வன தேவியின் மைந்தர்கள்


1


பனிக்காலத்து வெயில் உடலுக்கும் உள்ளத்துக்கும் தேனாய், தீஞ்சுவையாய், இங்கிதமளிக்கக் கூடியதுதான். ஆனாலும் பூமகளுக்கு அப்படி ஒர் இனிமை படியவில்லை. மாளிகையின் மேலடுக்குச் சாளரத்தின் சல்லாத் தளிர் விரல்களால் நீக்கி, கீழே மாளிகையின் பின்புறத்தின் விரிந்த சுற்றுச் சூழலில் பார்வையைப் பதிக்கிறாள்.

பனிக்காலத்தில் பசுமை இத்துணை அழகாகத் தென் பட்டதாக நினைவில் வரவில்லை. புல்வெளிகள். பசுங்குவியல்களில் நட்சத்திரம் பதிந்தாற் போன்று பூம்புதர்கள். மாமரங்கள், இந்தா இந்தா என்று கதிரவனுக்குக் காணிக்கையாக்கும் அரும்புக் கொத்துகள். விரிந்து தெரியும் சிவப்பும் நீலமுமான அரவிந்தத் தடாகம். அதில் வெண் மலர்கள் போல் தெரியும் அன்னங்கள்.

எல்லாம் பார்த்துப் பார்த்து, மாளிகையைச் சேர்ந்த உழைப்பாளர் உருவாக்கியிருக்கும் அந்தப்புரத்தோட்டம். எட்டி ஒர் ஆலமரம். அதைச் சுற்றி அழகிய மேடை உண்டு. அங்கே மன்னரும் அவளும் சந்தித்துப் பேசுவதுண்டு. கானகம் செல்லுமுன்பு, அவள் பேதைப்பருவ அறியாமைகள் அகல, மன்னரின் அன்புப் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட இடம். அதை நினைக்கும் போது இப்போது, மெய் சிலிர்க்கிறது. பூம்பட்டு மேலாடையை நழுவாமல் பற்றிக் கொள்கிறாள்.

“தேவி!...”

“உச்சிப் போது தாண்டி நேரமாகி விட்டது. உணவு சித்தமாகி, ஆறிப் போகிறது...”

அவள் திரும்பிப் பார்க்கிறாள். கைகழுவக் கலமும் நீரும் ஏந்தி நிற்கும் பணிப் பெண்.

பணிப்பெண்ணா? முன் நெற்றிக் கூந்தல் நரை பட்டையாகத் தெரிகிறது.

நெற்றியிலும், கன்னங்களிலும் மோவாயிலும், காலமும் உழைப்பும் சேர்ந்து கீறிய கீறல்கள்.

வெறும் காலமும் உழைப்பும் மட்டுமா? மன இறுக்கமும் கூடத்தான்...

இடுப்பில் ஓராடை வெளுத்துச் சாயம் போன ஆடை மாளிகை எசமானிகள் உடுத்துக் கழித்த ஆடை மார்பை மூடும் கச்சைகளும் கூட இவர்களுக்கு இல்லை. ஆனால் அவந்திகா, அவள் அன்னை, அவள் பால் குடித்த மார்பகங்களைத் துகில் கொண்டு மூட அவள் முனைந்து வெற்றி பெற்றிருக்கிறாள். மாளிகைச் சாளரங்கள் கூட உயர்துகில் அணிகின்றன. என் அவந்திகாவுக்கு மேலாடை வேண்டும் என்று, விவரம் தெரிந்த நாளில் அவள் தந்தையிடம் கேட்டு அந்த மேலாடை உரிமையைப் பெற்றுத் தந்தாள்.

அவந்திகா நீர்ச் சொம்பைக் கீழே வைத்து விட்டு ஒரு கையால் அவள் முக மலரைப் பரிவுடன் தொட்டு, முன் நெற்றிச்சுரி குழலை ஒதுக்குகிறாள். “தேவி, நேரம் மிகவாகி யிருக்கிறது. பாருங்கள், நிழல்கள் நீண்டு விழுகின்றன. இந்த நிலையில் உணவு கொள்ளாமல் இருக்கலாகாது, தேவி.”

