வாழும் வழி/திருவாசகத்தின் இயற்பெயர் ஆராய்ச்சி

10. திருவாசகத்தின்
இயற்பெயர் ஆராய்ச்சி

திருவாசகம் என்பது ஒரு சைவசமய நூல்; தமிழில் மலர் தூவி அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுவதற்கேற்ற ஒரு சிறந்த நூல். இதன் ஆசிரியர் மாணிக்கவாசகர் ஆவார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் என்னும் நான்கு சைவப் பெரியார்களையும் ‘நால்வர்’ என்னும் சொல்லால் விதந்து கூறுவது சைவ மரபு. இந் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகரது அருட்படைப்பே திருவாசகம். தலைசிறந்த சைவப் பெரு நூற்கள் சில, பன்னிரண்டு திருமுறைகளாக வகுத்துத் தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் நமது திருவாசகம், எட்டாந் திருமுறையாக அமைந்து போற்றப்பட்டு வருகிறது.

இந்தத் திருவாசகம் என்னும் நூலுக்கு, இதனை எழுதிய மாணிக்கவாசகர் இட்ட பெயர் என்ன? என்பதுதான் இங்கே எடுத்துக்கொண்ட ஆராய்ச்சியாகும். இயற்பெயர் என்பது, முதலில் இடப்பட்ட பெயராகும். ஒரு குழந்தைக்கு முதலில் பெற்றோர் இட்ட பெயர் இயற்பெயராகும். பின்னர் வளர்ந்து பெரியவன் ஆனதும், எத்தனையோ புனைபெயர்களும் சிறப்புப் பெயர்களும் ஏற்படுகின்றன அல்லவா? அதுபோலவே, சில நூற்களுக்கும் ஆசிரியர் வைத்த பெயர் இருக்க, பின்னால் சில சிறப்புப் பெயர்கள் தோன்றுவதும் உண்டு. சிறப்புப் பெயர் பெற்ற ஒரு நூல், நாளடைவில் தன் இயற்பெயரை இழந்து விடுவதும் உண்டு. மாணிக்கவாசகர் எழுதிய நூலும் இந்நிலைக்கு உள்ளானதேயாம். அதாவது திருவாசகம் என்னும் பெயர் இந்நூலின் இயற்பெயரன்று; பின்னால் ஏற்பட்ட சிறப்புப் பெயரேயாம்.

அங்ஙனம் எனில், திருவாசகத்தின் இயற்பெயர் யாது? அதனை நான் கண்டுபிடித்திருக்கிறேன். கண்டுபிடித்த விதத்தினையும் கூறுவேன்.

பல தலைப்புக்களின் கீழ், சிவன்மேல் பாடப்பட்ட தோத்திரப் பாடல்களின் தொகுப்பு நூலாகவே திருவாசகம் காட்சியளிக்கிறது. அந்நூலுள், சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம், திருவெம்பாவை, திருப்பள்ளி யெழுச்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம் முதலிய ஐம்பத்தொரு பகுதிகள் (தலைப்புகள்) உள்ளன. பெரும்பாலான பகுதிகளில், ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வரக்கூடிய சொல்லோ அல்லது தொடரோ அப்பகுதியின் தலைப்புப் பெயராக அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, எம்பாவாய்' என்று பாடல்தோறும் முடியும் பகுதிக்கு ‘திருவெம்பாவை’ என்ற பெயரும், ‘பள்ளி எழுந்தருளாயே’ என்று பாடல்தோறும் முடியும் பகுதிக்கு ‘அச்சோப் பதிகம்’ என்ற பெயரும் உள்ளமை காண்க. இவற்றுள் ஒவ்வொரு பகுதியும் பல ஊர்களில் பல காலங்களில் பாடப்பட்டதாக எழுதப்பட்டிருக்கிறது.

