வனதேவியின் மைந்தர்கள்/25
அவளால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இது போரா? இரவு நேரத்தில் நடந்த வன்முறையா? எப்போது பிள்ளைகள் ஆறு கடந்தார்கள்? எப்போது மாயன் அவன் கூட்டத்தாரின் மானம் காக்க நச்சம்பு விட்டான்? படைகள் திரும்பி அம்பெய்தி... கூட்டத்தில் யார் வேண்டுமானாலும், மாடு கன்று, பறவை மனிதர் மரம் மட்டை என்று அழிக்க முனைந்தார்களா?...
குனிந்து நந்தமுனியை அசைவற்று நோக்குகிறாள்.“மகளே, கலங்காதே...” என்று அவளுக்கு ஆறுதல் சொல்கிறாரா?... புன்னகை வாடாத சாந்தம் ததும்பும் முகம். முடி அதிகமில்லாத தாடி, ஒட்டிய தாடைகள் கண்கள்... எல்லா உலகமும் அமைதியுடன் வாழவேண்டும் என்று பாட்டிசைத்த அந்த நா.... எல்லாம் நிலைத்து விட்டன.வேதவதியே, நீ ஓடுகிறாயே, உனக்கு இது தகுமா? அஜயன் அவர் விலாவில் அம்புதைத்த இடம் பார்க்கிறான். யாரோ அந்த நாசகார அம்பைக் கொண்டு வருகிறார்கள். தம்புர்... ஒற்றை நாண், அது ஓய்ந்து விட்டது.
சம்பூகனை இழந்தபோது சோகம் கரைபுரண்டுவர அரற்றினாள். இப்போது நாவே எழவில்லை.
இளமைப்பருவ நினைவுகள் படலங்களாக உயிர்க்கின்றன. அவர் மடியில் அமர்ந்து, மழலையில், “தாயே, தயாபரி...” என்று அவருடன் இணைந்து பாடியதும், அந்த ஒற்றை நாணை பிஞ்சு விரலால் மீட்டியதும் நினைவில் வருகிறது.
“என் தாய் யார் சுவாமி?”
“இந்த பூமிதான். நீ பூமகள், பூமிஜா, பூமா... எல்லாம் நீதான்!” என்று சிரிப்பார்.
“காட்டிலே எப்படி பயமில்லாமல் இருப்பீர்? பாம்பு, யானை, புலி, சிங்கம் எல்லாம் இருக்குமே?”
“அவையும் இந்த பூமியில் வாழலாமே? இந்த பூமித்தாய் அவற்றையும் படைத்திருக்கிறாள் அல்லவா?...”
நீண்ட முகம்... கூர்மையான நாசி... ஒழுங்கில்லாத பற்கள்... அந்நாள் பார்த்த அதே வடிவம், சிறிதும் மாறவில்லை. மேல்முடியைக் கோதி உச்சியில் சுற்றி இருக்கிறார். அதில் எப்போதுமே அடர்த்தி இல்லை...வற்றி மெலிந்த மார்புக் கூடு.... அது எழும்பித் தணியவில்லை.
சோகம் தன்னைச் சுற்றிப் பிரளயமாகக் கவிந்தபோதும் அவள் அசையவில்லை. யாரோ, மாதுலனைத் தூக்கி வருகிறார்கள். அவளால் நடக்க முடியவில்லை. அதனால் தூக்கி வந்து அவள் அருகில் அமர்த்துகிறார்கள்.குழலை அவன் கையில் ரெய்கி கொடுக்கிறாள். அவன் மறுக்கிறான். கண்களில் இருந்து ஆறாய் நீர் வழிகிறது. மாயனின் இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொண்டு வந்து அவள் பக்கம் விடுகின்றனர். அவை சோகம் புரிந்தோ, புரியாமலோ வீரிட்டுச் கத்துகின்றன.
ஒரு தடவை அவர் உயிர்ப் பாம்பைக் கழுத்தில் போட்டுச் கொண்டு வந்தார். அவந்திகாவுக்கு ஆத்திரம் வந்தது.
