விடுதலைப் போர்/வீரர் வேண்டும்

வீரர் வேண்டும்


"சுயமரியாதைக் கோட்பாடுகளை, ஜஸ்டிஸ் கட்சியிலே புகுத்திவிடுகிறார்களே ! அரசியலிலே மதத்தைக் கலந்துவிடுகிறார்களே ! அரசியல் கட்சியிலே, பலமதத்தினர், பல ஜாதியினர், பல வைதிகர்கள் இருப்பார்கள், அனைவருக்கும் அரசியல் கட்சிபொதுவாக இருக்க வேண்டுமேயல்லாமல், மதவிஷயத்திலே குறுக்கிட்டுப் பலரைக் கட்சியைவிட்டு விலகும்படி செய்யலாமா, கட்சிபலவீனமடைந்து விடாதா காரியம் கெட்டுவிடாதா?" என்று சிலர் கசிந்துருகுக்கின்றனர். இந்தப் போக்கினரிலே பலர், எதையோ எண்ணிக்கொண்டு வேறு எதையோ பேசுகிறார்கள் பட்டம் பதவியை எண்ணிக்கொண்டு, அதனை வெளியே எடுத்துப்பேசினால் வெட்கக்கேடாக இருக்குமே என்று அஞ்சி, கட்சியிலே தமக்கு இருக்கும் அளவிடமுடியாத அன்புப் பெருக்கினாலேயே அரசியலும் மதமும் வேறுவேறாக இருக்கவேண்டுமென்று கூறுவதாகப் பேசுகின்றனர். இந்தப் போக்கு கொண்டோரிலே, ஒருசிலர் உண்மையாகவே, அரசியல் கட்சியிலே மதப்பிரச்னையைக் கலக்கலாமா என்பதிலே சந்தேகமும் அதன்பயனாகச் சஞ்சலமும் கொண்டுள்ளனர். அந்தச் சிறு தொகையினரின் உண்மையான உள்ளக்கிளர்ச்சியை நாம் மதிக்க கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களின் உள்ளன்டை நாம் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவர்கள், தம்மையும் அறியாமல் அரசியலை இலாபச் சூதாட்டமாகச் கொண்டுள்ளவர்களின் வஞ்சக வலையிலே, வீழ்ந்து விடுவது கண்டு வருந்துகிறோம்.

நமது குறிக்கோள், சகலரும் சமுதாயத்திலே சம உரிமையோடு வாழவேண்டும், பார்ப்பன ஆதிக்கம் தொலையவேண்டும், என்பதுதானே, இந்தப் பெருநோக்கம் ஈடேறப் பணிபுரிவோம், இந்தப் பிரச்னையிலே வேறு பலவற்றைக் கொட்டிக் குழப்ப வேண்டாம், என்று கூறுகின்றனர். கண்ணியர்கள் இதனைக் கூறும் போது, வீணாக அவர்கள் விசாரப்படுகிறார்களே என்று நாம் பச்சாத்தாபப் படுகிறோம். கயவர்கள் இதனைக் கூறும்போது, என் சொல்வோம் ஒழுக்கம், நாணயம், அன்பு, அறிவு, சமரசம், சற்குணம், முதலியவற்றைப்பற்றி ஒருதுளியும் கவலைப்படாமல் வாழ்க்கையிலே இன்பத்தை எப்படியேனும் பெறவேண்டும், எத்தனைபேர் பிணமானாலும் கவலை இல்லை, பணம் குவிந்தால். போதும், எவ்வளவு ஒழுக்கக் கேடுகள் கூத்தாடினாலும் அக்கரை இல்லை, ஒய்யாரமான வாழ்வு கிடைத்தால் போதும், என்று கருதி, அரசியலை வாழ்க்கைக்குச் சுவை தரும் விபசார மார்க்கமாக்கும் போக்கினர், அரசியலிலே மதத்தைப் புகுத்திவிடுகின்றனரே என்று கூறி ஆயாசப்படுவதாக நடிப்பது, நகைப்புக்கு இடமட்டுமல்ல, பொதுமக்களை எவ்வளவு சுலபமாக ஏய்த்துவிடமுடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள் என்பது விளங்கும்போது, இச்செயல், சீரியோர்க்குச் சீற்றத்தை மூட்டாதிருக்கவும் முடியாது!

