுற்றி வளைத்து நின்று கொண்டு தங்களது மரியாதையைத் தெரிவித்தார்கள். பலர் பலவிதமாமக அவர்மீது அனுதாபம் கொண்டு ஆறுதல் கூறினார்கள்.

ஜெர்மன், பாரீஸ், சுவிட்சார்லாந்து, கனடா போன்ற நாடுகளிலே இருந்த டால்ஸ்டாய் வாசகர்களும் சான்றோர்களும், கல்விமான்களும் அவருக்கு ஆறுதல் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர் அந்த அன்புள்ளங்களுக்கு தேறுதல் கூறி எதற்கும் கவலைப்பட வேண்டாம், காலம் ஒருநாள் உண்மையை உணர்த்தும் என்று பதில் செய்திகளை அனுப்பி வைத்தார்.