17

நகரமெருகு தெரியும் தோற்றம். அரையாடை, மேலாடை, என்று விள்ளும் நாகரிகம். செவிகளில் குண்டலங்கள். குடுமி விளங்கும் நெற்றி பளபளக்கும் சினம். அடிக்கொருமுறை சண்டாளர், சண்டாளர் என்ற சொற்கள் தெரிக்கின்றன. சண்டாள குரு, சண்டாள முனி... அந்தணப் பிள்ளையை அம்பெய்திக் கொல்ல எத்தனை துணிச்சல்? தருமங்கள் செத்துவிட்டன. கேட்பார் இல்லை! இவர்கள் வேதமோதுவதும், கவிபாடுவதும் தர்மதேவதையைக் காப்பாற்றவா? சத்தியமுனிக்கு முகம் சிவக்கிறது.

முன்னே வருகிறார்.

“அந்தணப் பிரபுக்களே! எங்கள் யாரிடமும் இது போன்று நுனியில் இரும்பு முனை கூர்த்த அம்பே இல்லையே? ஏன் அபாண்டமாகப் பழி சுமத்துகிறீர்கள்? எங்கள் சம்பூகனுக்கு, வில்லும் அம்பும் பரிசயமே இல்லையே? அவனுக்கு மூலிகைகள்தாம் தெரியும். அவன் உயிர்களைப் போக்க மாட்டான். அவன் மட்டுமல்ல. நாங்கள் உயிர்களை நேசிப்பவர்கள்! உங்கள் எல்லை கடந்து, பிள்ளைகள் கன்றைக் கொண்டு செல்ல, பசுக்கூட்டத்தில் அம்பெய்தியவர் யார்?...”

சத்தியமுனியின் இந்த விவரம் அவர்களைப் பின்னும் துள்ளச் செய்கிறது. “அது எங்கள் பசு, கன்றுகள். நீங்கள்தாம் எங்கள் பசுக்களைக் கவர்ந்து செல்வது வழக்கம். அரசரிடம் தானமாகப் பெற்ற பசுக்கள் இங்கே எப்படி வந்தன?...”

“எப்படி வந்தனவா? எங்கள் பசுக்கள் வனதேவியின் கொடை! நாங்கள் பசுங்கன்றுகளை எரியில் சுட்டுத் தின்பதில்லை...” நந்தசுவாமிக்கும் முகம் சிவக்கிறது.

“பேசாதீர்கள்! நரமாமிசம் தின்னும் நீசகுலத்துக்குப் பரிந்து வரும் நீங்களும் அதே வழிதானே!. இதற்கெல்லாம் இப்படி முடிவு கட்ட முடியாது. எங்களுக்கும் தெரியும் கோசல இளவரசர் மகுடாபிஷேகம் செய்து கொண்டு இராவணனைக் கொன்று அங்கே தருமராச்சியம் செய்யச் சென்ற போது வழங்கிய பசுக்கள் எங்களிடம் உள்ளன. அதே கோசல மன்னரிடம் உங்கள் அதமச் செயல்களை, அந்தணச் சிறுவனை அம்பால் தாக்கியதைச் சொல்லி நியாயம் கேட்போம்!” என்று சூளுரைத்துவிட்டு அவர்கள் செல்கின்றனர்.

பூமிஜா இடிவிழுந்தாற்போல் நிலைகுலைந்து போகிறாள்.

தான் நின்ற இடத்தில் உள்ள இளமரத்தைப் பற்றிக் கொள்கிறாள். புதிய மாவிலைகள் அவள் முடியில் படுகின்றன.

அப்படி நடக்குமோ? தீங்கு வருமோ? இதெல்லாாம் ஏன் நேருகின்றன!

“சம்பூகா? என்னப்பா நடந்தது? நம் பிள்ளைகள் பசுக்களைக் கவர்ந்து வந்தனரா?’ என்று சத்தியர் கேட்கிறார்.

“சுவாமி, நம்மிடம் பசுக்கள் பெருகுகின்றன. ஏனென்றால் அவை கொல்லப்படாதவை என்று தாங்கள்தாமே சொல்லி இருக்கிறீர்கள்? அவர்களுடைய பசுக்கூட்டங்கள் பெருகுவதில்லை. இது வீணான வாதம்...” என்று நந்தமுனி விளக்குகிறார்.

