வாழும் வழி/ஆழ உழு!

17. ஆழ உழு!

பெருகி வரும் மக்கள் தொகைக்குப் போதிய உணவு அளிக்க வேண்டும். மக்கள் பெருகுவதற்கேற்ப நிலமும் பெருகுவதில்லையே. எனவே, இருக்கும் நிலத்திலேயே விளைச்சலைப் பெருக்க வேண்டும். இதற்காக இந்த இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞான முறையில் என்னென்னவோ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கென்று அரசாங்கத்தில் தனித் துறையே - தனி அலுவலகங்களே உள்ளன.

“பழைய முறையில் உழக்கூடாது; எந்திரக் கலப்பை கொண்டு உழ வேண்டும். விதைகள் இத்தகையனவாய் இருக்க வேண்டும். சப்பான் முறையில் நட வேண்டும். இன்ன உரம் போட வேண்டும். பயிரைப் பூச்சிகள் அழிக்காமல் இன்னின்ன வகையில் காக்க வேண்டும்” என்றெல்லாம் தொழில்துறை வல்லுநர்களால் அறிவுரைகள் அள்ளி வழங்கப்படுகின்றன. இவற்றுள் முதல் அடிப்படை வேலையாகிய உழுதல் தொழிலைப் பற்றி மட்டும் இக்கட்டுரையில் ஆராய்வோம்:

நிலத்தை உழுவது எதற்காக மழை தூறத் தூற, உழவர்கள் கலப்பை கொண்டுசென்று நிலத்தை உழுது உழுது வைக்கும் வழக்கம் காலங்காலமாக இருக்கிறதே. அஃது ஏன்?

விதை முளைத்துப் பயிர் நன்கு விளைவதற்கு, தண்ணீர், காற்று, வெப்பம் முதலிய புறச் சூழ்நிலைகளைப் போலவே, மண்ணும் தரமுடையதாக இருக்க வேண்டியது மிக இன்றியமையாததாகும். மண்ணில் பலவகை உலோக உப்புக்கள் உண்டு. அவற்றின் ஊட்டத்தால் பயிர் செழித்து வளரும். உயிராற்றல் (வைட்டமின்கள்) குறைந்தவர்களுக்கு, அவ் வாற்றலுடைய குளிகைகள் (வைட்டமின் மாத்திரைகள்) வாயிலாக அவ்வாற்றலை ஈடு செய்தல் போல, தேவையான உப்பு ஆற்றல் (உப்புச் சத்து) குறைந்த நிலத்தில் எருக்களையும் உரங்களையும் போட்டு ஈடு செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், எரு தேவை யில்லாமலேயே இயற்கை முறையில் நிலத்தில் உப்பு ஆற்றலைப் பெருக்குவதற்கு வழியிருக்கிறது. அதுதான் ஏர் உழுதல் ஆகும்.

ஏர்உழுவதால் நிலத்தின் உப்பு ஆற்றல் பெருகுவது எப்படி? ஞாயிற்றின் (சூரிய) ஒளிபடுவதன் வாயிலாக, மண்ணில் உப்பு ஆற்றல் நன்கு உருவாகிறதாம். கதிரவனின் திருவிளையாடலே ஒரு பெருவிளையாடல் அல்லவா? பகலவனது ஒளியின் உதவியின்றி உலகம் நடப்பதெப்படி - உயிர்கள் தோன்றி வாழ்வதெவ்வாறு? கதிரொளி குறைந்த துருவப் பகுதிகளில் உயர் வாழ்க்கை அரிது என்பது அனைவரும் அறிந்த செய்தியே. எல்லாவகை உயிர்வாழ்க்கைக்கும் தேவையான வெப்பமும் வெளிச்சமும் அவனது அருட்கொடையே.

உடல் நன்றாக இருப்பதற்கு, போதுமான கதிரொளி மேலே பட வேண்டும் (Sun Bath). நிழல் பக்கமுள்ள சில மரஞ்செடிகள் சாய்ந்து வளைந்திருப்பதற்குக் காரணம், அவை கதிரொளி வீசும் திக்கு நோக்கிச் சென்றமையேயாகும் - அவ்வொளியின் உதவியால்தான் செடிகள் தம் வளர்ச்சிக்கு வேண்டிய மாவுப் பொருளைத் தயார்செய்து கொள்கின்றன. மக்களாகிய நம் கண்களின் நலத்திற்கும் ஞாயிற்றின் ஒளிபடல் நல்லது. பல்லுக்கும் அவ்வாறே என்று கூறுகின்றனர். இது குறித்தே ஞாயிறு வணக்கம் செய்வது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. உலகில் மக்கள் ஞாயிற்றின் தோற்றத்தை மகிழ்ந்து வரவேற்கின்றனர் - கடவுளாக மதித்து வழிபடுகின்றனர். இதற்குக் காரணம் அவனால் கிடைக்கும் நன்மையேயன்றோ? இளங்கோவடிகள் கூட,

