லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பஞ்ச நிவாரண நூல்; ருஷ்ய அரசால் பறிமுதல்!


பஞ்ச நிவாரண நூல்; ருஷ்ய அரசால் பறிமுதல்!

ருஷ்ய நாட்டில், குறிப்பாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் பகுதி வாழ் மக்கள் மீது டால்ஸ்டாயிக்குத் திடீரென்று ஏற்பட்டதல்ல இரக்கமும் - அனுதாபமும்! அவர் பல்கலையிலும் கல்லூரியிலும் படித்தபோது வந்த மனித நேயக் கருணையாகும்!

கல்விப் பருவத்திலே உருவானது அந்த மக்கள் தொண்டு தன்னால் இயன்ற சேவைகளைச் செய்திட ஊர் ஊராக அலைந்து மக்களது நிலைகளை விளக்கிக் கூறி நிதி திரட்டியவர்!

தானிய வகைகளைச் சேகரித்து அவற்றை மூட்டைகளாகக் கட்டித் தன் முதுகிலேயே சுமந்து கொண்டு வந்து பஞ்ச நிவாரண வேலைகளைச் செய்து ஏழைகளின் ஏந்தலாக வாழ்ந்தவர். ஏறக்குறைய லட்சக் கணக்கான ரூபாயைத் தனியொரு மனிதனாக அலைந்து சேகரித்த ஏழை பங்காளர் அவர்.

ருஷ்ய மக்கள் இந்தியர்களைப் போல விவசாயத் தொழிலை நம்பி வாழ்பவர்கள். இயற்கையின் பருவகாலச் சக்தி பொய்த்துப் போனதால், மழை பொழியாததால் அங்குள்ள கிராமங்களின் வயல்கள் வறண்டு போயின. மக்கள் பசியால் மடிந்தார்கள்! 1891-ஆம் ஆண்டில் பயிர்கள் எல்லாம் பாழானதால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பரிதவித்தார்கள்! எனவே, பஞ்சத்தால் துன்புறும் மக்களுக்கு எப்படித் தொண்டு செய்யலாம் என்று அவர் இரவும் பகலுமாய் யோசனை செய்தார்.

ஊர் ஊராகச் சென்ற டால்ஸ்டாய்; மக்களை எச்சரிக்கையோடு இருக்கும்படி எச்சரித்தார். பஞ்சத்தில் துன்புறுவோருக்குப் பணக்காரர்களை, தொழில் முதலாளிகளை உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். பத்திரிக்கைகளுக்கு கிராம மக்கள் நிலைகளை எல்லாம் விளக்கிச் செய்திகளைத் தொகுத்து அனுப்பி வைத்தார்.

அடுத்த அறுவடைக் காலத்தில் எந்த விவசாயியும் அறுவடை ஏதும் செய்ய முடியாத காரணங்களை ஜார் அரசுக்கும் அறிக்கை வாயிலாக எடுத்துரைத்தார்! அதே நேரத்தில் மற்றவர்களுடைய உதவிகளையே எதிர்பார்த்துக் கொண்டு அவரால் சும்மா இருக்க முடியவில்லை. தானாகவே - தனியாகவே தனது நிவாரண வேலையை அவர் தொடர்ந்தார்.

டால்ஸ்டாய் தான் வாழும் ‘ரேயசா’ என்ற பகுதியில் பஞ்சத்தின் கோரம் மிகவும் மோசமாகத் தாண்டவமாடுவதை அறிந்தார். அங்கே சென்று மிக அதிகமாக வேலை செய்தாக வேண்டுமென்ற அக்கறையால் தனது மகள்கள் இருவரையும், மருமகனையும் அழைத்துக் கொண்டு ரேயசா பகுதியிலே உள்ள கிராமங்களுக்குச் சென்று பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அவரிடம் கையிருப்பாக எழுநூற்றைம்பது ரூபிள்தான் இருந்தது. அந்த ரூபாயை வைத்துக் கொண்டு என்னென்ன செய்யலாமோ அவற்றையெல்லாம் தனது சக்திக்கேற்றவாறு அவர் செய்துவந்தார். மக்களிடம் அவர் சேகரித்த தானிய வகைகளைப் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்குப் பங்கீடு செய்தார்.

