விஞ்ஞானத்தின் கதை/சிந்தனையாளர் சிலர்
2. சிந்தனையாளர் சிலர்
நண்பர் வீட்டு நாய் இப்போது என்னோடு நட்புறவு கொண்டிருப்பதைக் குறிப்பிட்டேனல்லவா? இந்த விளைவு ஏற்பட்டதன் காரணம் மனப் போக்கில் எழுந்த மாற்றந்தான். மனத்தின் தன்மை எப்போதும் எதையேனும் சிந்தித்துக் கொண்டிருப்பது ஆகும். நாயிடம் பழகவேண்டிய முறைகளை நான் படிப்படியாக உணர்ந்து கற்றுக்கொண்டேன். அதைப் போலவே நாயும் நிலை உணர்ந்து என்னோடு பழகுகிறது. இத்தகைய மனச் சீரமைப்பில்தான் உலகம் நிலைக்கிறது.
மனத்தை அடித்தளமாகக் கொண்டு எழுப்பப் படும் விஞ்ஞான மாளிகையின் இரண்டு நுழை வாயில்கள் "ஏன்”, "எப்படி?" என்ற கேள்விகளாகும். இந்த இரண்டு கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில்தான் உலகம் முன்னேறியதை நாம் அறியலாம். உள் மனத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது புத்தரின் நினைவு வருகிறது. அவர் தனக்குள் கேட்டுக் கொண்ட கேள்விகள்——"ஏன் உலகில் துன்பம் ஏற்படுகிறது? எப்படி அதற்கு முடிவு காணலாம்?" என்பனவாகும். இந்தக் கேள்விகளுக்குத் தெளிவு பிறந்த பின்புதான் சித்தார்த்தனாக இருந்த அந்தச் சாதாரண மனிதர் புத்தர் என்ற ஞானியாக மாறினார். ஆம், மனத்தைப் பற்றியும், மனம் இயங்கும் தன்மையைப் பற்றியும் ஆராய்ந்து முடிவு கண்ட விஞ்ஞானி ஆனார். இத்தகைய ஆராய்ச்சியைத்தான் இப்பொழுது நாம் உள இயல் (Psychology) என்று குறிப்பிடுகிறோம். இந்தியாவில் அக உலகைப் பற்றி சித்தார்த்தர் ஆராய்ச்சி நடத்திக்கொண்டு இருந்ததைப் போலவே உலகின் வேறு சில பகுதிகளில் புற உலகைப் பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்தப் புற உலக விஞ்ஞானத்தைப் பொருளியல், பௌதிகம் போன்று பல பெரும் பிரிவுகளாக வகுக்கலாம்.
பொருளியல் பகுதியின் முன்னேற்றத்திற்கு வித்திட்டது "பொருள்கள் எதனால் ஆனவை?" என்ற கேள்வியாகும். இந்தக் கேள்வியைக் கிளப்பியவர் ஐயோனியத் தீவுகளைச் சேர்ந்த தேல்ஸ் என்பவர். படிப்படியாக முன்னேற உலகம் எவ்வளவு இன்னற் பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விஞ்ஞானிகள் எவ்வளவு அல்லற்பட்டனர் என்பதைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். விஞ்ஞானத்தின் முதல் படியாகிய இரசவாதம் பற்றி நாம் சற்று ஆராய்வோம். அத்துறையில் வேலை செய்தவிஞ்ஞானிகள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
முதன் முதலில் இரசவாதம் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கியபோது சிலர் ஆர்வ மிகுதியால் இத் துறையில் புகுந்தனர். வேறு சிலரோ ஆடம்பரத்திற்காகவும், குறுகிய முதலீட்டால் பெருமளவு பொருள் ஈட்டவுமே இத்துறையில் முனைந்தனர். முதல் வகையைச் சேர்ந்தவர்களை உண்மை விஞ்ஞானிகள் என்றும் இரண்டாம் வகையினரை இரசவாதிகள் என்றும் குறிப்பிடலாம்.
