விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 10

அத்தியாயம்-10

ஆங்கிலேயர் காங்கிரசுடன் அரசியல் பேரம் பேசிக் காலம் தள்ளினர். வைஸிராய் இர்வின் பிரபு காந்திஜியுடன் ஒப்பந்தம் செய்ய இசைந்தார்.

எனினும் ஒப்பந்தத்தை கெளரவிக்கும் எண்ணம் ஆட்சியினருக்குக் கிடையாது என்பதை நாட்டு நிகழ்ச்சிகள் நிரூபித்தன. மறுபடியும் கைது செய்வதும் தடியடி கொடுப்பதும் சகஜமாகி விட்டது.

1931 டிசம்பரில் ஜவஹர் கைது செய்யப்பட்டார். சில தினங்களிலேயே காந்திஜீ, வல்லபாய் பட்டேல் ஆகியோரையும் அரசாங்கம் சிறையில் அடைத்தது. அவற்றின் விளைவாக இந்தியாவின் மூலைக்கு மூலை கிளர்ச்சிகளும், மறியல்களும் தலைதூக்கின.

முன்னர் ஆர்வத்துடன் பணியாற்றிய பெண்கள் மறுபடியும் முன்னணிக்கு வந்து போராடினார்கள். முன்பு தயங்கி நின்ற பெண்கள் இப்போது தீவிர உற்சாகத்துடன் இயக்கத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் காட்டிய ஆர்வத்துக்கும் வலிமைக்கும் ஓர் அளவே கிடையாது.

விஜயலஷ்மியும் கிருஷ்ணாவும் போராட்டத்தில் முக்கிய பங்கு பெற்றுத் திகழ்ந்தார்கள். அவர்களின் தாய் ராணி நேரு கூட வியக்கத்தக்க வகையிலே செயல் புரிந்தாள். வயதின் முதிர்ச்சியும் உடலின் தளர்ச்சியும் பெற்று விட்ட ராணி நேரு - அன்றாட வாழ்வை நோயற்ற முறையில் கழிக்க இயலாது அவதியுற்ற தாய்-அற்புதமான சக்தியும், மனேதிடமும் பெற்று விளங்கினாள். தனது புதல்வியரைப் போல் சமரிலே தலை நிமிர்ந்து முன்னேறினாள். சில சமயங்களில் அவளுடைய ஆர்வமும் சேவையும் விஜயலக்ஷ்மி, கிருஷ்ணா ஆகியோரின் உற்சாகத்தையும் உழைப்பையும் மிஞ்சி நின்றன.

அரசாங்கம் கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டா இருக்கும்? விஜயலஷ்மிக்கும், கிருஷ்ணாவுக்கும்,மற்றும் சிலருக்கும் தடை உத்திரவு போட்டது. பொது கூட்டங்களில் பேசக் கூடாது; ஊர்வலங்களில் கலந்து கொள்ளக் கூடாது; மறியல்களில் பங்கு பெறக் கூடாது என்றெல்லாம் விதி விதித்தது.

சுதந்திர தினம் வருகிற வரை சும்மா இருக்கலாம் என்று நேரு சகோதரிகள் தீர்மானித்தனர். ஜனவரி 26ம் தேதி வந்தது. ’நாங்கள் ஒடுங்கி விடவில்லை; பயந்து பதுங்கவுமில்லை’ என்று அவர்கள் உணர்த்த முன் வந்தார்கள்.

அலகாபாத்தில் அதுவரை நடந்திராத அளவு பெரிய கூட்டம் ஒன்று கூட்டினார்கள் ராணி நேரு தான் தலைமை வகித்தாள். அனல் தெறிக்கும் உணர்ச்சிப் பிரசங்கம் நிகழ்த்தினாள். கூட்டம் இனிது முடிவுறாதபடி அரசாங்கம் கவனித்துக் கொண்டது. குண்டாந்தடிகளை மனிதர் மண்டையில், உடலில், கண்ட கண்ட இடமெலாம் நடனமாட ஏவியது! அந்த இடத்திலேயே பலரைக் கைது செய்தார்கள். பலத்த காயம் பெற்றவர்களின் தொகையும் பெரிது தான்.

