விடுதலைப் போர்/என் நாடு

என் நாடு


"சூழும் தென்கடல் ஆடுங்குமரி
         தொடரும் வடபால்
அடல் சேர் வங்கம்
        ஆழுங்கடல்கள் கிழக்கு மேற்காம்
அறிவுத்திறனும் செறிந்த நாடு."

"இது எனது நாடு, பொன்நாடு, நான் பிறந்த நாடு நானிலத்திலே இதற்கில்லை ஈடு" என்று உள்ளத்திலே உவகையும் எழுச்சியும் பொங்கிடச் செய்யும் விதத்திலே, எல்லைக்கோடும் எழிலும் விளக்கி, இயல்பும் வளமும் இயம்பி, கவி கனகச் சுப்புரத்தினம் (பாரதிதாசன்) திராவிட நாட்டுப் பண் அமைத்தார். திராவிடநாடு திராவிடருக்கே, என்ற பேரிகையைப் பெரியார் கொட்டினார். அந்த முழக்கம் வீரர்களின் கண்களிலே ஒளியையும், எதிரிகளின் நெஞ்சிலே சளியையும் கவிகளின் உள்ளத்திலே உணர்ச்சியையும் ஊட்டிற்று. பற்று எனும் பூந்தோட்டத்திலே மலர்ந்தது புரட்சிப் பண் ! அதன் மணம் எங்கும் பரவி எவருக்கும் மகிழ் வூட்டி வருகிறது.

திராவிடத் திருநாட்டினிலே ஆரிய அரசா? அதற்குப் பார்ப்பன முரசா? என்ற கேள்வி பிறந்து விட்டது. ஆங்கிலேயரை மிரட்டி அரச உரிமை பெற்று அதை அக்கிரகாரத்துக்குத் தானம்தந்து விடுவதா? அழகாகுமா ? ஆண்மையாமோ? என்று தன்மானமொழி கேட்கிறது. திராவிட அரசுரிமையைப் பெற, ஊனுடல் கேட்பினும் தரத்தயங்கேன் என்ற வீர உரை எழும்பிவிட்டது. எங்கும் இந்த எழுச்சி! மங்கிய உணர்ச்சி மீண்டும் பெற்றே தீருவோம் என்ற சூளுரை கேட்டுப் பூரிக்கிறோம்.

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம். இது நமக்கே உரிமையாம் என்பதும் தெரிந்தோம். இதனை இந்தியாவெனும் உபகண்டத்திலே பிணைத்திடும் சூதினை வெறுத்தோம். இனி, இந்த இணைப்புக்கூடாது, தனி அரசு நாட்டுவோம், என்று ஆணை கூறிடும் வீரர்களை அணி வகுப்புகளிலே கண்டோம், அகமகிழ்வு கொண்டோம்.

சொந்த நாட்டிலேயே அடிமைகளாகிச், சோற்றுத் துருத்திகளுக்கும் பாதந்தாங்கி வீரமிழந்து விவேகமிழந்து அவதிப்படும் திராவிட இனம், இன்று தன்னை அறிந்து எழுச்சி பெறவும், தனது நாட்டை மீட்கவும் துணிந்தது. இது உலகிலே நடைபெற்ற விடுதலைப்போர் வரலாறுகளிலே, இடம் பெறும் தன்மையது. மெளனத்தால் இதனை மறைப்பதாக மனப்பால் குடிக்கும் மௌடிகர்களும், மிரட்டி அடக்கப்படும் குருடர்களும், காலமெனும் குருவிடம் பாடங்கேட்பர். அவர் பற்றி நமக்குக் கவலையில்லை. திராவிடநாட்டுப் பிரிவினையை, நீதிக்கட்சி, திருவாரூர் (மாகாண) மாநாட்டிலே, ஏற்றுக்கொண்டது. பெரியாரின் பெருமுழக்கம், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலே, பரவிற்று. அசாமிலுள்ள கௌஹத்தியிலிருந்து அம்பா சமுத்திரம்வரையிலே, பாஞ்சால நாட்டு லாகூரிலே, வங்க நாட்டுக் கல்கத்தாவிலே, ஐக்ய மாகாண காசியிலே, ஆந்திரத்திலே, மராட்டிய நாட்டிலே, பல்வேறு நகர்களிலே, பெரியார் திராவிட நாட்டுப் பிரிவினை கோருகின்றனர் என்பது மட்டுமல்ல, அதைத்தவிரப் பிரிதொன்றையும், நாட்டுநலிபோக்கும் மருந்தென்று கொள்ளார் என்ற நிலையும் உண்டாக்கி விட்டது. திராவிடநாட்டுப் பிரிவினைக் கிளர்ச்சியின் எதிரொலியெனக் கிளம்பிய பாகிஸ்தான் திட்டம் வெற்றி பெற்று விட்டது. முஸ்லீம் லீகின் ஜீவாதாரக் கொள்கையாக்கப்பட்டு விட்டது.