அந்த நாளில் இரசவாதி என்ன நினைத்தான், எப்படித் தன் முயற்சியைத் தொடங்கினான், எந்தச் சாதனங்களை ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டான் என்று சரித்திர வாயிலாக எதுவும் நமக்குத் தெரிவதாயில்லை. இரசவாதம் இரகசியக் கலையாகவே கண்காணிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்குக் காரணம் பற்பலவாக இருந்தன என்றாலும் புதிய எண்ணங்களுக்கு வரவேற்பளிக்காமை, கவைக்கு உதவாத பொறாமை என்ற இரண்டும் குறிப்பிடத் தக்கவை.
உண்மை விஞ்ஞானிகள் அங்கங்கே சிலர் இருந்தனர். கில்செஸ்டரில் கி.பி. 1214-ல் பிறந்த ரோஜர் பேக்கன் என்பவர் தனது உழைப்பின் காரணமாகத் துப்பாக்கி வெடி மருந்தைக் கண்டுபிடித்தார். உரு பெருக்கிக் காட்டும் கண்ணாடி (Lens) யையும் இவரே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. வெடி மருந்தைத் தயாரிக்க உப்பு வகை ஒன்றையும், கரியையும், கந்தகத்தையும் ஒன்று சேர்த்து தான் உபயோகித்த வகையைத் தன்னுடைய நூல் ஒன்றில் பேக்கன் குறிப்பிட்டிருக்கிறார். அதே மூலப் பொருட்களைக் கொண்டு தான் 1327-ஆம் ஆண்டில் ஆங்கிலச் சேனை வெடி மருந்தைத் தயாரித்தது. பேக்கன் முதன் முதலில் வெடி மருந்தைத் தயாரிக்க வில்லையென்றும், அவர் கிழக்கத்திய நாடுகளில் பிரயாணம் செய்த பின்பே தயாரித்தார் என்றும், அதனால் அவருக்கு முன்பே கீழ் நாடுகளில் வெடி மருந்து உபயோகத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர்.
பேக்கனைப் பற்றிய சுவையான செய்தி ஒன்று கூறப்படுகின்றது. இவர் ஒரு மந்திரவாதியெனச் சிறைப்படுத்தப்பட்டார். தனது விஞ்ஞான ஆராய்ச்சி முழுமையும் தவறு என்று மனச்சான்றுக்கு எதிராக அவர் வாக்குமூலம் வெளியிட்ட பின்பே அவருக்கு விடுதலை கிடைத்தது. எவ்வளவு பரிதாபத்திற்குரிய செய்தி! சைத்தானோடு சேர்ந்துகொண்டு மாயா ஜாலங்கள் புரிவதாக அவரது துணைப் பாதிரிமார்கள் குற்றம் சாட்டியதன் விளைவே இந்தச் சன்மானம்!
பேக்கன் இறந்து சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் இத்தாலி நாட்டிலுள்ள வின்சி நகரில் லியானார்டோ என்ற விஞ்ஞானி பிறந்தார். சரித்திர ஏடுகளில் இவருடைய பெயர் லியானார்டோ-டா-வின்சி என்று நமக்கு அறிமுகம். இவர் உலகப் புகழ் பெற்ற ஓவியர்; பொறியியல் வல்லுநர்; கணக்கு வல்லுநர்; ஒரு பாடகர். இந்தக் 'கூட்டுச் சரக்கு' விஞ்ஞானத்திற்குச் செய்த சேவை சிறப்பானது. இன்றைய பொறியியல் வல்லுநரும்கூட வியக்கும்படியான பல ஓவியங்களை வரைந்து, அதன் மூலம் ஆராய்ச்சி நடத்தி விஞ்ஞானத்தை வாழ்வுக்குப் பயன்படத் தக்கதாக அமைத்தவர் இவர். வானவூர்தியின் அமைப்பை அன்றே கண்டவர் இவர். இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பெட்ரோல் போன்ற ஏதேனும் ஒன்று இவருக்குக் கிடைத்திருக்குமாயின் வானவூர்தியை அன்றே அவர் பழக்கத்திற்குக் கொண்டு வந்திருப்பார் என்று விஞ்ஞான வரலாற்று ஆசிரியர் பலர் கருதுகின்றனர்.
