7

“மகளே, நாம் அதிகாலை நேரத்தில் கிளம்பி, கோமுகி ஊற்றுக்குச் செல்கிறோம். ராணி மாதாக்கள் அங்கே உங்களுக்கு வனவிருந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தேவையான பொருட்கள் எல்லாம் அங்கே கொண்டு செல்கிறார்கள் பணியாளர்...”

அவளுக்கு உற்சாகம் முகிழ்க்கிறது.

“யார்? பெரியன்னையா? மன்னரும் வருகிறாரா?”

“பெரிய மாதா சொன்னதாகத் தெரியவில்லை. இளைய மாதாவின் ஏற்பாடுதான். சுமித்திராதேவியம்மையும் வருகிறார்கள். தாங்கள், இளவரசி ஊர்மிளா சுதா, எல்லோருடனும் பணிப்பெண்கள், ஏவலர், பாதுகாவலாகவில்லேந்தி மிக இளைய குமாரர், சத்ருக்னர் எல்லோரும் செல்கிறோம்....” எழும்பிய உற்சாகம் சப்பென்று வடிந்து போகிறது.

“அவந்திகா? எனக்காக நீ ஓர் உதவி செய்வாயா?”

“நீங்கள் மகாராணி, உங்களுக்குப் பாலூட்டும் பாக்கியத்தைக் கொடுத்து, என்னை இன்றும் பாதுகாத்து, சிகரத்தில் வைக்கிறீர்கள். என்னிடம் நீங்கள் உதவி என்று கோரலாமா, தேவி? ஆணையிடுங்கள்!”

“அந்தப் பணிப் பெண்ணை. அவள்தான், பூனைக்கண்ணி, அவளை இரகசியமாக என்னிடம் கூட்டி வா, யாருக்கும் தெரியக்கூடாது. ஏனெனில் மன்னரின் மீது எந்தக் களங்கத்தின் நிழலும் படியலாகாது. ஊர்மி, சுதா, மாதாக்கள், யார் செவிகளுக்கும் அரசல் புரசலாகக் கூடப் போய்விடக்கூடாது, அவந்திகா!” அவள் சிறிது நேரம் பேசவில்லை.

“நான் கேட்கிறேன், வெற்றிலை மடித்துக் கொடுக்க, கவரி வீச உடைகள் எடுத்துத் தர, உணவு கொண்டு வைக்க, மன்னர் இளவரசர் மாளிகைகளில் பணிப்பெண்கள் எதற்கு? வேண்டு மானால் தீபமேற்றி விட்டுப் போகட்டும். ஆடவரே பணி யாளனாக இருக்கலாமே?”...

“மகாராணி இந்தக் கருத்தை ராணிமாதா - ஏன், மன்னரிடமே சொல்லலாமே?”

“அந்தப்புரக் கிளிகளுக்கு விடுதலை என்று சொல்கிறார்கள். இதுவும் ஒருவகை அடிமைத்தனம்தானே?... அவந்திகா, அன்று குளக்கரையில் சந்தித்த பிறகு, மன்னர் என்னைக் காண வரவேயில்லை. உணவு மண்டபத்தில் பார்த்தும் பாராமலும் போய் விடுகிறார். நானே இன்று, அமுது பரிமாறினேன். நிமிர்ந்து பார்த்துவிட்டு, “நீ எதற்கு இந்தப் பணி எல்லாம் செய்ய வேண்டும்? நீ போய் ஒய்வு கொள்” என்றார். எனக்கு... துயரம்... சொல்லும்போதே நெஞ்சு முட்டுகிறது. இப்படி அவர் முன்பு இருந்ததேயில்லை அவந்திகா. மன்னர் பத்தரை மாற்றுத் தங்கம் அப்படியும் என் மனம் அலைபாய்கிறது. என் மாமிமார் எத்துணை பொறுமை காத்து இருப்பார்கள்? அரக்க வேந்தனின் பட்டத்து ராணியை நினைத்துப் பார்க்கிறேன். அத்தனை பெண்களும் மங்கலங்கள் இழந்து, காப்பாரில்லாமல் அழிந்தார்கள். மன்னனின் வீரதீர பராக்கிரமங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆயிற்று. என் மாமன், சக்கரவர்த்திப் பெருமானுக்கு, இத்தகைய இறுதி நேர்ந்திருக்குமா? ஒரே மனைவியாக இருந்திருந்தால்...?”

