விடுதலைப் போர்
உள்ளடக்கம்
- படத்தின் விளக்கம்
- அழைப்பு
- என் நாடு
- பூகோள போதனை
- ஐந்து அரசுகள்
- திராவிடர் கழகம்
- அந்தத் தைரியம்
- திருமுகம்
- வீரர் வேண்டும்
விடுதலைப்போர்
C.N. அண்ணாதுரை M.A.
திராவிடப் பண்ணை
தெப்பக்குளம் : : திருச்சி
முதற்பதிப்பு ஆகஸ்ட், 1947
பதிப்புரிமை
விலை ரூ.1—0—0
இரு நூறாண்டுகளுக்கு மேல் இந்திய உபகண்டத்தை ஆட்டிப் படைத்த வெள்ளை அரசியலதிகாரம் விலகுகிறது. வெள்ளையன் வெளியேறுகிறான். விடுதலைகிடைத்துள்ளது. யாவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய செய்தி.
விடுதலைப் போர் வெற்றியடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. கிடைத்துள்ள விடுதலையைக் கூர்ந்து கவனிப்போருக்கு வேறுபல உண்மைகளும் புலப்படும். அன்னியனாட்சியில் ஒடுங்கிக் கிடந்த ஒரு இந்தியா, விடுதலையடைந்தவுடன் இரு பகுதிகளாகி விட்டது. பரந்த இந்தியாவில் பாகப் பிரிவினை. பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன் எவரும் எண்ணிப் பார்க்காதது, இன்று நடந்து விட்டது. இந்த உண்மையான நிலையில்தான் வெற்றிவிழா கொண்டாடப்படுகிறது. வெற்றி முழக்கத்தில் வேறோர் குரலும் கேட்கிறது.
அதுதான் விழிப்புற்ற திராவிட இனத்தின், விடுதலை வேட்கைக் குரல். இதனைத்தான் தளபதி அண்ணாத்துரையின் குரல்—கணீரென்ற கம்பீரமான குரல், பரப்பிவருகிறது. நாட்டின் நிலை, நான்கு எல்லை, வரலாறு, பொருளாதாரத் தனிநிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள் இவைகளைச் சுட்டிக்காட்டி தனிநாடு—திராவிட ஆட்சி தேவை என்று கேட்கிறார். விடுதலைப் போர் முடிவடையவில்லை, இந்திய உபகண்டத்தில் அது ஒரு கட்டத்தைத் தாண்டியிருக்கிறது. எனவே தென்னாட்டைப் பொறுத்தவரை விடுதலைப் போர் தொடர்ந்து நடக்கிறது என்று அறிவிக்கிறார்.
ஜின்னாவின் குரல் பாகிஸ்தானத்தை அமைத்துவிட்டது. அண்ணாவின் குரல் திராவிட நாட்டை வாங்கித்தரும் என்ற நம்பிக்கையுடன் இந்நூலை வெளியிடுகிறோம்.
திராவிடப் பண்ணையாளர்