இந்தக் கருத்துக்களையெல்லாம் நான் இளமையில் அப்படியே நம்பியிருந்தேன். இளமையில் பத்து வயது தொட்டே எனக்கு திருவாசகத்தில் பயிற்சி உண்டு. பல பகுதிகள் தண்ணீர்பட்ட பாட்டில் மனப்பாடம் உண்டு. திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடத்தில், திருவாசகம் ஒப்பித்தல் போட்டியில் பரிசும் பெற்றிருந்தேன். ஆனால் அப்போது முழுப்பொருளும் தெரியாது. பிறகு பிறகே பொருள் புலப்பட்டது. பின்னர் சில்லாண்டுகள் திருவாசகத்தை அறவே மறந்து விட்டிருந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு - 1951 என எண்ணுகிறேன் - மயிலம் தமிழ்க் கல்லூரியிலிருந்து என்னைச் சொற்பொழிவிற்கு அழைத்தார்கள். ‘திருவாசகம்’ பற்றிப் பேசவேண்டும் என மயிலம் அடிகளார் அவர்களே தலைப்பும் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்தார்கள். நானும் ஒத்துக்கொண்டேன்.

சில்லாண்டு இடைவெளிக்குப்பின்னர், புதிதாகத் திருவாசகத்தை எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். அதாவது, புதுத் தெளிவுடனும் புத்துணர்ச்சியுடனும் நூலின் முகப்புப் பகுதியைப் படித்துக்கொண்டு வந்தேன். அப்போது, நான் இதுவரையும் கேள்விப் படாத ஒரு புதுக் கருத்து என் உள்ளத்தே தோன்றியது. திருவாசகத்தின் இயற்பெயர் வேறொன்று என்பதுதான் அந்தப் புதுக் கருத்து. இதனை இதுவரையும் யாரும் கண்டுபிடித்துக் கூறியுள்ளதாக எனக்குத் தெரியவில்லை.

திருவாசகத்திலுள்ள ஐம்பத்தொரு பகுதிகளுள் முதற்பகுதியாக அமைந்திருப்பது ‘சிவபுராணம்’ என்னும் தலைப்பாகும். இந்தப் பகுதிக்கு ஏன் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது? ‘போற்றி, போற்றி’ என்று அடிக்கடி வந்துள்ள பகுதிக்குப் ‘போற்றித் திருவகவல்’ என்ற பெயரும், ‘எம்பாவாய், எம்பாவாய்’ என்று அடிக்கடி வந்துள்ள பகுதிக்குத் ‘திருவெம்பாவை’ என்ற பெயரும், இதுபோலவே அமைந்திருக்கும் மற்ற பகுதிகளுக்கும் மற்ற பெயர்களும் கொடுக்கப் பட்டிருப்பது ஒருவகையில் முறையே. ஆனால் முதல் பகுதிக்குச் ‘சிவபுராணம்’ என்னும் பெயர் கொடுக்கப்பட்டது ஏன்? இந்தப் பகுதியில் -

“சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினைமுழுது மோய உரைப்பது யான்”

என்னும் அடிகள் காணப்படுவதனாலேயே, இதற்குச் சிவபுராணம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பெயர்சூட்டு வேலை ஆசிரியருடைய தன்று; பிற்காலத்தவரின் கைச்சரக்கேயாம்.

இந்தப் பகுதிக்கு ஆசிரியர் எந்தப் பெயரும் சூட்டவில்லை. இது ‘பாயிரம்’ என்படும் பகுதியாகும். அதாவது, நூலுக்கு முன்னால் எழுதப்படும் ஆசிரியரின் முன்னுரையாகும் என்பதே என் கருத்து. இதற்குப் பல சான்றுகள் பகர்வேன்.