அவந்திகா, அவள் நெஞ்சை நீவி இதம் செய்கிறாள்.

“ஆறுதல் கொள்ளுங்கள் மகாராணி, ஒரு உயிரை உங்களுள் தாங்கும் இந்த நேரத்தில் இத்தகைய வீண் கவலைகளுக்கு இடம் கொடுக்கலாகாது. கிளி சொன்ன செய்திகள் வெறும் அபத்தம். தாங்கள் அதற்குப் பாலூட்டி, மொழி சொல்லிப் பழக்கினர்கள். சென்ற பிறவியில் அது தந்திரக்கார நரியாக இருந்திருக்கும். என்ன பேச்சுத் திறமை இருந்தாலும், அதற்கு நம்மைப்போல் அறிவு ஏது? விடுங்கள்! அது உங்களைக் கிண்டி விளையாடுகிறது” என்று அவந்திகா எத்துணை ஆறுதல் மொழிந்தும் சஞ்சல மேகங்கள் அகலவில்லை.

கருவுற்ற மகளிரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் கோமுகி ஊற்றுப் பக்கம் வனவிருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பூமிஜா இதுநாள் வரையிலும் இந்த இடத்தைப் பார்த்திருக்கவில்லை. வேதபுரிப்பக்கம் உள்ள வெந்நீரூற்றுகள் அவளுக்குத் தெரியும். “கொதிக்கும் நீரே வரும். இங்கே அப்படி இருக்குமா?”

“தெரியாது மகாராணி, சொல்லிக் கேட்டதுதான்.”

“பதினான்கு ஆண்டுகள் இந்த மாளிகை அடிமையாக நீ என்ன செய்தாய்?”

“உண்ணுகிறோம்; உறங்குகிறோம்; மூச்சு விடுகிறோம். அப்படி ஒரு வாழ்வு. இளைய மாதா, கேகய ராணி, எத்தனை கலைகள் தெரிந்தவர்? நூல் நூற்பதிலிருந்து, வண்ணப் பொடிகள் தயாரிப்பது வரை அத்தனையிலும் வல்லவர். அவருக்குத் தாம் ராணிமாதா என்ற எண்ணமே கிடையாது. அவரில்லை என்றால், நானும் எங்கோ வழிதவறிய தாய்ப்பசுவாகச் சென்று மாண்டிருப்பேன்!.”

வேதபுரியைச் சார்ந்த இடங்கள், குன்றுபோலும் மேடு பள்ளங்களுமாக இருக்கும். இந்த இடங்கள் அப்படி இல்லை. வீரர்கள் காளை வண்டிகளை ஒட்டிக் கொண்டு வருகிறார்கள் அதில் பணிப்பெண்கள், ஆடல் பாடல் கருவிகள் இருக்கின்றன. ஒரு சிவிகையில் பூமையும் ஊர்மியும் அமர்ந்திருக்கின்றனர். இன்னொன்றில், சுதாவும், சுமத்திராதேவியும் அமர்ந்துள்ளனர். இன்னொரு ராணி மாதா, சுரமையுடன் வேறொரு சிவிகையில் பயணம் செய்கிறார். சில காவல் வீரர் தொடர, தேரில் சத்ருக்னர் பின்னே வருகிறார்.

சிவிகை சுமப்போரின் ஆஹீம்... ஆஹீம் என்ற ஒலி அவள் செவிகளில் விழுகின்றன. மாட்டு வண்டிப் பலகையில் பணிப்பெண்கள் ஏதேதோ பேசிவருகிறார்கள் என்று புரிகிறது. சாமளியின் சிரிப்பொலி கேட்கிறது. இந்தப் பட்டாளத்தில், ஜலஜை இடம் பெறவில்லை. மூத்த மகாராணியும் இல்லை. ஸீமந்த வைபவத்துக்கு ஏற்பாடுகள் செய்கின்றனராம்.

உடன் இருக்கும் ஊர்மி இப்போது வாய் மூடி மெளனியாக இருக்கிறாள். கண்களை முடிக் கொண்டு உட்கார்ந்தபடியே உறங்குகிறாள்.