மற்றோர் மகிழ்ச்சிகரமான செய்தி. இனமறியாது இடர்ப்படும் இழிகுல மக்களல்ல நாம்! பண்டைப் பெருமையும் பண்பும் செறிந்த மக்கள், வளமும் வசீகரமும் மிளிரும் நாட்டுக்குடையோர், ஆனால் நம்மை நாம் மறந்தோம், நாட்டை இழந்தோம், நலிந்தோம்; நாம் யார், என்பதை நவிலவும் கூசிப் பார்ப்பனர் அல்லாதார் என்று, தனிப்பெயர் இல்லாதார் போலத் தடுமாறி வந்தோம். இந்நிலையைப் பெரியார் தீரமாக மாற்றித் திருவாரூரிலே, நாம் திராவிடர்கள் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். ஆனால் நமது கட்சிக்கோ இன்னமும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று பெயருளது. இனத்தின்மீது நமது இலட்சியம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்தப் பெயர் எடுத்துக்காட்டவில்லை. எனவே சேலத்தில் கூடிய நிர்வாகக்கமிட்டி, இனி நமது கட்சியைத் தென்னிந்திய திராவிடர் கழகம் என அழைக்க வேண்டும் என்று தீர்மானித்தது.

இது நமது எதிர்கால வேலைத்திட்டத்திற்கு மிக்க ஊக்கமும் ஆக்கமும், எழுச்சியும் கவர்ச்சியும் தரக்கூடியது என்பது நமது கருத்து. இன்னமும் தெளிவாகத், தென்னிந்திய என்ற தொடரையும் நீக்கிவிட்டுத், திராவிடர்கழகம் (Dravidian League) என்ற பெயரை ஏற்று, நமதுகட்சி, திராவிடநாட்டுப் பிரிவினையை மூலாதார வேலைத் திட்டமாகக் கொள்ள வேண்டுமென்பது நமது நோக்கம். நாம் திராவிடர், நமது நாடு திராவிடநாடு, நமது நோக்கம் திராவிடநாட்டைத் திராவிடருக்காக்குவது. நாங்கள் பார்ப்பனர் அல்லாதார் என்று கூறிக்கொள்வதும், எங்கள் நாடு இந்தியாவிலே ஒருபாகம் என்று பேசுவதும், எங்கள் நோக்கம், பார்ப்பனரல்லாதாருக்கு நீதி கேட்பது என்றுரைப்பதும், ஏன்? நமக்கென்ன, தனிப்பெயர் இல்லையா, தனி இடம் இல்லையா, அதைக் கூறவும் கேட்கவும், வெட்கமா ! நீக்ரோ தன்னை நீக்ரோவென்று கூறிக்கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறான்! எஸ்கிமோவும் அப்படியே! நாடே இல்லாத யூதனுக்கும், இனப்பெயர் என்றால் ஓர் எழுச்சி! காடன்றி நாடு ஏதும் சொந்தமின்றி, கால் நடையாக இங்கு வந்து திராவிடரின் காலடியிற் கிடந்து இன்று தங்கள் காலடியிலே திராவிடரைக் கிடத்திக்கொண்டு, பூதேவர்களாய், புண்ய சீலர்களாய், போக புருஷர்களாய், ஆண்டவனின் அர்ச்சகர்களாய், வாழும் இனம், தன்னை ஆரிய இனம், என்று கூறிப் பூரிக்கிறது. முடியுடைய வேந்தரையும் படையுடைய மாந்தரையும், வளமிகு தரணியையும் பெற்று வாழ்ந்த நாம், நம்மைத் திராவிடர் என்று கூறிக்கொள்ளக் கூசுவது, மடமையன்றோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=விடுதலைப்_போர்/என்_நாடு&oldid=1647427" இலிருந்து மீள்விக்கப்பட்டது