தனியொரு மனிதன் தனது குடும்பத்துடன் வந்து ஏழை எளிய மக்களுக்கு செய்துவரும் பரோபகாரப் பணிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்துப் பணக்காரர்களில் பலர், அவருடன் ஒத்துழைக்கத் திரண்டனர்.

பஞ்சத்தால் வேதனைப்படுவோர்களுக்கு எப்படியெல்லாம் உதவிசெய்யலாம் என்று அவர் எழுதியக் கட்டுரைகளை; அப்போதுள்ள பத்திரிக்கைகள் தக்க சமயத்தில் வெளியிட்டு உதவின. அதைப் படித்த பிறகே மக்கள் பெருவாரியாகத் தானிய வகைகளையும், பணத்தையும் நலிந்தோருக்குக் கொடுத்து உதவினார்கள்.

பஞ்சத்திலே உள்ள மக்களானாலும் சரி, நடுத்தர வசதி படைத்தவர்களானாலும் சரி, அவரவர் வீடுகளிலே உள்ள உணவுப் பொருட்களைத் திருடர்கள் புகுந்து கொள்ளையடித்துச் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். அப்படிக் காப்பாற்றிய பொருள்களை உணவுப் பொருள்கள் இல்லாதவர்களுக்கு அவரவர் நிலைமை அறிந்து பங்கிட்டுக் கொடுப்பது சிறந்த உதவி என்றார்.

கிராமங்கள் ஒவ்வொன்றிலும் உணவு விடுதி ஒன்றை உருவாக்கி, அதன் மூலமாக எல்லாருக்கும் உணவுகளைத் தயார் செய்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவை பஞ்ச நிவாரணப் பணிகளுக்கு டால்ஸ்டாய் கூறிய யோசனைகளாகும்.

தனது புதல்விகள் இருவரும், மருமகனும், கணவர் டால்ஸ்டாய் தலைமையில் பஞ்ச நிவாரண மக்கள் தொண்டு செய்வதைக் கண்ட டால்ஸ்டாய் மனைவியான பேஹர் என்ற சோன்யா, தானும் வலியச் சென்று குடும்பத்துடன் இணைந்து வேலைகளைச் செய்தார். அத்துடன் நில்லாமல், மற்ற மக்களும் பஞ்சநிவாரணப் பணிகளுக்கு ஏற்ற உதவிகளை கருணையோடு செய்ய முன்வர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

டால்ஸ்டாயின் மனைவி வெளியிட்ட வேண்டுகோளை பத்திரிக்கைகளும் பெரிய அளவில் வெளியிட்டன. பத்திரிக்கையைப் படித்த பெண்கள், தாராளமாகவும், ஏராளமாகவும் அவரவர் வீடுகளிலே உள்ள உணவுப் பொருட்களை வழங்கினார்கள். இவ்வாறு; கும்பல் கும்பலாகப் பெண்கள் அந்தந்த ஊர் கிராம உணவு விடுதிகளுக்கு வருகை தந்து, உணவு தயார் செய்து அவரவர் கைகளாலேயே அன்னதானம் செய்வதைக் கண்ட சீமாட்டிகளும், பணக்காரிகளும் முன்வந்து அளவுக்கு அதிகமாக உதவிகளைச் செய்தார்கள்.

கிராமங்களில் இருந்த உணவு விடுதிகள் இரு நூற்றைம்பதாக உயர்ந்தது. பஞ்ச நிவாரண உணவை உண்டு வந்தவர்களின் எண்ணிக்கை பதினைந்தாயிரமாக உயர்ந்தது.