அதிகாலையில் யார் எழுந்திருப்பார்கள்?....

காட்டு வழியில் செல்லும்போது பூமை, திரைச்சீலையை ஒதுக்கிப் பார்க்கிறாள். காட்டுக்கே ஒரு வாசனை உண்டு. மரங்களின் மணம் மூலிகைகளின் மணம். வனவிலங்குகள் எதிர்ப்படாத வண்ணம் ஊதுகுழலால் ஊதிக் கொண்டும், தப்பட்டை கொட்டிக் கொண்டும் பணியாட்கள் செல்ல, அசைந்து அசைந்து சிவிகையில் செல்வது ஊர்மிக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கண்களை விழித்துக் கொண்டு பல்லக்குத் தூக்கிகளின் மூச்சுக்கேற்ப தாளம் தட்டுகிறார். ‘மன்னரும் இளையவரும் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? எப்போது பார்த்தாலும் என்னதான் அரசாங்கமோ!... மாண்டவி வரக்கூடாதா? அவள் மகா தபஸ்வி போல் இப்போதுதான், விரதம், தானம், தவம் என்று மைத்துனரைப் பிரியாமல் இருக்க வழி தேடிக் கொள்வாள். அவர்கள் இட்ட பணியைச் செய்பவள்!...’

“இதுவும் ஒருவிதத்தில் சுதாவுக்கு நல்ல பேறாக வாய்த்திருக்கிறது.”

பூமை எதுவும் பேசவில்லை.

“எப்போது பார்த்தாலும் என்னம்மா யோசனை? பேசாமல் நான் ராணிமாதாவுடன் உட்கார்ந்திருக்கலாம்...”

சிணுங்கலும் சீண்டலுமாக அவள் தொடர, பயணத்தின் இறுதிக்கட்டம் வரும்போது, முற்பகல் நேரமாகிறது.

அவர்களை வரவேற்க வேடுவப் பெண்கள் தேனும் மீனும் காணிக்கைப் பொருட்களாகக் கொண்டு வருகிறார்கள். காட்டுப் புற்களால் வேயப்பட்ட தாழ்வரைகளில் அவர்கள் அமர இருக்கைகள் தயாராக இருக்கின்றன. அரசகுலப் பெண்கள் அமரவும் இளைப்பாறவும், விளையாடி மகிழவும் ஆடல் பாடல்களில் ஈடுபடவும், கானகம் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்துக்கு வெகு அருகில்தான்கோமுகம் போல் செதுக்கப்பட்ட பாறை வளைவில் இருந்து ஊற்று வெளிப்படுகிறது.நீர் இதமான, மிதமாக சூட்டுடன் பெருகி வந்து அருகிலுள்ள தாமரை வடிவிலான செய்குளத்தை நிறைக்கிறது.

சற்று எட்ட பெரும் விழுதுகளை ஊன்றிக் கொண்டு கணக்கிடமுடியாத வயதென்று இயம்பிக் கொண்டு ஒர் ஆலமரம் இருக்கிறது.

அந்த மரத்தில் இருந்து வரும் பறவைக் கூச்சல் பூமிஜாவைப் பரவசம் கொள்ள செய்கிறது. ஒரு கிளிக்கூட்டம் சிவ்வென்று பறந்து செல்கிறது.

“எத்தனை பெரிய மரம்? இது போன்ற மரங்கள் நான் கண்டதில்லை”

“நீங்கள் சுற்றி வந்த தண்டகாரணியத்தில் கூடவா?”

“இல்லை...”

“அதோ அதுதான் நீலகண்டப் பறவை. கழுத்து நீலமாக இருக்கிறது, பார்!” “இன்னும் கொஞ்சம் நடந்தால், பெரிய ஏரி இருக்கிறது, தேவி! அங்கு பல்வேறு வகைப் பறவைகளைப் பார்க்கலாம்!”

“நாம் ஏரிக்கரைப் பக்கம் போகலாமா, ஊர்மி?”

“அம்மாடி! என்னால் இப்ப நடக்க முடியாது. அத்துடன் இப்போது நாம் ஊற்று நீரில் நீராடுவோம். பிறகு பசி ஆறுவோம். உண்ணுவோம். உறங்குவோம்” என்று சைகையால் அபிநயிக்கிறாள்.