சம்பூகன் முன் வந்து நடந்ததை விள்ளுகிறான். அவர்கள் அம்பெய்தார்கள். ஆறுதாண்டிப் படகில் வந்தார்கள். அம்புபட்ட கன்றைத் தூக்கிச் செல்கையில் பசு கதறியது. அவன் சென்று தைத்த அம்பை வீசி எறிந்துவிட்டு, கன்றை மீட்டு, மருந்து போட்டான்.இதுதான் நடந்தது. அவன் யாரையும் தாக்கவில்லை.

பூமகளுக்குப் புரிகிறது. அந்த அம்பு விழுந்த வேகத்தில் அந்தப் பையனின் மீது காயம் ஏற்படுத்தி இருக்கலாம். இல்லையேல் இதை ஒரு காரணமாகக் காட்ட அவர்களே காயம் செய்து கொண்டிருக்கலாமோ?...

இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு, பூமகளுக்கு எப்போது என்ன வருமோ என்ற அச்சம் பற்றிக் கொள்கிறது. வழக்கம் போல்தான் எல்லாம் நடக்கின்றன. இவர்கள் தங்கி இருக்கும் குடில்களை வேடுவப் பிள்ளைகள் புதுப்பிக்கிறார்கள். அந்த நாட்களில் பெரியன்னையுடன் பூமகள் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வாழை வனத்துக்கப்பால் சத்திய முனிவர் இருக்கும் யாவாலி ஆசிரமம் செல்கிறார்கள். அங்கே புதிதாக நீண்ட சதுரங்களாகக் கூடங்கள். புதிய கூரைவேயப்பட்டு, சாணம் மெழுகப்பட்டு பச்சென்று துலங்குகின்றன. தீ அணையாமல் இருக்க, தனியாக ஒரு குடிலில் குண்டம் இருக்கிறது. அங்கே அவள் பல பழைய பொருட்களைப் பார்க்கிறாள். அரணிகடையும் கோல்.. பழைய கல் உரல், ... எல்லாம் அவர் தாய் பயன்படுத்திய பொருட்களாம்.

அன்னையின் சமாதி மேடாக இருக்கிறது. அதைச் சுற்றிலும் துளசிவனம். அங்கு அமர்ந்து பிள்ளைகள் செங்கதிர்த்தேவனை, தீக்கதிரை, காற்றை, விண்ணை, மண்ணைப் புகழ்ந்து பாடல்களை இசைக்கிறார்கள். கூடவே இவள் பிள்ளைகளும் மழலை சிந்துகின்றன. பின்னே ஓர் அழகிய தடாகம் இருக்கிறது. அதில் நீலரேகை ஒடும் தாமரைகள் மலர்ந்திருக்கின்றன.

அந்தத் தடாகத்தில் இருந்து நீர் கொண்டுவரும்போது, ரீமு என்ற மூதாட்டி வருகிறாள். உடல்தளர்ந்து முடி நரைத்துக் கண்கள் சுருங்கி இருந்தாலும் பேச்சு தெளிவாக இருக்கிறது.

“குழந்தே... நீதான் வனதேவியா?... உன் பிள்ளைகளா இவர்கள்? ராசகுமாரர்களைப் போல் இருக்கிறார்கள். நீயும் ராசகுமாரிதான். இதே இடத்தில் முன்னே குருமாதாவாக ஒரு ராசகுமாரி வந்தாள். அவள் உன்னைப்போல் இருப்பாள். அப்போதுதான், எனக்கு நினைப்பிருக்கிறது. ராசா வந்து இங்கே முதல்ல உழவோட்டுறார். நாங்கல்லாம், இங்கே ஏர் செல்வதை வேடிக்கை பார்த்து நிப்போம். ராசா வராரு ஆறுதாண்டிவராங்க சனமோ சனம். ராசா தங்க ஏர் புடிச்சி உழுறப்ப...”

