விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 11

அத்தியாயம்-11.

ஜவாஹர்லால் நேரு மீண்டும் சிறையில் அடைபட்டார். கமலா நேருவுக்கு நோய் அதிகமாயிற்று. சிகிச்சை நாடி அவளை ஸ்விட்ஸர்லாந்துக்கு அழைத்துச் சென்றார்கள். நிலைமை மோசமானதும், நேரு விடுதலை பெற்று அங்கு சென்றார், கமலா குணமடையவில்லை.அவளை மரணம் ஏற்றுக் கொண்டது.

கிருஷ்ணா இரண்டு ஆண் குழந்தைகளின் தாயாகி இருந்தாள்.

இவ்விதம், நேரு குடும்பத்தில் துன்பமும் இன்பமும் அவ்வப்போது தோன்றி உணர்ச்சி மாற்றங்களை ஏற்படுத்தி வந்தன.

நாட்டிலும் சுமுகமான ஒரு சூழ்நிலை பிறந்திருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியருக்கு 'மாகாண சுயாட்சி' வழங்க முன் வந்தது. அத்திட்டத்தை ஏற்று, சட்டசபையில் அங்கம் வகிக்க காங்கிரஸ் தீர்மானித்தது. அதற்காகத் தேர்தலில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்றன.

1936-ல் தான் போராட்டம். காங்கிரஸ் கட்சியினர் ஒர் புறம் சர்க்காரின் தத்துபுத்திரர்கள், 'ஜரிகைத் தலைப்பா' ஜமீன்தார்களும், பதவிப் பித்தர்களும்       மற்றொரு பக்கம். பலத்த போட்டிதான். நாடெங்கும் தேர்தல் பிரசாரம் சூறாவளி வேகத்தில் பரவியது,

விஜயலக்ஷ்மி பண்டிட் ஐக்கிய மாகாணத்தில், லஷ்மணபுரி கிராமத் தொகுதியில் தேர்தலுக்கு நின்றாள். அவளுக்கு எதிராக ஸ்ரீமதி வத்ஸவா போட்டியிட்டாள். அம் மாகாணத்தின் அப்போதையைக் கல்வி மந்திரியாக இருந்த ஸ்ரீவத்ஸவா என்பவரின் மனைவி அவள். அரசாங்க பலம். அதிகாரிகளின் ஆதரவு, செல்வ மிகுதி, மந்திரி மனைவி எனும் அந்தஸ்து முதலிய பக்க பலங்கள் துணை நின்றன அவளுக்கு. ஆயினும் விஜயலக்ஷ்மி தான் வெற்றி பெற்றாள். அவளது தியாகம், சேவை, திறமை ஆகியவை அவளுக்கு உதவி புரிந்தன. ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றாள் அவள்.

இந்தியாவில் பெரும்பான்மையான மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரிசபை அமைக்கப்பட்டது. ஐக்கிய மாகாணத்தில் மந்திரி சபை அமைக்கும் பொறுப்பு கோவிந்த வல்லப பந்துக்கு ஏற்பட்டது. அவர் தமது மந்திரி சபையில் விஜயலக்ஷ்மிக்கும் இடம் அளித்தார். காந்திஜீயின் ஆசியுடன் அவள் மந்திரியானாள்.

விஜயலக்ஷ்மி பண்டிட் 1937 ஜூலை 29-ம் தேதி ஸ்தல ஸ்தாபன மந்திரியாகப் பதவி ஏற்றாள். அதன் மூலம் புதிதாக ஓர் சரித்திரம் ஸ்தாபிக்கப்பட்டது. 'இந்தியாவில் முதன் முதலாக ஒரு பெண் மந்திரியானாள்' என்ற பெருமைதான் அது.

புதிய சட்டசபையில் முதன் முதலாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரும் கெளரவமும் அவளுக்கே கிட்டியது.

'புதிய அரசியல் திட்டம் உகந்ததல்ல. அகில இந்தியப் பிரதிநிதிகள் அடங்கிய சபை ஒன்று வகுக்கும் அரசியல் அமைப்புதான் இந்தியாவுக்கு நன்மை பயக்கும். அத்தகைய சபை ஒன்றைக் கூட்ட வேண்டியது அவசியம்' என்ற தீர்மானத்தை முதன் முதலாகச் சட்ட சபையில் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரச்ஸ் எண்ணியது.