அவளை மெதுவாகப் பற்றி எழுப்பி, நீர்ச் செம்பை எடுத்து, கழுவும் கலத்தைப் பிடித்து, அவள் மென்கரங்களை வெது வெதுப்பான நீரில் கழுவச் செய்கிறாள். இன்னொரு பணிப்பெண் வந்து, அந்தக் கலங்களை வாங்கிச் செல்ல, அவந்திகா மெல்லிய பட்டுத்துகிலால் அவள் கரங்களைத் துடைக்கிறாள். செம்பஞ்சுக் குழம்பின் பட்டுச் சிவப்பு தெரியும் மலர்க்கேசரங்கள் போன்ற விரல்கள்...

“அவந்திகா, மன்னர் உணவு கொண்டாரா?”

“மன்னர் உணவு மண்டபத்துக்கு வரவேயில்லை, தேவி, குலகுரு, மந்திரிபிரதானிகளுடன் அரசாங்க யோசனைகளில் ஆழ்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். பல ஆண்டுகள் மன்னனில்லாத நாட்டில் எத்தனையோ அலுவல்கள் இருக்கலா மல்லவா?...”

‘இளையவர் ஆட்சிபுரியவில்லையா அவந்திகா? உணவு கொள்ளக்கூட வர இயலாத அளவுக்கு என்ன யோசனைகளாம்?’

பூமகள் கேட்கவில்லை.

இளையவர்... நிழல் போல் தொடரும் இளையவரும் உணவு கொள்ளவில்லையா? ஊர்மிளையைச் சந்திக்கவில்லையா? ராணி மாதாவின் மாளிகைப்பக்கம் செல்லவில்லையா?

அடுக்கடுக்காக வினாக்கள் மின்னுகின்றன. ஆனால் சொற்களாக உயிர்க்கவில்லை.

விமலை, விசயை, இருவரும் பின்னே உணவுத்தட்டுகள், கிண்ணங்கள், அமரும் பாய் ஆகியவற்றுடன் வந்து கடை பரப்புகிறார்கள். அவந்திகா, அவளைப் பரிவுடன் பற்றி, மென்மையாக கோரை கொண்டு மெத்தென்று முடையப் பெற்ற சித்திரப்பாயில் அமர்த்துகிறாள்.

பெரிய வாழையிலைகளைப் பரப்பி, அதில் உணவுப் பண்டங்களை வைக்கிறார்கள். மிளகும் உப்பும் கூட்டித் தயாரித்த நெய்யமுது; மாதுளங்காய்த்துவையல், தயிர் பிசைந்த சுவையமுது; கீரையும் பருப்பும் கூட்டிய மசியல், இனிப்புக் கூட்டிய புளிப்புப் பச்சடி...

“எனக்குப் பசியே இல்லை, தாயே!”

“மகளே? பசி இல்லை என்று இருக்கலாமா? இன்னோர் உயிரைத் தாங்கி நிற்கும் அன்னை நீங்கள். இந்த மாதுளங்காயும், புளிப்பும் இனிப்புமான பச்சடியும் ருசிக்கு ஆரோக்கியமாக இருக்கும். உண்ணுங்கள் தேவி!”

“ஏனோ தெரியவில்லை அவந்திகா, எனக்குப் பசியும் இல்லை, ருசியும் இல்லை...”

அப்போது சாமளி ஒரு பொற்கிண்ணத்தில் பானம் எடுத்துக் கொண்டு விரைந்து வருகிறாள். இவள் கேகய அரசகுமாரியான இளைய ராணி மாதாவின் அந்தப்புரப் பணிப் பெண்.

“தேவி, ராணி மாதா, இதைத் தாமே தயாரித்து, மகா ராணிக்குக் கொடுத்தனுப்பியுள்ளார்...”

அவந்திகா ஒர் இலையால் மூடப்பெற்ற அந்தப் பொற் கிண்ணத்தைக் கையில் வாங்கி முகர்ந்து பார்க்கிறாள். இந்தப் பூமகள், மதுவின் வாசனையே துகராதவள். புலால் உணவை வெறுக்கும் பூதேவி இவள். இவளுக்கு உணவு தயாரிக்கவே இங்கே சிறப்பாக அநுபவம் பெற்ற ஊழியப் பெண்கள் இருக்கிறார்கள். கேகயகுமாரியான ராணி மாதாவின் மீது அவந்திகாவுக்கு அளவு கடந்த நம்பிக்கையும் பரிவும் அன்பும் உண்டு. இந்தப் பானத்தில், இஞ்சியும் புளிப்பும் தேனும் கலந்திருப்பதை இரண்டு துளிகள் கையில் விட்டுச் சுவைத்தபின் கண்டு கொள்கிறாள்.