“இந்த மூன்றைத் தவிர வேறு எதுவும் நம் வாழ்க்கையில் கிடையாதா?”

பூமை எதுவும் பேசவில்லை.

அவந்திகா எண்ணெய்க் கிண்ணங்களுடன் வருகிறாள்.

“அவந்திகா? இந்த ஆலமரத்துக்கு எத்தனை வயசிருக்கும்?”

“... மகாராஜா வயசிருக்கும்?”

ஊர்மிளா உதட்டைப் பிதக்கி, பூமிஜாவைப் பார்க்கிறாள். மன்னரின் வித்தியாப் பியாச காலத்தில் அவர் கையால் நட்ட மரமாக இருக்கலாம்.

பேசிக் கொண்டே பரிமளங்களை அவிழ்க்கிறார்கள். உடலெங்கும் மணக்கும் மூலிகைப் பொடிகளைப் பூசிக் கொண்டு இதமான வெந்நீர் ஊற்றில் அரச குலப் பெண்கள் நீராட பணிப் பெண்கள் கரையில்துாபகலசங்களைக் கொண்டு வந்து கூந்தலைத் துடைத்து உலர்த்திப் பிடிக்கச் செய்கின்றனர். ஊர்மிக்குச் சுருண்ட கூந்தல், அலையலையாகப் புரள்கிறது. சுதாவுக்கும் பூமிஜாவைப் போன்றே நீண்ட கூந்தல். பூமிஜாவுக்கு மிக அடர்ந்த கூந்தல். இடுப்புக் கீழ், பின்புறம் மறைய விழுகிறது.

கால்களில் செம்பஞ்சுக் குழம்பை இறகில் தேய்த்து, சாமளி கோலம் செய்கிறாள். அரும்பரும்பாகக் கோலத்தின் நடுவே ஒர் அழகிய மயிலின் ஒவியம் விரிகிறது.

மயில் கண்முன் உயிர்த்தாற் போல் இருக்கிறது. “சாமளி, இந்தக் கலையை எங்கு, யாரிடம் கற்றாய்?”

“யார் கற்றுக் கொடுப்பது? பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டேன். இந்த மயில் கிளி, குயில் எல்லாம் நினைத்த மாத்திரத்தில் பறந்து சென்று எங்கோ மரக்கொம்பில் முகப்பில் உட்காருகின்றன. நமக்கு முடியவில்லை. ஏதோ குறைந்த பட்சம் அவற்றைச் சித்திரத்தில் வரையலாமே. என் தாயார், தாமரை, மாங்கனி, மாதுளை என்று வரைவாள்...”

“அது கிடக்கட்டும், சாமளி, உன் கால்களில் நீ இப்படி அழகு செய்து கொள்வாயா?”

அவள் இல்லையென்று தலையை அசைப்பதுடன் செயலில் கண்ணாக இருக்கிறாள்.

“நான் கேட்டேனே, ஏன் சாமளி? நீ உன்னை அழகுபடுத்திக் கொள்ள மாட்டாயா?”

அவள் தலை நிமிராமல், கையில் பற்றிய இறகுடன் “நான் அரசமகளா?... பிரபு வருக்கமா? அல்லது... அழகு செய்து கொண்டு ஆடவரைக் கவரும் வருக்கமா? இந்தக் கலையின் விலை என் வாழ்க்கை”

“அப்படி என்றால்?”

“தேவி, அவள் எதையோ பிதற்றுகிறாள். அழகு செய்தது போதும். காலையில் இருந்து கனிச்சாறு கூட உள்ளே போகவில்லை. சாமளி, உன் கடையைக் கட்டு!” என்று அவந்திகா அவளை அனுப்புகிறாள். அவள் சிணுங்கி அவற்றை எடுத்துப் பெட்டிக்குள் வைக்கிறாள். அப்போது, கொட்டென்று ஒரு பெரிய பறவை கழுத்தறுப்பட்டாற்போல் அங்கு வீழ்கிறது. பறவைப் பட்டாளமே சோகக் குரல் கொடுக்க பெரும் அமளி உண்டாகிறது.

“இது என்ன விபரீதம்? இங்கே யார் பறவையை அடித்து வீழ்த்தினார்கள்? மகாராணியின் முன் அது வீழ்கிறது? யார்...?”