“என்ன ஆாமி இது? குழந்தை பயப்படமாட்டாளா?” என்று கடிந்து அவளைப் பற்றிச் செல்ல முயன்றாள்.
“ஒன்றும் ஆகாது. அஞ்சாதே. குழந்தாய்... இதோ பார், இது உனக்கு நண்பர்... தொடு...” என்று அவள் பூங்கரம் பற்றி அதைத் தொடச் செய்தார். அது பூவைப் போல் குளிர்ச்சியாக இருந்தது ‘இன்னும் இன்னும் இன்னும்... என்று தலையோடு வால் பூங்கரத்தால் தடவிக் கொடுத்தாளே?...
அந்நாள் கானகத்தில் தன்னந்தனியளாய் அவள் வந்து விழுந்த போது, நாகங்கள் வந்து வரவேற்றதை எண்ணிக் கண்ணீர் பொங்குகிறது.
“அத பாருங்க! பாம்பெல்லாம்...”
அந்த வனமே சோகத்திலிருக்கிறது. ஊர்வன, பறப்பன. நடப்பன ஆகிய அனைத்து உயிர்களுக்கும் தோழனாக ஓம் ஓம் என்று ஒலிக்கும் தம்புருடன் இதம் செய்தவர். அந்த இசைக்கருவி நாதனை இழந்துவிட்டது. பகல் உச்சிக்கு ஏறி இறங்கத் தொடங்குகிறது. அவர் வீழ்ந்த இடம், மரமல்லிகைகள் சொரியும் அரண் பூச்சிக்காட்டையும், வாழை வனங்களையும் பிரிப்பது போல் அரணாக நிற்கும் மரங்கள். உச்சிக்கு ஏறிய ஆதவன் திடீரென்று குளிர்ந்தாற்போல் சாரல் வீசுகிறது. அந்த வேனிலில், சரேலென்று ஒரு சாரல் விசிற, வானவன் அவர் பொன்மேனியை நீராட்டுவதுபோல் குளிர் பூஞ்சாரலாகப் பொழிகிறாள். இத்தகைய சாரல் வந்தாலே மரமல்லிகை பொல்லென்று மனம் சொரிந்து அவனியை அலங்கரிக்கும் நந்தமுனியை இயற்கை நீராட்டி அலங்கரிக்கிறது...அப்போது. மத்தன். யானைக்கூட்டம் பிளிறலுடன் வந்து அஞ்சலி செய்ய வருகின்றது. வேடமக்கள் அனைவரும் ஒதுங்குகின்றனர். அவள் அந்த யானையில் அருகில் சென்று அதன் காலைப் பற்றிக் கொண்டு கண்ணிர் உகுக்கிறாள்.
“இம்சையில் இருந்து அனைவரையும் விலகச் செய்த எந்தையை யாரோ கொடிய அம்பு கொண்டு துளைத் திருக்கின்றனர், மத்தராஜனே!” என்று புலம்புகிறாள்.
மிதுனபுரியில் இருந்து ஒரு கூட்டம் வருகிறது. பாதம் வரை தொங்கும் ஆடை அணிந்த பெண்கள். தலையில் துண்டு அணிந்து திறந்த மார்புடன் ஆண்கள், மூங்கில் கொம்புகளாலான ஒரு பல்லக்கில், ராணியம்மாவைச் சுமந்து வருகிறார்கள்.
“பெரிய ராணி வாராங்க!.”
பூமகள் கண்கள் அகலப் பார்க்கிறாள். ஒருகால் கேகயத்து மாதாவோ?
சிவிகையைக் கீழே வைக்கிறார்கள். மெல்ல இருவர் சிவிகையில் இருந்த அவளைத் தூக்கிப் புற்பரப்பில் அமர்த்துகின்றனர். அந்த அன்னை, கூரிய நாசியும் அகன்ற நெற்றியும்.