“தேவி! ராணிமாதா சகல கலைகளிலும் வல்லவர். பதினான்கு ஆண்டுகள் தாங்கள் கானகத்தில் இருந்த காலத்து மன்னர் வர்க்கத்தினரால் கசக்கி எறியப்பட்டு அந்தப்புர அறைகளில் சிறையிருந்த அத்தனை பெண்களுக்கும் வெளிச்சமும் வாழ்வும் கொடுக்க எத்தனை கலைகள் பயிற்றுவித்தார்!... இது கரும்புச்சாறும், இஞ்சியும் புளிப்புக்கனியும் சிறிது தேனும் கூட்டிய பானம் சிறிது அருந்துங்கள். பசி எடுக்கும்.”

பூமகள் கிண்ணத்தை வாங்கி பானத்தை அருந்துகிறாள்.

உண்மையாகவே நாவுக்கு ஆரோக்யமான ருசி... புளிப்பும் இஞ்சிச்சுவையும், இனிப்பும்... மந்தித்துப் போன நாவில் நீர்கரக்கும் நயமும்.

இளைய ராணி மாதாவுக்குத்தான் எத்துணை அன்பான இதயம்? கல்லைப் போல் ஊரார் பழியையும் உலகோர் சாபங்களையும் மட்டும் வாங்கிக் கொள்ளவில்லை; பெற்ற மகனாலேயே த்து ஒதுக்கப்பட்ட அபாக்கியவதி. இதை நினைக்கும் போது கண்கள் பனிக்கின்றன.

“தேவி, குழந்தாய், இஞ்சிச்சுவை காரமாக இருக்கிறதா?...

அவளுடைய மென்துகில் கொண்டு கலங்கிய விழிகளை ஒத்துகிறாள் அவந்திகா. தன் உணர்ச்சிகளை விழுங்கிக் கொள்ளும் முகமாகக் கண்களைச் சிறிது மூடிக் கொள்கிறாள்.

உணவு கொண்டபின் மற்ற பணிப்பெண்கள் சுத்தம் செய்துவிட்டு அகல்கின்றனர்.

“அவந்திகா, மன்னர் ஏன் முன்போல் இங்கே வருவதில்லை? அப்படி என்ன அரசாங்க அலுவல்கள்?

“பெண்களாகிய எமக்கென்ன தெரியும்?... தேவி, இரண்டே கவளம்தான் உணவு கொண்டிருக்கிறீர்கள். உடல் வெளுத்து, இளைத்து விட்டது. ராணி மாதா எங்களைத்தாம் குறை சொல்வார்கள்...”

பூமகள் தன் மனச்சுமையை எப்படி வெளியிடுவாள்? அரக்கர்கோனின் அந்தப்புரத்தோட்டத்தில் அவள் நெருப்பு வளையத்துள் சிறையிருந்தபோதுகூட, இத்துணை மனச்சுமை இருக்கவில்லை போல் தோன்றுகிறது. இந்நாட்களில் மிக அதிகமாக ஒரு வெறுமை அவளை ஆட் கொண்டிருக்கிறது. இத்தனை வசதிகளும் பணியாளரும், தன்னை அன்னைக்கு அன்னைபோல் மடியிலிருந்து, மார்புப்பால் கொடுத்து வளர்த்த செவிலியும்கூட உணர்ந்து கொள்ள முடியாத, பகிர்ந்து கொள்ள முடியாத சுமையாகக் கனக்கிறது.

அவளை உணவு கொண்ட களைப்புத்தீர, மஞ்சத்தில் இருத்துகிறாள் அவந்திகா. நந்தினி மயில்தோகை விசிறியுடன் வருகிறாள்.

இதை மென்மையாக மேனியில் தடவும்போது உறக்கம் வரும்; மன அமைதி கிட்டும் என்பது அவந்திகாவின் அநுமானம்.

அப்போது, வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு விமலை ஒடி வருகிறாள். நந்தினி விசிறியை வைத்துவிட்டு, உமிழும் எச்சிற் தம்பலத்தைக் கொண்டு வருகிறாள்.

“ஓ! எனக்குத்தான் எத்தனை மறதி, தேவி! வெற்றிலை மடித்துக் கொடுக்கும் நினைவே இல்லை...”

