வரலாற்றுக் காப்பியம்/உணவும் உணர்வும்

உணவும் உணர்வும்


உள்ளந்தெளிந்தவன் உண்ணவும் தெரிந்தான்
உவர்ப்பில் தெளிவும் துவர்ப்பில் வலிவும்
கார்ப்பில் வீறும் கைப்பில் மெலிவும்
இனிப்பில் தடிப்பும் புளிப்பில் இனிமையும்
என அறுவேறு சுவைக்குப் பயன்வேறு தெரிந்தான்
உணர்வெனப்பட்டதே உணர்வுக்கு அடிப்படை
ஆதலின் உள்ளத்தின் மனப் பாங்கில்
இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு
அச்சம் ஆத்திரம் வியப்பு நகைப்பென
எட்டுவகையாக இனங்கண்டான்
சாந்தி என ஒன்று கூட்டி ஒன்பதாக்கினர்
நாலாம் காலத்தில் நவரசம் என்றார்
பாம்பு உரித்து எடுத்த சட்டையோ
பசுமூங்கிலின் உள்ளே படர்ந்த ஏடோ
பால் நுரையோ வெண்புகையோ எனமெலிதாய்
ஆடை அறுவை கச்சை கலிங்கம்
துகில் முதலாக பணிப்பொத்தி ஈறாக
முப்பத்துஅறு வகை உடைவகை
பட்டிலும் பருத்தியிலும் நெய்யத்தெரிந்தான்
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
இழைகலனென்று பொன்னிலும் மணியிலும்
புனைந்த அணிவகை பெரிதினும் பெரிது
முத்தும் பவளமும் கைவளையாகும்

சங்கிலிசரப்பளி சவடி ஆரமென்று
எழுத்துக்கு யாத்தனர் காதில் குழையாடிற்று
உச்சிப்பு, தென்பலி வலம்புரி எனவே
தலைக்கு ஒரு கோலம் செய்தார் மகளிர்
நறுநெய்யும் மண மலரும் மங்கலம் செய்யும்
இளமைசதிராட வளமை கொஞ்சும்
களவும் கற்புமே அவர் வாழ்வியல்

கற்புக்கு புறம்பான களவை அவர் அறியார்
கந்தர்வமென பட்டபுற நடையாளர்க்கு
கற்பு பொறுப்பன்று கன்னியும் தாயாவாள்
தமிழ்ப்பாடி கற்பெனப்படுவது சொல் திறம்பாமை
ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்நெறி
ஒருதலைப் பட்ட விரதமல்ல
அவனொரு துள்ளும் இளங்காளை வயது பதினாறு
கறுகறுவென்று புதுமீசை அரும்புகட்டும் பருவம்
அவளும் அன்றலர்ந்த புதுமொட்டு
ஆண்டு பனிரெண்டில் அடிவைத்திருப்பாள்
செம்புலப் பெயல் நீர்போல
அன்பு கலந்த நெஞ்சத்து ஆருயிரும்கலந்து
ஊரும் நாடும் உவப்ப மணப்பார்
ஒத்துக் கொள்ளாது ஊரலர் தூற்றம்போது
வேற்று நிலத்தின் விருந்தனர் ஆவார்
உடன் போக்கென்று உரைத்தனர் மேலோர்
இதுவே காதல் களவெனப் படுவது
நாற்பத்தெட்டாண்டு வாலிபம் காத்த