விஞ்ஞானப் பாதையில் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு திருப்பம் காணப்பட்டது. இத் தொடர்பில் நமக்கு அறிமுகமாகும் முதல் விஞ்ஞானி பாராசிலஸ். இவர் சுவிட்சர்லாந்தில் கி.பி. 1493-ல் பிறந்தார். இவர் சிறிது காலம் பேல் பல்கலைக் கழகத் (Basle University) தில் கல்வி பயின்றார். அங்கே மேலதிகாரிகளோடு ஏற்பட்ட மனப் பிணக்கால் அக் கழகத்தைவிட்டு வெளியேறினார். ஐரோப்பா முழுவதும் சுற்றி அலைந்தார். அங்கங்கே அவருக்கு விஞ்ஞானம் பற்றிய ஆராய்ச்சித் துணுக்குகள் கிடைத்தன. மருத்துவம் பார்த்தல், சோதிடம் பார்த்தல் முதலிய வேலைகளால் அவர் தம் வாழ்வை நடத்தி வந்தார். மூர்க்கத் தன்மை, பிறருடன் ஒத்துழையாமை போன்ற தீய குணங்கள் அவரது முன்னேற்றத்தைப் பெரிதும் பாதித்தன. எங்கு போனாலும் வீண் சச்சரவே அவரது துணை. ஆனாலும், "அவர் பலே கைராசிக்காரர்!” என்று விரைவில் பெயர் பெற்றார். துணையாக வேலை செய்த சில விஞ்ஞானிகளின் ஆதரவால் 1526-ம் ஆண்டில் பேல் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
அங்கும் கர்வம் தலையெடுத்தது. எவரையும் எடுத்தெறிந்து பேசினார். தன்னை மிஞ்சிய அறிவாளி எவனுமில்லை என்று பேசத் தொடங்கினார். உலகத்திற்கு அறிவொளி காட்டத் தகுதி படைத்தவன் ஒருவன் உண்டென்றால் அவன் தன்னைத் தவிர வேறெவனும் இல்லை என்பது அவரது கருத்து.
மருத்துவத்தில் அவருக்கிருந்த கருத்து திடுக்கிடத் தகுந்தது. தன்னிடம் வரும் நோயாளிகள் முழு நலம் பெற வேண்டும், இல்லையேல் செத்தொழிய வேண்டும் என்ற முறையில் பல அபாயகரமான மருந்து வகைகளைக் கொடுத்து ஆராயத் தொடங்கினார். மருத்துவத்தில் அவருடைய வெற்றிகள் நன்கு விளம்பரப் படுத்தப்பட்டன; தோல்விகளோ எவரும் அறியா வண்ணம் அமுக்கிப் புதைக்கப்பட்டன. ஆயினும் அவர் ஒரு தேர்ந்த விஞ்ஞானியே என்று யாவரும் இந்நாளில் கூட ஒப்புக்கொள்கின்றனர். கந்தக அமிலத்தை இரும்புத் துகள்மீது ஊற்றினால் நீரக வாயு (Hydrogen) வெளிப்படுமென முதலில் கண்டறிந்தவர் இவரே.