அதன்படி ஐக்கிய மாகாணச் சட்டசபையில் முதல் மந்திரி பந்த் அத் தீர்மானத்தைக் கொண்டு வருவதாக இருந்தது. எதிர்பாராத வகையில் அவர் நலக் குறைவு அடைந்தார். ஆகையால், அவருக்குப் பதிலாக விஜயலக்ஷ்மியே தீர்மானத்தை சபை முன் சமர்ப்பித்தாள்.

சட்டசபை நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் புதியவள் அவள், பலத்த எதிர்ப்பையும் விவாதங்களையும் எழுப்பக் கூடிய பிரச்சனை அது.எனினும் கூச்ச்மோ அச்சமோ இன்றி எழுந்து புன்னகையோடு பேசினாள், தன்னம்பிக்கையோடும், உணர்ச்சிகரமாகவும் பேசினாள்.

அத் தீர்மானத்தில் திருத்தம் புகுத்த விரும்பினர் சிலர். பலத்த விவாதம் எழுந்தது. விஜயலக்ஷ்மி விட்டுக் கொடுக்காமல், பெருமிதமாக, விடை அளித்தாள். 'தந்தைக்கு ஏற்ற மகள். தமையனுக்குச் சரியான தங்கை. நல்ல திறமைசாலி' என்று எல்லோரும் போற்றும் வகையில் அவன் சட்ட சபையில் பிரகாசித்தாள்.

மந்திரி பதவிக்கு அவள் பொருத்தமானவள்: அவளுக்கு அப் பதவி மிகவும் பொருத்தம் என்று நாட்டினர் வியந்தனர். இதைப் பற்றி கிருஷ்ணா எழுதியுள்ளது. குறிப்பிடத் தகுந்தது தான்.

 சிறு பிராயம் முதலே சாதுர்யம் நிறைந்து விளங்கியவள் தான் சொரூபா. மந்திரியாவதற்கு அவள் எவ்விதத்திலும் தகுதி உடையவளே. எந்த விஷயத்திலும் அவள் பதறுவதே கிடையாது. எத்தகைய சந்தர்ப்பமாயினும் சரியே; பதட்டம் அடையாமல் அமைதியாகக் கவனித்துச் செயல்புரியும் குணம் அவளிடம் உண்டு. அவளது வசீகரப் பண்பும், தன்னடக்கமும், அழகும் மக்களை வசியம் செய்து அவளுக்கு வெற்றி பெற்றுத் தரும் துணைகளாயின. மந்திரி பதவியில் அவள் நன்கு சோபித்தாள். அவள் ஏற்றுக்கொண்டது கடினமான பொறுப்பு. அத்தகை பொறுப்புக்கு பயிற்சியோ, பழக்கமோ அவளுக்குக் கிடையாது. ஆயினும், நாட்டு மக்கள் போற்றும் முறையில் வெற்றிச் சிறப்புடன் திகழ்ந்தாள் அவள்'

"சொரூபா அரசியலில் தீவிரமாகச் செயல்புரிய முன் வந்த போது அவளுடைய பேச்சுத் திறமை எல்லோருக்கும் ஆச்ச்ரியமே தந்தது. பிரசங்கியாக மிளிர்வதற்கே பிறந்தவள்ப போல்,நடுக்கமின்றி-கூச்சமின்றி, பெரியபெரிய கூட்டத்தின் முன்னிலையிலும் பேச முடிந்தது அவளால்.ன்தெளிந்த ஒட்டத்துடனும், சொல்லாட்சியுடன் ஹிந்துஸ்தானி, ஆங்கிலம் இரண்டையும் பேச வல்லவள் அவள்.

"இளம் பருவத்திலேயே சொரூபாவின் கூந்தலில் நரை நெளியத் தொடங்கியது. தலைமுறை தலைமுறையாக வளர்ந்துள்ள குலப்பண்பு இது. விரைவிலேயே அவள் கூந்தல் வெள்ளி முலாம் ஏற்றுவிட்டது. ஆனால் அது அவளது இனிய தோற்றத்துக்கு எடுப்பாகத்தான் அமைந்துள்ளது. அவள் நல்ல தாய்; திறமையான குடும்பத் தலைவி. அரசியல் அவள் வாழ்வின் பெரும் பொழுதைப் பற்றிக் கொண்ட போதிலும்,குடும்பத்தைக் கவனித்துக் குழந்தைகளை போஷிப்பதில் அவள் ஒரு குறைவும் வைத்ததில்லை. அவற்றுக்குத் தேவையான காலமும் அவளுக்கு இருந்தது.