அன்றுதொட்டு இன்று வரை, இறைவன்மேல் செய்யுள் நூல் எழுதுபவர்கள், முதலில் கடவுள் வணக்கம் எழுதி, அடுத்து, தாம் எழுதப் போகும் நூல் இன்னது - அதனை எழுதுவதற்குத் தமக்கு எந்தத் தகுதியும் இல்லையாயினும் ஆவல்பற்றி எழுதுவதாக அவையடக்கம் - அந்நூலைப் படிப்பதால் உண்டாகும் பயன் - முதலியவற்றை எழுதிவிட்டே, பின்னர் முறையாக நூலின் உட்பொருளில் புகுவர். இதற்குப் பாயிரம் அல்லது முன்னுரை என்பது பெயர். திருவாசகத்தின் முற்பகுதியும் இன்னதே. இப்பகுதியில் மாணிக்கவாசகர் எழுதியுள்ள சில அடிகள் பின்வருமாறு:

“சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற வதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுது மோய உரைப்பன்யான்
................................ பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
.........................................
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.”

மேல் உள்ள அடிகளைக் கூர்ந்து நோக்குபவர்க்கு, இஃது ஒரு தனிப்பகுதியன்று; ஆசிரியரின் முன்னுரையே யாம் என்பது தெளிவாகப் புரியும்.

எனவே, மேற்கூறிய அடிகளிலிருந்து, ஆசிரியர் தம் முழு நூலுக்கும் சிவபுராணம் என்று பெயர் இட்டுள்ளார் என்பதும், தம் சிந்தை மகிழவும் பழவினை மாயவும் சிவபுராணம் உரைக்கிறார் என்பதும், இந்நூலைப் படிப்பவர்கள் சிவனது உலகமாகிய வீட்டுலகில் பலரும் ஏத்தும்படி வீற்றிருப்பர் என்று நூற்பயன் கூறியுள்ளார் என்பதும் பிறவும் புலப்படும்.

இம்முறையினைப் பிற்காலத்தவர் மட்டுமன்றி, மாணிக்கவாசகரின் காலத்துக்கு முன்னும் பின்னும் ஒட்டிய காலத்துப் பேரறிஞர்களும் கையாண்டுள்ளமை நம் ஆராய்ச்சிக்குப் பெரிதும் அரண் செய்யும். அதாவது, திருமூலர், கம்பர், சேக்கிழார் முதலிய பெரியோர்களும் இம்முறையைக் கையாண்டுள்ளனரே! அவர்களின் முன்னுரைகளையும் பார்ப்போமே!

முதலில் திருமூலரை எடுத்துக்கொள்வோம். இவர் மாபெருந் தமிழறிஞர். இருபதாம் நூற்றாண்டைய எந்தப் புரட்சியாளரும் இவரிடம் உரைபோடக் கூட காணமாட்டார்கள். இவர்,

“ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
.............................
வேரறியாமை விளம்புகின்றேனே”

என்று அவையடக்கம் கூறுகிறார். அதாவது, இறைவன் பெருமையை யாராலும் அறிய முடியாது, சொல்ல முடியாது எனறு கூறியுள்ளார். இதுபோலவே, மணிவாகசரும், “பெருஞ் சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் திருமூலர் தாம் செய்த நூலுக்கு, ‘மூவாயிரம் தமிழ்’ எனப் பெயரிட்டுள்ளார். இதனை அவரே கூறியுள்ள ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்ற பாடலால் உணரலாம். இந்த நூலில் மூவாயிரம் பாடல்கள் உள்ளதால் ‘மூவாயிரம் தமிழ்’ என்ற பெயரை ஆசிரியர் இட்டார். ஆனால் இந்த இயற்பெயர் நாளடைவில் மறைந்து, ‘திருமந்திரம்’ என்ற சிறப்புப் பெயரே இக்காலத்து வழங்கப்படுகின்றது. இப்போது திருமந்திரம் என்றால்தான் யாருக்கும் தெரியும். மூவாயிரம் தமிழ் என்றால் யாருக்கும் தெரியாது. இதுபோலவே, மாணிக்கவாசகர் இட்ட சிவபுராணம் என்னும் பெயர் மறைக்கப்பட, திருவாசகம் என்னும் பெயரே வழக்காற்றில் உள்ளது. மேலும் திருமூலர்,

“காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே”

என்று நூற்பயனும் கூறியுள்ளார். அதாவது, மூவாயிரம் தமிழ் என்னும் திருமந்திர நூலைக் காலையில் எழுந்து பொருளுணர்ந்து கற்பவர்கள் உலகத் தலைவனாகிய இறைவனை அடைவர் என்றும் கூறியுள்ளார். இதுபோலவே மாணிக்கவாசகரும்,

“சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து”

என்று நூற்பயன் கூறியுள்ளார். இப்படியிருக்கும்போது, திருவாசகத்தின் முற்பகுதியை முன்னுரை என்று சொல்லாமல், ஒரு தனிப்பகுதி என்று எவ்வாறு சொல்ல முடியும்? சிவபுராணம் என்பது முழுநூலுக்கும் பெயராகும் என்று சொல்லாமல், முன்னால் உள்ள ஒரு தனிப்பகுதியின் பெயர் என்று எப்படிச் சொல்லலாம்?

இன்னும் வளர்த்துவானேன்? திருமந்திரம் எழுதிய திருமூலரைப் போலவே, இராமாயணம் எழுதிய கம்பரும் பெரிய புராணம் இயற்றிய சேக்கிழாரும் பிறரும், நூலின் முற்பகுதியில் அவையடக்கமும், நூலின் பெயரும், நூலைப் படிப்பதனாலாம் பயனும் கூறிப்போந்துள்ளனர். அவற்றை அவர்தம் நூற்களில் கண்டுகொள்ளலாம். இருப்பினும் இங்கே ஒன்று மட்டும் குறிப்பிடத்தக்கது:

கம்பர் தமது நூலுக்கு ‘இராமாவதாரம்’ என்றே பெயர் வைத்தார். இதனை அவர் பாடியுள்ள 'இராமா வதாரப் பேர்த் தொடை நிரம்பிய தோம்அறு மாக்கதை' என்ற பாடற் பகுதியால் உணரலாம். இவரைப் போலவே சேக்கிழாரும் தமது நூலுக்குத் திருத்தொண்டர் புராணம்’ என்றே பெயர் வைத்தார். இதனை அவர் பாடிய “இங்கிதம் நாமம் கூறின்... திருத்தொண்டர் புராணம் என்பாம்” என்னும் பாடற் பகுதியால் அறியலாம்.

எனவே, கம்பரிட்ட ‘இராமாவதாரம்’ என்னும் பெயர் மறைய, இராமாயணம் என்ற பெயரே பின்னர் நிலைத்துவிட்டதைப் போல, சேக்கிழார் இட்ட ‘திருத்தொண்டர் புராணம்’ என்னும் பெயர் மறைய, ‘பெரிய புராணம்’ என்னும் பெயரே பின்னர் நிலைத்துவிட்டதைப் போல, மாணிக்கவாசகர் இட்ட ‘சிவபுராணம்’ என்னும் பெயர் மறைந்து போக, பின்னர் திருவாசகம் என்னும் பெயரே ஆணிவேர் விட்டுப் பதிந்து நிலைத்துவிட்டது.

ஆனால் இங்கே இரக்கத்திற்கு (பரிதாபத்திற்கு) உரிய செய்தி ஒன்று உள்ளது. அஃது என்ன? கம்ப ராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் ‘இராமாவதாரம்’ என்பதும், பெரிய புராணத்திற்குச் சேக்கிழார் இட்ட பெயர் ‘திருத்தொண்டர் புராணம்’ என்பதும் அறியப்பட்டாவது இருந்தன; ஆனால், திருவாசகத்திற்கு மாணிக்கவாசகர் இட்ட பெயர் சிவபுராணம் என்பது இதுநாள் வரை எவரானும் அறியப்படாதிருந்ததுதான் அந்த இரங்கத்தக்க நிகழ்ச்சியாகும்.

