லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆண்டவனோடு போராடுவோர்


ஆண்டவனோடு போராடுவோர்

ண்டவனோடு போராடுவோர் என்பது ருஷ்யாவின் பழம்பெரும் மனித இனங்களுள் ஒன்று. அவர்களை ருஷ்ய மக்கள் ‘ஆண்டவனோடு போராடுவோர்’ என்றே அழைப்பார்கள். உள்ளன்போடு உயிரினங்களுடன் பழக வேண்டும் என்பதுதான் அந்த இனத்தின் கோட்பாடு.

இந்த இன மக்கள் தனியார் உடைமையை ஏற்பதில்லை. அதை அவர்கள் பாவம் என்பார்கள். சமூகத்தாரின் எல்லா சொத்துக்களும் ஓரிடத்திலேயே இருக்கும்; அவற்றைக் கொண்டுதான் அவர்களது வாழ்க்கை நடப்பது வழக்கமாகும்.

ஆண்டவனோடு போராடுவோர், தங்கள் கோட்பாடுகளை உறுதியாக நம்பிப் பின்பற்றி வந்தார்கள். அதற்காக அந்த இனத்தவர் அரசு செய்யும் எவ்விதக் கொடுமைகளையும், துன்பங்களையும் ஏற்கத் தயாரானவர்கள், அதனால் அவர்களை அரசாங்கம் கண்காணித்து வந்தது எல்லோருக்கும் நன்மை தராத ஜார் மன்னன் ஆணைகளை அந்த மக்கள் மதிக்கமாட்டார்கள், ஏற்கமாட்டார்கள், ஒப்பமாட்டார்கள்.

ஜார் மன்னர் அவர்களை ராணுவத்தில் சேருமாறு கட்டளையிட்டார். ஆனால், ஆண்டவனோடு போராடும் நாங்கள் போராளிகள் அல்லர்; அமைதியை நாட்டிடும் சமாதானவாதிகள். எனவே, எக்காரணம் கொண்டும் ராணுவப் படைகளில் பங்கு பெற மாட்டோம் என்று முரட்டுத்தனமாகவே மறுத்து விட்டார்கள்.

கோபமலையின் மேலே ஏறி ஜார் கொக்கரித்தான் என்னை மதியாத உங்களை மக்களோடு மக்களாக இணைந்து வாழ விடமாட்டேன்! காக்கசஸ் மலைமேலே உள்ள காட்டு மிராண்டிகளோடு மிருகங்களைப் போல போய் வாழுங்கள் என்று கொடுமையான சீற்றத்தோடு சீறி ஆணையிட்டான்!

அந்தப் பழம்பெரும் இனம் ஜார் உத்தரவுப்படி காக்கசஸ் சென்று; அங்கே மிருகங்களைப் போல வாழ்ந்த காட்டுவாசிகளோடு அன்பாகப் பழகி அவர்களது வாழ்க்கையின் இன்பதுன்பங்களில் இரண்டறக் கலந்து வாழ்ந்து வந்தார்கள்.

தங்களது ஆதி இனக் கொள்கைக்கு விரோதமாக, ஜார் மன்னன் ராணுவத்தில் சேர ஆணையிட்ட போது, “நாங்கள் வாளேந்த மாட்டோம், போராளிகள் அல்ல; அமைதியை வளர்ப்போர் என்று கூறிய தங்கள் கொள்கைக்கு மாறாக, நாளடைவில் அவ்வப்போது ஆயுதங்களைப் பயன்படுத்தி வந்தார்கள்.

இதைக் கேள்வியுற்ற மன்னன் ஜார், மறுபடியும் அந்த இனத்தை இராணுவப் படைகளில் சேர்க்க விரும்பினார். ஆனால், 1895-ஆம் ஆண்டின் போது, அந்த இனம் தங்களது தவறுகளை உணர்ந்து, அவர்களிடம் இருந்த எல்லா வகை ஆயுதங்களையும் ஓரிடத்தில் திரட்டிக் குவித்து, தீ வைத்து எரித்தார்கள்.

இதனைக் கண்ட கொடுங்கோலன் ஜார் கோபாவேசம் கொண்டு ஆண்டவனோடு போராடுவோர் என்ற அந்த இன மக்களைத் துன்புறுத்தினான். அவர்களை மனம் போனவாறு போலீசை ஏவி சித்ரவதை செய்தான்!

