விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 1

விஜயலக்ஷ்மி பண்டிட்
அத்தியாயம்-1

ண்களோடு பெண்களும் சரிநிகர் சமானம் எனும் உண்மை உலகெலாம் ஒளிவீசி ஓங்கி நிற்கும் காலம் இது. ஆண்களைப் போல் பெண்களும் அரும் பெரும் செயல்கள் புரிந்து இணையற்று விளங்கினர்கள் அந்தக் காலத்திலே. இதற்குச் சரித்திரத்தில் எவ்வளவோ சான்றுகள் உண்டு. இலக்கியத்திலே எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள.

ஆனால், இடைக்காலத்தில் பெண்கள் தன்மான உணர்வு இழந்து, உரிமை இழந்து, ஆணினத்தின் அடிமையராய், அடுப்பங்கரைப் பூச்சிகளாய், படுக்கை அறைப் பாவைகளாய், மந்தமதியினராய், கண்ணிர் சிந்தும் சிலைகளாய், பிள்ளை உற்பத்தி இயந்திரங்களாய் ஒடுங்கிக் கிடந்தார்கள். ஒடுக்கப்பட்டுக் கிடந்தார்கள்.

கால தேவனின் கையசைப்பினால் உலகம் எவ்வளவோ மாற்றங்களேப் பெற்றது. காடுகள் தோறும் மக்கள் உரிமை உணர்வு பெற்று உரிய போராட்டங்களிலே ஈடுபட்டார்கள். பெண் உலகமும் விழிப்புற்றது.

பொங்கி எழுந்தது. உலகில் பல நாடுகளிலும் பெண்களின் உரிமை குரல் ஒலிக்கத் தொடங்கியது. பெண்களின் முன்னேற்றம் பற்றிப் பேசப்பட்டது. எல்லாம் வெறும் பேச்சு அளவில் நின்றுவிடாமல் செயல்களாகவும் வளர்ச்சி உற்றன.

படித்துப் பட்டங்கள் பெற்றார்கள் பெண்கள். சட்டங்கள் செய்யவும், நீதி வழங்கவும் முன்வந்தார்கள். அன்பு பணிபுரியவும், அசகாய சாதனைகள் செய்யவும் களத்திலே புகுந்தார்கள். விமானம் ஓட்டத் துணிந்தார்கள். படைகளிலே இடம் பெற்றார்கள். அறிவுத் துறையிலும் ஆராய்ச்சி அறைகளிலும் தலைநிமிர்ந்து நின்று, அரிய பெரிய செயல்களின் மூலம் தம் திறமையை உலகுக்கு உணர்த்தினார்கள். உணர்த்தி வருகிறார்கள்.

இந்தியாவிலும் இந்த விழிப்பு பரவாமல் இல்லை. சற்றுத் தாமதமாக ஏற்பட்டது இந்த உணர்வு. ஆனாலும் வெகு வேகமாக வளர்ந்து விட்டது.

இந்தியா என்றுமே பெண்களுக்கு உணர்வு உயர்வு அளித்து போற்றி வந்த நாடுதான். வேதங்கள், இதிகாசங்கள், சரித்திரம், இலக்கியம் எல்லாம் பாரத பண்பாடு பற்றி, பெண்கள் பெற்றிருந்த உயர்ந்த நிலைமை பற்றி எவ்வளவோ பேசுகின்றன. எனினும், இடைக்காலத்திலே பெண்கள் அடிமை நிலை எய்த நேர்ந்ததை அவை தடுத்துவிடவில்லை.உலகெங்கும் எழுந்த உத்வேகம் இந்தியப் பெண்களுக்கும் ஊக்கமும் உணர்வும் கொடுக்கத் தவறவில்லை.

இந்தியாவிலே பிரகாசிக்கத் துணிந்த புதுமைப் பெண்களுக்குத் தனியான வாய்ப்புகளும் சிறப்புகளும் எதிர்ப்பட்டன. அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா சுதந்திரதாகத்தோடு வீறுகொண்டு எழுந்து நின்றது. அந்நிய ஆட்சியோடு சமரிட்டது. வெற்றி காணப் போராடிப் போராடி இன்னல்களை ஏற்க நேர்ந்தது. நாட்டிலே எவ்வளவோ மாறுதல்கள். சமூகத்திலே, குடும்பங்களில், தனி மனித வாழ்வில், எத்தனை எத்தனையோ மாற்றங்கள். அவற்றை எல்லாம் ஏற்று, சகித்து, அற்புத அனுபவங்கள் பெற்று, ஓங்கி உயர்ந்து, கெளரவங்கள் பல அடையும் பாக்கியம் இந்தியப் பெண்களில் பலருக்குக் கிட்டியது.

