வனதேவியின் மைந்தர்கள்/22

22

பூமகள் காலையில் வழக்கம் போல் முற்றம் குடில் சுத்தம் செய்துவிட்டுக் காலை வந்தனம் செய்யச் சென்றிருக்கும் பிள்ளைகளை எண்ணியவாறு, தயிர்கடைந்து கொண்டிருக்கிறாள். மரத்தில் கடைந்த அந்த மத்து, அழகாக குழிந்தும் நிமிர்ந்தும் வரைகளை உடையதாகவும், எட்டுமூலைகளை உடையதாகவும் இருக்கிறது. மிதுனபுரிக்கலைஞர்கள், இத்தகைய சாதனங்களை எப்படி உருவாக்குகிறார்கள்? இம்மாதிரியான பொருட்களை நந்தமுனி அவளுக்கு வாங்கிவந்து தருகிறார் அருமை மகளுக்குச் சீதனம்.... ஒருகால்..... அவர்..... ஒருகாலத்தில் அபசுரம் எழுப்பி இருப்பாரோ? நெஞ்சு உறுத்துகிறது. இல்லை அபகரம் இழைக்க இருந்தது மிதுனபுரி அன்னையாம். அபகரம் இழைத்த நாணை நீக்கி, வேறு நாண் போட்டு எனக்கு, இந்த சுரம் எழுப்ப உயிர்ப்பிச்சை அளித்தவர், குருசுவாமி... இப்படி ஒரு நாள் பேச்சுவாக்கில் வந்தது செய்தி. நேர்ச்சைக்கடனுக்கு, மகனைப் பலி கொடுக்க. இருந்த போது, சத்தியர் மீட்டு, பாலகனைத் தமக்குரியவனாக்கிக் கொண்டாராம். காலை நிழல் நீண்டு விழுகிறது.

“மகளே! வெண்ணெய் திரண்டுவிட்டதே! இன்னமும் என்ன யோசனை?” சத்திய முனிவரும் நந்தசுவாமியும் தான்.

அவள் உடனே எழுந்து கை கழுவிக் கொண்டு அவர்கள் முன் பணிந்து ஆசி கோருகிறாள்.

“எழுந்திரு மகளே, உனக்கு மங்களம் உண்டாகும். இந்த வனம் புனிதமானது...” இருக்கைப் பாய் விரிக்கிறாள். உள்ளே மூதாட்டி இருக்கிறாள்.

“பார்த்தீர்களா? குதிரையை இங்கு அனுப்பி மேலும் பதம் பார்க்கிறார்கள், இது நியாயமா? நீங்கள் தருமம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!” அவள் முறையிடும் குரல் நைந்து போகிறது.

“வருந்தாதீர்கள் தாயே! எப்படிப் பார்த்தாலும் தருமம் நட பக்கலில் இருக்கிறது...."

“என்ன தருமமோ? இந்தப் பிள்ளைகள், விவரம் புரியாத முரட்டுத் தனத்துடன் விளையாடப் புறப்பட்டாற்போல் குதிரையுடன் போகிறார்கள். அச்சமாக இருக்கிறது சுவாமி! விஜயன் அந்தக் குதிரை மீது ஏறிக் கொண்டு உலகை வலம் வருகிறேன் என்கிறான். அஜயன் அதை ஒரு தும்பு கொண்டு மரத்தில் கட்டு, யாரும் கொண்டு போகக் கூடாது என்று பாதுகாக்கிறான். நம்பிள்ளைகள் கபடற்றவர்கள். விருப்பம் போல் கானக முழுவதும் திரிவார்கள். மிதுனபுரியோடும் நமக்குப் பகை எதுவும் இல்லை. சம்பூகனுக்குப் பிறகு இத்தனை நாட்களில் நமக்கு அந்த கோத்திரக்காரர்களுடனும் மோதல் இல்லை. இப்போது, இந்தக் குதிரையினால் விபரீதம் வருமோ என்று அஞ்சுகிறேன் சுவாமி!”

“வராது. நம் எண்ணங்களில் களங்கம் இல்லை ...”