அரசியலைப்பற்றியும் அவர்கட்கு அக்கரை கிடையாது; மதத்தைப்பற்றியோ அவர்களுக்கு மாசும்தூசும் தவிர மற்றது தெரியாது. இரண்டிலும் அவர்கள் கொண்டிருப்பது, கூளத்தை, பதரை; மணியையல்ல! உயரப்பறந்து கொண்டே கீழேகிடக்கும் பொருளைக் கண்டுபிடிக்கும் தொலைநோக்கித் திறமமைந்த கூரிய கண்படைத்த கருடனுக்குப் பார்வை படுவது, செத்த எலி, புழுத்த நண்டு, நெளியும் புழு இவற்றின் மீதுதானே தவிர, மதுரமானகனி, சுவையான பண்டம், இவற்றின்மீதல்ல. அது போலவே, அறிவுத்திறனை அளவின்றிப்பெற்று விட்டதாகக் கருதிக்கொண்டுள்ள இவர்களின் பார்வை அரசியலிலே, எதன்மீது படுகிறது? அறியா சனத்தின்மீதா? ஆண்மையாளருக்கேற்ற அணி வகுப்பின்மீதா? இல்லையே! பயனற்ற, பரங்கியின் பக்கநின்று பராக்குக் கூறும் பதவிமீது; அவன் அகில உலகுக்கும் தனதுவிசுவாசமுள்ள அடிமை என்பதை உணர்த்துவிப்பதற்குத் தந்து வரும் பட்டம், கமிட்டியிலே ஒரு இடம், ஆகிய இத்தகைய மிகமிகச் சில்லறைகள் மீதுதான் இவர்களுக்கு நோக்கம்!

இயல்புக்கு ஏற்ற எண்ணம்! பஞ்சத்தால் அடி பட்டுக் கிடந்தவனுக்குப் பழங்கஞ்சி கிடைத்தாலும் அதுவே பாலும் தேனுமாக இருப்பது போலப் பதவிப் பசி பிடித்தலையும் சிலருக்கு, இந்தப்போலி மதிப்புமட்டுமே உள்ள, சில்லறை அதிகாரங்கள் கிடைத்துவிட்டாலே போதும், சித்தம் குளிர்ந்து விடும், சத்தம் அடங்கி விடும். பராரிக்கூட்டத்துக்குப் பட்டாடை ஏது? கந்தலே கிடைக்கும். அதிலே ஒரு கந்தல் அழகாக இருந்தால் ஆனந்தம் அதிகமாகும்! மாட்டுக் கழுத்திலே கட்டப்படும் மணி, அந்த மாதருக்கு அணியாகிவிடும்! அதுபோல மிகமிகச் சாமான்யமான சில்லறை அதிகாரங்களைப் பெறுவதும், சிரித்துப் பேசக் கற்றுக்கொள்வதும், சீமான்களின் தோழமையைப் பெறுவதும், சிலாக்கியான காரியம், அதுவே அரசியல்மூலம் அடையவேண்டிய பேறு என்று எண்ணுகின்றனர் சிலர். கரிக்குக் கிடைப்பது அரிமாவுக்குக்கிடைத்தால் அரிமா அகங்குளிருமா? அதுபோலத்தான், தன்னலத்துக்காக எதோ ஒரு தகரக்குவளை போன்ற அதிகாரம் கிடைத்தால்போதும் என்று திருப்தி அடையச் சிலர் தயாரில் இருக்கலாம். தமிழன், தமிழ்ப்பண்பை இழவாதவன், வீரன், உண்மைத்தொண்டன், விடுதலைவிரும்புவோன், இவை தமைத் துச்சமெனக் கூறிடுவான், தூ தூ என்று ஏசிவிடுவான், அவன் விரும்பமாட்டான், காகிதப்பூஞ்சோலையை, கலர்க் கண்ணாடியாலான நகையை, கனியாத பலாவை!

அரசியலின் மூலம், நாம் வேண்டுவது, சில்லறைப்பதவிகளை அல்ல, சிங்கார வாழ்வையல்ல. நமது இனத்தின் விடுதலையை நாம் விரும்புகிறோம். அதற்கே அரசியலை நாம் துணைக்கொள்கிறோம். அதன் பொருட்டே அரசியலிலே பணியாற்றுகிறோம். எந்தத் திராவிட இனம் இந்த மானிலம் முழுதாண்டிருந்தார், இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர், என்று நமது புரட்சிக்கவி பூரிப்போடு கூறினாரோ அந்த வேந்தர்கள் வீழ்ந்தபிறகு அரசு இழந்து ஆண்மை குறைந்து, அறிவு குழம்பிக்கிடக்கிறதோ அந்த இனத்தை மீண்டும் அரியாசனத்திருத்தி, ஆண்மைக்கும் அறிவுக்கும் உரிய உயரிய இடமளித்து, தக்கதோர் நிலையை உண்டாக்கவேண்டும் என்பதே, அரசியலின் குறிக்கோளன்றி, அனந்தாச்சாரியார்க்குக் கிடைக்கக்கூடிய சட்டசபை ஸ்தானத்தை, அடிவயிறு புண்படத் தேர்தல் பிரசாரம் செய்து, அடி உதைப்பட்டு, அறிவீனர்களின் ஏசலையும் பெற்றுக்கொண்டு, ஒரு ஆறுமுகப்பிள்ளைக்குக் கிடைக்கும்படி செய்வது அல்ல ! சேலம் இதனைத்தான் தெளிவாக்கி இருக்கிறது. இது தமிழகத்திலே தம்மையே தமிழரின் பணிக்காக அர்ப்பணம் செய்துவிட்ட, அழைப்பு கிடைத்ததும் தாலமுத்துக்களாகத் தயாராக இருக்கும், தன்னலமற்ற, தளராத பற்றுக்கொண்ட, தமிழ் இளைஞர்களின் இருதய கீதம்!

