விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 9

அத்தியாயம்-9.

பத்து வாரங்களுக்குப்பிறகு சிறையிலிருந்து மீண்ட மோதிலால் நேருவின் உடல் நிலை மிகுதியும் சீர்கேடு அடைந்து விட்டது. மிகவும் மெலிந்து காணப்பட்டார் அவர். அவரது தேகநலனை உத்தேசித்து நேரு குடும்பத்தினர் முசெளரி எனும் மலை வாசஸ்தலத்தில் முகாமிட்டனர். மலைக்காற்றும், அமைதியான சூழலும், ஒய்வும், மனைவிமக்களின் போஷிப்பும் அவரது உடலுக்குத் தெம்பு ஊட்டி வந்தன.

இடைக்காலத்தில் ஜவஹர்லால் நேருவும் விடுதலை அடைந்திருந்தார். அவர் அலகாபாத்தில் தங்கியிருந்தார்.  அடிக்கடி நேரு தந்தையைக் கண்டு திரும்பியது மோதிலாலுக்கு ஆறுதலாக இருந்தது.

ஆனால், அரசாங்கம் ஜவஹரைத் தொடர்ந்து வெளியே விட்டிருக்க விரும்பவில்லை. மறுபடியும் அவரைக் கைது செய்து நைனி ஜெயிலில் பூட்டி வைத்தது.இச் செயல் தந்தை நேருவுக்குப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

அவர் உடலம் தளர்வுற்ற நிலையில்தான் இருந்தது. பூரண குணம் எய்திவிட வில்லை. மகனுடன் பல விஷயங்கள்ப் பேசி மகிழலாம் என்ற ஆசையோடு அவர் அலகாபாத்துக்குத் திரும்பியிருந்தார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசச் சென்றிருந்த ஜவஹர் திரும்பி வந்து விடுவார் என்று ஆவலுடன் காத்திருந்த தந்தைக்கு மகன் கைது செய்யப்பட்ட விவரம் தான் கிட்டியது. இதய வேதனையுடன் அவர் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.

ஆனாலும் மனமொடிந்து ஒடுங்கி விடக்கூடியவரா மோதிலால்? 'சிங்க உள்ளம்' அவருடையது. சீறி எழுந்தார் அவர். 'உள்ளம் இளமையோடு இருக்கின்றபோது, உடல் நோய் எந்த மூலைக்கு? அடிமை ஆட்சியை பலமாக எதிர்த்துப் போராடுவேன்' என்று கர்ஜித்தது அவர் மனம். அதிதீவிரமாக அரசியல் பணியில் ஈடுபட்டார்.

மனோவலிமையால் புதிய பலம் பெற்று ஆவேசத்தோடு செயல்புரிந்த மோதிலாலின் ஊக்கமும் உணர்வும் எல்லோரையும் வியந்திட வைத்தது. ஆனால் அவரால் வெகுகாலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவர் தேக நிலை மோசமாய், மோசமாய், மிக மோசமாய் போய்க் கொண்டிருந்தது.

ஜவஹர்லால் நேரு பலமுறை வற்புறுத்தியதன் பேரில் தங்தை ஒய்வு பெற இசைந்தார். கடல் யாத்திரை சென்று மேல் நாடுகளில் சிலகாலம் தங்கலாம் என்று திட்டமிட்டார்கள். தந்தையுடன் கிருஷ்ணாவும் செல்வதாக இருந்தது. அவர்கள் கல்கத்தா நகர் அடைவதற்குள் தேகநிலைமை படுமோசமாகி விட்டதால், பிரயாணம் ரத்து செய்யப்பட்டது.

சில வார காலம் மோதிலால் கல்கத்தா நகரை அடுத்த ஒரு ஊரில் தங்க நேர்ந்தது. அச் சமயத்தில் கமலா நேரு கைது செய்யப்பட்டாள் என்ற செய்தி கிட்டியது. தந்தை நேரு மிகவும் வருத்தமுற்ருர். பலவீனமான நிலையில் உள்ள கமலா கடுஞ்சிறையில் எப்படி வாழமுடியும் என்று வேதனை அடைந்தார் அவர். உடனடியாக அலகாபாத்துக்குக் கிளம்பிவிட்டார்.

அவருடைய நிலைமை கவலைக்கிடமானதும், அரசாங்கம் ஜவஹரையும், ரஞ்சித் பண்டிதரையும் விடுதலை செய்தது. அது நிகழ்ந்தது 1931 ஜனவரி 26-ம் தேதி.

அன்றைய தினம் மற்றும் அநேக பிரபல தலைவர்களும் விடுதலை பெற்றனர். காந்திஜீயும் விடுவிக்கப் பெற்றார். அவர் நேராக மோதிலாலைக் காணவந்தார். அங்கேயே தங்கினார். அவர் அருகிலிருந்தது மோதிலாலுக்கு எவ்வளவோ ஆறுதல் கொடுத்து வந்தது.

மரணப்படுக்கையில் கிடந்த தலைவரைக் காண எவ்வளவோ பேர் வந்து போயினர். ஆயினும் அந்த வீட்டிலே சோகமும் கவலையும் தான் நிலைத்து நின்றன. ஆனல் மோதிலால் சாவைக் கண்டு அஞ்சவில்லை. காந்திஜீயுடனோ, அல்லது ராணி நேருவுடனோ அடிக்கடி தமாஷாகப் பேசிக் களித்தார்.

ஜவஹர், ராணி நேரு, கமலா, விஜயலக்ஷ்மி, கிருஷ்ணா எல்லோரும் சதா அவரைச் சுற்றி அமர்ந்து கவலையோடு கவனித்து வந்தார்கள். சரியான ஊண் உறக்கமின்றி சிச்ரூஷை செய்து வந்தார்கள். இரவிலே முறை வைத்துச் சற்றே கண் அயர்ந்து சிறிது காத்துக் கிடந்தார்கள்

வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களில் எதிர்த்து நின்று வெற்றி கண்ட மோதிலால் மரணத்தோடு நடத்திய சமரில் ஜெயிக்க முடியவில்லை. எக்ஸ்ரே சிகிச்சை செய்யும் நோக்கத்துடன் டாக்டர்கள் அவரை லஷ்மணபுரிக்கு எடுத்துச் சென்றார்கள்.அங்கு பிப்ரவரி ஆறாம் தேதி மரணம் அடைந்தார்.அவர் தேகம் அலகபாத்துக்கு எடுத்துவரப் பெற்று கங்கைக் கரையிலே தகனம் செய்யப்பட்டது.

அன்று நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தினர். தலைவர்கள் பலரும் தாங்கள் பெருநஷ்டம் அடைந்து விட்டதாகப் பேசித் துயர் அடைந்தனர். ஜவஹரும்,|ஜவாஹரும்,}} விஜயல்ஷ்மியும்,பிறரும் ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு காரணமாக ஆற்ற இயலாத் துயர் எய்தி வாடினர்கள்.

தந்தை, நாட்டின் சுதந்திரம் காணத் தவித்தார். சுதந்திர இந்தியாவில் தான் மரணமடைவேன் என்று சொல்வி வந்தார். மரணம் முந்திக் கொண்டது. அவர் ஆத்மா சாந்தி அடையும் வகையில் நாம் தேசப்பணி புரிந்து, நாட்டுக்கு விடுதலை தேடித் தருவோம்’ என்று உறுதி கொண்டார்கள் அவர்கள்.