“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்”

என்று சிலப்பதிகாரத்தில் பாடியுள்ளாரே. நக்கீரரோ,

“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு,
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு”

என்று முருகாற்றுப்படையில் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

இதுகாறுங் கூறியவற்றால், கதிரொளியின் ஆற்றலும் பயனும் நன்கு புலனாகுமே! எனவே, கதிரொளி படுவதனால் நிலத்து மண்ணில் உப்பு ஆற்றல் உருவாகிறது என்னும் கருத்தில் வியப்போ - ஐயமோ கொள்ள வேண்டியதில்லையன்றோ?

நிலத்தை உழவில்லையாயின், மேல் மண்ணில் மட்டுமே கதிரொளி படும். போதுமா? பயிர்கள் வேரின் மூலம் மண்ணின் அடிப்பகுதியைத் துளைத்துக்கொண்டு உணவு தேடிச் செல்கின்றனவே. அடியில் கூடுமானவரை நெடுந்தொலைவில் உள்ள மண் பகுதியில் எல்லாம் கதிரொளி படவேண்டுமே. அதற்காகத்தான் உழுவது! கீழிருக்கும் மண்ணை உழுது கிளறி மேலுக்குக் கொண்டுவந்து ஒளிபடச் செய்துகொண்டே யிருக்க வேண்டும். அதனால்தான் உழவர்கள் அடிக்கடி உழுதுவைக்கின்றனர். மேலோடு உழுதால், மேல் மட்டத்திலுள்ள சிறு பகுதி மண் மட்டுந்தான் ஒளி பெறும்; ஆகையால் ஆழ உழவேண்டும். இது குறித்தே இக்கால வல்லுநர்கள், பழைய நாட்டுக் கலப்பை போதாது - எந்திரக் கலப்பை கொண்டு உழ வேண்டும் என்று கூறுகின்றனர்.

இவ்வாறு ஆழ உழுவதனால் மண்ணில் உப்பு ஆற்றல் நன்கு உருவாகும். இந்த உப்பு ஆற்றலைப் பயிர்கள் வேர்களின் வாயிலாக உட்கொள்கின்றன. வேர்களிலுள்ள ஆயிரக்கணக்கான வேர்த் தூய்கள் (Root hairs), மிகவும் நுட்பமானவையான மண் அணுக்களின் இடுக்குகளில் புகுந்துசென்று நில உப்புக் கரைசலை உறிஞ்சிக்கொள்கின்றன. இந்த நில உப்புக் கரைசல் வேரின் மையத்தையடைந்து அங்கிருந்து மேலே ஏறிப் பயனளிக்கிறது. இதற்கு வேர் அமுக்கம் (Root Pressure) என்று பெயராம். பயிர்களுக்கு இந்த வசதியைச் செய்து கொடுப்பதற்காகத்தான் உழுதல் வேலை நடக்கிறது.

இப்பயன் கருதியே, எந்திரக் கலப்பை கொண்டு ஆழ உழ வேண்டும் என்று இக்கால அறிவியலார் வற்புறுத்துகின்றனர். இதே கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாபெருந்தமிழறிஞர் - ஏன் உலக அறிஞர் மிகவும் அழகாக - அதே நேரத்தில் அழுத்தம் திருத்தமாக அறிவித்துள்ளார்? அவர் யார்? அவர் யாராக இருக்க முடியும் - திருவள்ளுவரைத் தவிர! “ஒரு பலம் அளவு மண்ணானது கால்பலம் அளவு மண்ணாக ஆகும்வரை நிலத்தை உழுது உழுது உணக்கினால் (உலர்த்தினால்), பிடி எருவும் வேண்டிய தில்லாமலே நிலம் நிரம்ப விளையும்” என்பதுதான் வள்ளுவனாரின் அறிவுரை. ஆகா என்ன அழகான கருத்து எவ்வளவு அருமையான கண்டுபிடிப்பு! இக்கருத்துக் கருவூலம் அமைந்துள்ள குறள் வருமாறு:

“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்”