பூமகள் துணுக்குற்று அதைத் தாங்குகிறாள். சாம்பலும் நீலமும் கலந்த கழுத்தில் புள்ளிகள். சிவந்த சிறு மூக்கு, கால்கள்.. வெண்மை அடிவயிறு. “என்ன அழகு! இதை இப்போது யார் எதற்காக அடித்தார்கள்?”

ஊர்மி சிரிக்கிறாள். “விருந்துக்குத்தான். அந்தக் குதிரைக் காரர்தான் வெறும் வில்-உருண்டை கொண்டு அடித்தார். என்ன குறி!”

அவள் கண்கள் நெருப்புக் கோளமாகி விட்டாற்போன்று நிற்கிறாள்.

“விருந்துக்கா?”

“ஆம் தேவி. கருவுள்ள பெண்களுக்கு இதன் ஊனைப் பக்குவம் செய்து கொடுப்பது வழக்கமாம் முக்கியமாக இங்கு வனவிருந்துக்கு வருவதன் பொருளே, இத்தகைய அபூர்வமான பறவைகள், மூலிகைகளுக்காகத்தான்!”

கபடில்லாத உற்சாகங்கள் தீப்பற்றி எரிந்தாற்போல் இருக்கின்றன.

“அரக்கர் ராச்சியத்தில் கூட இப்படிக் கொடுமை நடக்க வில்லை. உயிர்கொலை தவிர, உங்கள் சந்தோசங்கள் வேறு கிடையாதா? ஐயோ! ஆணும் பெண்ணுமாய் கூடுகட்டி குஞ்சு பொரித்து, அதற்கு உணவூட்டும் பறவை இனம்..” என்று அவள் தன்னை மறந்து புலம்புகிறாள்.

ஆட்டமும் பாட்டமும், சிரிப்பும் களை கட்டவில்லை.

“தேவி, ராணிமாதா உத்தரவில் இது நடந்தது. இது வழக்கம்தான். மான், மீன், பறவை வீழ்த்திய பணியாளன் பாதம் பணிந்து மன்னிப்புக் கேட்கிறான்.”

“அவந்திகா, எனக்கு இன்று எந்த உணவும் வேண்டாம். இந்தச் சூழலே பிடிக்கவில்லை. என்னைத் தனியாக விடுங்கள்.”

தாழ்வரையில் ஓர் ஒரமான இருக்கையில் சென்று சாய்கிறாள் பூமகள்.

அடுத்து, கானகத்தில் காய்ந்த விறகுகள் சுள்ளிகளைக் கல்லைக்கூட்டி அடுப்பாக்கி எரிய விட்டு உணவு தயாரிக்கும் கோலாகலம் நடக்கிறது. பூமகள் கண்களை மூடிக் கொள்கிறாள். இப்போது வலது கண் துடிப்பது போல் இருக்கிறது. இடது கண் துடித்தது: இலங்கைச் சிறையில் இருந்து விடுதலை கிடைத்தது. ஆனால் என்ன? எத்தனையோ கண்டங்கள்; நெருப்புக் குண்டங்கள். அவள் மகிழ்ச்சியின் துளிகளில் நனைந்து தாயாகப் போகிறாள்.ஆனாலும் மகிழ்ச்சி என்ற முழுமையில் அவள் மனம் நனையவில்லை. வாழ்க்கை என்பதே இப்படி மேடு பள்ளங்கள் தானோ? அவள் மாமி மார், அவந்திகா, சாமளி... ஜலஜா...

அவளுக்கு ஏதேனும் கெடுதல் நேர்ந்து விடுமோ? பெண்ணாகப் பிறந்தவள் ஆசை கொள்ளலாகாதா? மன்னரின் இதயத்தைப் பிடித்து, குன்றேற வேண்டும் என்று ஆசை கொண்டது தவறா? ஆனால் அவருக்கென்று ஒரு மனைவியும், அவளுக்கென்று ஒரு நாயகனும் இருக்கையில். என்ன? அவள் ஒருவனின் உடமை. அடிமையானவளுக்கு நாயகனை மீறி நாட்டம் தோன்றுவது சரியல்ல. நாட்டம் தோன்றவில்லை என்றாலும், பத்து மாதங்கள் அவன் நிழலில் இருந்த காரணமே அவளை மாசுபடுத்திவிட்டதே? அந்த சலவைக்காரன் அவளை நெருப்பில் இறக்கி இருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