ஒ. இவர்தாம் மிதுனபுரி ராணி மாதாவா? தலை மூடிய துண்டு. பாதம் வரை, ஆடை, அந்த அன்னை மயிலிறகுகளால் ஆன ஒரு விசிறி போன்ற சாதனத்தால், கால் முதல் தலைவரை தடவுகிறாள். சுருங்கிய விழிகள் பளபளக்கின்றன. மெல்லிய சுருங்கிய உதடுகள் துடிக்கின்றன. பேச்சு எழவில்லை. அப்போதுதான் சத்திய முனிவர் விரைந்து வருவதை அவள் பார்க்கிறாள்.அவர் முகத்தை மூடிக் கொண்டு விம்முவதை அவள் முதல் தடவையாகப் பார்க்கிறாள்.
மிதுனபுரி ராணி மாதாவின் பக்கம் வந்து நின்று குலுங்குகிறார்.
“அம்மையே பாவத்தின் கருநிழல் விழுந்துவிட்டது.” அந்த அம்மை முனிவரின் பாதங்களில் நெற்றியை வைக்க முன் நகருகிறாள். அவர் குனிந்து அவளைத் துாக்குகிறார்.
“தாயே, நான் வந்தனைக்குரியவன் அல்ல. தாங்களே வந்தனைக்குரியவர்கள். எனக்கு இந்த மரியாதை உகந்ததல்ல. தங்களுக்குக் கொடுத்த வாக்கை, என் எல்லையில் வன்முறை நிகழாது என்ற வாக்கை, நான் நிறைவேற்றத் தவறிவிட்டேன்.” என்று அரற்றுகிறார்.
பூமகளுக்கு இதெல்லாம் கனவோ, நினவோ என்று தோன்றுகிறது. இந்தப் பிரமையில் நின்றவள். அங்கு கோசலத்து பணி மாதா கேகயத்து அன்னை வந்ததையோ, அவந்திகா உரத்த குயலில் கதறியதையோ கூடப் புரிந்து கொள்ளவில்லை.
அவரை, வில்வமரத்தின் பக்கம் அம்பு தைத்திருக்க வேண்டும் என்று இடம் காட்டுகிறான், சோமன். அங்குதான் நாலைந்து அம்புகள் மரத்திலும் கீழும் சிதறி இருந்தனவாம். அங்கிருந்து நடந்து வந்து வீழ்ந்திருக்கவேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இறந்தவரின் சடலங்களை எல்லாம் கொண்டு வந்து, வேதவதியில் இருந்து நீர் கொணர்ந்து வந்து அந்திமம் செய்கிறார்கள். நந்தமுனிவரின் அருகில் மாயன், பூவன், நீலன். எல்லோரும் இடம் பெருகிறார்கள். நந்தமுனியின் தம்பூரை, அஜயன் எடுத்துக் கொள்கிறான்.அதைக் குழியில் வைக்க அவன் அநுமதிக்கவில்லை.
மாதுலன் தன் சோகமனைத்தையும் கரைக்கும் வண்ணம் இசைக்கிறான். தேனாய், தீயாய், தீங்குழலாய் அது கானகத்தில் ஒலிக்கிறது. வானத்து ஒளிமங்க, கரும்பட்டுப் படுதா விரிகிறது. ஆயிரமாயிரமாக விண்மீன்கள் அவர்களை வரவேற்க உதய மாகின்றன. சத்திய முனி குரலெழுப்ப, அஜயன் அந்த ஒற்றை நாண் யாழை மீட்ட, அது ஒம். ஒம். ரீம் என்று ஒலிக்கிறது.
“எங்கள் அன்னை நீ! இறைவி நீ!
நீயே நாங்கள்! நாங்களே நீ!
வையம் நீ வானம் நீ!
இந்த நீரும், மாமரங்களும், மூலிகைகளும்,
அறுசுவையும் எண்ணற்ற வடிவங்களும்,
நீயே யாவாய்!
துன்பம் நீ! இன்பமும் நீ!