அத்தகைய பாக்கியம் பெற்ற பெண்களில் ஒரு பெண் ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி பண்டிட். அவர்கள் எல்லோரையும் விடத் தனி மாண்பு பெற்றுத் திகழும் மாதர் திலகம் அவள். புதுமைப் பெண்களுக்குப் பெருமை தரும் பெண்கள் நாயகம் அவள். அவர்களுடைய போற்றுதலுக்கு உரிய பெண்ணின் பெருமாள் அவள், இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திவரும் மணி அவள்.

நாட்டுக்காக மகத்தான தியாகங்கள் புரிந்த பண்டித மோதிலால் நேருவின் அருமை மகள் விஜயலக்ஷ்மி. இந்தியாவின் தவப் புதல்வர் ஜவாஹர்லால் நேருவின் தங்கை அவள். இவ்விரண்டு சிறப்புகளால் மட்டுமே அவள் பெருமை அடையவில்லை. மாண்புக்கு மாண்பு அளிக்கும் நற்சிறப்புகள் பலவும் விஜயலக்ஷ்மி பெற்றிருக்கிறாள். அவற்றின் துணையாலும், நாட்டின் உயர்வுக்காக ஆற்றிய பணிகளாலும், அப்போது எதிர்ப்பட்ட துன்பங்களும், வேதனேகளும் தந்த அனுபவங்களினாலும் நன் மதிப்பைப் பரிசாகப் பெற்றவள் அவள்.

சுதந்திர இந்தியாவின் சக்தியை உலகுக்கு நிரூபிப்பதற்காகப் பாடுபட்டு வரும் ஜவாஹர்லால் நேருவுக்குச் சரியான தங்கை தான் என்பதை நிலைநாட்டி விட்டாள் விஜயலக்ஷ்மி.

“நீ அரசியல்வாதியாக மாறியிருப்பதை உணர்ந்தேன். நீ பெண்ணாகப் பிறந்துவிட்டது அதற்குத் தடையாக இருக்குமோ என்று எண்ண வேண்டாம். தங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்காக, ஆண்கள் சாதித்துள்ள செயல்களைப் போலவே, எத்தனையோ பெண்களும் தீவிரப் பங்கு ஏற்று அரிய பெரிய சாதனைகளை நிறைவேற்றியுள்ளனர்.ஒரு சிலர் ஆண்களே விட அதிகமாகச் சிறந்து விளங்குவதையும் காணலாம். இதெல்லாம் நாட்டின் மீது நாம் கொள்ளுகிற பற்றுதல், அதன் செயல்களில் நாம் காட்டுகிற ஆர்வம்— முதலியவைகளைப் பொறுத்தது தான். ஆண்—பெண் என்கிற பேதம் ஒரு பெரிய தடை அல்ல. பார்க்கப்போனால், உள்ளத்தில் உறுதி கொண்டுவிட்ட ஒரு பெண்ணின் ஆதிக்கம் ஆணின் வலிமையைவிட வலியதாக, பயன்கள் பல தருவதாக அமையும்.ஆகவே, உனது முன்னேற்றத்துக்குத் தேவையான வாய்ப்புகள் உனக்காகக் காத்து கிற்கின்றன”.

இவ்விதம் பண்டித மோதிலால் நேரு தமது இளைய மகள் கிருஷ்ணுவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறித்திருக்கிறார். தந்தையின் ஆசிஉரை புதல்வி விஜயலக்ஷ்மியின் வாழ்வில் பரிபூரண வெற்றியாக மிளிர்வதை எல்லோரும் உணரமுடியும்.

சுதந்திரப் போரில் தீவிரப் பங்கு பெற்று, மூன்று தடவைகள் சிறை வாழ்க்கை அனுபவித்தாள் விஜயலக்ஷ்மி, இந்தியாவிலேயே முதல் பெண் மந்திரி என்ற அந்தஸ்து அவளுக்குக் கிட்டியது, ஐக்கிய மாகாண மந்திரி சபையில் அவள் இடம் பெற்றபோது, சுதந்திர இந்தியாவின் அயல் நாட்டு ஸ்தானிகராக ரஷ்யாவிலும், அமெரிக்காவிலும் பணி புரியும் பேறு அவளுக்குக் கிட்டியது. உலகத்திலேயே ஒரு பெண் அடையக்கூடிய மிக உயர்ந்த ஸ்தானம்-இதுவரை எந்தப் பெண்னும் பெற்றிராத தனிப்பெரும் கெளரவம்-என்று போற்றும் வகையில் அவள் ‘ஐக்கியகாடுகள் சபை’யின் தலைமைப் பதவியை அடைந்து விளங்குகிறாள்.

நேரு குடும்பத்தின் வரலாறு இந்திய சரித்திரத்தில் சிறப்பான இடம் பெறும் ஓர் அத்தியாயமாகும். தியாகம், வீரம், தன்னிகரில்லாத் தனிப் பெரும் சேவை, நாட்டுப்பற்று முதலியவற்றின் கதம்பம் நேரு குடும்பக் கதை. அம்மலர்ச் செடியினூடே தகதகக்கும் பொன் இவை போன்றது விஜயலக்ஷ்மியின் வாழ்க்கைவரலாறு.