அவந்திகா தன்னையே கடிந்து கொண்டு, வெற்றிலைகளை எடுத்துத் துடைத்து, வாசனைப் பொருட்கள் சுண்ணம் சேர்த்து, மடித்து அவளிடம் தருகிறாள். அவள் மனதில்,அந்த ஆலமரத்து மேடையில், அவள் புக்ககம் வந்த புதிதில், மருட்சியை நீக்கும் வகையில் மென்மையாகச் சரசமாடியதும், வெற்றிலை மடித்துத் தந்ததும் நினைவுக்கு வருகிறது.

இந்த வெற்றிலை கசக்கிறது.

கானகத்தில் வெற்றிலை பாக்கு எதுவும் இல்லை. ஆனால் மிகுந்த மணமுள்ள மூலிகைகள் உண்டு, ஒருவித வாசனைப்புல். அது புத்துணர்வு தரும்.

பணிப்பெண்... நந்தினி, அருகில் எச்சிற்கலத்தை ஏந்தி நிற்கிறாள். மாநிறமுள்ள இளம் பெண். முடியை இறுகக் கோதி உச்சியில் முடிந்திருக்கிறாள். அகன்ற கண்கள், நெற்றியில் முக்கோணம் போல் பச்சைக்குத்து. செவிகளில், வெண்மையான நெட்டிக் குழைகள். மார்பகங்கள் மொட்டுப் போல் குவிந்து, கஞ்சுகத்தின் இறுக்கத்தை விள்ளுகின்றன. முன்பெல்லாம் இந்த அரண்மனைப் பணிப்பெண்கள் கஞ்சுகம் அணிய மாட்டார்களாம். மேலாடையும் கிடையாது. இதெல்லாம் இளைய ராணி மாதாவின் சீராக்க நடவடிக்கைகளாம். இதனாலேயே ஏனைய மாதாக்களுக்கு இவளைப் பிடிக்காது போலும்!

நந்தினியின் கழுத்தில் ஒரு மண் பவழ மாலை தவழ்கிறது...

அரக்கர்கோன் மாளிகையின் அடிமைப் பெண்களும் மேலாடை, கஞ்சுகம் போன்ற எதுவும் அணிந்திருக்கவில்லை. உயர்குலப் பெண்களுக்கு மட்டுமே அந்த உரிமைகள் உண்டு. பணிப்பெண்களாகிய அடிமைகள் கழுத்தில் ஏராளமான சங்குமாலைகளையும் அழகிய சிப்பிகளிலும் மணிகளிலும் செய்த அணி பணிகளையும் அணிந்திருப்பார்கள். கூந்தலைச் சிறு சிறு பின்னல்களாகப் பின்னி அழகு செய்து கொண்டிருப்பார்கள். இடையில் தார்பாய்ச்சாமல் முழங்கால் வரை மட்டுமே வரும் ஆடை அணிந்து, அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிய காட்சிகள் எல்லாம் இப்போதும் மனக்கண்களில் வருகின்றன.

கானகத்தில் இருக்கையில் வஞ்சமகள் ஒருத்தி அவள் நாயகனை மயக்க வந்து நடமாடியதும் உயிர்க்கிறது.

எத்துணை அழகாக இருந்தாள்? மான், மயில், புறா. எல்லா உயிர்களின் சாயல்களையும் கொண்டிருந்தாள். “முனிகுமாரா? பிறவி எடுத்ததன் பயனை இன்றே உணர்ந்தேன். என்னை ஏற்றுக் கொள்வீர்?” என்று அருகில் வந்து அவள் அமர்ந்ததற்கு..... இளையவர் கொடுத்த தண்டனை மூக்கையும் செவிகளையும் கூர்ந்த ஆயுதத்தால் அரிய அவள் இரத்தம் சொரியத்துடிதுடித்து ஒடிய காட்சியில் அவள் அடிவயிறு சில்லிட்டுப் போயிற்று. அச்சம்.... மானைக்கொன்று உணவுபக்குவம் செய்து தருவார்கள். கொல்லும் குரூரம் தவிர்க்கும் அச்சம்தான் அவளை அன்று அந்த மானை உயிருடன் பிடித்துத் தரக் கேட்கச் செய்தது.

அது மாய மானாக இருந்தாலும் அன்பு செலுத்தி வளர்த்தால் தீய எண்ணம் மாயுமே என்று பேதையாக நினைத்தாள். பிடிவாதமாகப் பிடித்துத் தரவேண்டினாள்... ஆனால், என்னவெல்லாம் நடந்துவிட்டது!

“தேவி, வெற்றிலையை மெல்லாமல் துப்பிவிட்டீர்களே” என்று எச்சிற் கலத்தைப் பார்த்தபடி அவந்திகாகேட்கிறாள்.