“வெறும் குதிரை மட்டும் வந்திருக்குமா? பின்னே ஒரு படை வந்திருக்குமே?”

“ஆம் மகளே, கோசல மன்னன் சக்கரவர்த்தியாக வேண்டுமே? படைகள் நாலுபக்கங்களிலும் இருக்கும். குதிரையை ஆறு தாண்டி எவர் அனுப்பி இருப்பார்கள்? ஒன்று மட்டும் நிச்சயம். நம் பிள்ளைகள் என் ஆணையை மீறி வில் அம்பு எடுக்க மாட்டார்கள். ஆனால், மிதுனபுரிக்காரர்கள், இந்தப் பூச்சிக் காட்டு வேடர்களுடன் சேரும்படி, ஏதேனும் நிகழ்ந்தால்... அப்படி நிகழக்கூடாது என்று அஞ்சுகிறேன். ஏனெனில், இவர்களும் நச்சுக்கொட்டை - நரமாமிச பரம்பரையில் வந்தவர்கள். வழிதிரும்புவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், சத்தியத்திலிருந்து அசத்தியத்துக்கு ஒரு நொடியில் சென்றுவிடமுடியும்!.... எதற்கும் நீ கலைப்படாமல், கலக்கம் இல்லாமல் இருப்பாய். நான் அக்கரை சென்று, யாகக் குதிரையுடன் யார் வந்திருக்கிறார்கள், யாகம், யார் எங்கே செல்கிறார்கள் என்பன போன்ற விரிவான தகவல்களைப் பெற்று வருகிறேன்...”

அவர் விடை பெற்றுச் செல்கிறார் என்றாலும் பூமகளுக்கு அமைதி கூடவில்லை.

"கண்ணம்மா.”

முதியவளின் குரல் நடுங்குகிறது.

பூமகள் விரைந்து அவள் பக்கம் சென்று அன்புடன் அணைக்கிறாள்.

“உனக்கு ஏனம்மா இத்தனை சோதனைகள்? ஆறு தாண்டி அசுவமேதக் குதிரையை அனுப்பலாமா? உன்னிடமிருந்து பிள்ளைகளைக் கவர்ந்து செல்ல இது ஒரு தந்திரமா? குழந்தாய், உன் பிள்ளைகள் இளவரசுப் பட்டம் சூட்டிக் கொண்டு அரசாளும் பேறு பெற வேண்டாமா? தவறை உணர்ந்து உன்னையும் அழைத்துச் செல்வார்களோ?”

பூமகளுக்கு இதயம் வெடித்து விடும் போல் கனக்கிறது.

“தாயே, அப்படியானால் யாகத்துக்குப் பொற் பிரதிமை செய்து வைப்பார்களா?”

தாய் விக்கித்துப் போனாற்போல் அமர்ந்திருக்கிறாள்.

“பொற் பிரதிமையின் கையில் புல்லைக் கொடுத்தால் அது பெற்றுக் கொள்ளுமோ? இவர்களுக்கு உயிரில்லாத பொம்மை போதும்.... இப்படி ஓர் அநீதி, பெண்ணுக்கு நடக்குமா? இவன் சக்கரவர்த்தி, குல குருக்கள், அமைச்சர் பிரதானிகள், பெண் மக்கள்.... யாருக்குமே இதைக் கேட்க நாவில்லையா? ஒரு தாய் வயிற்றில் அவள் சதையில் ஊறி, அவள் நிணம் குடித்து, உருவானவர்கள் தாமே அத்தனை ஆண்களும்? அவர்கள் வித்தை ஏந்தவும் ஒரு பெண்தானே வேண்டி இருக்கிறது? அப்போது தங்கப் பிரதிமை உயிருடன் வேண்டும்! இதெல்லாம் என்ன யாகம்? உயிரில்லா யாகம்! பசுவை குதிரையைக் கொல்லும் யாகம்! தருமமா இது.....”

பூமகள் இந்தச் சூனியமான நிலையில் இருந்து விடுபடுபவள் போல், பிள்ளைகளைத் தேடிச் செல்கிறாள். அப்போதுதான் அன்று தானிய அறுவடை நாள் என்று கூறியது நினைவுக்கு வருகிறது. பிள்ளைகள் விளை நிலத்தில் கதிர்கள் கொய்கிறார்கள்.