ஊர்மி கூந்தல் அலைய, காரசாரமாக நெய்யில் பொரித்த இறைச்சித் துண்டத்தைக் கடித்துக் கொண்டு வருகிறாள். அவள் முகத்தில் பளபளப்பு மின்னுகிறது. பொங்கும் மார்பகம் தெரியாமல் தொள தொள வென்று ஒர் இளம்பச்சை ஆடை அணிந்திருக்கிறாள்.

“அக்கா, உனக்கு இனி போகும்போதும் வரும் போதும் முன்னே இருவர் கவரி வீசிவர வேண்டும்” என்று சிரிக்கிறாள்.

சொல்லிவிட்டு, கையில் மீதி இருந்த எலும்புத்துண்டை வீசி ஏறிய, அதை ஒரு காகம் கொத்திச் செல்கிறது.

“அக்கா, மன்னிக்கவும், நான் ஏதேனும் தப்பாகச் சொல்லிவிட்டேனா?”

“இல்லை ஊர்மி, என்னால் இந்த உலக வழக்கங்களைப் புரிந்து கொள்ள, ஒத்துக் கொள்ள முடியவில்லை...”

சுதாவும் அங்கே வருகிறாள்.

“கருப்பஞ்சாறு சேர்த்த பொங்கல் மிக நன்றாக இருக்கிறது. அக்கா, இன்று உபவாசமா? மன்னர் வரவில்லை என்று கோபமா?” என்று கிண்டுகிறாள்.

“உனக்கென்னம்மா! பேசுவாய்! உன்னுடையவரை உன் மேலாடை முடிச்சில் கோத்து வைத்திருக்கிறாயல்லவா? நாங்கள் தாம் ஏமாளிகள். உன் இன்னோர் அக்கா, விரதம், தவம் என்று தன் நாயகரை அங்கு இங்கு திரும்பவிடாமல் கட்டிப் போட்டு விட்டாள். நானும் பூமையுமே ஏமாளிகள்!”

பூமகள் செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

“போதுமடி குற்றம் சுமத்தலெல்லாம்! என்னை இப்போது தனியே விட்டு விட்டுப் போங்கள்!”

அப்போது சுமித்ரா தேவி. ராணிமாதா அங்கு வருகிறாள்.

“ஒத்தவன் - ஓரகத்தி என்ற காய்ச்சல் வர இடமில்லாமல் சகோதரிகளாக என் மருமக்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தேன். இங்கே என்ன பலத்த வாக்குவாதம்...? உணவு கொள்ள வாருங்கள். இலைவிரித்து எல்லாம் பரிமாறக் காத்திருக்கிறார்கள். வெந்நீர் ஊற்றி தைல’ நீராட்டு முடிந்து வெறும் வயிற்றுடன் இருக்கக் கூடாது; பூமா... வாம்மா!.”

“அம்மா, அவர்கள் உணவு கொள்ளட்டும். எனக்குப் பசியே இல்லை.”

“ஒ... இது நன்றாயிருக்கிறது! நீலன் சமையல் மூக்கை இழுக்கிறது. ஏதேதோ வாசனைகள் சேர்த்து, பக்குவம் செய்து க்கிறான். எழுந்திரு மகளே, வா.. இந்த நேரம், உயிர்க்கருவைப் பாலிக்க இரு மடங்கு உணவு கொள்ள வேண்டும்...”

“தாயே, எனக்கு இந்த ஊன் உணவு எதுவும் பிடிக்க வில்லையே?”

“தெரியும். உனக்கென்று பாலமுதம் கீரை, காய்கள், கனிகள் வியஞ்சனங்கள், உப்பிட்ட கிழங்கு, எல்லாம் செய்திருக்கிறோம். அவந்திகா, மகாராணியைக் கூட்டிச் சென்று பரிமாறு: காட்டுக்கறிவேப்பிலை என்ன மணம்? புளியும் மிளகும் கூட்டி, அரைத்து, மாவில் செய்த ரொட்டியில் தடவி, அற்புதமான பக்குவம் செய்திருக்கிறாள்..”