(தொடி - ஒரு பலம்; புழுதி - மண், கஃசு- கால் பலம்)

இக்குறள் திருக்குறளில் உழவு என்னும் பகுதியில் உள்ளது. ஒரு பலம் மண் கால் பலம் வீதம் காய வேண்டுமானால், எத்தனை முறை உழ வேண்டும் - எவ்வளவு ஆழமாக உழவேண்டும் என்று புரியுமே! ‘காய்ந்த நாட்டிற்கு கருப்பில்லை’ என்னும் பழமொழியின் கருத்துக்கும் இக்குறளுக்கும் ஏதேனும் தொடர்புண்டோ! பழமொழியின் படி, நிலம் நன்கு காய்வதால் மண் வளம் பெற்று விளைச்சல் பெருக்க, நாட்டில் கருப்பு (பஞ்சம்) இருக்காது. மக்களுக்கு வாழ்வு பெருகும்.

நிலத்தில் வாழும் ‘நாங்கூழ்ப் புழு’ என்னும் ஒருவகை மண்புழு, மண்ணைக் கிளறிக் கிளறி மேலும் கீழும் ஆக்குவதால் மண் ஓரளவு வளம் பெறுவதாகச் சொல்லுவது வழக்கம். இதனாலும் - கதிரொளி அடி மண்ணில் படுவதற்கு வாய்ப்பிருக்கின்றதோ? இக்கருத்தை மனோன்மணியம் என்னும் நாடகக் காவியத்தில்,

“ஒகோ நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு
ஓவாப் பாடே உணர்வேன் உணர்வேன்!
உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ!
எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை,
விடுத்தனை யிதற்கா எடுத்தஉன் யாக்கை!”

என்று அப் புழுவைப் பார்த்தே கூறுவதுபோல, பேராசியர் சுந்தரம்பிள்ளை பாடி யமைத்திருக்கின்றார். எனவே, விளைச்சல் பெருக ஆழ உழ வேண்டியதின் இன்றியமையாமை புலப்படுமே. இதை வைத்துத்தான், எந்தச் செயலிலுமே நுனிப்புல் மேயாமல், ஆழ ஈடுபட வேண்டும் என்று உலகியலில் பழமொழி கூறுகின்றனரோ?

“அகல உழுவதினும் ஆழ உழு!”

வாழும் வழியறிந்து வையகம் வாழ்க!

★ ★ ★

நூலாசிரியர்

பேராசிரியர் சுந்தரசண்முகனார்


பிறப்பு : 13 - 7 - 1922 இறப்பு :30 - 10 - 1997

குரு : ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகள்

பிறந்த ஊர் : புது வண்டிப் பாளயம், கடலூர்.

படைப்புகள் : 69 நூல்கள் - விளக்கம் வருமாறு: கவிதை நூல்கள் - 8, பெருங்காப்பியங்கள் - 2, முழு உரை நூல்க ள் - 7, திருக்குறள் ஆய்வுகள் - 5, கம்பராமாயணத் திறனாய்வுகள் - 6, அறிவியல் ஆய்வுகள் - 6, பல்துறை ஆய்வு நூல்கள் - 33, புதினங்கள் - 2,

சிறந்த படைப்புகள் தமிழ் அகராதிக் கலை, கெடிலக்கரை நாகரிம் , தமிழ் நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம், தமிழ் இலத்தீன் பாலம். பெற்றபட்டங்களில் சில : இயற்கவி, புதுபடைப்புக் கலைஞர், ஆராய்ச்சி அறிஞர், திருக்குறள் நெறித் தோன்றல் முதலியன. பெற்ற விருதுகளில் சில : தமிழக அரசின் திருவள்ளுவர் விருது', மதுரை காமராசர் பல்கலைக் கழகத் 'தமிழ்ப் பேரவைச் செம்மல் விருது', தமிழக புலவர் குழுவின் 'தமிழ்ச் சான்றோர் விருது', அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை விருது முதலியன. பெற்ற பரிசுகள் : நடுவண் அரசு, தமிழக அரசு பரிசுகள் 7 பெற்றுள்ளார். பாடமாக அமைக்கப்பட்ட நூல்கள் : அகராதிக் கலை, தமிழர் கண்ட கல்வி, திருமுருகாற்றுப்படை தெளிவுரை, History of Tamil Lexicography முதலியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=வாழும்_வழி/ஆழ_உழு!&oldid=1119222" இலிருந்து மீள்விக்கப்பட்டது