பூமகள் அந்தக் கிழவியின் முகத்தை உன்னிப்பாகப் பார்க்கிறாள். “பொட்டி... பொட்டி வந்திச்சி. அதில், பட்டுத்துணி வச்சி ஒரு அழவான புள்ள... ராசா கொண்டுட்டுப் போனாரு அப்பல்லாம் அந்தக்காடு இந்தக்காடுன்னு போக்குவரத்தில்ல. இங்க வந்து நாங்க பாக்குறப்ப, குருமாதா இல்ல... அவுங்க மனிசப்பெறப்பே இல்ல. தேவதை வந்திருந்ததுன்னு சொல்லுவோம். அந்த தேவதைதான் மறுக்க புள்ளயா பூமிக்குள்ளாற போயிட்டாங்கன்னு சொல்லிக்கிட்டோம். வனதேவிக்குப் பூசை வச்சோம். உன்ன மாதிரிதா அவங்க வந்தாங்க. நா ரொம்ப சின்னவ... இத இங்க உக்காந்து, பூவெல்லாம் பறிச்சி மாலை கட்டி எனக்குப் போடுவாங்க...”

அவளுக்கு உடல் சிலிர்க்கிறது.

“குருமாதான்னு சொன்னா... யாரு?”

“இந்த சாமிதா, இங்க கூட்டி வந்தாங்க. அவங்க தாய் சொல்லி இருந்தாங்க. வாழை வனத்தில் யானை வந்தது. அது மிதிச்சி அடக்கமாயிட்டாங்க. இங்கதா பொதச்சாங்க எனக்கு அதெல்லாம் நினைப்பில்ல... சாமி வந்தபிறகுதான் நாங்கல்லாம் இங்க ஒண்ணா உக்காந்து பாடுவோம்...”

அன்னையின் குரல் கேட்கிறது. பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வருகிறாள்.

“யாரு... கிழவி?... நீங்க கருப்பந்தடி பயிர் பண்ணி, இடிச்சுச்சாறு பண்ணி புளிப்பேத்தி பானகம் காய்ச்சுறீங்க?” என்று கேட்கிறாள். அவள் பொக்கைப் பல்தெரியச் சிரிக்கிறாள்.

“ஆமாம் பெரியம்மா... முன்னெல்லாம் இலுப்பபூ நொதிக்க வச்சி எடுப்போம். இப்ப இதும் செய்யிறாங்க...”

“அதான் நீ குடிச்சிட்டு வந்து கதை சொல்லுற நல்லாக் கதை சொல்லுவா”

“எம்புள்ளங்களும் இதான் சொல்லும்...” முகமலர்ந்த சிரிப்பு.

“கருப்பந்தடி இருக்கா? ஒடிச்சி, இந்தப்புள்ளங்க பல்லுல கடிக்கக் கொண்டாயேன்”

கிழவி திரும்பிப் போகிறாள்.

தன்னுடைய பிறப்பின் இரகசியம் தெரியக்கூடாதென்று இந்த அன்னை பாதுகாக்கிறாளோ?...

“பெரியம்மா அவளை ஏன் அனுப்பினீர்கள்? அவள் குருமாதா, தேவதை என்றெல்லாம் என்ன பேசினாள்?”

“குருமாதா என்று சொன்னது, குருமாதாவை - யாவாலி அம்மை. அடிமையின் மகன் குருவைத் தேடி குருகுல வாசம் முடித்துத் திரும்பி வரும் வரை இருந்தாள். அவர் வருவதற்குள் யானை மிதித்து அடக்கமானாள். அந்தக் கதையைச் சொன்னாள். குருமாதாவே பிறகு அரசர் மாளிகையில் வளர, பூமிக்குள் குழந்தையாகச் சென்றாள் என்று கதை சொல்கிறாள்...”

“பெரியம்மா, நீங்களும் இந்த இடத்துக்கு உரியவரில்லை. நீங்கள் எப்படிக் கானகத்துக்கு வந்தீர்கள்?”

“நீ எப்படி வந்திருக்கிறாயம்மா?...”

மெல்லிதழ்கள் துடிக்கின்றன. அவளைத் தழுவிக் கொள்கிறாள்.

அரச மாளிகையில் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணைச் சுற்றியும் இப்படிச் சிலந்தி வலைகள் பின்னப்பட்டிருக்கும். சில சமயங்கள் ஒட்டடைகள் களையப்படும். இப்படிக் கானகத்தில் வந்து விழுபவர்கள் உண்டு. யாவாலி பட்டயம் போட்ட அடிமை உத்தமமான ஒரு பிள்ளையை அவள் உருவாக்கினாள். அவன் ராச ஊழியம் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை; அரசனாக வேண்டும் என்றும் நினைக்கவில்லை; மனிதனாக்க வேண்டும்; அடிமைக்குலம், இழிகுலம் என்ற நாண் அறுபட வேண்டும் என்று எண்ணினாள். முப்புரிநூலுக்கு இவனும் தகுதியாக வேண்டும் என்று வளர்த்தாள். அந்த மகன் முப்புரிநூல் இல்லாமலே, நல்ல மனிதர்களை உருவாக்குகிறான். முப்புரிநூலே அகங்காரத்தின் சின்னமாகிவிட்டது. மகளே...

