வரலாற்றுக் காப்பியம்/யாழ் பிறந்தது
எண்ணோடு எழுத்தோடு இயல் ஐந்தென்றார்
ஏழு நரம்பெடுத்து பண்ணென்றார்
நரம்பைச் சுரமென்று சொல்லுவார் புதுமரபு
ஒளியை இனம்பிரிந்து ஏழுநிறங்கொண்டார்
ஒலியை வகைப்படுத்தி ஏழுசுரம் என்றார்
பண்ணும் திறமுமாக இன்று பயிலுவது
ஒன்பது குறைய ஒரு பன்னீராயிரம்
இத்தனை வளர்ச்சிக்கும் வித்தாக ஆதியில்
வேட்டுவன் வில்லிழுத்தான் நாணதிர்ந்த ஒலி
உள்ளத்தைத் தொட்டது உணர்வை வருடிற்று
இசைக்குலத்தின் முதல் யாழ்பிறந்தது
சீரியாழ் பேரியாழ் சகோட யாழுடன்
செங்கோடும் மகரமும் யாழாயின
ஆதியாழுக்கு ஆயிரம் நரம்பு தொடுத்தான்
காழ்வரை நில்லா கடிங்களிற்று ஒறுத்தலை
யாழ் வரை நிறுத்தினான் மலைவளர் வேட்டுவன்
குறிஞ்சி நிலத்துக் கொடிச்சியர் பாட்டுக்கு
மறம்புகல் மழகளிறும் உறங்கிற்று என்பார்
எரினப் பிறப்பான அசுனமா என்பது
இசையறி பறவை யாழிசைத்துப் பிடித்தார்
மேய்ந்து திரிந்த மாடுங்கன்றும்
ஆயன்குழலுக்குத் தொடர்ந்து வரும்
ஆறலைகள்வரும் பாலைப் பண்ணுக்கு உருகினார்
அவர் கொடுவாளும் நெடுவேலும் கைநழுவும்
இயற்றமிழுக்கு இசைகூட்டினால் ஆளத்தி
எழுத்தும் சீரும் அடியும் தொடர
பொருளும் தாளத்தோடு பொருந்துவதே பண்
இடக்கை உடுக்கை பேரிகை பறைஎன
மத்தளவரிசைகள் தோற்கருவி
வண்டு துளைத்த மூங்கிலில் புகுந்து
தென்றலும் ஊதிற்று குழலோசை
சுரத்துக்குச் சுரம்பாடும் துளைக்கருவிகள்
இசைக்கலையும் நுணுக்கமாக வளர்ந்தது
வண்டுகள்பாட மொட்டு மலர்ந்தது
யாழும் இசைத்து கல்லும் கரைந்தது
தொட்டிலில் தொடங்கிற்று ஆராரோ ஆரிரரோ
ஊஞ்சல் பாட்டுக்களை ஊசல்வரி என்றார்
ஆற்றுவரி கானல் வரி அம்மானை பாடினார்
ஏற்றப்பாட்டு ஏர்ப்பாட்டு எதிர்ப்பாட்டும் உண்டு
மங்கல வாழ்த்துடன் வாழ்க்கை துவங்கும்
செறுப்பரை பரிபாட்டுடன் நெய்தலும் கறங்கும்
இரையோடு இசைந்ததே அவன்கதை
பாணன் பறையன் துடியன் கடம்பன்
இந்நான் கல்லது குடியும் இல்லை என்றார்
அவரவர் இசைத்தக் கருவியே பெயர்தந்தது
ஆதி மனுக்குலம் இசைவழி நான்கானது
மறந்தானோ இழந்தானோ மாய்ந்ததோ பழங்கலை.
