வாழும் வழி/தமிழ்ச்சொல் மலர்

14. தமிழ்ச் சொல் மலர்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்”

என்ற சுப்பிரமணிய பாரதியாரின் பொருள் பொதிந்த மொழிக்கிணங்க மொழிப்பற்று சிறந்து வருகின்ற நிலையிலுள்ளது நம் தமிழ்நாடு. பண்டைக் காலத்தில் நம் தமிழ் மன்னர் பனிமலை வரை படையெடுத்துச் சென்று தம் திறமை காட்டி வெற்றி பெற்று மீண்டனர். நாட் பல கடந்தன. வடநாட்டிலே மண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. வட மன்னர் பலர் குழுமியிருந்தனர். அவ்வமயம், “முன்பு தமிழ் மன்னர் ஈண்டுப் போந்து பொருதபோது எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லை போலும்” என்ற ஒலி அவர் குழுவிலிருந்து எழுந்தது. இச் செய்தியைச் சேரமன்னனாம் செந்தமிழ்ச் செங்குட்டுவன் சிலரால் செவியுற்றனன். வந்தது சினம். “அவ்வட மன்னரின் இகழ்ச்சிக் கூற்று எனக்கு மட்டுமன்று; சோழ பாண்டியர் முதலாய எம்போலும் தமிழ் மன்னர் யாவர்க்கும் உரியதே; ஆதலின் எங்களை நகையாடி யெள்ளிய அவர்களின் தலையில் கண்ணகியின் வடிவக் கல்லை வைத்துச்சுமக்கச்செய்து ஈங்குக் கொணர்வேன்” என்று சூளுரைத்தனன். உரையோடல்ல - உரைத்த வண்ணம் செய்தும் காட்டினன். என்னே இவன்றன் மொழிப்பற்றும், நாட்டுப் பற்றும் பண்டைய தமிழ் மன்னனுக்கே இவ்விதமான பற்றிருக்குமாயின் இன்றைய குடிகளாகிய நமக்கு எவ்வளவு பற்று தேவையென்பது சொல்லாமலே விளங்கும். நாட்டுப் பற்றோடு மொழிப்பற்றும் இருந்தால்தான் பொன் மலர் நாற்றமுடைத்தாதல் போல் சிறக்கும். ஆதலினால் தமிழர்கட்குத் தமிழ்ப்பற்று சிறக்க வேண்டும். அதே நேரத்தில் பிறமொழி வெறுப்பும் கூடாது.

எவ்வெச் செயல்கள் தமிழ்ப் பற்றுடைய செயல்களாகக் கருதப்படுமெனின், கூடிய வரையிலும் தமிழ்மொழியிலேயே பேசுதல், இன்றியமையாமை ஏற்பட்ட போது மட்டும் பிற மொழியில் பேசுதல், திருக்கோயில் வழிபாடு, திருமண நிகழ்ச்சி முதலியன தமிழ் மொழியிலேயே செய்யப் பெறுதல், தமிழ்க் கல்விக்கும் தமிழ்ப் புலவர்கட்கும் நிறைந்த களைகணும் பெருமையும் அளித்தல் முதலியனவாம். இவற்றுள் திருக்கோயில் வழிபாடு தவிர மற்றையன பல விடங்களில் நடைபெறுகின்றன. தமிழிலே திருக்கோயில் வழிபாடு செய்தலாகிய ஒன்று மட்டுந்தான் இன்னும் கோயில்களில் நடக்கவில்லை. ஆதலின் அஃதொன்றையே இக்கட்டுரையின் இன்றியமையாக் குறிக்கோளாகக் கொண்டு தொடங்குகின்றேன்.

நம் தமிழ்மக்கள் நாயன்மார், ஆழ்வார்களால் பாடல் பெற்ற கோயில்களையே பெரும்பாலும் சிறப்புடையனவாகக் கருதுகின்றனர். அங்ஙனமே தேவாரப் பாடல் பெற்ற ஒரு கோயிலுக்குச் சென்று பார்ப்போமானால் ஆங்கு முதலில் வடமொழியிலேயே மலர் தூவு வழிபாடு (அர்ச்சனை) நடக்கும். அது பொதுமக்களுடைய காதுக்கும் இனிமை தராது; ஒரு சிறிதும் பொருள் விளங்காததால் அறிவிற்கும் இனிமை தராது. அது முடிந்ததும் இடி இடித்து மழை பெய்து நின்றதுபோல் இருக்கும். பின்பு தமிழ்மறை ஓதப்படும். திறனுடையவர்களால் ஓதப்படுமாயின், அது கார் காலத்தில் மழை நின்றதும் கோவலர் இனிய தீங்குழல் எடுத்து ஊதுதல் போல் காதுக்கு இனிமை பயக்கும். அன்பும் ததும்பும். இக்கருத்தைக் கொண்டு தான், நம் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளார் நால்வர் நான்மணி மாலையில்

“விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்
காரணன் உரையெனும் ஆரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்தது என்குவீர் ஆயின்
வேதம் ஓதின் விழிநீர்ப் பெருக்கி
நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேன்
திருவா சகமிங் கொருகால் ஓதின்
கருங்கல் மனமும் கரைந்துருகக் கண்கள்
தொடுமணற் கேணியின் சுரந்துநீர் பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்ப ராகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே”

என அருளிச் செய்துள்ளார். இதன் சுருங்கிய கருத்தாவது: வேதம் ஓதினால் விழிநீர்ப் பெருக்கி நெஞ்சம் நெகிழ்பவர்களைக் காணேன்; திருவாசகத்தை ஒருகால் ஓதினாலேயே கருங்கல் மனமும் கரைந்து கண்ணீர் பெருக்கி மெய்ம்மயிர் சிலிர்த்து அன்பராகின்றனர்- என்பதாகும்.

ஆனால் சிலர் “வேதத்தைக் கேட்டால் மட்டும் உள்ளம் நெகிழாதா? சாமவேதமொன்றே உருக்கிவிடுமே. சிவப்பிரகாசர் கூறியது எங்ங்னம் பொருந்தும்?” என்று கூறுகின்றனர். ஆனால் அடிகளார் இங்ஙனம் கூறியிருப்பது திருக்கோயில்களிலும், திருவிழாக் காலத்திலும் வடமொழிப் பாட்டும் தமிழ்ப் பாட்டும் மக்களால் விரும்பிப் பாராட்டப்படும் திறம் நோக்கியேயாம். அன்றியும் வடமொழி ஆட்சி நின்று நிலைத்திருந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகட்கு முன்பே அடிகளார் இங்ஙனம் பாடியிருக்கின்றனர் என்றால் தற்போதைய மக்களின் நிலையைச்சொல்ல வேண்டுவதின்று. இதனால் ‘தமிழ் மறையினையே பொதுமக்கள் விரும்பிக் கேட்கின்றனர்’ என்று அறிகின்றோம். அன்றியும் திருக்கோயில் வழிபாடு ஏற்படுத்தப்பட்டது முற்றத் துறந்த முனிவனுக் கல்ல. அவனுக்குக் கோயில் எதற்கு? குளம் எதற்கு? இன்றி யமையாததாய்ப் பொதுமக்கட்கே ஏற்படுத்தப்பட்டது. அங்ஙணமிருக்கத் தமிழ்நாட்டுப் பொதுமக்களால் விரும்பிக் கேட்கப்படாத வடமொழிப் பாட்டுக்குத் தமிழ் நாட்டுக் கோயில்களிலே முதலாட்சியா? தமிழ் நாட்டிலே தமிழர்களால் கட்டப்பட்ட தமிழ்க் கோயில்களிலே தமிழர்களின் நடுவிலே கூடவா தமிழ் மொழி இரண்டாம் மொழியாகக் கருதப்படுவது? இதனால் வடமொழி வேண்டாவெனக் கூறவரவில்லை; தமிழ்ப் பாட்டுக்களினாலேயே வணங்கங் கூறப்பட வேண்டும் என்பதே ஈண்டு நோக்காகும்.

சிவப்பிரகாச அடிகளாரே சோணசைல மாலை என்னும் மற்றொரு நூலில்,

“விரைவிடை யிவரும் நினைப் பிறவாமை
வேண்டுநர் வேண்டுக மதுரம்
பெருகிய தமிழ்ச்சொல் மலர்நினக் கணியும்
பிறவியே வேண்டுவன் தமியேன்”

எனக் கூறியுள்ளார். இதன் விளக்கமான கருத்தாவது: “கடவுளே! எனக்குப் பிறப்பு வேண்டாம் - பிறப்பு வேண்டாம், வீடே வேண்டும், என்று நின்னை வேண்டுவார்வேண்டட்டும்; யான் இனிமை பொருந்திய தமிழ்ச்சொல்லால் பாடிய பாட்டாகிய மலரை நினக்குச் சூட்டத்தக்க தமிழ்ப் பிறவியையே வேண்டுவன்; எனக்கு வீடு (மோட்சம்) வேண்டுவதன்று” என்பதாம். பற்றைத் துறந்த இச் சிவப்பிரகாச முனிவருக்குள்ள மொழிப் பற்றைப் பாருங்கள் ஒவ்வொரு கடவுளடியாரும் “பிறப்பை நீக்கி முத்தியை அளி” என்று கடவுளை நோக்கிக் கதற, இவர் மட்டும் “தமிழ்ப்பாட்டுப் பாடத் தகுந்த பிறவியை எனக்குக் கொடு” என்று கதறுகின்றார். உண்மையில் வீடு வேண்டாம் என்பதா கருத்து ? இல்லை. தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் இனிமை பொருந்திய தமிழினால் கடவுளைப் பாடி வணங்க வேண்டுமென்பதே இச்செய்யுளின் உண்மைக் கருத்து. நாமும் நம் இறைவனுக்குத் தமிழ்ச்சொல் மலர் சூட்டத்தக்க பிறவியை வேண்டுவோமாக.

