விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூன் 2018/20

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

"என் பார்வையில் கலைஞர்", சு. சமுத்திரம் அவர்கள் எழுதிய புத்தகமாகும்.
நம்ம சமுத்திரத்துக்கு
ஒரு
நல்ல மாலையாக...

1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஒருநாள்...

எனது வாகனத்தில் இரண்டு சக்கர கால்களும், எனது கைகளும் ஒன்றாக இணைய, நான்கு கால் பாய்ச்சலில் கோபாலபுரத்தில் நான்காவது குறுக்குத் தெருவுக்குள் நுழைந்தேன். வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, நடந்தேன். அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் என்னை ஓரங்கட்டி பார்த்தார்களே தவிர, குறுக்கு விசாரணை எதுவும் செய்யவில்லை. என்னை என் பாட்டுக்கு நடக்க விட்டார்கள். எனக்கு ஆனந்த அதிர்ச்சி. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் முதல்வரின் வீட்டுக்குள் இப்படி சுயேட்சையாக நடமாட முடியாது. இது எனக்கு ஒரு புதுமையாகவும், சாராசரி மனிதனுக்கு கிடைத்திருக்கின்ற தேர்தல் புரட்சி பலனாகவும் தோன்றியது.

கலைஞரின் வீட்டிற்கு பலதடவை சென்றிருப்பதால் அதை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் இல்லை. பிரதான் சாலையில் இந்த குறுக்குத் தெருக்களை கண்டுபிடிப்பதற்கே ஒரு ஆய்வுப் பட்டம் கொடுக்கலாம். ஆனால், தெருவின் மறுமுனையில் இருந்த கலைஞரின் வீட்டு முன்னால் ஒருசில சுழல் விளக்கு கார்களும், கூட்டமும் இருப்பதை வைத்துத்தான், அதை கலைஞரின் வீடு என்று புதிதாக வருபவர் அனுமானிக்க முடியும். அந்த தெரு முழுக்க மாடமாளிகை கூட கோபுரங்கள் போன்ற கட்டிடங்கள். கலைஞரின் வீடு இவற்றோடு ஒப்பிடும் போது மிகச் சாதாரணமானது. ஒருவர் அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது அவர் சொந்த வீட்டில் இருக்க விரும்பினால் அரசு செலவில் அந்த வீட்டை புதுப்பித்துக் கொள்ளலாம். முதல்வர் என்றால் கேட்க வேண்டியது இல்லை.

ஆனால், கலைஞரின் வீட்டு முன்பு ஒரு பெரியதொரு வளைந்த கொட்டகை முக்கோண வடிவத்தில் போடப்பட்டு இருந்தது. வாசலுக்கு முன்னால் இடது பக்கத்தில் பொது மக்களுக்காக பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. இதுதான் முதல்வர் கலைஞர் தனது வீட்டை புதுப்பித்துக் கொண்ட வகை என்று கருதுகிறேன். மற்றபடி அவரது வீடு பின்னைப் புதுமைக்கு புதுமையாகாமல், முன்னை பழமைக்கு பழமையாகவே தோன்றியது.

கலைஞரைப் பார்க்கப்போகிறோம், பேசப் போகிறோம். என்ற பரபரப்போடும், பரவசத்தோடும், கூடவே படபடப்போடும் கலைஞரின் வரவேற்பு அறைக்குள் நுழைகிறேன். வீட்டுக்கு முன்னால் நின்ற காவலர்களுக்கும், வாசல்பக்கம் நின்ற காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் என்னை நன்றாகவே தெரிந்திருக்கிறது. புருவச் சுழிப்போடு என்னை உள்ளே விட்டார்கள். செவ்வக வடிவத்திலான வரவேற்பறை ... மாடிப்படிகளுக்கு வழிவிட்டது போல் ஒதுக்கமாக இருந்த வெளி, பிளைவுட் பலகைகளால் தடுக்கப்பட்டு திடீர் அறையாக்கப் பட்டிருந்தது. அந்த அறைக்குள் எனது இனிய நண்பரும், முதல்வர் அலுவலகத்தின் இணைச் செயலாளருமான சண்முகநாதன் அவர்கள் தட்டச்சில் எதையோ அடித்துக் கொண்டிருந்தார். ஒருவேளை நம்பகமான கடிதமாக இருக்கும். அதை நான் பார்க்கவும் கூடாது. அதே சமயத்தில் அவரிடம் பேசவும் வேண்டும். ஆகையால், தலையை மட்டும் ஒரு கோணத்தில் தூக்கி வைத்துக் கொண்டு வந்து விட்டேன்' என்பதற்கு அடையாளமாக அவருக்கு ஒரு சல்யூட் அடித்தேன். அவரும் கருமமே கண்ணாக இருந்ததால் என்னை மெல்லத் திரும்பிப் பார்த்து தலையை மென்மையாக ஆட்டினார். அது மேகம் ஆகாயத்திலிருந்து கீழே குவிவது போல் எனக்குத் தோன்றியது.

(மேலும் படிக்க...)