பூமகள் பேசவில்லை.

தோல் மேடிட்ட இரணங்களைக் கிளறுவதில் என்ன பயன்?

ஏனெனில் இந்த இரணங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மிக ஆழமான அடித்தளம் கொண்டிருக்கின்றன. அவற்றை அசைப்பது, எளிதல்ல. இந்த ஆசிரமம் அவளுக்கு மிகவும் இசைந்ததாக, அச்சமே இல்லாத பாதுகாப்புடன் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு திங்கள் மாறுதலுக்கு என்று வந்தவர்கள், குளிர்காலம் முழுவதும் தங்கி இருக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும், இங்கேயுள்ள வேடுவப் பிள்ளைகளுடனும் பெண்களுடனும் ஓடியாடி மழலைபேசி, பாடி, அந்தச் சூழலுக்கே உயிரூட்டுகிறார்கள்.

இளவேனில் துவக்கத்தில் புதிய தளிர்கள், புதிய அரும்புகள் கானகச் சூழலையே மாற்றுகின்றன. இணைதேடும் பறவைகள்; விலங்கினங்கள்... மண்ணே புதிய மணம் கொண்டு வீசுவதுபோன்ற மலர்கள் இதழ்களை உதிர்க்கின்றன. நள்ளிரவில் மலர்ந்து மணம் சொரிந்துவிட்டு, காலையில் மண்ணில் விழும் மலர்களை எடுத்துக் காலில் மிதிபடாதபடி பூமகள் சேகரிக்கிறாள். ‘நீங்கள் இந்த மனிதர்கள் காலடி படாத இடங்களில் உதிரக்கூடாதா?’ என்று ஒவ்வொரு மலரையும் கண்களில்ஒத்திக் கொள்கிறாள். வழித்தடம் முழுதும், பவள மல்லிகை, மரமல்லிகை மலர்கள் பொல்லென்று உதிரும் மாட்சியை அவள் இதுபோல் பார்க்கவில்லையா?...

கானகம் புதிதில்லை. என்றாலும் இப்போது புதியதொரு பட்டாடை கொண்டு பழைய நினைவுகளை மூடிவிட்டுப் புதியவளாக இயங்குவதாக உணருகிறாள்.

ஒருநாள், முற்பகலில் அவள் இதுபோன்று மலர் சேகரிக்கும் நேரத்தில், திடுமென்று கருமையாகத் திரண்ட வானில் பளிரென்று மின்னுவது போல் ஒரு குலுக்கல் அவளுக்கு ஏற்படுகிறது. ஓர் அதிர்வு. என்ன ஓசை? இடியோசையா? இல்லையே? வில்லில் நாணேற்றி விடும் ஓசையா? அந்நாள் அவள் தந்தை பாதுகாத்து வைத்திருந்த வில்லை எடுத்து நிறுத்தி நாணை இழுத்து எழுப்பிய ஓசை. இப்படித்தானே இருந்தது? அவள் உள்ளமும் உடலும் பொல்லெனப் பூரித்த உணர்வு மறக்கக்கூடியதா என்ன? வானமே பூச்சொரிந்தாற்போல் உணர்ந்தாள். சுரமை, ஊர்மி எல்லாரும் அவளைக் கேலி செய்தார்கள். நாணம் கொண்டு முகம் மறைத்தாள்.

அவளுக்கு மணமாலையை உறுதி செய்த ஒலி அது. அடுத்து, அவள் எப்போது அந்த ஒலியைக் கேட்டாள்? காட்டில், இளையவனை, ‘போ’ என்று விரட்டினாளே, அப்போது அந்த ஒலி கேட்டது. அந்த நாண் இழுபடு ஓசை அவளைக் கொண்டவனின் கையால் யாருக்கோ ஏற்படும் மரணம் என்று உணர்த்தியது. அவள் சூர்ப்பனகையாக இருப்பாளோ என்று கூட அப்போது பேதலித்தாள். இப்போது. அந்த நாண் இழுபடு ஓசையல்லாமல், வேறு எந்த அதிர்வு அவள் உள்ளுணர்வைக் குலுக்கியது? பெரியன்னையிடம் ஓடி வருகிறாள். குழந்தைகள் இருவரும் பெரியன்னை திரிக்கும் நூலைச் சிக்கலாக்கி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அருகில் இரண்டு பெண்கள் மூங்கில் கிழித்துக் கூடை முடைகிறார்கள்.