அந்தப் பழங்குடி இன மக்களின் தொடர் சோகக் கதையை அறிந்த மனிதநேய மகானான டால்ஸ்டாய், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், சோதனைகளையும், அவர்கள் பொறுமையாக அவற்றைப் பொறுத்துக் கொண்ட வீரத்தையும் கேட்டு உள்ளம் உருகினார் மனம் நொந்தார். இது என்ன ஆட்சிதானா? என்று அறிக்கையும் விடுத்தார். அதனால் அவர்களுக்கு என்ன உதவிகளைச் செய்யலாம் என்று சிந்தித்தார்

இதற்குக் காரணம் என்னவெனில், ஆண்டவனோடு போராடுவோர் குழுவின் கொள்கையும், டால்ஸ்டாய் லட்சியமும் ஒத்திருந்தன. அதனால் அந்த இனத்தை எப்படியாவது காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் திட்டமிட்டபடியே இறங்கிப் பணியாற்றலானார்.

ருஷ்யக் காடுகளிலே இந்த ஆண்டவனோடு போராடும் இனம் வாழ வேண்டும் என்று ஜார் உத்தரவிட்டான். அந்த ஆணையை அவன் மீண்டும் வெளியிட்ட பிறகுதான் டால்ஸ்டாய் கிளர்ச்சியிலே ஈடுபட்டார்.

வேண்டுகோள் ஒன்றைப் பத்திரிகைகளுக்கு அவர் விடுத்தார். அதில் ருஷ்ய நாட்டின் கல்வியாளர்கள், பிரபுக்கள் போன்றோர் பலர் கையொப்பம் செய்தார்கள்.

யார்யார் டால்ஸ்டாய் அறிக்கையிலே கையொப்ப மிட்டார்களோ அவர்களை அரசு பயமுறுத்தியது; பலரை வலியப் பிடித்து இழுத்துவந்து நாடு கடத்தியது; வேறு சிலரை சித்ரவதை செய்தது. ஆனாலும், டால்ஸ்டாய் இக் கொடுமைகளைக் கண்டு சிறிதும் அச்சப்படாமல், தனது பணிகளைக் கைவிடாமல் தொடர்ந்து போராடினார்! அதனால் மக்கள் இடையே கிளர்ச்சி எழுந்தது; வலுத்தது; மக்களிடையே பரவியது. இம் மக்கள் கிளர்ச்சி ஒருவகையில் வெற்றிகரமாக முடிந்தது.

‘ஆண்டவனோடு போராடுவோர்’ வெளி நாடுகளுக்கும் குறிப்பாக கனடா நாட்டுக்கும் சென்று வாழ வேண்டும் என்று ருஷ்ய ஆட்சி ஆணையிட்டது; அதற்கு ஏற்றவாறு அனுமதியையும் வழங்கியது.

அவ்வளவு மக்களும் வழிச் செலவுப் பணத்துக்கு எங்கே போவார்கள்? ருஷ்ய ஆட்சி அதற்கு ஏதும் வழி செய்ய மறுத்து விட்டது. ஆனால், இதைக் கண்ட டால்ஸ்டாய், ஜார் மன்னன் ஒருகாசு கூடக் கொடுக்கமாட்டான் என்பதை உணர்ந்தார்.

உடனே, இங்கிலாந்து ஃபிரான்ஸ், ஜெர்மன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வாழும் மக்களுக் கெல்லாம் உண்மை நிலையைக் கூறி, பண உதவிகளைச் செய்ய வேண்டுமென்று டால்ஸ்டாய் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கும் மேலாக, தனது மனிதாபிமான மனத்தோடு, டால்ஸ்டாய் எழுதிய அதாவது ‘மறுபிறவி’ என்ற தம்முடைய நூலின் வருமானத்தை ‘ஆண்டவனோடு போராடுவோர்’ சங்கத்து மக்கள் இனம் கனடா நாடுக்குப் போக வழிப்பயணச் செலவுக்காகக் கொடுத்தார். அதனால் அவர்கள் கனடாவுக்குப் போனார்கள்.

ஓர் இனமக்களை மனிதாபிமானமற்று, குறிப்பாக வழிச் செலவுகளுக்குக் கூட பணம் தராமல் விரட்டியடித்த ஜார் மன்னனது கொடுங்கோலை உலக நாடுகள் எல்லாமே கண்டனம் செய்தன.

ஆனால் அந்த இன மக்களது வாழ்க்கை மேம்பட, டால்ஸ்டாய் செய்த கிளர்ச்சியால், அவர் செய்த உதவியால், அவரை ஐரோப்பிய நாடுகள் எல்லாம் போற்றிக் கொண்டடினார்கள். இந்த ஓர் அற்புதமான பேருதவியை எண்ணிப் பார்த்த மக்கள், டால்ஸ்டாயை உலக மனித நேய மகான்களிலே ஒருவர் என்று போற்றி மகிழ்ந்தார்கள்.