வரலாற்றுக் காப்பியம்/ஆரியவர்த்தம்

ஆரியாவர்த்தம்


மேற்கில் நிலைகொண்டது போக நிலைகொள்ளாது
கிழக்கில் வழி நடந்த ஆரியம்
காடும் மேடும் கரடும் முரடும்
கடந்து வந்த வழித்தடத்திலெல்லாம்
கலந்த கலந்த கலப்பினமாக
கலவை மொழிக் குலமாக
இந்திய எல்லைக்கு வந்து சேர்ந்தது
கைபர் போலன் கதவு திறந்து கிடந்தது
காந்தாரத்தில் ஊடுருவி காஷ்மீரில் நுழைந்தார்
சிந்துவெளிச் செல்வம் சிந்தை மயக்கிற்று
வடக்கில் இமயம் நிமிர்ந்து நின்றது
தெற்கில் விந்தியம் தடுத்து கிடந்தது
கிழக்கில் ரமண தேயம் வரைச் சென்றார்
கங்கை யமுனை சோனை பிரமை
செய்த வளத்துக்கு கிறுகிறுத்தார்
பனிமலையும் பசுமையும் பரவசப் படுத்தியது
நாடோடி வந்தவர் இந்நாட்டோடு நின்றார்
முன்னைப் பழங்குடிகளோடு மோதினார்
உறவு கொண்டு கலப்பார் ஓரிடத்து
இரவோடிரவாக எரிப்பார் வேரிடத்து
எழுதாக் கிளவியாக எடுத்துவந்த
இருக்கென்னும் தோத்திரப் பாக்களை

எழுதிக் கொண்டார் இங்கிருந்த நாகரியில்
அந்த எழுத்துக்கு மேலிட்ட தலைக்கட்டை
அவிழ்த்தால் அங்கே தமிழ் தெரியும்
அதன் தாயெழுத்து நம் கண்ணெழுத்து என்பதும் புரியும்
இந்த நாள் சம்பல் பள்ளதாக்கின் சதுரப்பாடே
ஆரியம் நடந்த அந்த நாள் அடிச்சுவடு
தன் குலப் பகையை தஸ்யுக்களென்றார்
இயக்கர் அரக்கர் நாகர் என்றே
இழித்தும் பழித்தும் எழுதி வெறுத்தார்
தென்னவரைத் தெவ்வரென்று பழித்தார்
இந்திரன் ருத்திரன் மித்திரன் பிரமன்
வேள்விக்குரிய வேத நாயகரானார்
கங்கைக் கரை ஆரிய பூமி ஆயிற்று
ஆரிய வர்த்த மென்று ஆரவாரித்தார்
வாழ்ந்து தளர்ந்த பழங்குடியும்
வந்து கலந்த ஆரியக் குடியும்
ஒன்று கலந்த புதுக் குலத்தை
இந்தோ ஆரியம் என்றது சரித்திரம்
இந்தென்றால் நிலவென்று ஒரு பொருளும்
பசுமை என்று மற்றொரு பொருளும்
குளிரென்றும் சொன்னதைக் கொண்டு
பெயர் கொண்டது இந்தியர் என்பவரும்
பாரசீகர் ஆறென்று சொன்ன சிந்துவே
இந்தயா ஆயிற்று என்பவரும் உண்டு

சிந்துகரைக்கு இந்துவெளி என்ற பெயரில்லை
இமயமென்னும் நெடுவரைக்கு மறுபக்கத்து
மங்கோலியச் சீனரும் உரிமை கோருவார்
இந்த மண்ணுக்கே உரித்தான மாமலை
ஐநூற்று காவதத்துக்கும் நெடியது
விந்தியம், என்பதே விந்தியா இந்தியா
பரத கண்டமென்று பகர்கின்றவர்க்குச் சொல்வேன்
பரதன் சகுந்தலை பெற்ற மகன்
மிகவும் பின்னவன், நாடு பல்லாண்டு முன்னது.
வந்து புகுந்தவர்க் கெல்லாம் இந்த நாடு
வாழும் தொட்டிலானது போல்
பிறர் இட்டு அழைத்தது பேராயிற்றோ?
ஆரியமாக வந்த ஆதிமொழி
கலந்த கலந்த கலப்புக்கு ஏற்ப
சிதைந்து சிதைந்து பிராகிருதமாயிற்று
கொண்டு வந்த கதைகளை கவிதைகளை
கற்றுக் கொண்ட எழுத்தில் எழுதிக்கொண்டார்
வந்த இடத்தில் புதிதாய் பயின்ற
கலைகளையும் கொள்கைகளையும் நடப்புகளையும்
தங்கள் வண்ணமாக மாற்றிக் கொண்டார்
ஆதியில் வேதம் அவர்கட்கு மூன்றே
வேதம் த்ரயீ என்பதே அவர் நிகண்டு,
சூரியன்வாயு அக்னி மூவரிடத்தும்
பிரமனால் பெறப்பட்டது என்பார்