இரசாயனத்தில் உலோக மாற்றத் தத்துவம் மிக முக்கியமானது. ஓர் உலோகத்தை மற்றோர் உலோகமாக மாற்ற பலர் முயன்றனர். அந்நாளில் இத்துறையில் முயன்றவர் டாக்டர் ஜேம்ஸ் பிரைஸ் என்பவர். இவர் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். தன்னால் உலோக மாற்றம் செய்ய முடியும் என்றும், அவ்வாறாக தான் தங்கத்தை உற்பத்தி செய்திருப்பதாகவும் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அவருடைய இந்தத் 'திடீர்' முன்னேற்றத்தைக் கண்ட ஏனையோர் அவர் மீது பொறாமை கொண்டு, தம் எதிரில் அவருடைய சோதனையைச் செய்து வெற்றி காண வேண்டும் என்று வற்புறுத்தினர். பிரைஸ் அதற்குச் சம்மதித்தார். பரிசோதனை தொடங்கிற்று. பலரது முன்னிலையில் எவ்வளவு முயன்றும் அவரால் வெற்றி காண முடியவில்லை. பெரிதும் அவர் மனம் குழம்பினார். பிறருடைய இழிச் சொல்லைப் பொறுக்க மாட்டாதவராகி அன்னாருடைய முன்னிலையிலேயே பிரைஸ் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.
இனி கணிதத் துறையிலும் பௌதிகத் துறையிலும் உழைத்த விஞ்ஞானிகளைப் பற்றி அறிவோம். கிரேக்க அறிஞரான பிதாகரஸ் ஒரு பெரிய கணித வல்லுநர். இவர் அனேக அடிப்படைத் தேற்றங்களை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவரது பெயரின் நினைவாக இன்னும் நம்மிடையே பிதாகரஸ் தேற்றம்——நேர் கோண முக்கோணத்தைப் பற்றியது—— இருந்து வருகிறது.
இவருக்குப் பின் ஒரு நூற்றாண்டு இடைக் காலத்திற்குப் பின்னால் சாக்ரடீஸ் கிரேக்கத்தில் வாழ்ந்தார். இளைஞர்களைச் சிந்திக்கத் தூண்டிய ஒரே 'குற்றத்'திற்காக இவர் நஞ்சிடப்பட்டுக் கொல்லப்பட்ட பரிதாபம் நாம் அனைவரும் அறிந்ததே!
அடுத்து குறிப்பிடத் தகுந்தவர் அரிஸ்டாட்டில். இவர் மாவீரனான அலெக்சாண்டருக்கு ஆலோசகராக இருந்தார். மன்னன் செல்லும் இடங்களெல்லாம் இவரும் செல்ல நேரிட்டதால் வெவ்வேறிடங்களில் கிடைத்த விஞ்ஞானச் செய்திகளை இவரால் தொகுக்க முடிந்தது. இவர்தான் அன்றைய நாளதுவரை பேச்சு வழக்கில் இருந்த விஞ்ஞான உண்மைகளை எழுத்து வடிவுக்குக் கொண்டு வந்தவர். இந்த அரிய செயலின் அடிப்படையில்தான் 'விஞ்ஞானத்தின் தந்தை' என்று இன்றும் இவர் புகழப்படுகிறார்.
விஞ்ஞானம் பெரும்பாலும் அஞ்சா நெஞ்சம் கொண்ட விஞ்ஞான வணங்கா முடிகளால்தான் வளர்ந்திருக்கிறது. ஒரு விஞ்ஞானி கூறியதை இன்னொரு விஞ்ஞானி பின் பற்றுவதில்லை. முன்னவரின் கூற்றுக்களைப் பொய்யாக்க வேண்டுவதே பின்னவரின் வேலையாக இருக்கும். எடுத்துக் காட்டாக, அரிஸ்டாட்டிலையும் அவருக்குப் பின் வந்த கலிலியோவையும் கூறலாம். நிறை அதிகப் பொருளும் நிறை குறைவுப் பொருளும் ஒன்றாக ஒரே உயரத்திலிருந்து கீழ் நோக்கி நழுவவிடப் படுமானால் எந்த விகிதத்தில் நிறை அதிகமாக இருக்கிறதோ அதே விகித வேகத்தில் நிறை அதிகப் பொருள் மற்றதற்கு முன்பு தரையை அடைந்துவிடும் என்று அரிஸ்டாட்டில் தன் குறிப் பேட்டில் எழுதி வைத்தார். இது உண்மைதானாவென்று எவரும் ஆராய முன்வரவில்லை. கி.