அஜயனும் விஜயனும் அந்தக் கூட்டத்தில், தனியாகத் தெரிகிறார்கள். உழைப்பினால் மேனி கறுத்தாலும், கூரிய நாசியும், உயரமும் அவர்கள் வித்தியாசமானவர்கள் என்று தோற்றம் விள்ளுகிறது.

ஆனால், இவர்கள் ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் அறுத்த கதிர்களை ஒருபுறம் அடுக்குகிறார்கள். புல்லியும், கவுந்தியும் பெரியவர்களாக நின்று கதிர்களில் இருந்து சிவந்த மணிகள் போன்ற தானியங்களைத் தட்டுகிறார்கள்.

பிள்ளைகள் கையில் அள்ளி இந்தப் பச்சைத்தானியத்தை வாயில் போட்டு மென்று கொண்டே பால் வழியும் கடை வாய்களுடன் உழைப்பின் பயனை, எடுக்கிறார்கள். மேலே பறவைக்கூட்டம் எனக்கு உனக்கு என்று கூச்சல் போடுகின்றன.

புல்லி ஒரு வைக்கோல் பிரியை ஆட்டி விரட்டுகிறாள்.

“இத இப்ப எல்லாத்தையுமா எடுப்போம்? நீங்க தின்ன மிச்சந்தான். எங்களுக்கு இது குடுக்கலேன்னா, உங்களையே புடிப்போம். ஓடிப்போங்க!” என்று அவற்றுடன் பேசுகிறாள்.

“வனதேவி. வாங்க. இன்னைக்கு, இதெல்லாம் கொண்டு போட்டிட்டு, நாளைக்குப் பொங்கல். எங்க முற்றத்தில், எல்லாரும் சந்தோசமா பூமிக்குப் படைச்சி, விருந்தாடுவோம்.”

பூமகள் சுற்று முற்றும் பார்க்கிறாள்.

“குதிரை எங்கே?. மாடுகள் மேயும் இடங்களில் இருக்குமோ?”

“மாடுகள் இங்கே இல்லை. இருந்தால் எல்லாத் தானியத்தையும் தின்று போடும். அங்கே விரட்டி விட்டிருக்கிறோம். குதிரையை, தோப்புப்பக்கம் கட்டிப் போட்டு, காவல் இருக்கிறாங்க யாரோ சொன்னார்களாம், ராசா வந்திருக்கிறாரு, புடிச்சிட்டுப் போவாங்கன்னு நம்ம இடத்துல அது வந்திருக்குவுடறதில்லைன்னு சொல்லி, அந்தப் பக்கத்துப் பிள்ளைங்க புடிச்சிக் கட்டிப் போட்டிருக்காங்களாம்.” “யாரு அப்படிச் செய்தது? வீண் வம்பு? நந்தசுவாமி இல்லையா?”

“அவங்க இருக்காங்க.இந்தப் பூவன், குழலுாதும் மாதுலன் எல்லாம் அங்கே தான் இருக்கிறாங்க.”

“நந்தசுவாமி குதிரையைக் கட்டிப்போடச் சொன்னாரா?” புரியவில்லை. ராசா வந்திருப்பது மெய்தான். இந்த மூடு நாடகம் எத்தனை நாள் நடக்கும்?

“அஜயா, விஜயா, எல்லோரும் போய் குதிரையை அவிழ்த்து விடுங்கள். அது எங்கே வேண்டுமானாலும் போகட்டும்! நமக்கெதற்கு'அஜயனும் விஜயனும் மேனியில் படிந்த கதிர்களை, தொத்தும் வைக்கோல் துகள்களைத் தட்டிக் கொள்கிறார்கள். வாதுமை நிற மேனி கறுத்து மின்னுகிறது. அஜயனுக்கு விஜயன் சிறிது குட்டை முக வடிவம் ஒரே மாதிரி, அவள் நாயகனை நினைவுபடுத்தும் விழிகள் முகவாய் காதுகள்.