“எனக்கு எதுவும் இப்போது பிடிக்கவில்லை தாயே!”

‘தாயே’ என்று சொல்லும் போது குரல் தழுதழுக்கிறது... இவள்தாய் தான். ஆனால் பணிப்பெண்ணாகிய அடிமை.ழ்ழ

“நீங்கள் எல்லாரும் போங்கள். தேவி சற்று தனிமையில் இளைப்பாறட்டும்” என்று அவந்திகா அவர்களை அப்புறப்படுத்துகிறாள்.

பூமகளை மெல்ல மஞ்சத்தில் சாய்த்தவாறு துகில் கொண்டு மேலே போர்த்துகிறாள்.

இதமாக நெற்றியை வருடுகிறாள்.

“..... தாயே, மன்னர் இந்தப் பக்கம் வந்து மூன்று நாட்களாகின்றன...”

நெஞ்சம் பொறாமல் வரும் சொற்கள்...

“தேவி, இதற்காகவா வருந்துகிறீர்கள்? அரசாங்கக் காரியங்கள் என்றால் அவ்வளவு எளிதா? இப்போது, தங்கள் பதி என்பதுடன், இந்த நிலையில் தங்களுக்கு அமைதியும் ஒய்வும் வேண்டும் என்ற கடமை வுணர்வும் கட்டிப்போடும். கண்களை மூடிச் சற்றே உறங்குங்கள்...”

ஆனால் அமைதி வரவில்லை.

அவள் இட்டிருந்த நெருப்பு வளையத்தை அவர் அறிந்திருப்பாரா? திரிசடை மட்டுமே இதமாக அவளைப் புரிந்து கொண்டவள். மற்றவர் எவரேனும் இலங்கை வேந்தனின் பராக்கிரமங்களின் புகழ்பாடி அவளை மனம் கொள்ளச் செய்ய வந்தால், உயிரைவிட்டு விடுவாள் என்பதே அந்த வளையம். அவ்வளையத்தை உயிர்ப்பித்து அவர்களை அச்சுறுத்தி வைத் திருந்தவள் திரிசடைதான். அக்காலத்தில் அசோகவனத்தின் எழிலார்ந்த அருவிக்கரையில் தன் பதியுடன் கோதாவரிக்கரையில் கழித்த இனிய பொழுதை உன்னுவாள். அந்தக் காற்றும், அருவிநீருமே அவளுக்கு அன்னமும் பருகு நீருமாய் இருந்தன. அசைக்க முடியாத நம்பிக்கையால் கோட்டை ஒன்று கட்டிஇருந்தாள். அதனுள், ஒரு சிறு திரியிட்டு ஒளித்தீபம் ஏற்றி வைத்திருந்தாள்... பத்து மாதங்கள்...

அவளுடைய நம்பிக்கைக் கோட்டை தகரவில்லை. அவள் பதி வந்து, இலங்கையில் வெற்றிக் கொடியை ஏற்றி வைத்தார். ஆனால்... ஆனால்... அவள் ஏற்றிவைத்திருந்தாளே, சிறு திரி கொண்டு ஒளித் தீபம்...? அதை அவர் அனைத்து விட்டார்.

அவள் விம்மி விம்மி அழுகிறாள். தோள்கள் குலுங்க அழுகிறாள்.... அவந்திகா பதறிப் போகிறாள்.

“தேவி தேவி! ... நான் அருகிருக்கையில், மகாராணிக்கு என்ன துயரம் வந்தது?.

குளிர்நீர் கொண்டு முகத்தைத் துடைக்கிறாள்.

“தீபம் அணைந்துவிட்டது, தாயே? தீபம். சிறுதிரி இட்ட தீபம்.”

“எந்த தீபம்...? எது? ஒ, மாடத்தில் இருக்கும் தூங்கா விளக்கா? அடி விமலை? விசயை?...” என்று அவந்திகா குரலெடுத்துக் கூறிக்கொண்டு போகிறாள்.

அப்போது, ஒற்றை நாண் தம்பூரின் சுருதி செவியில் ஒலிக்கிறது. ஒற்றை நாண்... தம்பூரு...

பரபரப்புடன் அவள் இறங்கி, சாளரத்திரையை அகற்றி வெளியே பார்க்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வனதேவியின்_மைந்தர்கள்/1&oldid=1304389" இலிருந்து மீள்விக்கப்பட்டது