மீந்த சுவட்டில் பிறந்ததே வீணை
பழய வில்லின் புதுப்பிறப்பே சாரங்கி
முளரி என்ற தொரு யாழும் கண்டார்
யாழும் பாணரும் இன்று நம்மோடில்லை
இலங்கைக் திட்டின் பகுதிக்குப் பேரானது
யாழ்க்குல மெல்லாம் பழங்கலை வகையில்
சித்திரங்களாக சிற்பங்களாகத் தெரிவதல்லால்
வழக்கிலில்லை வழக்கிறந்ததும் பெருமையோ
பழய பண்கள் பலவும் இறந்துபட்டன
இருக்கின்ற சிலதில் சிலவற்றிற்கு
பெயர் தமிழாக இல்லை பெயர் திரிந்து வரும்வரவு
வைகறைக்கு இந்தோளம் என்பார்
பொழுதுபுலர பூபாளம் பாடுவார்
மதியத்தில் சாரங்கம் மாலையில் காம்போதி
அந்தியில் கல்யாணி ஆர்இரவில் ஆகரி
வேளைக்கு வேளை வேறுபடும் ராகம்
முன்னைத்தமிழன் தந்துபோன செல்வம்
வடிவிழந்தது மரபிழந்தது யாழிழந்தது தமிழிழந்தது
ஆயினும் சுருதியிழக்கவில்லை சுவையிழக்கவில்லை
பகலுக்கு பண்கள் பத்தென்று வகுத்தார்
நாழிகை மூன்றுக்கு ஒன்றாக நடத்தினார்
புறநீர்மைப் பண்ணே சீகண்டி ராகம்
காந்தாரத்தை இச்சிச்சி என்றார்
கௌசிகமே பைரவி ஆயிற்று
இந்தளத்தை நெளித பஞ்சமி என்பார்
தக்கேசி பண்ணே காம்போதி ஆகும்
சாதரிப் பண்ணை பந்துவராளி என்பார்
நட்ட பாடையே நாட்டைக் குறிஞ்சி
பழம் பஞ்சுரமே சங்கராபரணம்
காந்தார பஞ்சமம் கேதார கௌளை
பஞ்சமத்தை ஆகரி எனப் பகர்ந்தார்
இரவுக்கு பொழுதை எட்டாக வகுத்தார்
பொழுதுக்கு ஒரு ராகமாக புகன்றார்
தக்க ராகமே கன்னட சாம்போதி
பழந்தக்க ராகம் சுத்தசாவேரி
சீகாமரம் நாத நாமக் கிரியை
கொல்லிப் பண் சிந்து கன்னடா
வியாழக் குறிஞ்சி சௌராஷ்டிரம்
மேகராகக் குறிஞ்சி நீலாம்பரி
குறிஞ்சிப் பண்ணை மலகரி என்றார்
அந்தாளிக் குறிஞ்சி சைலதே சாட்சி
முந்தைய பண்வகை பிந்திய ராகமாக
பாடுகின்றார் ஆயினும் பழந்தமிழன் கணக்குப்படி
பண்கள் நூற்று மூன்றும் இன்றய
மேளக்காத்தாக்கள் எழுபத்து இரண்டுக்குள்
இடம் கொள்ள வில்லை இனம் தெரியவில்லை
பெயரும் மரபும் பிறழ உரைப்பார்
மறந்தது போக பெயர் திரிந்தது போக
மிகுந்த பண்களை நிகண்டுகள் சொல்லும்
பாவுக்குப்பா, பாடுகின்ற ராகமும் வேறுபடும்
அகவலுக்கு ஆரபி, கலித்துறைக்கு பைரவி
வெண்பாவை சங்கராபரணத்தில் சொல்லுவார்
செந்துறையின் வழக்காறும் வரலாறும் இதுவே
இயலும் இசையும் மெய்பாட்டுடன் இசைய
நாடகத் தமிழ் என்று நவின்றார்
கதையும் நிகழ்ச்சியுமாக தொடர்ச்சியுடன்
உள்ளதும் சொல்வார் புனைந்தும் உரைப்பார்,
ஊர்ச் சதுக்கத்தும் திருக்கோயில் முன்பும்
பொதுக் களத்தில் நிகழ்த்துவதைப் பொதுவியல் என்றார்
அரையன் பேரவையில் ஆடுவது வேத்தியல்
பல்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில்
நிகழ்ந்தவற்றை நிரல்பட தொகுத்து
உணர்வோடு கலந்து உயிரோடு படைப்பார்
வசைக்கூத்து புகழ்க்கூத்து வரிக்கூத்து வரிச்சாந்தி
தேசிகம் இயல்பென்று இரண்டிரண்டாக இனம் பிரித்து
இன்னும் உள்வரியாக குறவை கலைநயம்
சரணம் நோக்கு குடக்கூத்து தோற்பாவை
எனப் பல்வேறு கிளைகள் விரித்தார்
ஆகக் கதைகளை நடிப்பது நாடகம்
உணர்வுகளை கருத்துக்களை உருவகப் படுத்தி
ஊமை நிலையிலும் உவமை நிலையிலும்
பண்ணும் தாளமும் பின்னணி செய்ய
காலில்சதங்கை கலீர் கலீர் என
குடகம் மகரம் வலம்புரி விற்படி
இளம் பிறை என முப்பத்து மூன்று முத்திரை
சுவைக்குச் சுவைகூட்டி மேடை ஏற்றினார்
குறிஞ்சிக் கூத்து குன்ற குறவையாக
வேட்டுவ வரி என்றும் விளம்பினார்
முல்லையில் ஆய்ச்சியர் குறவை ஆடினார்
மருதத்தில் பள்ளும் வள்ளையும் பரவசப்பட்டது
நெய்தலில் கானல்வரி கேட்டது
ஆக ஆடற்கலை நாட்டிய மெனப்பட்டது
நாடக நாட்டியப் பொதுபெயர் கூத்து
நடப்பது போன்று நடிப்பது நாடகம்
பொருளும் உணர்வும் புரியாத அயலார்
நாடகச் சொல் தமிழில்லை என்றார் அறியாமை!
புனைந்து வேடமிடுவார் பொருநர்
கூத்தர் பொருநர் விறலியரென்று
கலைவளர்த்த செல்வரே காலவெள்ளத்தில்
ஆடற்கலை திரிந்து பரதமாக
பரதரும் பரத்தியரும் ஆனார். பின்னால்
பழிப்புக்குரிய பரத்தையர் ஆயினர்
வெண்டுறைக்கு விளைந்த கொடுமை இதுவே
யாழ்தான் வாழ்விழந்தது என்பதில்லை
யாழோர் மரபும் தாழ்ந்தது தாழ்ந்தது