தங்களுக்கு விதித்த உத்திரவை மீறிவிட்ட குற்றத்துக்காகத் தாங்களும் கைது செய்யப்படுவர் என்று விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் உற்சாகத்தோடு எதிர் நோக்கி நின்றார்கள். ஏமாற்றம் அடைந்தார்கள். வருதத்துடன் வீடு திரும்பினார்கள்.

ஆனால் அது தற்காலிகமான ஏமாற்றம்தான் என்பது மறுநாள் காலையில் விளங்கிவிட்டது. அன்று காலை 9-30 மணிக்கு அக்காளையும் தங்கையையும் அழைத்துப் போவதற்காக இன்ஸ்பெக்டர் சகிதம் போலீஸ் கார் வீடு தேடி வந்தது. விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் உவகையுடன் சிறை சேர்ந்தனர்.

இருவருக்கும் அப்பொழுதுதான் முதல் சிறை அனுபவம் கிட்டியது. இருவருக்கும் தங்களைப் பற்றிய கவலை ஏற்படவில்லை. அச் சந்தர்ப்பத்திலே, தங்கள் எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற அச்சம் பிறக்க வில்லை அவர்கள் உள்ளத்திலே. தங்கள் தாயாரைப் பற்றிய நினைப்பு தான் வேதனையுடன் தலை தூக்கி நின்றது அங்கு.

ஒரு காலத்தில் ஆனந்தமும் ஆரவாரமும் ஜனப் பெருக்கமும் நிறைந்து ராஜகளையுடன் விளங்கிய பவனம். பிறகு துயரமும் சோகமும் அமைதியுமே கவிந்து தொங்கிய பெரிய வீடு. அங்கே, வயது முதிர்ந்த அன்னையைத் தன்னந்தனியளாக விட்டுச் செல்கிறோமே என்ற வருத்தம் தான் மகளிர் இருவருக்கும் ஏற்பட்டிருந்தது. அந்த அன்னை, தன்னிலும் வயது முதிர்ந்த சகோதரி ’பீபி அம்மா’ளுடன், தனித்து விடப்பட்டாள். ஆயினும் அவள் உள்ளம் கூனிக்குறுகி விடவில்லை. வீரமாக லட்சியப் பணி புரிய அவள் தயங்கவு மில்லை.

விஜயலஷ்மியும் கிருஷ்ணாவும் ஜில்லாச் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.அங்கு முக மலர்ச்சியுடன் ஆனந்த களிப்புடன் காத்திருந்த தோழியர் பலரைக் கண்டு மகிழ்ந்தார்கள். என்ன வந்தாலும் சரி; புன்னகையோடு வரவேற்போம் என்ற தீர்மானத்துடன் அவர்கள் காத்திருந்தார்கள்.

வழக்கத்திற்க்கு விரோதமாக, பெண்களை விசாரணை இல்லாமலே சில வாரங்கள் கொட்டடிகளில் அடைத்து வைத்திருந்தனர் ஆட்சியினர். ஒரு மாதிரியாக விசாரணை நாளும் வந்தது. ’மிஞ்சிப் போனால், ஆளுக்கு ஆறு மாதம் சிறைவாசம் என்று தண்டனை விதிப்பார்கள்’ என்று தான் எல்லோரும் எதிர்பார்த்து இருந்தனர்.

ஜெயிலில் தான் விசாரணை நடந்தது. எல்லோரும் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். பெயர் சொல்லப்படும்; விசாரணை நடக்கும். கைது செய்யப்பட்டவர்கள் இந்த நாடகத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர்.

முதலாவதாக விஜயலஷ்மி பண்டிட்டின் பெயர் தான் வாசிக்கப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பை வாசித்தார். ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனை; அபராதம் வேறு என்றார். எல்லோரும் திடுக்கிட்டார்கள்.

தண்டனைப் பட்டியல் தொடர்ந்து வாசிக்கப் பட்டது.