நெஞ்சை யாரோ முறுக்கிப் பிழிவது போல் தோன்றுகிறது. ஆனால், பிள்ளைகளே, நீங்கள் உயர்ந்த தருமத்தில் வாழ்கிறீர்கள்: பிறர் உழைப்பில் ஆட்சி புரியவில்லை!

“அம்மா! நந்த சுவாமியே எங்களை இங்கே அனுப்பி வைத்தார். அரசகுமாரர் யாரோ வந்திருப்பதாகச் செய்தி வந்ததாம். அவர்கள் வந்தால் கட்டிப் போட்ட குதிரையை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் அங்கேயே காவல் இருக்கிறார். மாதுலன் குழலூத, அது சுகமாகப் பாட்டுக் கேட்டுக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருந்தது.”

“யாரிடமும் வில் அம்பு இல்லையே?”

“நாங்கள் குருசுவாமி சொல்லாமல் தொடுவோமா?”

அப்போது, சங்கொலி செவிகளில் விழுகிறது; பறையோசை கேட்கிறது. எல்லோரும் நிமிர்ந்து பார்க்கிறார்கள்.

“ராசா. பிள்ளைங்களா! தானியத்தைக் கூடையில் அள்ளுங்க!” எல்லோரும் விரைவாகக் கூடைகளில் அள்ளு-கிறார்கள். தானியம் உதிர்க்காத கதிர்களைக் கட்டுகிறார்கள். ஏதோ ஓர் அபாயம் நம் உழைப்புப் பறி போகும் வகையில் வந்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

பூமகளும், தங்கத் தட்டுகளில், அப்பமும், பாலன்னமும் வேறு பணியாரங்களும் அடுக்கிய காட்சியை நினைக்கிறாள். இப்படி உழைத்து, அந்த விளைவைத்தானே மேல்வருக்கம் ஒரு துன்பமும் அறியாமல் உண்ணுகிறது! தேனிக் கொட்டல்களுக்குத் தப்பி தேன் சேகரித்தல்; காடு காடாகச் சென்று பட்டுக்கூடு சேகரித்தல்.

இவை எதுவும் அறியாத அறிவிலிகள், அசுவமேதம் செய்கிறார்கள்! இந்த இடத்தில் ஓர் அம்பு விழக்கூடாது. விழுந்தால் வனம் பற்றி எரியும் முற்றம் முழுதுமாக தானியக் கதிர்கள் அடைந்து விடுகின்றன.

அவர்கள் நீராடி வரும்போது கூழ் சித்தமாக்கி, கனிகளுடனும் தேனுடனும் வைக்கிறாள்.வேடர்குடியில் இருந்து மீன் அவித்த உணவும் வருகிறது. “நந்தசுவாமி, பூவன் மாதுலன் எல்லோருக்கும் யார் உணவு கொடுப்பார்கள்?.”

விஜயனின் உச்சி மோர்ந்து நெற்றியில் முத்தம் வைக்கிறாள் அன்னை.

“நந்தசுவாமிக்கு, யாவாலி ஆசிரமத்துப் பெண்களும் ஆண்களும் எல்லாம் கொடுப்பார்கள். கவலைப்படாதீர்கள்!”

“பூமியில் எல்லாத் தானியங்களும் ஒட்ட எடுக்கவில்லை. ஒட்ட எடுத்தால் இரண்டு கூடை இருக்கும். நல்ல தீட்டிப் புடைத்து, இடிச்சி மாவாக்கி, கூழு கிளறிக் கொஞ்சம் வெல்லக்கட்டி கடிச்சிட்டா.” நாக்கை சப்புக் கொட்டுகிறது வருணி,

“ஒரு பானை கூழு பத்தாது”

“முன்னெல்லாம் இந்தக் கூழே தெரியாது. நான் சின்னப்ப இருக்கையில், புகையில் கட்டிப் போட்ட இறைச்சிதா கடிக்சி இழுத்து தின்னுவம்.” "வனதேவி, யாகக் குதிரைன்னா என்ன அது? வெள்ளையாக இருந்தா யாகக் குதிரையா?”

“எனக்குத் தெரியாது, புல்லி அக்கா!”

“வனதேவிக்குத் தெரியாதது இருக்குமா? பெரியம்மா, நீங்க சொல்லுங்கள்!”

“அது வர்ற எடமெல்லாம் ராசாக்கு சொந்தம்னு அர்த்தம். முதல்ல நச்சுக்கொட்ட அம்பு தயாரா வச்சிக்குங்க!” என்று பெரியம்மை கடித்துத் துப்பும்போது திக்கென்று பூமகள் குலுங்குகிறாள்.

“அய்யோ, அதெல்லாம் வானாம்மா! நாம குதிரைய அவுத்துவிட்டாப் புடிச்சிட்டுப் போறாங்க. அது என்னமோ வழிதவறி வந்திட்டது.”

உழைப்பின் அயர்வில் அவர்கள் படுத்தவுடன் உறங்கிப் போகிறார்கள். வேடர்குடிப் பிள்ளைகள் சற்று எட்டி உள்ள தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றுவிட்டனர். புல்லி இங்கேதான் முற்றத்தில் உறங்குகிறாள். பசுக்கள் கொட்டிலுக்குள் திரும்பிப் படுத்துவிட்டன. உறங்காத இரண்டே உயிர்கள். அவளும் அன்னையுமே. அவர்களுக்குள் பேசிக்கொள்ள நிறைய இருக்கின்றன. ஆனால் பேச்சு எழவில்லை.

ஒரு சிறு அகல் விளக்கு குடிலின் மாடத்தில் எரிகிறது. கீழே மூதாட்டி கருணை போல் குந்திக் கொண்டு இருக்கிறாள்.அருகில் வனதேவி, ஒரு புல் மெத்தை விரிப்பில் படுத்திருக்கிறாள். உறக்கம் பிடிக்கவில்லை. கடந்தகாலத்துக் காட்சிகள். படம் படமாக அவிழ்கின்றன. அவந்திகா, தேர் கிளம்பும் சமயத்தில் பெட்டியைத் தூக்கி வந்ததும், அப்படியே பார்வையில் இருந்து மறைந்ததும். “அடி, சாமளி ஏதேனும் நல்ல பண், பாடு என்றால் துக்கம் இசைக்கிறாயே?” என்று கடிந்த காட்சி. “அம்மா, இது, இளையராணி மாதா அனுப்பிய பானம், பருகினால் சுகமாக உறக்கம் வரும்.” பொற்கிண்ணத்தில் வந்த அந்தப் பானம். “மகளே, இந்த நேரத்தில் நீதுன்புறலாமா? நீ பட்டதெல்லாம் கனவு என்று மறந்துவிடு! இனி அதெல்லாமில்லை.” என்று இதம் கூறிய ராணி மாதா.

இவர்களெல்லோருக்கும் அவள் நிலைமை தெரியுமா?

அந்தப்புரம் என்ற கட்டை மீறிக் கொண்டு ஒருவரும் வெளியில் வர முடியாதா?. ஆற்றுக்கரை வேடர் குடியிருப்பில் ஒருநாள் உறங்கினாளே?.

“செண்பக மலர் அலங்காரம் வேண்டாம்! மன்னர் காத்திருப்பார். நேரம் ஆகிறது!...”

துண்டு துண்டாய்க் காட்சிகள். பேச்சொலிகள். வழக்கமான பள்ளி எழுப்பும் பாட்டொலிகள். அரண்மனையின் அலங்காரத்திரைகள், பளபளப்புகள், எல்லாமே ஒன்றுமில்லாத பொய்யாக விளக்கமாகிவிட்டன.

அவளைப் போல் குலம் கோத்திரம் அறியாத பெண்ணுக்கு மகாராணி மரியாதையா?

அடிவயிறோடு பற்றி எரிகிறது.

எழுந்து சென்று, குடிலுக்குள், மண் குடுவையில் இருந்து நீர் சரித்துப் பருகுகிறாள். முற்றத்தில் இருந்து பார்க்கையில் வானில் வாரி இறைத்தாற்போல் தாரகைகள் மின்னுகின்றன. கானகமே அமைதியில் உறங்குகிறது.