நீயே மரணம்! நீயே பிறப்பு
பாவத்தின் கருநிழல்கள் படிந்துவிட்டன.
அன்னையே உன்னைப் போற்றுவோம்!
அவை எங்களை விழுங்காமல் காத்தருள்வாய்’
கீதம் முடியும்போது விம்மி விம்மி அழாதவர் எவரும்
இல்லை என்று தோன்றுகிறது. அஜயனும் அந்தச் சோகத்தில் கரைகிறான். ஆனால் விஜயன் மட்டுமே வேறாக நிற்கிறான்.
“தாத்தா? பாவத்தின் கருநிழல் என்று எதைச் சொன்னிர்கள்? எங்களை வில் அம்பு எடுக்கக் கூடாது என்று ஆணையிட்டு விட்டுத் தாங்கள் இங்கே இல்லாமல் போய் விட்டீர்கள்.அவர்கள் குறிபார்க்கத் தேவையில்லாத போர்க்கால வில்-அம்பு சாதனங்களால் மரம் மட்டை பசுக்கள் இன்னார் இனியவர் என்றில்லாமல் நம்மை அழிக்க முன் வந்தது எதனால்? நம் பசுக்கள் கண்முன் இறந்தன. மாயன் பொங்கி எழுந்து நச்சம்பு போட்டு, பத்துப் பத்தாக, நூறாக, அவர்கள் பக்கம் ஆறு கடந்து கொன்றான். அவன் வீரன்; வீரனாக உயிரைக் கொடுத்தான். நாங்கள் குரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, கோழை போல் நின்றோம். எது பாவத்தின் கருநிழல்?”
“விஜயா” என்று பூமகள் கத்துகிறாள்.
‘பாவத்தின் கருநிழல் எங்கிருக்கிறது என்று என்னிடம் கேள்! இவர்கள் பாவத்தின் கருநிழலைத் துடைக்க வாழ்கிறார்கள். அத்தகைய ஒரு பெருமகனை இப்போது அந்த நிழல் விழுங்கிவிட்டது. மகனே, உன் அன்னை கர்ப்பத்தில் உங்களைச் சுமந்து கொண்டு எந்நாள் அநாதரவாகத் திக்குத் தெரியாத கானகத்தில் விடப்பட்டாளோ அன்றே பாவத்தின் கருநிழல் விழுந்துவிட்டது. பெண்ணொருத்தி எந்நாள் கோத்திர மில்லாதவள் என்று சபிக்கப்பட்டாளோ, அன்றே பாவத்தின் கருநிழல் இந்த பூமியில் படிந்துவிட்டது. மண் அன்னை தன் மக்களுக்கு அமுதுTட்ட கோத்திரம் பார்ப்பதில்லை: குலம் பார்ப்பதில்லை. ஆனால். மனிதகுலம் எந்நாள் தம்மைப் பெற்ற அன்னைக் குலத்துக்கு இத்தகைய விலங்குகளைப் பூட்டிற்றோ அந்நாளே பாவத்தின் கருநிழல் இந்தச் சமுதாயத்தில் படிந்து விட்டது!...”
பூமகளின் இந்தக் குரலை எவரும் கேட்டதில்லை.
அமைதித் திரை கொல்லென்று படிகிறது.
சத்திய முனிவர் அவள் அருகில் வருகிறார்.
அவள் முடியில் கை வைக்கிறார். “மகளே, அமைதி கொள். பாவம், புண்ணியம், இருள், ஒளி ஆகிய இருமைகள் வையகத்தின் இயக்கத்தில் வரும் இயல்புகள். அந்த இரண்டையும் கடந்த மேலாம் ஞானத்தை எய்தும் முயற்சியே அமைதிப்பாதை அமைதி கொள்வாய்.”
“தாயே, நீங்கள் சொல்லும் செய்திகள் புரியவில்லை. கோத்திரமில்லாதவர் என்பவர் யார்? அந்தக் கருநிழல் எப்படி உங்கள் மீது விழுந்தது? நாங்கள் துடைத்தெறிவோம்.”