அனந்தாச்சாரியாரும் இராமபக்தர்; ஆறுமுகப் பிள்ளையும் அப்படித்தான். முன்னவரும் வர்ணாஸரமி, பின்னவரும் அவ்விதமே. ஆச்சாரியாரும் அவன் அருளையே வேண்டுவோர்; பிள்ளைக்கும் அதுவே நினைப்பு. இருவருக்கும், இந்தச் சமுதாய அமைப்பிலே அவ்வளவு அக்கரை கிடையாது, என்ற நிலை இருக்குமானால், அனந்தாச்சாரிக்குக்கிடைக்கும் இடம், ஆறுமுகம்பிள்ளைக்குக்கிடைக்கச் செய்வதால், யாதுபலன்? ஏன் அதற்காக ஒரு கூட்டம் வேதனையை அனுபவித்துக்கொண்டு, வீணருடன் மோதிக்கொண்டு, விதியற்றவர் கதியற்றவர் என்று மதியற்றவரால் தூற்றப்பட்டு, உழைக்க வேண்டும் என்று கேட்கிறோம். எத்தனை ஆயிரம்

வாலிபர்களின் உள்ளம் ஒடிந்திருக்கிறது, இந்த நிலைமையைக் கண்டு! அவர்களை இந்தப் பித்தலாட்ட பலிபீடத்திலே இன்னமும் எத்தனை காலத்துக்கு இருத்தவேண்டும்! விழலுக்கு நீர் இறைப்பானேன், விலாநோகுதே என்று விம்முவானேன்! அலி என்று தெரியாமல் அணைப்பானேன், ஐயோ சனியனே என்று ஆயாசப்படுவானேன்! கட்டையாலே கத்தியும் அட்டையாலே கேடயமும்செய்து பிடித்துக் கொண்டால், எதிரிக்குச் சிரிப்புவருமா, சிந்தனை குழம்புமா? ஆள்மாற்றமே அரசியல் காரியம் என்று எண்ணுபவரைக் கேட்கிறோம், அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு இனத்தை மீட்கும் காரியத்துக்கு யார் தேவை? எந்த ஆரியத்தால் இனம் அடிமைப்பட்டுக்கிடக்கிறதோ அந்த ஆரியத்தை அழித்தொழிக்கும் ஆண்மையாளரா, அன்றி அதே ஆரியத்துக்கு ஆல வட்டம் சுழற்றும் அடிமைகளா? பிரன்சு நாட்டிலே புரட்சியின் போது, ரஷ்ய நாட்டிலே புரட்சியின் போது, எது அரசியலாகக் கருதப்பட்டதோ, அத்தகைய நிலைமையிலே திராவிடம் இருக்கிறது. அரசியலும் மதமும் கலப்பதா என்பதல்ல கேள்வி; மதத்தால் நம்மை அரசியலிலே அடிமைப்படுத்தியிருக்கும் இழி நிலையைப் போக்கிக்கொள்ள, ஆரியர் புகுத்தியிருக்கும் மதத்தை ஒழித்தாக வேண்டாமா என்பதே கேள்வி. விழி சரியாக இருந்தாலன்றோ வழி தெரிந்து நடக்கமுடியும் ? எதிரியின் வஞ்சக வலையாகிய ஆரிய மார்க்கத்தை அறவே நீக்கா முன்னம், நமக்கு அரசியல் வாழ்வு எங்ஙனம் சிறப்பாக இருக்க முடியும் !

எனவேதான் வீரர்கள் தேவை! காரியமாற்றும் தீரர்கள் தேவை! அஞ்சாநெஞ்சமும் ஆரியத்திடம் அடிமைப்படாத உரமும்கொண்ட உழைப்பாளிகள் தேவை! விடுதலைப்போருக்கு வீரர்கள்தேவை! பேரம்பேசும் கும்பல் வேண்டாம்! பேதைமையை அணிகலனுகக்கொண்ட கூட்டம் வேண்டாம்! திராவிடர் தேவை! என்று தீர்மானித்துவிட்டனர். தீரர்களே! திரண்டு வாருங்கள்! மற்றவர் ஒதுங்கி நில்லுங்கள்!

திராவிடருக்குத் திராவிடநாடு என்று முழக்கம் செய்யுங்கள்! அதைப் பெற்றே தீருவோம் என்ற சூள் கூறுங்கள், விடுதலைப்போர் வீரராகப் பதிவுசெய்து கொள்ளுங்கள்! காட்டை மீட்டிட வாரீர், நானிலமெங்குமே சுதந்தர நாதம் பெருகுது கேளீர், என்று கூறித் திராவிடப் பெருங்குடி மக்களை அன்புடன் அழைக்கிறோம். வாழ்க திராவிடர்! திராவிட நாடு திராவிடருக்கே!!