ஆலை முதலாளிகள், வேறு வகையான தொழிலதிபர்கள் ஒன்று கூடி, குடியானவர்களை அழைத்து, வேலைகளையும் கொடுத்து கூலிகளையும் வழங்கினார்கள். இந்தப் பஞ்ச நிவாரணப் பணியில் நாட்டை ஆண்டு கொண்டிருந்த ருஷ்ய அரசாங்கமே முன்வராத போது, தனியொரு குடும்பமான டால்ஸ்டாய் குடும்பம் முன்வந்து பணியாற்றியதைக் கண்ட ரேயசா நகர்ப் பகுதி மக்கள் டால்ஸ்டாயையும், அவரது உறவினர்களையும், குடும்பத்தையும் பாராட்டினார்கள்.

இந்தப் பாராட்டுக் கூட்டத்தில் டால்ஸ்டாயோ அவரது குடும்பத்தினரோ எவரும் கலந்து கொள்ளாமல், நிவாரண வேலைகளிலேயே மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், டால்ஸ்டாய் சமாரா நகர் பகுதியிலே 1873- ஆம் ஆண்டில் வாழ்ந்த போது ஏற்பட்ட பஞ்சத்தில் லட்சக் கணக்கான பணம் திரட்டியும், தானிய வகைகளையும் மக்களுக்கு வழங்கியதற்காக, நன்றி தெரிவிக்கும் வகையில், அங்குள்ள மக்களில் நூற்றுக் கணக்கான பேர்கள் ரேயசா பஞ்ச நிவாரணப் பணிப் பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு டால்ஸ்டாயின் ஏழைபங்காளக் கருணையுள்ளத்தைப் பாராட்டினார்கள் என்பது, வரலாறு காணாத சம்பவமாகும்.

மனித நேய மகானான டால்ஸ்டாய், பஞ்ச நிவாரணப் பணிகளைச் செய்து கொண்டிருந்த நெருக்கடி நேரத்திலும் ஓய்வு நேரம் ஒதுக்கி, ‘சொர்க்க சாம்ராஜ்யம்’ என்ற ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். ரேயசா நகர்ப் பகுதிப் பஞ்சத்தை ருஷ்ய அரசு கண்டும் காணாதபடி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்த ஊமைச் செயலை, டால்ஸ்டாய் அந்த நூலிலே மிக வன்மையாகக் கண்டித்தார்.

இந்த ‘சொர்க்க சாம்ராஜ்ய’த்தைப் படித்த ஜார் ஆட்சி, டால்ஸ்டாய் மீது பெருங் கோபம் கொண்டது. இரஷ்யாவிலே உள்ள புத்தக விற்பனைக் கடைகளிலே எல்லாம் போலீசார் புகுந்து அராஜகம் செய்து ‘சொர்க்க சாமாராஜ்ய’ புத்தகங்களைப் பறிமுதல் செய்தார்கள்! பொது மக்கள் அந்த நூலைப் படிக்கக் கூடாது என்று தடை விதித்தது ஜார் மன்னனது செங்கோல்! இதனால் ரஷ்ய மக்கள் பரபரப் படைந்தார்கள்.

டால்ஸ்டாய் தனது நூல் பறிமுதல் செய்யப்பட்டதையும், யாரும் அவரின் அந்தப் புத்தகத்தைப் படிக்கக் கூடாது என்று ஜார் கொடுங்ககோல் ஆட்சி தடைபோட்டதைப் பற்றியும் பதில் ஏதும் கூறாமல் வாயையும் திறக்காமலே இருந்ததுடன், மேலும் சில புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுக் கொண்டே இருந்தார். அந்தப் புத்தகங்கள் எல்லாம் பரபரப்பாகவும், லட்சக்கணக்காகவும் விற்பனை ஆயின என்பது; டால்ஸ்டாயின் ஜார் ஆட்சிக் கொடுங்கோல் எதிர்ப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியது.