வரலாற்றுக் காப்பியம்/பின்னுரை

பின்னுரை:-

தெற்கின் தலைச்சங்க துவக்க நாட்களே
வடக்கில் ஆரிய வேத காலம்
முன்னைப் பழங்குடிகளை வென்று விரட்டி
இந்து வெளியில் ஆரியம் இடம் கொள்ள
இந்திர ருத்திர பிரமரை வேண்டினார்
அதனை தோத்திர காலமென்று சொன்னார்
மழைக்கும் மகப் பேற்றுக்கும்
மாற்றாரை வதைப் பதற்கும் ஆக
வேள்விகள் நடத்தினார் மந்திரகாலம்!
ராமகதைக்கு நாட்கள் அதுவே
ராம அனுமனுக்கு பாரத பீமன்
தந்தை வழியில் தம்பியாவான்
சௌகந்தி மலர் பறிக்க பீமன்
இமயத்துக்குச் சென்ற போது
வழியில் அனுமன் மறித்தான் என்பது கதை
மற்றும் பார்த்தன் தென்திசை வந்தபோது
சேதுக்கரையில் அனுமனை சந்தித்த சேதியுமுண்டு
பாரதத்துக்கு காரணனான கண்ணன்
சியமந்தக மணிக்காக ஜாம்பவான் என்னும்
முதுபெருங் கிழவனை மோதினான் என்பது பாகவதம்
ஆக ராமர் காலத்து நாயகரான
முதிய ஜாம்பவான், அனுமனை
பாரத தீரர்கள் பார்த்தனும் கண்ணனும்

சந்தித்தாரென்பது இதிகாசம்
மேலும் சமணத்து சரித்திர நாயகன்
இருபதாம் தீர்த்தங்கரர் முனிசுவர்த்தர்
இராமன் காலத்தவரென்ப
இருபத்திரண்டாம் தீர்த்தங்கரர் நேமி நாதர்
இதன் படிக்கு கிடைக்கின்ற இடைவெளி
இரண்டே தீர்த்தங்கரர் என்பதால்
ராமன் கண்ணன் இருவேறு யுகத்தவரல்ல
ஒரு காலத்து மூத்தோர் இளையவரே
கண்ணனுக்கும் சமணத்தில் வசுதேவ வரிசையுண்டு
ஒரே நூற்றாண்டில் உள்ளான இடைவெளியே
வியாசன் இருந்ததும் இதே நூற்றாண்டு
மூன்றான வேதத்தை நான்காக வகுத்தான்
பாரதம் நடந்த பதினான்காம் நூற்றாண்டில்
தென்புலத்தில் சேர சோழ பாண்டியர்
செழித்திருந்ததே இலக்கிய மாகும்.
தென்னிலங்கை வேந்தன் ராவணன் மாண்டதும்
அதே நூற்றாண்டில் கொஞ்சம் முற்படவே
தமிழ் நான்மறையின் வழிமுறையில்
வேத விளக்கம் செய்து உபநிடத மென்றார்
தென்புலத்து அந்தண மறையாளர் தொகுத்த
பிரமாணங்கள் பலப்பல வேதத்திலுண்டு
ஆரியர் கொண்டுவந்த தோத்திரத் தொகுப்பும்
இங்கே கொண்டு கூட்டி எழுதிச் சேர்த்த
புதிய பகுதிகளும் திரண்டதே வேதம்

ஆழ்ந்த நுண்ணறிவும் அகன்ற நூலறிவும்
கொண்ட சான்றோர்கள் கருத்து இதுவே
குமரியாறும் குமுறும் கடலும்
கூறும் உண்மைகளைக் கூறினேன்
தெற்கில் தமிழ் நிலத்தை கடலலை மாய்த்தது
வடக்கில் தமிழ்க் குலத்தை ஆரியக்கலை மாய்த்தது
இடையில் திரிந்து போனவர் போக
தண்பொழில் வரைப்பில் தலை நிமிர்ந்து
தனக்கென்று வரன்முறை வகுத்துக் கொண்ட
தலை முறையே தலைச்சங்கப் பரம்பரை
முன்னைமொழியும் மரபும் இன்னும்
கட்டுக் குலையாமல் கன்னித் தன்மையுடன்
வருகின்ற வரலாற்றுப் பழங்குடிக்கு
இதிகாச புராண இலக்கியங்களிலிருந்து
கற்பனை வர்ணனைகளை களைந்துவிட்டு
தெரியவந்த உண்மைகளைத் தொகுத்து
கண்டதும் கேட்டதும் கற்றதும் கலந்து
என் கருத்துக்கு சரியன்று பட்டபடிக்கு
தலைச்சங்க நாட்களைத் தந்திருக்கின்றேன்
என் தாய் திருநாட்டிக்கும் தமிழுக்கும் வணக்கம்
எனக்கு முன்னம் எழுதினார்க்கு நன்றி
இன்னும் பின்னால் எழுதுவார்க்கு வாழ்த்து
அவர்கள் சிந்தனையைத் தூண்டுவதற்கு
ஏ. கே. வேலன் எழுத்து ஒரு கைவிளக்கு


★★★

அச்சில்


சங்ககாலம் 2-ம் பகுதி

இராவணன்

சிலம்பு

சரிந்த கோட்டை

கங்கைக்கு அப்பால்

காவிரிக் கரையினிலே

மற்றும்