பெரிய வேம்பு கிளை பரப்பும் இடத்தில், பாய் விரித்து அவளுக்கு அமுது படைக்கிறார்கள். கேகய குமாரி மாதாவும் அவளுடன் சாத்துவீக உணவு கொள்கிறாள். உணவு கொண்ட அசதியில், அவள் அதே இடத்தில் இளைப்பாறுகிறாள். இலைகள் எடுத்துத் துப்புரவு செய்த பின் அதே இடத்தில், அவள் ஒரு பஞ்சணையை வைத்துச் சாய்ந்தவாறு, அப்படியே உறங்கிப் போகிறாள்.

அந்தக் கானகச் சூழலில் அமைதித்திரை சுருள் அவிழ்ந்து வீழ்கிறது. ஏதேதோ ஒலியோவியங்கள் அவள் செவிகளில் திட்டப்படுகின்றன. குக் குக் குக் என்ற ஒர் ஒலி கிர்... கிர்... ரென்று யாழ்நரம்பை இழுத்து மீட்டும் ஒலி... ஆனால் இது நந்த சுவாமியின் ஒற்றை நாண் ஒலி இல்லை என்று உள்ளுணர்வு பதிக்கிறது. பூமகள் தன் இடையில் உள்ள பட்டாடையை விரித்துக் கொண்டு அதில் முத்துக்களைக் குவிக்கிறாள்! பரப்புகிறாள். விரல்களால் அளைந்து சிறுமிபோல் விளையாடுகிறாள். அப்போது நீல கண்டப் புறா ஒன்று வந்து அங்கே இறங்குகிறது. அது ஒவ்வொரு முத்தாகக் கொத்தி, அடுக்கி வைக்கிறது. கோபுரம் போல் அடுக்கி வைக்கிறது. அடி பரவலாக உச்சி கூம்பாக வருகையில் ஏழு முத்துக்கள் பிறகு மூன்று. உச்சியில் ஒன்று...

பூமைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைக் கையில் எடுத்து தடவிக் கொடுக்கிறாள்... “உனக்குப் பாலும் பழமும் கொடுக்கிறேன்... வா!” என்று அதைக் கையிலேந்தி மாளிகைக்குள் வருகிறாள்.

“அவந்திகா! பொற்கிண்ணத்தில் பாலும் பழமும் கொண்டா!” அவந்திகா பதறினாற் போல், “தேவி! இது தத்தம்மா இல்லை. இதைப் பழமும் பாலும் கொடுத்து வளர்க்க முடியாது. இது சிறு பூச்சி, விலங்குகள் தின்னும் கூடித்திரியப் பறவை!...”

“பொய்! இது எவ்வளவு அழகாக முத்துக்கோபுரம் கட்டி இருக்கிறது? இது ஊன் உண்ணும் கொலைப் பறவை இல்லை...”

ஆனால் அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அது அவள் முன் கையைக் கூரிய அலகினால் குத்திவிட்டுப் பறந்து உயர வானில் மறைகிறது. குத்தின இடத்தில் சிவப்பாய். குங்குமச் சிவப்பாய்க் குருதி...

“கொலைகாரப் பறவை; நான் சொன்னேன், கேட்டீர்களா?..”

என் முத்துக்கள்... மு... முத்துக்கள்.

அவள் பெருங்குரலெடுத்து அழுகிறாள். ஆனால் ஒசை வரவில்லை.

“மகளே... மகளே! என்னம்மா?...”

குளிர்ந்த நீரின் இதம் கண்களில் படுகிறது. அவள் மெல்லச் கண்களை விழிக்கிறாள். மார்பு விம்மித் தணிகிறது.

அருகிலே, ராணி மாதா இருவரும், அவந்திகாவுடன் குனிந்து பார்க்கின்றனர். அவளுக்கு நாணமாக இருக்கிறது.

“கனவாம்மா? உணவு கொண்டு தாம்பூலம் கூடச் சுவைக்காமல் உறங்கி விட்டாய்...”

இன்னும் அந்தப் பறவை கண்முன் நிற்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=வனதேவியின்_மைந்தர்கள்/7&oldid=1304399" இலிருந்து மீள்விக்கப்பட்டது