விஜயலஷ்மி பண்டிட்/முன்னுரை


முன்னுரை

உலகத்தில் பெண்களில் முன்னணியில் நிற்கும் மாதரசிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சி ஒன்று அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ந்தது. பணமோகமும். விளம்பரப்பித்தும், ஆடம்பர விருப்பமும் நிறைந்து விளங்கும் உல்லாசிகள் மேனா மினுக்கிகளுக்கு முதலிடம் கொடுக்கவில்லை; ஆடைகளை உதிர்த்துவிட்டு உடல் வெளிச்சம் போட்டு ஆடிமயக்கும் சினிமா நட்சத்திரங்களின் பெயரைக் குறிப்பிடவில்லை; சிங்காரச் சீமாட்டிகளின் பட்டியல் தயாரிக்கவில்லை. ஸ்ரீமதி எலினார் ரூஸ்வெல்டுக்கு முதல் ஸ்தானமும், ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு இண்டாவது இடமும் அளிக்கப்பட்டிருந்தது அவர்கள் தேர்ந்து கொடுத்த பெயர்ப் பட்டியலிலே.

இதிலிருந்தே விஜயலக்ஷ்மி பெற்றுள்ள செல்வாக்கின், கெளரவத்தின், தன்மை நன்கு புரியும். 'மனிதரில் மாணிக்கம்' எனப் புகழப்படும் ஜவாஹர்லால் நேருவின் தங்கை மாதர்களில் மணி என்பதில் சந்தேகமில்லை. அவளது வாழ்க்கை வரலாறு நேருவின் குடும்பக் கதையோடு இழைந்து கிடப்பது. நேரு குடும்பக் கதையோ இந்திய சரித்திரத்தோடு பின்னி வளர்ந்தது. 'நம் நேரு' வாழ்க்கை வரலாற்றை அழகிய முறையில் வெளியிட்ட 'கலா மன்ற'த்தார் விஜயலக்ஷ்மியின் வரலாற்று நூலேயும் வசிகரமாகப் பிரசுரிக்க முன் வந்தது பொருத்தமான செயல் மட்டுமல்ல போற்றத் தகுந்த காரியமும் ஆகும். அவர்களுக்கு என் வாழ்த்தும் வணக்கமும் உரியன.

இப்புத்தகத்தில் விஜயலக்ஷ்மி முதலியவர்களை 'அள்'‌ விகுதியிட்டே குறித்திருக்கிறேன். பெண்ணை 'அவள்' என்பது கௌரவ குறையாகாது. 'அர்' விகுதி போட்டு பேசிவிடுவதால் மட்டுமே பெண்களை கௌரவித்தது ஆகிவிடாது. கவி பாரதியார் கருத்தும் இதுதான். அன்னிபெசன்டை 'அவள்' என்று குறிப்பிட்டு வந்தார் அவர். ஒருசமயம் யாரோ அதை ஆட்சேபித்து 'அவள்- இவள்' என்று சொல்லக்கூடாது என்று குறிப்பிடவும், பாரதியார் வெகுண்டார். உணர்ச்சியோடு 'அன்னிபெசன்ட்- அவள், அவள், அவள்தான். பெண்ணை அவள் என்று சொல்வோம் என்றார்'.

பாரதி வரலாற்றில் காணப்படும் இந்த சம்பவத்தையே, இப்புத்தகத்தில் காணும் பிரயோகத்தை ஆட்சேபிக்கக் கூடியவர்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சென்னை வல்லிக்கண்ணன்
16, மார்ச் 1954