“பெரியம்மா, இப்போது பூமி அதிர்ந்தாற்போல் ஓர் இடிமுழக்கம் கேட்கவில்லை?”

அவள் இவளை உற்றுப் பார்க்கிறாள்.

“இருக்கும். கோடையில் இப்படித் திடுமென்று எங்கேனும் வானம் கறுத்து இடிக்கும். எனக்குதான் செவிகள் மங்கலாகி விட்டன. ஏம்மா, பஞ்சமி இடி இடித்தது?”

இவள் பற்களைக் கறுப்பாக்கிக் கொள்ளவில்லை. பளீரென்று சிரிக்கிறாள்."எங்கோ யானை கத்திச்சி... அதா. இங்க வராது!” என்று நிச்சயமாக அச்சமின்றி உரைக்கிறாள்.

“யானையின் பிளிறலா அது?...”

ஆம்; உண்மையாகவே யானையின் பிளிறல் கேட்கிறது. பஞ்சி கைவேலையை விட்டுவிட்டு முற்றம் கடந்து போகிறாள். காற்றுக்கு ஆடும் தளிர்போல் அவள் பெரியன்னை கையைப் பற்றிக் கொள்கிறாள்.

சற்றைக்கெல்லாம், சோமியும் கைவேலையைப் போட்டு விட்டு யாரையோ அழைத்தவாறு ஓடுகிறாள்.

சத்தியமுனி, செய்குளத்தைத் துப்புரவு செய்த கோலத்தோடு “என்ன கலவரம்?” என்று வருகிறார். அவர் முகத்தில் இருந்து வியர்வை பெருகுகிறது.

“மகளே, குழந்தைகளுடன் குடிலுக்குப் போங்கள்” என்று கூறியவராய் அவர் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு செல்கையில், பசுவினங்கள் மணிகுலுங்க ஓடிவருகின்றன. பறவைகள் நேரமில்லா அந்த நேரத்தில் வானில் வட்டமிடுகின்றன. காடன், ஒலி, மாரி, ஆகிய வேடர் கூட்டம், வில் அம்புகள் ஏந்தியவர்களாய் வருகிறார்கள்.

“... எல்லோரும் நில்லுங்கள்! என்ன ஆயிற்று இப்போது?...”

“சாமி, ஏதோ ஆபத்து நடந்திருக்கு. யானைகள் இப்படிக் கத்தியதில்லை. பசு-பறவை எல்லாம் நிலைகுலையுமா? நம்ம கரும்புத் தடியத் தின்ன யானை வரும். நந்தமுனி ஒடிச்சிக் குடுப்பார். பிள்ளைங்க வாங்கிட்டுப் போறாப்புல போகும். இப்ப அதுங்க ஏன் ஆபத்து வந்தாப்புல அலறணும்?”

“சரி, நீங்க வில் அம்பப் போட்டுட்டுப் போயி என்னன்னு பாத்திட்டு வாங்க!”

அவளால் குடிலுக்குள் சென்று அமைதியாக இருக்க முடியவில்லை. சிறுவர்களைக் குடிலுக்குள் கட்டிப்போட முடியுமா? அவர்களால் நொடிப்பொழுதுகூட அமைதி காக்க முடியாதே?

தபதபவென்று சிறுவர்கள் ஓடுவதை உணர்ந்தாற்போல் இவர்களும் வெளியே ஓடிப் புதர்களுக்கிடையில் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். அப்போது ஒர் அணில் குதித்துப் போகிறது. வால் நீண்ட குருவி புதரில் இருந்து ஒடுகிறது.

“வா... வா... விளையாடலாம்!” என்று பெரியவன் அழைக்கிறான்.

“அஜயா, விஜயா, இங்கே பாட்டன் பக்கம் வாருங்கள்!” என்று சத்தியர் அவர்களை அருகில் அழைத்துக் கொள்கிறார்.

பூமகளின் கலவர முகம் பார்த்து பெரியன்னை தேற்றுகிறாள்.