கிருணாஷ்வுக்கு ஒரு வருஷம் சிறை. அபராதம் கிடையாது. இப்படி ஒவ்வொருவருக்கும் கிடைத்தது. மற்றும் இரண்டே இரண்டு பெண்களுக்குத் தான் ஒரு வருஷ தண்டனை. இதரர்களுக்கு விதம்விதமாக தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று மாதங்களிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை தரவாரியாக சிறைவாசப்பரிசு வழங்கப்பட்டது!


விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் லக்ஷ்மணபுரி ஜெயிலுக்குக் கொண்டு போகப்பட்டனர்.இரவோடு இரவாக அழைத்துச் செல்லப்பட்டார்கள் அவர்கள்.


மிகுந்த பனியும் குளிரும் கவிந்திருந்த அதிகாலை நேரத்தில், அவர்கள் உரிய சிறைச்சாலையினுள் புகுந்தார்கள். ஓங்கி நின்ற பெருஞ் சுவர்கள் உற்சாகத்துக்கு சமாதி கட்டும் சூழ்நிலை போல் விளங்கின. வெளி உலகத் தொடர்புக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களைத் தனியான உலகுக்குள் தள்ளும் அந்த அமைப்பு அவர்கள் இதயத்தில் பாரம் எழுப்பத்தான் செய்தது. சிறை வாசம் என்றால் என்ன; அது எத்தகைய கொடுமையாக இருக்கும் என்பதை அவர்களால் அப்போதுதான் முதன்முதலாக உணரமுடிந்தது.


இருப்பினும், இச் சூழ்நிலையால் உள்ளத்து உறுதி தளர்ச்சி பெறக்கூடாது; அப்படிச் சோர்வுற விடோம் என்ற மனோதிடம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. சிறைவாசத்தின் போது எத்தனையோ புறக்கஷ்டங்களையும், அகத்துயரங்களையும் அவர்கள் அனுபவிக்க நேர்ந்தது. ஆயினும் விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் தைரியத்தை இழந்து விடவில்லை. தலைவரிடமும் லட்சியத்திலும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, எதையும் சகித்துக் கொள்வதற்கு வலிமை தரும் சக்தியாக விளங்கியது.

போராடும் பண்பு பெற்ற வீராங்கனகள் சிறையினுள்ளும் கிளர்ச்சிகள் செய்வரோ; சிறை விதிகளை அனுஷ்டிக்காமல் முரண்டு பிடிப்பார்களோ என்ற அச்சம் சிறைப் பாதுகாவலர்களுக்கு இருக்கத்தான் செய்தது. அவர்கள் விஜயலக்ஷ்மி, கிருஷ்ணா முதலியவர்களிடம் கண்ணியமாகவே நடந்து கொண்டனர். சகோதரிகள் கோரிய பொருள்கள் அவர்களுக்குக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தார்கள்.


சிறை அதிகாரி, அவர்களுக்கு ஏதாவது தேவைப்படுமானால் தெரிவிக்கலாம் என்று சொன்னர் ஒரு சமயம். ஒவ்வொருவரும் தனக்குத் தேவையான புத்தகங்கள் அல்லது பொருள்களைக் குறிப்பிட்டார்கள். கிருஷ்ணா கிடைத்த காலத்தைப் பொன்னக்கும் ஆசையோடு அயல் மொழிகளைக் கற்க விரும்பினாள். ஆகவே, பிரஞ்சு, இத்தாலிய பாஷைப் புத்தங்கள், ஷார்ட் ஹேண்டு புத்தங்கள் சில, மூன்று டிக்ஷ்னரி முதலியன வேண்டும்; இவை தவிர பொழுது போக்கிற்குத் துணை புரியும் நாவல்களும் தேவை என்று சொன்னாள்.