மற்றும், தமிழ்ப்பாட்டின் இன்றியமையாமைக்குப் பெரிய புராணத்துச் சேக்கிழார் வாக்கிலிருந்து ஒரு சிறந்த சான்று காண்போம்:

சிவபெருமான் வழக்கிட்டுச் சுந்தரரைத் தடுத்தாட் கொண்டார். தடுத்தாட் கொண்டவர் சிவனே எனவறிந்த சுந்தரர் உளங்கனிந்து நிற்கின்றார் அவ்வமயம் கடவுள் சுந்தரரை நோக்கிக் கூறியதாவது:-

“மற்று நீ வன்மை பேசி வன்றொண்டன் என்னு நாமம்
பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பில் மிக்க
அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
சொல் தமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார்”

இதனுடைய விரிவான கருத்தாவது:- “ஏ சுந்தரா! நீ என்னோடு வன்மை பேசி வன்றொண்டன் என்னும் பெயர் பெற்றாய்; அது நிற்க. நீ என்னை வணங்க வேண்டும். எனக்கு அன்பு நிறைந்ததும் சிறப்பு மிக்கதுமாகிய அர்ச்சனை என்று சொல்லப்படுவது வேறொன்றுமில்லை. அப்பாட்டும் தமிழ்ப்பாட்டே ஆதலின் இம்மண்ணின் மேலே நீ என்னைப் பாட வேண்டுமாயின் தமிழ்ச்சொல்லினாலே பாடுவாயாக” - என்பதாம். ஈண்டு தூமறை பாடும் வாயாராகிய சிவ பெருமானே இங்ஙனம் கூறினார் எனச் சேக்கிழார் அமைத்துள்ள செந்தமிழ்த் திறம் நுணுகி நோக்கி மகிழ்தற்குரியதாகும். மற்றும் அப்பர், சம்பந்தர், மணிவாசகர் முதலிய அடியார்களையெல்லாம் நோக்கி இங்ஙனம் கூறாது, அர்ச்சனை செய்யுந் தொழிலுடைய குருக்கள் என்று சொல்லப்படுகின்ற ஆதிசைவ மரபிலே தோன்றிய சுந்தரரையே நோக்கி இங்ஙனம் கூறியதாகக் கூறியிருக்கும் நயம் இன்னும் உய்த்துணர்ந்து களித்தற்கு உரியதாகும். “இப்போது செய்கின்ற அர்ச்சனை அன்புடையதாகவும் சிறப்புடையதாகவும் கடவுளால் கருதப்படமாட்டாது. அவர்க்கு அன்பில் பெருகிய சிறப்பில் மிக்க அர்ச்சனை தமிழ்ப்பாட்டுதான். அதைத் தான் அவர் விரும்பி ஏற்பார். ஆதலின் தமிழில்தான் பாட வேண்டும்” என்ற குறிப்புப் பொருளை இச் செய்யுள் நமக்குத் தருகின்றது. மேலும் சேக்கிழார், “ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்”, “அசைவிலே செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல” என்னும் பாடல் பகுதிகளால், தமிழின் தெய்வத் தன்மையை வலியுறுத்தி, மற்ற மொழிகளின் ஆட்சியினை அகற்றி, தமிழே வென்று ஆட்சிபுரிய வேண்டும் என்று பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே கனவு கண்டிருப்பதை இந்த நூற்றாண்டிலாவது நனவாக்க வேண்டும்.

இதுகாறுங் கூறியவற்றால், “தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவர்க்கும் தமிழ்மொழிப்பற்று இருக்க வேண்டும். அம்மொழிப் பற்றினை எல்லாவகையிலும் காட்ட வேண்டும். அம்மொழிப்பற்று பலவகையாகத் தமிழர்களால் நடத்தப் பெற்றுக் காட்டப்படினும் திருக் கோயில்களிலே தமிழ் மொழியினால் வழிபாடாற்றல் ஒன்று மட்டும் இன்னும் நிகழப் பெறவில்லை. சிறப்பாகத் தமிழ் மொழியினாலேயே கடவுள் வணக்கஞ் செய்ய வேண்டுமென்பதைத் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளார், தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமான் முதலியோர்களின் அருள் மொழிகள் அறிவிக்கின்றன. ஆதலின் தமிழ்நாட்டுக் கோயில்களிலே தமிழ்மொழிக்குத்தான் முதலாட்சி அளிக்க வேண்டும்.” என்னும் பல கருத்துக்களை அறிந்துகொள்ளுகின்றோம்.

ஆகவே, நம் தமிழர்களைத் தமிழ்ச் சொல்லால் பாடிய பாட்டாகிய தமிழ்ச் சொல் மலரையே ஆண்டவனுக்குக் கோயில்களில் சூட்டுவிக்கும்படி யாகவும் அதற்குச் செய்யவேண்டிய ஆயத்தங்களைச் செய்யும்படியாகவும் வேண்டுகின்றேன்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே”

-திருமூலர்