வேதம் என்றால் அறிவுறுத்துவது அதற்கு
மறைந்த நுண் பொருள் என்ற பொருளில்லை
வேதத்தை இசைகூட்டி ஓலமிடுதலே அவர்மரபு
அலைஅலையாக புதிய இனங்கள் வந்து புகுந்தன
ஆரியம் சிதைந்து வேதியம் ஆயிற்று
இதற்குமுன் இப்படித்தான் நடந்ததென்று
சொல்லுகின்ற இதிகாசங்கள் சரித்திரமாயிற்று
நடந்ததும் புனைந்ததுமாக
சொன்னவன் கற்பனைக்கும் கேட்டவன் ரசனைக்கும்
புராணங்கள் உருக்கொண்டு இலக்கியமாயிற்று
புது வெள்ளத்துக்கு மூழ்காது பிழைத்த
முதுகுடிகள் ஆதிவாசிகள் ஆயினர்
வேற்றியல் பண்பாட்டுத் தாக்குதலை மீறி
தாங்களும் அதுவாக தலைநிமிந்த
பழய தமிழியப் பரம்பரைகளுமுண்டு
அவர்கள் கொண்டு வந்த ஆதி கோத்திரங்கள்
ஆங்கிரச வசிட்ட காசிப பிருகு என்ப
மற்றபடி இங்கே உருக்கொண்ட கோத்திரங்கள்
அத்திரி கௌசிக அகத்தியம் முதலிய
கோத்திரம் என்றால் கோக்களுக்குரிய கொட்டில்
மந்தைக்கு மந்தை பெயர்வேறு தெரிய
தலைவனின் பேரால் தனித்து வழங்கினார்
அதுவே அம்மந்தைக்குரிய மக்களுக்கும் ஆயிற்று.
வந்த ஆரியம் கலந்த ஆரியம்

கலந்தும் கலவாத தமிழியல் எதுவென்று
சரித்திரம் தெரிந்தவர்க்குத் தடம் தெரியும்
முடிமரபும் குடியரசுமாக மோதிக்கொண்ட
குழப்பமே வடபுலத்து வரலாற்று அடிக்கோடு
தமிழனின் தலைசங்க நாட்களெனும்
மூத்த வரலாற்றுக் காலத்துக்கு முன்னதாக
லெமூரியம் நெடுங்கடலுள் மாய்ந்து
குமரிகண்டம் ஆவதற்கு முன்னே
இயக்கரும் நாகரும் மோதிக் கொண்ட
முன்னாள் கதையே கந்த புராணம்
குறிஞ்சிக்கு ஒரு கிழவன் சேயோன் முருகன்
அவனுக்கு மகள் கொடை தந்தவன் இந்திரன்
மருதத்து வேந்தன். மகபதி அல்ல
தன்னினப் பங்காளிக் காய்ச்சலில்
அவுணர்க்குப் பகையானான் அலைவாய் களமானது
பெரும் பெயர் முருகன் போர்த்தலைவனான்
சூரன் தோற்று வெற்றி வேலானதும்
பழந்தமிழ் வரலாற்றுச் சுவடே
அவன் தம்பி சிங்க முகன் பேர்கொண்டதே சிங்களம்
தென் தமிழ் நிலத்தில் சூரன் பேரால் கோட்டையுண்டு
சூர ஆதித்தச் சோழன் என்றொருவன்
சாவகத்திலிருந்து வெற்றிலை கொண்டு வந்தான்
மலையத்து வஜனின் மனை அரசி
காஞ்சன மாலைக்குத் தந்தையானவன்

ஒரு சூரசேன சோழன் என்பார்
சோழன் என்பதும் அந்த சூரர் வழிப்பெயரே
மிகமிகப் பின்னால் முன்னாள் முருகனும்
வடபுலத்து ஆரியப் பூச்சுக்கு ஆளானான்
சரித்திரப் புகழ் கொண்ட தஞ்சைக்கு
முன்னைப் பழம் பெயர் ஆவூர் என்ப
தஞ்சன் என்றொரு சூரன் ஆண்டது
கொண்டு ஆனது தஞ்சாவூர்
இன்றய இசக்கியும் இயக்கரின் நிழலே
தக்கனும் ஒரு நாகனே அவன் பெற்ற தமிழ்மகளே
தாட்சாயணி சிவனை மணந்தாள் என்ப
மாமனை மருகன் அழித்தது பரணி
முன்னைத் தென்னிலங்கை மன்னவர் வரிசையில்
சிவன் சிவன் என்றே பெயர் தொடரும்
தாருக வனமென்பது ஒரு தண்டமிழ் வனச்சோலை
மயிலாடு துறைப் பகுதி. இன்னும் மறப்பில்லை
விரிசடைக் கடவுள் எரித்த திரிபுரமே
திரிசிர புரமானது பின் யுகத்தில்
இன்ன பழங்கதைக்குரிய தேவர்
வானவரன்று இன்றும் வாழ்கின்ற
மறவரினத்து தேவரின் முன்னவரே
பின்னை யுகத்தில் ஆரியம் இவற்றையும்
தன் கதையாய் மீண்டும் தந்தது நமக்கே.