மீண்டும்படுத்துப் புரண்டு எப்போது உறக்கம் வந்தது என்று தெரியவில்லை. அமைதியைப் பிளந்து கொண்டு ஓர் அலறல் ஒலி கேட்கிறது. அவள் திடுக்கிட்டுக் குலுங்குகிறாள். குடிலின் பக்கம் ஓர் ஓநாய், வாயில் எதையோ கவ்விக் கொண்டு செல்கிறது. அதுமானோ, ஆடோ, பசுவின் பகுதியோ என்று இரத்தம் உறைய நிற்கிறாள். மயில் கூட்டம் கூட்டமாகப் பறந்து ஓலம் இடுகிறது மயில் அகவும்; அதன் ஓலமா இது? கானகமே குலுங்குவது போல் இந்த ஓலம் நெஞ்சைப் பிளக்கிறது. ஓநாய், மயிலையா கவ்விச் சென்றது? ஓநாய். சம்பூகன் ஓநாய்க்குட்டிக்குப் பால் கொடுத்து வளர்த்தான். சம்பூகன். அவளுக்கு அடிவயிற்றில் இருந்து சோகம் கிளர்ந்து வருகிறது. “அம்மா. என்று துயம் வெடி க்கக் கதறுகிறாள். ஆனால் என்ன சங்கடம்? குரலே வரவில்லையே?.

ஓ. இதுதான் மரணத்தின் பிடியோ’ என்னை விட்டுவிடு. நானே உன் மடியில் அமைதி அடைகிறேன். தாயே..

“கண்ணம்மா. கண்ணம்மா!.”

அன்னையின் கை அவள் முகத்தில் படிகிறது. “மகளே, கெட்ட கனவு கண்டாயா?”

“புரண்டு புரண்டு துடித்தாயே! நீ எதையோ நினைத்து அச்சம் கொண்டிருக்கிறாய். நந்தசுவாமியும், சத்திய முனிவரும் இருக்கையில் ஒரு துன்பமும் வராது. கிழக்கு வெளுத்துவிட்டது. எழுந்திரு குழந்தாய்?.”

அவள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். பிள்ளைகள் எழுந்து காலைக்கடன் கழிக்கச் சென்றுவிட்டனர். புல்லி முற்றம் பெருக்கிச் சுத்தம் செய்கிறாள்.

இவளால் ஓநாய் வாயில் நினம் கவ்விச் சென்ற காட்சியை மறக்க முடியவில்லை.

“தாயே எனக்கு நந்தமுனிவரின் அருகே சென்று ஆசிபெறத் தோன்றுகிறது.”

“போகலாம். புல்லியையோ வருணியையோ அழைத்துச் செல் அவனே வருவான், மகளே என்று அழைத்துக் கொண்டு. நீராடி, கிழக்கே உதித்தவனைத் தொழுது வருமுன் பிள்ளைகள் வந்துவிடுவார்கள். வருணியோ, புல்லியோ உணவு பக்குவம் செய்யட்டும். நீ அமைதியாக இரு குழந்தாய்.”

அவள் எழுந்து நீர்க்கரைக்குச் செல்கிறாள். நீராடி வானவனின் கொடையை எண்ணி நீரை முகர்ந்து ஊற்றும்போது, அவள் முகத்தில் அவன் கதிர்கள் விழுந்து ஆசி கூறுகின்றன. தடாகத்தில் மலர்ந்திருக்கும் மலர்களைப் பறிக்க அவளுக்கு மனமில்லை. “வானவனுக்கு நீங்களே காணிக்கை! மகிழுங்கள்! நான் கொய்யமாட்டேன்!” என்று உரையாடுவது போல் மனதை இலேசாக்கிக் கொள்கிறாள். புத்துயிர் பெற்று ஈர ஆடையுடன் அவள் திரும்பி வருகையில். அவர்கள் முற்றத்தில் அந்த யாகக் குதிரை நிற்கிறது. அஜயன், விஜயன், மாதுலன், பூவன், நீலன், எல்லோரும் ஆரவாரம் செய்கின்றனர். குதிரை சதங்கை குலுங்க தலை அசைக்கிறது. தும்பு ஒன்றும் இணைத்திருக்கவில்லை.

