வரலாற்றுக் காப்பியம்/சரித்திரக் கணக்கு

சரித்திரக் கணக்கு


ஈழத்து வரலாற்றுக் குலமுறையைக் கிளத்துகின்ற
மகா வம்சம் தீப வம்சங்கள்
தென்புலத்தை கடல்வெள்ளம் மூன்றுமுறை
விழுங்கிய பெருங் கொடுமையைச் சொல்லும்
முதலாவது கிருஸ்துவுக்கு முன்னால்
இரண்டாயிரத்து முன்னூற்று எண்பத்தேழு
இதுவே எபிரேயர் சொல்லி வைத்த
நோவா காலத்து நாற்பது நாள் பெருமழை
உலகை அழித்த பெருவெள்ள மாகும்
தென்புலத்தில் எஞ்சிய பகுதியே
களவியலுரை கட்டுரைத்த நாற்பத்தொன்பது நாடுகள்
இடைகழி நாடும் தொல்லிலங்கையும் புறத்தீவுகளாயின
குமரிக்கோட்டுக்கு வடக்கில் தொடர்ந்த
மேலைச் சாரலே கொல்லங்கரை
புதியதொரு தலைநகர் தென் மதுரையானது
இந்த வரலாற்றின் தொடக்கநாள் கி. மு.
இரண்டாயிரத்து முன்னூற்று எண்பத்து ஏழு
தலைசங்கமும் தழைத்த தமிழும்
தமிழனின் செழித்த வாழ்வும்
தென்பாலி உள்ளிட்ட தென்மதுரை அரசும்
மீன்டும் வெள்ளத்துக்கு விருந்தானது.
இந்த வீழ்ச்சியையே சிலம்பின் செல்வன்

பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கமும்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்டதென்றார்
ஈழத்துக் கணக்குப்படி இது நிகழ்ந்தது
கிருஸ்துக்கு முன்னால் ஐநூற்று நான்கில்
ஆக தலைச்சங்க நாட்களென்னும்
தமிழுக்கு மூத்த வரலாற்றுக் காலம்
ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து மூன்று
ஆண்டுகளே இந்த நெடிய காலத்தில்
எண்பத்து ஒன்பதின்மர் அரசு கட்டிலேறினார்
கடைசிக் காவலன் கடுங்கோன் ஆவான்
வெள்ளத்தில் பிரிந்து வேறான பகுதி
ஈழத் தீவான தெங்க நாட்டுத்திட்டே
சேரத்தீ வென்றும் சொல்லுவார்
நெடு நிலம் கடல்படு முன்னே தென்பொருணை
முக்காணி கடந்து கொற்கையை ஊடுறுவி
நாகநன்னாடு எனும் ஈழத்துப் பாய்ந்து
வளம் கொழித்தது, கொண்டு இலங்கையை
சீனர் தாம்பிர பரணிகே என்றார்
பனைநாட்டுப் பகுதியே செந்தில் ஓரம்
சாலமன் கலங்கள் வந்து நின்ற
உவரித் துறையும் இந்த ஓரமே
வடக்கில் சிந்து அழிந்தபின் இந்து வெளிக்குள்
ஆரியம் புகுந்த நாட்களும் அதுவே.