அவள் வேடிக்கையாகச் சொல்லவில்லை தனக்கு அவசியம் என்று பட்டதை எடுத்துச் சொன்னாள். அவ்வேளையில், தான் ஒரு அரசியல் கைதி: டிக்ஷ்னரிகளையும் சேர்த்து ஆறே ஆறு புத்தகங்கள் தான் அனுமதிக்கப்படும் என்கிற பிரக்ஞை அவளுக்கு இல்லவே இல்லை,

அதிகாரி யோசனையில் ஆழ்ந்துவிட்டார். பிறகு சொன்னர் : 'உங்களுக்காக சிறு லைபிரரி ஒன்றை சிறைக்குள் ஏற்பாடு செய்து விட்டால் மிகச் செளகரியமாக இருக்கும்: இல்லையா? உங்களுக்குத் தேவையான புத்தங்களை நீங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். அதற்காக மேலிடத்தில் அனுமதி பெற்று ஆவன செய்யட்டுமா?'

அவர் விளையாட்டாகப் பேசவில்லை. கர்ம சிரத்தையாகத் தான் கேட்டார். ஆனால், கிருஷ்ணா பதில் சொல்லத் தயங்கினாள். அதிகாரியின் முகத்தையே கவனித்து நின்றாள். அவர் கண்களில் புன்னகைப் பொலிவு பூத்து நிற்பதை உணர்ந்து உற்சாகத்தோடு பதில் அளித்தாள்.


'உங்களுக்கு மிகுந்த தொந்தரவாகத் தோன்றவில்லை என்றால் அப்படியே செய்யுங்கள். அது மிக இனிய ஏற்பாடாக இருக்கும். பாருங்கள். இங்கே நூல் நூற்று வீண் பொழுது போக்குவதை நான் விரும்ப வில்லை. ஆகையினால் எனக்குச் சீக்கிரமே புத்தகங்கள் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தால் நல்லது 'என்றாள் அவள்.


அந்த அதிகாரி எவ்வளவோ முயற்சி செய்து, கிருஷ்ணாவுக்குத் தேவையான புத்தகங்களை வரவழைத்துக் கொடுத்தார். அவை வருவதற்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.

ஜெயிலில் வாழ நேர்ந்த பெண்களுக்கு ஆளுக்கு ஆறு சேலைகளும் வேறு சில உடுப்புகளும் தான் அனுமதிக்கப்பட்டிருந்தன. தினந்தோறும் துணிகளை அவரவர்களே துவைத்து உலர்த்த வேண்டியிருந்தது. விஜயலக்ஷ்மிக்கும் கிருஷ்ணாவுக்கும் இந்த வேலை மிகுந்த   சிரமமாகத் தான் இருந்தது. இயல்பாகவே கனமான கதர்ச் சேலை நீரில் நனைக்கப்பட்டது 'செக்கு கனம்' கனப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். என்றாலும் கொஞ்ச நாளில் பழக்கமாகிவிட்டதும் சரயாகப் போயிற்று.

சிறை வாழ்க்கையின் கஷ்டங்கள் பலவும் பழகப் பழகச் சரியாகிவிட்டன அவர்களுக்கு. ஆயினும் உணவுப் பிரச்னை தொல்லை தரும் பெரிய பிரச்னையாகத்தான் இருந்தது. ஜெயிலில் தரப்பட்ட உணவு வகைகள் பிடிக்காமல் போனதால்,பெண்கள் தாாங்களாகவே சமையல் செய்து சாப்பிட அனுமதி பெற்றுக்கொண்டனர்.

விஜயலக்ஷ்மி ரொட்டி சாப்பிடுவதில் திருப்தி கண்டாள். அவளுக்குச் சாப்பாடை விடக் காப்பிதான் அத்தியாவசியத்தேவை. சிறை விதிப்படி காப்பி அனுமதிக்கப்படுவதில்லை.அவளுக்குக் காப்பி தேவைப்படுமானால் நித்தியப் படிக்காசை மிச்சப்படுத்தி வாங்கிக் கொள்ளலாம் என்று சலுகை அளித்தார் சிறை அதிகாரி. அவ்விதமே, சாப்பாட்டுக்குரிய காசைச் சேமித்து காப்பிப் பொடி வாங்குவதை வழக்கமாக்கிக் கொண்டாள் அவள்.

ஜெயிலின் கடுமையான அனுபவங்களை எல்லாம் அற்பமானதாகத் தோன்றச் செய்த சம்பவம் ஒன்று வெளி உலகில் நிகழ்ந்து விட்டது. அத்துயரச் செய்தி கேட்டு ஜவாஹர்லால் குமைந்து உளம் கொதித்தார்.

விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் வேதனையுடன் கண்ணீர் வடித்தார்கள். இரும்புக் கம்பிகளின் பின்னால் அடைபட்டுக் கிடந்த அவர்கள் வேறு என்ன செய்ய முடியும்?

1981 ஏப்ரல் மாதம் தான் அந்தச் சம்பவம் கடை பெற்றது. அலகாபாத் நகர வீதிகளில் வந்த ஊர்வலம் ஒன்றை ராணி நேரு தலைமை வகித்து நடத்திச் சென்றாள்.திடீரென்று போலீஸ் தாக்குதலுக்கு உள்ளாயிற்று அந்த ஊர்வலம். தடுத்து நிறுத்தப்பட்ட தொண்டர்படையின் முன்னால் தலைவி நேரு ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். போலீஸ் தடித்தனமாகத் தடியடி கொடுத்தது. நாற்காலியிலிருந்த ராணி நேரு தரையில் விழுந்த பிறகும் கூட, பிரம்பு கொண்டு வெறித்தனமாகத் தாக்கினர் போலீஸார். அவள் மண்டை பிளந்து, ரத்தம் பெருகி ஓடியது. பிறகு அவளை யாரோ ஒரு அதிகாரி காரில் எடுத்து 'ஆனந்த பவனம்' சேர்த்தார். அன்று இரவு ராணி நேரு மரண மடைந்தாள் எனும் வதந்தி நகரம் முழுவதும் பரவியது.

பெட்ரோல் ஏற்ற பெருந்தீ எனச் சீறி எழுந்தனர் நகர மக்கள். அஹிம்சை உபதேசங்களையும், இதர தத்துவங்களையும் அவ்வேளைக்குக் காற்றிலே பறக்க விட்டனர். போலீஸாரைத் தாக்கத் தொடங்கினார்கள். அதன் பயனாக துப்பாக்கிப் பிரயோகம் ஏற்பட்டது. பொதுமக்களில் சிலர் பலியானார்கள்.

இச்செய்தி கேட்டு நேருவும் சகோதரிகளும் அளவிலாத் துயரம் அனுபவித்தது ஆச்சர்யம் இல்லைதான்.

சிறையில் பலதரப்பட்ட குற்றவாளிகள் அடைபட்டுக் கிடந்தனர். ரகம்ரகமான பெண்கள் தண்டனைக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தனர். விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் அவர்களிடம் அன்பும் ஆதரவும் காட்டினாார்கள். அவர்களது துயரக் கதைகளைப் பொறுமையுடன் கேட்டு, ஆதரவான வார்த்தைகள் கூறினார்கள்.குற்றவாளிகளின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்தும் பெருமூச்சு எறிந்தார்கள்.

ஒரு வருஷ தண்டனை காலம் பூர்த்தியானதும் நேரு சகோதரிகள் விடுதலை அடைந்தனர்.விடுதலை கிட்டியதை எண்ணி அவர்கள் குதுர்கலம் பெற்றாலும், அந்நாள் வரை அன்புடன் பழகிய இதர கைதிகளைப் பிரிந்து செல்வதில் அவர்களுக்கு வருத்தமே ஏற்பட்டது.வறுமை,அறியாமை, சமூகச் சூழ்நிலை காரணமாகவும் சந்தர்ப்பங்கள் துாண்டி விட்ட உணர்ச்சிக் கொதிப்புகளினாலும் ஏதேதோ குற்றங்கள் செய்து விட்டு, கடுமையான தண்டனை பெற்று சிறையினுள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை அணு அணுவாகக் கருக்கிக் கொண்டிருக்கும் அபலைகளுக்காக, சகோதரிகள் கண்கலங்கினார்கள். ஏற்ற ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு வெளியேறினார்கள்.