பி. 1590-ம் ஆண்டில் கலிலியோ என்பவர் முதன் முதலாக இதை ஆராயத் தொடங்கினார். இத்தாலியிலுள்ள பைசா நகரத்துப் பல்கலைக் கழகத்தில் கணக்கு வல்லுநராகப் பணியாற்றி வந்தார் இவர். அந்நகரிலுள்ள சாய்ந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து வெவ்வேறு நிறையிருந்த இரண்டு பொருட்களை நழுவ விட்டார். அரிஸ்டாட்டிலின் 'உண்மை'யைப் பொய்யென நிரூபித்துக்கொண்டு. எல்லாப் பொருட்களுக்கும் இழுவை விகிதம் (Acceleration) ஒன்றே என்று நிரூபித்துக் கொண்டு-இரண்டும் ஒரே சமயத்தில் தரையை அடைந்தன. பரிசோதனையைக் கோபுரத்தின் முன் காணக் கூடியிருந்த மக்கள் கூட்டம் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தது. ஜேம்ஸ் விரைசின் துணைவர்கள் பொறாமைப்பட்டது போலவே இவரது துணை ஆசிரி யர்களும் பொறாமை கொண்டு அவர் வேலையிலிருந்து நீங்கும்படியான துன்பச் சூழ்நிலையை உருவாக்கி வெற்றி கண்டனர். உலகில் எந்த உண்மைக்கும் முதலில் இத்தகைய வரவேற்புத்தானே !
காலத்தின் அடிச்சுவட்டில் பற்பல புதிய கொள்கைகள் உருவாகின்றன. 'விஞ்ஞானத்தின் தந்தை' அரிஸ்டாட்டில் கூறியதைப் பொய்யென்று நிரூபித்த இன்னொரு விஞ்ஞானி கோப்பர் நிகஸ். அரிஸ்டாட்டில் கூறிச் சென்ற "சூரியன் பூமியைச் சுற்றுகிறது" என்ற கொள்கையைக் கோப்பர்நிகஸ் நம்பத் தயாராக இல்லை. தனது வாழ்நாள் முழுதும் நன்கு ஆராய்ந்து பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று தன் மறுப்புக் கொள்கையைப் பரப்பினார். இதற்குப் பின் அவர் விரைவில் இறந்து விட்டார். அப்படி அவர் இறந்தது நல்லதாயிற்று. ஏன் தெரியுமா? கதையைக் கேளுங்கள்! இவரது மரணத்திற்கு அறுபது ஆண்டுகளுக்குப் பின் ரோம் நகரில் இவரது கொள்கைகளை ஆதரித்துப் பேசியதற்காக ஜியார்டனோ புரூனோ என்பவன் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டான். வானத்துக் கோள்களை ஆராய தொலை — நோக்கி (Telescope) யைக் கண்டுபிடித்து கோப்பர் நிகஸின் கொள்கை களுக்குத் துணை நின்றதற்காகக் கலிலியோவுக்கு அரசாங்க அதிகாரிகளின் குற்றச் சாட்டுக்களே பரிசாகக் கிடைத்தன! இவர் தனது எழுபத்தெட்டாம் ஆண்டில் இறந்தபோது இவரது புதை நிலத்தின் மீது கல்லறை எழுப்புவதற்குக்கூட தடை செய்யப்பட்டது.
கலிலியோ போன்ற விஞ்ஞானிகள் இறந்தாலும் அவரது கொள்கைகள் வாழ்ந்தன. பின்னர் வந்த விஞ்ஞானிகளிடையே எதையும் ஆராய்ந்து தெளியும் தன்மை உறுதி பெற்றது. மதவாதிகள் காட்டியதே சொர்க்க வழி என்ற கோட்பாடு தகர்த்து எறியப்பட்டது. ஆக விஞ்ஞான யுகம் உதயமாயிற்று.
———