எனது ஆராய்ச்சி குறித்துக் கருத்து வேறுபாடு கொள்பவர் என்னென்ன மறுப்புகள் கூறக்கூடும் என யானே கற்பனை செய்து, அம்மறுப்புகளுக்கு மறுப்பு கூறத் தொடங்குகிறேன்:

மறுப்பு-1:- புராணம் என்பது, பழம் பெருமைகளை - பழைய வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறும் நூலாயிற்றே! திருவாசகத்தில் அப்படி என்ன உள்ளது? மிகச் சிறிய ஒரு நூல் புராணம் ஆகுமா? புராணத்தின் தகுதிகள் அதற்குண்டா?

மறுப்புக்கு மறுப்பு:- ஐம்பதுபகுதிகள் கொண்ட திருவாசகம் என்னும் முழுநூலும் புராணம் ஆக முடியாத போது, முற்பகுதியில் முன்னுரைபோல் உள்ள ஒரு பகுதி மட்டும் ‘சிவபுராணம்’ என்னும் பெயருக்கு ஏற்றதாக முடியுமா?

மறுப்பு-2:- திருவாசகத்தின் முதற்பகுதி முன்னுரையாயின், நூல் முழுதும் திட்டமிட்டு ஒருசேர எழுதப்பட்டிருக்க வேண்டுமே. அப்படி எழுதியதாகத் தெரியவில்லையே. திருவாசகத்தின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு ஊரில் எழுதப்பட்டதாகத் தெரிகிறதே!

மறுப்புக்கு மறுப்பு:- மணிவாசகர் தாம் பயணம் செய்த ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு பதிகம் எழுதியதாக ஒவ்வொரு பகுதியின் முன்பும் ஊர்ப் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கில்லை. அவ்வூர்ப் பெயர்கள் மணிவாசகரால் குறிப்பிடப் பட்டவையல்ல. அவ்வேலை பிற்காலத்தவரின் கைவண்ணமே. இந்த இந்தப் பகுதி இந்த இந்த ஊரில் பாடப்பட்டது என்பதிலும் அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை உள்ளது. காட்டாகத் திருவெம்பாவையை எடுத்துக்கொள்வோம். இது அருளிச் செய்யப்பட்ட இடம் திருவண்ணாமலை என்று கடவுள் மாமுனிவர் தம் திருவாதவூரர் புராணத்திலும், திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தம் திருப்பெருந்துறைப் புராணத்திலும் கூறியுள்ளனர். ஆனால் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரோ தில்லையில் அருளிச் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவரோ, திருவெம்பாவை திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டதாகத் தம் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் தெரிவித்துள்ளார். அப்படியே மணிவாசகர் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு ஊரில் எழுதியாதாக இருப்பினும், இறுதியில் ஒருமுறை எல்லாப் பகுதிகளையும் தாமே தொகுத்தார் என வரலாறு கூறுகிறது. அதாவது தில்லையில் இறைவனே மனித உருவில் வந்தி, திருவாசகம் முழுவதையும் மணிவாசகரைச் சொல்லச் செய்து, தம் கையாலே எழுதியதாகச் சொல்லப்படுகிறது. (இறைவன் எழுதிய இந்த ஓலைச்சுவடி தங்கள் மடத்தில் இப்பொழுதும் இருப்பதாக, புதுச்சேரி அம்பலத்தாடையர் மடத்தினர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.) இறைவன் எழுதினாரோ அல்லது ஒரு சிறந்த சிவனடியார்தான் எழுதினாரோ எப்படியோ ஒருமுறை மாணிக்கவாசகரின் நேர்ப்பார்வையில் ஒரே நேரத்தில் ஒருசேரத் திருவாசகம் முழுமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்குத் துணிந்து வரலாம்.