“அம்மா! பாருங்கள்! குதிரை தானாக இங்கு வந்துவிட்டது! அதிகாலையிலேயே புறப்பட்டு நம் முற்றத்துக்கு வந்திருக்கிறது மூத்தம்மையே, வந்து பாரும்! குதிரை. சூரியனார் தேர்க் குதிரைகளில் ஒன்று நம் முற்றத்துக்கு இறங்கி வந்திருக்கிறது! நம் விருந்தினர் இன்று இவர். புதிய தானியம் வைப்போமா?”

அஜயன் முதல் நாள் சேகரித்த தானிய மணிகளை ஒரு மூங்கிற்றட்டில் போட்டு வைக்கிறான்.

“உமக்கு முறை தெரியவில்லை! விருந்தினருக்கு, முதலில் கால் கழுவ நீர் தந்து உபசாரம் செய்ய வேண்டாமா?.” என்று விஜயன், நீர் முகர்ந்து வந்து அதன் கால்களில் விடப் போகிறான்.

“குதிரையாரே, குதிரையாரே வாரும்! எங்கள் விருந்தோம்பலை ஏற்று மகிழ வாரும்!”

இவன் பாடும்போது அது கால்களைத் துாக்கி உதறுகிறது.

விஜயன் பின் வாங்குகிறான்.

“அது பொல்லாத குதிரை உதைத்தால் போய் விழுவாய்! கவனம்!” என்று நீலன் எச்சரிக்கிறான்.

தானியத்தைச் சுவைத்துத் தின்னுகிறது. அங்கேயே அது சானமும் போடுகிறது.

கலங்கிப் போயிருக்கும் பூமகள், வேறு ஆடை மாற்றிக் கொண்டு குடிலின் பின்புறம் நடந்து செல்கிறாள். நந்தமுனியின் சுருதியோசை கேட்கிறது. அவரைத் தொடர்ந்து தாவரப் பசுமைகளினிடையே, அரண்மனைக் காவலரின் பாகைகள் தெரிகின்றன. வில்லும் அம்பும் தாங்கிய தோள்கள் அவள் குலை நடுங்கச் செய்கின்றன.

பின்னே... ஒரு பாலகன். அஜயனையும் விஜயனையும் போன்ற வயதினன். வருகிறான்.

பட்டாடை முத்துச்சரங்கள் விளங்கும் மேலங்கி; செவிகளில் குண்டலங்கள். கற்றையான முடி பளபளத்துப் பிடரியில் புரள, முத்துமணிகள் தொங்கும் பாகை அவளுக்கு மயிர்க்கூச்செறிகிறது.

இவன் யார்? உணர்மியும். அப்போது கருவுற்றிருந்தாள்.அவள் மகனே அந்தப் பாலகனை ஆயத்தழுவி மகிழும் கிளர்ச்சியில் முன் வருகிறாள்.

“மைந்த வாப்பா, நீ எந்த நாட்டைச் சேர்ந்த அரசிளங்குமான்’ என்று வினவுகிறாள்.

நந்தமுனிக்கும் கண்ணிர் வழிகிறது.

பையன் தயங்கி ஒதுங்கி நிற்கிறான்.

“இவளும் உன் அன்னையைப் போல். வனதேவி அன்னை!. வனதேவி, குதிரையைத் தேடி வந்திருக்கிறார்கள்.”

“அப்படியா? அது இங்கேதான் முற்றத்தில் வந்து நிற்கிறது. உங்கள் குதிரையா? இந்த வில் அம்பெல்லாம் எதற்கு? அது சாதுவாகவே நிற்கிறது. யாரும் கட்டிப்போடவில்லை.அழைத்துச் செல்லுங்கள்!”

வானவனுக்கு நன்றி செலுத்துபவளாக அரசகுமாரனை அவள் முற்றத்துக்கு அழைத்து வருகிறாள். .