வரலாற்றுக் காப்பியம்/தண்டகவனம்

தண்டகவனம்

தண்டகன் என்றொரு வடபுலத்து மன்னவன்
தசரதராமனுக்கு மிக மிக முன்னவன்
விந்தியத்துக்கு இப்பால் வேங்கடம் வரை
தட்சிண பாதமென்று தடம் போட்டு வந்தவன்
தக்கணம் அவன்பேரால் தண்டகம் ஆனது
இடம் தேடி திரிந்த ஆரிய இருடிகள்
தண்டகவனத்தில் புகுந்து தங்கினார்
வேதம் படித்தார் வேள்விகள் நடத்தினார்
கொலையும் வேள்வியும் கூடாதென்றவரை
வேதத்துக்கு பகைவரென்று வெறுத்தார்
மந்திரங்கள் கொண்டு மாய்க்க முனைந்தார்
இந்திரனைக் கொண்டு எதிர்த்து அழித்தார்
வேள்விக்கு ஒருகுதிரை விரட்டிப் பிடித்து
மகங்கள் நூறு முடித்தவனே மகபதி
வேந்தரில் வேந்தன் இந்திரன் ஆவான்
அவனைவேண்டிய பாட்டுகளும் வேதமாகும்
வேங்கடத்தை பின்வைத்து வடபெண்ணைக்கு அப்பால்
விந்தியம் வரை வாழ்ந்திருந்த வடுகரை
லெமூரியச் சாயல் மிகுந்திருந்ததால்
குரக்கினம் என்றார் குள்ளமனத்தவர்
எழுத்து சொல் பொருள் யாப்பு அணி
துறவு தவம் ஞானம் யோகமென்று
ஒன்பது இலக்கணம் உணர்ந்த புலவனை

மாக்களினத்தில் வகைப்படுத்தி குரக்கென்றார்
முன்னைச் சோழன் ஒருவனுக்கு நெடியதாடை
அனுமச்சாயல் முசுகுந்தன் என்றனர்
கிராங்கனூர் என்னும் கேரளமூதூர்
குரங்கினூர் என்பதின் திரிபென்பார்
முசு என்பதிலிருந்து பிறந்ததே முசிரி
சேரன் கரையிலும் சென்னி வளநாட்டிலும்
இன்னும் பலஊர் இந்தப்பேரில் உண்டு
அனுமனின் அன்னை அஞ்சனைப் பெயரால்
வழங்குவதே சேரத்து அஞ்சைக்களம் என்ப
லெமூரின் வழிமுறைக்கு இவையும் சான்றே.