எனவே, ஒரே நேரத்தில் நூலைத் தொகுத்து முழுமைப்படுத்திக் கண்ட மணிவாசகர், பாயிரம் எனப்படும் முன்னுரையை நூலுக்குமுன் அமைத்திருப்பதில் புதுமையோ - வியப்போ இல்லையே. மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து, ஆண்டுக்கொரு பாடலாக மூவாயிரம் பாடல்கள் எழுதியதாகக் கதை பேசப்படும் திருமூலரின் திருமந்திரத்திற்கே பாயிரம் உள்ளதே! அங்ஙணமிருக்க, திருவாசகத்திற்கும் ஏன் பாயிரம் இருந்திருக்க முடியாது?

மறுப்பு-3:- திருவாசகத்தில் உள்ள ஐம்பத்தொரு தலைப்புகளின் கீழும் தலைப்பு விளக்கம் எழுதப்பட்டுள்ளது. காட்டாக இரண்டு மூன்று பார்ப்போம்:‘சிவபுராணம்’ என்னும் முதல் தலைப்பின் கீழ, சிவனது அநாதி முறைமையான பழமை என்ற விளக்கம் உள்ளது. ‘கீர்த்தித் திருவகல்’ என்னும் அடுத்த தலைப்பின் கீழ், சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை’ என்ற விளக்கம் இருக்கிறது. ‘திருவண்டப் பகுதி’ என்னும் அடுத்த தலைப்பின்கீழ், ‘சிவனது தூல சூக்குமத்தை வியந்து’ என்னும் விளக்கம் காணப்படுகிறது. இப்படியே ஒவ்வொரு தலைப்புக்கும் ஒவ்வொரு விளக்கம் உள்ளதால், முதலில் காணப்படும் ‘சிவபுராணம்’ என்னும் தலைப்பு முதல் பகுதிக்கு மட்டுமே உரியதாகும்; அது நூல் முழுவதற்கும் பெயராக இருக்க முடியாது.

மறுப்புக்கு மறுப்பு:- சிவபுராணம் என்னும் தலைப்பின்கீழ், ‘சிவனது அநாதி முறைமையான பழமை’ என்று எழுதப்பட்டிருப்பது மாணிக்கவாசகரின் கைச்சரக்கு அன்று. அப்படியொன்றும் அந்த முதற்பகுதியில் சிவனது அநாதி முறைமையான பழமை பேசப்படவில்லையே. முதற் பகுதியினும் பின்னுள்ள சில பிற பகுதிகளில்தான் சிவனது அநாதி முறைமையான பழமை பேசப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு தலைப்பின்கீழும் உள்ள விளக்கம், பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டதாகவே இருக்கவேண்டும். திருக்குறளில் உள்ள ஒவ்வொரு தலைப்புக்கும் திருவள்ளுவர் விளக்கம் எழுதவில்லையே. இப்போதுள்ள விளக்கங்கள் யாவும் பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்கள் எழுதிச் சேர்த்தவையன்றோ? திருவாசகத் தலைப்பு விளக்கங்களும் அன்னவே. இன்னும் கேட்டால், சிவபுராணம் என்னும் முதல் தலைப்புக்கு, சில ஓலைச் சுவடிகளில் விளக்கமே இல்லை. இதற்குப் பொருள் என்ன? சிவபுராணம் என்பது, மற்ற உள் தலைப்புகளைப் போன்றதன்று; நூல் முழுமைக்கும் உரிய பொதுப் பெயராகும் - என்பதே இதற்குப் பொருள் அன்றோ?

மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம், திருக்கோவையார் என்னும் இரண்டின் பழைய ஓலைச்சுவடிகள் எங்கள் வீட்டில் உள்ளன. அவை எங்கள் பாட்டன் பூட்டன் காலத்தவை (கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் ஒருவர் ஒருமுறை எங்கள் இல்லம் போந்து இவ்வோலைச் சுவடிகளை ஒப்புநோக்கி ஆராய்ந்து சென்றுள்ளார்.) இந்தப் பழைய திருவாசக ஓலைச் சுவடியில், சிவபுராணம் என்னும் தலைப்பின்கீழ் ஒரு விளக்கமும் இல்லை. மற்ற தலைப்புகளுக்கு மட்டுமே விளக்கம் காணக் கிடக்கிறது. எனவே, மற்ற தலைப்புகளினும் சிவபுராணம் என்னும் தலைப்பு வேறு பட்டதென்பதும், அது முழு நூலின் பெயரென்பதும், நுனித்துணரப்படலாம். ஆனால், பாயிரத்தையும் ஒரு பகுதியாகக் கருதி, அதன்மேல் சிவபுராணம் என்னும் தலைப்பை வைத்து ஆணியடித்துவிட்ட பிற்காலத்தவர் ஒருவர், ‘சிவனது அநாதி முறைமையான பழமை’ என்னும் விளக்கத்தைச் சேர்த்திருக்க வேண்டும். மற்ற தலைப்புகளுக்கு விளக்கம் இருக்கும்போது, சிவ புராணம் என்னும் தலைப்புக்கு மட்டும் விளக்கம் இல்லாதிருப்பதை அவரால் பொறுக்க முடியாதல்லவா?

மறுப்பு-4:- திருவாசகத்தின் சிவபுராணம் என்னும் தலைப்பிட்ட முதல் பகுதிக்கும் முன்னால், ‘நூற் சிறப்பு’ என்னும் தலைப்பில்,

“தொல்லை யிரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி
அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவா சகம் என்னுந் தேன்.”

என்னும் செய்யுள் பல சுவடிகளிலும் காணக் கிடக்கின்றது. இச் செய்யுளில் திருவாசகம் என்றுதானே குறிக்கப்பட்டுள்ளது?

மறுப்புக்கு மறுப்பு:- இச்செய்யுள் மாணிக்கவாசகர் எழுதியதன்று என்பதை வாதவூர் எங்கோன் எனப் படர்க்கையில் கூறியிருப்பதிலிருந்தே உணரலாம். பிற்காலத்தவர் ஒருவர், நூலின் பெருமைகூறு முகத்தான் இப்பாடலைப் புனைந்து சேர்த்துள்ளார். அல்லது, தலைப்புகளுக்கு விளக்கம் எழுதியவரின் கை வேலையாகவும் இஃது இருக்கலாம். எங்கள் ஓலைச் சுவடியிலோ, நூற் சிறப்பாக, இச்செய்யுளோடு இன்னும் இரண்டு செய்யுட்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் பிற்சேர்க்கைகளே. முன்பெல்லாம், நூலுக்கு உரை எழுதுபவர், ஓலைச் சுவடியைப் பெயர்த்து வேறு படி எடுப்பவர், அச்சேற்றுபவர் முதலியோரெல்லாம் நூலின் சிறப்பைப் பற்றிச் சில பாடல்கள் பாடி நூலுக்கு முன்னால் சேர்ப்பது வழக்கம் என்பதைப் பழஞ்சுவடி யாராய்ச்சியாளர் உணர்வர்.

எனவே, மாணிக்கவாசகரால் அருளிச் செய்யப்பட்டு, திருவாசகம் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நூலுக்கு, ஆசிரியரால் இடப்பட்ட இயற்பெயர் ‘சிவபுராணம்’ என்பதாகும் என்பது இனிது விளங்கும். வாதவூரர் என்னும் இயற்பெயர் மாற, மாணிக்கவாசகர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் ஆசிரியர் இயற்றிய சிவபுராணமும் திருவாசகம் என்னும் சிறப்புப் பெயர் பெற்றதில் வியப்பொன்றும் இல்லையே! மேலும், ஒருவர் தாம் எழுதிய வாசகத்திற்குத் தாமே திருவாசகம் என்னும் சிறப்புப் பெயர் சூட்டியிருக்க முடியாதன்றோ?