ஒருவனுக்கு பன்னிராண்டு பருவத்தவளை
தானமாகத்தருவது அயலார் மணமுறை
தமிழ்ப் பண்புக்கு முரணான ஒன்று
முந்நீர் வழக்கம் முன்னை ஆரியர்க்கு இல்லை
ஆற்றுநீர் ஊற்று நீர் மழை நீர் என்ற
மூன்றும் ஒன்று திரண்ட பெருங்கடலே முந்நீர்
பெருநீர் ஓச்சுதல் தமிழனுக்குப் பிறப்புரிமை
திரவியம் தேட திரைகடல் ஓடுவான்
அதனைப் பொருள் வயிர் பிறிதல் என்றார்
கல்விக்குப் பிரிகின்ற கடப்பாடும் உண்டு
போருக்கும் தன்னை பணயம் வைத்து போவான்
வேட்டை மேற் செல்வதும் வீரவழக்கே
மற்றபடி குலமென்றும் நலமென்றும்
இளங்காதலரைப் பிரித்ததில்லை
குலம் என்பது குடிப்பெயர் அல்லது
பிறப்பினால் வேற்றுமை குறிப்பது அன்று
சீரும் வரிசையும் சிறப்பின் கொடையே
விலங்கின மாற்ற விலைப் பொருளல்ல
யாதும் ஊரே யாவரும் கேளீர்
ஒன்றேகுலம் ஒருவனே தேவன்
என்பதே அவன் சமுதாய மனப்பாங்கு
வீரமும் காதலும் அவனுடன் பிறப்பு
உணவு கொண்டு உடலைப் போற்றினான்
உடைகொண்டு உணர்வைப் போற்றினான்
தீதற்றதே அறமெனக் கண்டான்

சொல்லும் செயலும் ஒரு வழிப்பட
பயன் மிகுந்த நல்வழியில் பழகினான்
பழக்கமே வழக்கமாக ஒழுக்கமாயிற்று
ஒழுக்கத்தை உயர்வை விழுப்பம் என்றான்
விருப்பத்தின் விழுப்பமே ஞானம் ஆயிற்று
விருந்து புறந்தந்து வீட்டுக்கும் நாட்டுக்கும்
ஏற்பன செய்தான் இல்லறமென்றார்
பிறர்க்கென்று வாழ்ந்த சாண்றான்மையை
தன்னல மறுப்பினை துறவறமென்றார்
இயற்கையிலும் பெரியதெய்வம் அவருக்கில்லை
கதிரவனை கொடிநிலை என்று தொழுதார்
உயிரும் பயிரும் தழைக்க ஒளிசெய்து
பாரை நடத்தும் கண்கண்ட பருப்பொருள்
கதிரவன் என்பதால் முதன்மை தந்தார்
காய்கின்ற நிலவை வள்ளிஎன்று வணங்கினார்
புறத்தில் குளிர்ந்து அகத்தில் வெம்மையுடன்
கிளர்ச்சியும் வளர்ச்சியும் தருகின்ற பேராற்றல்
இரவில் உலகைக் கொண்டு நடத்தும் குளிரொளி
வள்ளி என்பதால் வாழ்த்தினார் வழிபட்டார்
எரிதழலை கந்தழி என்று போற்றினார்
சூடும் சுடரும் சூழ் ஒளியும் உடையது
ஆக்கவும் அழிக்கவும் வல்ல பேராற்றல்
கதிருக்கும் நிலவுக்கும் கண்கண்ட எதிரொளி
மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று

ஆதலின் கதிரோடு நிலவோடு வைத்தெண்ணினார்
நம் முன்னோர் கண்ட முத்தீ இதுவே
முன்னைப் புகார் நகரத்து புறநகர்ப் பகுதியில்
சூரிய சோம அக்கினி என்ற
மூன்று குண்டங்கள் மூட்டியிருந்தார்
என்பதற்குப் புறச்சான்றாக இன்றும்
திருவெண் காட்டில் மூன்று குளங்கள் உண்டு
ஆரிய மரபு அறைகின்ற முத்தீ
ஆகவநீயம் காருக பத்தியம்
தட்சிணாக்கினியம் என்ற மூன்று
வேள்வித் தீயில் நெய்யும் பொரியும்
காய்ந்த சுள்ளிகொண்டு காய்வதாகும்
உயிர்க்கொலை செய்த ஊனைவானவர்க்கு
அர்க்கியம் என்று அனுப்பி வைக்க
அங்கியந்தேவனை மும்முனைப் படுத்தி
அளித்த பெயரே ஆரிய முத்தீ
தமிழன் கண்ட தழல்வேறு வழிவேறு.