லக்ஷ்மணபுரியிலேயே அவ்விருவரையும் விடுதலை செய்யவில்லை. சிறைத்தலைவியின் கண்காணிப்புடன் அவர்கள் அலகாபாத் நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.அங்குதான் விடுதலை கிட்டியது.

வீடு திரும்பிய விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் பவனத்தைக் கண்டு வருந்தினார்கள். கமலா நேரு நோயின் காரணமாகக் கல்கத்தாவில் இருந்தாள். அன்னை நேருவும் அவளுடன் தங்கி இருந்தாள். ஆகவே அவ்விருவரையும் வரவேற்க அங்கு யாருமில்லை.

என்றாலும், சிறிது நேரத்திலேயே விடுதலைச்செய்தி பரவி ஊரே திரண்டுவிட்டது அவர்களை வரவேற்க. ஒரு வருஷ அமைதிக்கும் தனிமைக்கும் பிறகு தொடர்ந்த பரபரப்பும் கும்பலும் உற்சாகமும் நேரு சகோதரிகளுக்கு பிரமிப்பு ஏற்படுத்தி விட்டன. மக்களின் பரிவும் அன்பும் அவர்கள் உள்ளத்தைத் தொட்டன.

சில தினங்களுக்கு பிறகு இருவரும் கல்கத்தா சென்றார்கள். கமலாவுடனும் தாயுடனும் 'ஆனந்த பவனம்' திரும்பினார்கள்.

விஜயலக்ஷ்மி தன் குழந்தைகள் மூவரையும் காணத் துடித்தாள். அவள் ஜெயிலுக்குப் போவதற்கு முன்பு, மூன்று பெண்களையும் பூனா நகரிலுள்ள 'போர்டிங் ஸ்கூல்' ஒன்றில் சேர்த்திருந்தாள் கடைசிக் குழந்தைக்கு அப்போது மூன்று வயதுதான் ஆகியிருந்தது. நண்பர்க்ள் சிலர் மேற்பார்த்து வந்த அப்பள்ளியில் தான் இந்திரா நேருவும் தங்கியிருந்தாள். ஆகவே, சகோதரிகள் இருவரும் பூனா சென்றனர்.

5

பூனா நகரில் தங்கியிருந்த நாட்களில் நேரு சகோதரிகள் அடிக்கடி ஏரவாடா சிறைக்குப் போய் அங்கிருந்த காாந்திஜியைக் கண்டு பேசிப் பயனடைந்தார்கள்.

பிறகு இருவரும் குழந்தைகளுடன் பம்பாய் நகருக்கு வந்து சேர்ந்தார்கள். அங்குதான் கிருஷ்ணா ராஜா ஹத்திசிங்கைக் கண்டு பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இருவருக்கும் காதல் வளர்ந்தது.

ராஜாவை மணந்து கொள்வதாக உறுதி அளித்து விட்டாள் கிருஷ்ணா. இவ்விஷயத்தை சகோதரியிடம் மட்டுமே அறிவித்தாள் அவள். விஜயலக்ஷ்மி அண்ணா நேருவிடம் சமயமறிந்து பிரச்னையை எடுத்துச் சொன்னாள்.ஜவாஹர் ராஜாவைக் கண்டு பேசியும் காந்திஜீயின் ஆலோசனைப் பெற்றும்், தங்கையின் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்தார்.

1933 அக்டோபர் 20-ம் நாள் ,ஆனந்த பவன'த்தில் கிருஷ்ணாவுக்கும் ராஜாவுக்கும் திருமணம் நிகழ்ந்தது.

ராஜாவின் முழுப் பெயர் குணோத்தம ஹத்திசிங் என்பதாம். பாரிஸ்டர் தொழில் பயின்றவர். அரசியல் பணிகளிலும் அவர் ஆர்வம் காட்டி வந்தது உண்டு. பட்டம் பதவி புகழ் முதலியவைகளில் ஆசை கொள்ளாமல், பின்னணியில் நின்று தன்னால் இயன்ற அளவு நாட்டுப் பணி புரிவதே அவரது கொள்கையாம்.