“ஒன்றும் நேராது. இந்த வனத்தில் எந்த அசம்பாவிதமும் நேராது. அமைதி கொள் மகளே.”

“இல்லை தாயே. இந்த ஓசை. எங்கோ ஒரு கொலை விழும் ஓசை. இந்தப் பிள்ளைகளுக்குப் பாட்டன், யானை தண்ணீர் குடிக்கும் ஓசை என்று ஓசை வந்த திக்கை நோக்கி அம்பெய்ததன் பயனாக, கண்ணில்லாப் பெற்றோரின் ஒரே மகன் மாண்டான். தொலைவில் இருந்து கண்காணாதபடி, மந்திர வித்தையைப் பிரயோகித்து அம்பெய்தும் திறமை என்று பெருமை பேசுவார்கள்...”

இவள் பதை பதைக்கையில், முயல்கள், முள்ளம்பன்றிகள். ஏதோ நேர்ந்துவிட்டாற்போன்று பரபரப்புடன் புதர்களை விட்டு வெளியேறுகின்றன.

பூமகள் தன் நிலை மீறி முற்றம் கடந்து செல்கிறாள். பாம்புகள் ஊருகின்றன.

"வனதேவி! தாயே! அறியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருள்வீர்! இவர்கள் எல்லோரும் உன் மைந்தர். நிரபராதிகள் வீழக்கூடாது. என்னை உன் மடியில் கொண்டு சேர்த்து, பழியையும் பாவத்தையும் வாழ்நாள் முழுவதும் அநுபவிக்கிறாரே, அந்தத் தண்டனையே போதும். இன்னும் பழிபாவம் நேரிடவேண்டாம்...” என்று உள்ளுற இறைஞ்சுகிறாள்.

இடையே ஓர் ஆசைக் குறுத்தும் குறுகுறுக்கிறது.

“நான்தான், மண்ணாசை, கொல்லும் திறன், எல்லாம் துறந்து, வருகிறேன். தேவி, உன் விருப்பப்படியே வன்முறை இல்லை என்பதற்கடையாளமாக, அந்நாள் வில்லொடித்தது போல் ஒடித்தேன்” என்று சொல்ல வருகிறாரோ? படைகள், ஆடம்பரங்கள், பணியாளர், மனமழிக்கும் ஆசைகள் எதுவும் இல்லாமல் இயற்கையின் நியதிகளில் குறுக்கிடாமல் அன்பு கொண்டு வாழ முடியாதா?... இதோ உங்கள் மைந்தர்கள். முனிவர் இவர்களை அஜயன்-விஜயன் என்றழைக்கிறார். இங்கே வாழ்க்கைதான் வேள்வி. பகிர்ந்துண்ணும் மாண்பு. எவரையும் பட்டினி கிடக்கவிடுவதில்லை. இங்கே வில்வித்தை, மல்யுத்தம் எல்லாம் தற்காப்புக்கு என்றுதான் முனிவர் பயிற்றுவிக்கிறாராம். வேள்வி என்று சொல்லி, ஆவினங்களைக் கொன்று நிறைவேற்றுவதில்லை.

அவள் மனத்திரையில் மின்னற் கோடுகளாக இந்த வாசகங்கள் பளிச்சிடுகின்றன.

அவள் சோகமே உருவெடுத்தாற்போன்று நிற்கையில் பிள்ளைகள் ஓடிவருகிறார்கள். அவள் பாதங்களில் விழுந்து நீலன் கதறுகிறான்.

“...தேவி, வனதேவி? ஏனிப்படி ஆயிற்று? சம்பூகன்... சம்பூகன் போய்விட்டான். ஓர் அம்பு பாய்ந்து அவனை வீழ்த்திவிட்டது...”

பிள்ளைகள் தேம்பித் தேம்பி அழுகிறார்கள்.

அவள் அலறல் கானகமெங்கும் எதிரொலிக்கிறது.

அவள் தான் நிறைசூலியாக வனத்தில் தனியாக விடப் பட்டபோது கூட இவ்வாறு நிலை குலையவில்லை.

“இருக்காது, கூடாது... கூடாது” என்று கத்தியபடியே முனிவரை நோக்கி ஓடுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வனதேவியின்_மைந்தர்கள்/17&oldid=1304433" இலிருந்து மீள்விக்கப்பட்டது