பூமகள் மக்களை அனைத்துக் கொள்கிறாள்.
“மக்களே, நான் பேறு பெற்றவள். என்பதும் உங்கள் மீதும் எந்தக் கருநிழலும் விழாது. இந்த வனமே பாவனமானது.”
அப்போதைக்கு இந்த வினாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதே தவிர, பூமகளின் உள்மனம் ஒலமிட்டுக் கொண்டுதானிருக்கிறது.
நந்தமுனி வீழ்ந்தபிறகு, மிதுனபுரி மக்கள் வாளாவிருப்பரா? மாயனும், பூவனும் நீலனும் அழிந்தபிறகு இந்த மக்களும் இன்னமும் அஹிம்சை என்று கைகட்டி இருப்பாரோ? விஜயன். விஜயனின் துடிப்பை, கிளர்ச்சியை அவளால் உணரமுடிகிறது. அஜயன் அவள் பக்கம் இருப்பான். ஆனால் விஜயனின் உடலில் அன்னை கூறினாற்போல் க்ஷத்திரிய இரத்தம்தான் ஒடுகிறது. அவன் பழிவாங்கத் துடிக்கிறான். மின்னலைத் தொடர்ந்து இடி வரும்.
இடி வருகிறது. அண்ட சராசரங்களை உருட்டிப்புரட்டும் இடி
மிதுனபுரிப் பெண்படை சந்திரகேதுவின் படையோடு மோதுகிறது.
தலைகள் உருள்கின்றன; பயிர்கள் அழிகின்றன: வனவிலங்குகள் அமைதி குலைந்து தறி கெட்டு ஒடுகின்றன. வேதவதியில் குருதி கலக்கிறது.
அஜயனும் விஜயனும் சோமனும், வேதவதிக்கரை, எல்லைக் கோட்டில், தங்கள் வில்-அம்பு கொலைக் கருவிகளுடன் நிற்கின்றனர்.
இவர்கள் அனைவருமே யாவாலி அன்னையின் ஆசிரமத்தில்தான் குடியேறி இருக்கிறார்கள்.
கேகயத்து மாதாவும், பெரியன்னையும், ஒருபுறம் முடங்கி இருக்கிறார்கள். அவந்திகா, கின்னரி, ரீமு, ஆகியோர் உணவு தயாரிப்பதும் நீர் கொண்டு வருவதுமாக இயங்குகின்றனர்.
சத்திய முனியும் பிள்ளைகளுக்குக் காவல் போல் செல்கிறார்
அன்று வானம் கறுத்து, மழைக்காலத்தின் துவக்கத்தை அறிவிக்கிறது.
ஆவணிப் பெளர்ணமிக்கு இன்னமும் நாட்கள் இருக்கின்றன.
இவ்வாண்டு முன்னதாக மழைகாலம் தொடங்கிவிடுமோ?
எரிபொருள், காய்-கனி-கிழங்குகள். முன்னதாகச் சேமித்துச் கொள்வார்கள், இவ்வாண்டு.
“பிள்ளைகளே, நாம் இன்று உணவு சேகரித்து வருவோம்!” என்று அழைக்கிறார். யாவாலி அன்னையின் சமாதி மேட்டுக்கருகில் இருந்து, அவர் நெஞ்சுருகக் காலை வணக்கம் சொல்லி இறைஞ்சுகிறார்.
“வானும் மண்ணும் அமைதியடையட்டும்
வளி மண்டலம் அமைதியடையட்டும்!
நீரும் காற்றும் அமைதியடையட்டும்!
உயிரின் துடிப்புகள் விளங்கட்டும்!
தறிகெட்ட ஒலிகள் சீர் பெறட்டும்!
சுருதியும் இலயமும் இணையட்டும்!
சோகங்கள் யாவும் கரையட்டும்!
சுருதி நாயக உனை நம்பினோம்!