தன்னைச் சுற்றிலும் இனிமையும் நிறைந்திருக்க வேண்டும் என்பது விஜயலக்ஷ்மியின் ஆசை. தனது வீட்டைப் போலவே, தான் கடமை ஆற்றும் அலுவலகமும் மிளிர விருப்பம் அவளுக்கு உண்டு.

அவள் சர்க்கார் காரியாலத்தில் ஓர் அறை பெற்றதும், அதை மனேகரமான சூழ்நிலையாக மாற்றிவிட்டாள். அநாவசியமாக அடைத்துக்கொண்டு கிடந்த மேஜை நாற்காலிகள், மரச் சாமான்களை எல்லாம் அகற்றிவிட உத்திரவிட்டாள். சுவரில் பூசப்பட்டிருந்த பசுமை நிறத்துக்குப் பொருத்தமான வர்ண விரிப்பைத் தரையிலே பரப்பச்செய்தாள். குளுமை நிறத் திரைச் சிலைகளைத் தொங்கவிட்டாள். மேஜை மீது அழகு செய்ய இனிய ரோஜா மலர்களுக்கு ஏற்பாடு பண்ணினாள்.

அவள் கடமைகளைக் கண்ணும் கருத்துமாய் கவனிக்கத் தவறினாளில்லை. கட்டுக்கட்டாகக் குவிந்து கிடந்த கடிதங்களை எல்லாம் பொறுமையுடன் வாசித்து மக்களின் குறைகளை உணர்ந்து, உரிய வகையில் உத்திரவுகளிட்டாள் விஜயலக்ஷ்மி. அவளது அறிவை யும் சுறுசுறுப்பையும் ஒயாது உழைக்கும் பண்பையும் கண்டு போற்றாதார் எவருமில்லை.

பொதுமக்களின் சுகாதார அபிவிருத்திக்காகவும், கிராமங்களின் முன்னேற்றத்துக்காகவும் அவள் எவ்வளவோ சீர்திருத்தங்கள் கொண்டு வந்தாள். குடி தண்ணீர் வசதி இல்லாது கஷ்டப்பட்ட கிராமங்களுக்கு அவ்வசதி கிட்ட வழி செய்தாள். பிரசவ காலத்தில் போதிய மருத்துவ உதவி கிடைக்காது அவதியுற்றவர்களின் துயர் நீக்கும் நோக்குடன் புதிய திட்டங்கள் செய்தாள்.

கிராமங்களில் மொத்தம் 300 வைத்தியசாலைகளாவது வேண்டும். அவற்றில் 200 ஆயுர்வேத, யுனானி வைத்திய சாலைகளாக இருக்க வேண்டியது அவசியம் என்று திட்டமிட்டாள் ஸ்தல ஸ்தாபன மந்திரியான விஜயலக்ஷ்மி.

அவள் ஆட்சிக்காலத்தில் 200 விளையாட்டு மைதானங்கள் ஏற்பட்டன. ஊர்தோறும் சென்று 16 வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டன. 24 இடங்களில் பிரசவ ஆஸ்பத்திரியும், குழந்தைகளுக்கு வைத்தியம் செய்ய 192 புதிய வைத்தியசாலைகளும் உண்டாயின. குழந்தைகளுக்கு இலவசமாகப் பால் வழங்கும் திட்டமும், முதியோர் கல்விக்காக இரவுப் பள்ளிக்கூட வசதிகளும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டன.

இவ்விதம் ஆர்வத்துடனும் சேவா உணர்ச்சியோடும் செயல்புரிந்து வந்தாள் விஜயலக்ஷ்மி. ஆசை நிறைந்த திட்டங்கள் பல வகுத்திருந்தாள் அவள். ஆனால் பணமுடை பெருந்தடையாக நின்றது. அத்துடன் சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தலைகாட்டியது.